Followers

Showing posts with label வாழ்வு. Show all posts
Showing posts with label வாழ்வு. Show all posts

Thursday, May 28, 2015

வாழ்க்கையின் நோக்கம் வாழ்வைத் துறத்தலா..?


28.5.15

வாழ்க்கையின் நோக்கம் வாழ்வைத் துறத்தலா..?

வாழ்வின் தேவைகளை துறந்தவன் துறவி. அவனது வாழ்வு துறவற வாழ்வு. ஆனால் வாழ்வைத் துறத்தல் என்பது இல்லறத்தானுக்கு சாத்தியமா?

இல்லற வாழ்வோ அல்லது துறவற வாழ்வோ எல்லாமே மனிதரை “துறத்தல்” என்னும் ஒற்றை நோக்கான இறுதி நோக்கிற்குதான் தள்ளிச் செல்கிறது. எனவே இல்லறத்தானும் துறவறத்தானும் ஒரே நோக்கிற்கு வெவ்வேறு திசையில் பயணிக்கின்றனர் என்பது சற்றுச் சிந்தித்தால் விளங்கும்.

இல்லறத்தார் வாழ்வை ஏற்கத்தான் தம்மை தயார் படுத்திக் கொள்கின்றனர். ஒரு சராசரி மனிதரின் வாழும் வயது எழுபது எனக் கொண்டால் தனது முப்பத்தைந்து வயது வரையில் வாழ்வை ஏற்று வாழ தன்னைத் தயார் படுத்திக் கொள்கிறான். தனது உடல், மனம், அறிவு மற்றும் சூழலை வாழ்வை ஏற்று வாழத்தகுந்தபடிக்கு வளர்த்து தன்னை தயார் படுத்திக் கொள்கிறான். அதனை ‘வாழ்வை வளப்படுத்திக் கொள்ளுதல்’ எனச் சொல்வர்.
‘உன்னால் முடியும்’,

‘வானமே எல்லை’

‘வாழ்வை வாழக் கற்றுக் கொள்வோம்’

‘அனைத்திற்கும் ஆசைப்படு’

இதெல்லாம் தற்போதைய ‘துறவி’களால் அளிக்கப்படும் உபன்யாச தலைப்புகள்.

இப்போது எல்லாம் துறந்த துறவிகளே கார்ப்போரேட்டுகள் அளிக்கும் டிரெய்னிங் புரோகிராம்கள் போல தன்னைத் தேடி வருபவர்களுக்கு மேலும் மேலும் வாழ்வில் போதை ஏற்றி முன்னே ஓடும்படிக்கும் ஓடி ஜெயிக்கும்படிக்கும்படியாக உபதேசங்களைச் செய்வதனால் எல்லோரும் வெற்றியைத் தவிர வேறேதும் சிந்தனையின்றி வெறிகொண்டு பந்தய மைதானத்தை சுற்றிப் பறக்கின்றனர்.

இதனால் தற்போதைய கார்ப்போரேட்டுகளுக்கும், ‘கார்ப்போரேட்’ துறவிகளுக்கும்தான் லாபம். இவைகள் மனிதனை வாழ்நாட்களை ஒருவித மயக்கத்துடன் கடத்தத்தான் பயன்படுமே ஒழிய அவனுக்கு வாழ்வின் நோக்கத்தையோ அல்லது ஒரு தெளிவையோ தரப் பயன்படாது.

ஓட்டத்தின் இறுதியில் மூச்சு வாங்கி நிற்கும் மனிதன் எதையும் பெற்றவனாகத் தெரியவில்லை. மனத் தெளிவும் பெறுவதில்லை. இதை அவன் உணரும்போது காலம் கடந்ததாகி விடுகிறது. மேலும் இத்தகைய ‘வாழ்வை ஏற்றல்’ முறைக்கு தன்னை தயார் செய்து கொண்டவன் நாற்பத்தைந்து வயதிற்குமேல் தான் பெறவேண்டிய ‘வாழ்வைத் துறத்தல்’ என்ற முறைக்கு பயிற்சி இல்லாமல் கலங்கி, குழம்பிப் போகிறான்.

இருபத்தைந்து வயது வரை வாழ்வை ஏற்றுக்கொள்வதற்குத் தேவையான உடல் ஆரொக்கியம் பேணி உடல் மற்றும் அறிவை வளர்த்து ஆளாகிறான். முப்பத்தைந்து வயது வரை குடும்பத்தை வளர்த்து குடும்பப் பொறுப்பேற்று வாழ்வை நடத்துகிறான். நாற்பத்தைந்து வரை தான் சார்ந்து நிற்கும் தொழில் நிறுவனத்திற்கோ அல்லது தனது தொழில் வளர்ச்சிக்கோ தேவையானவைகளை பெருக்கி தனது உருவாக்கலை மேம்படுத்துகிறான்…

இப்படி வளரும் அவனது வாழ்வில் அவனுக்கு ‘தன்’னைப்பற்றியோ ‘தனது’ உண்மையான தேவைகளைப் பற்றியோ சிந்திக்க நேரம் கிடைக்காமல் அவனது வாழ்வு நகர்கிறது.

இப்படி நகரும்போதுதான் ஐம்பதைத் தொடும்போது அவனது சிந்தனைகளை திசை மாற்றும் வகையில் கட்டாய மாற்றங்கள் ஏற்படுகின்றன. உடல் ஆரோக்கியத்தில், மன ஆரோக்கியத்தில் மற்றும் உறவுகளின் ஆரோக்கியத்தில் நடக்கும் இந்த மாற்றங்கள் அவனை வெகுவாக பாதிக்கின்றன.

இவைகள் யாவும் தான் இதுவரை ஏற்று நடத்திய வாழ்வையும் அதனால் தானடைந்த பலன்களையும் கேள்வி கேட்கத் தூண்டுகிறது. அதன் விளைவாக இந்த வாழ்வில் ‘தனக்கு’ப் பலனில்லை என அறிகிறான். எதிர்பார்ப்பு பொய்த்ததால் ஏமாறுகிறான். மனம் தளர்கிறான் சிலர் ஆன்மீகம் பக்கமாய்த் திரும்புகின்றனர். அதுவரை பெர்னார்ட்ஷா, பெரியாரைப் பேசியவன் ராமகிருஷ்ணரையும், ரமணரையும் பேசுகிறான். ஆனாலும் இந்த ஆன்மீகத் தேடலை தனது ஏமாற்றங்களுக்கு ஒரு மருந்தாய்த்தான் எடுத்துக் கொள்கிறானே ஒழிய தனது வாழ்வின் பொருளை புரிந்து கொள்ளவேண்டி முயற்சி செய்ய அல்ல. 



ஆன்மீக உரைகள் மனதிற்கு சற்று நிம்மதியைத் தருவதை உணர்ந்து முடிப்பதற்குள் இறந்து விடுகிறான். அவனது வாழ்வு நிறைவுற்று முடிந்ததா இல்லையா எனும் கேள்விக்கு விடை கிடைக்காது. ஆனால் இறக்கும் போது பலவித ஏக்கங்களுடனும், ஏமாற்றங்களுடனும் இறந்திருப்பான் என உறுதியாகச் சொல்லலாம்.
இப்படி நாம் இறக்கலாமா?

இறப்பை எப்படி ஏற்றுக்கொள்வது?

வாழும் வரை வாழ்ந்து இறப்பு வரும்போது அப்படியே இறப்பது நல்லதா..?

அல்லது வாழ்வை ஏற்க நாம் தயாரானதைப்போல வாழ்வைத் துறக்கத் தயாராகி, வாழ்வைத் துறந்து இறப்பை இன்பமுடன் ஏற்று இறப்பது நல்லதா..?

ஒருமுறை எனது நண்பர், பிரம்ம குமாரிகள் சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டவர், “பணி ஓய்வுக்குப் பின்னர் வீட்டில் சும்மா இருப்பதற்கு ஏதேனும் வேலைக்குச் சென்றால் பற்றாக் குறைக்கு உதவுமல்லவா?” என்ற என் கேள்விக்கு சொன்னபதில் என்னை திகைக்க வைத்தது.

“அப்படி இல்லை. இன்னமும் போராடிக்கொண்டே இருக்கக் கூடாது. இந்த வயதில் விருப்பு, வெறுப்பு, எதிர்பார்ப்பு, ஏமாற்றம், தேவை, போராட்டம் ஆகிய வாழ்வுக்குத் தேவையானவைகள் இருக்கக் கூடாது. அப்போதுதான் நம் உடலிருந்து உயிர் அழகாகப் பிரியும்… அமைதியான இறப்பு கிடைக்கும்..” என்றார்.

ஆகா… என்னவொரு விளக்கம். நாம் வாழ்வைத் துறக்கவேண்டும் என்ற எண்ணத்தை கட்டாயமாகவேனும் நம்முள் திணிக்கத்தான் இறைவன் நமக்கு மூப்பையும் தளர்ச்சியையும் கொடுத்திருக்கிறானோ..?

நோய், மூப்பு, தளர்ச்சி, ஏமாற்றம் ஆகியவைகள்தான் ஆசான்களைப் போல நம்மை வழி நடத்தி வாழ்வைத் துறத்தலுக்கு நம்மை தயார் படுத்துகின்றனவோ?.

வாழ்வைத் துறத்தலுக்கு, நமது அறிவிற்கு அப்பாலுள்ள ஞானத்தை வேண்டி நாம் கற்ற, நமக்குத் தெரிந்த அறிவைத் துறத்தல் வேண்டும், நமது ஆசைகளை வளர்த்து பெருக்கிக் கொண்ட நமது உறவுகளைத் துறக்க வேண்டும், பொருளைத் துறக்க வேண்டும், ஆசையைத் துறக்க வேண்டும், வெறுப்பைத் துறக்க வேண்டும், அப்படியே நாம் வாழ்வைத் துறக்க வேண்டும்.

சிலர் வாழ்வை ஏற்காமலேயே இந்தத் துறத்தலை ஏற்றுக் கொள்வதால் துறவி ஆகின்றனர் - இரட்டை உயர்வு கிடைத்த மாணவனைப்போல. விவேகானந்தர், ராமகிருஷ்ணர், ரமணர், வள்ளலார் ஆகியோரை இதுபோன்ற ஒரு வழியை அடைந்தவர்களாக உதாரணம் காட்டலாம்.

எனவே, இல்லறம் அல்லது துறவறம் ஆகிய எந்த ஒரு அறவழியைத் தேர்ந்தெடுத்தாலும் எதையும் துறக்கத் தயாராகாமல் இறந்தால் அந்த வாழ்வு சிறந்ததாக ஆகாது என்பது மட்டுமல்ல அது நமது பிறப்பைப் பற்றி எந்த ஒரு சிந்தனையும் அற்றுப்போய் இறந்து நம் வாழ்வை வீணடித்ததாகிவிடும் அல்லவா?

ஆகவே வாழ்வின் முற்பகுதியில் வாழ்வை ஏற்றுக் கொள்ளத் தயாராகி நாம் வாழ்வதைப் போல வாழ்வின் பிற்பகுதியில் நாம் வாழ்வைத் துறக்கத் தயாராகவும் கற்றுக் கொண்டு நம் வாழ்வின் ஒரு பகுதியான இறப்பையும் குறையின்றி ஏற்றுக்கொள்ள முயலுவோம். வாழ்க்கையின் நோக்கத்தை முழுமையக்குவோம்.
இன்னமும் பேசுவோம்.

அன்பன்,
வேதாந்தி.



 

Tuesday, June 21, 2011

உணர்தலின் மேன்மை உயிரின் மேம்படுதலா?

21.6.11

உணர்தலின் மேன்மை உயிரின் மேம்படுதலா?





உடல் சார்ந்த ஆன்மா தன் இயக்கத்தில் இருக்கையில் அதனை உயிர் எனலாம். ஆனால் உயிரின் விடுதலை ஆன்மாவின் விடுதலையாகாது. விடுபட்ட உயிர் பேரொளியைச் சேர்ந்தாலன்றி அது ஆன்மாவின் விடுதலையாகாது.  இவ்வுலகின் அனுபவங்களைக் கொண்டு தன்னை மேம்படுத்திக் கொண்ட உயிர் மட்டுமே இறப்பில் இந்த பூத உடலை விட்டு  பேரொளியை அடைந்து ஆன்மாவின் விடுதலையில் முடிகிறது. மற்றவையெல்லாம் மறுசுழற்சிக்குள்ளாகிறது -  மேன்மையடைதல் பொருட்டு மறு பிறப்பிற்குள்ளாகிறது.

மேற்சொன்னவைகளை எல்லாம் விரிவாக முந்தய இரு பேச்சில் கண்டோம்.
காண்க:

இவ்வுலகின் உடல் சார்ந்த அனுபவங்களை, உணர்வுகளாய் நாம் அடுத்த நிலைக்கு கொண்டுசெல்லும் போது மட்டுமே அவைகள்  உயிரின் மேம்படுதலுக்கு உதவுகிறது. எனவே உணர்தல் - experiencing - முக்கியம்.  இந்த உணர்தல் நமது சூழல் மற்றும் நம்முடன் உள்ள மற்றைய உயிர்கள் , உறவுகளுடனான ஒத்துணர்ந்து புரிதலை -  empathetic understanding -  அதிகரிக்கும்.

இந்த ஒத்துணர்ந்து புரிந்துகொள்ளுதலையே நான் இங்கு உணர்தல் எனக் குறிப்பிடுகிறேன்.



கற்றல் வேறு உணர்தல் வேறு. ஒருவன் பசி என்பதை கற்றுத் தெரிதலுக்கும் உணர்ந்து தெரிதலுக்கும் வேறுபாடு உள்ளது.  உணர்ந்து தெரிந்தவன் பிறர் பசித்திருக்கும் போது உதவ முற்படுவான். வெறும் கற்றலோடு நின்றுவிட்டவனிடம் இந்த உந்துதல் இருக்காது. கற்றலால் பெற்ற அறிவையும் அனுபவத்தால் பெற்ற அறிவையும் அதன் அடுத்த நிலையான உணர்ந்து தெளிதலுக்கு கொண்டுபோகும்போது மட்டுமே உயிரின் மேம்படல் நடக்கிறது.

இன்னமும் விளங்கிக் கொள்ளும்படிக்கு சொல்கிறேன்.

காதலைப் பற்றி நாம் அறிவோம். அதன் மேன்மையைப் பற்றியும் நாம் அறிவோம். ஆனால் இத்தனைக்கும் மேலே இந்தக் காதலை அனுபவிப்பவர்கள் சிலரே. அதிலும் பலர் தனக்குள் கிளர்ந்தெழும் உணர்ச்சிகளை காதல் என்று பெயரிட்டுக் கொள்கின்றனர். நான் மிகச் சிக்கலானதொன்றைக் கூற முற்படவில்லை; எளிமையான எதிர் பால் காதலுணர்வுகளைத்தான் சொல்கிறேன்.

இந்தக் காதலை அனுபவித்து, உணர்பவர்கள் மிகச் சிலரே.

தற்போது பத்திரிக்கைகளில் வந்த சென்னையில் நடந்த ஒரு நிகழ்வை நினைவு கூருங்கள். ஒரு தந்தை மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும் தன் மகளை, அவள் காதலித்து மணம் புரிந்த குற்றத்திற்காக அவளது கணவனை - தன் மருமகனை - கொன்று  விதவையாக்கி விட்டான். 



தனது குற்றத்திற்கு இவர் சொல்லும் காரணம் தான் தன் மகளை மிகவும் நேசிப்பதாகவும் அவளை அவளுக்கேற்ற ஒரு மருத்துவம் படித்த மணமகனை பார்த்து வைத்ததாகவும் ஆனால் தன் மகள் தன் விருப்பப் படி காதலித்து மணம் புரிந்தை தன்னால் ஒப்புக் கொள்ள முடியாமல் தான் இப்படிச் செய்து விட்டதாகவும் கூறினார்.

இந்தத் தந்தை குறைந்தது ஒரு இருபது வருடங்களாவது தன் மணைவியுடன் வாழ்க்கை நடத்தியிருப்பார். அப்படியிருந்தும் காதலை உணர்ந்தாரில்லை. இவர் காதலை கற்றறிந்திருக்கலாம்.  ஆனால் இந்தக் கற்றல் அதே நிலையில் நின்று அடுத்த நிலையான உணர்தல் நிலைக்குச் செல்லாததினால்தான் இவரால் தனது மகளின் காதலை ஒத்துணர்ந்து புரிந்து கொள்ள முடியவில்லை. இதுவே இவரை கொலை பாதகச் செயலுக்குத் தூண்டி பாவமிழைக்க வைத்துவிட்டது.

இன்னமும் ஒன்றைச் சொல்கிறேன். இது நாமெல்லோரும் அறிந்த கண்ணகி மாதவி கதைதான். என்னைப் பொறுத்தமட்டில் கோவலன் காதலை மாதவியால் மட்டுமே உணர்ந்தான். ஆனால் இந்த உணர்தலால்தான்  பின்னாளில் கண்ணகி தன் மேல் கொண்டிருந்த காதலையும் அவனால் புரிந்து கொள்ள முடிந்தது, அது மாதவியிடமிருந்து அவனை திரும்பவும் கொ ணர்ந்தது. இது அவனை கண்ணகியை ஒத்துணர்ந்து புரிந்து கொள்ளச் செய்தது.



பட்டினத்தார், கடைவழிக்கு காதற்ற ஊசிகூட வராது என்பதை உணர்ந்ததாலேயே துறவறம் பூண்டார். இந்த உணர்தலின் மேன்மையாலேயே அவருக்கு பேய்க்கரும்பு இனித்தது.

ஆனால் அவரது தமக்கையார் இதனை அறிந்திருந்தாலும் அதை அடுத்த நிலையான உணர்தலுக்கு கொண்டு செல்லாததினால், இவ்வுலகவாழ்வில் பற்று கொண்டோர் பெரும் வணிபக் குடும்பத்தில் பிறந்த தம் சகோதரரை பரதேசி என பழிப்பரே என்பதையே பெருங்கவலையாய்க் கொண்டு தன் சகோதரரை நஞ்சிட்டு கொல்லவும் துணிந்தாரல்லவா?

பெற்றோர் மற்றும் பிள்ளைகளுக்கு இடையே இந்த வகை மேம்பட்ட உணர்தல் அவர்களை மேம்படுத்தி உறவுகளை சிறக்கச் செய்யும். பெற்றோரின் கவலைகளை பிள்ளைகள் புரிந்துணர்தல் அவசியம். அதைப்போலவே பிள்ளைகளின் வளர்ச்சியையும் அவர்களது வாழ்வின் சந்தர்ப்பங்களின் விரிவடைந்த எல்லைகளையும் உணர்ந்து பெற்றோர்கள் பிள்ளைகளை ஊக்குவிக்கவேண்டும். இந்த ஒத்துணர்ந்து புரிதல் - emphathetic understanding -  நமது உறவுகளை வலுப்படுத்துவதோடல்லாமல் வளப்படுத்தவும் செய்யும் மேலும் நமது வாழ் சூழலில், குடும்பத்தில் , அமைதியையும் காக்கும்.

ஆனால் நமது இந்த  உணர்தலைத் தடுக்கும் காரணிகள் நமது மனச்சேற்றில் எழும் கீழான எண்ணங்கள் மற்றும் நமது மன நிலையைக் குலைத்துப் போடும் போதைப் பழக்கங்கள் ஆகியவை. இவைகள் உணர்தலைத் தடுப்பதோடு மட்டுமல்லாது நம்மை விலங்கினும் கீழாக மாற்றிவிடும். இது குடும்பத்தைச் சீர்குலைப்பதோடல்லாது சமுதாயச் சீர்கேட்டிற்கும் வழிகோலும்.

பாவ புண்ணியங்களை அறிய வேத நூல்களைத் தேட வேண்டியதில்லை. நமது அனுபவங்களின் உணர்தலின் தெளிவை மேம்படுத்தினாலே போதும்.  எந்தெந்த வினைகளை நாம், பிறர் நமக்கிழைப்பது கூடாது எனக் கருதுகிறோமோ அந்த வினைகளை நாம் பிறர்க்கிழைப்பது பாவம்.  பிறரிடமிருந்து நம்மை மகிழச்செய்யும்  செயல்களாய் நாம் எதிர்பார்க்கும் செயல்களை நாம் பிறருக்குச் செய்து மற்ற உயிர்களை மகிழ்விப்பதே புண்ணியம் சேர்க்கும் வினைகளாகும்.




நமது அனுபவங்கள் நமக்கு நிறைய கற்றுத் தருகின்றன.  இந்த கற்றல் அறிவுத் தெளிவோடு மட்டுமே நின்றால் உயிர்க்குப் பயனாகாது. அதற்கும் மேலே உயிர்க்குப் பயனுள்ள உணர்தலை - ஒத்துணர்ந்து புரிதலை - உருவாக்கி இந்த உணர்வுகள் நமது செயல்களை நிர்ணயிக்கும் கருவிகளாகும்போது நாம் உயிரை மேம்படுத்திஆன்மாவின் விடுதலைக்கு வித்திடுகிறோம் எனலாம்.
இந்த அனுபவங்களால் கிடைக்கும் உணர்தல் மட்டுமே நம்மை  மேம்படுத்தும். இந்த உணர்தலை இழந்தோமானால் நாம் கீழான செயல்களைச் செய்து பிறப்பு இறப்புச் சுழலில் சிக்கி மாள வேண்டியதுதான்.

இதுவரை நான் உணர்தலை விளக்கியது காதல் மற்றும் பசி, பிணி ஆகியவைகளுக்கு என்றாலும் இந்த நோக்கில் நீங்கள் சிந்திக்க ஆரம்பித்தீர்களானால் இந்த உணர்தல் நாம் கற்றவைகளுக்கும், பெற்ற  அனுபவங்கள் அனைத்திற்கும் பொருந்திவரக் காண்பீர்கள்.

இதைப்போலவே நம்மைச் சுற்றியுள்ள சூழல் மற்றும் மனித உறவுகள் நமக்குக் கொடுக்கும் அனுபவங்களை நாம் உணர்தல் நிலைக்கு கொண்டு செல்வோமானால் நாம் சிறக்க வாழலாம்.



அது மட்டுமல்ல. நான் முன்பே சொன்னதுபோல் இப்பிறவியில் நமது செயல்களை சரியான வழியில் செய்து உயிரினை - ஆன்மாவை - மேம்படுத்தி பிறப்பறுக்க இந்த ஒத்துணர்ந்து புரிந்துகொண்டு வாழ்தல் நமக்கு ஒரு திசை காட்டியாய் வழிகாட்டும்.


இன்னமும் பேசுவோம்,

அன்பன்,

வேதாந்தி.



Related Posts Plugin for WordPress, Blogger...