Followers

Friday, July 29, 2011

இதையும் இழப்பாய் இன்பசேகரா..!

29.7.11

இதையும் இழப்பாய் இன்பசேகரா..!இது ஒரு சுவையான நிகழ்ச்சி. நாம் நமது வாழ்வில் தோல்விகளையும், அவமானங்களையும் எப்படி வெல்வது என்பதைச் சொல்லவே இதைப்பற்றி இங்கு பேசுகிறேன்.


எனது நண்பர், நேர்மையாய் இருக்க வேண்டும் என நினைப்பவர். தனது இளமைக்காலத்தில் உலகைத் திருத்துவதில் தன் பங்கும் உண்டு என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். ஆனால் பாவம் அவர் சேர்ந்தார்ப்போல் அடிமேல் அடி வாங்கி தற்போது பழுத்து அடங்கி விட்டார். முதலில் நண்பர் விரிவுரையாளராகத்தான் இருந்தார். ஆனால் பின்னர் ஒரு அரசு அலுவலகத்தில் வேலை வாய்ப்பு வந்தது. இந்த வேலையில் தனது அறிவுக்கும் தான் சமுதாயத்திற்கு சேவை செய்யும்படிக்கான வாய்ப்பும் மிகவே கிடைக்கும் என நண்பர் எண்ணியதால் விரிவுரையாளர் பணியை விட்டுவிட்டு இந்த அரசுப் பணியில் சேர்ந்தார்.

பணியில் சேர்ந்த பிறகே அவரது பணிச் சூழல் ஒரு சாக்கடை எனப் புரிந்தது. அது மிகப் பெரும் தொழிலதிபர்கள் வந்து போகும் ஒரு அரசு அலுவலகம். ஊழல் மிகச் சாதாரணம். ஒரு சாதாரண O.A வே தினமும் 1000/-  உரூபாய்க்குக் குறையாமல் வீட்டிற்கு எடுத்துச் செல்வானாம். நண்பருக்கு மிகவும் கவுரவமான B category officer பதவி. A category officer promotion எதிர் பார்த்துக் கொண்டிருந்தார்.  இவரது பதவியில் இருப்போர் தனக்கு வேண்டுமென்கிறவசதிகளை வெகு எளிதாக நிறைவேற்றிக் கொள்ளும்படிக்கு வாய்ப்புகள் வந்து குவியும்.ஆனால் நண்பர் ஒரு ஊழல் எதிர்ப்பு வாதியாயிற்றே.. ஆரம்பத்திலேயே இவரது எண்ணங்களை வெளிப்படுத்தி தன் சகாக்களிடம் பிரசங்கித்ததால் எல்லோரும் இவரை தங்களது கொள்கைக்கு ஒத்துவராத ஓர் கொள்கைவாதி என அடையாளம் கண்டு கொண்டனர். பிறகென்ன இவர் ஒதுக்கி வைக்கப்பட்டார். இவருக்கு ஒப்புக்குச் சப்பான் வேலை கொடுக்கப் பட்டது.  பிழைக்கத் தெரியாதவர் எனப் பட்டம் வேறு.


அவ்வளவுதான். இவரை மதிப்பாரில்லை. ஆனாலும் நண்பர் கலங்கவில்லை,  தனது கொள்கையையும் அதில் இவர் கொண்டிருந்த உறுதியையும் விட்டாரில்லை. ஒரு கட்டத்தில் இவர் ஒரு விருப்பு வெறுப்பில்லாத சாமியாரைப்போலவே ஆகி விட்டார். அதிக பணம் புழங்கும் ஒரு அலுவலகத்தில் இப்படி ஒரு ஆசாமியைப் பார்ப்பது அபூர்வம். 


“எதைக் கண்டும் நாம் மயங்க வில்லை” என்ற எண்ணத்திலும் ,  “நான் இவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் “ எனும் தொனியிலும் நண்பர் வலம் வந்தார்.ஒருமுறை இவரை ஒரு steno சற்று உரத்துப் பேசியும், நக்கலடித்தும் மற்றவர் முன்னிலையில் இவரை  உதாசீனப்படுத்தி விட்டார். அந்த நேரத்தில் நண்பர் சற்றுக் கடுமையாக முகத்தை வைத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்றுவிட்டார். அவரது மனம் புண்பட்டுப் போனது. மருகினார். தனது பதவிக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்காதது கண்டு உள்ளம் வெம்பினார். தனது படிப்பும் வீணாகிப் போனதே என்று நொந்தார். இவர்களை இப்படியே விடக்கூடாது எனவும் அவருக்குத் தோன்றியது.


உடனே நண்பர் தன் இருக்கையை விட்டு எழுந்து அந்த steno இருந்த இடத்திற்குச் சென்றார்.  நெற்றியில் பட்டையாய் விபூதியும்,  குங்குமமும்  அணிந்திருந்த அவரைச் சுற்றி நின்று அவரது நண்பர்கள் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். நண்பர் நேரே சென்று தன்னை அவமானப்படுத்திய steno வின் கைகளைப் பிடித்துக் கொண்டு , ‘என்னை மன்னித்து விடுங்கள் ‘ என்றார். அவரும் அவரைச் சுற்றியிருந்தவர்களும் திகைத்துப் போனார்கள்.“நான் எனது அதிகாரத்தைப் பற்றி ஆசைப்படாமலும், முறையற்ற பணம் என்னை சலனப் படுத்தாமலும் மற்ற இந்த உலகின் பிடிமானங்கள் என்னை அனுகாதவாறு நான் உறுதியாய் இருந்தேன். ஆனால் சற்று முன் நீர் என்னை அவமானப் படுத்தியபோது சட்டென்று கோபப்பட்டு உம்மீது வெறுப்பை ஏற்றேன்.  நன்கு யோசித்த போதுதான் தெரிந்தது நான் எல்லாவற்றையும் இழந்தும்,  ‘நான்’  என்கின்ற ‘எனது’ அடையாளத்தை மட்டும் இழக்கவில்லை. நீர் அந்த ‘நான்’ ஐ த்தான் அடித்து அவமானப் படுத்தினீர்கள். பிறகுதான் தெரிந்தது எம்பெருமான், சிவப் பழமான  தங்கள் மூலமாக எனக்கு , “ இதையும் இழப்பாய் இன்பசேகரா..!” என்று உணர்த்தியிருக்கிறார்.  என்னை இதை உணரவைத்து எம்பெருமானை நோக்கி இன்னும் ஒரு அடி நகர்த்தியமைக்கு நன்றி “ என்றார்.நெற்றியில் திருநீற்றுப் பட்டை அணிந்திருந்த அந்த steno வும் மற்றையோரும் திகைத்துப்போய் நின்றனர்.சில நேரங்களில் சில இழப்புகள் நமக்கு பெரும் லாபத்தைத் தரலாம். நாம் அதை உணரத் தயாராய் இருக்க வேண்டும். இதுவே வாழ்க்கை . இந்த வாழ்க்கையில் நாம் இழப்பதை விட அந்த இழப்பில் பெறுபவைகள் பெரு மதிப்பிற்குரியவைகள். எல்லா நேரங்களிலும் விழிப்புடன் இருப்பவர்களால் மட்டுமே இதை உணர முடியும்.

இன்னமும் பேசுவோம்.

அன்பன்,

வேதாந்தி.Thursday, July 28, 2011

அரிச்சந்திர மகராசனின் கதையும் விவிலியத்தின் யோபுவின் கதையும் சொல்வதென்ன?

28.7.11

அரிச்சந்திர மகராசனின் கதையும் விவிலியத்தின் யோபுவின் கதையும் சொல்வதென்ன?தலைப்பைப் பார்க்கும் போது ஏதோ மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போலிருக்கிறதா..? இல்லை, இது அப்படியல்ல.

எனக்கென்னவோ எல்லா மதங்களும் மற்றும் அவைகளால்  போற்றப்படும் எல்லா நூல்களும் மற்றும் ஏனைய அதன் மற்ற கோட்பாடுகளும் ஒரு தனி மனிதனின் சுய ஒழுக்கத்திற்கும்,  சமூகத்துடன் அவன் கொண்டுள்ள சுமுகமான இணக்கத்திற்கும் எதிரானாதாக இருக்கவில்லை என்றே தோன்றுகிறது.

அரிச்சந்திர மகாராசனின் கதை இந்துக்களின் இதிகாசங்களான இராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

யோபுவின் கதை கிருத்துவர்களின் விவிலியத்தில் பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டிருக்கிறது.The tomb of Job, outside Salalah, Omen  (Job in Islam)
இதே யோபுவை இஸ்லாமியர்கள் இறைத்தூதராக கருதுகின்றனர். இஸ்லாத்தில் இவர் அய்யூப் எனப்படுகிறார்.

அரிச்சந்திர மகராசனின் கதையில், அயோத்தியை ஆண்ட அரிச்சந்திரன்,  தன் வாழ்வில் தனக்கு வரும் எத்துனை இடர்களிலும் மற்றும் இழப்பிலும் தான் கொடுத்த வாக்குத் தவறாமல் இருக்கவும் எந்தச் சூழலிலும் பொய்யுரையாதிருக்கவும் மிகவும் உறுதி கொண்டு தனக்கு வரும் இடர்களை ஏற்றுக் கொள்வதைப் பற்றியும் இறுதியில்  அவனது  சுய ஒழுக்க உறுதியினை மெச்சிய இறைவன் , அவன்  இழந்தவை  அனைத்தையும்    அவனுக்குத் திரும்ப அளித்து அவனை மேம்படுத்துகிறார் என்பதைப் பற்றியும் சொல்கிறது.
இதில் கவனிக்க வேண்டியவை என்னவென்றால் பாடுகளுக்கு உள்ளாக்கப் பட்ட அரிச்சந்திரன்  அயோத்தி மன்னன். விசுவாமித்திரருக்கு தான் வாக்களித்த காரணத்தால் அவருக்கு தனது அரியணையையும் தான் ஆண்டுவந்த நாட்டையும் தானமாக கொடுத்து விட்டான். நாட்டை தானமாக கொடுத்துவிட்ட காரணத்தால் அயோத்தியை விட்டு வெளியேறி வாரணாசிக்கு செல்கிறான். ஆனாலும் விசுவாமித்திரர் விட்ட பாடில்லை.  கொடுத்த தானத்தை ஏற்றுக் கொள்ள தனக்கு தட்சிணை கொடுத்தாக வேண்டுமென்கிறார்.  எல்லாவற்றையும் இழந்த அரிச்சந்திரன் தன் மனைவி தாராமதியையும் தன் மகன் ரோகிதாசனையும் ஒரு பிராமணனுக்கு அடிமைகளாக விற்றும் தட்சிணைப் பணம் போதாத காரணத்தால் தன்னை ஒரு புலையனிடம் வெட்டியான் பணி செய்ய அடிமையாக ஒப்படைத்து கிடைக்கும் பணத்தை  விசுவாமித்திரரிடம் தட்சிணைப் பணமாகக் கொடுத்து தனது வாக்கை காப்பாற்றுகிறான்.


செங்கோல் ஏந்தி நாட்டை ஆண்டவன், கையில் சுடுகோலை  ஏந்தி பிணத்தைச் சுடுகிறான். சூரிய வம்சத்தில் பிறந்தவன் புலையனுக்கு அடிமையாக சுடுகாட்டில் பணி செய்கிறான். இது அவனது வாக்குத் தவறாமைக்குக் கிடைத்த பரிசு. அப்படியும் அவன் தனது நிலையை நொந்தானில்லை. நெறி பிறழ்ந்தானில்லை.

அடிமைகளாக விற்கப்பட்ட அவனது மனைவி தாராமதியும் மகன் ரோகிதாசனும்  இதைப்போன்றே கொடும் துன்பங்களுக்கு ஆளாகின்றனர்.  மகன் ரோகிதாசன் பூசைக்கு பூக்கொய்யச் சென்றபோது அரவம் தீண்டு மாண்டு போகிறான். கலங்கிப்போன தாராமதி மகனை சுடுகாட்டிற்கு எடுத்துச்சென்று கதறி அழுகிறாள். அவளது புடவையில் பாதி மகனின் பிணத்தின் மேல் கிடக்க, அரிச்சந்திரனோ இறந்து கிடப்பது தன் மகன் என்றறியாது பிணத்தை எரிக்க வரி கேட்கிறான். தன்னிடம் பணம் இல்லையெனக் கூறிய தாராமதியிடம் அவள் அணிந்திருக்கும் மாங்கல்யத்தை விற்று வரியை செலுத்தச் சொல்கிறான். தன் கணவனைத் தவிர வேறு யாருக்குமே தென்படாத தன் மாங்கல்யத்தைப் பற்றி பேசியதுமே அவன்தான் தனது கணவன் அரிச்சந்திரன் என அறிய வருகிறாள் தாராமதி.


வாரணாசியில் உள்ள அரிச்சந்திர காட்


பின்னரே இறந்தது தன் குழந்தை ரோகிதாசன் எனத் தெரிந்து கொண்ட அரிச்சந்திரன் கலங்கிப் போனான்.  ஆயினும் தனது கடமை தவறாமல் வரிப்பணத்தைச் செலுத்தும் படிக்கு தனது மணைவியின் ஒத்துழைப்பையும் பெற்ற அரிச்சந்திரன் வரிப்பணத்திற்கு ஈடாக தன் மகனின் பிணத்திற்கு போர்த்திய பாதி புடவை நீங்கலாக தன் மணைவியின் மேல் மீதமிருந்த பாதி புடவையை வரியாக செலுத்தி விடலாம் எனக் கூறுகிறான். கணவன் சொல் தட்டாத தாராமதியும் அதற்கு சம்மதிக்கிறான். கடமையைக் காப்பாற்ற கட்டிய கணவனே தன் மணைவியின் மானம் காத்து நிற்கின்ற புடவையை அவிழ்க்கவும் துணிந்த போதுதான் கடவுளர்கள் அவன் முன் தோன்றி அவனைத் தடுத்து அவனது கடமை தவறாமையையும் வாக்குப் பிறழாமையையும் மெச்சி அவன் இழந்த அனைத்தையும் அவனுக்களித்து அவனது மகனையும் உயிர்ப்பித்துக் கொடுத்தனர் என்பது கதை.


இந்த வாக்குத் தவறாமையும் நெறி பிறழாமையும் அரசனுக்கு மட்டுமல்ல மற்றைய ஏனையோருக்கும் தேவை. இந்தக் கதை நிறைய மனிதர்களை மாற்றியிருக்கிறது. மகாத்மாவும் இந்த நாடகம் கண்டுதான் வாழ்வில் உறுதியான நெறி பிறழாக் கொள்கையை உடையவரானார்.


இதைப்போன்றதுதான் யோபுவின் கதையும்.


செல்வச் செழிப்பில் யோபுமிகுந்த செல்வச் செழிப்பில் வாழும் யோபு இறையின் மேல் மிக்க நம்பிக்கையும் தனது வாழ் முறையில் இறை வழியினையும் கடைப்பிடித்து வருபவன்.  அவனது நெர்மையையும் உறுதியையும் பார்த்த சாத்தான் ,  யோபுவை ஆசீர்வதித்து பாதுகாப்பதனால்தான் யோபு இறையை நிந்தியாமலும், இறைவழி தவராமலும் இருப்பதாகச் சொன்னபோது  இறை யோபுவின் உண்மையான உறுதியைவெளிப்படுத்த வேண்டி சாத்தானுக்கு யோபுவை சோதனைக்குள்ளாக்க அனுமதித்தார்.யோபு சாத்தானது விளையாட்டால் தனது அனைத்து செல்வங்களையும் இழந்தான் ஆனால் கடவுளை நிந்தித்தானில்லை. பின்னர் தன் குழந்தைகளையும் இழந்தான். மறுபடியும் கடவுளை நிந்தித்தானில்லை. இத்தனைக்குப் பிறகு சாத்தான் கடவுளிடம், “ யோபு நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதால் உன்னைப் போற்றுகிறான். அவன் சுகவீனப்பட்டானானால் நிச்சயம் கடவுளைச் சபிப்பான்..” என்கிறான். கடவுளும், ‘சரி அவனது உயிருக்கு பங்கமின்றி எது வேண்டுமானாலும் செய்து கொள்” என்கிறார்.


கடவுளை நிந்திக்க யோபுவின் மனைவியே தூண்டுகிறாள்

இதற்குப் பின்னர் சாத்தான் யோபுவிற்கு மிகக் கடுமையான மற்றும் அருவருப்பான தோல் நோயைக் கொடுக்கிறான். யோபுவின் உடலில் தாங்கமுடியாத அரிப்பும், அவன் உடலைச் சொறிந்துகொள்ளும்போது அவனது உடலிலிருந்து கிளம்பும் குடலைப் புரட்டும் துர்நாற்றத்தையும் கண்டு அவனது மனைவி, “ இந்தப் பாடு படுதற்கு நீ கடவுளைச் சபித்துவிட்டு செத்துப் போகலாம் ‘ என்கிறாள். அப்போதும் யோபு கடவுளை நிந்திக்க மறுக்கிறான். இறுதியில் சாத்தான் தனது சவாலில் தோற்றுப்போனதை ஒத்துக் கொள்கிறான். கடவுள் யோபுவின் உறுதியை மெச்சி அவன் இழந்ததனைத்தையும் அவனுக்கு இரண்டு மடங்காக திருப்பி அளிக்கிறார்.


யோபு தான் இழந்ததை திரும்பப் பெறுகிறான்


மேற்சொன்னவைகள் ஒருவன் தனது சோதனைக் காலங்களில் நம்பிக்கை இழக்காமலும் தனது நேர்மையான கொள்கைகளிலிருந்தும் வழுவாது உறுதியாய் இருப்பானானால் அவன் இறுதியில் மோசம் போகாது நிறைந்து வாழ்வான் என்பது நிச்சயம் எனக் காட்டுகிறது.


இது கடவுளை நம்புபவர்க்கு. சரி. கடவுளை நம்பாதவர்க்கு?
கடவுளை நம்பாதோர் தனது வாழ்வின் வழிகாட்டியாக, ஒளிப்பாதையாக பகுத்தறிவை நம்புவர். பகுத்தறிவு என்பது லாப நட்டக் கணக்கு பார்க்கும் அறிவல்ல. நன்மை தீமைகளை கண்டறியும் அறிவு. இதைக் கொண்டவன் தனக்கு கிடைக்கும் நிலையில்லா லாபத்திற்காக நிலையான நன்மையை வாழ்வில் இழக்காது உறுதியாய் இருப்பானானால் அவனுக்கும் நிறைந்த வாழ்வென்பது நிச்சயமே..


நல்லவர் என்றும் கெடுவதில்லை. எனவே நாம் , நமது நற் கொள்கைகளை இந்த உலகத்தின்  நிலையில்லா லாபத்திற்காக பலியாக்காது உறுதியாய் வாழ்ந்து நிறைவான வாழ்வை அடைவோம்.   இதுவே நமக்கும் நம்மைச்சார்ந்த சமுதாயத்திற்கும் நிறைந்த பயனானது.

இன்னமும் பேசுவோம்.

அன்பன்,

வேதாந்தி.
Wednesday, July 20, 2011

ஒதுக்கீடுகளும் அரசாணைகளும் மட்டுமே சமுதாயத்தில் சம நிலையைத் தருமா?

20.7.11

ஒதுக்கீடுகளும் அரசாணைகளும் மட்டுமே சமுதாயத்தில் சம நிலையைத் தருமா?

இது மிகவும் சிந்திக்க வேண்டிய ஒன்று.

சொல்லப்போனால் இந்த ஒதுக்கீடுகளும் அரசாணைகளும் சமுதாயம்  சம நிலையைப் பெறும் நோக்கினைக் குறித்தே ஏற்படுத்தப் படுகின்றன. ஆனால் சமுதாயத்தில் சம நிலையைக் கொண்டுவர இவைகள்  மட்டுமே போதுமா என்பதுதான் இன்றைய பேச்சு.

சமுதாயத்தில் வேறுபாடுகளை உருவாக்கும் அல்லது வளர்க்கும் காரணிகளாக மிக முக்கியமாக பொருளாதாரம், கல்வி, செய்யும் பணிகள் மற்றும் காலம் காலமாக இருந்து வரும் சாதி அமைப்பு ஆகியவைகளைச் சொல்லலாம்.மேற்சொன்னவைகளில் அறிவுக்கும் உணர்வுக்கும் ஒவ்வாத சாதி அமைப்பு மிகவும் கொடுமையானதாக கருதப் படுகிறது. இந்த அமைப்பு முன்னர் எப்படியோ ஆனால் இப்போது ஆள்வோர் மற்றும் ஆளப்படுவோர் கட்டமைப்பாகத்தான் பார்க்கப்படுகிறது.  இது ஒட்டுமொத்த சமுதாயத்தின் முன்னேற்றத்தையும் சீர்குலைக்கும் ஒரு தீய சக்தியாகும். ஏனெனில் தற்போதைய சூழலில் ஒரு சமுதாயத்தின் ஒற்றுமையையும் ஒருங்கே சார்ந்த அதன் முன்னேற்றத்திற்கான கூட்டு முயற்சியையும் இது குலைத்துப் போடுவதோடு மட்டுமல்லாது சமுதாயத்தை ஒருங்கே இணைக்காது குழுக்களாகப் பிரித்து அவைகளூடே வெறுப்பை இடையறாது கணறச் செய்யும் ஒரு தீவினையாகும்.

சமுதாய ஏற்ற தாழ்வுகளைப் போக்கவே மேற்சொன்ன ஒதுக்கீடுகளும் அரசாணைகளும்  உண்டாக்கப் பட்டன.  இந்த ஒதுக்கீடுகளும் அரசாணைகளும் சாதிகளிடையே பொருளாதாரம், கல்வி மற்றும் பணி குறித்த சமன் வந்து விட்டால் ஏற்ற தாழ்வுகள் களையப் பட்டு விடலாம் என்கிற எண்ணத்தில் கொண்டு வரப்பட்டவைகள் தான். ஆனால் உண்மை நிலை என்னவென்றால் இவைகள் ஒடுக்கப்பட்ட மக்களிடையே முன்னேற்றங்களை உண்டாக்கினாலும் மனிதர்களிடையே இருக்கும் வேறுபாடுகளை களைய கிஞ்சித்தும் உதவவில்லை.

இதைச் சொல்வதால் நான் ஒதுக்கீடுகளுக்கும் அரசாணைகளுக்கும் எதிரானவன் என்பதல்ல. நான் சொல்ல வந்தது என்னவென்றால் நமது உள்ளார்ந்த மனமாற்றம் அன்றி வேறுபாடுகள் களையப்பட வழியில்லை என்பதுதான். இது அனைத்து சாரருக்கும் பொருந்தும்.

கிராமங்களில் இன்னமும் இரட்டைக் குவளை முறை இருக்கிறதென்பது வெட்கக் கேடானது.

நகர்ப்புறங்களில் இது வெளிப்படையாகத் தெரியாவிடினும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது இவை வெளிவருகின்றன. காதல் திருமணங்கள் கெளரவக்  கொலைகளால் அச்சுறுத்தப் படுகின்றன.


பொருளாதாரத்திலும், பணியிலும் உயர்ந்தோரிடையே கூட இந்த வேறுபாடுகள் காணப்படுகின்றன.

இன்னமும் சொல்லப்போனால் ஒரு சில தனியார் அலுவலகங்களில்  சில குறிப்பிட்ட வகுப்பினரே முன்னுரிமை பெறுகின்றனர். மற்றையோர் பணியில் அமர்த்தப்பட்டாலும் அடையாளம் காணப்பட்டு தனிப்படுத்தப் படுகின்றனர்.

இத்தனை ஏன்? அரசு அலுவலங்களில் ஒவ்வொருவரும் இப்படித்தான் அடையாளம் காணப்படுகின்றனரே ஒழிய அவர் செய்யும் பணியின் செம்மை குறித்து ஒருபோதும் அடையாளம் காணப் படுவதில்லை. ஒருவர் பணிக்குச் சேர்ந்த உடனே அவரது பணியேடு எல்லோராலும் ரகசியமாய்க் காணப்பட்டு அவரது வகுப்பினருடன் உடனே குழுவில் சேர்க்கப் படுகின்றனர். இது எழுதப்படாத மற்றும் பிறரால் காணப்படாத சட்டமாகவே இருக்கிறது. ஆனால் இம்முறை மேல் வகுப்பு மக்களிடையேயும் மற்றும் கீழவகுப்பு மக்களிடையேயும் தான் உள்ளன.  இடைப்பட்டோர் பாவம் . அவர்களுக்கு இந்த ‘சலுகை’ கிடையாது. 
அருகருகே அமர்ந்து ஒரே பணியினைச் செய்தபோதும் இருவரிடையேயும் சமத்துவம் பிறந்த பாடில்லை. எல்லோரும் ஒரு வித மனக்காயங்களுடனும் இரத்தக் கசிவுடனுமே வலம் வருகின்றனர்.   ஆளும் வகுப்பினர் ஆளுமையோடும் மற்ற வகுப்பினர் வஞ்சம் தீர்க்கும் பகைமையோடும்தான் வலம் வருகின்றனர்.  வன் கொடுமைச் சட்டம் மிரட்டலுக்கும் பிறரை அச்சுறுத்தவும் வெகுவாகப்  பயன்படுகிறது.  இதை நான் மிகைப்படுத்திச் சொல்லவில்லை.

இது உண்மையில் நடந்த சம்பவம்.

அது ஒரு முக்கியமானதோர் அரசு அலுவலகம். வழக்கம் போலவே எல்லா அரசு அலுவலகங்களில் இருப்பது போல அனைத்து வகுப்பினரும் ஒருங்கே பணிபுரியும் இடம். ஆனால் நான் முன்னர் சொன்னதுபோல் பகைமை கணன்று கொண்டிருந்தது.

இந்தச் சூழலில் ஒருநாள் ஏதோ ஒரு அலுவலகப் பணி பிரச்சினை முற்றி விவாதமாகி விட்டது. விவாதத்தில் ஈடுபட்டோர் ஏதோ அது தங்களது சொந்தப் பிரச்சினை போல சூடேறி விவாதித்தனர். விவாதித்துக் கொண்டிருக்கும்போதே சம்பந்தப் பட்ட ஒருவர் மற்றொருவரை கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டார்.  ஆனால் மிகச் சாதுர்யமாக அதே சமயத்தில் தனது இடக்கையைக் கொண்டு தன் வலது தொடையில் பலமாக அறைந்து கொண்டார்.  எல்லோருக்கும் ‘பளார்’ என்கின்ற சத்தம் மட்டுமே கேட்டது. எதிராளி  தன் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு விக்கித்துப்போய் நின்றிருப்பதைப் பார்த்தபின்னரே அவர் அறை வாங்கியிருக்கிறார் என மற்றவர்களுக்குத் தெரிந்தது.
சட சட வென நிலைமை உக்கிரமானது. அறை வாங்கியவர் , தன்னை எதிராளி அடித்துவிட்டதாக புகார் கொடுத்தார். ஆனால் அடித்தவரோ , ‘நான் எனது தொடையில் தான்  அறைந்து கொண்டேனே தவிர யாரையும் அடிக்கவில்லை..’ என்று சாதித்தார்.

அப்புறமென்ன. மள மள வென குழு சேர ஆரம்பித்தது. அனைவரும் ‘பளார்’ என்ற சத்தத்தினை கேட்டிருந்ததால் ஒரு குழு ‘அடித்துவிட்டான். அதனால் வந்த சத்தம் தன் அது.’  எனவும் மற்றொரு குழு ‘இல்லை.. இல்லை.. தன்னைத் தானேதான் அடித்துக் கொண்டான். அதனால் வந்த சத்தம்தான் அது.’ எனவும் இரு பக்கமும் சேர்ந்து கொண்டது. யாருமே தன்னையும் அடித்துக் கொண்டு எதிராளியையும் அடித்தான் எனச் சொல்லவில்லை. ஒருவேளை உண்மையைப் பார்த்தவர்கள் இருந்திருப்பினும் அவர்கள் அதனை வெளிப்படுத்தவில்லை.

மேலதிகாரி மிகவும் குழம்பிப் போய்விட்டார். இதில் கவனிக்கப்பட வேண்டியது என்ன வென்றால் குழு நியாயம் கருதி கூடவில்லை மாறாக சாதி சார்ந்து கூடிவிட்டது. யாரும் இதை சொல்ல வில்லையே தவிர கண்கூடாகக் காண முடிந்தது. மேலதிகாரிக்கு மிகுந்த குழப்பம் உண்டாகி இறுதியில் அடி வாங்கியவரை தனியே அழைத்துப்போய் சமாதானம் செய்தார்.

அடித்தவர் வெற்றிக் களிப்பில் மிதந்தார். அவர், ‘என்மேல் நடவடிக்கை எடுத்து விடுவார்களா..? வன்கொடுமை குற்றச்சாட்டில் அவர்களை உள்ளே அடைத்து விடுவேனாக்கும்…’ என்று கொக்கரித்துக் கொண்டிருந்ததை  கேண்டீனில்  பார்த்தவர்கள் சொல்லப்போய்த்தான் மற்றவர்களுக்கு உண்மை புரிந்தது.

இது என்ன கொடுமை. சொந்தப் பகையும் கிடையாது. யாருடைய சொத்தையும் யாரும் பிடுங்கவில்லை.  பிரச்சினை பேச்சில் இருக்கும் போதே நாகரிகத்தை மீறி நடந்துகொள்ள அவரை ஊக்குவித்தது எது?

இங்குதான் நாம் காணாத இன்னுமொரு காரணி நுழைகிறது. அடித்தவர், சமுதாயம் கொடுத்த முன்னுரிமையை தனக்குக் கிடைத்த ஆயுதமாக பயன்படுத்தியிருக்கிறார். காரணமின்றி அதைப் பயன்படுத்தியிருக்கிறார் என்றால் அவரது நெஞ்சில், எண்ணத்தில் நுழைந்து விட்ட  நஞ்சு - சாதி பாகு பாடு. தன்னையும் தன் இனத்தாரையும் தவிர மற்ற எல்லோரையுமே எதிரியாக பார்க்கத்தூண்டும் வெறி. தனக்கு சம நிலை கிடைத்த பின்னும் யாரையேனும் கடிக்க வேண்டும் என்கிற மனப்பாங்கு அடுத்த வகுப்பினர் தவறு செய்யாதிருக்கும் போதும் அவர்மேல் பாய்ந்து பிடுங்கத் தயாராயிருப்பது. இதற்குக் காரணம் தன் நெஞ்சில் கணன்றுகொண்டிருக்கும் நெருப்பும் அதை அணையாது ஊதிப் பெருக்கி குழுசேர்த்து கும்பல்  கூட்டி சுய லாபம் காணும் தலைவர்களும் அவர்களது அரசியலும் தான்.
இப்போதுள்ள நலிந்தோர் ஒரு மாயக் கட்டுக்குள் உள்ளனர். இவர்கள்  தன்னால் முன்னேற முடியும் என நினப்பதில்லை. மாறாக தனது முன்னேற்றத்திற்கு ஒரு பின் புலம் தேவை என கருதும் படிக்கு சுய நலமிகளால் ஊக்குவிக்கப் படுகின்றனர். ஆனால் அந்தப் பின்புலம் இவர்களை முன்னேற்றாது தனது சுய லாபக் கணக்கிற்காக இவர்களது நெஞ்சில் நஞ்சை வார்த்து சமுதாயத்தில் தீ கணன்று கொண்டிருக்கும்படிக்கு பார்த்துக் கொள்கிறது. இவர்கள் எந்த ஒரு பின்புலமும் இல்லாது தன்னையும் வளர்த்து தன் நாட்டையும் வளர்த்த  டாக்டர். அம்பேத்கரை மறந்து விட்டனர்.
நாமாக முன் வந்து, நம்மில் நம்பிக்கை வைத்து, சமுதாய ஒற்றுமை நமது முன்னேற்றத்திற்கும் நமது நாட்டின் முன்னேற்றத்திற்கும் மிக முக்கியமானது என கருத்தில் கொண்டு நமது அண்டை அயலாரை சகோதரராய் பாவிக்கும் எண்ணத்தை வளர்த்துக் கொள்ளும் வரை நமக்குள் எந்த ஒதுக்கீடுகளும் அல்லது அரசாணைகளும் சமத்துவத்தைக் கொண்டு வராது என்பதுதான் அப்பட்டமான உண்மை.பஞ்சாடையானாலும் பட்டாடையானாலும் இரண்டுமே அணிவோரின் மானத்தையும் கெளரவத்தையும் காப்பது போல, நாம் எவ்வகுப்பினராய் இருந்தாலும்   நமது நாட்டின் ஒற்றுமையையும் முன்னேற்றத்தையும்  காக்க மெய்யான உறுதி கொண்டால் மட்டுமே பிரிவினைகள் நீங்கி  சமுதாயம் சமநிலை பெறும். 

இன்னமும் பேசுவோம்.

அன்பன்,


வேதாந்தி.
Friday, July 15, 2011

எனக்கென்ன லாபம் எம்பெருமானே…?

15.7.11

எனக்கென்ன லாபம் எம்பெருமானே…?


உயிர் எடுத்து உயிர் கொடுத்து
கடும்  உழைப்பில் அதை வளர்த்தும்
ஊண் பெருக்கியும்
எனக்கென்ன லாபம் எம்பெருமானே?

உயிர் கரைத்து ஊறிய முலைப்பாலை
உறிஞ்சிக் குடித்த குஞ்சு
என் ஈரலைத் தின்றபின்னும்
இதயத் தசை தேடுதே…

 
உயிரறுக்கத்  துணிந்தும்
உறவறுக்கும் வகையறியேனே
பரமனே , பட்டது போதும்
சட்டென விடுதலை தாராயோ
  
அன்பிலாக்  காடாய் புதர் மண்டி
அடர்ந்த இருள் பரவி
வெறுப்பெனும் பிசாசு விரவிப் பிடிக்க
தள்ளாமையின் தனிமை எனை வாட்ட..

இத்துனை துன்பமும் என்னை
காதலியாய் எட்ட நிற்கும் உன்
மடி தேடி அழச் செய்யுதே
மார்க்கூட்டில் முகம் புதைய ஏங்குதே..


நினையன்றி வேராரும் கரிசனம் கொள்ளாரே
தாமசியாது சம்பந்தனைப் போல் அழும் எனை அம்மையே
உன் முலைஈந்து காப்பாய் இதை யன்றி இப்பிறவியில்
எனக்கென்ன லாபம் எம்பெருமானே..


விடுதலை வேண்டியே
நின் திருவடிகள் சரணனடைந்தேன்
அம்மையே அப்பனே காத்தருள்வாய்
என்னை ஏற்றருள்வாய்.

நீங்காத நினைவுகளுடனும், வேண்டுதல்களுடனும்


அன்பன்,

வேதாந்தி.


Thursday, July 14, 2011

ஸ்பெக்ட்ரம் மட்டுமா நம் பொதுச் சொத்து?

14.7.11

ஸ்பெக்ட்ரம் மட்டுமா நம் பொதுச் சொத்து?ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை நம் நாடே அறியும். இதிலும் ஆச்சரியம் என்னவென்றால் தமிழ்நாட்டிலுள்ள கிராமங்களில் கூட இந்த விவகாரம் பற்றி மக்கள்  அறிந்திருப்பதுதான். இந்த அறிவுதான் தற்போது நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தலில் முந்தைய ஆட்சியாளர்களை எதிர்க் கட்சித் தகுதிகூட கொடுக்காமல் பின்னப் படுத்தி ஒதுக்கி வைத்தது.

ஸ்பெக்ட்ரம் என்ற வார்த்தையே இப்போது ஊழலைக் குறிப்பதாகி விட்டது.

பொதுவாக ஊழல் என்பது அதிகாரத்தில் இருப்போர் தம் கடமையைச் செய்ய சம்பந்தப்பட்டோரிடம் கையூட்டு பெறுவது என்பதாகத்தான் கருதப் படுகிறது. இதனை ஆங்கிலத்தில் kick backs என்பர். நமக்குப் பரிச்சயமானதொன்றைச் சொல்ல வேண்டுமானால் பத்திரப் பதிவு அலுவலர் நமது ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்தாலும் நம்மிடம் கையூட்டு எதிர்பார்ப்பது.

இன்னுமொரு வகை உண்டு. அது விதிகளை மீறுவொரை மேம்போக்காக கண்டும் காணாமலும் விட்டு விடுவதற்கு பெறும் கையூட்டு. இதற்கு பொதுவாக போக்குவரத்து காவலர்களைச் சொல்லலாம்.இன்னுமொன்று ஒருவரது குற்றச்செயலை கண்டும் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கவோ அல்லது அத்து மீறி அவருக்குச் சாதகமானதொரு முடிவெடுக்கவோ அதிகாரிகள் பெறும் கையூட்டு. இதைக் குறித்துச் சொல்லவேண்டுமானால் சாதாரணமாக காவல் நிலையத்தில் நடக்கும் சம்பவங்களைச் சொல்லலாம்.

மற்றொன்று தமக்கு வேண்டியவருக்கு சாதகம் செய்ய அலுவலக விதிகளுக்கு உட்பட்டே அவரது நியாயமில்லாத விலைப்பட்டியலை அங்கீகரித்து அவருக்கு ஒப்பந்தத்தை ஒதுக்குவதோடு மட்டுமல்லாது அவரது குறைபாடான பணிகளுக்கும் - சில நேரங்களில் பணியே நடைபெறாது  -  ஒப்புதல் அளித்து கையூட்டு பெறுவது. இத்தகைய காரியங்களுக்கு உதாரணமாக நமது உள்ளாட்சி அமைப்புகளில் சாலை போடுவது மற்றும் ஏனைய உள்கட்டமைப்பு வேலைகளைச் சொல்லலாம்.

மேற்சொன்ன அத்தனையிலும் பொதுமக்கள் பாதிக்கப் படுவதுண்டு. அதனாலேயே இவைகளைப் பற்றிய தெளிவு மக்களிடையே உண்டு.

ஆனால் ஸ்பெக்ட்ரம் விவகாரம் மேற்சொன்னவைகளில் சேராது. அப்போது அதில் எப்படி ஊழல் வந்தது?

ஆவனங்களைத் திருத்துவது, அதிகார மீறல்கள், தனக்கு வேண்டியவருக்கு சாதகமான முடிவெடுத்தல்கள் என இவற்றையெல்லாம் மீறி மற்றொன்று நடந்திருக்கிறது.

அதுதான் பொதுச்சொத்தை கூட்டுக் கொள்ளையடிப்பது.ஸ்பெக்ட்ரம் அலைவரிசை நமது இந்தியர்களுக்கான ஒரு பொதுச்சொத்து. இதனை மிகக் குறைந்த மதிப்பீட்டில் பெருநிறுவனங்களுக்கும் மற்றும் போலி நிறுவனங்களுக்கும் ஒதுக்கீடு செய்து அதனால் அந்த நிறுவனங்கள் பெரு லாபம் காண அதிகாரத்தில் இருந்தவர்கள் வழி வகுத்தனர். இதற்கு ஈடாக மிகவும் புத்திசாலித்தனத்துடன் பல வழிகளில் வெளிக்குத்தெரியாமல் தங்களுக்குச் சாதகமான பணப் பரிமாற்றத்தால் அதிகாரத்தில் இருந்தோரும் அவரைச் சார்ந்தோரும் லாபமடைந்தனர்.

இதனால் பொதுச்சொத்தை பெரு நிறுவனங்களும் அதிகாரத்தில் இருந்தோரும் கூட்டாக கொள்ளையடித்து லாபம் பார்த்தனர். இதைத்தான் , இந்த அதிகார முறைகேட்டை மற்றும் அதில் அவர்கள் பார்த்த லாபத்தைத்தான் நாம் ஊழல் என்று சொல்கிறோம்.

வெறும் விற்றல் பெற்றல் என்ற போர்வையில் இருந்த இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெளி வந்ததே CAG அறிக்கையால்தான். இந்த CAG தணிக்கை அறிக்கைதான் ஸ்பெக்ட்ரம் என்ற பொதுச் சொத்து விலை மதிக்க முடியாதது என்றும் அதனை மலிவாக்கி ஒதுக்கியது நாட்டிற்கு பெரும் இழப்பு என்றும் எடுத்துச் சொல்லியது. மற்றையோர் இந்த ஒதுக்கீட்டில் நாட்டின் பாதுகாப்பும் கேள்விக் குறியாகிவிட்டது என்றும் சொல்கின்றனர்.

எனது கேள்வி: ஸ்பெக்ட்ரம் மட்டும்தான் பொதுச்சொத்தா? இந்த வானமும் பூமியும் யார் சொத்து? காற்றும் நீரும் யார் சொத்து? கடலும் கடல் சேர்த்த செல்வமும் யார் சொத்து?

எல்லோருக்கும் சொந்தமான இயற்கை வளங்களை அதிகாரத்தில் இருப்போரது துணையுடன் பெரு நிறுவனத்தார் கொள்ளை கொள்கின்றனரே இதனால் சாமான்யன் பாதிப்படையவில்லையா?

அய்யா நான் தொழில் வளர்ச்சிக்கு எதிராக பேசவில்லை. இப்போதைக்கு நமது நாட்டிலுள்ள சட்ட திட்டங்கள்  ஓரளவுக்கு இயற்கை வளங்களின் இணக்கமான இழப்பில்தான் தொழில் வளர்ச்சியை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் இயற்கை வளங்களுக்கு கிடைக்கும் இந்தக் குறைந்த அளவுப் பாதுகாப்பும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் கொள்ளை குணத்தால் கெட்டுப்போகிறது. இதனால் பாதிக்கப் படுவது சாமன்யன் தான்.

அனைவருக்கும் தெரியும் அத்து மீறிய கனிம வளக் கொள்ளைகளையும் மணல் கொள்ளைகளையும் விடுத்து மற்றவைகளைப் பற்றித்தான் இங்கு பேசுகிறேன்.சட்டத்தில் சொல்லப்பட்ட மாசு கட்டுப்பாடு விதிகள் காற்றில் விடப்படுகின்றன. கேட்பாரில்லை. இதனைப்பற்றி பொது மக்களுக்கு போதுமான விழிப்புணர்வும் கிடையாது. நொய்யல் ஒன்றே இதற்குச் சான்று. எல்லாவற்றிலும் நாம் கண் கெட்ட பிறகுதான் விடியலைத் தேடுகிறோம்.  

சட்டத்தில் ஒவ்வொரு தொழிற்சாலைகளும் கடைப்பிடிக்க வேண்டிய மாசு கட்டுப்பாடு முறைகள் புறக்கணிக்கப் படுகின்றன. இந்தப் புறக்கணிப்புகள் கண்காணிப்போரால்  வேண்டுமென்றே கண்டுகொள்ளாமல் விடப்படுகின்றன. நம் பொதுச்சொத்தான காற்றிலும் நீரிலும், கடலிலும் மாசைக் கலக்க அனுமதிக்கும் செயல்களால் கொள்ளை போகும் நமது இயற்கை வளங்கள் நமக்கு விளைவிக்கும் கேட்டையும் நட்டத்தையும் யாவரும் அறிவரோ?  இத்தகைய செயல்களால்  சுத்தமான காற்றையும்,  நீரையும் சாமான்யன் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை.  அரசும் மக்களும் சுகாதாரக் கேட்டினால் விளையும் நோய்களைத்  தீர்க்க பெரும் தொகையை ஒதுக்க வேண்டிய கட்டாயம். ஆனால் தொழிற்சாலைகளோ இந்தப் பொதுச் சொத்தை கொள்ளை கொள்கின்றன. இதற்கு அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் உடந்தை..  

என்ன கொடுமையப்பா இது..?

காற்றும், நீராதாரங்களும் பொதுச் சொத்தல்லவா..? அதனைக் கெடுப்பது சாமான்யனின் விளை பொருட்களில் நஞ்சை ஏற்றாதா? விளைச்சல் குறைந்தால் விலையேற்றம் விளையாதா? நமது ஆரோக்கியம் கெடாதா..? இத்தனைக்கும் உடந்தையாய் இருப்பவர் மட்டும் என்ன செவ்வாய் கிரகத்திலா இருக்கின்றார்? அவரும் தானே இந்தச் சூழலில் அகப்படுகிறார். அப்படியிருந்தும் சுற்றுச் சூழலைக் கெடுக்கும் செயலுக்கு துணைபோவதென்ன அறியாமையாலா அல்லது அகம்பாவத்தினாலா? அல்லது இதற்கு ஒரு உயர் அளவில் தணிக்கை கிடையாது என்கிற துணிச்சலா?  

இனியாவது கயவர்கள் கண் திறப்பரோ…?

இன்னமும் பேசுவோம்.

அன்பன்,

வேதாந்தி.


Related Posts Plugin for WordPress, Blogger...