Followers

Showing posts with label Success. Show all posts
Showing posts with label Success. Show all posts

Thursday, March 20, 2014

கடவுள் நம்மை குறையுடன் படைத்தாரா?


20.3.14

கடவுள் நம்மை குறையுடன் படைத்தாரா?

நமது வாழ்க்கையை தேர்வு செய்யும் நிலையில் நாம் உள்ளோமா? - 2

 
 
நான் ஏற்கனவே பேசியது போல சிலர் நமது ஊனங்களுக்கும், குறைகளுக்கும், நம்மிடையே உள்ள பற்றக் குறைக்கும் கடவுளைக் காரணம் காட்டி கடுமையான விமரிசனத்திற்குள்ளாக்குகிறார்கள். நன்கு வாழ்வதென்பது குறையில்லாமல் இருப்பதோ அல்லது எல்லாவகையிலும் நிறைவுடன் இருப்பதோ அல்ல. நம்மையும் நமது சூழலையும் புரிந்து கொண்டு இணக்கமுற வாழ்வதே வாழ்க்கை.

வாழ்க்கை என்பது நாம் முழுமையடையக் கற்றுக் கொள்வது. நாம் வாழும் காலம் அதற்காக நமக்குக் கொடுக்கப்பட்ட அவகாசம். நாம் வாழுமிடம் அதற்கான சூழல். இங்கு நமக்கான சுதந்திரம் கடவுளால் பறிக்கப் படவில்லை.  

God has preserved our Sovereignty. He does not have  control over our choices. He has not prevented our attempts to change anything or everything that is there. Like also He has not voiced out against our way of life, its rules but He lets us face the consequences and gives us a chance to understand life and learn from it.  At the same time we must know that He cannot take charge for our wrong choices and the mess we make out of it.

 
 
கடவுள் நம்மை முழுமையாகப் படைத்திருந்தாலும் நிறைவாக வைத்திருந்தாலும் அதனால் திருப்தியுறாது தனது மனதில் எழுந்த தீய  ஒவ்வாத எண்ணங்களுக்கு பலியாகி வாழ்வைத் தொலைத்த ஒரு நபரைப் பற்றி முந்தைய பேச்சில் கண்டோம் (நமது வாழ்க்கையை தேர்வு செய்யும் நிலையில் நாம் உள்ளோமா? – 1)

இன்றைய பேச்சில் அதற்கு மாறான ஒரு நிகழ்வைப் பார்ப்போம்.

தமிழ்நாட்டின் தென் பகுதியிலுள்ள ஒரு பல்கலைக் கழகம். அங்கு ஒரு மாற்றுத் திறனாளி, போலியோவால் வலது கால் முற்றிலும் செயலிழந்து போனவர். அவரால் நகர்வது சிரமம் என்பதால் அந்த பல்கலைக் கழகத்தின் நூலகத்தில் அமைச்சுப் பணி ஒதுக்கப்பட்டு தன் குறையையும் பொருட்படுத்தாது பணியாற்றி வந்தார். எல்லோருடனும் இனிமையாக பழகத் தெரிந்த அவரை விரும்பாதவர் யாரும் கிடையாது. அவர் தானும் மகிழ்வுடன் இருந்து தன்னைச் சுற்றியிருப்பவர்களையும் மகிழ்வுடன் வைத்திருந்தார்.

அவரது பின்புலமும் பெரிதாக சொல்லும்படி இல்லை. ஏழ்மையில் பிறந்தவர். அவரது வருமானத்தையே அவரது குடும்பத்தார் அனைவரும் நம்பியிருந்தனர். குடும்பம் சற்று பெரிது கூட. ஆனாலும் சிக்கனமாய் வாழத்தெரிந்தவர்கள் என்பதால் வாழ்க்கை குறையில்லாமல் ஓடியது.

இதை விட சிறப்பு என்னவென்றால் அவர் தனது குறையை ஒருபோதும் பெரிதாக நினைத்தது கிடையாது. யாரேனும் அவரது நிலை குறித்து பரிதாபப் பட்டு பேச ஆரம்பித்தால் சட்டென்று பேச்சை மாற்றிவிடுவார். தான் மறந்த குறையை மற்றவர்கள் தன்னிடம் நினைவூட்டிக் கொண்டே இருப்பதை விரும்பாதவர் தனது கவனத்தைத் திருப்ப பகுதிநேர வகுப்பில் சேர்ந்து பயில ஆரம்பித்தார். தான் நூலகத்தில் இருப்பதால் நூலகம் சார்ந்த படிப்பு படித்தார்.

 

காலம் செல்லச் செல்ல அவருக்கு அந்தப் படிப்பில் ஆர்வம் அதிகமானது. B.Lib முடித்துவிட்டு அப்படியே M.Lib தொடர்ந்தார். அவர் M.Lib முடிக்கவும் அந்த நூலகத்தில் இருந்த ஒரு நூலகர் ஓய்வு பெற்றதால் ஒரு நூலகருக்கான பணியிடம் காலியாகவும் சரியாக இருந்தது. இவருக்கு எல்லாத் தகுதியும் இருந்ததால் இவருக்கே அந்த நூலகர் பதவி கிடைத்தது. எத்துனை அழகான ஒரு உயர்வு!.

இதைவிட ஆச்சரியம். நூலகத்திற்கு வந்து போய்க்கொண்டு இருந்த ஒரு பெண் விரிவுரையாளர் இவரை விரும்ப ஆரம்பித்தார். இவர் நூலகரானதும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார் அந்தப் பெண்மணி. இதைக் கேட்டதும் சற்றே திகைத்துப் போனவர் சிலநாட்கள் பொறுத்து அந்தப் பெண்மணியின் நேசம் உண்மையானது எனப் புரிந்துகொண்ட பின்னால் தனது ஒப்புதலை அளித்தார். இருவருக்கும் திருமணமும் நடந்தது. அவரது இனிமையான குணம் அவர் தேடாமலே அவருக்குப் பொருத்தமான ஒரு இணையைச் சேர்த்து வைத்தது.

இது மட்டுமல்ல அதுவரை சாதாரணமாக ஊதியம் பெற்றுவந்தவர்கள் தங்களது திருமணம் முடிந்தவுடனே UGC ஊதியம் பெற்றார்கள். இருவருக்குமே புதிதாக அமல்படுத்தப்பட்ட UGC ஊதியம் கிடைத்தது. தம்பதியரை எனது பேராசிரியர் எனக்கு அறிமுகப் படுத்தி அவர்களது கதையைச் சொன்னபோது மிக்க மகிழ்ந்தேன். இருவருமே ஒருவருக்கொருவர் சரியான இணை.

 
 
வாழ்க்கையை சரியாகப் புரிந்து கொண்டு சரியான மன நிலையிலிருப்பவன் சரியான விருப்பத் தேர்வுகளைச் செய்து வெற்றி பெறுகிறான். மாறாக தனது சிந்தனையை தனது மனதில் எழும் ஒவ்வாத எண்ணங்களுக்கு பலி கொடுத்தவன் வாழ்வைப் புரிந்து கொள்ளாமல் வீழ்ந்து விடுகிறான்.

நமது ஊனங்களோ, நமது எதிரிகளோ அல்லது நமது பிறப்புச் சூழலோ நம்மை சிறைப்படுத்துவதில்லை. மாறாக நமது மனதில் எழும் விரும்பத் தகுந்த / ஒவ்வாத எண்ணங்களின் வீச்சே நமது சிந்தனையை நடத்தி நமது விருப்பத் தேர்வுகளை முடிவு செய்து வாழ்வை எதிர் கொள்ளச் செய்கிறது.

 இன்னமும் பேசுவோம்.

 அன்பன்,

வேதாந்தி.

 

Wednesday, September 15, 2010

உடனிருந்தே கொல்லும் சிந்தனைக் கொல்லி


15.9.10
உடனிருந்தே கொல்லும் சிந்தனைக் கொல்லி



இது உறவாடிக் கெடுப்பதுபோல நம்மை உடனிருந்தே கொல்லும்.

நான் சினத்தைப் பற்றிச் சொல்லவில்லை. பொதுவாக சினத்தைத் தான் உடனிருந்து கொல்லும் என்பார்கள். ஆனால் நான் முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தபடி நாம் சினத்தைக்கூட நமக்குச் சாதகமாக வளைத்துக் கொள்ளலாம்.

நான் இங்கு குறிப்பிடுவது அழுக்காறு என்னும் பொறாமையை.

பொறாமை என்பது மிக மோசமான ஒன்று.

இதுவரை நான் பேசியதைப் பார்த்தீர்களானால் நாம் வெற்றியடைவதென்பது நமது அகச்சூழல் மற்றும் புறச்சூழல்களின் மீது நாம் கொண்டுள்ள ஆளுமைத் திறன்தான் ( our manipulative ability of internal environmental – mind – factors / forces and external environmental factors / forces ) தீர்மானிக்கிறது என்பதை ஓரளவு புரிந்திருப்பீர்கள். இதற்கு மிகத் தெளிவான பார்வையும், தீர்மானங்களும் தேவை. இதற்கு மிகத் தெளிவான மனம் தேவை.


பெரும்பாலான எதிர்சக்திகள் நமது மனத் தெளிவைத்தான் குறிவைக்கின்றன. எப்படி மதுவானது நமது ‘ மூளையிலுள்ள மெடுல்லா ஆப்லாங்கேட்டா’ எனும் பகுதியினைத் தாக்கி நமது சமநிலைப்பாட்டைக் கெடுத்து தள்ளாட வைக்கிறதோ அதைப்போல நமது எதிர் சக்திகள் நமது மனத்தெளிவினைத் தாக்கி நமது மனப் பார்வையை (mental perception ) புரட்டிப் போடுகிறது. இந்தக் கோணலான மனப்பார்வை தான் நமது சூழல் காரணிகளைத் திரித்து நமது மனதை முறுக்கி ஆக்கிரமித்து சிந்தனைக் கேட்டினை விளைத்து நமது செயலாலேயே நம்மைக் கொன்று விடுகிறது.

இதற்கு நிறைய எடுத்துக் காட்டுகளைத் தரலாம். சிந்தனைக் கேட்டால் விளைந்த விளைவுதான் கோவலனின் படுகொலை.



இதைப்போலத்தான்  பொறாமையும் நமது மனப்பார்வையைக் கோணலாக்கி சிந்தனைக் கேட்டை விளைவிக்கிறது. நன்றாய் யோசித்துப் பாருங்கள். நம் மனதினை ஆராயும் பார்வை நமது பலம் மற்றும் பலவீனங்களைக் காட்டும். இது நமது பலத்தினை பலப்படுத்தவும் பலவீனங்களை குறைக்கவும் பயன்படும். இதை விட்டு அடுத்தவரை ஆராயும் பார்வை அடுத்தவரது பலம், பெருமை, அல்லது மற்றய குணாதிசயங்களை ஆராய்வதோடு மட்டுமல்லது அதை நம் குணாதிசயங்களோடு ஒப்பிடத்தூண்டி நம்முள் பொறாமைத் தீயை நெய் வார்த்து வளரக்கும். இது நம்மை வளர்ப்பதற்கு உதவாது. மாறாக காழ்ப்புணர்ச்சியை பெருக்கி அடுத்தவரை நமக்கு எதிரியாகக் காட்டி நம்மை அவர்மேல் ஏவிவிடும்.


இந்தப் பொறாமை உணர்வு நமது மனதை காகம் கொத்துவதைப் போல் கொத்தி தன் வசம் இழுத்துப்போடும் வரை ஓயாது.


நான் கண்ட ஒருவர் பல்கலைக் கழகத்தில் உதவியாளராக பணிபுரிந்துவந்தார். அவர் மகிழ்வுடன் இருந்து நான் பார்த்ததே கிடையாது. எப்போதுமே  மற்றவர்மேல் சுள்ளென்று விழுவார். இத்தனைக்கும் அவர் இளம் வயதிலேயே திருமணமாகி நிரந்தர வேலையோடு இருந்தார். ஆனால் தனக்குக் கிடைத்திருக்கும் வாழ்வின் சிறப்பை பார்க்க முடியாமல் அவரது இந்தப் பொறாமைக் குணம் அவரைக் குருடாக்கிவிட்டது. கடு கடு வென்றே இருப்பார். அடுத்தவர் கொள்ளும் சிறிய மகிழ்வுகூட அவரை மிகவும் பாதித்தது.  வெறும் எண்ணூறு உரூபாயில் தன் செலவுகளையும் பார்த்துக் கொண்டு வீட்டில் இருக்கும் மற்ற துன்பங்களுக்கிடையில் படித்துவந்த ஆய்வுப் படிப்பு மாணவர்களைக்  கூட கண்டு பொறாமைப் பட்டார். அவர்களுக்கு வரும் கடிதங்களை கிழித்து விடுவார். காசோலைகளை ஆள் இல்லையென்று திருப்பி அனுப்பிவிடுவார். இப்படி பல வழிகளில் அடுத்தவருக்கு வேதனைகளை கொடுத்து வந்தார். இந்தப் பொறாமை குணம் அவரைக் கொன்று கொண்டிருந்ததே தவிர மேம்படுத்தவில்லை.


மாறாக மற்றொருவர் இவரைப் போலவே அதே பல்கலைக் கழகத்தில் உதவியாளராக இருந்தவர் மற்ற ஆசிரியர்களின் உதவியோடு நூலகருக்கான பட்டப் படிப்பினை படித்து முடித்து அதே பல்கலைக் கழகத்தில் நூலகராக பதவி உயர்வு பெற்றார். இத்தனைக்கும் இவர் மாற்றுத் திறன் கொண்டவர். நூலகரானபின் அவருக்கு ஒரு நல்மனதுடையோரது உதவியால் திருமணமும் நடை பெற்றது. உடனே பல்கலைக் கழக மாணியக் குழுவால் பரிந்துரைக்கப் பட்ட ஊதியமும் கிடைத்தது.


நான் மேலே சொன்ன இரண்டுமே உண்மை நிகழ்வுகள்.


பல்கலைக் கழகத்திலேயே பணிபுரிந்தும் படிக்கத்தோன்றவில்லை முன்னவருக்கு ஆனால் மாற்றுத்திறனாளியாய் இருந்தும் இரண்டாமவரது தெளிவான சிந்தனை அவரை முன்னேற்றியது.

வாழ்வில் முன்னேற சிந்தனைத் தெளிவு மிக முக்கியம். அதற்கு பொறாமை போன்ற சிந்தனைக் கொல்லி உணர்வுகளுக்கு மனதில் இடமளிக்கக் கூடாது.


இன்னமும் பேசுவோம்.

அன்பன்

வேதாந்தி.

Monday, September 6, 2010

ஒரு தலைவனைத் தொடரலாமா?

6.9.10

ஒரு தலைவனைத் தொடரலாமா?


வரம் சாபமானது எப்படி..? சாபம் வரமானது எப்படி? பகுதி - 3








ஒருவரை முன் மாதிரியாகக் கொள்ளலாம். ஆனால் அவரை அப்படியே பின் தொடரலாமா?


ஒரு தலைவனைப் பின் தொடர்தல் நல்லதா என்பது குறித்துப் பேசுவோம்.

நாம் பேசிக்கொண்டிருப்பது நமது தொல்விகளை வெற்றிகளாக்குவது பற்றியும் மற்றும் நமது வெற்றிகளை நிரந்தர வெற்றிகளாக்குவது பற்றியும் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம். இதில் மிக முக்கியமான இரண்டு சூழல்கள் பற்றியும் அதன் காரணிகளைப் பற்றியும் மிகத்தெளிவாக நாம் அறிந்திருக்க வேண்டியிருப்பதால் ஒவ்வொன்றையும் சிறுகச் சிறுக பேசிக்கொண்டிருக்கிறோம்.

சூழல்கள் இரண்டு. ஒன்று அகச்சூழல். மற்றொன்று புறச்சூழல்.

இதுவரை வந்த பேச்சுக்களில் அகச்சூழல் மற்றும் அதன் காரணிகளைப் பற்றிப் பேசினோம். இப்போதும் அதையேதான் தொடர்கிறொம்.

சென்ற பதிவில் பணிக் குழுமத்தின் நோக்கங்கள் ( corporate goals) மற்றும் சமுதாய நோக்கங்கள் ( community goals) மற்றும் நமது தனிப்பட்ட நோக்கு (individual goal) ஆகியவற்றைப் பற்றி பேசினோம்.


சமுதாய நோக்கங்கள் மற்றும் குழுமத்தின் நோக்கங்கள் நமது நோக்கங்களை பாதிக்கக் கூடாது என்றும் முன் பதிவில் பார்த்தோம்.

சிலர் குழுமத்தின் நோக்கோடு தனது நோக்கினையும் இணைத்துக் கொள்வதும் நடக்கிறது. இது சில நேரங்களில் இவர்களது தனி நோக்கினை குழு நோக்கிற்காக தியாகம் செய்யும் அளவிற்கு இவர்களை குழுமம் சார்ந்தவர்களாக மாற்றிவிடும். இந்த விளைவு குழுமத்திற்கு மிகவும் உயர்ந்தது. இது கருதித்தான்- இதை நோக்கித்தான் - இன்னமும் பெருமளவு குழுமங்களில் தங்களது குழுமங்களின் பங்குகளை ஊக்கப் பங்குகளாக தரும் வழக்கத்தினைக் கொண்டுள்ளனர். பெரும்பான்மையான குழும நிறுவனர்கள் (corporate founders) குழும நோக்கும் தனது நோக்கும் ஒன்றாகவே கொண்டிருப்பர்.


இங்கு ஒரு தலைவனைப் பின் தொடர்தல் குறித்துப் பார்ப்போம்.


தலைவன் என்பவன் தனது குறிகோள் குறித்து ஒரு தெளிவான சிந்தனை கொண்டவன். குறிக்கோள் தெளிவானதென்றால் அதை அடைவதற்கான பாதை குறித்தும் அவனுக்கு ஒரு தெளிவான சிந்தனை இருக்கும். ஆக நாம் தொடர்பவர் அல்லது தொடரும்படி நம்மை ஈர்ப்பவர் மிகுந்த தெளிவானவர் என்பதில் சந்தேகம் கொள்ள வேண்டாம். எனவே இவரைத் தொடர்தல்  குறித்து இரு மடங்கு நாம் தெளிவாக இருக்கவேண்டும்.





நாம் அவரைத் தொடரலாமா வேண்டாமா என்பது தான் இப்போது நாம் நிர்ணயிக்க வேண்டியது. இது மிகவும் முக்கியம். ஏனெனில் ஒருவரது infatuation or influence நமது சிந்தனையை மிகவும் பாதிப்பிற்குள்ளாக்கக் கூடியது.இதில் நமக்குத் தெளிவில்லாததனாலேயே தீக்குளிப்புச் சம்பவங்கள் நடக்கின்றன. இது நமது நாட்டில் மட்டுமே நடக்கக் கூடிய ஒரு கொடுமையான நிகழ்வு.


நான் ஏற்கனவே கூறியதுபோல் ஒருவன் தனது நோக்கோடு சமுதாய நோக்கு அல்லது குழுமத்தின் நோக்கினை சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது அவனது தனி மனித உயர்விற்கு உகந்ததாகும். இங்கு நான் ஒருவன் சுயநலவதியாக இருப்பதைச் சொல்லவில்லை. தன்னைச் சீர்படுத்திக்கொள்வதென்பது மிகவும் முதன்மையானது. இது அவனது சிந்தனையை தெளிவாக்கும். இத்தகைய ஒருவனே சமுதாயத்தைக் குறித்தும் சரியான பார்வையினைக் கொண்டிருப்பான்.இது குறித்து பின்னர் பேசுவோம்.

மேலே சொன்னது போலல்லாமல் ஒருவன் தனது நோக்கோடு சமுதாய நோக்கினையும் கலந்து கொண்டிருந்தானால்அவன் தனது சமுதாய நோக்குப் போர்வையில் சுய முன்னேற்றத்திற்கான வழி வகுத்துக் கொண்டுள்ள கபட வேடதாரி. அவனை தொடர்வது மிகவும் ஆபத்தானது.


இப்படி அல்லாது சமுதாய நோக்கே தனது நோக்காக கொண்டுள்ள நபர்களே தலைமை தாங்கும் தகுதியுடையவராகின்றனர். அவர்க்கென ஒரு தனி நோக்கும் அதற்கான தேவையும் அவர்களுக்கு இருக்காது.இதற்கு உதாரணமாக ராணுவத்தை எடுத்துக் கொள்ளலாம். அவர்களுக்கு தனி நோக்கு கிடையாது. வெறும் சமுதாய நோக்கு மட்டும் தான். அதே போல் சில தலைவர்கள் தங்களது குடும்பத்தினை கருதாது பொதுநோக்கு மட்டும் கருதியே வாழ்ந்துள்ளனர், வாழ்கின்றனர். சிலர் தமது வெற்றியை, நோக்கை, சமுதாயத்திற்கே அர்ப்பணிக்கும் வகையில் பெரிதாய்க் கொள்கின்றனர். நமது முன்னாள் ஜனாதிபதி திரு. அப்துல் கலாம் அவர்களை இதற்கு உதாரணமாய்க் காட்டலாம்.




சில நேரங்களில் சமுதாய நோக்கினை மட்டுமே தமது நோக்காக கொண்டிருக்கும் தலைவர்கள் தமக்குப் பிடித்திருந்தாலுமஅவர்களை அப்படியே தொடராமல் , தமது சிந்தனையால் அந்த நோக்கினை மேலும் சிறப்பாக்கி தனக்கென தனி வழி கொண்டவர்களும் உண்டு. பெரியார் - அண்ணா மற்றும் காந்தி - நேதாஜி போன்றொரை இதற்கு எடுத்துக் காட்டாய்ச் சொல்லலாம்.

எனவே தெளிவான சிந்தனை கொண்டவர்களே தொடர்தலில் சிறப்பான முடிவெடுக்க முடியும்.


தெளிவான சிந்தனை தனி மனித வெற்றிகளுக்கு மட்டுமன்றி சமுதாயத்தின் சிறப்பான வெற்றிகளுக்கும் மிக முக்கியமானதாகிறது.


இன்னமும் பேசுவோம், சிந்திப்போம்.


அன்பன்

வேதாந்தி.

Thursday, September 2, 2010

அனைத்திற்கும் ஆசைப்படலாமா?

2.9.10

அனைத்திற்கும் ஆசைப்படலாமா?










அனைத்திற்கும் ஆசைப்படலாமா? அனைத்தையும் ரசிக்கலாம் ஆனால் அனைத்திற்கும் ஆசைப்படலாமா?


இது வரை நாம் கண்டது போக இப்போது நாம் பார்க்கப்போவது வெற்றியின் அல்லது வெற்றி என்ற உணர்வின் மற்றொரு காரணி. அது நமது நோக்கம் அல்லது குறிக்கோள் (goal) ஆகும். நமது குறிக்கோள் என்பது நமது ஆசை எனவும் கொள்ளலாம். பொதுவாக மனிதனின் குறிக்கோள் என்பது தனது ஆசைகளை பூர்த்தி செய்துகொள்வதுதான்.


நாம் நமது நோக்கம் அல்லது குறிக்கோள் அல்லது ஆசைகளை பூர்த்தி செய்து கொள்ளும் போது நமக்கு வெற்றி பெற்ற உணர்வு கிடைக்கிறது. அல்லது ஏமாற்றமே மிஞ்சுகிறது. இந்த உணர்வுகள் மிக முக்கியமானவைகள். தொடர்ந்த ஏமாற்றங்கள் ஒருவனது ஆளுமைத்தண்மையை பாதிப்பிற்குள்ளாக்கும்.


இன்னொரு செய்தி. நமது acheivements and aspirations சரியான நிலையில் இருக்கவேண்டும். Aspirations  ability  ஐ விட அதிகமான நிலையில் இருந்தால் achievements level குறைந்து விடும். அதாவது நமது ஆசையின் எல்லை நமது திறமை (அ) தகுதிக்கு மேல் இருந்தால் நம்மால் அதனை நிறைவேற்றிக் கொள்ள முடியாது. இது தோல்வி மனப்பான்மையை உருவாக்கி விடும். Aspirations achievements level ஐ விட குறைவாக இருந்தாலும் frustrations அதிகமாகிவிடும். எனவே ability – aspirations – achievements ஆகியன ஒன்றிர்க்கொன்று சம நிலையில் இருக்கவேண்டும்.









இப்போது நான் முன்னே சொன்னவைகளை நினைவு கூறுங்கள். அனவரும் அனைத்திற்கும் ஆசைப்படுவது சரியாகுமா? Ability க்குத் தகுந்த aspirations இல்லாவிட்டால் அது imbalance ல் முடியும். அது ஆரொக்கியமான மன நிலைக்கு உகந்ததல்ல. ஆனால் அனைவரும் அனைத்தையும் ரசிக்க வேண்டும். இது சரியான மனநிலை. சரியான goal setting இருந்தால் தான் ஒருவன் வெற்றியைத் தேடமுடியும். அனைத்திற்கும் ஆசைப்பட்டால் failures and frustrations தவிர்க்க முடியாததாகிவிடும்.


அது சரி அப்போது அனைத்திற்கும் ஆசைப்படுவது எப்போது சரி, யாருக்கு சரி?


அனைத்திற்கும் ஆசைப்படுவது ஒரு corporate mentality . Corporate aspirations. ஒரு corporate தனது aspirations – அதாவது goal ஐ அடைய வேண்டுமானால், தனது corporate elements ஆன individuals அனைவரையும் தன் level க்கு கொண்டு போய் முறுக்கிப் பிழிந்து தனது goal ஐ நிறைவேற்றிக் கொள்ளவேண்டும்.இதை முன்னிட்டுத்தான் ஒவ்வொரு MBA க்களும் தயார் படுத்தப் படுகிறர்கள்.


தயை செய்து இங்கு கவனியுங்கள். Corporate கள் தனி மனிதனின் நிலைப்பாடுகளிலோ அல்லது தனி மனிதனின் மனநிலை வித்தியாசங்களையோ பொருட்படுத்துவதில்லை.அவனது மகிழ்ச்சியைக்கூட கண்டு கொள்வதில்லை. தனி மனிதனின் வெற்றி உணர்வுகளைக் கூட மதிப்பதில்லை. எனவே தான் அங்கு team spirit, or team sense ஐ மிகவும் வற்புறுத்துகின்றனர்.


ஆக ஒரு தனி மனிதனின் நோக்கும்( individual goal ), ஒரு குழுமத்தின் நோக்கும் ( corporate goal ), இதற்கும் மேல் ஒரு சமுதாயத்தின் நோக்கும் (community goal) வித்தியாசப் படுகின்றன. சமுதாயத்தின் நோக்குகளை நிறைவேற்றவும் சில MBA ட்ரிக்குகள் உண்டு. நினைத்துப் பாருங்கள். ஒருவன் ஊருக்குளே துப்பாக்கியைத் தூக்கினால் கொலைகாரன். அதையே ஒரு நாட்டின் எல்லையில் தூக்கினால் அவன் தியாகி. இது community goal ஐ reinforce செய்யும் ஒரு தந்திரம்.


நாம் இதையெல்லாம் தவிர்த்து தனிமனிதனின் நோக்கு,  தனிமனிதனின் சிறந்த நிலைப்பாட்டிற்கான வழிகள் ஆகியவை குறித்துத் தான் பேசப் போகிறோம். Corporate goal, community goal ஆகியவைகளில் சிக்காமல் இருந்தால் தான் நமது சூழலையும் அதைத் தொடர்ந்து வெற்றியையும் ஆளமுடியும்.



இதில் வரையரை செய்தவைகள்: aspirations, setting goal and achievements and their importance in well being of an individual.

மீண்டும் பேசுவோம்.

வேதாந்தி.

Thursday, August 26, 2010

வெற்றிகளும் தோல்விகளும்

26.8.10


வெற்றிகளும் தோல்விகளும்.










வெற்றிகளும் தோல்விகளும் சில காலத்திற்கே மனதில் அதற்கேற்ற உணர்வுகளைத் தோற்றுவிக்கும். அதற்குப் பிறகு… அமைதிதான். இதற்கு அப்போது சுரக்கும் சில உடற்கூறு ரசாயணங்களே இந்த மகிழ்ச்சி/துக்கம் ஆகிய உணர்வுகளுக்குக் காரணம் என்கிறது அறிவியல்.

ஒரு வகையில் வெற்றிகளும் தொல்விகளும் பெரும்பாலும் வெறும் சூழல் மாற்றங்களை மட்டுமே நமக்கு அளிக்கிறது. இந்த சூழல் மாற்றங்கள் நமது பார்வைக்கேற்ப நமக்கு வெற்றி பெற்ற அல்லது தொல்வியடைந்த உணர்வுகளை நம்முள் தோற்றுவிக்கிறது.


உதாரணத்திற்கு ஒரு மாணவன் பள்ளியிறுதி வகுப்பில் தேற்சி பெறுவதை எடுத்துக்கொள்வோம். இங்கு மூன்று சூழல்களை ஆராய்வோம்.


முதல் சூழல்:

தேற்சிபெற்ற மாணவன் அதிக மதிப்பெண் பெற்று தேற்சி பெற்றுள்ளான். அவனுக்கு அதிக மகிழ்ச்சி. அவனது நோக்கம் IIT இல் சேருவது. அவனது நோக்கம் நிறைவேறுகிறது. அவன் அதிக மதிப்பெண் பெற்ற மகிழ்ச்சி சில காலம் அவனுள் இருந்து பின் மறைகிறது. அதற்குப் பின் தொடரும் அவனது வாழ்வில் அவனது மதிப்பெண்கள் இடம் பெறுகிறதில்லை.


இரண்டாம் சூழல்:

தேற்சிபெற்ற மாணவன் சராசரி மதிப்பெண் பெற்று தேற்சி பெற்றுள்ளான். அவனுக்கு சற்றே ஏக்கம். மற்றபடி எதுவும் இல்லை. அவனும் ஒரு பொறியியல் பாடமோ அல்லது அறிவியல் பாடமோ எடுத்து தன் முயற்சியை தொடருகிறான். அதற்குப் பின் தொடரும் அவனது வாழ்விலும் அவனது மதிப்பெண்கள் இடம் பெறுகிறதில்லை.


மூன்றாம் சூழல்:

மாணவன் தேற்சியுறவில்லை. மனம் ஒடிந்து துக்கிக்கிறான். அவனுக்கு இரண்டு வழிகள்தான் உண்டு. ஒன்று படிப்பைத்தொடருவது. மற்றொன்று ஏதேனும் வேலையைத்தேடுவது இங்கும் அவன் ஓரு முடிவெடுத்து தன் வாழ்வைத் தொடர்ந்தபின் அவனது மதிப்பெண்கள் முக்கியத்துவம் பெறுகிறதில்லை.


மேற்சொன்ன எடுத்துக் காட்டுகளில் வென்றவர் யார்? தோற்றவர் யார்?









வென்றவரும இல்லை தோற்றவரும் இல்லை. மூன்று உதாரணங்களிலும் சூழல் மட்டுமே மாறியுள்ளது.



ஆங்கிலத்தில் ஒன்று சொல்வார்கள். ‘one who  has the last laugh wins’ இதில் சொல்லியுள்ள ‘last’ என்பது எப்போது? இதுவும் ஆட்களைப் பொறுத்து மற்றும் சூழலைப் பொறுத்து.


எனவே வெற்றியென்பதும் தொல்வியென்பதும் வெறும் சூழல் மாற்றம் தான் எனக்கொள்ளலாமா?


இன்னமும் தெளிவில்லையா?


சரி. மேற்சொன்ன எடுத்துக்காட்டுக்களை சற்று நீட்டிக்கிறேன்.



IIT யில் சேர்ந்த மாணவன் தனது இரண்டாம் செமஸ்டரில் மதிப்பெண் சற்றுக் குறைந்துவிட்டதென விடுதி அறையில் தூக்கிலிட்டுக் கொண்டான். ஆனால் சரியான நேரத்தில் அவனது அறைத் தோழன் பார்த்து விட்டதால் அவனை உயிர் பிழைக்க வைத்தனர். உயிர் பிழைத்தானே தவிர அவனது மனநிலை பிறழ்ந்து போனது.


அறிவியல் பாடம் எடுத்த மாணவன் முதுகலைப் பட்டம் பெறுகிறவரையில் சராசரி மாணவனாகவே இருந்தான். ஆனாலும் அலட்டிக்கொள்ளவில்லை. முனைவர் பட்டமும் பெற்று வெளிநாட்டில் ஆசிரியராய் வேலை பார்க்கும் வாய்ப்பைப் பெற்றான்.


பள்ளியிறுதித் தேர்வில் தொல்வியுற்ற மாணவன் தனக்கிருந்த மொழித்திறனை பலப்படுத்தி மேலும் சில கிழக்காசிய மொழிகளைப் பயின்று ஒரு மொழிபெயர்ப்பாளனாய் வளர்ந்து பல மேலிட தொடர்புகளைப் பெற்று தனக்கென ஒரு இடத்தினைப் பிடித்துக்கொண்டு out sourcing business லும் வளர்ந்தான்.

இப்போது சொல்லுங்கள் வெற்றி பெற்றவர்கள் யார்?

சற்றுப் பொறுங்கள் இன்னும் கொஞ்சம் நீட்டிக்கிறேன்.

மனநிலை பிறழ்ந்தவனை பெற்றோர்கள் கருத்தாய் கவனித்து அவனது எதிர்கால நலனை கருத்தில் கொண்டு ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்த ஒரு ஏழைப் பெண்ணை அவனுக்கு திருமணம் செய்துவைத்தனர். அந்தப் பெண்ணுக்கு அவனைப்பற்றியும் அவனது குடும்பத்தைப் பற்றியும் ஏற்கனவே தெரியுமாதலால் அவன் மீது பாசத்தைப் பொழிந்து குடும்ப உறவினை வளர்த்தாள். அவளது பாசத்தால் மிக மோசமாக இருந்த அவனது நிலை சற்று நிலை கொண்டது. தம்பதியர் அருமையான பிள்ளைகள் இரண்டு பெற்றுக்கொண்டனர்.

வெளிநாட்டில் ஆசிரியர் வேலை பார்த்தவன் அந்தப் பல்கலைக் கழகத்தில் திடீரென நடந்த ஒரு துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டு கோமா நிலைக்குப் போய் அதே நிலையிலேயே தன் தாய் நாடு கொணரப்பட்டு மருத்துவ பராமரிப்பில் உள்ளான். எப்போது வேண்டுமானாலும் விழிக்கலாம் விழிக்காமலும் போகலாம்.


Out sourcing business ல் வளர்ந்தவன் ஒரு பெருந்தனக்காரரை கவர அவர் அவனது திறமையைக் கண்டு மெச்சி தன் ஒரே பெண்ணை மணமுடித்துக் கொடுத்தார். மணமுடித்த ஒரு வருடத்திலேயே தன் கணவன் ஆண்மையற்றவன் என்ற முறையீட்டில் விவாகரத்துக் கோரி அந்தப் பெண் வழக்குத் தொடுக்க இவன் மனமொடிந்து குடிப்பழக்கத்திற்கு ஆளாகி தன் தொழிலையும் கவனிக்க முடியாது போய் பெரும் பொருளிழப்பிற்கு ஆளானான். மீண்டும் மீள வழியறியாது தவிக்கிறான்.


என்ன. குழப்பமாய் இருக்கிறதா?

வகுப்பறை வாத்தியாரின் - சுப்பைய்யா வாத்தியார் - வலைப்பதிவைப் படிப்பவர்களுக்கு அவரது பதிவில் வந்த குதிரைக் கதை நினைவுக்கு வரும். நான் மேலே சொன்னவைகள் நிகழ்வுகள். பதிவு நோக்கு கருதி அதன் உயிர் சிதையாமல் மட்டும் கொடுத்துள்ளேன்.



மேற்சொன்னவைகளின்படி பார்த்தால் ‘last laugh’ ல் உள்ள ‘last’ என்பது வாழ்க்கையின் இறுதி என்றுதானே ஆகிறது? ஆக முழு வாழ்க்கைதான் ஒரு game. இதன்படி நம் வாழ்வின் இறுதிவரை நமக்கு கிடைப்பது சூழல் மாற்றங்கள் மட்டுமேயல்லாது வேறு ஒன்றுமல்ல எனக் கொள்ளலாமா?



இந்த சூழல் மாற்றங்களைப் பற்றியும் அதனை நாம் முற்போக்காக கையாளுவது பற்றியும் அடுத்த பதிவில். இந்தப் பதிவிற்கும் முந்தைய பதிவிற்கும் உள்ள தொடர்பு பற்றியும் அடுத்த பதிவில் பேசுவோம்.



உங்கள் எண்ணம் என்ன? பின்னூட்டமிடுங்கள்.



அன்பன்

வெட்டிப்பேச்சு வேதாந்தி.
Related Posts Plugin for WordPress, Blogger...