Followers

Tuesday, June 30, 2015

மூடிய வழிகளும் திறந்த கதவுகளும்…


30.6.15

மூடிய வழிகளும் திறந்த கதவுகளும்…

 
நமது அனுபவங்கள் தாம் நமக்கு வழிகாட்டிகள். நமது அனுபவங்களில் நாம் அடையும் தெளிவுகள்தான் நமது முதிர்ச்சிகள்.

நான் பேசுவதைக் கேட்கும் பலர் நான் இல்லாத கடவுளுக்கு வக்காலத்து வாங்குகிறேன் என்பர். சில நாகரிகமானவர்கள், மனிதனின் உழைப்பு இல்லையென்றால் அவனுக்கு கிடைக்கும் பலனுமில்லை எனும்போது உழைப்புதானே கடவுள் என்று நிதர்சனமாக தாங்கள் கருதும் கருத்தை முன் வைப்பர்.

உண்மைதான். ஆனால் நீங்கள் இருபது வருடம் உழைத்த உழைப்பு வீணாய்ப்போவதையும், வெறும் இருபது நிமிட சிந்தனை மிகப் பெரிய பலனைக் கொடுப்பதையும் அனுபவித்திருக்க மாட்டீர்கள் அல்லது பார்த்திருக்க மாட்டீர்கள் என்றே சொல்லுவேன்.

இதை நான் அவர்களைக் குறித்த குறையாய்ச் சொல்வதில்லை. நான் கடவுள் எனும்போது அவர்களுக்கு கடவுள் என யாரோ கற்பித்தவைகள் தாம் நினைவுக்கு வருகின்றன. அல்லது தாம் படித்த செய்திகள்தாம் நினைவுக்கு வருகின்றன. அல்லது தமக்குள் தாங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் கேள்விகள் வெறும் கேள்விகளாய் இருப்பதனாலேயே அவர்கள் அந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டியிருக்கிறது.

 
ஒரு நல்ல செய்தி என்னவென்றால் அவர்கள் தேடுதலைத் தொடங்கி விட்டார்கள் என்பதே. தேடுதல் என்பது ஏதேனும் ஒரு புள்ளியிலிருந்துதான் ஆரம்பித்தாக வேண்டும். அதிலிருந்து அவர்கள் வாழ்வை அதன் புரிதலை அதிகரிக்கும் போது தானாகவே தெளிவு வந்துவிடும்.

எனக்குத் தெரிந்து ஆத்திகராக வாழ்வை ஆரம்பித்த எத்துனையோ பேர் நாத்திகராகவும், நாத்திகராக வாழ்வை ஆரம்பித்த எத்துனையோ பேர் ஆத்திகராகவும் வாழ்வின் இறுதியில் வந்து நின்றிருக்கின்றனர்.

இந்தத் தேடலும் புரிதலும் முழுதாக முடியாவிட்டால் இந்த வாழ்வின் அனுபவங்கள் அவர்களது புரிதலுக்கு போதுமானதாக இருந்திருக்காது என்பதே எனது எண்ணம்.

எனக்கு பதினைந்து வயதிருக்கும்போது தந்தை பெரியார் எனது பள்ளிக்கு வந்து நிறைய செய்திகளைச் சொன்னார். எல்லாவற்றையும் கேள்வி கேட்கவேண்டும் என்பதை எனக்குச் சொல்லித்தந்ததே அத்தகைய சொற்பொழிவுகள்தான். அப்போது என்னுடனிருந்த எனது நண்பன் கிருத்தவ கூட்டங்களுக்கும் சொற்பொழிவுகளுக்கும் சென்று கொண்டிருந்தான். நான் அவனை கேள்விகள் கேட்க ஆரம்பித்தேன். அவனிடம் தெளிவு இல்லை. ஒரு கட்டத்தில் அவன் கடவுள் இல்லை என்று சொல்ல ஆரம்பித்தான். ஆனால் நான் அவனிடம் கேட்ட கேள்விகளுக்கு எனக்கு வாழ்வின் அனுபவங்களில் பதில் கிடைத்த காலகட்டத்தில் நான் ஆத்திகனாக மாறியிருந்தேன்.

இதுதான் வாழ்க்கை. வாழ்க்கை என்பது புரிந்து கொள்ளவேண்டிய ஒன்றே தவிர விவாதத்திற்கு உட்படுத்த வேண்டியதொரு பொருள் அல்ல.

வாழ்க்கையை முயற்சிகள், வெற்றிகள் மற்றும் தோல்விகளாய் மட்டுமே நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதில் ஒரு வழிகாட்டுதலும் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்வதில்லை.

இதற்கு ஒரு உண்மைச் சம்பவத்தைச் சொல்கிறேன்.

இது நடந்து முப்பத்தைந்து வருடங்கள் இருக்கும். அது ஒரு ஏழைக் குடும்பம். தனது குடும்பத்தின் முன்னேற்றத்தைக் கருதி வெகு பாடுபட்டு படித்து PUC யில் 70 சதம் மதிப்பெண்கள் எடுத்திருந்தார். அவர் தனது குடும்ப நிலை கண்டு லயோலா கல்லூரியில் Physics பட்டப் படிப்பிற்கு விண்ணப்பித்திருந்தார். அவரை விட குறைவான மதிப்பெண் பெற்றவர்க்கெல்லாம் இடம் கிடைத்திருந்தது ஆனால் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. மிகுந்த ஏமாற்றத்திற்குள்ளானார். வேறு கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கவில்லை. செய்வதறியாது கலங்கிப் போனார்.

அப்போதுதான் திருச்சியில் REC (Regional Engineering College) யில் பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பம் கோரி அழைப்பு வந்திருந்தது. உடனே அவர் அதற்கு விண்ணப்பித்தார். லயோலா கல்லூரியில் இடம் கிடைக்காதவருக்கு REC யில் உடனே இடம் கிடைத்தது. அதில் சேர்ந்து படித்துக் கொண்டிருக்கும் போதே இரண்டாம் வருடத்தில் TCS campus interview வில் செலக்ட் ஆகிவிட்டார்.

கல்லூரிப் படிப்பு முடித்தவுடனே TCS ல் வேலை. இரண்டு வருடம் கழித்து ஒரு Project க்காக US சென்றவர் அங்கேயே ஒரு நல்ல நிறுவனத்தில் வேலைக்கான வாய்ப்பு வந்தவுடன் தனது TCS வேலையை ராஜினாமா செய்து விட்டார்.

இப்போது அவர் Green Card Holder. அவரது பிள்ளைகள் University of California, Berkley யில் மருத்துவப் படிப்பு படிக்கின்றனர்.

தனது 18ம் வயதில் தான் கொண்ட முயற்சியின் தோல்வி தனது வாழ்வின் வழிகாட்டுதலாய்த்தான் வந்தது என்பது அவருக்கு இப்போதுதான் புரிந்தது. அந்த வயதில் அதை ஒரு தோல்வியாகத்தான் அவர் பார்த்தார். இப்போதுதான் அவருக்கு ஒரு தெளிதல் கிடைத்திருக்கிறது.

 
 
காத்திருத்தலும் கவனித்தலும் வாழ்வில் நமது பார்வையை நெறிப்படுத்தும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணமல்லவா?

இன்னமும் பேசுவோம்.

அன்பன்,

வேதாந்தி.

 

 

Saturday, June 27, 2015

தலையை எடுத்த ஒரு தலைக்கவசம்…


27.6.15
தலையை எடுத்த ஒரு தலைக்கவசம்…
 
Innovative rear – access helmet designed for safe post - accident removal.

 
இந்தப் பதிவு தலைக்கவசத்திற்கு எதிரானதல்ல
ஒரு உபகரணத்தை சரியான முறையில் பயன்படுத்தாமற்போனால் விளையும் ஆபத்தைக் குறித்துதான் இந்தப் பதிவு.
இது நடந்து ஒரு 40 வருடங்கள் இருக்கும்.
அந்த நேரத்திலும் இன்றைப் போலவே தலைக் கவசம் குறித்த விழிப்புணர்வு அதிகமாக நடந்த காலம். ஆனல் அப்போது இன்றைக்கு இருக்கிறதைப் போல மிக வேகமாகச் செல்லும் இரு சக்கர வாகனங்கள் இல்லை.
ஒருநாள் நான் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தேன். மதியம் ஒரு 3 மணி இருக்கும். எனக்கு முன்பாக ஒரு சாலையோர டீக்கடை முன்பு ஒரே கூட்டம். தார்ச் சாலை நடுவில் ஒரு இரு சக்கர வாகனம் தாறுமாறாகக் கிடந்தது. சிதறிக்கிடந்த செருப்புகள். தூளாகிக் கிடந்த கண்ணாடித் துண்டுகள். மிகவும் தேடிப்பார்த்தால் மட்டுமே கண்ணில் தென்படும் சில ரத்தத் தெறிச்சல்கள். எல்லாம் ஒரு விபத்து நடந்திருப்பதை காட்டியது.
என்னவோ ஏதோ வென பதட்டத்துடன் கும்பலை விலக்கிப் பார்த்தேன்.
ஒரு இளைஞன். சட்டையில் ரத்தம் தொப்பலாக இருந்தது. விபத்தில் மாட்டியிருந்தான். அவனை அமரச் செய்து சட்டை பட்டன்களை விலக்கி ஆசுவாசப் படுத்திக் கொண்டிருந்தனர். விபத்துக்குள்ளான ஆசாமி நினைவுடன்தான் இருந்தார். எதிரில் இருந்த கடையில் யாரோ ஒருவர் ஆம்புலன்சுக்கு போன் செய்து கொண்டிருந்தார்.
நெற்றியிலிருந்தும் ரத்தம் முகத்தில் வழிந்து இறங்கிக் கொண்டிருந்தது. கண் ரப்பைகள் ரத்தத்தில் தோய்ந்து கனத்திருந்தது.
மலங்க மலங்க விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் விபத்துக்குள்ளானவர்.
யாரோ ஒருவர் “தண்ணீர் கொடப்பா” என்று கத்தினார். ஒருவர் டீக்கடையிலிருந்து தண்ணீர் கொண்டுவந்தார்.
அதுவரை அருகில் இருந்தவர், தண்ணீர் குடிக்க வசதியாக இருக்கட்டுமே என்று விபத்துக்குள்ளானவர் அணிந்திருந்த தலைக் கவசத்தை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
பக்கத்தில் தண்ணீர் தம்ளருடன் இருந்தவர் “சீக்கிரம்.. சீக்கிரம்..” என அவசரப்படுத்த தலைக் கவசத்தை சற்று அழுத்தமாக கழட்டி மேலேடுத்தார்.
சுற்றியிருந்த அத்தனைபேரும் அதிர்ந்து போனோம்.
தலைக்கவசத்துடன் விபத்துக்குள்ளானவரது தலையில் மேல் ஓடும் ஒட்டிக்கொண்டு வந்துவிட்டது.
தலையைப் பிளந்ததுபோல அவரது மூளை ரத்தச் சேற்றில் வெளித்தெரிந்தது.
வெளிக்காற்று தலையின் பகுதியில் பட்டதும் விபத்துக்குள்ளானவர் மயங்கி விழுந்துவிட்டார்.
காணச் சகியாது நான் இடத்தை விட்டகன்றேன். அவர் இறந்து போனதாக பின்னர் எனக்குத் தெரியவந்தது.
இது ஏன் இப்படி நடந்ததென்று தெரியவில்லை.
அதுவும் தலை ஓடுகள் ஒன்றுடன் ஒன்று மிகச் சிக்கலாக இணைந்திருக்கும். அவைகள் complicated strong joints with zig zag formation ஆல் உருவானவைகள். அப்படியிருந்தும் இப்படி நடந்தது எப்படி என இதுவரை தெரியவில்லை.
ஒரு வேளை தலைக்கவசத்தினை பொறுத்தும்போது சரியான முறையில் பொறுத்தாததால் இது நடந்திருக்கலாம். அல்லது அந்த தலைக் கவசமே ISI தரத்திற்குட்படாத கவசமாக இருக்கலாம்.
ஆனாலும் இன்றுவரை என்னால் அந்தக் காட்சியை மறக்க முடியவில்லை.
மிகக் கொடூரமான காட்சி அது.
எந்த உபகரணங்களுக்கும் ஒரு பாதுகாப்பான உபயோகிக்கும் முறை உண்டு. அந்த முறையில் அதை பயன்படுத்தத் தவறினால் ஆபத்து எப்படியும் விளையலாம்.
இதைத்தான் Weird accidents, Weird incidents எனச் சொல்லுவார்கள்.
பாதுகாப்பாக இருப்போம். உயிர் உயர்ந்ததல்லவா – நமக்கும் நம்மைச் சார்ந்தவர்களுக்கும்..?
 
இன்னமும் பேசுவோம்.
 
அன்பன்,
வேதாந்தி.
 
 
 
 

Friday, June 26, 2015

ஒரு உண்மை ஒயிஜா போர்ட் அனுபவம்…


26.6.15
ஒரு உண்மை ஒயிஜா போர்ட் அனுபவம்…
 
ஆரம்பத்திலேயே ஒரு செய்தியைச் சொல்லி விடுவது அனாவசிய சர்ச்சையை விலக்கும்.
இந்தப் பதிவின் மூலம் நான் சொல்ல வருவதும் சொல்லாமல் விடுவதும் ஒன்றுமில்லை.
இது ஒரு அனுபவம். நடந்த நிகழ்வு. அவ்வளவுதான். என் நண்பர் பகிர்ந்து கொண்ட உண்மை அனுபவத்தை அப்படியே தருகிறேன். அவ்வளவே.
தற்செயலாய் 'எங்கள் பிளாக்கில்' திரு ஸ்ரீ ராம் எழுதியிருந்த “ஒயிஜா போர்டும் ஓஹோவென ஒரு இரவும்” என்ற பதிவைப் படித்தவுடன் என் நண்பர் என்னுடன் பகிர்ந்துகொண்ட அனுபவம் என் நினைவுக்கு வந்தது. இனி வருவது எனது நண்பரது அனுபவம் அவரது வாய் மொழியில்.
எனது நண்பர் வெகு வருடங்கள் கழித்து என்னைப் பார்க்க வந்திருந்தார். அப்போது அவர் பணியிலிருந்தார். பணிச் சுமை காரணமாக நேரடி சந்திப்பு அதிகம் கிடையாது. பார்த்து வெகு வருடங்களாகியிருந்தது.
வந்தவரை உபசரித்து பேசத் துவங்கினேன்.
“என்னது இத்தனை தூரம். அதுவும் இத்தனை வருடங்கள் கழித்து,” என்றேன்.
“ஒன்றுமில்லை உன்னை பார்த்துவிட்டு போகலாம் என்றுதான் வந்தேன்,” என்றார். அப்போதுதான் கவனித்தேன் அவரது கையில் ஒரு பிரபல கடையிலிருந்து வாங்கிவந்த ஒரு இனிப்பு பாக்கெட் இருந்தது.
நண்பர் நார்மலாக இல்லை. சற்று நேரம் கழித்து அவர் பேசத் துவங்கினார்.
“உனக்குத்தான் தெரியுமே..1978ல் நான் திருச்சியில் படித்தேன் என்று..” என்று ஆரம்பித்தார்.
நண்பர் அவரது முதுநிலை அறிவியல் படிப்பை திருச்சியில் உள்ள ஒரு பிரபல இஸ்லாமியக் கல்லூரியில் படித்தார். அவர் அந்தக் கல்லூரியில் சேரும்போது அவருக்கு அந்தக் கல்லூரி விடுதியில் இடம் கிடைக்கவில்லை. அவருக்கு பேருந்து நிலையத்திற்கு எதிரே இருந்த திருச்சி தியாகராஜ பாகவதர் பங்களாவில் அரசு நடத்திவந்த merit students hostel ல் இடம் கிடைத்தது. அங்கிருந்தோருக்கெல்லாம் free boarding and lodging. ஆனால் ஆட்சி மாறியவுடன் அந்த விடுதி மூடப்பட்டு விட்டது. எம். ஜி. ஆர் ஆட்சியில் மூடப்பட்டது என நினைக்கிறேன்.
அதற்குப் பிறகு அவர் பிஷப் ஹீபர் கல்லூரி மாணவர்களுக்கென ஒரு தனியார் நடத்திவந்த விடுதியில் தங்கி தனது படிப்பை முடித்தார். அது திருச்சி சிந்தாமணியின் பின்புறம் இருந்தது. அந்த விடுதியில் அவர் பெற்ற அனுபவத்தை சொல்லத் தொடங்கினார்.
“அந்த விடுதியில் நான் தான் வயதில் மூத்தவன். மற்றையோரெல்லாம் முதலாம், இரண்டாம், மூண்றாமாண்டு மாணவர்கள். அதைவிட PUC மாணவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். வயது குறித்து என்னுடன் மற்றவர்கள் சற்று மரியாதையுடன் தான் பழகுவர்.
எங்கள் பிளாக்கில் யூஜின் என்று ஒரு PUC மாணவர். எப்போதும் சிரித்துக் கொண்டேதான் இருப்பார். அவர் இருக்கும் இடத்தை மிகுந்த மகிழ்ச்சியுடன் வைத்திருப்பார். அவரை எல்லோருக்கும் பிடிக்கும். சிறு பிள்ளையை வம்புக்கிழுப்பதுபோல் வம்புக்கு இழுத்து அவருடன் விளையாடுவார்கள்.
ஒருநாள் டின்னர் முடித்துவிட்டு வந்த மாணவர்கள் அடுத்த நாள் கல்லூரி இல்லையென்பதால் கூடி விவாதித்து விளையாடிக் கொண்டிருந்தனர். இது என் அறை வாயிலில் நடந்தது. அப்போது திடீரென ஒயிஜா போர்டைப் பற்றி பேச்சு வந்தது. அவரவர் தனக்குத் தெரிந்ததைச் சொன்னார்கள். திடீரென ஒரு மாணவர் தனக்கு ஒயிஜா போர்டை வைத்து ஆவிகளுடன் பேசத் தெரியும் என்றார்.
சொன்னதோடு மட்டுமல்லாமல் என் அறைக்குள் நுழைந்து தரையில் சாக்குக் கட்டியால் ABCD…Z எழுத்துக்கள் மற்றும் 0123..9 எண்கள் இதைத் தவிர்த்து இரண்டு கட்டம் கட்டி ஒரு கட்டத்தில் YES என்றும் இன்னொரு கட்டத்தில் NO என்றும் எழுதி முடித்து யூஜினை கூப்பிட்டு அந்த எழுத்துக்களின் முன்னால் அமரச் சொன்னார்.
யூஜின் மிகுந்த பயத்துடனும் சங்கடச் சிரிப்புடனும் மறுக்க முடியாமல் அந்த எழுத்துக்களுக்கு முன்னால் உட்கார்ந்தான். கச முச வென்ற சப்தம் சட்டென்று அடங்கிப் போனது. யாரோ லைட்டை அணைத்தார்கள். மற்றொருவர் இரண்டு மெழுகுவர்த்திகளை ஏற்றிவைத்தார்கள். போர்டைச் சுற்றிலும் மாணவர்கள். அவர்களது முகங்களுக்கு எரிந்துகொண்டிருந்த மெழுகுவர்த்தி சுடரின் ஆட்டத்தில் இருளும் ஒளியும் மாறி மாறி ஒரு அமானுஷ்ய பாவத்தைக் கொடுத்தது.
ஆளாளுக்கு ஒரு கேள்வி கேட்டார்கள். பலருக்கு கேள்வி கேட்கத் தெரியாததால் இதனை லீட் செய்த மாணவன் ‘YES’ ‘NO’ வரும்படி கேள்விகளை திருத்தம் செய்து கேட்டுக் கொண்டிருந்தான்.
கேள்விகளுக்கு தகுந்தபடி யூஜின் தன் விரலால் தொட்டுக் கொண்டிருந்த தம்ளர் நகர்ந்து பதிலைச் சொல்லிக் கொண்டிருந்தது. யூஜினின் முகம் மட்டும் சற்று வித்தியாசமாக சிரிப்பில்லாமல் ஒரு ரிமோட் லுக் கில் இருந்தது.
ஆனால் யாரும் அதை சீரியசாக எடுத்துக் கொண்டமாதிரி தெரியவில்லை. ஆளாளுக்கு அந்தக் கேள்விகளையும் அதற்கான பதில்களையும் கிண்டலடித்துக் கொண்டிருந்தனர்.
இந்தச் சூழலில் ஒரு மாணவர் நான் ஆராய்ச்சிப் பட்டம் பெறுவதில் மிக்க ஆர்வம் கொண்டுள்ளதை அறிந்திருந்தவர், “டேய் சார் எப்ப Ph.D டிகிரி வாங்குவார்னு கேள்டா..” என்றான்.
நான் சிரித்தபடியே அமைதியாய் நின்றிருந்தேனே தவிர எனக்குள்ளும் ஒரு ஆர்வம் தொற்றிக் கொள்ள இப்போது தம்ளரை கவனித்தேன்.
அது மெதுவாய் நகர்ந்து 1998 என காட்டி முடித்தது. எல்லோரும் ஓ வெனக் கத்தினர். அது 1978ம் வருடமானதால் அதிலிருந்த ஜோக் மிகவும் பட்டவர்த்தனமாக தெரிந்தது. ஆனால்…” என்று சொல்லி நிறுத்தினார் நண்பர்.
“ஆனால் என்ன.. நீதான் ஆராய்ச்சிப்படிப்பில் சேராமலேயே பணிக்குச் சேர்ந்து விட்டயே..” என்றேன்.
“அது உண்மைதான். ஆனால் பணியில் சேர்ந்ததற்கப்புறம் நான் பகுதி நேர ஆராய்ச்சிப் படிப்பில் சேர்ந்தது உனக்குத் தெரியாது..”
இப்போது நான் நண்பரை கூர்ந்து கவனித்தேன்.
“ஆமாமப்பா… எனக்கு Ph.D அவார்ட் ஆயிருக்கு.. போனவாரம் தான் வைவா  முடிஞ்சது. அதான் இந்த ஸ்வீட்..” என்றார்.
இதைக் கேட்டதும் எனக்கு முதுகுத்தண்டு சில்லிட்டது. நண்பருக்கும் அதே உணர்வு வந்ததென்பதை என்னால் உணர முடிந்தது.
நண்பர் இதை என்னிடம் பகிர்ந்து கொண்டு ஸ்வீட் கொடுத்தது 1998 ம் வருடம் பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரம்.
இதை நம்பினால் நம்புங்கள். இன்று வரை என்னாலேயே நம்பமுடியவில்லை.
 
மீண்டும் பேசுவோம்.
அன்பன்,
வேதாந்தி.
 
 

Friday, June 19, 2015

வீணாய்ப் போன வருடங்கள்…


19.6.15

வீணாய்ப் போன வருடங்கள்…

 
RESTORE THE DESOLATE YEARS POSTER BY STACEE LEE
 
கடந்து வந்த வாழ்க்கையை ஒரு நிமிடம் திரும்பிப் பார்த்தோமானால் ஒன்றுக்கும் உதவாத சங்கதிகளுக்காக எத்துனை கவலைப் பட்டிருக்கிறோம் என்பது புரியும். சில நேரங்களில் சல்லி பெறாத காரணங்களுக்காக மற்றவர்களது மனதிற்கும் பொருளிற்கும் நமது சுய நலம் கருதி கேடு விளைவித்தது நினைவிற்கு வரும்போது நமது மனம் வெட்கத்தால் கூனிப் போகும்.

இது தான் வாழ்க்கை.

வாழ்க்கையைக் கடக்கும் போது எதுவுமே முக்கியமில்லை - நமது character மற்றும் நமது integrity யைத் தவிர. நமது அனுபவங்கள் இதனை நமக்குக் கற்றுத் தராவிட்டால் நாம் வாழ்க்கையை இழந்தவர்களாவோம். அது மீட்டெடுக்க முடியாத ஒரு இழப்பாகும்.

ஆனால் நான் சொன்ன character மற்றும் integrity யை இழக்காமல் நமது வாழ்வில் நாம் இழப்பது அத்தனையும் இழப்பாகாது. அவையத்தனையும் மீட்டெடுக்கப்பட்டு விடும்.

இதனை விளக்க நான் ஒரு உண்மை நிகழ்வைச் சொல்லப்போகிறேன். இதுவும் நண்பர் சொன்னதுதான். இதையும் அவர் வாய்மொழியாகவே பகிர்ந்து கொள்கிறேன்.

“ நான் ஏற்கனவே எனது நண்பர்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். நாங்கள் அனைவரும் ஒரு ஒருங்கிணைந்த பறவைக் கூட்டம் போல ஒன்றாக இருந்தது தீய பழக்கங்கள் எனும் பருந்திடம் இருந்து எங்களது பதின் வயதில் எங்களை காத்தது.

எங்களில் ஒருவர். பெயர் கிருஷ்ணமூர்த்தி. நாங்கள் அவரை மூர்த்தி என்று அழைப்போம். கணிதத்தில் இளநிலை பட்டப் படிப்பு படித்து முடித்திருந்தார். அந்தக் காலத்தில் கணிதத்திற்கு மிகுந்த தேவை இருந்தது. ஆனாலும் ஏனோ அவர் முது கலை படிப்பைத் தொடரவில்லை. எங்களில் ஒவ்வொருவராக வேலை கிடைத்து பிரிந்து சென்றுகொண்டிருக்கையில் இவர் சொந்தத் தொழிலில் தனது முயற்சியை தொடங்கியிருந்தார்.

அவருடன் இருந்தவர்கள் அவர் அவ்வாறு தொழிலில் இறங்கக் காரணம் அவருடைய மைத்துனர் என்று சொன்னார்கள். இவர் அவரது மைத்துனரை மிகவும் நம்பினார்.

பெற்றோர்கள் வாயில்லாப் பூச்சிகள். இரண்டு தமக்கையர் மற்றும் இரண்டு தம்பிகள். இவர்தான் குடும்பத்திற்கு மூத்தவர்.

என்னவாயிற்றோ தெரியவில்லை தொழில் முடக்கம் கண்டது. அது மட்டுமல்ல நட்டமும் ஏற்பட்டது. சோர்ந்து போனார்.

அதுவரை கூட வந்த உறவுகள் தொழில் நட்டம் கண்டவுடன் விலக ஆரம்பித்தனர். தம்பிகள் சொத்தை பிரித்துக் கொடுக்கும்படி சொன்னது அவரை மனம் நோகடித்து விட்டது. அதுவரை அந்தக் குடும்பக் கப்பலுக்கு கேப்டனைப் போல தன்னை பாவித்தவர் இந்த மாறுதல்களைக் கண்டதும் நொந்து போனார்.

தொழிலில் நட்டம் கண்டதும் கூட்டுறவுத் துறையில் அப்போது கிடைத்த வேலை தனது கல்வித் தகுதிக்குக் கீழான வேலையாய் இருந்தபோதிலும்  சொற்பமாகக் கருதாமல் பணியில் சேர்ந்தார். அவரது பெற்றோர்கள் அவருக்கு பெண் பார்த்து மணம் முடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அவர் பார்த்து விட்டு வந்த ஒரு பெண் ஆசிரியப் பணியில் இருந்தார். இருவருக்கும் மணப் பேச்சு முடியும் தருவாயில் இவருடனே இருந்த மிகுந்த நம்பிக்கைக்கு உரிய ஒருவர் பெண்வீட்டாரிடம் இல்லாததும் பொல்லாததும் சொல்லி திருமணத்தை நிறுத்திவிட்டனர்.

நண்பர் மனமொடிந்து போனார்.

இதற்குள் அவருடன் இருந்த மற்றையோர் நல்ல பணி கிடைத்து தங்களது வாழ்வைத் துவங்கியிருந்தனர். அவரது வாழ்வின் முக்கியமான வருடங்கள் செல்லரித்த சித்திரமாய் வீணாய்ப் போனது.

இறுதியாக சென்னையிலிருந்த ஒரு நண்பர் மூலமாக ஒரு பெண் அமைந்தது. பெண்வீட்டார் திருமணத்திற்குப் பிறகு மாப்பிள்ளை சென்னையில்தான் தங்கியிருக்க வேண்டுமென்றனர். அதற்குச் சம்மதம் தெரிவித்து இருந்த வேலையை விட்டு விட்டு திருமணத்திற்குப் பின்னர் சென்னை வந்து செட்டிலானார்.

ஆனால் அவருக்கு பெண்வீட்டார் மூலமாக கிடைத்த மார்கெட்டிங் வேலை பிடிக்கவில்லை. வாய்பேசி பொருளை விற்பதில் அவருக்கு மனமும் இல்லை. மறுபடி தன் சொந்த ஊருக்கே திரும்பினார்.

இப்போது ஏற்கனவே இருந்த வேலையும் இல்லை. கையில் ஒரு பெண் பிள்ளை வேறு. தனக்குத் தெரிந்த தொழிலையும் செய்ய முடியாதவாறு மனக் குழப்பம். எந்த வேலையும் கிடைக்காது நண்பர் ஆட்டிறைச்சி விற்கும் கடையில் இறைச்சி வெட்டும் கூலித் தொழிலுக்குச் சென்றார்.

இதைக் கேள்விப்பட்ட நாங்கள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானோம். தீவிர வள்ளலார் பக்தரான நண்பர் இறைச்சிக் கடையில் வேலை பார்த்தது அரிச்சந்திர மன்னன் வெட்டியான் வேலை பார்த்ததை எங்களுக்கு நினைவூட்டியது.

தனது சொந்தங்களே தன்னை கைவிட்டது, நம்பியவனே தன் வாழ்வை கெடுத்தது, மிகுந்த எதிர்பார்ப்போடு தொடங்கிய தொழில் நசிந்து போனது, புதிதாய்த் துவங்கிய வாழ்வும் சோபிக்காதது…. நண்பர் மன அழுத்தத்திற்கு உள்ளானார்.

ஏதேதோ உளற ஆரம்பித்தார். காளி தன்னுடன் பேசுவதாக மற்றவரிடம் சொன்னார். ரத்த வாடை நல்லது என சுவரெல்லாம் ரத்தக் கரையை அப்பினார். நண்பர் மனச்சிதைவு நோய்க்கு ஆளாகியிருப்பது வெளிப்படையாக தெரிந்தது.

பொருளாதாரச் சிக்கல் மற்றும் உறவுச் சிக்கலுக்கிடையே நண்பருக்கு இரண்டாவதாக பெண்குழந்தை. நண்பரது மனைவி நண்பரது நலனையும் பார்த்துக் கொண்டு தனக்குத் தெரிந்த தொழிலையும் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுடன் குடும்பத்தை தனியொரு பெண்ணாக நடத்திச் சென்றார். ஓலைக் குடிசையில் வாழ்வை நடத்த வேண்டிய சூழலிலும் அஞ்சாது, மனம் தளராது நண்பரது மனைவி வாழ்வை நகர்த்திச் சென்றது மிகுந்த பாராட்டுக்குரியது..

குடும்பத்தை தாங்கி நடத்திச் செல்லவேண்டிய நபர் குடும்பத்திற்கே பாரமாகிப் போன நிலை.

குடும்பமே செல்லரித்த சித்திரமாகிப் போனது.

மேற் சொன்னவைகளெல்லாம் நான் நண்பரைப் பற்றி பிறர் சொல்லி கேள்விப்பட்டது. அவரை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறவில்லை. ஆனால் இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு அந்த வாய்ப்பு கிடைத்தது.

நண்பரது விலாசம் கிடைத்து அவரை பார்க்கச் சென்ற நான் கடவுளின் அற்புதத்தைக் கண்டு மெய்சிலிர்த்துப் போனேன்.

அவரது இரண்டு பிள்ளைகளில் ஒருவர் மென்பொருள் பொறியியற் கல்வி படித்து முடித்து ஒரு பிரபல MNC கம்பெனியில் பணியிலிருந்தார். இன்னொரு பெண் வணிகவியல் முடித்து அவரும் ஒரு MNC யில் பணியிலிருந்தார். நண்பர் தற்போது உடல்நிலையில் முன்னேற்றத்துடன் காணப்பட்டார்.

நண்பரை பார்த்து அகமகிழ்ந்து போனேன். நம்பிக்கையோடு குடும்பத்தை முன்நடத்திக் கொண்டுவந்த அவரது மனைவியின் புத்திசாலித்தனத்தை வெகுவாக பாராட்டிவிட்டு வந்தேன்.

நண்பரது குடும்பத்தினருடன் அளவளாவி விட்டு வீடு திரும்பின என் மனதில் விவிலியத்தில் வரும் JOEL 2 : 25-27 வாசகங்கள் நினைவுக்கு வந்தன.

(I will restore to you the years that the swarming locust has eaten…My people shall never be put to shame. “
~Joel 2:25-27)

இதை உங்களிடம் சொல்லும்போதே எனது உடல் புல்லரிக்கிறது..”

உணர்ச்சி வயத்தால் நண்பரது வார்த்தைகள் தழுதழுத்தன. நம்பிக்கையுடன் இருந்தால் வீணாய்ப்போன வருடங்களையும் விளைச்சலையும் கடவுள் கண்டிப்பாக திரும்பத் தருவார் என்பது நண்பர் சொன்ன நிகழ்விலிருந்து எனக்கும் புரிந்தது.

இன்னமும் பேசுவோம்.
அன்பன்,

வேதாந்தி.

Wednesday, June 10, 2015

விட்டுக் கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை…!


10.6.15

விட்டுக் கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை…!நான் வீணான சங்கதிகளுக்காக விடாது சண்டை போடுபவர்களை நிறையப் பார்த்திருக்கிறேன்.

இந்த குணம் இளைஞர்களுக்கு மட்டுமின்றி பல மூத்தோர்களுக்கும் இருப்பதை கண்டிருக்கிறேன். இது அறியாமையின் விளைவாய் இருக்கலாம். பொதுவாக முதியவர்கள் இப்படி சண்டை யிடுவதில்லை.

சிலர் இந்த சண்டைக் குணத்தை விடாமல் குழந்தைகளிடம் கூட சரி சமமாகவோ அல்லது அதற்கும் மேலேயோ வெளிப்படுத்துவதை பார்த்திருக்கிறேன். இப்படிப் பட்டவர்கள் தங்களை ஒத்தவர்களுடன் எப்போதும் தோல்வி காண்பதாலோ அல்லது தங்களை ஒத்தவர்களுடன் தங்களுடைய ஆளுமையை வெளிப்படுத்த முடியாத இயலாமையாலோ இத்தகைய பிறழ்வு மனப்பான்மையில் குழந்தைகளிடம் அவர்கள் போர்க்குணத்தைக் காட்டும் போது குழந்தைகள் விக்கித்து விடுகிறார்கள். அனைவரிடமும் அன்பை மட்டுமே பெற்றுவரும் அந்தக் குழந்தைகளுக்கு அது ஒரு புது அனுபவமாக அமைந்து விடுகிறது.

இது உங்களுக்கு விசித்திரமாக இருக்கலாம்.

ஒருமுறை நான் காவல் துறை ஆணையர் அலுவலகத்திற்கு சென்றிருந்தபோது அங்கு வந்திருந்த பார்வையாளர்களில் ஒரு பெண்மணியை இத்தகைய குணத்துடன் பார்த்தேன்.

அவருக்கு முன் வரிசையில் ஒரு பெண்மணி குழந்தையுடன் இருந்தார். குழந்தைக்கு ஆறு வயது இருக்கும். பெண் குழந்தை. அந்தத் தாயார் ஏதோ கவலையில் தன் கையில் விண்ணப்பத்துடன் தனது முறைக்காக காத்திருக்கையில் அந்தக் குழந்தை தாயின் பிடியிலிருந்து விலகி வந்து தனக்குப் பின் வரிசையில் இருந்த நான் குறிப்பிட்ட பெண்மணியை பார்த்து முகம் சுழித்து சிரித்தது. ஆனால் அந்தப் பெண்ணோ எந்த ஒரு உணர்ச்சியையும் வெளிப்படுத்தாது அமர்ந்திருந்தார்.

சற்று நேரம் கழித்து தன் தாயின் பிடியிலிருந்து முழுதுமாய் வெளி வந்த அந்தக் குழந்தை, பின் வரிசையிலிருந்த பெண்ணை நோக்கி நகர்ந்தது. அந்தப் பெண் சிரிக்க வேண்டும் என்று அந்தக் குழந்தை விரும்பியது போலத் தோன்றியது. ஆனால் அந்தப் பெண் சிரிக்கவில்லை.

மெதுவாக நகர்ந்து நான் குறிப்பிட்ட பெண்ணின் முன்னால் வந்த குழந்தை அந்தப் பெண்ணை கையால் தொட முயற்சித்தது. அந்த முயற்சியில் குழந்தையின் கால் அந்தப் பெண்ணின் காலின் மேல் பட்டுவிட்டது.

என்ன நினைத்தாளோ தெரியவில்லை. உடனே தன் இருக்கையிலிருந்து எழுந்த அந்தப் பெண் தனது காலால் அந்தக் குழந்தையின் பிஞ்சுக் காலை ஓங்கி ஓங்கி மிதித்தாள். ஓங்கி ஓங்கி மிதித்த வேகத்தில் அவளுக்கு மூச்சிறைக்க ஆரம்பித்தது.

வெறி கொண்டதைப் போல தனது கால்களின் மேலேறி ‘ஜங்கு’ ‘ஜங்கு’ என மிதித்த அந்தப் பெண்ணைப் பார்த்து மிரண்டு போனது குழந்தை. அதன் முகம் சுருங்கிப் போனது. இரு கைகளாலும் தன் வாயைப் பொத்திக் கொண்ட அதன் கண்களில் கண்ணீர் கதக் என துளிர்த்து உருண்டது. பின்னர் மெதுவாய் பின்னோக்கி நகர்ந்து தன் தாயின் அணைப்பிற்குள் அடங்கியது. நடந்த எதையும் கவனிக்காத அதன் தாய் தன் மடியில் விழுந்து கவிழ்ந்த குழந்தையை அணைத்துக் கொண்டாள்.

இவையத்தனையையும் கவனித்துக் கொண்டிருந்த எனக்கு என் கண்களையே நம்பமுடியவில்லை.

இப்படியும் பெண்களா..?

அதிர்ந்து போனேன். அந்தச் சம்பவத்தை வேறு யாரும் பார்த்தார்களா என நான் கவனிக்கவில்லை.

இது ஏன் இப்படி? அந்தப் பெண்ணுக்கு என்னவாயிற்று? அந்தப் பெண்ணின் மனதில் அடக்கி வைத்திருந்த aggression இப்படி வெளியாகி இருக்கிறது. இது மிகத் தவறு.

இது போல pent up feelings மனதை விட்டு வெளி வரும்போது அது ஒரு explosion ஐய்ப் போல மிகக் கொடுமையான விளைவுகளை விளைவிக்கும். அது மட்டுமல்ல இதனால் தான் மன்னிப்பு என்பது மன்னிக்கப் படுபவர்க்கல்ல மன்னிப்பவர்க்கு நன்மை பயத்து அவரது மன நலனையும் அவரது உறவுகளிடையே உறவுச் சிக்கல் இல்லாமலும் பார்த்துக் கொள்கிறது.

அதனால் தான் மறப்பது மட்டுமல்ல மன்னிப்பது மட்டும் தான் ஒரு முடிவான செயலாக மன அழுத்தத்தை குறைக்கிறது. எனவே தான் சொல்கிறோம் விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை என்று.

மறுபடி பேசுவோம்.

அன்பன்,

வேதாந்தி.


 

Saturday, June 6, 2015

பாலுணர்வு கொள்தல் பாபமா..?


6.6.15

பாலுணர்வு கொள்தல் பாபமா..?

இதில் நான் ஆண்மீகம் பேச வில்லை.

நாம் பிள்ளைகளுக்கு பாலுணர்வைப் பற்றி என்ன போதிக்கிறோம் என்பதில் கவனம் காட்டவில்லையென்றால் ஏற்படும் விளைவுகள் குறித்தே இன்று பேசப்போகிறேன்.

இதில் ஒரு உண்மை நிகழ்வையும் சொல்லப் போகிறேன். வழக்கம் போலவே எனது நண்பர் கூறிய அவரது அனுபவக் கதைதான்.

பொதுவாகவே பிள்ளைகளுக்கு பாலுணர்வைப் பற்றிய அறிவை இயற்கையே கொடுத்து விடுகிறது. இதில் முக்கியமாக பங்கெடுத்துக் கொள்ளும் காரணிகள் அவர்களது சூழல், நண்பர்களது வட்டம், அனுபவம், காண்பது, கேட்பது மற்றும் வாசித்தறிவது ஆகியவைகள் பிள்ளைகளின் பாலுணர்வு பற்றிய அறிவிற்கு வழிகளாக அமைகின்றன.

இந்தக் காரணிகளும் செம்மையாக அதனதன் செயல்களை செய்து முடித்து பிள்ளைகளை பாலுறவுக்கு தயாராக்கி விடுகின்றன. இது இயற்கையில் நடப்பது. ஆனால் சில பெற்றொர்கள் தங்களது பிள்ளைகளுக்கு கிடைக்கும் இத்தகைய அறிவின் பெருமையை அறியாது பாலுணர்வைப் பற்றிய செய்திகளோ அல்லது அவை  பற்றிய கேள்விகளோ எழுவதே பாபம் என்று சொல்லி பிள்ளைகளை கட்டுக்குள் வைக்கிறார்கள்.

இத்தகைய கட்டுப்பாடு பிள்ளைகளை தங்களது adolescent stage ஐ பத்திரமாக கடத்த உதவும் என்பதில் சந்தேகமில்லை என்றாலும் இது தவறான பின்விளைவுகளை ஏற்படுத்துகின்ற வாய்ப்பு உண்டு என்கின்ற விழிப்புணர்வு பெற்றோர்களுக்கு இல்லை.

இப்படி இயற்கையான வழியில் வரும் பாலுணர்வு அறிவு கிடைக்காத பிள்ளைகள் தங்களது பெற்றோர்களின் அறிவுரைப்படியே நடந்து கொண்டு தங்களது பதின் வயதை பத்திரமாகக் கடந்தாலும் பின்னாளில் அவர்கள் திருமண வாழ்வை எதிர் கொள்ள முடியாமல் திணறும் அபாயம் உள்ளது.

பாலுறவுச் சிக்கலினால் நிறைய திருமணங்கள் முறிவில் முடிந்து விடுகின்றன.

பெண் தன் கணவனிடம் எதிர் பார்ப்பது கிடைக்காமல் போகும் போது, ‘அவனை எனக்குப் பிடிக்கவில்லை. அவன் அம்மா கோண்டு..’ என மிக எளிதாக ஆணை விலக்கி விடுவாள். அதே போல் எதிர் பார்ப்புகளுடன் நெருங்கும் ஆணோ தனக்கு மாறாக ஒரு பயத்துடன் இருக்கும் பெண்ணைப் பார்த்து,’அவளை எனக்குப் பிடிக்கவில்லை அவளுக்கு ஏதோ மனக் கோளாறு’ எனக் கூறி அவளை விலக்கி விடுவான்.

இது மட்டுமல்ல. சில நேரங்களில் பாலுணர்வு தவறென போதிக்கும் பெற்றோர்களின் கட்டுக்குள் இருக்கும் பிள்ளைகள் தங்களின் உடலில் இயற்கையில் எழும் பாலுணர்வு அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் முடியாமல் வெளிப்படுத்தவும் முடியாமல் ஒரு conflict உருவாகி sexual selection இல் பிறழ்வு செய்து விடுகின்றனர்.

இது போல் மற்ற பிற பாலுணர்வுப் பிறழ்வுகள் குறித்து இன்னமும் பல நாட்கள்  பேசலாம். ஆனால் ஒருவரது வாழ்வில் முறையாக, இயற்கையாக கிடைக்கக் கூடிய ஒரு பாலுணர்வுக் கல்வியை ஆற்றுப்படுத்தாமல் நாம் நமது சமுதாய சங்கடங்களைக் கருதி திசை திருப்பி விடுவதால் தவறான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

இதைக் குறித்து எனது நண்பர் என்னிடம் சொன்ன ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கு அவரது வாய் மொழியாகவே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

“அது 1978ம் வருடம். திருச்சியில் ஒரு  பிரபல இஸ்லாமியக் கல்லூரியில் முதுகலை அறிவியல் படிப்பு விலங்கியல் துறையில் சேர்ந்திருந்தேன். அது படிப்பின் முதல் வருடம். அனைவரும் வெவ்வேறு இடங்களில் இருந்து வந்திருந்தனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பின்புலத்தைக் கொண்டிருந்தனர். அதில் அதிகமாக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்தான் இருந்தனர்.

முதல் செமஸ்டர் முடிந்தது. எங்களில் ஒருவர் எல்லா பேப்பர்களிலும் (O) out standing வாங்கியிருந்தார். அவர் கரூரைச் சேர்ந்தவர். அனைவரும் ஆச்சரியப் பட்டோம். அவர் மற்றையோர்களிடம் அதிகமாக பழகவில்லை. கல்லூரிப் பிள்ளைகளுக்கே உரிய குறும்புத்தனம், சேட்டை மற்றும் பெண் பிள்ளைகள் பால் ஈர்ப்பு ஆகியவை அவரிடம் காணப்படவில்லை. அவர் ஹாஸ்டலில் தங்கி யிருந்தார். அங்கும் யாருடனும் பேசுவதில்லை. கல்லூரி அல்லாத விடுமுறை நாட்களில் அங்கிருந்த University study centre library க்கு சென்று (இப்போது அதுதான் பாரதி தாசன் பல்கலைக் கழகம்) படிக்க ஆரம்பித்து விடுவார். அவரை அங்குதான் அதிகமாக பார்க்க முடியும்.

மற்றவர்கள் எல்லோரும் குழுவாக சேர்ந்து கொண்டு திருச்சியில் உள்ள பெண்கள் கல்லூரியை (அப்போது  மலைக் கோட்டையிலிருந்த Holy Cross) வலம் வருவோம். சிலருக்கு பெண் நண்பர்களும் கிடைத்தனர். இப்படி எல்லோரும் கல்லூரி வாழ்க்கையை அனுபவித்தோம்.

அடுத்த செமஸ்டர் தேர்வில் கரூரைச் சேர்ந்த நண்பர் தனது Grade இல் இருந்து கீழிறங்கி விட்டார். ஆனால் மற்றையோர் எப்போதும் போலவே இருந்தனர். கரூர் நண்பருக்கு நண்பர்களே இல்லாததால் அவருக்கு என்னவாயிற்று என்று தெரியவில்லை. ஆனால் வகுப்பில் மிகவும் சோர்ந்தபடியே காணப்பட்டார்.

இப்படி இருக்கையில் ஒரு நாள் நண்பர் கல்லூரிக்கு வரவில்லை. ஆசிரியர்கள் அவரைப் பற்றி வினவினர். அவர் விடுதியிலும் காணவில்லை. ஆனால் விடுதியில் அவரது உடமைகள் அப்படியே இருந்தது. எனவே நாங்களாகவே அவர் பெற்றோரைக் காண சொந்த ஊருக்குச் சென்றிருக்கலாம் என முடிவு செய்தோம்.

ஒரு வாரமாயிற்று. ஒரு ஆசிரியர் சந்தேகம் கொண்டு அவரது பெற்றோரை தொடர்பு கொண்டபோதுதான் அவர் அங்குமில்லை எனத் தெரிந்தது. பெற்றோர்கள் அலறியடித்துக் கொண்டு கல்லூரிக்கு வந்தனர். அவரை சமதானம் செய்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி செய்தனர் ஆசிரியர்கள்.

மூண்று மாதங்களாகியும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அவரது தாயாருக்கோ பித்தே பிடித்து விட்டது. தந்தை கலங்கிப்போனார்.

அய்ந்தாம் மாத இறுதியில் அவரது  இருப்பிடம் பற்றி காவல் துறையினர் கண்டறிந்தனர்.

முகமெல்லாம் அடையாளம் தெரியாது தாடி மீசையோடு உடல் மெலிந்து வெடவெடவென விரைத்து நின்ற அழுக்குத் துணிகளோடு சிதம்பரம் நடராசர் கோவிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த நண்பரை காவல் துறையினர் மீட்டு வந்தனர்.

அவரைப் பார்க்கும் போதே வயிற்றைப் பிசைந்தது. அவரை பெயர் சொல்லி அழைத்தவர்களை வெகுநேரம் கழித்தே தலை நிமிர்ந்து நோக்கிவிட்டு தலை குனிந்து கொள்வார். யாருடனும் பேசவில்லை.

அவரது தாயார், அவரைக் கட்டியணைத்து “ராசா…ராசா..” எனக் கதறியழுது அழைத்துச் சென்றது எங்களை கண் கலங்க வைத்தது.

பின்னரே அவர் எப்படிக் கிடைத்தார், ஏன் சென்றார் என்பது குறித்து மற்றவர்களிடம் விசாரித்தோம். யாருக்கும் ஒன்றும் தகவல் தெரியவில்லை. ஆனால் காவல் துறையினர், நண்பரது விடுதி அறையை சோதனையிட்டபோது கிடைத்த நண்பரது உடமைகளில் ஒரு டைரி கிடைத்ததாகவும் அதில் என்னவெல்லாமோ எழுதியிருந்தார் என்றும் கேள்விப்பட்டோம்.

பிறகு நண்பர்களை வைத்து காவல் துறையினரிடம் விசாரித்தபோதுதான் தகவல் கிடைத்தது.

நண்பர் university library க்கு சென்று படித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த சில பெண்களை பார்த்திருக்கிறார். அப்போதெல்லாம் அவருக்கு அவருடைய வயதுக்கு உரித்தான உடலியல் எழுச்சியும் கிளர்ச்சியும் நடந்திருக்கிறது. ஆனால் அதை நார்மலான ஒன்றாகக் கருதாமல் குற்ற உணர்வால் பீடிக்கப் பட்டிருக்கிறார். இத்தனைக்கும் அவர் விலங்கியல் மாணவர். ஆனாலும் அவரது வீட்டிலோ அல்லது அவரது வட்டத்திலோ சொல்லிவைத்திருந்த sex is a taboo என்கின்ற ஒரு கட்டுப்பாடு அவரை conflict க்கு ஆளாக்கியிருக்கிறது.

அதற்கப்புறம் விடுதியில் இரவில் தூக்கத்தில் அவருக்கு நடந்த மிக இயற்கையான விந்து வெளியான நிகழ்வுகள் அவரை மிகுந்த குழப்பத்திற்குள்ளாக்கி கடுமையான guilt complex க்கு தள்ளப்பட்டு விடுதியை விட்டு வெளியேறி கோவில் வாசலில் தஞ்சமடைந்திருக்கிறார். குற்ற உணர்வால் பீடிக்கப் பட்டதனால் வீட்டிற்கோ அல்லது வேறெங்கோ செல்லாமல் கோவிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்திருக்கிறார்.

இதைக் கேள்விப்பட்ட நாங்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்தோம். பாலுணர்வுகளைப்பற்றி சரியான புரிதல் இல்லாததாலும் தவறான கோட்பாடுகளாலும் அவரது வாழ்வே சிதைந்து விட்டது.

அதற்குப் பின்னர் அவரைப்பற்றி தகவல் தெரியவில்லை. நாங்கள் படிப்பை முடித்து வெளி வந்து விட்டோம்.”

நண்பர் சொன்ன செய்தி பாலுணர்வின் புரிதலில் உள்ள முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியது.

பிள்ளைகளுக்கு முக்கியமாக பாலுணர்வு குறித்து சரியான புரிதலை உண்டாக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் பாலுணர்வு தவறானதென்றோ அல்லது அது அசிங்கமானதென்றோ சொல்லி வைக்கக் கூடாது. இல்லையெனில் இது போன்ற கடுமையான குற்ற உணர்வுகளுக்கு ஆளாகி இயல்பான பாலுறவை அனுபவிக்க முடியாமலோ அல்லது இல்லற வாழ்வையே வெறுத்து ஒதுக்கும்படிக்கோ ஒரு extreme mentality க்கு தள்ளப் படுவார்கள்.

மீண்டும் பேசுவோம்.
அன்பன்,

வேதாந்தி.

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...