6.6.11
பிறப்பின் பயனை அடைய நாம் செய்ய வேண்டுவன எவை ?
(இது ஒரு அலசல். மற்றும் இதில் சொல்லியிருப்பவைகள் தற்போதுள்ள கருத்துக்கள் அல்லது தத்துவங்கள் ஆகிய எவைகளையும் சார்ந்தோ எதிர்த்தோ சொல்லப் பட்டவைகளல்ல.)
எல்லா கடவுள் கொள்கைகளும் இந்த உலகின் அனுபவங்கள் நம்மை மேம்படுத்தி நம் ஆன்மாவை பேரொளியாகிய இறவனிடம் சேர்ப்பிக்கின்றது என்றே கருத்தினையே மையமாகக் கொண்டுள்ளன.
இந்து மதத்தில், ஒரு கருத்து இந்த ஆத்மாவானது பரமாத்மாவிலிருந்து பிரிந்து வந்ததென்றும் இது மறுபடியும் அந்த பரமாத்மாவோடு இணைதல் வேண்டி இப்பூவுலகில் உள்ளது என்பது. மற்றொன்று இந்த ஆன்மாவே பரமாத்மாதான் என்பது. இங்கு பரமாத்மாவை விட்டு வந்துள்ள ஆத்மா அதனுடன் சேர வேண்டுமானால் தன்னிடமுள்ள பாவங்களை - impurities - ஒழித்த பின்பே, பரமாத்மாவைப் போல தூய்மையடைந்த பிறகே, அதனுடன் சேரமுடியும் என்பது மையக் கருத்து. இது குறித்தே மனிதனின் பிறப்பும் மறு பிறப்பும் எனக் கொள்ளலாம்.
ஜைன மதத்தில், இந்த ஆன்மாவானது ஒவ்வொரு பிறப்பிலும் தனது செயல்களால் பாவ புண்ணியங்களை சேர்த்து வருகிறதென்றும் தக்க சமயத்தில் எல்லாப்பாவங்களையும் தான் சேர்த்த புண்ணியத்தால் கழித்து இறையடி சேர்கிறதென்பது கருத்தாகச் சொல்லப்படுகிறது. இங்கு மனிதனின் பிறப்பு மற்றும் மீண்டும் பிறத்தல் என்பது மனிதனின் பாவத்தினை கழிக்கவே என விளங்கிக் கொள்ளலாம்.
கிருத்துவ மதத்தில், கடவுளால் உருவாக்கப்பட்ட இந்த உலகம் மற்றும் அதில் உள்ள உயிர்களை ஆளும் பொருட்டு அவரைப்போலவே (கடவுளைப்போலவே), அவரால் உண்டாக்கப்பட்ட இந்த மனிதன், சாத்தானின் சூழ்ச்சியினால் கீழ்ப்படியாமை என்ற பாவத்தைச் செய்தபடியினால் இந்தப் பாவமானது மனிதனின் தெய்வத்தன்மையைக் கெடுத்து அவனை பாவச் சொரூபமாக்கியது. இப்படி பாவச் சொரூபமான மனிதன் பரிசுத்தமான கடவுளைச் சேர முடியவில்லை - எண்ணையும் நீரும் போல பாவச் சொரூபமும் பரிசுத்தமும் சேர்வதில்லை. இப்படியாக கடவுளிடமிருந்து மனிதனை பாவம் பிரித்த படியினால், கடவுளே மனமிரங்கி மனிதனை மீட்கும் பொருட்டு தனது குமாரனாகிய ஏசு கிருஸ்துவை மாமிச பலியாக்கி அவரது இரத்தத்தினால் நமது பாவங்களை சுத்திகரிக்கச் செய்து பரிசுத்தமாக்கி நம்மை அவருக்குள் மீண்டும் இருக்கச் செய்கிறார் என்பதும், இது மட்டுமல்லாது மனித குலத்தை மீட்டு கடவுளிடம்சேர்க்கும் பொருட்டு மனித குலத்தின் பாவத்தினை தான் ஏற்று பாவமாகி சிலுவையில் இரத்தம் சிந்தி உயிரை விட்ட தனது குமாரனாகிய ஏசுவினை ஏற்றுக் கொள்ளும் அனைவருக்கும் இந்த மீட்பு உண்டு என்பதும் மையக் கருத்தாக உள்ளது.
இங்கு, தன்னிடமிருந்து பாவத்தினால் பிரிந்த மனிதனை, கடவுளே பிரயாசைப்பட்டு தனது குமாரனை மாமிச உருவில் மனித குலத்தின் பிரதிநிதியாக்கி ஒரு தேவ ஆட்டுக்குட்டியைப்போல பலிகொடுத்து மனித குலத்தின் பாவமனைத்தையும் போக்கியதாலும் இதனை விசுவாசிக்கும் அனைவருக்கும் இந்த பாவ மீட்பு கிடைப்பதாலும் மனிதன் தனது பாவங்களை போக்க மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்க வேண்டிய அவசியமின்றிப் போகிறது.
ஆக இந்த ஆத்மாவானது தான் கொண்டுள்ள பாவங்களை போக்கினால் மட்டுமே கடவுளைச் சேர முடியும் என்பதால் தனது பாவங்களை வினை செய்து தீர்க்கும் பொருட்டு பிறப்பெடுக்கிறது எனக் கொள்ளலாம்.
கிருத்துவத்தைப் பொருத்த மட்டில் கிருத்துவை ஏற்றுக் கொண்டு விசுவாசத்துடன் அவர் வழி நடப்பது நம்மை பரம பிதாவிடம் சேர்க்கும். இங்கு பிறப்பெடுத்தலால் விளையும் செயல் - பாவ சுத்திகரிப்படைந்து பரிசுத்தமடைதல் - ஏசுவை ஏற்றுக் கொண்டு நாம் அவர் வழி நடத்தலால் விளைகிறது எனலாம்.
சுருங்கச் சொன்னால் நாமது ஆத்மா மாறுதலுக்குட்பட்டாலன்றி கடவுளைச் சேர முடியாதென்பதே பொதுவான கருத்து. இந்த மாறுதல் நாம் பிறப்பெடுத்து வினை செய்வதால் விளைகிறது. அது மட்டுமல்லாது இந்த மாறுதல்கள் முழுமையடையும் போது மட்டுமே பிறப்பறுக்கப் படுகிறது எனவும் கொள்ளலாம்.
பிறப்பறுத்த ஆன்மா கடவுளைச் சேர்ந்து விடுகிறது அல்லது கடவுளின் நிலையை-உருவை-அடைந்துவிடுகிறது. இந்த நிலை விருப்பு வெறுப்பற்ற நிலை. இன்ப துன்பங்களை ஒன்றாய்க் கருதும் நிலை. பட்டினத்தாருக்கு பேய்க்கரும்பு இனித்ததே... அதைப் போன்ற நிலை. எனவே பிறவியின் நோக்கம் ஆன்மா இந்த மாறுதலடையும் பொருட்டு வினை செய்து பிறப்பறுத்தலேயாகும்.
இதுவே சாராம்சம்.
சரி. இந்த ஆன்மா மாறுதலடைவதை நாம் காணவோ அல்லது புரிந்து கொள்ளவோ முடியுமா?
நிச்சயமாக இந்த மாறுதலை நாம் நம்முள் உணரவும் மற்றும் மற்றையோரிடம் காணவும் முடியும்.
இந்த உலகில் பிறந்த பிறகு நாம் கொள்ளும் அனுபவங்கள் எப்படி நமது biological age , மற்றும் mental age க்கு contribute செய்கிறதோ அதே போல இந்த அனுபவங்கள் நமது spiritual age க்கும் contribute செய்கிறது.
இந்த biological age நமது உடல் மற்றும் உடல் உறுப்புக்களின் உழைப்பு மற்றும் உருமாறும் நிலையைக் கொண்டு அறியப் படுகிறது.
நமது mental age நமது வாழ்வின் அனுபவங்களைக் கொண்டு நாம் பெற்றுள்ள அறிவு, அனுகுமுறை முதிர்ச்சி மற்றும் நமது problem solving capacity ஆகியவைகளைக் கொண்டு அறியப் படுகிறது.
ஆனால் இந்த spiritual age என்பது ஒருவரது உள்ளறிதலையும், இவ்வுலகின் நிலையாமையையும் அடித்தளமாகக் கொண்டு அவருள் மற்ற உயிர்கள் குறித்தும் அவைகளின் நலன் குறித்தும் எழும் மிகுந்த தன்னலமற்ற அன்பு பாராட்டலைக் கொண்டறியப்படும். இந்த தன்னலமற்ற அன்பு பாராட்டலே ஆன்மாவை மாற்றுகிறது. அதனை கடவுளின் தன்மைக்கு உயர்த்துகிறது.
இதுவே, அன்பே கடவுள் என்கின்ற சித்தாந்தத்தை உறுதிப்படுத்துகிறது.
இந்த தெய்வ நிலையை அடைந்த ஆன்மாவின் அன்பு பாராட்டல் என்பது தன்னைப்போல் ஆறறிவுகொண்ட மனித இனத்தை மட்டுமன்றி விலங்குகள் ஏன் தாவரங்களையும் கூட அரவணைத்து அன்பு சொரியக்கூடியது.. வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலார் நினைவுக்கு வருகிறாரல்லவா..? ஆமாம். அவர் இந்த வாழ்விலேயே தெய்வநிலையை அடைந்த ஆன்மாவைக் கொண்டிருந்த சித்தர்..
சரி. நாம் இந்த நிலையை அடைய என்ன செய்ய வேண்டும்?
கர்மாவைக் கொண்டு கர்மாவைத் தொலைக்க வேண்டும்.
நற் கர்மாக்களைச் செய்து நாம் கொண்டுள்ள துர் கர்ம வினைகளை தொலைக்க வேண்டும். இந்த பிறப்பு இதற்கு வாய்ப்புத் தருகிறது.
சிலர் இந்த வாழ்வினைப் பற்றிய தவறான எண்ணம் கொண்டுள்ளனர். எல்லோரும் சாகப் போகிறவர்கள்தானே எனவே வாழ்வை அனுபவிக்க வேண்டியதே முக்கியம் எனும் கருத்துடன் இருக்கின்றனர். சிலர் இந்த வாழ்வின் துன்பங்களை ஒரு வழிகாட்டுதலாகக் கொள்ளாமல், மனமொடிந்து தன்னை மடித்துக் கொள்கிறார்கள். வாழ்வைப் பற்றிய நமது புரிதலின்மையே இத்துனைக்கும் காரணம்.
இந்த வாழ்வானது நமது ஆன்மாவை மேம்படுத்தும் ஒரு பள்ளியாகும். பள்ளியின் ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு தெளிவான பாடத்திட்டம் இருப்பது போல நமது வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு தெளிவான பாடத்திட்டம் உள்ளது. அந்தந்த வகுப்பில் தேறி அதற்கான அறிவை தொடர்ந்து பெற்றால் மட்டுமே பள்ளியை விட்டு வர முடியும். ஒரு பள்ளியிறுதி முடித்த ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு வரையறுக்கப்பட்ட குறைந்த பட்ச அறிவு நிலை இருந்தால் மட்டுமே அவர் தேர்ந்தவராக கருதப் படுவார். உதாரணத்திற்கு மொழிப்பாடத்தில் இத்துனை வார்த்தைகள் - vocabulary - பரிச்சயம் தேவை என்பது . இந்தத் தேர்வில் வெற்றி பெறாதவர் மறுபடியும் அதே வகுப்பில் படிப்பது போல இந்த வாழ்வில் பாடங்களால் நம் ஆன்மா மேன்மையடையாத போது நாம் மீண்டும்பிறக்க நேரிடுகிறது.
மறு பிறப்பை ஏற்றுக் கொள்ளாத கிருத்துவத்தில், கிருத்துவை ஏற்றுக் கொள்பவர்கள் அயராது அவர் வழியில் அவரோடு, அவரில், பரிசுத்த ஆவியில் துணையோடு - through Him, in Him, with Him in the unity of the Holy spirit - தம் வாழ்வை நடத்தும் போது இதே பிறப்பில் ஆன்மாவின் மேன்மையைப் பெறுகின்றனர். அவரது வழிகாட்டுதல் அத்துனை மேன்மையானது மற்றும் உறுதியானது எனப்படுகிறது. மேலும் இதுவே ஏசுவானவர் தமது இறப்பால் நமக்கு மீட்டுத்தந்த பரிசுத்தத்தை பெறும் வழி எனவும் சொல்கிறது.
இந்தப் பிறப்புகள் நம் ஆன்மா தெளிவான மேன்மையை அடையுமட்டிலும் தொடரும். இது ஒரு குயவன் திரும்பத் திரும்ப மண்பாண்டத்தை அதன் பூரணத்துவம் பெரும் வரை பிசைந்து எடுத்து மீண்டும் மீண்டும் சக்கரத்தில் இட்டு சுழற்றி வடிவேற்றுவதைப் போன்றதாகும்.
எனவே ஒரு நல்ல மாணவன், தனது இலக்கில் கவனமாய் இருக்கும் ஒரு நல்ல மாணவன், பள்ளிப் பாடங்களில் கவனம் செலுத்தி பள்ளியின் நோக்கினை பூர்த்தி செய்து விரைவில் பள்ளிப்படிப்பை முடித்து வெளிவந்து தனது இலக்கினை அடைவதைப்போல நாமும் நமது வாழ்வில் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பரம்பொருள் நம்மைச் சோதிக்க வைக்கும் தேர்வாய்க் கருதி அதனை நோக்கு தவறாது அன்பின் அடிப்படையில் சுயநலமின்றி நேர்மையாய் கடமையைச் செய்து பிறருக்கு தீங்கிழைக்கா வண்ணம் முடித்தோமானால் நிச்சயமாய் நாம் பிறப்பு எனும் தண்டனையிலிருந்து மீண்டு பிறப்பறுத்து போரொளியை அடைந்து தாயுடன் சேர்ந்த கன்றுபோல மகிழலாம்.
எனவே நாம் அன்பிலிருந்து பிறழாமல் வினையாற்றி பிறப்பறுத்து பேரொளியை அடைவோம்.
எனவே நாம் அன்பிலிருந்து பிறழாமல் வினையாற்றி பிறப்பறுத்து பேரொளியை அடைவோம்.
இன்னமும் பேசுவோம்.
அன்பன்,
வேதாந்தி.
கலியுகத்தில் கை மேல் பலன் என்பது இங்கே பாமரச்சொல் வழக்கு.இதற்கும்
ReplyDeleteமறு பிறவிக் கொள்கைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்றாலும்,
நற்செயலுக்கோ, தீச்செயலுக்கோ உடனுக்குடன் தீர்வு என்பது எமது(இந்து) நம்பிக்கை.
கிறித்துவத்தில் மறு பிறவிக்குத் தேவை இல்லாமல் இருக்கலாம்.ஆனால் தீர்ப்பு நாள் என்ற ஒன்றுக்காக, நல்லது செய்த ஆன்மாக்களும் , தீயவை செய்த ஆன்மாக்களும், குறிப்பாகச் சொல்ல முடியாத அந்த நாளுக்காக, காத்துக் கிடக்க வேண்டும்.அந்த நாள் என்று, என்று யாருக்கும் தெரியாது. இறந்தவர்கள் எந்த உருவத்தில் அல்லது அரூபத்தில் எங்கே தங்கி உள்ளார்கள்?
நல்லவர்களும் தீயவர்களும் ஒரே இடத்திலா தனித்தனியாகவா, எப்படி எங்கே தங்கியிருக்கிறர்கள்?எல்லோரும் சேர்ந்துதான் என்றால் நல்லவர்களின் பாடு எவ்வளவு கொடுமை பாருங்கள்? சத் சங்கம் கிடைத்த பூமியை விட்டு, துர் சங்கத்திலா போய் காத்திருக்க வேண்டும்? இதுதானா இறைவனின் விருப்பம்?
அதன் பின்னரும் மன்னிக்கப்பட்டு ரட்சணை கிடையாது. தீயவர் நரகம் சென்று
அங்கேயே கிடந்து உழல வேண்டியதுதான்.திருந்தி மீண்டு வர முடியாது.
நல்லவர்களும் சொர்க்கத்தில் கிடந்து இன்பங்களை அனுபவிக்க வேண்டியதுதான்.இன்பம் அதிகம் துய்த்தால் திகட்டிப்போகுமே, அப்போது என்ன செய்வார்கள்?
சொர்க நரகம் பற்றிய இந்திய எண்ணங்கள் ஆதியில் இல்லை என்றே தோன்றுகிறது.பிற் சேர்க்கையில், நாம் செய்த நன்மைக்காக கொஞ்சம் சொர்க வாசமும்,தீமைக்காக நரக வாசமும் அனுபவித்துவிட்டு மீண்டும் பிறவி எடுத்து பூமிக்கு வர வேண்டும்.நன்மை செய்தல்,புண்ணியம், என்பது தங்கச் சங்கிலி.தீமை செய்தல்,பாவம், இரும்புச் சங்கிலி.("அறம் பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டி..."திருவாசகம்) ஆனால் இரண்டுமே தளைகள் தான். நன்மை,தீமை போன்ற இருமைகளில் இருந்து விடுபடுதல்
எமது நோக்கம்.அப்போது பிறவா நிலை வரலாம், பரம் பொருள் விரும்பினால்.நன்றி!