23.11.10
நமது செயல்பாடுகளைத் திரிக்கும் பிம்பப் பார்வைகள் சரியானவைகளா?
நம்முடைய செயல்பாடுகள் நமது பார்வைகளின் புரிதலிலான வினைகளின் வெளிப்பாடுகளே.
நாம் வெளிப்படுத்தும் அன்பு, வெறுப்பு என்பவைகள் மற்றவர்கள் குறித்த நமது பார்வைகள் பொறுத்து வேறுபடுகின்றன. நாம் ஒருவரை வெறுத்தோமானால் அவருக்குப் பிடிக்காதவைகளாக நாம் கருதுபவைகளை அவருக்குச் செய்வோம். நாம் ஒருவரை விரும்பினோமென்றால் அவருக்குப் பிடித்தவைகளாக நாம் கருதுபவைகளை அவருக்குச் செய்வோம். இங்குதான் நமது பார்வைகள் பெரும் பங்காற்றுகின்றன.
நாம் அன்பு செய்யும் ஒருவருக்கு உண்மையிலேயே அவருக்கு பிடித்தவைகளை அவருக்கு செய்கிறோமா? அல்லது நமக்குப் பிடித்தவைகளை நாம் அவர்கள் மீது திணிக்கிறோமா? என்பது குறித்துத் தான் நமது இன்றைய பேச்சு
இதை எளிதாகப் புரிந்துகொள்ள நாம் வீடுகளில் வளர்க்கும் செல்லப் பிராணிகளையும், பறவைகளையும் எடுத்துக் கொள்ளலாம். வானமே எல்லையாக பறந்து திரியப் பிறந்த பறவைகள் நம்முடைய ‘அன்பால்’ கூண்டில் அடைக்கப் பட்டிருக்கின்றன. சிறகுகள் கொண்ட அவைகளின் பிறப்பிற்கான பொருளே இல்லாமல் போய்விடுகிற அவலமல்லவா இது?
ஆனால் உண்மையில் நாம் இந்தப் பறவைகளை நேசிக்கிறோம். இல்லாவிடில் இதனை பொருள் செலவழித்துப் பெற்று, அதிக பொருட்செலவில் ஒரு கூண்டினையும் வாங்கி அதனை அடைத்து வைப்பதோடு நிதமும் அதற்குப் பிடித்த (அதாவது நமக்குப் பிடித்த..) உணவு வகைகளையும் அதற்கு உண்ணக் கொடுப்பதோடு அதன் எச்சத்தையும் சுத்தம் செய்து வைப்போமா..? நாம் உண்மையிலேயே கூண்டிலிருக்கும் பறவை இதனை மிகவும் விரும்புகிறது என நினக்கிறோம். இத்தகைய மனோபாவம் தான் நம்மை நம்முடன் உள்ள மற்ற மனிதர்களையும் நமது பார்வையிலேயே பார்க்கத் தூண்டுகிறது. This kind of attitude lacks empathetic perception.
இதைத்தான் நான் நம்மை ஏமாற்றும் பிம்பப் பார்வை எனக் குறிக்கிறேன். இந்த பிம்பப் பார்வை என்பது கண்ணாடியில் நமக்குத் தெரியும் பிம்பம் போலவே மாயை செய்து பொய்யை உண்மையாக்கி நமக்குக் காட்டும். கண்ணாடி பிம்பங்கள் அச்சு அசலாக இருந்தாலும் அதில் இட வல மாற்றம் இருக்கும். இந்த இட வல மாற்றம் கொண்ட பிம்பமானது உண்மைப் பொருளுக்கு எதிரானதானதல்லவா? ஆனால் நாம் இதை உண்மையென நம்புகிறோம். தெரியும் பிம்பத்தைத் தாண்டி உண்மையை ஆராய மறுக்கிறோம். இதனால் நாம் செய்ய நினைக்கும் காரியங்களுக்கு எதிரான செயல்களையே நம்மையறியாது நாம் செய்கிறோம்.
இதை அறியாமை என்று சொல்வதா அல்லது சுயநலம் என்று சொல்வதா?
எனது நண்பன் கிராமத்தைச் சேர்ந்தவன். அவன் நகரத்தில் வேலை பார்த்தாலும் பெற்றோர் கிராமத்தில் இருப்பதால் அடிக்கடி அவன் பெற்றோரைப் பார்க்க கிராமத்திற்குச் செல்வதுண்டு. அவர்களது வீடு வயல்களுக்கு நடுவே அமைந்திருந்தது. கூடவே கிராமத்து வளர்ப்புப் பிராணிகளான ஆடு, மாடு, கோழி, நாய் மற்றும் பூனையும் உண்டு. இந்தப் பிராணிகளுக்கும் இவனது பரிச்சயம் உண்டு. தங்களது எசமானன் வீட்டுப் பிள்ளை இவன் என்பதை சரியாகவே புரிந்து வைத்திருந்தன இவைகள். இதன் விளைவாக ஒவ்வொன்றும் ஒரு வகையில் தனது நன்றியினை வெளிப்படுத்தும். இவனைச் சுற்றிச் சுற்றி வந்து உரசிச் செல்லும்.
ஒரு முறை இவன் ஊருக்குச் சென்றுவந்தபோது நடந்ததைச் சொன்னான். அதைக் கேட்ட நான் உறைந்து போய்விட்டேன். வேறொன்றுமல்ல. ஒரு இரவு இவன் தூக்கத்தில் படுக்கையில் புரண்டு படுத்தபோது தனது கையில் ஏதோஒன்று மிகப் பெரிதாக வழு வழுப்பானதொன்று தட்டுப் படவே அரைத் தூக்கத்தில் எழுந்து பார்த்திருக்கிறான். அருகே இவர்களது வீட்டுச் செல்லப் பூனை இவனது காலடியில் மிகவும் மரியாதை காட்டுவதைப் போல நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டிருந்தது. சட்டென விழிப்பு வந்து தனது கையில் தட்டுப்பட்டதைப் பார்த்தவனுக்கு உயிரே உறைந்து போனது. குற்றுயிராய் அய்ந்தடி நீள முள்ள தடிமனான பாம்பு ஒன்று தலை கடிபட்டு இவனது படுக்கையில் துடித்துக் கொண்டிருந்தது. அலறியடித்து எழுந்து உட்கார்ந்தான். பூனை இவனது காலடியிலேயே கம்பீரமாக உட்கார்ந்து கொண்டிருந்தது. தனது படுக்கையைச் சுற்றி ஆராய்ந்த பிறகுதான் தெரிந்தது. இவனது வீட்டுப் பூனை எங்கோ வயல் வெளியில் தென்பட்ட பாம்பு ஒன்றை தலையைத் துண்டித்து கவ்விக் கொண்டுவந்து படுக்கையில் இவனது காலடியில் போட்டிருக்கிறது என இவனுக்குப் புரிந்தது.
இது குறித்து விலங்கின ஆர்வலர்களிடம் விசாரித்ததில் விலங்குகள் தங்களது எசமானர்களிடம் தாங்கள் கொண்ட அன்பை வெளிப்படுத்தும் விதமாகவே இத்தகைய நடவடிக்கைகளில் அவைகள் ஈடுபடுகின்றன எனத் தெரிந்தது. இது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது.
மேற்சொன்னதில் பூனையைப் பொருத்த மட்டில் தான் கவ்விக் கொண்டுவந்த பாம்பு தன் எசமானனுக்கு தனது உண்மையான விசுவாசத்தைக் காட்டக் கூடிய ஒரு பரிசுதான். ஆனால் சற்று நினைத்துப் பாருங்கள் தனது படுக்கையில் பாம்பைக் கண்ட எனது நண்பன் எத்துனை நடுங்கிப் போயிருப்பான் என்று. தனக்குப் பிடித்தது தன் எசமானனுக்கும் பிடிக்கும் என பூனை நினைத்தது பிம்பப் பார்வையல்லவா?
இத்தகைய பிம்பப் பார்வைகள் நமது உறவுகளின் புரிதலுக்கு ஒரு இடையூராகத்தான் இருக்கும். நான் மேலே குறிப்பிட்டவைகள் மனித உறவுகளில் ஒருதலைக் காதலுக்கு சரியாகப் பொருந்தும்.
நான் மேற்சொன்னதையே சற்று விரிவு படுத்திப் பாருங்கள். நாம் ஒருவரை நேசிக்கிறோம் எனக் கொள்வோம். என்றாவது அவர்களது பார்வையில் உலகத்தைப் பார்க்க முயன்றிருக்கிறோமா? அப்படி பார்க்கத் தொடங்கும் போதுதான் நாம் உண்மையிலேயே அவர்கள் மீது அன்பு கொண்டிருக்கிறோம் என்று பொருள். நான் மேற்சொன்னபடி இல்லாது நாம் நமது பார்வையிலேயே, நமக்கு வேண்டியவைகளையே அல்லது நமக்குப் பிடித்தவைகளையே அவர்களுக்கும் செய்வதோடு மட்டுமல்லாது அதை அவர்கள் விரும்பவும் செய்யவேண்டும் என எதிர்பார்ப்பது நாம் அவருக்குச் செய்யும் கொடுமையல்லவா? இத்தகைய ‘அன்பு’ அவர்களைக் கொன்று விடாதா? அல்லது அவர்களை திரிதலின்றி புரிந்துகொண்டோமானால் அவர்கள் விருப்பத்திற்கு மாறான செயல்களைத்தான் செய்வோமா? அல்லது அவர்களிடமிருந்து அவர்கள் விருப்பத்திற்கு மாறான செயல்களை எதிர்பார்ப்போமா?
மிகச் சரியாகப் புரிந்து கொண்டால் இந்தப் பேச்சு அன்பு குறித்து நாம் கொண்ட பிம்பப் பார்வையை சரியாக்கி நமது வாழ்வை மிகவும் பயனுள்ளதாக மாற்ற வல்லதாகும்.
இன்னமும் பேசுவோம்.
அன்பன்,
வேதாந்தி.
தாங்கள் சொல்வது போல இந்தப் பதிவு கிட்டத்தட்ட ஒருதலைக் காதல் போன்றது தான். பலருடைய விருப்பங்கள் அன்பு என்ற பெயரில் மற்றவர் மீது திணிக்கப்படுகிறது என்பதே மறுக்கமுடியாத உண்மை.
ReplyDeleteஎனக்கொரு சந்தேகம்.
//அவர்களை திரிதலின்றி புரிந்துகொண்டோமானால்//
இதில் திரிதல் என்பதன் சரியான விளக்கம் என்ன?
@ இந்திரா..
ReplyDeleteதிரிதலின்றி என்பது சரியான பார்வையினைக் கொண்டு தவறின்றி புரிந்து கொள்ளுதலைக் குறித்தே சொல்லப் பட்டிருக்கிறது.
நாம் பொதுவாகவே நமது பார்வையை பிறரது பார்வையாகவும் கொள்கிறோம். அதனாலேயே இந்தத் திரிதல் விளைகிறது. அதாவது நமது விருப்பங்கள் அவர்களது விருப்பமாகவும் கொள்கிறோம்.
தங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்
ஒவ்வொரு விஷயத்தையும் நீங்கள் அணுகும் விதம் நல்லா இருக்குதுங்க....
ReplyDeleteதங்கள் வரவிற்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்
ReplyDelete