Followers

Showing posts with label ஸ்க்பெக்ட்ரம். Show all posts
Showing posts with label ஸ்க்பெக்ட்ரம். Show all posts

Thursday, July 14, 2011

ஸ்பெக்ட்ரம் மட்டுமா நம் பொதுச் சொத்து?

14.7.11

ஸ்பெக்ட்ரம் மட்டுமா நம் பொதுச் சொத்து?



ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை நம் நாடே அறியும். இதிலும் ஆச்சரியம் என்னவென்றால் தமிழ்நாட்டிலுள்ள கிராமங்களில் கூட இந்த விவகாரம் பற்றி மக்கள்  அறிந்திருப்பதுதான். இந்த அறிவுதான் தற்போது நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தலில் முந்தைய ஆட்சியாளர்களை எதிர்க் கட்சித் தகுதிகூட கொடுக்காமல் பின்னப் படுத்தி ஒதுக்கி வைத்தது.

ஸ்பெக்ட்ரம் என்ற வார்த்தையே இப்போது ஊழலைக் குறிப்பதாகி விட்டது.

பொதுவாக ஊழல் என்பது அதிகாரத்தில் இருப்போர் தம் கடமையைச் செய்ய சம்பந்தப்பட்டோரிடம் கையூட்டு பெறுவது என்பதாகத்தான் கருதப் படுகிறது. இதனை ஆங்கிலத்தில் kick backs என்பர். நமக்குப் பரிச்சயமானதொன்றைச் சொல்ல வேண்டுமானால் பத்திரப் பதிவு அலுவலர் நமது ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்தாலும் நம்மிடம் கையூட்டு எதிர்பார்ப்பது.

இன்னுமொரு வகை உண்டு. அது விதிகளை மீறுவொரை மேம்போக்காக கண்டும் காணாமலும் விட்டு விடுவதற்கு பெறும் கையூட்டு. இதற்கு பொதுவாக போக்குவரத்து காவலர்களைச் சொல்லலாம்.



இன்னுமொன்று ஒருவரது குற்றச்செயலை கண்டும் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கவோ அல்லது அத்து மீறி அவருக்குச் சாதகமானதொரு முடிவெடுக்கவோ அதிகாரிகள் பெறும் கையூட்டு. இதைக் குறித்துச் சொல்லவேண்டுமானால் சாதாரணமாக காவல் நிலையத்தில் நடக்கும் சம்பவங்களைச் சொல்லலாம்.

மற்றொன்று தமக்கு வேண்டியவருக்கு சாதகம் செய்ய அலுவலக விதிகளுக்கு உட்பட்டே அவரது நியாயமில்லாத விலைப்பட்டியலை அங்கீகரித்து அவருக்கு ஒப்பந்தத்தை ஒதுக்குவதோடு மட்டுமல்லாது அவரது குறைபாடான பணிகளுக்கும் - சில நேரங்களில் பணியே நடைபெறாது  -  ஒப்புதல் அளித்து கையூட்டு பெறுவது. இத்தகைய காரியங்களுக்கு உதாரணமாக நமது உள்ளாட்சி அமைப்புகளில் சாலை போடுவது மற்றும் ஏனைய உள்கட்டமைப்பு வேலைகளைச் சொல்லலாம்.

மேற்சொன்ன அத்தனையிலும் பொதுமக்கள் பாதிக்கப் படுவதுண்டு. அதனாலேயே இவைகளைப் பற்றிய தெளிவு மக்களிடையே உண்டு.

ஆனால் ஸ்பெக்ட்ரம் விவகாரம் மேற்சொன்னவைகளில் சேராது. அப்போது அதில் எப்படி ஊழல் வந்தது?

ஆவனங்களைத் திருத்துவது, அதிகார மீறல்கள், தனக்கு வேண்டியவருக்கு சாதகமான முடிவெடுத்தல்கள் என இவற்றையெல்லாம் மீறி மற்றொன்று நடந்திருக்கிறது.

அதுதான் பொதுச்சொத்தை கூட்டுக் கொள்ளையடிப்பது.



ஸ்பெக்ட்ரம் அலைவரிசை நமது இந்தியர்களுக்கான ஒரு பொதுச்சொத்து. இதனை மிகக் குறைந்த மதிப்பீட்டில் பெருநிறுவனங்களுக்கும் மற்றும் போலி நிறுவனங்களுக்கும் ஒதுக்கீடு செய்து அதனால் அந்த நிறுவனங்கள் பெரு லாபம் காண அதிகாரத்தில் இருந்தவர்கள் வழி வகுத்தனர். இதற்கு ஈடாக மிகவும் புத்திசாலித்தனத்துடன் பல வழிகளில் வெளிக்குத்தெரியாமல் தங்களுக்குச் சாதகமான பணப் பரிமாற்றத்தால் அதிகாரத்தில் இருந்தோரும் அவரைச் சார்ந்தோரும் லாபமடைந்தனர்.

இதனால் பொதுச்சொத்தை பெரு நிறுவனங்களும் அதிகாரத்தில் இருந்தோரும் கூட்டாக கொள்ளையடித்து லாபம் பார்த்தனர். இதைத்தான் , இந்த அதிகார முறைகேட்டை மற்றும் அதில் அவர்கள் பார்த்த லாபத்தைத்தான் நாம் ஊழல் என்று சொல்கிறோம்.

வெறும் விற்றல் பெற்றல் என்ற போர்வையில் இருந்த இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெளி வந்ததே CAG அறிக்கையால்தான். இந்த CAG தணிக்கை அறிக்கைதான் ஸ்பெக்ட்ரம் என்ற பொதுச் சொத்து விலை மதிக்க முடியாதது என்றும் அதனை மலிவாக்கி ஒதுக்கியது நாட்டிற்கு பெரும் இழப்பு என்றும் எடுத்துச் சொல்லியது. மற்றையோர் இந்த ஒதுக்கீட்டில் நாட்டின் பாதுகாப்பும் கேள்விக் குறியாகிவிட்டது என்றும் சொல்கின்றனர்.





எனது கேள்வி: ஸ்பெக்ட்ரம் மட்டும்தான் பொதுச்சொத்தா? இந்த வானமும் பூமியும் யார் சொத்து? காற்றும் நீரும் யார் சொத்து? கடலும் கடல் சேர்த்த செல்வமும் யார் சொத்து?

எல்லோருக்கும் சொந்தமான இயற்கை வளங்களை அதிகாரத்தில் இருப்போரது துணையுடன் பெரு நிறுவனத்தார் கொள்ளை கொள்கின்றனரே இதனால் சாமான்யன் பாதிப்படையவில்லையா?

அய்யா நான் தொழில் வளர்ச்சிக்கு எதிராக பேசவில்லை. இப்போதைக்கு நமது நாட்டிலுள்ள சட்ட திட்டங்கள்  ஓரளவுக்கு இயற்கை வளங்களின் இணக்கமான இழப்பில்தான் தொழில் வளர்ச்சியை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் இயற்கை வளங்களுக்கு கிடைக்கும் இந்தக் குறைந்த அளவுப் பாதுகாப்பும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் கொள்ளை குணத்தால் கெட்டுப்போகிறது. இதனால் பாதிக்கப் படுவது சாமன்யன் தான்.

அனைவருக்கும் தெரியும் அத்து மீறிய கனிம வளக் கொள்ளைகளையும் மணல் கொள்ளைகளையும் விடுத்து மற்றவைகளைப் பற்றித்தான் இங்கு பேசுகிறேன்.



சட்டத்தில் சொல்லப்பட்ட மாசு கட்டுப்பாடு விதிகள் காற்றில் விடப்படுகின்றன. கேட்பாரில்லை. இதனைப்பற்றி பொது மக்களுக்கு போதுமான விழிப்புணர்வும் கிடையாது. நொய்யல் ஒன்றே இதற்குச் சான்று. எல்லாவற்றிலும் நாம் கண் கெட்ட பிறகுதான் விடியலைத் தேடுகிறோம்.  

சட்டத்தில் ஒவ்வொரு தொழிற்சாலைகளும் கடைப்பிடிக்க வேண்டிய மாசு கட்டுப்பாடு முறைகள் புறக்கணிக்கப் படுகின்றன. இந்தப் புறக்கணிப்புகள் கண்காணிப்போரால்  வேண்டுமென்றே கண்டுகொள்ளாமல் விடப்படுகின்றன. நம் பொதுச்சொத்தான காற்றிலும் நீரிலும், கடலிலும் மாசைக் கலக்க அனுமதிக்கும் செயல்களால் கொள்ளை போகும் நமது இயற்கை வளங்கள் நமக்கு விளைவிக்கும் கேட்டையும் நட்டத்தையும் யாவரும் அறிவரோ?  இத்தகைய செயல்களால்  சுத்தமான காற்றையும்,  நீரையும் சாமான்யன் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை.  அரசும் மக்களும் சுகாதாரக் கேட்டினால் விளையும் நோய்களைத்  தீர்க்க பெரும் தொகையை ஒதுக்க வேண்டிய கட்டாயம். ஆனால் தொழிற்சாலைகளோ இந்தப் பொதுச் சொத்தை கொள்ளை கொள்கின்றன. இதற்கு அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் உடந்தை..  

என்ன கொடுமையப்பா இது..?





காற்றும், நீராதாரங்களும் பொதுச் சொத்தல்லவா..? அதனைக் கெடுப்பது சாமான்யனின் விளை பொருட்களில் நஞ்சை ஏற்றாதா? விளைச்சல் குறைந்தால் விலையேற்றம் விளையாதா? நமது ஆரோக்கியம் கெடாதா..? இத்தனைக்கும் உடந்தையாய் இருப்பவர் மட்டும் என்ன செவ்வாய் கிரகத்திலா இருக்கின்றார்? அவரும் தானே இந்தச் சூழலில் அகப்படுகிறார். அப்படியிருந்தும் சுற்றுச் சூழலைக் கெடுக்கும் செயலுக்கு துணைபோவதென்ன அறியாமையாலா அல்லது அகம்பாவத்தினாலா? அல்லது இதற்கு ஒரு உயர் அளவில் தணிக்கை கிடையாது என்கிற துணிச்சலா?  

இனியாவது கயவர்கள் கண் திறப்பரோ…?

இன்னமும் பேசுவோம்.

அன்பன்,

வேதாந்தி.


Friday, April 8, 2011

ஸ்பெக்ட்ரம் ராசாவுக்கு நன்றிகள்…

8.4.11

ஸ்பெக்ட்ரம் ராசாவுக்கு நன்றிகள்…



ஸ்பெக்ட்ரம் ஊழல் எந்த அளவுக்கு நமது நாட்டிற்குத் தேவையான நல்ல காரியத்தைச் செய்திருக்கிறது என்று இன்னமும் பலருக்குத் தெரியவில்லை. நான் தமிழக முதல்வர் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் சொல்லும் ‘எளியவரும் அலைபேசியை வைத்திருக்கும் அளவுக்கு அதனை மிகப் பிரபலமாக்கியது ராசாவின் செயல் ‘ என்று ஊழலே இல்லை எனும் கோணத்தில் சொல்லவில்லை. நான் சொல்ல வந்தது வேறு.

நம் நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து ஊழல் வளர்ந்து கொண்டு இருக்கிறது. இது தனி மனித ஒழுக்க மீறலாக முதலில் பார்க்கப்பட்டு பின்னர் சகித்துக் கொள்ளும்படியான ஒன்றுதான் எனும் அளவில் சற்றே பரிணாம வளர்ச்சி பெற்று ( தேனெடுப்பவன் புறங்கையை நக்காதிருப்பானா.. எனும் மனப்பாங்கு) பின்னர், ஏறக்குறைய ஒரு கொள்ளை போலவே,  குழுவாக சேர்ந்து செய்யப்பட்டு, தற்போது நாட்டைக் காப்பதற்காக உருவாகியிருக்கிற கட்சிகள், தங்களது கொள்கைகளை அடிப்படையாக வைத்து மக்களிடையே வளர்ந்த அரசியல் கட்சிகள், அதன் நிர்வாகிகள் மற்றும் பலர் எத்தகைய இழப்பிலும் அவமானத்திலும் தங்களது அரசியல் வாழ்க்கையை தேச அளவில் சுரண்டலுக்கு பயன்படுத்தும் அளவிற்கு அசுரத்தனம் எடுத்து விட்டது. 



ஆனால் இவ்வளவு அசுரத்தனமாக ஊழல் உருவெடுத்த பின்னும் நாம் அதனை கீழ் மட்ட அளவில் மட்டுமே விமரிசித்திருக்கிறோம். சாதாரண போக்குவரத்து காவலரிலிருந்து பத்திரப் பதிவாளர் அலுவலகம் மற்றும் வட்டார போக்குவரத்து துறை அலுவலகம் ஆகியவைகளின் செயல்பாடுகள் மட்டுமே நமது விமரிசனத்திற்குள்ளாகியது.  இது ஒரு வின்னைமுட்ட வளர்ந்த அசுரனை அவனது நகக் கண்களை மட்டுமே கண்டு விமரிசிப்பதைப்போல்தான் இருந்தது…

ஆனால் இன்று.. நமது ஸ்பெக்ட்ரம் ராசவின் ஊழலின் தயவால் நாம் தலை நிமிர்ந்து வின்னை முட்டும் அதன் பிரம்மாண்டத்தை தெளிவாக காணத் துவங்கியிருக்கிறோம்.

இது மட்டுமல்ல. தற்போதைய இளைய தலைமுறையினர், தங்களிடம் உள்ள கோபத்தையும் வெறுப்பையும் மட்டுமே வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கையில் நமது ராசா அவர்களுக்கு என்ன செய்யவேண்டும் என வழி காட்டிவிட்டார்.







தற்போது அனைத்து இளைஞர்களும் தற்கால மகாத்மா எனும் அன்னா ஹசாரே வின் பின்னால் கூடிவிட்டனர். அனைத்துத் தரப்பினரும் ஊழல் என்பது ஒரு தனிமனிதனின் உரிமைச் சுரண்டல், ஒரு ஏழையின் வாழ்வுச் சுரண்டல் என்பதை நன்கு உணர ஆரம்பித்து விட்டனர்.



42 வருடங்களாக ஊழலை கண்டுகொள்ளாமல் தூங்கிக் கொண்டிருந்த இந்தியாவை எழுப்பியே தீருவது என்று முடிவெடுத்து விட்டனர். ஊழலுக்கு எதிரான லோக் பால் சட்டத்தை வலியுறுத்தி உலக முழுவதிலும் உள்ள இந்தியர்கள் ஒன்று கூட ஆரம்பித்து விட்டனர்.


இங்கே மேலதிக தகவல்கள்.

 Click here to sign the petition!  : இங்கு உங்கள் பங்களிப்பு

இது நல்லதுதானே. என்ன நான் சொல்வது? ரின் விளம்பரம் பார்க்கிறீர்களல்லவா? அப்புறம் என்ன? கறை நல்லதுதானே?

ஆனால் பாருங்கள், நமது தமிழகம் இன்னமும் தூங்கிக் கொண்டிருக்கிறது. இதை எழுப்ப இன்னுமொரு ஸ்பெக்ட்ரம் ராசா தேவையோ என்னமோ?



Let us all support Anna




இன்னமும் பேசுவோம்.

அன்பன்,

வேதாந்தி.


Related Posts Plugin for WordPress, Blogger...