Followers

Tuesday, July 21, 2015

தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி I


21.7.15

தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி I




இது சென்னை அண்ணா நகரில் வசிக்கும் எனது நண்பரது சமீபத்தைய சொந்த அனுபவம்.

அவர் சென்ற மாதம் என்னைப் பார்க்க வந்திருந்தபோது அரசியலைப் பற்றியும் வரும் தேர்தல் எதிர்பார்ப்புகளைப் பற்றியும் பேச்சு திரும்பியது. அப்போதுதான் சொன்னார்.

“இந்த கட்சிக் காரர்களின் அராஜகம் தாங்க முடியவில்லை. படித்தவர்கள் அமைதியாய் இருப்பதை இயலாமையின் அடையாளமாய் எடுத்துக் கொள்கிறார்கள். அடித்துப் பறிக்கும் வேலையை கொஞ்சம் கூட மனச்சாட்சியே இல்லாமல் அநியாயத்திற்குச் செய்கிறார்கள்,” என்று அங்கலாய்த்துவிட்டு சொல்லத் தொடங்கினார்.

“இது எங்களது அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த ஒரு நிகழ்வு. எங்களது அடுக்கு மாடி 35 வருட பழமையானது. அந்த குடியிருப்பு கட்டும்போது அடுக்கு மாடி குடியிருப்பு கட்டுவதற்கு CMDA போடும் நிபந்தனைகளாக கார் நிறுத்துவதற்கான இடம் (car parking) கட்டாயமாக்கப்படாத காலம்.

குடியிருப்பின் விற்பனையாளரும் அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் 3 வீடுகள் வைத்திருந்தார். அவர் ஒரு காரும் வைத்திருந்தார். குடியிருப்பின் விற்பனையாளர் (Promoter) மூன்று வீடுகள் வைத்திருந்ததாலும் குடியிருப்பில் மொத்தம் 10 வீடுகள் மட்டுமே இருந்ததாலும் குடியிருப்புச் சங்கம் ஒன்று ஏற்படுத்தப் படவில்லை. எல்லாமே அவரது ராஜ்ஜியம்தான். அனைவரையும் மிரட்டி பராமரிப்புக்காக அவர் நிர்ணயித்த தொகையை வசூலிப்பதிலிருந்து, கணக்கை காட்டாமல் தவிர்ப்பது மற்றும் குடியிருப்பின் பொது இடத்தை அவர் ஆக்கிரமிப்பு செய்து கொள்வது போன்ற பல செயல் களில் இறங்கி இருந்தார்.

நான் அந்தக் குடியிருப்பில் எட்டு வருடங்களுக்கு முன்னர்தான் ஒரு வீடு (second sales) வாங்கி இடம் பெயர்ந்திருந்தேன். எனது வீட்டின் முதல் உரிமையாளர் அமெரிக்காவிற்கு நிலையாய் குடிபெயர்ந்து விட்டாதால் வீட்டை என்னிடம் விற்று விட்டார். என்னுடன் மற்றுமொரு புதியவரும் வீடு வாங்கியிருந்தார். மற்றையோர் எல்லாம் முதல் உரிமையாளர்கள்.

நான் அங்கு குடி பெயர்ந்ததிலிருந்தே அந்த விற்பனையாளரது நடவடிக்கைகளை கவனித்து வந்தேன். ஆனாலும் அனைவரும்  அமைதியாய் இருக்கையில் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒரு கட்டத்தில் அவரது அராஜகம் எல்லை மீறியது. குடியிருப்பைச் சுற்றியுள்ள பொது இடத்தை ஆக்கிரமிக்க ஆரம்பித்தார். அவரது வீடு ஒன்று தரைத் தளத்தில் இருந்தது. அது சாலையை ஒட்டி இருந்த வீடாகையால் அதை ஒட்டி இருந்த பொது காலியிடத்தை ஆக்கிரமித்துக் கொண்டார். மற்ற யாரையும் அங்கு புழங்க விடவில்லை.

இப்படி இருக்கையில் என்னுடன் வீடு வாங்கிய புதியவர் கார் ஒன்றை வாங்கினார். அதை நிறுத்துவதற்கு இடமில்லாததாகையால் விற்பனையாளர் ஆக்கிரமித்திருந்த இடத்தில் நிறுத்தினார். உடனே அதை விற்பனையாளர் ஆட்சேபிக்க, பெரும் பிரச்சினையாகிப் போனது. அந்தக் பொதுவிலான காலியிடத்தை யார் உபயோகிப்பது என்பதில் பிரச்சினை.

விற்பனையாளர் ‘எனக்கு மூன்று வீடுகள் இருக்கின்றன. மேலும் உங்களை விட எனக்குத்தான் பகுபடாத பங்கு அதிகமாக இருக்கிறது. எனவே இதை நான் தான் உபயோகப் படுத்துவேன்’ என்று வாதிட்டார். பிரச்சினை அடிதடி அளவுக்குப் போனது.

இந்த நிலையில்தான் புதிதாய் வந்தவர் என்னிடம் வந்து பேசினார். ஏதாவது செய்யவேண்டுமென்று சொன்னார். இது உங்கள் கருத்து மட்டும்தானா இல்லை மற்றவர்களும் இதையே விரும்புகிறார்களா என்றேன். இல்லைசார் எல்லோரும் இதைத்தான் விரும்புகிறார்கள் என்றார்.

உடனே நாங்கள் மூன்று பேர் உடன் சேர்ந்து திட்டமிட்டோம். உடனடியாக பராமரிப்புக்கான பணத்தை அந்த விற்பனையாளரிடம் தருவதை நிறுத்தினோம். எங்கள் குடியிருப்பில் இருக்கும் 10 வீடுகளுக்கும் Copy of the Document கேட்டு அண்ணாநகர் சார் பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தோம். அதில் 7 வீடுகளுக்கு மட்டும் பத்திரப் பதிவு நடந்திருந்தது தெரிந்தது. மீதி 3 வீடுகள் விற்பனையாளரே வைத்திருந்ததனால் அந்த வீடுகளுக்கு பத்திரங்களே உருவாக்கப் படவில்லை.

இந்தப் பிரச்சினை உருவானது 2006 ல். அதற்குப் பிறகு காவல் நிலையத்திற்கு சென்று புகார்களை கொடுத்தோம். விற்பனையாளருக்கு பல விதங்களிலும் தொல்லை வந்ததால் விற்பனையாளர் மனம் வெறுத்துப் போனார்.

அதே நேரத்தில் நாங்கள் வழக்கறிஞர்களின் உதவியையும் நாடினோம். தி. நகரிலுள்ள Rank Associates என்ற பிரபலமான வழக்கறிஞர்களின் குழுமம் அப்போது வழக்கமாக தி ஹிந்து நாளேட்டில் சனிக்கிழமை தோறும் ரியல் எஸ்டேட் குறித்த வாசகர்களின் கேள்விகளுக்கு விளக்கமளித்துக் கொண்டிருந்தது. அந்தக் குழுமத்தின் சட்ட ஆலோசனையைப் பெற்றோம்.

எங்களது பத்திரங்களை ஆராய்ந்த அந்தக் குழுமம் இந்தப் பிரச்சினை முடியவேண்டுமென்றால் உரூபாய் ஒரு கோடி செலவாகும் என்றார்.

நாங்கள் இதைக் கேட்டு விக்கித்துப் போனோம்.

வழக்கறிஞரை பார்த்து விட்டு வந்தபோது எங்களது குடியிருப்பில் மோட்டாவான வெளியாட்கள் ஒரு பதினைந்து பேர் சினிமாவில் வரும் வில்லன்களின் அடியாட்களைப்போல எங்களுக்காக காத்திருந்தனர்.

 
நாங்கள் வந்தவுடன், “உங்களைத்தாங்க பார்க்க காத்திருக்கிறோம். இப்போ இருக்கிற கரண்ட் ரேட்ல உங்க வீடுகளை வாங்க ரெடியா இருக்கிறோம். இந்தாங்க கார்டு. போன் பண்ணா உடனே வந்துடுவோம். இம்மீடியட் செட்டில்மெண்ட். ரொம்ப யோசிக்காதீங்க..” என்றனர்.

அதற்குப்பிறகுதான் தெரிந்தது, எங்கள் குடியிருப்பின் விற்பனையாளர் எங்களது தொல்லை தாளாமல் அவரது மூன்று வீடுகளையும் அப்போது ஆளுகையில் இருந்த ஒரு கட்சிக் காரனிடம் விற்றுவிட்டார் என்று. அந்த கட்சிக்காரன் எங்கள் வீட்டையும் விலைக்கு கேட்டு மிரட்டல் விட்டான்.

வழக்கறிஞர் சொன்னது, ரவுடிகள் மிரட்டினது எல்லாமாய்ச் சேர்ந்து எங்கள் வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்தது.

ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு கலங்கிப்போய் நின்றோம்.”

நண்பர் தொடர்ந்தது அடுத்து வரும் பதிவில்.

தொடர: தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி II

அன்பன்,

வேதாந்தி.

 

8 comments:

  1. இன்ரெஸ்ட்டிங்காக செல்லுகிறது..அடுத்த பதிவை எதிர்பார்த்து காத்து இருக்கிறேன்

    ReplyDelete
  2. தங்கள் உறுதியும் பிரச்சனையின்
    வீரியமும் அறிய முடிவை அறிய ஆவல் கூடுகிறது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. "அசந்து" போய் இருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்...

    ReplyDelete
  4. நாட்டு நடப்பு!
    காத்திருக்கிறேன்1

    ReplyDelete
  5. வகையாக மொய் வைக்க வேண்டிஇருந்திருக்குமே :)

    ReplyDelete
  6. அடுத்த பதிவு உடன் தருக!

    ReplyDelete
  7. இப்போது கேட்பதற்கு சுவையாக இருந்தாலும் அன்று அந்த வீடுகளின் உரிமையாளர்களின் நிலையை நினைத்தால் பகீர் என்றிருக்கிறது! இன்றுதான் உங்கள் வலைப்பூவில் இணைந்தேன்! தொடர்கிறேன்! நன்றி!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...