Followers

Thursday, March 20, 2014

கடவுள் நம்மை குறையுடன் படைத்தாரா?


20.3.14

கடவுள் நம்மை குறையுடன் படைத்தாரா?

நமது வாழ்க்கையை தேர்வு செய்யும் நிலையில் நாம் உள்ளோமா? - 2

 
 
நான் ஏற்கனவே பேசியது போல சிலர் நமது ஊனங்களுக்கும், குறைகளுக்கும், நம்மிடையே உள்ள பற்றக் குறைக்கும் கடவுளைக் காரணம் காட்டி கடுமையான விமரிசனத்திற்குள்ளாக்குகிறார்கள். நன்கு வாழ்வதென்பது குறையில்லாமல் இருப்பதோ அல்லது எல்லாவகையிலும் நிறைவுடன் இருப்பதோ அல்ல. நம்மையும் நமது சூழலையும் புரிந்து கொண்டு இணக்கமுற வாழ்வதே வாழ்க்கை.

வாழ்க்கை என்பது நாம் முழுமையடையக் கற்றுக் கொள்வது. நாம் வாழும் காலம் அதற்காக நமக்குக் கொடுக்கப்பட்ட அவகாசம். நாம் வாழுமிடம் அதற்கான சூழல். இங்கு நமக்கான சுதந்திரம் கடவுளால் பறிக்கப் படவில்லை.  

God has preserved our Sovereignty. He does not have  control over our choices. He has not prevented our attempts to change anything or everything that is there. Like also He has not voiced out against our way of life, its rules but He lets us face the consequences and gives us a chance to understand life and learn from it.  At the same time we must know that He cannot take charge for our wrong choices and the mess we make out of it.

 
 
கடவுள் நம்மை முழுமையாகப் படைத்திருந்தாலும் நிறைவாக வைத்திருந்தாலும் அதனால் திருப்தியுறாது தனது மனதில் எழுந்த தீய  ஒவ்வாத எண்ணங்களுக்கு பலியாகி வாழ்வைத் தொலைத்த ஒரு நபரைப் பற்றி முந்தைய பேச்சில் கண்டோம் (நமது வாழ்க்கையை தேர்வு செய்யும் நிலையில் நாம் உள்ளோமா? – 1)

இன்றைய பேச்சில் அதற்கு மாறான ஒரு நிகழ்வைப் பார்ப்போம்.

தமிழ்நாட்டின் தென் பகுதியிலுள்ள ஒரு பல்கலைக் கழகம். அங்கு ஒரு மாற்றுத் திறனாளி, போலியோவால் வலது கால் முற்றிலும் செயலிழந்து போனவர். அவரால் நகர்வது சிரமம் என்பதால் அந்த பல்கலைக் கழகத்தின் நூலகத்தில் அமைச்சுப் பணி ஒதுக்கப்பட்டு தன் குறையையும் பொருட்படுத்தாது பணியாற்றி வந்தார். எல்லோருடனும் இனிமையாக பழகத் தெரிந்த அவரை விரும்பாதவர் யாரும் கிடையாது. அவர் தானும் மகிழ்வுடன் இருந்து தன்னைச் சுற்றியிருப்பவர்களையும் மகிழ்வுடன் வைத்திருந்தார்.

அவரது பின்புலமும் பெரிதாக சொல்லும்படி இல்லை. ஏழ்மையில் பிறந்தவர். அவரது வருமானத்தையே அவரது குடும்பத்தார் அனைவரும் நம்பியிருந்தனர். குடும்பம் சற்று பெரிது கூட. ஆனாலும் சிக்கனமாய் வாழத்தெரிந்தவர்கள் என்பதால் வாழ்க்கை குறையில்லாமல் ஓடியது.

இதை விட சிறப்பு என்னவென்றால் அவர் தனது குறையை ஒருபோதும் பெரிதாக நினைத்தது கிடையாது. யாரேனும் அவரது நிலை குறித்து பரிதாபப் பட்டு பேச ஆரம்பித்தால் சட்டென்று பேச்சை மாற்றிவிடுவார். தான் மறந்த குறையை மற்றவர்கள் தன்னிடம் நினைவூட்டிக் கொண்டே இருப்பதை விரும்பாதவர் தனது கவனத்தைத் திருப்ப பகுதிநேர வகுப்பில் சேர்ந்து பயில ஆரம்பித்தார். தான் நூலகத்தில் இருப்பதால் நூலகம் சார்ந்த படிப்பு படித்தார்.

 

காலம் செல்லச் செல்ல அவருக்கு அந்தப் படிப்பில் ஆர்வம் அதிகமானது. B.Lib முடித்துவிட்டு அப்படியே M.Lib தொடர்ந்தார். அவர் M.Lib முடிக்கவும் அந்த நூலகத்தில் இருந்த ஒரு நூலகர் ஓய்வு பெற்றதால் ஒரு நூலகருக்கான பணியிடம் காலியாகவும் சரியாக இருந்தது. இவருக்கு எல்லாத் தகுதியும் இருந்ததால் இவருக்கே அந்த நூலகர் பதவி கிடைத்தது. எத்துனை அழகான ஒரு உயர்வு!.

இதைவிட ஆச்சரியம். நூலகத்திற்கு வந்து போய்க்கொண்டு இருந்த ஒரு பெண் விரிவுரையாளர் இவரை விரும்ப ஆரம்பித்தார். இவர் நூலகரானதும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார் அந்தப் பெண்மணி. இதைக் கேட்டதும் சற்றே திகைத்துப் போனவர் சிலநாட்கள் பொறுத்து அந்தப் பெண்மணியின் நேசம் உண்மையானது எனப் புரிந்துகொண்ட பின்னால் தனது ஒப்புதலை அளித்தார். இருவருக்கும் திருமணமும் நடந்தது. அவரது இனிமையான குணம் அவர் தேடாமலே அவருக்குப் பொருத்தமான ஒரு இணையைச் சேர்த்து வைத்தது.

இது மட்டுமல்ல அதுவரை சாதாரணமாக ஊதியம் பெற்றுவந்தவர்கள் தங்களது திருமணம் முடிந்தவுடனே UGC ஊதியம் பெற்றார்கள். இருவருக்குமே புதிதாக அமல்படுத்தப்பட்ட UGC ஊதியம் கிடைத்தது. தம்பதியரை எனது பேராசிரியர் எனக்கு அறிமுகப் படுத்தி அவர்களது கதையைச் சொன்னபோது மிக்க மகிழ்ந்தேன். இருவருமே ஒருவருக்கொருவர் சரியான இணை.

 
 
வாழ்க்கையை சரியாகப் புரிந்து கொண்டு சரியான மன நிலையிலிருப்பவன் சரியான விருப்பத் தேர்வுகளைச் செய்து வெற்றி பெறுகிறான். மாறாக தனது சிந்தனையை தனது மனதில் எழும் ஒவ்வாத எண்ணங்களுக்கு பலி கொடுத்தவன் வாழ்வைப் புரிந்து கொள்ளாமல் வீழ்ந்து விடுகிறான்.

நமது ஊனங்களோ, நமது எதிரிகளோ அல்லது நமது பிறப்புச் சூழலோ நம்மை சிறைப்படுத்துவதில்லை. மாறாக நமது மனதில் எழும் விரும்பத் தகுந்த / ஒவ்வாத எண்ணங்களின் வீச்சே நமது சிந்தனையை நடத்தி நமது விருப்பத் தேர்வுகளை முடிவு செய்து வாழ்வை எதிர் கொள்ளச் செய்கிறது.

 இன்னமும் பேசுவோம்.

 அன்பன்,

வேதாந்தி.

 

Monday, March 17, 2014

நமது வாழ்க்கையை தேர்வு செய்யும் நிலையில் நாம் உள்ளோமா? - 1


17.3.14

நமது வாழ்க்கையை தேர்வு செய்யும் நிலையில் நாம் உள்ளோமா? - 1

நாம் நம்மிடையே எப்போதுமே choice களை பார்க்கலாம். அப்படி ஒருவன் வாழ்க்கையில் choice களை பார்க்கத் தவறினால் அது அவனுடைய தவறே தவிர கடவுளின் தவறோ அல்லது மற்றவர்களின் வஞ்சமோ அல்ல. இதைத்தான் நான் கடவுள் நல்லவரா அல்லது கெட்டவரா எனும் பதிவில் பேசியிருந்தேன். நமக்கு எந்த நிலையிலும் ஒரு choice உண்டு. அதைத் தேர்வு செய்வதில் நமக்கு மட்டுமே பங்கு உண்டு.

இதனாலேயே நம்முடைய உயர்வில் நமது உள்ளம் பெரும் பங்கு வகிக்கிறது.

“வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
                             உள்ளத் தனையது உயர்வு”

என அய்யன் வள்ளுவன் சொன்னதுதான் இது. இதில் சொல்லியிருக்கும் உயர்வு என்பது தம்மை தமது வாழ்வு நிலையிலும் மற்றும் தம்மை மற்றவர்களது பார்வையிலும் உயர்த்திக் காட்டுவது என்று எடுத்துக் கொள்ளலாம்.  ஒரு மனிதன் உயர்வதற்கான உளவியல் சொல்லும் அத்துனைக் கோட்பாடுகளையும் உள்ளடக்கியது இந்தக் குறள்.இத்துனை உயர்வை நமக்குத் தரும் நமது உள்ளத்தை உயர்த்த நாம் செய்யவேண்டியது proper emotional management மட்டுமே. இதைத் தவிர வேறேதும் பெரிய முதலீடுகள் செய்யவேண்டியது கிடையாது. மிக முக்கியமாய் கவனிக்கப்படவேண்டியது என்னவென்றால்                        Improper emotional management நமது மனதைக் கெடுத்து நமது திறமைகளையும் ஆற்றலையும்  முடக்கிப் போட்டுவிடும். ஆச்சரியமாய் இருக்கிறதல்லவா? நான் உண்மைச் சம்பவங்களுடன் இதை இப்போது பேசப்போகிறேன்.
 
       தமிழகத்தின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு பெரிய பல்கலைக் கழகம் அது. அதிலுள்ள ஒரு துறையின் நிர்வாகப் பகுதியில் ஒருவர் அமைச்சுப் பணியாளராக இருந்தார். வேலையில்லாத் திண்டாட்டம் உச்சத்தில் இருந்த காலம் அது. அவருக்கு கிடைத்திருந்த வேலை என்பது போதுமானதாக இருந்தது என்பது எனது கருத்து. ஆனால் அவர் அது குறித்து அவர் மகிழ்ச்சி அடந்ததாகவோ அல்லது அதன் அருமையை உணர்ந்ததாகவோ தெரியவில்லை. அந்தத் துறையில் ஆராய்ச்சிப் படிப்பில் இருந்த மாணவர்கள் வேலை கிடைக்காத காரணத்தால் காலத்தை வீணடிக்கக் கூடாதென்று ஆராய்ச்சிப் படிப்பில் சேர்ந்திருந்தனர். அவர்களுக்கு கிடைக்கும் fellowship மிகவும் குறைவானது. அதில் அவர்கள் தங்களது செலவையும் பார்த்து ஆராய்ச்சிப் படிப்பிற்கான வேதிப் பொருட்கள் மற்றும் சின்னச் சின்ன சமாச்சரங்களையும் வாங்கிக் கொள்ள வேண்டியிருந்தது. கொஞ்சம் கடுமையான வாழ்க்கைதான். ஆனால் எதிர் காலத்தில் மிக்க நம்பிக்கை கொண்டு காலத்தை நகர்த்திக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், நான் மேலே குறிப்பிட்ட நபர் இந்த மாணவர்களது மகிழ்ச்சியான போக்கை கண்டு பொறாமைப்பட ஆரம்பித்தார். அவருக்கு மாணவர்கள் தங்கள் சிரம நிலையை மறக்க ஒரு projected happiness நிலையில் இருக்கிறார்கள் என்பது புரியவில்லை. ஒவ்வொருமுறையும் மாணவர்களுக்கு fellowship பணம் வரும்போது இவர் பொறாமையின் மிகுதியால் எரிந்து விழுவதும் மாணவர்கள் இவரது நிலையை மேம்போக்காக எடுத்துக் கொண்டு சிரித்து விலகுவதும் நடந்து கொண்டிருந்தது. நாளடைவில் இந்த நபருக்கு இந்த நோய் முற்றத் தொடங்கியது. எதைக் கண்டாலும் போறாமைப் பட்டார். எரிச்சலுற்றார். இதை வெளிப்படையாகவே வார்த்தைகளில் கொட்டத் தொடங்கினார். வார்த்தைகள் நாகரிக நிலையை மிஞ்சியது. ஒரு கட்டத்தில் இவரது ஆற்றாமை மிகுதியானது. முகம் சிவந்து வெறிகொண்டு உடல் நடுக்கத்துடன் தனது ஆற்றாமையை வெளிப்படுத்த ஆரம்பித்தார்.

அவரது இந்த நிலை அவரது அலுவல்களை பாதிக்கத் தொடங்கியது. யாரேனும் எதாவது மென்மையாக அறிவுரை சொல்லத்தொடங்கினால் வெறிபிடித்தமாதிரி கத்த ஆரம்பித்து விடுவார். அறிவுரை சொல்ல வந்தவர்கள் விலக ஆரம்பித்து விடுவர். ஒரு கட்டத்தில் தம்மைச் சுற்றியிருந்த அனைவருமே தமக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்பை தட்டிப் பறித்துக் கொண்டவர்கள் எனக் கருத ஆரம்பித்தார். இந்த நினைப்பு தேவையில்லாமல் அவர் மனதில் எல்லோரைக் குறித்தும் காழ்ப்புணர்ச்சியைத் தூண்டியது. ஒரு கட்டத்தில் வெறி நாய் போல நுரை தள்ள எல்லோரையும் காரணமில்லாமல் வெறுத்து வெளிப்படையாகவே வசை பாட ஆரம்பித்தார்.

தனது மனதில் கிளர்ந்தெழுந்த ஒவ்வாத எண்ணங்களுக்கு ஆட்பட்டு அவர் தனது தெளிவான பார்வையை இழந்து தன்னுள் எழுந்த தீய உணர்வுகளுக்கு சிறைப்பட்டவரானார். இது அவரது செயல்பாடுகளையும் திறமைகளையும் முடக்கிப் போட்டது. அவரது நடவடிக்கைகள் ஒரு மன நோயின் வெளிப்பாடாக விபரம் தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லிக் கொண்டார்கள். அவரது குடும்பத்தில் அவரது நடவடிக்கைகள் எப்படியென்று தெரியவில்லை.  யாரும் அவரைப் பற்றிக் கவலைப் படவும் இல்லை. Everyone simply ignored him with a smile. அவரது முன்னேற்றம் நோயில் மட்டுமே வெளிப்பட்டது.

நான்காண்டுகள் கழித்து அவரைக் காணச் சென்றபோது அங்கிருந்தோர் அவரைப்பற்றி பேசுவதையே தவிர்த்தனர். வற்புறுத்தி கேட்டபோது அவர் பணிக்கு வருவதில்லை எனவும் காரணம்  தெரியவில்லை எனவும் மழுப்பலாய்ச் சொன்னார்கள். பிறகுதான் எனக்கு வேண்டப்பட்டவர்கள் என்னிடம் தனிமையில், அவருக்கு மன நோய் முற்றி வீட்டை விட்டுச் சென்றுவிட்டதாயும் அவர் எங்கிருக்கிறார் என்னும் தகவல் கூட கிடைக்காமல் வீட்டிலுள்ளோர் வேதனைக்குள்ளாயிருப்பதையும் சொன்னார்கள். அது எனக்குள் மிகுந்த மன வேதனையை உண்டாக்கியது.

நமக்குள் எழும் தீய ஒவ்வாத எண்ணங்கள் நம்மை சிறகொடித்து சிறைப்பிடிக்க நாமே அனுமதிப்பது எத்துனை மதிகேடான செயல். இது தவிர்க்கப்பட வேண்டியதொன்றல்லவா?

இதைப் போன்றே தமிழ்நாட்டின் தென் பகுதியிலுள்ள ஒரு பல்கலைக் கழகம். அங்கு ஒரு மாற்றுத் திறனாளி, போலியோவால் வலது கால் முற்றிலும் செயலிழந்து போனவர். அவரால் நகர்வது சிரமம் என்பதால் அந்த பல்கலைக் கழகத்தின் நூலகத்தில் அமைச்சுப் பணி ஒதுக்கப்பட்டு தன் குறையையும் பொருட்படுத்தாது பணியாற்றி வந்தார்.


 

அன்பன்,

வேதாந்தி.

 

 
Related Posts Plugin for WordPress, Blogger...