Followers

Monday, August 30, 2010

வரம் சாபமானது எப்படி..? சாபம் வரமானது எப்படி? பகுதி - 1

30.8.10

வரம் சாபமானது எப்படி..? சாபம் வரமானது எப்படி?மனிதன் கல்லைத் தீட்டியபோதல்ல…தீட்டிய கல்லுடன் பதுங்கிய போதுதான் மிகச்சிறந்த ஓர் ஆயுதத்தினை உபயோகிக்க கற்றுக்கொண்டான். அதுதான் அறிவுஎன்னும் ஆயுதம். கல்லுடன் பதுங்கியது தனது எதிரியான விலங்கினை வெல்வதற்காக அவன் போட்ட முதல் strategy.


நான் முந்தைய பதிவில்(வரமும் சாபமும். சுட்டி: வரமும் சாபமும் ) குறிப்பிட்டிருந்ததை கவனிக்க. அதில் வரமெல்லாம் வரமல்ல என்றும் சாபமெல்லாம் சாபமல்ல என்றும் காட்டியிருந்தேன். தற்கால சூழலுக்கு இந்தக் கதை பொருந்துமா என்பது பலரின் சந்தேகம்..சரியான வகையில் பயன் படுத்தும் போதுதான் ஆயுதமோ அல்லது அறிவோ நமக்கு பயனுள்ளதாக இருக்கிறது. இப்போது நான் மற்றொரு பதிவில் (வெற்றிகளும் தோல்விகளும். சுட்டி:  வெற்றிகளும் தோல்விகளும்) சொல்லியிருப்பதையும் நினைவில் கொள்க. இந்தப் பதிவில் வெற்றிகளும் தோல்விகளும் மனதில் உணரப்படும் ரசாயணமாற்றங்களைத் தவிர்த்துப் பார்த்தால் வெறும் சூழல் மாற்றங்களே என்று காட்டியிருந்தேன். இன்னமும் சரியாகச் சொல்லப்போனால் சூழல்கள் நமக்கு ‘சாதகமாக’ இருந்தால் நாம் வெற்றி பெற்ற உணர்வை அடைகிறோம். அல்லவென்றல் அதற்கு மாறான உணர்வு மேலோங்குகிறது. இங்கு சாதகமானதென்பது, தான் விரும்பியபடி அல்லது தான் எதிர் பார்த்தபடி எனக்கொள்ளலாம் அல்லவா?


இப்போது நான் சொன்னவைகளை வைத்து ‘சூழல் அல்லது சூழலின் காரணிகளை’ தன் அறிவைக் கொண்டு ஆள்வது தான் வெற்றியை தன் வசப்படுத்திக் கொள்ளும் மந்திரம் எனக் கொள்ளலாமா?


இது மிகப் பிரபலமான SWOT analyais போலத் தோன்றினாலும் சற்றே மாறுபட்டது.


இதுவரை நான் வரையறுத்தது: சூழல், சூழல் மாற்றம், சாதகமான சூழல் மாற்றம் வெற்றி பெற்ற உணர்வையும் பாதகமான சூழல் மாற்றம் தோல்வி பெற்ற உணர்வையும் அளிக்கிறது. வெற்றியும் தோல்வியும் உணர்வுகளே. உணர்வுகளைத்தவிர்த்து அவைகள் வெறும் சூழல் மாற்றங்களே என்பவைகளாகும்.


திசை மாறாமல் பேசுவோம். பேசித்தேடுவோம்.
கவனமாகக் கையாளவேண்டியிருப்பதால், நிதானமாய், சிறுகச் சிறுக பேசுவோம்.அன்புடன்

வேதாந்தி.

Friday, August 27, 2010

தின்னுத் திமிரெடுத்தவனை காலம் பின்னிப் பெடலெடுக்கும் கண்ணு…

27.8.10
தின்னுத் திமிரெடுத்தவனை காலம் பின்னிப் பெடலெடுக்கும் கண்ணு…


அய்யா நான் சாதாரனமானவனுங்கோ… எனக்கு உங்க சாமி என்ன வெச்சிருக்குதுங்கோ….

(..ச்சும்மா… ஒரு இதுக்கு வலைப்பதிவிலே வலம் வரும் தமிழ் ஸ்லேங்கை கொஞ்சம் கையாண்டேன்…)இன்றைக்கு நாம் ஏன் ஒரு நெறியை கடைப்பிடிக்க வேண்டுமென்று பேசப்போகிறேன். இன்று தொலைக்காட்ச்சியிலும், நாளிதழ்களிலும் நான் கண்ட சத்யம் கம்ப்யூட்டர் ராமலிங்க ராஜு வின் புகைப்படங்கள் தான் இந்தப்பதிவினை எழுதத் தூண்டியது.

அதுமட்டுமல்ல. வெகு காலத்திற்கு முன் நடந்த மஸ்டர் ரோல் ஊழலும் நினைவுக்கு வந்தது. அந்த ஊழலில் சிக்கியவர்கள் வழக்கு முடியுமுன்னரே தங்கள் குடும்பங்களை இழ்நது பரிதவித்து உருக்குலைந்து சிதைந்த ஒவியமாய் நின்றது இன்னமும் என் கண் முன்னே நிற்கிறது.

எங்கள் காலத்தில் தமிழ் வகுப்பில் கற்றுக்கொள்கிற பாடங்கள் பொதுவாகவே நெறிப்படுத்துகின்ற பாடங்களாகத்தான் இருக்கும். நாலடியார், நன்னூல், நல்வழி, போன்றவைகள் எல்லா வாழ்வியல் நெறிகளையும் போதிக்கும். உதாரணமாய்வேதாளம் சேருமே வெள்ளெருக்கம் பூக்குமே

பாதாள மூலி படருமே -மூதேவி

சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே

மன்றோரம் சொன்னார் மனை.

நல்வழி (பாடல் - 23)


பலர் கூடி நீதியுரைக்கும் மன்றத்திலே ஒருவன் மனந்துணிந்து பொய்யுரைத்தானெனில் அவனது குடும்பமும் சுற்றமும் கூடி அழியும் என்கிறார் ஒளவையார்.

நான் இதை என் வாழ்நாளில் கண்கூடக் கண்டவன். நீதிமன்றத்திலே பொய்யுரைத்த ஒருவரின் குடும்பம் கண்ணெதிரே சிதைந்து சீர்குலைந்து போயிற்று. பெயர் சொல்ல ஒருவர் கூட மிஞ்சவில்லை. ஒரு பொய்க்கே இந்தக்கதியென்றால் மற்றதைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.


எனக்கு நான் சிறு வயதில் படித்த கதை ஒன்று நினைவுக்கு வருகிறது.

ஒரு எலி. மிகவும் சுதந்திரமாக இருந்த ஒரு எலி. சிதறிய தானியங்களை தின்று ருசி கண்ட அந்த எலி ஒருநாள் பேராசை கொண்டு தானியத்தை கொண்டிருந்த பானையின் துவாரம் வழியே உள்ளே சென்று மூக்கு முட்ட தானியத்தை உண்டு தீர்த்ததாம். உண்டபின் அது மிகவும் பருத்துவிட்டதால் அது சென்ற துவாரத்தின் வழியே அதனால் திரும்பி வெளிவர முடியவில்லை. பிறகென்ன… அங்கேயே சிறைபட்டு முக்கி முனகி தன் சுதந்திரத்தை இழந்ததோடல்லாமல் சில மணி நேரத்திலேயே தன் உயிரையும் விட்டதாம்.


அதேதான். முதலில் ஒரு சாமானியன் கேட்ட கேள்விக்கு இப்போது பதில் கிடைத்திருக்குமே…

“அய்யா நான் சாதாரனமானவனுங்கோ… எனக்கு உங்க சாமி என்ன வெச்சிருக்குதுங்கோ….” என்ற கூவலுக்கு “உனக்கு நிம்மதி வெச்சிருக்குதுங்கோ..”ன்னு சொல்லலாமா?


இன்னுமொரு நிகழ்வு. எனது நண்பரது அலுவலகம் மிகவும் பிரபலமானது. அரசு அலுவலகம் தான். பணம் விளையாடக்கூடிய ஒரு இடம். ஆனாலும் புகார்கள் இல்லை. காரணம் பயணீட்டாளர்கள் தங்கள் தேவைக்கு அடிக்கடி அந்த அலுவலகத்தை நாடவேண்டியிருப்பதாலும் பணி சற்றே முடங்கினாலும் தங்களுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படும் என்பதாலும் யாரும் புகார் செய்வதில்லை. இப்படிப்பட்ட அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு ஸ்டெனோ. அலுவலகத்தின் உச்ச மேலதிகாரிக்கு ஸ்டெனோவாக பணிபுரியவெகு பிரயத்தனப்பட்டு இறுதியில் தன் ஆசை கைகூடவே மகிழ்ச்சியின் உச்சத்திற்கே போனார். பிறகென்ன.. ஒரே கொண்டாட்டம் தான். தலை கால் புரியவில்லை மனிதருக்கு. கண் மட்டும் தெரியுமா என்ன? பேராசை கண்ணை மறைத்துவிட்டது. இப்போது அய்ந்தாண்டு இறுதியில் மணிதர் விஜிலென்சின் பிடியில். ஒரு ஸ்டெனொவாக செயல்பட்டே மணிதர் மூண்று கோடிக்கு மேல் சொத்து சேர்த்து விட்டார். இப்போது கணக்கு காட்ட முடியாமல் விழி பிதுங்குகிறார்.முடிவென்னவாகும்..?

என்னவாகும்...
என்ன? எலி பானை கதை நினைவுக்கு வருகிறதா?

இதைத்தான் தலைப்பில் சொல்லியிருக்கிறேன்.


தின்னுத் திமிரெடுத்தவனை காலம் பின்னிப் பெடலெடுக்கும் கண்ணு…என்று.

இது மட்டுமல்ல. நான் முந்தய பதிவில் எழுதிய வரமும் சாபமும் இந்த பதிவிற்கும் தொடர்புடையதாக இருக்கிறதா..?

இந்தப் பதிவு ஒரு break.. அடுத்த பதிவில் ஒரு சீரியசான ஒரு பேச்சு.அன்புடன்


வெட்டிப்பேச்சு வேதாந்தி.

Thursday, August 26, 2010

வெற்றிகளும் தோல்விகளும்

26.8.10


வெற்றிகளும் தோல்விகளும்.


வெற்றிகளும் தோல்விகளும் சில காலத்திற்கே மனதில் அதற்கேற்ற உணர்வுகளைத் தோற்றுவிக்கும். அதற்குப் பிறகு… அமைதிதான். இதற்கு அப்போது சுரக்கும் சில உடற்கூறு ரசாயணங்களே இந்த மகிழ்ச்சி/துக்கம் ஆகிய உணர்வுகளுக்குக் காரணம் என்கிறது அறிவியல்.

ஒரு வகையில் வெற்றிகளும் தொல்விகளும் பெரும்பாலும் வெறும் சூழல் மாற்றங்களை மட்டுமே நமக்கு அளிக்கிறது. இந்த சூழல் மாற்றங்கள் நமது பார்வைக்கேற்ப நமக்கு வெற்றி பெற்ற அல்லது தொல்வியடைந்த உணர்வுகளை நம்முள் தோற்றுவிக்கிறது.


உதாரணத்திற்கு ஒரு மாணவன் பள்ளியிறுதி வகுப்பில் தேற்சி பெறுவதை எடுத்துக்கொள்வோம். இங்கு மூன்று சூழல்களை ஆராய்வோம்.


முதல் சூழல்:

தேற்சிபெற்ற மாணவன் அதிக மதிப்பெண் பெற்று தேற்சி பெற்றுள்ளான். அவனுக்கு அதிக மகிழ்ச்சி. அவனது நோக்கம் IIT இல் சேருவது. அவனது நோக்கம் நிறைவேறுகிறது. அவன் அதிக மதிப்பெண் பெற்ற மகிழ்ச்சி சில காலம் அவனுள் இருந்து பின் மறைகிறது. அதற்குப் பின் தொடரும் அவனது வாழ்வில் அவனது மதிப்பெண்கள் இடம் பெறுகிறதில்லை.


இரண்டாம் சூழல்:

தேற்சிபெற்ற மாணவன் சராசரி மதிப்பெண் பெற்று தேற்சி பெற்றுள்ளான். அவனுக்கு சற்றே ஏக்கம். மற்றபடி எதுவும் இல்லை. அவனும் ஒரு பொறியியல் பாடமோ அல்லது அறிவியல் பாடமோ எடுத்து தன் முயற்சியை தொடருகிறான். அதற்குப் பின் தொடரும் அவனது வாழ்விலும் அவனது மதிப்பெண்கள் இடம் பெறுகிறதில்லை.


மூன்றாம் சூழல்:

மாணவன் தேற்சியுறவில்லை. மனம் ஒடிந்து துக்கிக்கிறான். அவனுக்கு இரண்டு வழிகள்தான் உண்டு. ஒன்று படிப்பைத்தொடருவது. மற்றொன்று ஏதேனும் வேலையைத்தேடுவது இங்கும் அவன் ஓரு முடிவெடுத்து தன் வாழ்வைத் தொடர்ந்தபின் அவனது மதிப்பெண்கள் முக்கியத்துவம் பெறுகிறதில்லை.


மேற்சொன்ன எடுத்துக் காட்டுகளில் வென்றவர் யார்? தோற்றவர் யார்?

வென்றவரும இல்லை தோற்றவரும் இல்லை. மூன்று உதாரணங்களிலும் சூழல் மட்டுமே மாறியுள்ளது.ஆங்கிலத்தில் ஒன்று சொல்வார்கள். ‘one who  has the last laugh wins’ இதில் சொல்லியுள்ள ‘last’ என்பது எப்போது? இதுவும் ஆட்களைப் பொறுத்து மற்றும் சூழலைப் பொறுத்து.


எனவே வெற்றியென்பதும் தொல்வியென்பதும் வெறும் சூழல் மாற்றம் தான் எனக்கொள்ளலாமா?


இன்னமும் தெளிவில்லையா?


சரி. மேற்சொன்ன எடுத்துக்காட்டுக்களை சற்று நீட்டிக்கிறேன்.IIT யில் சேர்ந்த மாணவன் தனது இரண்டாம் செமஸ்டரில் மதிப்பெண் சற்றுக் குறைந்துவிட்டதென விடுதி அறையில் தூக்கிலிட்டுக் கொண்டான். ஆனால் சரியான நேரத்தில் அவனது அறைத் தோழன் பார்த்து விட்டதால் அவனை உயிர் பிழைக்க வைத்தனர். உயிர் பிழைத்தானே தவிர அவனது மனநிலை பிறழ்ந்து போனது.


அறிவியல் பாடம் எடுத்த மாணவன் முதுகலைப் பட்டம் பெறுகிறவரையில் சராசரி மாணவனாகவே இருந்தான். ஆனாலும் அலட்டிக்கொள்ளவில்லை. முனைவர் பட்டமும் பெற்று வெளிநாட்டில் ஆசிரியராய் வேலை பார்க்கும் வாய்ப்பைப் பெற்றான்.


பள்ளியிறுதித் தேர்வில் தொல்வியுற்ற மாணவன் தனக்கிருந்த மொழித்திறனை பலப்படுத்தி மேலும் சில கிழக்காசிய மொழிகளைப் பயின்று ஒரு மொழிபெயர்ப்பாளனாய் வளர்ந்து பல மேலிட தொடர்புகளைப் பெற்று தனக்கென ஒரு இடத்தினைப் பிடித்துக்கொண்டு out sourcing business லும் வளர்ந்தான்.

இப்போது சொல்லுங்கள் வெற்றி பெற்றவர்கள் யார்?

சற்றுப் பொறுங்கள் இன்னும் கொஞ்சம் நீட்டிக்கிறேன்.

மனநிலை பிறழ்ந்தவனை பெற்றோர்கள் கருத்தாய் கவனித்து அவனது எதிர்கால நலனை கருத்தில் கொண்டு ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்த ஒரு ஏழைப் பெண்ணை அவனுக்கு திருமணம் செய்துவைத்தனர். அந்தப் பெண்ணுக்கு அவனைப்பற்றியும் அவனது குடும்பத்தைப் பற்றியும் ஏற்கனவே தெரியுமாதலால் அவன் மீது பாசத்தைப் பொழிந்து குடும்ப உறவினை வளர்த்தாள். அவளது பாசத்தால் மிக மோசமாக இருந்த அவனது நிலை சற்று நிலை கொண்டது. தம்பதியர் அருமையான பிள்ளைகள் இரண்டு பெற்றுக்கொண்டனர்.

வெளிநாட்டில் ஆசிரியர் வேலை பார்த்தவன் அந்தப் பல்கலைக் கழகத்தில் திடீரென நடந்த ஒரு துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டு கோமா நிலைக்குப் போய் அதே நிலையிலேயே தன் தாய் நாடு கொணரப்பட்டு மருத்துவ பராமரிப்பில் உள்ளான். எப்போது வேண்டுமானாலும் விழிக்கலாம் விழிக்காமலும் போகலாம்.


Out sourcing business ல் வளர்ந்தவன் ஒரு பெருந்தனக்காரரை கவர அவர் அவனது திறமையைக் கண்டு மெச்சி தன் ஒரே பெண்ணை மணமுடித்துக் கொடுத்தார். மணமுடித்த ஒரு வருடத்திலேயே தன் கணவன் ஆண்மையற்றவன் என்ற முறையீட்டில் விவாகரத்துக் கோரி அந்தப் பெண் வழக்குத் தொடுக்க இவன் மனமொடிந்து குடிப்பழக்கத்திற்கு ஆளாகி தன் தொழிலையும் கவனிக்க முடியாது போய் பெரும் பொருளிழப்பிற்கு ஆளானான். மீண்டும் மீள வழியறியாது தவிக்கிறான்.


என்ன. குழப்பமாய் இருக்கிறதா?

வகுப்பறை வாத்தியாரின் - சுப்பைய்யா வாத்தியார் - வலைப்பதிவைப் படிப்பவர்களுக்கு அவரது பதிவில் வந்த குதிரைக் கதை நினைவுக்கு வரும். நான் மேலே சொன்னவைகள் நிகழ்வுகள். பதிவு நோக்கு கருதி அதன் உயிர் சிதையாமல் மட்டும் கொடுத்துள்ளேன்.மேற்சொன்னவைகளின்படி பார்த்தால் ‘last laugh’ ல் உள்ள ‘last’ என்பது வாழ்க்கையின் இறுதி என்றுதானே ஆகிறது? ஆக முழு வாழ்க்கைதான் ஒரு game. இதன்படி நம் வாழ்வின் இறுதிவரை நமக்கு கிடைப்பது சூழல் மாற்றங்கள் மட்டுமேயல்லாது வேறு ஒன்றுமல்ல எனக் கொள்ளலாமா?இந்த சூழல் மாற்றங்களைப் பற்றியும் அதனை நாம் முற்போக்காக கையாளுவது பற்றியும் அடுத்த பதிவில். இந்தப் பதிவிற்கும் முந்தைய பதிவிற்கும் உள்ள தொடர்பு பற்றியும் அடுத்த பதிவில் பேசுவோம்.உங்கள் எண்ணம் என்ன? பின்னூட்டமிடுங்கள்.அன்பன்

வெட்டிப்பேச்சு வேதாந்தி.

Friday, August 20, 2010

வரமும் சாபமும்

வரமும் சாபமும்

வரமெல்லாம் வரமல்ல, சாபமெல்லாம் சாபமல்ல. என்ன குழப்புகிறேனா? இது குறித்துதான் இன்றைய பேச்சு.

உங்களுக்குத் தெரிந்த கதையைத்தான் சொல்லப் போகிறேன். இரண்டு கதைகள். இரண்டுமே புராணக் கதைகள்.

ஓர் அசுரன் சிவபெருமானை வேண்டி தவமிருந்து ஒரு வரம் பெற்றான். அது வேறு ஒன்றுமல்ல.  தான் யார் தலையில் கை வைத்தாலும் அவர் உட்னே எரிந்து சாம்பலாகி விடவேண்டுமென்பதுதான் அது.

தன் எதிரிகளை ஒழிக்க, தன் பலத்தைப் பெருக்கி எதிரிகளிடமிருந்து தன்னைக் காத்து தன் வாழ்நாளை நீட்டிக்க ஒரு வரம். வரத்தின் நோக்கம் இதுதான். . ஆனால் அது அவனுக்கு பயன் பட்டதா? அவனது புத்திக்கோளாறால் அவன் அந்த வரத்தைக் கொடுத்த சிவனிடமே அதை பரிட்சை செய்து பார்த்துவிட வேண்டி சிவனைத் துரத்த, கடைசியில் திருமால் சிவனைக் காத்திடும் பொருட்டு  அந்த அரக்கனைக் கவர்ந்த நாட்டிய மங்கையாகி அவனை நாட்டியப் போட்டிக்கு இழுக்க அவனும் சிவனைத் துரத்தும் வேலையை மறந்து நடன மங்கையிடம் தன் சாமர்த்தியத்தியத்தைக் காட்ட வேண்டி தானும் நடன மங்கையின் அபினயனங்களை பின் பற்ற முடிவில் தன் தலையில் தானே கையை வைத்து எரிந்து சாம்பலாகிப் போனான்.

இங்கு அவனுக்குக் கிடைத்த வரமே சாபமாகிப் போனது.

இன்னுமொரு கதை.

இந்திரன் ஒருமுறை ஒரு ரிஷி வம்ச கன்னிப்பெண்ணின் மீது ஆசை கொண்டு அவளைக் கூட முயற்சித்த போது அந்தப் பெண் ' கணவனல்லாத ஒருவனுடன் சல்லாபிக்க மாட்டேன்' என இந்திரனின் இச்சைக்கு உடன்பட மறுக்க, உடனே இந்திரன் அந்தப் பெண்ணை ' நீ விபசாரியாகி பொருளுக்கு உன் உடலை விற்கக் கடவது' என்று சபித்தானாம்.

அந்த ரிஷி மங்கையோ தன் புத்திசாலித்தனத்தால், இந்திரனின் சாபப்படி சல்லாபம் வேண்டி தன் வீட்டுக் கதவைத்தட்டும்  ஒவ்வொருவரிடமும், யார் ஒரு படி முத்தை விலையாகக் கொண்டு வருகின்றனரோ அவரே தன்னுடன் ஒரு இரவைக் கழிக்க இயலும் எனக்கூறி மறுத்துக் கொண்டே வந்தாராம். படி முத்தை விலையாகக் கொடுக்க யாராலும் முடியாததால் அந்த ரிஷிப் பெண் கன்னியாகவே இருந்தாராம். இறுதியில் தன் சாபம் பொய்த்துவிடக்கூடாதென்பதற்காக இந்திரனே ஒவ்வொரு இரவிலும் ஒரு படி முத்தைக் கொடுத்து சல்லாபித்து வந்தானாம். இந்திரன் கணக்குப்படி விலை பெற்றுச் சல்லாபித்ததால் அவள் விலை மாது. ஆனால் அந்த ரிஷிப் பெண்ணைப் பொருத்த மட்டில் இந்திரன் ஒருவனுடன் மட்டுமே தன் உடலைப் பகிர்ந்து கொண்டதால் தான் ஒரு பத்தினி. இந்திரனின் தர்மபத்தினி. யாரிடமும் சிக்காத play boy இந்திரனே இல்லறத்தில் சிக்கிய கதை இது.

இங்கு தனக்குக் கிடைத்த சாபமே ஒரு வரமானது.
இது எப்படி?

வரம் வரமாகவில்லை சாபம் சாபமாகவில்லையென்றால் situations nullify ஆகலாம் ஆனால் இங்கு situations reversal ஆகிறதே. இது எப்படி? இங்கு play ஆன attributes என்ன?

இது தெரிந்தால் நாமும் நமது சூழலை ஆளலாம் அல்லவா?


அன்புடன்

வேதாந்தி.

Thursday, August 12, 2010

வந்ததும் போனதும்

12.8.2010

வந்ததென்ன போனதென்ன?

வாத்தியாரைக் கேட்டால் கண்ணதாசணின் கவிதை ஒன்றை கட்டவிழ்த்து விடுவார். இந்த வலைப்பதிவிற்கு உந்துதலே வாத்தியாரின் வகுப்பறை தான். அவருக்கு என் நன்றிகள்.

வெகு நாட்களாகவே எனக்குள் ஒரு குமுறல் உண்டு. படித்தவன் ஒன்றுக்கும் உதவ மாட்டானா? படிப்பு ஆற்றலை மங்கச்செய்து விடுகிறதா? இல்லை வெறும் சினிமாக் கதாநாயகர்கள் மட்டுமே வாழ்க்கையில் ஜெயிக்கிறார்களா என்பது தான் அது. எங்கு பார்த்தாலும் பலமுள்ளவனே ஜெயிக்கிறான் (?). பலத்தைக் காட்ட வன்முறையை பிரயோகிக்கிறான். இது சரியா? வாழ்க்கையில் ஒவ்வொருவரும் தான் வெல்ல பல compromise களை செய்கிறார்கள். இந்த விட்டுக்கொடுத்தலினால் அவர்கள் பெற்றது உண்மையான வெற்றியா? அந்தக்கணம் அவர்களுக்குத் தோன்றிய அந்த வெற்றி மறுபடியும் ஒரு 20 வருடங்கள் கழிந்து வெற்றியாகவே தோன்றுமா? இது குறித்து ஒரு அலசல் வேண்டாமா?

உதாரணமாக பலர், வாழ்க்கையில் வெற்றியென்பது பணம் சம்பாதிப்பதுதான் எனும் பலர், பல தர்மங்களை விட்டுக்கொடுத்து பணம் சம்பாதிக்கின்றனர். அப்படி 'வெற்றியை' அடைந்தவர்கள் கடைசிவரை வெற்றியைக் கொண்டிருந்தனரா? இவர்கள் வெற்றியடையும் போது இவர்களிடம் தோற்றுப் போனவர்கள் கடைசிவரை தோற்றேதான் போனார்களா....

இது ஒரு தேடல்.

வந்ததும் போனதும் இருக்கையில் இடையே நிலைத்ததென்ன?  இதுதான் எனது கேள்வி. பின்னூட்டமிடுங்கள். அலசுவோம். மேம்படுவோம்.

அன்புடன்,

வேதாந்தி.

Related Posts Plugin for WordPress, Blogger...