Followers

Friday, August 14, 2015

தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி IX


14.8.15

தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி IX

7. தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி VII
8. தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி VIII

 

நண்பர் சொன்னதைக் கேட்ட எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

இத்தனை சிக்கலானதாகவா இருக்கும்? இவர்கள் ஏதோ பழக்கப்பட்ட கொள்ளையர்களைப் போலல்லவா நடந்திருக்கிறார்கள். சொத்தை அபகரிப்பதில் மிகத் தேர்ந்த விற்பன்னர்களாய் இருந்திருக்கிறார்கள் எனப் புரிந்தது.

நண்பர் தொடர்ந்தார்.

“எனக்கு முதலில் இது தோன்றவில்லை. நான் இதை எதிர்ப்பார்க்காததில் ஆச்சரியமும் இல்லை.

போலிப்பத்திரப் பதிவை ரத்து செய்யும் வரை AIG அலுவலகத்திற்கு விடாமல் நடந்தேன். அதற்குப்பின்னர் அந்த ரத்து செய்ததை அண்ணாநகர் சார்பதிவாளர் தனது பதிவேட்டில் பதியும் வரை நடந்தேன். பின்னர் AIG யின் ஆணையில் கேட்டிருந்தபடி இந்த போலிப்பத்திரப்பதிவில் சம்பந்தப் பட்டவர்கள் மீது FIR பதிந்து நடவடிக்கை எடுக்கும்படி அண்ணாநகர் சார் பதிவாளர் அண்ணாநகர் காவல் நிலைய ஆய்வாளருக்கு ஒரு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்து அந்தக் கடிதம் அண்ணாநகர் காவல் ஆய்வாளரை சென்றடையும் வரை சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நடந்தேன்.

ஏற்கனவே நாங்கள் நில அபகரிப்பு தடுப்புப் பிரிவில் கொடுத்திருந்த புகார் மனுவின் மீது காவல் நிலையத்தில் கட்சிக்காரன் மீது FIR பதியப்பட்டு விட்டதால் சார் பதிவாளரின் கடிதத்தை ஒரு கூடுதல் ஆவணமாக காவல் நிலையத்தில் எடுத்துக் கொண்டனர்.

எல்லாம் முடிந்தது.

இதில் என்ன ஓர் ஆச்சர்யமென்றால் கட்சிக்காரன் தனது பத்திரத்தை ரத்து செய்தது தவறான செயல் என்று மனு ஒன்று AIG க்கு கொடுத்திருந்தான். அதன் மீது மறு விசாரணை செய்ய எங்களுக்கு ஒரு அறிவிக்கை அனுப்ப AIG யத்தனிக்கையில் யாரோ ஒரு தி மு க வினர் அரசு அறிவித்திருக்கும் இந்த நடவடிக்கைகள் சட்டப்படி செல்லாது என வழக்குத் தொடுத்துவிட்டிருந்தனர். அந்தச் சமயத்தில் பெரும்பாலான தி மு க வினர் மீது - ஸ்டாலின் உள்பட -  இந்த நில அபகரிப்பு குற்றச்சாட்டு எழுந்திருந்தது.

எங்களது போலிப்பத்திரப்பதிவு ரத்து செய்யும்படிக்கான ஆணை எனது முயற்சியால் தாமதமின்றி வந்து அதன் செயலாக்கமும் தாமதமின்றி முடிந்து விட்டதால் நாங்கள் தப்பினோம்.

எங்களது போலிப்பத்திரம் ரத்து செய்யப்பட்டு FIR பதியப்பட்ட ஒரு வாரத்திலேயே தி மு க வினர் போட்ட வழக்கின் தீர்ப்பு வந்து அதன்படி நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு கலைக்கப் பட்டது மட்டுமல்லாது AIG க்கு கொடுக்கப்பட்ட போலிப்பத்திரங்களை ரத்து செய்யும்  உரிமையும் திரும்பப் பெறப்பட்டது.

எங்கள் புகாரின் மீது நில அபகரிப்பு தடுப்புப் பிரிவினரால் வழக்கு பதியப்படாமல் அண்ணாநகர் காவல் நிலையத்தில் FIR பதியப்பட்டதால் எங்களுக்கு இந்த மாற்றங்களினால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை.

இவ்வளவும் நடந்தபிறகு கட்சிக்காரன் பதுங்கு குழியில் சென்றடங்கியதைப் போல சத்தமில்லாமல் பம்மிக் கொண்டான்.

சற்று ஓய்வு கிடைத்ததும் நடந்த நிகழ்வுகளை வரிசைப்படுத்திப்  பார்த்தேன். எங்காவது எதையாவது விட்டு விட்டோமா அல்லது ஏதேனும் செய்ய வேண்டியவைகள் இன்னமும் பாக்கி இருக்கின்றனவா என்று யோசித்தேன்.

இந்த முயற்சியின் போதுதான் மறுபடியும் எல்லா ஆவணங்களையும் பரிசீலிக்க நேர்ந்தது. கட்சிக்காரன் விற்பனையாளரிடமிருந்து தனது மனைவி பெயரிலும் தனது தகப்பன் பெயரிலும் வாங்கியிருந்த மூண்றாம் தளம் மற்றும் இரண்டாம் தளத்திலிருந்த வீடுகளை மாநகராட்சி ஆணையரிடமிருந்து கட்டிடங்களின் அத்து மீறல் குறித்து தனக்கு அறிவிக்கை வந்தவுடனேயே விற்றிருந்தான் அல்லவா? அந்த விற்பனை ஆவண நகல்களையும் அண்ணாநகர் சார் பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்து பெற்றேன்.

எல்லா ஆவணங்களையும் கூர்ந்து ஆராய்ந்த போதுதான் அந்த வெடிகுண்டு கண்ணுக்குத் தெரிந்தது.

கட்சிக்காரனது மனைவியும் தகப்பனும் தங்கள் பெயரிலிருந்த வீடுகளை அப்படியே மற்றவர்களுக்கு விற்கவில்லை. மாறாக அந்த சொத்துக்களை செட்டில்மெண்ட் மூலமாக முதலில் கட்சிக்காரனுக்கு எழுதிவைத்து அதற்குப் பிறகு அவைகளை அவன் மூண்றாம் நபருக்கு விற்றிருக்கிறான்.

முதலில் இந்த தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் வேலையில் இருக்கும் சூட்சுமம் எனக்கு விளங்கவில்லை. பத்திரங்களை மறுபடி பார்த்த பிறகுதான் தெரிந்தது. அவனது மனைவியும் தந்தையும் கட்சிக்காரனுக்கு செட்டில் மெண்ட் செய்த கொடுத்த சொத்தில் ஆரம்ப விற்பனையாளர் அதாவது PROMOTER என்னவெல்லாம் உரிமைகளை அவர்களுக்கு கொடுத்திருந்தாரோ அவைகள் அத்தனையையும் கட்சிக்காரனுக்கு கொடுத்திருந்தனர். அதாவது வீட்டைச் சுற்றியுள்ள 4 அடிகள் பொதுவில் சேர்க்காமல் விட்டது மற்றும் பொது இடத்தில் தனி கார் பார்க் ஆகியவைகள் அப்படியே அவனுக்கு டிரான்ஸ்பர் ஆகியிருந்தன. ஆனால் கட்சிக்காரன் மறுபடி அவைகளை மூண்றாம் நபருக்கு விற்பனை செய்த ஆவணத்தில் இந்த கார் பார்க் அவருக்கு டிரான்ஸ்பர் ஆகவில்லை.

ஆக, தற்போதைய நிலையில் பார்த்தால் கட்சிக்காரனுக்கு தரைதளத்தில் உள்ள குடியிருப்பும், அதைச் சுற்றியுள்ள பொது இடத்தில் குறிப்பிடப்படாத 4 அடிகளும், தரை தள வீட்டிற்கு ஒரு கார் பார்க் கூடவே தனது மனைவி மற்றும் தந்தையின் மூலமாக தனக்கு செட்டில்மெண்ட் ஆனபிறகு தன்னிடமிருந்து போகாத மேலும் இரண்டு கார் பார்க்குகள், ஆக மூண்று கார் பார்க்குகள் ஆவணப்படி அவனது உரிமையில்  இருந்தது.

இவைகள் ஏறக்குறைய அவனது தரைதள வீட்டை ஒட்டியுள்ள காலியான பொது இடத்தில் அவனுக்கு முழுச் சுதந்திரத்தையும் கொடுத்தது. ஏனெனில் இவனது வீட்டையும் அடுத்து சாலையையும் ஒட்டி இருந்த குடியிருப்பின் பொது இடமான அந்த இடம்தான் கார் பார்க் இடமாக PROMOTER ஆல் குறிப்பிடப்பட்டு எழுதிக் கொடுக்கப்பட்டது. அந்த இடத்தைத்தான் தனது சொந்த இடமாக வளைத்துப் போட்டு கட்டியிருந்தான். அந்த இடத்தையும் சேர்த்துத்தான் 800 சதுர அடிகள் போலிப்பத்திரம் தயார் செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்டது.

இவைகள் எல்லாவற்றையும் முறியடித்திருந்தாலும் இப்போது கார் பார்க் வடிவத்தில் கட்சிக்காரனுக்கு உரிமைகள் வந்து சேர்ந்திருந்தன.

கட்சிக்காரன் விற்பனையாளரிடமிருந்து கார் நிறுத்துமிடத்தை எழுதி வாங்கியது மிகப்பெரிய உள்நோக்குடன் என்பது மிகுந்த யோசனைக்குப் பிறகுதான் தெளிவானது.

இந்த கார் பார்க் விவகாரம் போர் நின்றபிறகும் அகற்றப்படாத கண்ணி வெடிகளைப்போல பதித்துவைக்கப்பட்டிருந்தது நாங்கள் யாருமே எதிர் பாராததுதான்.

 
 
அதிர்ச்சி, சோகம், வெறுப்பு, இயலாமை என எல்லா உணர்வுகளும் என்னைக் கலவையாகத் தாக்க நான் சோர்ந்து போனேன். அதற்குப் பின்னர் நான் மற்றவர்களிடம் பேசுவதையே குறைத்துக் கொண்டேன்.

எவ்வளவுதான் போராடுவது?

நான் பேச்சற்றுப் போன நிலையில் என் நிலையைப் புரிந்து கொண்டு என்னுடன் இருந்தவர்கள் எனக்கு ஊக்கமளிக்கும் வகையில் பேசினார்கள்.

‘விடுங்க சார். இவ்வளவு காரியம் பண்ணியிருக்கீங்க. இதற்கும் மேலே நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் மட்டும் மனமுடைந்து போகவேண்டாம் அது போதும். இந்த சொத்தே கிடைக்காமற் போனாலும் பரவாயில்லை. உங்கள் உடல் நலனை பார்த்துக் கொள்ளுங்கள்.’ என்று சொல்லி அவர்களாகவே பத்திரங்களை எடுத்துக் கொண்டு விசாரிக்க ஆரம்பித்தனர்.

அப்படித்தான் ஒரு வழக்கறிஞரைப் பார்த்தோம்.

அந்த வழக்கறிஞர், ‘PROMOTER கார் பார்க்கை விற்றிருக்கிறார். கட்சிக்காரன் வாங்கியிருக்கிறான். இதில் வழக்கு எங்கே இருக்கிறது? அவன் விற்றது செல்லாது எனச் சொல்ல முடியாது. அது மட்டுமல்ல இந்த வழக்கைத் தொடுத்தோமானால் சொத்து மதிப்பிற்கு ஈடாக வழக்கு செலவாகவே 80 லட்சங்களுக்கு மேல் நீதி மண்றத்தில் கட்டவேண்டியிருக்குமே..அது உங்களால் முடியுமா? மேலும் இந்த டிரான்சாக்சனை சேலஞ்ச் செய்யறது கஷ்டமும் கூட..’ என்று அவர் சொல்லச் சொல்ல என்னுடன் இருந்தவர்களுக்கு அப்போதுதான் நிலைமையின் விபரீதம் புரிந்தது. உறைந்து போயினர்.

வழக்கறிஞரைப் பார்த்துவிட்டு வரும்போது எல்லோரும் என்னையே பார்த்தனர். அவர்களது பார்வையில் ‘நான் ஏதாவது யோசனை வைத்திருப்பேன் என்ற எதிர்பார்ப்பு நிறையவே தெரிந்தது.

 
 
நான் வழியிலிருந்த அந்தோனியார் கோவிலின் கோபுரத்தைப் பார்த்தேன். ஆண்டவர் எனக்காக ஏதேனும் அற்புதம் செய்ய மாட்டாரா எனும் எதிர்பார்ப்பு என்னுள் எழுந்து நிரம்பியது.

என் எதிர்பார்ப்பு வீணாகவில்லை. ஆண்டவர் என்னைக் கை விடவில்லை. இந்த எளியவனுக்கும் அற்புதம் ஒன்றைச் செய்தார்”

நண்பர் இத்துனை ஆபத்துக்களையும் எதிர்பாராமல் எதிர் கொள்ளவேண்டியிருந்ததை எண்ணி ஆச்சரியப்பட்டேன்.

நண்பர் தொடர்ந்த பேச்சில் சுவராசியத்தோடு ஆச்சரியமும் கூடியது.

நண்பர் தொடர்ந்தது அடுத்த பதிவில்.

பதிவைத் தொடர: தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி X

அன்பன்,

வேதாந்தி.

 

 

2 comments:

 1. நீண்ட நெடிய சட்டப் போராட்டம்,நண்பரின் மன உறுதி பாராட்டத் தக்கது :)

  ReplyDelete
 2. நண்பரின் திடம் மற்றும் சராசரி மனிதனை போல் விரக்தி, கடவுள் நம்பிக்கை, நம்மில் பலருள் ஒரு தைரியம் உண்டு பண்ண கூடியவை.

  நண்பரின் போராட்டத்தை நன்றாக தொகுத்துள்ளீர்கள்.

  நன்றி.

  தொடர்கிரேன்

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...