Followers

Monday, November 29, 2010

மனதில் தோன்றும் குற்ற உணர்வுகள் நம்மை நெறிப்படுத்துமா?

29.11.10
மனதில் தோன்றும் குற்ற உணர்வுகள் நம்மை நெறிப்படுத்துமா?



குற்ற உணர்வுகள் நம்மை நெறிப்படுத்தும் கருவிகள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த குற்ற உணர்வுகள்சரியாகக் கையாளப் படாவிட்டால் அவைகள் மனப்பிறழ்வுகளை எளிதில் உருவாக்கிவிடும்.

இந்த குற்ற உணர்வுக்கு இரண்டு பக்கங்கள் உண்டு. ஒன்று, இது மனதை சீர்படுத்தும். மற்றொன்று இதனைக் கையாள்வதில் தவறு ஏற்படின் இது பெரும்பாலான மனப் பிறழ்வுகளுக்கும் காரணமாகும். இது பற்றி விளக்கமாக பிறகு பேசுவோம். இப்போது இதன் நெறிப்படுத்தும் முறையை மட்டுமே பார்ப்போம்.

இயற்கை எல்லாவற்றையும் சரியான முறையில் தான் உருவாக்கி வைத்திருக்கிறது. ஆனால் நாம் தான் அதன் நோக்குகளை புரிந்துகொள்ளாமல் அவைகளை எதிர்ப் பயனுக்குள்ளாக்குகிறோம் அல்லது அவைகளை பயனற்றவைகள் எனக் கருதுகிறோம். இது மிகக் கடுமையான பின்விளைவுகளை உருவாக்குகிறது. மனிதர்களுக்குத் தெரியாமலேயே எத்தனையோ படைப்புகள் மனிதனின் இந்த பூமி சார்ந்த வாழ்வுக்கு பயனளித்துக் கொண்டிருக்கின்றன. இதைப்போன்றதுதான்  உயிரும்  அதன் உடல் உறுப்புக்களும். நினைத்துப் பாருங்கள். ஒரு தொழிற்சாலை போன்றே இயங்கும் இந்த உடல். உலகின் எல்லா கழிவுகளையும் ( இயற்கையில் விளைந்தது) உரமாக்க அதற்கென தனியே உள்ள இயற்கையின் படைப்புகள். இந்த உலகில் எல்லாமே வெறும் கார்பனும் நைட்ரஜனும். உரம் உணவாகி, உயிராகி, கழிவாகி மறுபடியும் உரமாகி, உயிராகி…   . இது பிழையின்றி நடக்கும் ஒரு இயற்கைச் சுழற்சி.


இதற்கும் மேலே, மனிதர்களிடத்தில் மன மேம்பாட்டுக்கென இயற்கை உருவாக்கிய மனம் சார்ந்த சில கருவிகள் உண்டு.  அதில் ஒன்றுதான் இந்த குற்ற உணர்வு- guilty feeling - என்பது. மனிதர்களின் சிறு குற்றங்களுக்கான சிறைத்தண்டனைகள் கூட, மனிதனின் தனிமை வாசத்தில் எந்த வித இடையூறுமின்றி இந்த குற்ற உணர்வு அவனை மேம்படுத்தி குற்ற வழக்கத்திலிருந்து அவனை விடுவிக்க வாய்ப்பிருக்கிறது எனும் நோக்கில்தான் உருவாக்கப் பட்டவைகள் என்றே நான் கருதுகிறேன்.

அரிதாக இந்த குற்ற உணர்விக்கு ஆளான ஒரு சிறுத்தையின் நடவடிக்கைகளை இந்த காணொளியில் காணுங்கள். http://www.youtube.com/watch?v=yE6Z031P9rU 


தனது உணவுக்காகஒரு பபூனை வேட்டையாடிய இந்தச் சிறுத்தை அந்தப் பபூனின் மடியைக் கவ்விக்கொண்டு பாலைக் குடித்துக் கொண்டிருக்கும் அதன் குட்டியை தாமதமாகத்தான் பார்க்க நேரிட்டு அதிர்ச்சியடைகிறது.   தாயைக் கொல்லத்துணிந்த சிறுத்தைக்கு அதன் குட்டியின் மீது பல் பதிக்கத் துணிவில்லை. பாலைக் குடித்துக் கொண்டிருந்த நிலையில் அதன் தாயை இழந்த பபூன் குட்டிக்கு தனது பால் காம்புகளைக் காட்டிக் கொண்டு குட்டியை பால்குடிக்கும்படிக்கு  தன்னோடு அணைக்க முயலும் சிறுத்தையிடம் தெரிவது தாயண்பா அல்லது குற்ற உணர்வா? குழப்பமே. இதையும் மீறி அந்தக் குட்டியை ஒரு கழுதைப் புலியிடமிருந்தும்  காப்பாற்றுகிறது சிறுத்தை. இது மனிதர்களிடமே கூட காண முடியாத செயல்தான்.


சிறுத்தைகளே இப்படியிருக்கையில் பெரியவர்கள் மேல் கொண்ட வன்மத்தை அவர்களது குழந்தைகளை கொன்று தீர்த்துக் கொள்ளும் ஈனர்களை என்ன சொல்வது.  இவர்கள் தங்கள் மனதை நெறிப்படுத்தும் மனசாட்சியையும்   ( குற்ற உணர்வுகளையும் ) கொன்றவர்களே.

குற்ற உணர்வுகள் மட்டும்தான் நம் செயல்களைக் குறித்து நம்முன் வன்மையான கேள்விகளை வைக்கும்.  இது நமது நோக்கினை மறு பரிசீலனை செய்ய நம்மை வற்புறுத்தும். நமது செயல்களால் நாம் அடையும் / அடைந்த பலன்களைக் குறித்து மறு கோணத்தில் அலசி எடைபோடும். நாம் எந்தச் செயல் குறித்தும் மற்றும் அதன் மேம்பாடு குறித்தும் பல விதமான அழுத்தமான கேள்விகளை முன்னிறுத்தி அதில் கிடைக்கும் பதில்களால் நமது மேம்பாடுதலை அல்லது  மேம்படுதலை  நோக்கி  நம்மை வளர்க்கும். நம்மை வழி நடத்தும்.  இந்த குற்ற உணர்வையே அல்லது இந்த கேள்வி கேட்கும் உணர்வையே நாம் மனசாட்சி என்கிறொம்.

இது ஏதோ ஒருவழிப்பாதை செயலைப்போல, பற்பசைக் குழல் மீது அழுத்தத்தை கொடுத்தால் வழியும் பற்பசையைப் போல, நம்மிடமிருந்து எதையும் எதிர்பாராது நடக்கும் செயல் அல்ல. இந்த செயல் மிக முக்கியம் வாய்ந்தவை.  இந்தக் கேள்விகளுக்கு நாம் அளிக்கும் பதில்கள் ஒரு   வரைமுறைக்கு உட்பட்டதாகவே இருக்க வேண்டும். மேலும் நாம் கொள்ளும்  இந்த வரைமுறைகளும் சமுதாயத்திற்கு எதிரானதாகவோ அல்லது மிகுந்த சுயநலமிக்கதாகவோ மாறி மறுபடியும் நமது குற்ற உணர்வைத் தூண்டி அதை மீண்டும் கேள்வி கேட்க வைத்து விடக்கூடாது. அப்படி நடந்தால் விளைவு கடுமையாக இருக்கும்.  இந்த மனசாட்சி நமது செயல்களுக்கு நம்மை கேள்வி கேட்டு அதற்கு சரியான பதில் கிடைக்காவிடில் நம்மைக் கொன்று போடும். அல்லது சரியான பதில் பெற்று நம்மை உண்மையை உணரத் தூண்டி நம்மை நெறிப்படுத்தும்.

ஊடகங்களில் எத்துனையோ செய்திகளில் இந்த குற்ற உணர்வால் நெறிப்பட்டோரைக் காணலாம். தர்க்கம் செய்து கொண்டிருந்த போது  தற்செயலாய் தள்ளியதில்  தாயைக் கொன்ற ஒருவர், இறந்த தாயை அடக்கம் செய்து மூன்றே நாளில் தன் மன உளைச்சல் தாளாது காவல் நிலையத்தில் சரணடைந்து தன்னை கைது செய்யச்சொல்லி அழுததை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இது மட்டுமல்ல, தன் மணைவியைக் கிணற்றில் தள்ளிக் கொன்ற கணவன் தினமும் அவள் தன் கனவில் வந்து தொல்லை தருவதால் அதைத் தாங்கமாட்டாமல் தன் மணைவி இறந்து இரண்டு வருடங்கள் கழித்து தானே காவல் நிலையம் சென்று சரணடைந்த  நிகழ்வும்  ஊடகங்களில் வந்தது.



நாம் செய்யும் செயல்களுக்கு சரியான காரணங்கள் கிடைக்காவிடின் இந்த குற்ற உணர்வு நமக்குள் எழுந்து நம்மைக் கொன்று போடும். ஆனால் இதைத்தடுக்க இந்த குற்ற உணர்விலிருந்து தப்பிக்க நாம் ஏதேனும் ஒரு காரணங்களைக் கண்டுபிடித்து நம்மைச் சமாதானப் படுத்திக் கொண்டோமானால் இந்த நெறிப்படுத்தல் நடக்காது. அதுவுமல்லாது இந்த குற்ற உணர்வும் நம்மைக் கொல்லாத வாறு நாம் சமாதானமடைவோம்.  இந்த  defensive  mechanism  நம்மை மனப்பிறழ்விடமிருந்து காப்பாற்றினாலும் நம்மை ஒரு - anti social  - சமுதாய எதிரியாக்கிவிடும். இது மிக மிக ஆபத்தானது. இந்த நிலை ஒரு   cumulative effect ஐ உண்டு பண்ணி நம்மை காலந்தாழ்த்தியேனும் அழித்துவிடும்.



சொல்லப்போனால் இப்போது பெண் விடுதலைக்கெதிராக பேசும் சிலர் சொல்லும் காரணங்கள் மேலே சொன்ன குற்ற உணர்வைத் தவிர்க்க அவர்கள் கையாளும் ஒரு defensive mechanism  தான்.  இதற்காகவே இவர்கள் ஒரு  natural justice  இல்லாது ஒரு மனிதரின்  உணர்வுகளுக்கும் ஒரு மனிதரின் சுதந்திரத்திற்கும் எதிரான தங்களது கோட்பாடுகளும், நடவடிக்கைகளும் அவர்களின் பாதுகாப்பு கருதியே என காரணம் கண்டுபிடித்துச் சொல்கிறார்கள்.  இந்தக் காரணங்கள்  இல்லாவிடில்  இவர்கள் செய்யும் காரியங்களுக்காக குற்ற உணர்ச்சிகள் மிகுந்து இவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி, ஒன்று இவர்களை நெறிப்படுத்தும் அல்லது இவர்களை கடுமையான மனப் பிறழ்வுகளுக்குள்ளாக்கிவிடும்.

இது குறித்து இன்னமும் பேசுவோம்.

அன்பன்,

வேதாந்தி.



Thursday, November 25, 2010

நமது கலாச்சாரம் சீர்படுகிறதா அல்லது சீர்கெடுகிறதா?

25.11.10
நமது கலாச்சாரம் சீர்படுகிறதா அல்லது  சீர்கெடுகிறதா?


கலாச்சாரம் என்பது மற்றெல்லாவற்றையும் போலவே ஒரு மாறுதலுக்ககுட்பட்ட  சங்கதிதான் . இதை மாணுடவியல் - anthropology - தெரிந்தவர்கள் புரிந்து கொள்வர்.  நாமே சற்று கவனித்துப் பார்த்தோமானால் இது புரியும்.


நான் ஏற்கனவே பேசியது போல எந்த ஒரு மாற்றங்களும் ஏற்றுக்கொள்ளப் பட வேண்டியவைகளே. மாற்றங்களை முன்னேற்றத்திற்கான அறிகுறிகளாக கொண்டு நாம் நமது பார்வையிலும் நோக்கிலும் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டோமானால் நமக்கு வெற்றி நிச்சயம் என்பது தான் நான் இதுவரை பேசி வந்தது.


சரி. இந்தப் பேச்சுக்கள் எல்லாம் தனி மனித மனப்பாங்கு குறித்தும், தனி மனித வெற்றி குறித்தும் சரியாகக் கொள்ளப் படும். ஆனால் இந்த காலச்சார மாறுதல்கள் சமுதாயத்தைக் குறித்தல்லவா? அப்படி யிருக்கையில் இதை நாம் எப்படிக் கையாள்வது?


பொதுவாகவே நாம் பழக்கப்பட்டவைகளிலிருந்து, நமக்கு சௌகரியமானவைகளிலிருந்து நம்மை விலக்கிக் கொள்வது கடினமான காரியம் தான்.  அதுவும் இந்த சமுதாயம் சார்ந்த சங்கதிகளில் கூட்ட மனப்பாங்கும் உள் வருவதால் இது சிக்கலாகிறது. பெரும்பாலும் நாம் நம்மைச்சார்ந்தவர்களின் அங்கீகாரம் பெறாத காரியங்களை ஒதுக்கிவிடுதல் கண்கூடு. ஆனால் சில சங்கதிகளில் இந்த அங்கீகாரங்கள் இரண்டாம் தரமாகி விடுமளவுக்கு மாறுதல்கள் நாம் விரும்பியும் விரும்பாவிடினும் நடந்தேறிவிடும். இதைத் தவிர்க்கவோ அல்லது தடுக்கவோ முடியாது. அத்தகைய ஒரு மாற்றத்தின் ஆரம்பம் தான் தற்போது உச்சநீதிமன்றம் வரை பேசப்பட்டு வரும்  திருமண பந்தமின்றி இணைந்து வாழும் - live in relationship - உறவு.


இந்த உறவு கலாச்சாரத்தை சீர்படுத்துமா அல்லது சீர்கெடுக்குமா என்பதுதான் இன்றைய பேச்சு.


நாம் இப்போது ஒரு முக்கியமான மாறுதலுக்கான கால கட்டத்தில் இருக்கிறோம். இது தற்போதுள்ளவைகளை கவனித்தால் நன்கு புரியும். நாம் நிச்சயமாக கூட்டுக் குடும்ப கலாச்சாரத்தை தாண்டி வந்துவிட்டோம். உறவுகளைத்தாண்டி உறவுகளைத்தேட  ஆரம்பித்துவிட்டோம். இதற்கு இணைய உலகமே சாட்சி.  இணையத்தேடலில் நட்புகளையும் இணைகளையும் கண்டு வாழ ஆரம்பித்து விட்டோம்.  இது மட்டுமல்ல கண்டம் விட்டு கண்டம் தாண்டி பிழைக்கவும் ஆரம்பித்து விட்டோம். பிற நாட்டு உணவு வகைகளை விரும்பி சமைத்து உண்ணவும் ஆரம்பித்து விட்டோம்.  Chat டிலும்  mobile phone னிலும்  சொல்லும் தலாக்கை ஏற்றுக் கோண்டு விவாகரத்துவரை செல்லவும் துணிந்து விட்டோம்.


தற்காலத்தில்தான் பெண்கள் தங்கள் சுதந்திரத்தை முழுதாய் உணர ஆரம்பித்திருக்கின்றனர். இதற்கு நடந்து வரும்  Information Technology revolution மிக முக்கியமான காரணம். பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை அங்கீகரிப்பது மட்டுமல்லாது அதனை ஆதரிக்கும் நிலையில்தான் பெரும்பாலானோர் உள்ளனர். இதற்கு உலகமயமாக்கல் கொள்கை முக்கிய பங்காற்றியிருக்கிறது. பொருளாதார  சுதந்திரத்தைப் பெற்ற எந்த ஒரு பெண்ணும் கருத்துச் சுதந்திரத்தையும் பெற்றவளாகிறாள். அது அங்கீகாரத்திற்கு உரியதா அல்லவா என்பது வேறு. அங்கீகாரத்திற்குடையதாகும் போது முழுச்சுதந்திரத்தையும்  பெற்றவளாகிறாள். தற்காலத்தில் பெரும்பாண்மையான குடும்பங்களில் முடிவெடுத்தலில்ஆண்கள் பெண்ணைச் சார்ந்திருத்தலை கவனிக்க முடிகிறது. பெரும்பாண்மையான முதிர் கன்னிகள் தனியே வாழ்வை வாழத் துணிதலும் தங்களது வாழ்வில்  முடிவெடுத்தலில்அவர்களுக்கு இருக்கும் உரிமையையும் உறுதியையும் காட்டுகிறது. இது பெண்கள் கவனத்திற்குரியவர்களாகிவிட்டனர் என்பதையே காட்டுகிறது.


இது மட்டுமல்ல. பெண்கள் தங்களது எல்லா விருப்பத்தையும் நிறைவேற்றிக் கொள்ள தங்களுக்கு உரிமை உண்டு என்பதையும் உணர ஆரம்பித்துவிட்டனர். மண வாழ்வில் தனக்கு இருக்கும் உரிமையையும் , ஏன் தன் கணவனது ஆண்மையையும், அவனது இயலாமையையும்  அதுகுறித்த தனது மகிழ்வு மற்றும் தனது வெறுப்புகளையும் நான்கு சுவற்றைத் தாண்டி பேசவும், முறையிடவும் ஆரம்பித்து விட்டனர். பெண்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளத்தொடங்கிவிட்டனர் என்பதற்கான அடையாளம் தான் இந்த  திருமண பந்தமின்றி இணைந்து வாழும் - live in relationship - உறவு.


நீதி மன்றங்களும் இதனை அங்கீகரிக்கத் தொடங்கிவிட்டன. நீதி மன்றங்கள் சமுதாயத்தின் ஒரு அங்கம் தானே? அப்படியெனில் சமுதாய அங்கீகாரம் இவர்களது உணர்வுகளுக்கு கிடைத்து விட்டது என்றுதானே பொருள்? இதனை ஆண்கள் உணர ஆரம்பித்த உடனே கூச்சல் எழ ஆரம்பித்து விட்டது.  ஏனெனில் இது ஆண்களின் vulnerable  point.   தங்கள் ஆதிக்கம் ஆட்டம் கண்டுவிட்டதென்ற பயம். 


இங்கு ஒன்றை ஒட்டு மொத்த ஆண்களும் அல்லது இதை மறுப்போரும் புரிந்து கொள்ள மறுக்கின்றனர்.


நாம் யாரையும் எதையும் அவர்களது அல்லது அதன் விருப்பத்திற்கு மாறாக கட்டி வைக்க முடியாது. ஏனெனில் அதுதான் நாகரிகத்தின் மிகப் பெரிய அடையாளம். ஒரு மனிதனின் அல்லது வாழப் பிறந்த ஒரு உயிரின் சுதந்திரத்தை அங்கீகரிப்பதுதான்  மிகப் பெரிய நாகரிகம். இதைத் தெரியாதோர் மறுப்புகளைத் தெரிவிக்ககூட அநாகரிகமான வார்த்தைகளை உபயோகித்து தங்களை தாழ்த்திக் கொள்கின்றனர்.  நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால்,  உயிரியின் பரிணாம வளர்ச்சியையோ அல்லது அதைச்சார்ந்த கலாச்சார பரிணாம வளர்ச்சியையோ காலமும் அதைச்சார்ந்த விசைகளும்தான் நிர்ணயிக்குமே தவிர நீங்களோ நானோ அல்ல.


சரி. இந்த மண பந்தமின்றி வாழும் உறவு பெண்களுக்கு பாதுகாப்பானதா இல்லையா?

ஒரு பெண் தன் பாதுகாப்புக்கு மட்டுமல்ல தன்னைச் சார்ந்தோரின் பாதுகாப்பிற்கும் பிறரை நம்பாமல் இருக்கும் போதுதான் தன் முழுச்சுதந்திரத்தையும் தன்னம்பிக்கையோடு அனுபவிக்கிறாள்.


சரி. இந்த கலாச்சாரம் என்னாவது?

பெரியாரின் தாலி கட்டாது ஒன்றாக வாழும் முறை நமது நாட்டை, கலாச்சரத்தை கெடுத்துப் போட்டதா? இதுவன்றி இந்த முறை பிரிவதை சுலபமாக்கி இருக்கிறது. அவ்வளவே. எனக்குத் தெரிந்து எத்துனையோ பேர் மணமுறிவுக்கு ஒப்புதல் கொடுக்காமல் இணைகளை சித்திரவதைக்குள்ளாக்குகின்றனர்.இதைக் காணும் பிள்ளைகள் திருமண வாழ்வை வெறுக்கின்றனர்.


சரி. இதனால் குடும்ப முறை கெட்டுவிடாதா? 

ஆம். இது சரியான கேள்வி. நாம் குடும்ப முறைகளை கெட விடக்கூடாது. ஆக நாம் தாலி கட்டிக்கொண்டு வாழ்கிறோமோ அல்லது தாலிகட்டாமல் வாழ்கிறொமோ அது பெரிதல்ல. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு ஒருவரது சுதந்திரத்தை ஒருவர் மதித்து உடன் சேர்ந்து பிள்ளைகளுக்காக கடைசிவரை இணைந்து வாழ்ந்தோமானால் போதுமானது. இதற்குசரியான இணைகளின் தேர்வும், இணைந்த பின் ஒருவரை ஒருவர் மதித்து வாழ்தலுமே முக்கியமாகும்.

மிக முக்கியமாக கவனிக்கப் படவேண்டிய ஒன்று இருக்கிறது.  அதுதான் தற்போதைய சமுதாயச்  சூழல். பெண்களுக்காக ஆண்கள் பேசி சுதந்திரம் வாங்கித்தர வேண்டிய நிலை தற்போது இல்லை. இதுவே ஒரு பெரிய மாற்றம். எப்போது ஒரு பெண் தனக்கு பிறர் சுதந்திரம் தர வேண்டும் என நினைக்கிறாளோ அல்லது எப்போது ஒரு ஆண் தான்தான் பெண்களுக்கு சுதந்திரம் தர வேண்டும் என நினைக்கிறானோ அப்போது இவர்கள் இருவருமே நிலை புரியாது தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கின்றனர்.

பாலியல் உணர்வுகள் மட்டுமல்ல சுதந்திரம். அதற்கும் மேலே... ஆனால் நீங்கள் சொன்னதைப்போல பாலியல் உணர்வுகளையும் உள்ளடக்கியதுதான். நீங்களோ நானோ அதை நிர்ணயிக்க முற்பட்டால் நாம் நமக்கு கிடைத்திருக்கும் சுதந்திரத்தை அதன் பொறுப்பான அளவுக்கு மீறி அடுத்தவரை நசுக்க பயன்படுத்துகிறோம் என்று பொருள்.
இது மட்டுமல்ல. சுதந்திரம் என்பது ஒரு பெரும் பொறுப்பு. ஒரு பெண் இந்தப் பொறுப்பை உணர்ந்தால் மட்டுமே தனது சுதந்திரத்தை தன் வாழ்வில் முடிவெடுக்கும் பொறுப்புகளுக்கு உள்ளாக்க முடியும்.அதன்படி தான் எடுக்கும் அறிவு சார்ந்த முடிவுகளும் நல்ல பலனைக் கொடுக்கும்.  தற்கால பெண்களின் கல்வி அறிவு அதற்கு துணை நிற்கும் என நம்புவோம். மேலும் மற்றவர் சுதந்திரத்தை மதிக்கும் அறிவை நாம் அனைவருக்கும் கற்றுத்தரச் செய்வோம்.


இன்னமும் பேசுவோம்.

அன்பன்,

வேதாந்தி.


Wednesday, November 24, 2010

கொண்ட அன்பும் கொல்லும் திறனுடைத்தோ?

24.11.10
கொண்ட அன்பும் கொல்லும் திறனுடைத்தோ?


அன்பு கொல்லுமா? அன்பும் கொல்லும் என்பது தான் சரி. 


மிகையான அன்பு கூட ஒருவித சுய நலத்தின் பிம்பம்தான். இந்த மிகையான அன்பு தங்களது விருப்பமான உறவுகளின் நிலைத்தன்மையை தக்கவைத்துக் கொள்ளுதல்  குறித்த அச்சம் கருதியே வெளிப்படுவதாகும்.  It is a sort of possessiveness  exhibited out of insecured feelings. இத்தகைய மிகையான அன்பால் சிக்கல்கள் உருவாகி சிதைந்துவிடும் உறவுகளுக்கு சரியான உதாரணம் வேண்டுமென்றால் பெரும்பாலான மாமியார் மருமகள் உறவைச் சொல்லலாம். அம்மாக்கள் தங்களது பிள்ளையின் மேல் வைத்திருக்கும் அதீத அன்பே இந்தச் சிக்கலை உருவாக்குகிறது. இத்தகைய பெற்றோர்கள்  ஒரு கட்டத்திற்கு மேல்  தங்களது பிள்ளைகளின் வாழ்வில் ஒரு இடையூராகத்தான் பார்க்கப் படுகின்றனர். இது அவர்களுக்குப் புரிவதில்லை.


இந்த மிகையான அன்பு  நாம் அன்பு கொள்வோரின் தேவைகளை நம்மை  சரியாகப் புரிந்துகொள்ள விடாது என்பதுதான் உண்மை. நாம் பிறரது தேவைகளை சரியாகப் புரிந்து கொள்ளாத போது நம்மால் எப்படி அவர்களது தேவைகளையும் மற்றவைகளையும் சரியான முறையில் நிறைவேற்றி வைக்க முடியும்?  இது பற்றி வேறு ஒரு கோணத்தில் முன்னர் பேசியிருந்தேன். நான் இன்று பேசப்போவது பிம்பப் பார்வைகள் இல்லாவிடினும் சில நேரங்களில் இந்த மிகையான அன்பு கேடான விளைவுகளை உண்டுபண்ணும் வாய்ப்பு இருக்கிறது என்பதைப்பற்றித்தான்.


உண்மையில் சொல்லப்போனால் இந்த மிகையான அன்பை சரியான வகையில் வெளிப்படுத்தத் தெரியாமற் போனால் இது மிகுந்த சிக்கல்களை உறவுகளுக்கிடையே உருவாக்கும். உறவுகளுக்கிடையே மிகத்தேவையான ஒரு நாகரிகமான, சுகாதாரமான இடைவெளியை - Personal space - இந்த மிகையான அன்பு கெடுத்துப் போடுகிறது. இது மட்டுமல்லாது நமக்கு மிகவும் விருப்பமான உறவுகளைப் சரியாகப் புரிந்து கொள்ளுதலிலும் சிக்கலை உருவாக்குகிறது. இந்த உறவுச் சிக்கல்கள் எழாத  பல நேரங்களில் இந்த அதீத அன்பு நாம் அன்பு கொண்டோரையே கொண்றும் விடுகிறது.


ஒரு பொது உதாரணமாக நாம் பெற்றோர் பிள்ளைகள்  உறவை எடுத்துக் கொள்ளலாம். சில பெற்றோர்கள் இந்த அதீத அன்பால் தம் பிள்ளைகளை பொத்தியதைப் போல வளர்ப்பார்கள். இப்படி வளர்ந்த பிள்ளைகளுக்கு வெளி உலக அனுபவங்கள் கிடைத்தல் மிக அரிது. அவர்களுக்கு கிடைக்கும் எல்லா அனுபவங்களும் தங்களின் பெற்றோர் வட்டத்திலேயே அதுவும் அவர்கள் பார்க்கும் கோணத்திலேயே கிடைக்கும். இது ஒருவகையான கிளிக்கூண்டு அனுபவம் தான். சிறகு இருந்தும் பறக்காது, பறத்தல் என்ற அனுபவம் கிடைக்காத அன்பால் கூண்டிலடைபட்டு பறக்கும் அனுபவத்தையே மறந்துவிடும் கிளிக்கு கிடைக்கும் அனுபவம்தான்.


ஆனால் இதில் பரிதாபம் என்னவென்றால் இத்தகைய பிள்ளைகள் கடைசிவரை ஒருவரைச் சார்ந்தே இருக்கின்றனர்.  தனது சுயத்தை மறக்கின்றனர். சுயத்தை உணர்ந்து அதனை முழுக்க ருசித்து அதனை புரிந்து இழப்பது வேறு இது வேறு. தனக்கென்று ஒரு கருத்து உண்டு என்பதைக்கூட இவர்களால் புரிந்து கொள்ள முடியாது. இத்தகைய பிள்ளைகள் தங்களது வாழ்வையே இழக்கின்றனர்.


சமீபத்தில் நான் ஊடகங்களில் கண்ட செய்தி இது. பிள்ளைகளின் வற்புறுத்தலுக்காக உயர் ரகங்களைச் சேர்ந்த செல்ல நாய்க்குட்டிகளை வளர்க்க நேரிடும் பெற்றோர்கள் தாங்கள் வெளிநாடு செல்ல வேண்டிய காரணத்தாலோ அல்லது அந்த நாய்களை வளர்க்க முடியாமற் போக நேர்ந்தாலோ அவைகளை காரில் கொண்டு போய் வீட்டிலிருந்து வெகு தொலைவில் இறக்கி விட்டு விட்டு வெகு வேகமாக காரை எடுத்துக் கொண்டு போய்விடுவராம். ஏதுமறியா இந்த செல்லப்பிராணிகள் நீண்ட தூரம் காரின் பின்னே வேகமாக ஓடி வருமாம். இறுதியில் ஓட முடியாமல் மூச்சிறைக்க இந்த நாய்கள் அங்கேயே திகைத்து நின்று விடுமாம்.


வெட்ட வெளியில் வாழத்தெரியாது திகைத்து நிற்கும் இந்த நாய்கள் உணவின்றியோ அல்லது அங்கே உள்ள தெரு நாய்களின் கடிக்கோ பலியாகி மிகவும் பரிதாபமாக உயிரை விடுமாம்.  இவைகள் பழக்கப் படா சூழலுக்கு இறையாகி இறத்தலுக்கு யார் காரணம்? மனிதர்கள் தங்கள் விருப்பத்திற்கு மிகுந்த அன்பு காட்டி அதனை பொத்தி வளர்த்து இறுதியில் தங்கள் வசதிக்கு அவைகளை கைவிட்டு விடுதலாலேயே அவைகள் இந்த பரிதாப முடிவுக்கு ஆளாகின்றன. இது போலவே தான் நம் பிள்ளைகளும். பிள்ளைகளை நாம் கைவிடுவதில்லை என்றாலும் நமது இறப்பிற்குப் பின்னும் அவர்கள் வாழ வேண்டி யிருப்பதால் அவர்களுக்கு வாழக் கற்றுக் கொடுத்தலே நலம்.


எனக்குத் தெரிந்து ஒரு பொறியியல் கல்வி படித்துக் கொண்டிருந்த மாணவன், பெற்றோர் மீது மிகுந்த அன்பு கொண்டவன், தனது பெற்றோர் ஒரு சாலை விபத்திலே இறந்து போனபின் தன்னால் தனியே வாழப்பிடிக்காமல் ஆறு மாதங்களுக்குப் பின் தனது பெற்றோர் இறந்த இடத்திலேயே தனது உயிரையும் மாய்த்துக் கொண்டான். இதைச் சொல்லும் போதே எனக்கு நெஞ்சைப் பிசைகிறது. பெற்றோர் இந்தப் பிள்ளையின் வாழ்வுக்காக தமது உயிரையும் கொடுத்திருப்பர் ஆனால் பிள்ளை இறப்பதை பொறுப்பரோ?


அவர்களது மிகுதியான அன்பினால் இந்தப் பிள்ளை உலகத்தில் தனியேவாழ கற்றுக்கொள்ள, இழப்பை பொறுத்துக்கொள்ள, தோல்வியைத் தாங்கிக்கொள்ள, பிறப்புக்கும்  இறப்புக்கும் இடையே இருப்பதுதான் வாழ்க்கை எனப் புரியவைக்கத் தவறிவிட்டனர். அதனாலேயே இந்த இழப்பு.


நாம் உண்மையிலேயே பிள்ளைகளை நேசித்தோமானால் அவர்கள் வாழக் கற்றுக்கொள்ள அனுமதிக்க வேண்டுமே தவிர வாழக் கற்றுக் கொடுக்கக் கூடாது. ஏனெனில் இந்த ‘வாழக் கற்றுக் கொடுத்தல் ‘ பெரும்பாலும் நமது அனுபவங்களைச் சார்ந்தே இருக்குமாதலால் இவைகள் அவர்களுக்கு பயனளிக்காது மட்டுமல்ல உலகைத் தெரிந்துகொள்ளும் அவர்களது சுயமுயற்சிகளையும் கெடுத்து விடும். இது மிகவும் அபாயகரமானது. இது மட்டுமல்ல ஒருவேளை பிள்ளைகள் நமது இந்த கற்றுக் கொடுத்தலுக்கு ஆளானார்களானால் அவர்கள் தங்களது இணை நண்பர்களை - peer group - விட சற்றே பின் தங்கியோ அல்லது வித்தியாசப்பட்டோ இருப்பார்கள். இது அவர்களது மனதில் மிகுந்த குழப்பத்தினை உண்டுபண்ணலாம்.


இந்த உலகில் வாழவும் தங்கள் வழியில் வாழக் கற்றுக்கொள்ளவும் ஒவ்வொரு உயிருக்கும் உரிமை உண்டு.  ஆனால் இந்த வாழக் கற்றுக் கொள்ளும் உரிமையும், வாழக் கற்றுக் கொள்ளும் முறையும் ஒருவர் தீய வழியில் தனது வாழ்வைச் செலுத்தி பரிசோதித்துக் கொள்ள அனுமதிப்பதாகாது.  மாறாக மேற்சொன்னதெல்லாம் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட, சமுதாயத்தின் ஆரொக்கியத்திற்கும், தனது சொந்த ஆரொக்கியத்திற்கும் எதிராகாத நல்வழியில் வாழ்வதைக் குறித்து மட்டுமே இங்கு பேசப்பட்டிருக்கிறது.


நமது அன்பெனும் அமுதத்தை அதிகப்படியாக நமது பிள்ளைகள் மீது பொழிந்து அந்த அன்பே அவர்களைக் கொல்லும் நஞ்சாவதைத்  தவிர்ப்போம். அவர்கள் வாழக் கற்றுக்கொள்ள வாழ்வைப் புரிந்துகொள்ள அனுமதிப்போம். பாதுகாப்பான தொலைவில் இருந்து கொண்டு நமது பிள்ளைகள் சரியான முறையில் வாழக் கற்றுக் கொள்கிறார்களா என்று கவனிப்போம். அவ்வப்போது, அவர்கள் வழி பிறழும் போது அவர்களை தடுத்தாட்கொண்டு நெறிப்படுத்தி தீயவைகளினின்று அவர்களைக் காத்துப் பேணுவோம். மகிழ்விப்போம் மற்றும் மகிழ்வோம்.
 
இன்னமும் பேசுவோம்.


அன்பன்,

வேதாந்தி.


Tuesday, November 23, 2010

நமது செயல்பாடுகளைத் திரிக்கும் பிம்பப் பார்வைகள் சரியானவைகளா?

23.11.10
நமது செயல்பாடுகளைத்  திரிக்கும் பிம்பப் பார்வைகள் சரியானவைகளா?




நம்முடைய செயல்பாடுகள் நமது பார்வைகளின் புரிதலிலான வினைகளின் வெளிப்பாடுகளே.

நாம் வெளிப்படுத்தும் அன்பு, வெறுப்பு என்பவைகள் மற்றவர்கள் குறித்த நமது பார்வைகள் பொறுத்து வேறுபடுகின்றன. நாம் ஒருவரை வெறுத்தோமானால் அவருக்குப் பிடிக்காதவைகளாக நாம் கருதுபவைகளை அவருக்குச் செய்வோம். நாம் ஒருவரை விரும்பினோமென்றால் அவருக்குப் பிடித்தவைகளாக நாம் கருதுபவைகளை அவருக்குச் செய்வோம். இங்குதான் நமது பார்வைகள் பெரும் பங்காற்றுகின்றன.


நாம்  அன்பு செய்யும் ஒருவருக்கு உண்மையிலேயே அவருக்கு பிடித்தவைகளை அவருக்கு செய்கிறோமா? அல்லது நமக்குப் பிடித்தவைகளை நாம் அவர்கள் மீது  திணிக்கிறோமா? என்பது குறித்துத் தான் நமது இன்றைய பேச்சு


இதை எளிதாகப் புரிந்துகொள்ள நாம் வீடுகளில் வளர்க்கும் செல்லப் பிராணிகளையும், பறவைகளையும் எடுத்துக் கொள்ளலாம். வானமே எல்லையாக பறந்து திரியப் பிறந்த பறவைகள் நம்முடைய ‘அன்பால்’ கூண்டில் அடைக்கப் பட்டிருக்கின்றன. சிறகுகள் கொண்ட அவைகளின் பிறப்பிற்கான பொருளே இல்லாமல் போய்விடுகிற அவலமல்லவா இது?


ஆனால் உண்மையில் நாம் இந்தப் பறவைகளை நேசிக்கிறோம். இல்லாவிடில் இதனை பொருள் செலவழித்துப் பெற்று, அதிக பொருட்செலவில் ஒரு கூண்டினையும் வாங்கி அதனை அடைத்து வைப்பதோடு நிதமும் அதற்குப் பிடித்த (அதாவது நமக்குப் பிடித்த..) உணவு வகைகளையும் அதற்கு உண்ணக் கொடுப்பதோடு அதன் எச்சத்தையும்    சுத்தம் செய்து வைப்போமா..?  நாம் உண்மையிலேயே கூண்டிலிருக்கும் பறவை இதனை மிகவும் விரும்புகிறது என நினக்கிறோம்.  இத்தகைய மனோபாவம் தான் நம்மை நம்முடன் உள்ள மற்ற  மனிதர்களையும் நமது பார்வையிலேயே பார்க்கத் தூண்டுகிறது. This kind of attitude lacks empathetic perception. 


இதைத்தான் நான் நம்மை ஏமாற்றும் பிம்பப் பார்வை எனக் குறிக்கிறேன்.  இந்த பிம்பப் பார்வை என்பது கண்ணாடியில் நமக்குத் தெரியும் பிம்பம் போலவே மாயை செய்து பொய்யை உண்மையாக்கி நமக்குக் காட்டும். கண்ணாடி பிம்பங்கள் அச்சு அசலாக இருந்தாலும் அதில் இட வல மாற்றம் இருக்கும். இந்த இட வல மாற்றம் கொண்ட பிம்பமானது உண்மைப் பொருளுக்கு எதிரானதானதல்லவா? ஆனால் நாம் இதை உண்மையென நம்புகிறோம். தெரியும் பிம்பத்தைத் தாண்டி உண்மையை ஆராய மறுக்கிறோம். இதனால் நாம் செய்ய நினைக்கும் காரியங்களுக்கு எதிரான செயல்களையே நம்மையறியாது நாம் செய்கிறோம்.


இதை அறியாமை என்று சொல்வதா அல்லது சுயநலம் என்று சொல்வதா?


எனது நண்பன் கிராமத்தைச் சேர்ந்தவன். அவன் நகரத்தில் வேலை பார்த்தாலும் பெற்றோர் கிராமத்தில் இருப்பதால் அடிக்கடி அவன் பெற்றோரைப் பார்க்க கிராமத்திற்குச் செல்வதுண்டு. அவர்களது வீடு வயல்களுக்கு நடுவே அமைந்திருந்தது. கூடவே  கிராமத்து வளர்ப்புப் பிராணிகளான ஆடு, மாடு, கோழி, நாய் மற்றும் பூனையும் உண்டு. இந்தப் பிராணிகளுக்கும் இவனது பரிச்சயம் உண்டு. தங்களது எசமானன் வீட்டுப் பிள்ளை இவன் என்பதை சரியாகவே புரிந்து வைத்திருந்தன இவைகள்.  இதன் விளைவாக ஒவ்வொன்றும் ஒரு வகையில் தனது நன்றியினை வெளிப்படுத்தும். இவனைச் சுற்றிச் சுற்றி வந்து உரசிச் செல்லும். 


ஒரு முறை இவன் ஊருக்குச் சென்றுவந்தபோது நடந்ததைச் சொன்னான்.  அதைக் கேட்ட நான் உறைந்து போய்விட்டேன்.  வேறொன்றுமல்ல. ஒரு இரவு இவன் தூக்கத்தில் படுக்கையில் புரண்டு படுத்தபோது தனது கையில் ஏதோஒன்று மிகப் பெரிதாக வழு வழுப்பானதொன்று தட்டுப் படவே அரைத் தூக்கத்தில் எழுந்து பார்த்திருக்கிறான். அருகே இவர்களது வீட்டுச் செல்லப் பூனை இவனது காலடியில் மிகவும் மரியாதை காட்டுவதைப் போல நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டிருந்தது.  சட்டென விழிப்பு வந்து தனது கையில் தட்டுப்பட்டதைப் பார்த்தவனுக்கு உயிரே உறைந்து போனது. குற்றுயிராய் அய்ந்தடி நீள முள்ள தடிமனான பாம்பு ஒன்று தலை கடிபட்டு இவனது படுக்கையில் துடித்துக் கொண்டிருந்தது. அலறியடித்து எழுந்து உட்கார்ந்தான். பூனை இவனது காலடியிலேயே கம்பீரமாக உட்கார்ந்து கொண்டிருந்தது.  தனது படுக்கையைச் சுற்றி ஆராய்ந்த பிறகுதான் தெரிந்தது. இவனது வீட்டுப் பூனை எங்கோ வயல் வெளியில் தென்பட்ட பாம்பு ஒன்றை தலையைத் துண்டித்து  கவ்விக் கொண்டுவந்து படுக்கையில் இவனது காலடியில் போட்டிருக்கிறது என இவனுக்குப் புரிந்தது.


இது குறித்து விலங்கின ஆர்வலர்களிடம் விசாரித்ததில்  விலங்குகள் தங்களது எசமானர்களிடம் தாங்கள் கொண்ட அன்பை வெளிப்படுத்தும் விதமாகவே இத்தகைய நடவடிக்கைகளில் அவைகள்  ஈடுபடுகின்றன எனத் தெரிந்தது.  இது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது.


மேற்சொன்னதில் பூனையைப் பொருத்த மட்டில் தான் கவ்விக் கொண்டுவந்த பாம்பு தன் எசமானனுக்கு தனது உண்மையான விசுவாசத்தைக் காட்டக் கூடிய ஒரு பரிசுதான். ஆனால் சற்று நினைத்துப் பாருங்கள் தனது படுக்கையில் பாம்பைக் கண்ட எனது நண்பன் எத்துனை நடுங்கிப் போயிருப்பான் என்று. தனக்குப் பிடித்தது தன் எசமானனுக்கும் பிடிக்கும் என பூனை நினைத்தது பிம்பப் பார்வையல்லவா?


இத்தகைய பிம்பப் பார்வைகள் நமது உறவுகளின் புரிதலுக்கு ஒரு இடையூராகத்தான் இருக்கும். நான் மேலே குறிப்பிட்டவைகள் மனித உறவுகளில் ஒருதலைக் காதலுக்கு சரியாகப் பொருந்தும்.



நான் மேற்சொன்னதையே சற்று விரிவு படுத்திப் பாருங்கள். நாம் ஒருவரை நேசிக்கிறோம் எனக் கொள்வோம். என்றாவது அவர்களது பார்வையில் உலகத்தைப் பார்க்க முயன்றிருக்கிறோமா? அப்படி பார்க்கத் தொடங்கும் போதுதான் நாம் உண்மையிலேயே அவர்கள் மீது அன்பு கொண்டிருக்கிறோம் என்று பொருள். நான் மேற்சொன்னபடி இல்லாது நாம் நமது பார்வையிலேயே, நமக்கு வேண்டியவைகளையே அல்லது நமக்குப் பிடித்தவைகளையே அவர்களுக்கும் செய்வதோடு மட்டுமல்லாது அதை அவர்கள் விரும்பவும் செய்யவேண்டும் என எதிர்பார்ப்பது நாம் அவருக்குச் செய்யும் கொடுமையல்லவா? இத்தகைய ‘அன்பு’ அவர்களைக் கொன்று விடாதா?  அல்லது அவர்களை திரிதலின்றி புரிந்துகொண்டோமானால் அவர்கள் விருப்பத்திற்கு மாறான செயல்களைத்தான் செய்வோமா? அல்லது அவர்களிடமிருந்து அவர்கள் விருப்பத்திற்கு மாறான செயல்களை எதிர்பார்ப்போமா?


மிகச் சரியாகப் புரிந்து கொண்டால் இந்தப் பேச்சு அன்பு குறித்து நாம் கொண்ட பிம்பப் பார்வையை சரியாக்கி நமது வாழ்வை மிகவும் பயனுள்ளதாக மாற்ற வல்லதாகும்.


இன்னமும் பேசுவோம்.


அன்பன்,

வேதாந்தி.

Monday, November 22, 2010

மண முறிவுகளுக்கு மன முறிவுகள் மட்டுமே காரணமா?

22.11.10
மண முறிவுகளுக்கு மன முறிவுகள் மட்டுமே காரணமா?


மண முறிவுகள் ஒருவகையில் மக்களின் மன சுதந்திரத்தினை பறை சாற்றும் ஒரு செயலாக இருந்தாலும் இந்த மண முறிவுகள் தடுக்கப் படவேண்டிய சந்தர்ப்பங்களும் உள்ளன என்பதே இன்றைய பேச்சு.


நான் ஏற்கனவே மணவாழ்வின் உன்னதங்களைப்பற்றி பேசியிருக்கிறேன். இந்த மண வாழ்வானது ஒருவரை மேம்படுத்தக் கூடியதுதான் - மகிழ்ச்சியுடன் இணைகள் வாழ்வைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் வாழ்வு அமையும் போது. மேற்சொன்னபடி இல்லாத வாழ்வு  வறண்ட பாலைக்குச் சமம் என சான்றோர் பகன்றிருக்கின்றனர். அத்தகைய வன்முறை நிறைந்த மண வாழ்வை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது மட்டுமல்ல ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை என்பதே உண்மை.


சரி. இப்போது இன்றைய பேச்சுக்கு வருவோம்.


இந்த மண வாழ்வில் புரிதல் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. புரிதல் இருந்தால் மட்டுமே விட்டுக்கொடுத்தல் உருவாகும்.  விட்டுக்கொடுத்தலே வாழ்வின் மிகப் பெரிய அடித்தளம் ஆகும்.  மண வாழ்விற்கு காதலும் காதல் சார்ந்த காமமும் முக்கியம்தான். மிகப் பெரிய உளவியல் வல்லுனரான  Sigmund Freud ஏறக்குறைய மனிதரின் அனைத்து செயல்களுக்கும், நடவடிக்கைகளுக்கும் ஏதேனும் ஒரு வகையில் அவரின் பாலியல் வாழ்க்கைக்கு தொடர்பானதென  முடிப்பார்.  அவர் பொதுவில் சுட்டிக்காட்ட விரும்புவது ஒருவரின்   நிறைவான பாலியல் வாழ்க்கை அவரை மேம்படுத்தும் என்பதே. இந்த பாலியல் வாழ்வில் நிறைவை அடைய ஏதேனும் சிக்கல் இருப்பின் அது அவரது நடவடிக்கைகளில் ஒரு பிறழ்வாக -delinquency  - வெளிப்படும் என்பதுதான் அவரது பெரும்பாலான கருத்தாக இருக்கும்.


இது சற்று கவனிக்க வேண்டிய செய்தி தான்.



இதற்கு மிகப்பெரிய காரணமாக நான் கருதுவது, ஒரு மனிதன் தனது பாலியல் வாழ்வு குறித்த எதிர்பார்ப்புகளையும்,  தன் உடல் சார்ந்த பாலியல் அழுத்தங்களையும் வெளிப்படுத்த தன் இணையை ஓர் வடிகாலாகவும்  சார்ந்திருப்பதால் தன் இணையிடம் இது குறித்த மிகுந்த தேவைகளை வளர்த்துக் கொள்கிறான். இது இரு பாலருக்கும் பொருந்தும். மேலும் நமது சமுதாயம் இந்த பாலியல் வெளிப்பாடுகளை வாழ்வின் ஒரு அச்சாணியாகவும் பார்ப்பதால் இந்த எதிர்பார்ப்புகள் தவறல்ல என்றே எனக்குப் படுகிறது. இந்த எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தை சந்திக்கும் போது உறவுகள் சற்றே விரிசலடைய வாய்ப்பிருக்கிறது. இப்படி நான் சொல்வதால் கணவன் மற்றும் மனைவி  உறவுகள் இத்தகைய பாலியல் சார்ந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதனால் மட்டுமே பலப்படுகிறது என்பதல்ல.

ஆனால் தற்போதைய பெண்கள் தன் கணவனிடம் இத்தகைய குறைகளை காணும் போது சற்றே மனம் வெறுத்துப் போகின்றனர் என்பது உண்மையே. தயங்காமல் தங்களின் எதிர்பார்ப்புகளையும் ஏமாற்றங்களையும் வெளிப்படுத்துகின்றனர். சிலர் இன்னமும் ஒருபடி மேலே போய் இந்த எதிர்பார்ப்புகளை இணையுடன் நிறைவேற்றிக் கொள்வது தங்களது உரிமை எனக் கருதவே செய்கின்றனர். நமது சட்டமும் அதையே சொல்கிறது. இப்போதைய பெண்கள் தங்களது கருத்துக்களையும், உரிமைகளையும் சற்று உரக்கவே Demand செய்வதால் சில உறவு விரிசல்கள் எழத்தான் செய்யும்.

இந்த முறை மாறவேண்டுமானால், அதாவது இந்த உறவு விரிசல்கள் மறு பரிசீலனைக்கு உள்ளாக வேண்டுமானால், நாம் இந்தத் தேவைகளை சற்று ஆராய வேண்டும்.



காதலில்லா வாழ்வு நம்மை self centered personality ஆக மாற்றி நம்மை எப்போதும் இணையாத இணை கோடுகளாக மாற்றிவிடும். ஆனால் காதலுள்ள வாழ்வு இந்த இணை கோடுகளை முன்னேற்றப் பாதையில் வாழ்க்கை எனும் வண்டியைச் செலுத்த இணைந்து நிற்கும் இருப்புப் பாதைகளாக மாற்றி விடும்.  We only need a common goal or purpose to stay together and if we try to invent, our life may provide this purpose or goal. எனவே காமம் இல்லாவிடினும், உடல் தேவைகள் நிறைவேற்றப் படாமற் போயினும், காதல் இருப்பின் மண முறிவுக்கு வாய்ப்பில்லை என்பதே எனது கருத்து.

காதலில்லா நெஞ்சம் நிச்சயமாக தேவைகளைப் பெறுவதில் மிகக் கடுமையாக இருக்கும். காதல் கொண்ட நெஞ்சம் மிகையுண்ட காதலால் மற்ற குறைகளை மாற்றி விடும் அல்லது ஏற்றுக் கொண்டுவிடும். எனவே காதல் மணமென்றாலும், பெற்றோர் முடித்த மணமென்றாலும் காதல் நிறைந்திருந்தால் மணவாழ்வு நிறைவு பட நிலைக்கும்.

சரி. இந்தக் காதல் உண்டாக வேண்டுமானால் என்ன செய்வது?

முதலில் இணைகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயலவேண்டும். இது ஒரு இணை மற்றவரை கூர்ந்து கவனிப்பதாலேயேதான் உருவாகும். பொதுவாகவே இனக்கவர்ச்சியற்ற காதல் உருவாவது இப்படித்தான். பழகப் பழக மற்றவரிடம் இருக்கும் தனித்தன்மை கொண்ட குணங்களிலிருந்து அவரிடமுள்ள சிறு சிறு அசைவுகள் வரையில் நம்மை கட்டியிழுத்து மயக்கி அவரது நிலையான அருகாமைக்காக  வெகுவாக ஏங்க வைக்கும்.

சரி. பெற்றொரால் முடித்து வைக்கப் பட்ட மணங்களில் இது - இந்த இனக்கவர்ச்சியற்ற காதல் வயப்படுதல் - சாத்தியமா?

நிச்சயமாக சாத்தியமே.


விட்டுக் கொடுத்தலே - Give and take - மண வாழ்வின் அவசியம்



இதைக் கையாள பொறுமை மிக அவசியம். இரண்டாவதாக நாம் எதிர்பார்ப்புகளுடன் புது வரவை வரவேற்கலாகாது. நமது மனதை கூடுமான வரையில் காலியாக - like a blank slate - வைத்துக் கொள்ளவேண்டும். ஏனெனில் நாம் கதைகள் மற்றும் ஒளிப்படங்களில் வரும் கதாபாத்திரங்கள் அல்லது நிகழ்வுகளை ஒட்டியே நமது எதிர் பார்ப்புகளை வளர்த்துக் கொள்வதால் இவைகள் பெரும்பாலும் ஒரு நிறைவேற்றப்படா மாயையாகவே இருக்கும். This kind of expectations lack reality.  எனவே அவைகள் பொய்த்துப் போகும் வாய்ப்புகள் நிறைய உண்டு.


நாம் எதையும் எதிர்பாராது  fresh mind ஆக இருப்போமானால்  நமது இணையிடம் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே நாம் பெறும் வாய்ப்பு  உள்ளது. மிக முக்கியமாக நமக்கு பொறுமை வேண்டும். சிலநேரங்களில் வருடக் கணக்கில் கூட ஆகலாம்.  சில சமயங்களில் அவரது போற்றத்தகுந்த குணங்கள் பிள்ளைப் பேற்றிற்கு பின்னர் கூட வெளிப்படலாம். அதுவரை அமைதி காத்தல் மிக முக்கியம். அதற்குப் பின்னர் காதல் வெளிப்பட்டு பலப்பட வாய்ப்பு மிக அதிகம்.

இணைகள் ஒருவரை ஒருவர் சார்ந்திருத்தல் மிக அவசியம். இது நிச்சயமாய் ஒருவரின் சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் இருக்கலாகாது. சார்ந்திருத்தல் என்றால் not total dependency but complimentary  to each other in every way either physical, financial and or emotional. இது போன்ற சங்கதிகள் நம் வாழ்வில் நிறைந்து இருக்கும் போது காதல் வெளிப்பட்டு பலப்படும்.


இத்தகைய எதையும் எதிர்பாராக் காதலால் - unconditional love -விட்டுக்கொடுத்தல் இன்பமாகும், புரிதல் அதிகமாகும், இந்தப் புரிதலால் மனம் பிரியாது இணைந்து நாம் கொண்ட  மணவாழ்வு இனித்து நிலைக்கும்.

இன்னமும் பேசுவோம்.

அன்பன்,

வேதாந்தி.



Thursday, November 18, 2010

மதியோரே! பூனை மிதியை ஆதரித்து யாணை மிதிக்கு ஆளாவீரோ?

18.11.10
மதியோரே! பூனை மிதியை ஆதரித்து யாணை மிதிக்கு ஆளாவீரோ?



தெரிந்தோ தெரியாமலோ கடந்த பதிவுகள் ஊழலைக் குறித்த தொடர் பதிவுகள் போலாகிவிட்டன. இது ஒரு விபத்துபோல நடந்துவிட்டது. மேலும் இந்தப் பதிவும் ஊழல் குறித்தே. ஊழலும் அதை ஆதரிப்பதும் ஒரு நோய்வாய்ப்பட்ட மனப்பாங்கு- sick mentality - என்பதாலேயே இதைக் குறித்து விரிவாக பேச நினைக்கிறேன்.  இது விளைவுகளைக் குறித்த அறியாமையாலும், மேலும் இந்த சட்ட விரோத சுயநலப் போக்கால் சமுதாய நலன்  சிதைவுண்டு போகும் அபாயமும் இருப்பதாலேயே இன்றைய பேச்சும் ஊழல் குறித்தே.


நமது மக்கள் ஊழல் என்பது நமது வசதிக்காகத்தான் என நினைக்கின்றனர். அவர்களுக்கு தங்களது அன்றாட வாழ்க்கையில் நடக்கும் நிகழ்ச்சிகளைத் தவிர்த்து ஒரு விரிந்த பார்வை கிடையாது. இது வருந்தத் தக்கது.  ஊழலைக் குறித்த ஒரு விரிந்த பார்வை இல்லாததனாலேயே தினமும் நடக்கின்ற ஊழலை ஆதரிக்கின்றனர். அவர்களைப் பொருத்தவரை தாம் ஆதரிக்கும் அன்றாட ஊழல் என்பது ஒரு பூனை மாதிரி.. அதன் காலில் ஒரு மிதி வாங்கிவிட்டால்  எல்லா வேலைகளும் தாமதமின்றி தடங்கலின்றி நடந்து விடுகிறது. எனவே இந்தப் பூனை மிதியை ஆதரிக்கின்றனர்.


ஆனால் அவர்களுக்குத் தெரியாதது என்னவென்றால் இந்தப் பூனை மிதியை தெரிந்து ஆதரித்து தமக்குத் தெரியாமலேயே யாணை மிதிக்கு ஆளாகிறார்கள் என்பதுதான்.



இது தெளிவாக விளங்க ஒரு நடந்த நிகழ்வைச் சொல்லுகிறேன். இது ஒரு நிகழ்வுதான் என்றாலும் நமது ஊக்கம் ஊழலை வளர்த்து யாணையாக்கி அது நம்மை எப்படி மிதித்து துவைக்கிறது என்பதை நிச்சயம் புரியவைப்பதோடல்லாமல் நம்மையும் விழிப்புணர்வுடன் இருக்கத்தூண்டும் என்பதே இந்தப் பதிவின் நோக்கம்.


பொறுப்பான அரசுப் பணியில் பணிபுரியும் ஒரு அலுவலர். அவர் மூலமாக செல்லும் எந்த ஒரு கோப்பையும் கையூட்டு வாங்காமல் கையொப்பமிடமாட்டார். அவரைப் பொருத்தவரை அது அவர் தனது வேலைக்கு அடுத்தவர் கொடுக்கும் அன்பளிப்பு. கேட்பதையோ கேட்டுப் பெற்று காரியம் சாதித்துக் கொடுப்பதையோ சட்ட விரோதமான் செயல் என்று அவருக்கு ஒருபோதும் தோன்றியதில்லை. தான் மற்றவர்களுக்கு சீக்கிரமாய் காரியத்தை முடிக்க உதவி செய்கிறோம்  எனும் எண்ணமே அவரிடம் மேலோங்கியது.


அவரிடம் மற்ற அரசு அலுவலர்கள் சார்ந்த கோப்பு சென்றாலும், “ ஏன் நீங்கள் மட்டுமென்ன பணம் பெறாமலா காரியம் செய்து முடிக்கிறீர்கள்?” எனக்கேட்பதோடு கொடுப்பதிலும் பெறுவதிலும் யாருக்கும் எந்தக் கெடுதியும் இல்லை எனும் நினைப்பை வளர்த்துக் கொண்டார்.


ஆயிற்று. அவரது ஓய்வுக் காலமும் வந்தது. அதுவரை கையூட்டு பெற்று சேமித்த பணத்தில் ஒரு மனை வாங்கி வீடு கட்டினார். எல்லோரும் பாராட்டினர். அவருக்கு பெருமிதம் தாளவில்லை. தான் மிகவும் சாமர்த்தியசாலி என நம்பினார். இரு பெண் பிள்ளைகள். வீடு கட்டியதைப் போக மீதமுள்ள பணத்தில் இரு பெண் பிள்ளைகளுக்கும் மணம் முடித்து விடலாம் என எண்ணினார்.


வீடுகட்டி குடிபுகுந்த சில மாதங்களிலேயே பிரச்சினைகள் வர ஆரம்பித்தன. அனைவருக்கும் நோய் வர ஆரம்பித்தது. டாக்டரிடம் சென்றுவர, மருத்துவச் செலவு என அவரை வாட்டியது. குடும்பத்தார் ஒருவர் மாற்றி ஒருவர் படுத்தனர். வெறுத்துப் போனார். யாரோ வேண்டாதவர் தம் குடும்பத்திற்கு செய்வினை செய்துவிட்டனர் என நம்ப ஆரம்பித்தார்.  பெண்களின் திருமணத்திற்கென்று வைத்திருந்த பணம் மருத்துவச் செலவுக்கும் மாந்திரீகச் செலவுக்குமாய் கரைந்து போனது. ஒரு கட்டத்தில் மனம் ஒடிந்துபோய் கண்ணீர் விட்டுக் கதற ஆரம்பித்தார்.


அவருடனே இருந்த நண்பர் ஒருவர் ஏதோ தோன்ற ஒருநாள் அவரது வீட்டுக் கிணற்று நீரை பரிசோதிக்கச் சொன்னார். அவர் இருந்த பகுதியில் கிணற்று நீரே குடிக்கவும், சமையல் போன்ற மற்ற வேலைகளுக்கும் பயன்படுத்தப் படுவதால் நண்பருக்கு குடிக்க உபயோகப்படுத்தும் நீரைப்பற்றிய சந்தேகம் வந்தது.


அவரது சந்தேகத்தை பரிசோதனை முடிவுகள் உறுதிப் படுத்தின. ஆம் . குடிக்கப் பயன்படுத்தும் நீரில் அளவுக்கு அதிகமான மாசு. நச்சு மாசு. ஊரை விட்டுத் தள்ளியிருந்த ஒரு தொழிற்சாலையின் கழிவு நிலத்தடி நீரை மாசுபடுத்தியிருந்தது. அதிக காலமாக மாசு நிலத்தினுள் விடப்பட்டதால் நச்சு மாசு நீண்ட பகுதிகளுக்கு பரவியிருந்தது. உண்மை தெரிந்தவுடன் அதிர்ந்து போனார். அதற்குள் அந்தப் பகுதி முழுக்க மாசு நச்சு பரவிய தகவலறிந்தவர்கள் யாரும் அங்கு வீட்டு மனைகளோ அல்லது வீடுகளையோ வாங்க முற்படவில்லையாதலால் வீட்டை விற்றுவிட்டு வேறு இடம் பெயர்ந்து போகலாம் என்ற அவரது எண்ணமும் நிறைவேறவில்லை.


தொழிற்சலைகளின் மாசை கட்டுப்படுத்தசட்டமும் சட்டபூர்வ அமைப்புகளும் இருந்தும் இது நடந்தது எப்படி? அப்புறம் தான் நண்பருக்கு உறைத்தது. மாதா மாதமும் மற்றும் வருடத்திற்கு இருமுறையும் என பங்குவைத்து பணம் பறிமாரியதில் சட்டத்திற்கும் அதிகாரத்திற்கும் பொறுப்பில் உள்ளோர்  பணத்தை கொள்ளையடிக்க, தொழிற்சாலை தனது  கழிவில் மாசை கட்டுப்படுத்தாமல் லாபம் பார்க்க, கடைசியில் கட்டுப்படாது வெளியான கழிவு மக்களை யாணையாய் மிதிக்க…


இந்த நிமிடத்தில் மட்டும்தான் அந்த பாதிக்கப் பட்டவர் ஊழலால் இத்தகைய கொடுமையும் விளையும் என அறிந்து உணர்ந்து வருந்தினார். பூனை மிதியென ஊக்குவித்து யாணை மிதியை வாங்கிக்கொண்ட அதிர்ச்சி அவரது நெஞ்சை அடைத்தது.


அய்யா, தமிழ் நாட்டிலுள்ள நொய்யல் ஆற்றின் நச்சு நீங்கள் எத்துனை தொலைவிலிருந்தாலும் விளையும் உணவுப் பயிர் மூலமாக உங்களை வந்தடையும். பாழான  பாலாறு யாருடைய சொத்து? பாலாற்றுப் படுகையிலுள்ளோர் பணம் செலவழித்தே நல்ல குடிநீரைப் பெறவேண்டிய அவலம் மிகக் கொடுமையல்லவா? இயற்கை வளங்களை சுயநலத்திற்காக நச்சுப்படுத்த நாம் அனுமதிக்கலாமா?

இது மட்டுமல்ல. நவம்பர் 17, 2010 தேதியிட்ட The Hindu  நாளிதளில் திரு.  P. Sainath   எழுதியிருக்கும் “ Illegal financial flows: the great drain robbery”  என்ற தலைப்பில் சொல்லியிருப்பதை கவனியுங்கள்:

According to a study by Global Financial Integrity (GFI), India has lost nearly a half-trillion dollars in illegal financial flows out of the country. These “illicit financial flows,” says GFI, “were generally the product of corruption, bribery and kickbacks, criminal activities and efforts to shelter wealth from a country's tax authorities.”

புரிகிறதா.. நாடுகடந்து செல்வம் செல்லுமளவுக்கு ஊழல் மலிந்து விட்டது..

இது யார் சொத்து..? நம் சொத்தல்லவா..

இனியும் ஊழலை ஊக்குவிக்கலாமா?



மதியோரே.. இனியும் பூனை மிதியென ஊழலை ஆதரித்து யானை மிதிக்கு ஆளாகாதீர்..  மதம் கொண்டதைப்போல்  நாட்டை அழிக்கத் துணிந்துவிட்ட ஊழல் யாணையை இனியேனும் ஊக்குவிக்காது கட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்போம். நாம் ஈடுபடும் எச்செயலிலும் ஊழலை வளர்க்காது செயலாற்றுவோம். பிழைத்து வளர்வோம். நமது நாட்டினையும் அதன் செல்வத்தையும்  காப்போம்.

மீண்டும் பேசுவோம்.

அன்பன்,

வேதாந்தி.





Related Posts Plugin for WordPress, Blogger...