Followers

Monday, November 1, 2010

வாழ்வில் மாற்றங்கள் எதிர்ப்பிற்குரியனவா?

01.11.10
வாழ்வில் மாற்றங்கள் எதிர்ப்பிற்குரியனவா?



மாற்றங்கள் மாறாதது. ஆனால்  இந்த  மாற்றங்களைப் பார்க்கும் மனநிலை மட்டும் பெரும்பாலோனோர்க்கு  மாறுவதில்லை. இவர்கள் இந்த மாற்றங்களை ஒரு எதிர்ப் பார்வையிலேயே பார்ப்பதால் இந்த மாற்றங்களின் முழுப் பலனை அடைய முடியாமல் தவறவிடுகின்றனர். They fail to cash in on the change. மாற்றங்கள் நமது விருப்பங்களுக்கு மதிப்பளிப்பவைகளும், கட்டுப்பட்டவைளும் அல்ல என்பதை நாம் உணர மறுப்பதும் நமது இந்த எதிர் நிலைக்கான காரணங்களில் ஒன்றாகும்.  நமது பார்வைகளும், நோக்கங்களும் நமது வாழ்வின் அனுபவங்களைக் கொண்டு மாறுதல்களை அடையாத வரையில், நமது வாழ்வில் நாம் பெற்ற அனுபவங்கள் வீணாக்கப் படுகின்றன. இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான அனுபவமானது மாற்றங்கள் அனைத்தும் வெறுக்கத் தக்கவைகள் அல்லது விலக்கத் தக்கவைகள் அல்ல என்பதுதான்.



இந்த மாற்றங்களைப் பொருத்தமட்டில் நாம் இவைகளை நம் பார்வையில் நமக்கு வரும் இழப்புகளாகவோ அல்லது அதற்கு மாறானவைகளாகவோ கருதுகிறோம். பொதுவாகவே எல்லா மாற்றங்களுக்கும்  நமது அடிமனதில் ஒரு விளங்காத லேசான எதிர்ப்பு ஆரம்பத்தில் இருக்கும். இது ஏனெனில் இந்த மாற்றங்கள் நம்மிடமிருந்து ஒரு சில செயல் எதிர்பார்ப்புக்களை முன் வைப்பதனால் நமது மனம் முதலில் சற்றே அடம் பிடிக்கும் பிள்ளையாய் இதை எதிர்க்கும். சிலருக்கு புதிய பலகாரங்களை பார்க்கும் போது அது தனது மனதில் இருக்கும் ஒரு இனிமையான காட்சியை, அனுபவத்தை  ஒட்டியிருந்தாலொழிய அதை சுவைக்கத் தயங்குவர். நிச்சயமாய் உண்ண மறுப்பர்.  உதாரணமாய் எனக்குக் கிடைத்த அனுபவத்தை இங்கு பகிர்தல் பொருத்தமாயிருக்கும் என நினைக்கிறேன்.




நண்பர்களுடன்  நான் ஒருமுறை தில்லி சென்றிருந்த போது தமிழ்நாட்டு உணவு வகைகளுக்காக மிகவும் அலைய வேண்டியிருந்தது. இதற்காக பல வேளை சாப்பாட்டை குறைத்துக் கொண்டோ அல்லது சாப்பிடாமலோ கழிக்க வெண்டியிருந்தது. ஒரு மாலைப் பொழுது நண்பர்களுடன் நமது உணவு வகைகளைத் தேடி அலைந்தபோது ஒரு தெருக்கடையில் கூட்டம் அதிகமாக இருந்தது. தெருக்கடை என்றாலும் சுகாதாரமாக தோற்றமளிக்கவே கடையை கவனித்தேன்.  இட்லிப் பாத்திரம் நீராவி பொங்க அடுப்பில் காய்ந்து கொண்டிருந்தது. சாப்பிடுவோரைப் பார்த்தேன். அனைவரது தட்டிலும் சற்றே பெருத்த மினி இட்லி அளவில் முடுச்சு முடுச்சாய் வெண்ணிற உருண்டைகள்.  இட்லியை ஒத்திருந்த பதார்த்தத்தை பார்த்த உடனே ஆளுக்கு ஒரு தட்டு கொண்டு வரச் சொல்லி  சாப்பிட உட்கார்ந்து விட்டோம்.  பூப் பூவாய் பஞ்சு போன்ற இட்லிகளை சட்னியுடன் எதிர்பார்த்து காத்திருந்தோம்.



வந்து சேர்ந்த உணவை வாயில் வைத்த உடனே பதைபதைக்க வைத்த காரத்தினால் நங்கள் விழிபிதுங்கி கண்களில்  கண்ணீர் பீரிட ஒருவரை ஒருவர் பார்த்து விழித்த தருணம் இருக்கிறதே.. இன்றும் மறக்க முடியாத ஒரு காட்சி அது. விசாரித்ததில் அந்தப் பலகாரத்தின் பெயர் ‘மொமொ’ என்றார்கள்.  எங்களுக்கு ஏமாற்றத்தினை அளித்தாலும் அந்த அனுபவம் எங்களுக்கு ஒரு புதிய சுவையை அறிமுகப் படுத்தியது.  இப்போது தில்லிக்கு செல்லும் போதெல்லாம் ‘மொமொ’ சுவைக்காமல் வருவதில்லை.


இந்த அனுபவம் கொடுத்த புதிய சுவையினால் பல உணவுகளை தயக்கமில்லாமல் சுவைத்து எனது அனுபவங்களை தயக்கமில்லாமல் பெருக்கத் துணிந்தேன்.


எனக்கு இன்னமும் பசுமையான நினைவு இருக்கிறது. கணினியின் வரவு அரசு அலுவலகங்களில் ஆரம்பித்த சமயம் அது. அனைவரும் பயத்தில் போராட்டங்களை நடத்தினர். போராட்டத்திற்கும் கணினியின் எதிர்ப்பிற்கும் அவர்கள் சொன்ன காரணங்கள் கணினியின் வரவு ஆட்குறைப்பிற்கு வித்திடும் என்பதுதான். எல்லோருக்குமே அது ஒரு புதிய சிக்கல். யாருக்கும் அதன் தொடர்ச்சியை சரியாக கவனிக்கும் அளவுக்கு அனுபவங்கள் கிடையாது. புதியதைக் கண்டு பயப்படும் உணர்வே அனைவரது மனதிலும் விஞ்சியது.



ஆனால் இப்போது அந்த பயம் ஒரு பொருளற்ற பயம் என்று மக்கள் உணரத் தொடங்கி விட்டனர். இன்னும் சொல்லப் போனால் கணினியின் வரவு ஒரு புதிய துறையையே ஊக்குவித்து வேலை வாய்ப்பை பலமடங்கு பெருக்கி அன்னியச் செலாவணியையும் பெருமளவு நமக்கு ஈட்டித்தந்து நமது நாட்டையே பொருளாதாரத்தில் முன்னிறுத்தியது.


ஒருவகையில் இந்த மாற்றங்களுக்கு எதிர்ப்பான நமது மன நிலையே தலைமுறை இடைவெளிக்கு காரணமாகவும் இருக்கலாம். இது பற்றி பின்னர் பேசுவோம்.


மாற்றங்கள் பயந்து ஒதுக்கப் பட வேண்டியவைகளல்ல. மாறாக அது நமக்குத் தரும் அனுபவங்கள் நம்மை மேன்மைப் படுத்தும் வகையானும் இருக்கலாம். எனவே மாற்றத்திற்கு அஞ்சாது மாறுதல்களை விருப்பு வெறுப்பற்ற பார்வையில் நோக்கி அதற்கு ஒத்திசைய - ( adapt to change ) - முனைவோம். மாற்றங்கள் தரும் பலனை முழுதாய் பெறுவோம்.


மேலும் பேசுவோம்.

அன்பன்,

வேதாந்தி.


4 comments:

  1. உண்மை!! மாற்றத்தை கண்டு பயப்படாமல் அதை எதிர் நோக்குவதே புத்திசாலித்தனம்

    who moved my cheese கூட இந்த அடியை ஒற்றித்தானே இல்லையா ஜி?

    ReplyDelete
  2. சரியாகச் சொன்னீர்கள்..

    தங்கள் வரவிற்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்.

    ReplyDelete
  3. எனவே மாற்றத்திற்கு அஞ்சாது மாறுதல்களை விருப்பு வெறுப்பற்ற பார்வையில் நோக்கி அதற்கு ஒத்திசைய - ( adapt to change ) - முனைவோம். மாற்றங்கள் தரும் பலனை முழுதாய் பெறுவோம்.


    ..... Good message!!!

    HAPPY DIWALI!!!

    ReplyDelete
  4. @ Chitra..

    தங்கள் வரவிற்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்.

    தீபாவளி வாழ்த்துக்கள்..

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...