Followers

Friday, August 28, 2015

சமூக நீதின்னா இது தானா? நறுக்குன்னு நாலு கேள்வி…


28.8.15

சமூக நீதின்னா இது தானா? நறுக்குன்னு நாலு கேள்வி…



 
 
கடந்த 27.8.15 வியாழக்கிழமையன்று தந்தி தொலைக்காட்சியில் ஆயுத எழுத்து நிகழ்ச்சி பார்க்க நேர்ந்தது. விவாதம் இட ஒதுக்கீடு பற்றியது. தந்தி தொலைக்காட்சியின் தலைமைச் செய்தியாளரான ரங்கராஜ் பாண்டே விவாதத்தை எடுத்து நடத்திச் சென்று கொண்டிருந்தார்.

அன்றைய தேதியில் அகமதாபாதில் ஹார்திக் படேல் குஜராத் மாநிலத்தில் இட ஒதுக்கீட்டு முறையை விமரிசித்து நடத்திய போராட்டமும் போராட்டத்தால் விளைந்த கலவரத்தை ஒடுக்க அழைக்கப்பட்ட ராணுவமும், போராட்டத்தில் விளைந்த உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் மிகவும் சூடான செய்தியாக இருந்தது.

இங்கு நான் இட ஒதுக்கீடு பற்றியோ அல்லது சாதி பற்றியோ அல்லது தீண்டாமை பற்றியோ பேசவில்லை. அதில் எனக்கு விருப்பமும் இல்லை.

எனது இளமைக்காலத்தில் குழுவாகச் சேர்ந்து கொண்டு ஆரியமும் திராவிடமும் பற்றி விவாதங்கள் நடக்கும். அப்போது யார் எதைச் சொல்கிறார்களோ அதுவே எங்களது அனுபவமாக எடுத்துக் கொண்ட காலமது. எங்கள் குழுவில் ஒருவர், பிராமணர்கள் எல்லாம் ஆரியர்களென்றும் அவர்கள் குழுவாக சேர்ந்து கொண்டு எளியவர்களான நமக்கு கிடைக்கும் வாய்ப்புகளை தட்டிப் பறிக்கின்றனர் என்றும் சொல்லுவார். காங்கிரசு அதற்கு துணை போகிறது என்பார். ‘நீங்கள் எந்த அலுவலகத்திற்குப் போனாலும் அங்கிருக்கும் பிராமணர் முதலில் உங்களிடம் பேச்சுக் கொடுத்து நீங்கள் பிராமணரா என்றறிய முயலுவார். அந்த முயற்சி தோற்றுப் போனால் உங்கள் அருகில் வந்து உங்கள் தோளில் கை போட்டு பூனூல் இருக்கிறதா என்றறியும் வகையில் முதுகை தடவிக் கொடுப்பார். இதெல்லாம் தெரிந்து கொண்டபிறகுதான் உங்கள் வேலையை செய்யலாமா அல்லது வேண்டாமா என்று முடிவெடுப்பார்’… என்றெல்லாம் சொல்லுவார்.

‘சமூக நீதி வேண்டும். எனவே நாம் திராவிடக் கட்சிகளையே ஆதரிக்க வேண்டும்’ என்பார்.

இது எங்களுக்குள் ஒரு ஆரோக்கியமான விவாதமாயிருந்ததால் நாங்களும் பதிலுக்கு காமராசரைப் பற்றிச் சொல்லுவோம்.

‘இப்போது கல்லூரிப் படிப்பு வரை கல்வி இலவசமாக கிடைக்கிறதே..இது இல்லாவிட்டால் நாமெல்லாம் படிக்க முடியாதே.. என்போம். அதுதான் உண்மையும் கூட. அது மட்டுமல்ல காமராசரின் மதிய உணவுத்திட்டம் எத்தனையோ பிள்ளைகளை காப்பாற்றி அவர்களுக்கு கல்வியும் அளித்ததும் இன்றைக்கும் மறுக்க முடியாத ஒரு உண்மை.

அதற்கு அவர் ‘இதெல்லாம் அரசின் வேலை. கல்வியைத் தருவது அவர்களது கடமை. எனவே அதனை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளக் கூடாது’ என்பார்.

அதையெல்லாம் ஒரு வித மயக்கத்தோடு தேவ வாக்காய் கேட்போம்.

ஆனால் காலங்கள் மாறி எங்களுக்கும் வேலை கிடைத்து அலுவலகம் சென்று நகர வாழ்க்கையை அனுபவித்த போது எங்களுக்கு கிடைத்த அனுபவம் வேறு. எல்லாம் தலை கீழாக இருந்தது. குழு குழுவாக சமுதாய அமைப்பினரின் அச்சுறுத்துதலுக்கு ஆளாக வேண்டியிருந்தது. கிராமத்தில் மேட்டுக் குடியினர் செய்வதை விட நகரத்தில் இந்தக் கொடுமையான அச்சுறுத்துதலுக்கு எப்போதும் எச்சரிக்கையாக இருக்கவேண்டியிருந்தது ஒரு புது அனுபவம். இதுவே வெறும் பேச்சுக்களை மட்டுமே நம்பி நாம் சித்தாந்தங்களை  பிடியாய் பிடித்து வளர்த்துக் கொள்ளலாகாது என்பதை உணர்த்தியது.

 
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாய்த் தெரிந்தது. காமராசர் அன்றைக்கு இலவசமாக கல்வியைத் தராமல் இருந்திருந்தாரானால் இன்று எந்தச் சமூகத்தினரும் முன்னேறி இருக்க முடியாது. இட ஒதுக்கீட்டை செயல் படுத்தினாலும் பயனின்றிப் போயிருக்கும்.

இன்றைய அரசு கல்வி தருவதை தனது கடமையாகக் கருதாதது ஒரு பெரிய சமுதாய இழப்பு. கல்வியை விட கண்ணும் கருத்துமாய் மதுக்கடைகளை ஆரம்பித்து குடிமகன்களை பெருமையோடு பொறுப்புடன் கவனித்துக் கொண்டிருப்பது மிகப் பெரிய சமுதாயக் கேடு.

 
ஆனால் அன்றைக்கு அரசு தந்த கல்வியை, ‘அது அவர்களது கடமை’ என்று போற்றலின்றி ஒதுக்கினோம்.

சாதி களைப் பற்றி வெளியே சொல்லாமல் சமுதாயக் கேடுகளை களைவதில் முனைப்பு காட்டியவரை அருமை பாராட்டாது விட்டோம். இதற்கு அந்த அரசை மதிப்பீடு செய்ய மற்றொரு அரசின் செயலைத் தெரிந்து வைக்காததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

ஆனாலும் நம்பி அமர்த்தியவர்கள் சமுதாய நீதி பாராட்டுகிறோம் என்று சொல்லி குடும்பத்திற்கும் உறவிற்கும் நட்புக்குமாக போட்டி போட்டுக் கொண்டு சொத்தைச் சுரண்டிச் சேர்க்க அனுமதித்தபின் நமக்கு புத்தி வந்து என்ன பயன்?

சாதியை வலுவான ஆயுதமாக தெரிந்தெடுத்து மக்களை திசை திருப்பி குழு சேர்ப்பதற்கு சமீபமாக முயற்சிகள் நடக்கின்றன.

1976ல் மரங்களை வெட்டிப்போட்டு பாதைகளை அடைத்து வன்முறையையும் கலவரத்தையும் தூண்டி திராவிடக் கட்சிகளுக்கு தங்களது ‘பலத்தை’க் காட்டி தன்னை வளர்த்துக் கொண்டு மத்திய அமைச்சராகவும் இருந்து ஊழலிலும் சளைத்தவர்களல்ல என்று தங்களை வெளிப்படுத்தியவர்கள், ‘மாற்றம் வேண்டும். நாங்கள் முதலமைச்சராக வேண்டும்’ என்கின்றனர்.

நலிந்தோருக்கும் ஒடுக்கப்பட்டோருக்கும் நாங்கள்தான் பிரதிநிதிகள் என்று சொல்லி தங்கள் பயணத்தைத் தொடர்ந்தவர்கள் இப்போது, ‘நாங்கள் ஒரு சாதிக் கட்சியல்ல. சமுதாய நீதியை நிலைநாட்டும் கட்சி’ என்று தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, ‘இனி கூட்டணி அமைத்தால் அரசிலும் பங்கு கேட்போம்’ என்கின்றனர். திடீரென எல்லோருக்கும் ரட்சகராக மாறிவிட்டனர்.

இத்தகைய கட்சியின் தலைவர்களெல்லாம் திரு.ரங்கராஜ் பாண்டேவிடம் சிக்கி பலமாக மூக்குடைபடுவதும் ஆனால் அதைப்பற்றி கிஞ்சித்தும் கவலை கொள்ளாமல் அவர்கள் நகர்வதும் பார்க்க வியப்பாய் இருக்கும்.

அப்படித்தான் இருந்தது நான் பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட விவாதம். பொருளாதார முன்னேற்றத்தையும் ஒரு அளவுகோலாக இட ஒதுக்கீட்டிற்கு எடுத்துக் கொள்ளலாமா என்று திரு. பாண்டே கேட்ட போது பா ம கா வழக்கறிஞர் திரு. மணி ஆவேசத்துடன் மறுத்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திரு.வன்னியரசும் அதே வேகத்தோடு மறுத்தார்.

 
 
‘ஏன் பொருளாதார முன்னேற்றத்தை ஒரு அளவுகோலாக எடுத்துக் கொள்ளக் கூடாது? பொருளாதாரம் சாதிகளை புறக்கணித்து விடுமல்லவா? எனக்குத் தெரிந்த இரண்டு I A S அதிகாரிகளின் குடும்பம் கலப்புத் திருமணம் செய்து கொண்டு ஒரே I A S சாதியாகி விட்டார்களே.. எனவே பொருளாதார முன்னேற்றம் எல்லாவற்றையும் மாற்றிவிடுமே..’ என்றார்.

அதை மறுத்த திரு. வன்னியரசு சற்றே ஆவேசத்துடன், ‘இல்லை. நமது சமுதாயம் சாதிக் கட்டில் இருப்பதால் இங்கு சமூக நீதி மறுக்கப்படுகிறது. தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர் பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்டுவிட்டால் அவருக்கு உயர் சாதிக் காரர்கள் பெண் கொடுப்பார்களா?’ என்றார்.

அந்தச் சமயத்தில்தான் ரங்கராஜ் பாண்டே அதே வேகத்தில் நறுக்கென்று கேட்டார்.

‘அப்போ சமுக நீதிங்கறது அடுத்தவன் வீட்டுப் பொண்ணை கல்யாணம் பண்றதுதானா?’

 
 
பளிச் சென கேட்டுவிட்டு அதே வேகத்துடன் விவாதத்தில் நகர்ந்தார்.

ஆனால் என் மனதில் இருந்து அந்தக் கேள்வி நகரவில்லை. சமூக நீதி என்பது இதுதானா?

இதையெல்லாம் பார்க்கும்போதுதான் மனது பதறுகிறது. நல்ல தலைவர்களை போற்ற மறந்து விட்டோம். நாடு பிழைக்குமா?

இன்னமும் பேசுவோம்.

அன்பன்,

வேதாந்தி.
 
 
 
 
Related Posts Plugin for WordPress, Blogger...