16.11.10
தவறின்றி ஊழல் செய்து தண்டனையின்றி தப்பிப்பது எப்படி?
ஊழல் ஒன்றும் புதிதான செய்தியல்ல. இதைப்பற்றி முன்னரே பேசியிருக்கிறேன். ஆனால் இந்த ஊழலை எப்படி சாதுர்யமாகச் செய்கிறார்கள் என்பதுதான் இன்றைய பேச்சு. மறுபடியும் நான் முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்த விஜய் தொலைக்காட்சியின் - 14.11.10 அன்று ஒளிபரப்பப் பட்ட நீயா, நானா? நிகழ்ச்சியையே குறிப்பிடுகிறேன். அந்த நிகழ்ச்சியில் தான் எழுத்தாளர், திரு. மனுஷ்ய புத்திரன் ஏறக்குறைய 80,000 கோடி உரூபாய்கள் அரசியல் கட்சிகளால் தேர்தல் சமயத்தில் செலவிடப்படுகின்றன என்றார். கூடவே ஒரு கேள்வியையும் கேட்டார். இத்துனை பணத்தை இறைப்பவர்கள் லாபம் எங்கிருந்து பெறுவார்கள்? என்பதுதான் அது. இதற்கு ஒரே பதில் அவர்கள் அடையும் லாபம் மக்களின் பொதுப் பணத்திலிருந்து அல்லது பொதுச் சொத்தை சுய லாபத்திற்காய் நிர்வாக முறைகொண்டு பயன்படுத்துவதிலிருந்து என்பதைத் தவிர வேறு பதிலில்லை என்றே கருதுகிறேன்.
மேற்சொன்னதிலிருந்து ஊழலுக்கான அறிவுறுத்தல்கள் மேல்மட்டத்திலிருந்து தான் தொடங்குகிறது என்பது தெளிவு.
சரி. இவர்கள் சட்டத்தை ஏய்ப்பது எப்படி?
நமது சட்டமும், அரசு அலுவலகங்களின் நடைமுறைகளும் போதுமான அளவுக்கு சரியானதாகவே இருக்கின்றது. கையாள்வோர்தான் அதனை தனக்குச் சாதகமாக வளைத்துக் கொள்கின்றனர். ஊழல் தலைமை தனக்குச் சாதகமாக இருக்கும் அதிகாரிகளுக்கு தனது சிரித்த முகத்தையும் தனக்கு எதிராக இருக்கும் நேர்மையான அதிகாரிகளுக்கு தனது சிங்கப்பல்லையும் காட்டி வருகிறது.
உதாரணத்திற்கு ஒரு hypothetical case கீழே கொடுக்கிறேன்.
அரசு விதிகள் அரசுக்கு எந்த வகையிலும் நட்டமேற்படுத்தக்கூடிய வகையில் எந்தச் செயலையும் செய்யவோ அல்லது அனுமதிக்கவோ கூடாது என்ற அடிப்படைக் கொள்கையில் தான் அமைக்கப் பட்டிருக்கிறது. இதனை ஒட்டியே அடிப்படை செயல்முறை விதிகள் உண்டாக்கப் பட்டிருக்கின்றன. இதில் ஒன்று டெண்டர் முறை. இதில் நாம் எந்தப் பொருளை அல்லது எந்த ஒப்பந்ததாரரை ஏற்றுக் கொள்ள வேண்டுமோ அவரை அல்லது அந்தப் பொருளை மட்டுமே குறிக்கும் படிக்கு specifications நாம் வரையரை செய்து முடிக்கலாம்.
உதாரணத்திற்கு மகிழுந்துகளில் இரண்டு வகை உள்ளதெனக் கொள்வோம். ஒன்று பழமையான தொழில் நுட்பத்துடன் கூடியது. கொள்விலை குறைவு. மற்றொன்று புதிய தொழில் நுட்பத்துடன் கூடியது. கொள்விலை அதிகம். ஆனால் முந்தயது எரிபொருளை அதிகம் குடிக்க வல்லது. பின்னது குறைந்த எரிபொருளை பயன் படுத்தி அதிக தொலைவு செல்லக் கூடியது. இப்போது டெண்டர் முறையில் specifications குறிப்பிட வேண்டி யிருந்தால் முந்தையதையும் குறிப்பிடலாம் அல்லது பின்னதையும் குறிப்பிடலாம். ஆனால் இதற்கு தக்கவாறு கோப்பில் குறிப்பெழுத வேண்டும்.
அதாவது ஒரு 500 உந்து வண்டிகள் அலுவலக உபயோகத்திற்கு வாங்க வேண்டி யிருந்தால், துறைத் தலைமை முன்னதாகக் குறிப்பிட்ட மகிழுந்து வாங்கும்படிக்கு வற்புறுத்தினால், கோப்பில் தற்போதைய சந்தையில் குறைந்த விலையில் உள்ள குறிப்பிட்ட மகிழுந்துகளை வாங்கலாம் என்றும் இது அலுவலக விதிமுறைகளுக்குட்பட்டு குறைந்த விலையில் வாங்கப்படுவதால் இந்த கொள்ளல் விதிமுறைகளுக்கு உட்பட்டதென்றும் எழுதலாம். அல்லது, துறைத்தலைமை பின்னதாக குறிப்பிட்ட மகிழுந்து வாங்கும்படிக்கு வற்புறுத்தினால், கோப்பில் இந்த வகை மகிழுந்துகள் எரிபொருள் சிக்கனம் மிகுந்ததென்றும், இதனால் சராசரியாக வருடத்திற்கு இத்தனை உரூபாய்கள் அரசு மிச்சப் படுத்தலாம் என்றும் மேலும் எரிபொருள் குறைவாக உபயோகிக்கும் மகிழுந்துகளை வாங்குவதால் காற்று மாசுபடுவதையும் குறைக்கலாம் என்றும் கோப்பு எழுதலாம்.
இது துறைத்தலைமை சொன்னபடியே செய்வதால் தடையின்றி கீழிருந்து மேல் மட்டம் வரை கையொப்பமாகிவிடும். ஆனால் துறைத்தலைமை சொன்னதன் பேரில் இது முடிவெடுக்கப் பட்டது என்று கோப்புகளில் இருக்காது.
ஒருவேளை இதற்கு மாற்றாக கோப்பு எழுதப்பட்டால், துறைத்தலைமை தனக்குக் கீழ் உள்ள அதிகாரிக்கு தயவுசெய்து பேசவும் என கோப்பில் குறிப்பிடுவார். அதற்கப்புறம் கோப்பின் போக்கு வேறாக இருக்கும். எந்தத் துறையிலும் ‘நான் அலுவலக விதிகளை மீறிச் செயல் பட மாட்டேன் ‘ என்று பிடிவாதமாக இருக்கும் சில புண்ணிய வான்களுக்கு கண்டிப்பாக குறைந்த பட்சம் தனக்கு பிடிக்காத ஊருக்கு மாற்றம் உண்டு. சில பேரை அதே விதிகளைக்காட்டியே வேறு சில காரியங்களில் தண்டித்த கதைகளும் உண்டு. உச்சகட்டமாக ஏதேனும் திருட்டு அல்லது இது போன்ற குற்றச் செயல்களை அலுவலகத்தில் நிகழ்த்தி இந்த நேர்மையான அதிகாரிகளை மாட்டிவிடுவதும் உண்டு. எத்துனையோபேர் தனது பணி ஓய்வுக்குப் பின்னர் சட்டப்படி தனக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளையும் மிகுந்த போராட்டத்திற்குப் பின்னரே பெற்றிருக்கின்றனர்.
இதற்கு மாறாக துறைத்தலைமைக்கு ஆதரவாக நான் முன் சொன்னபடி நடக்கும் அதிகாரிகளுக்கு பெரும் ஆதாயம் உண்டு. தங்கள் தகுதிக் கேற்ப தங்கள் விருப்பப்படி ஊழல் செய்து கொள்ளலாம் மீறி இவர்கள் ஏதேனும் சிக்க நேர்ந்தாலும் துறை நடவடிக்கைகளை தாமதப் படுத்தியோ அல்லது மிக மிக குறைவான தண்டனை கிடைக்கும்படியோ செய்து விட்டு அவர்களை இன்னமும் அதிக ஊழலுக்கு வசதியான இடத்திற்கு மாறுதல் செய்துவிடுவர். ஊழல் இப்படித்தான் பலதிசைகளிலும் கரங்களை விரித்துப் பரவுகிறது.
இத்தனையையும் மீறி தற்சமயம் உள்ள Right to information Act - தகவலறியும் உரிமைச் சட்டத்தை - ஊழலறிய ஒரு கருவியாக உபயோகப் படுத்தினாலும் பொது மக்களுக்கு சரியான தகவல்களை கிடைக்காமற் செய்து விடுவர். அல்லது எல்லாவற்றிற்கும் மேலாக, இப்படி ஊழல் குறித்த செய்திகள் வெளியானால் ஒரு குழுவை அமைத்து அந்த ஊழல் குறித்த குழுவின் கருத்தைக் கேட்பர். நிச்சயமாய் குழுவின் அறிக்கை ஊழல் புரிந்தோர்க்கு சாதகமாகத்தான் இருக்கும்.
எனது கேள்விகள்:
ஒரு ஒப்பந்த நிறுவனம் தனது கட்டுமானத்திற்கு பொறுப்பேற்கிறது. ஒரு கட்டமைப்பு குறிப்பிட்ட காலத்திற்குள்ளேயே சிதைந்தால் அரசோ அல்லது எந்த ஒரு தனி மனிதனோ அந்த ஒப்பந்த தாரர் மேல் வழக்குத் தொடரலாம். ஒரு மருத்துவர் தனது சிகிச்சைக்கு பொறுப்பேற்கிறார். தனது சிகிச்சை தவறானது என்ற கருத்து எழும்போது அவர் மீது வழக்கு தொடர நமக்கு உரிமை இருக்கிறது.
ஆனால் எல்லா முடிவுகளையும் எடுக்கும் அரசு இயந்திரத்தில் எடுக்கும் முடிவுகளுக்கு முடிவுகளை பரிந்துரைப்போர் பொறுப்பேற்பதில்லை. இது ஏன்? இத்தகைய முடிவுகள் வழக்கிற்கு உட்படும் போது யாரோ பலிகடா ஆகின்றனர். இது ஏன்?
மிகக் கவனமாகக் கையாளப்படவேண்டிய முடிவுகள் உதாரணமாக சுற்றுச்சூழல் சம்பந்தமான முடிவுகளுக்குக் கூட ஒரு தனி அதிகாரி பொறுப்பேற்பதில்லை. நிகழ்வுகள் நடக்கும் போது காரணங்களை மட்டும் கூறுகின்றனரே ஒழிய நிகழ்வுகளுக்கோ அல்லது முடிவுகளுக்கோ அதிகாரிகள் பொறுப்பேற்பதில்லை இது ஏன்?
தவறாகப் பயன்படுத்தத்தான் அதிகாரிகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளதா? அல்லது தனக்கு மேல் உள்ள அரசியல் வாதிகளுக்கு ஊழலுக்கு வழிசொல்லிக் கொடுக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் கொடுக்கப் பட்டுள்ளதா?
அரசியல் வாதிகளுக்கு தவறு செய்ய வழிமுறைகளை சொல்லித்தர அதிகாரிகளும், தப்பிக்க committee, commission அமைத்து அதிகாரிகள் தண்டனையின்றி தப்பிக்க அரசியல் வாதிகளும் துணையாய் கைகோர்த்து நிற்கையில் நாடு எப்படி தப்பிப் பிழைத்து நல்வழியில் செல்லும்?
அய்யோ பாவம் பொது சனம். தேர்தல் சமயத்தில் எல்லாம் மறந்து போக ஒரு அய்நூறு உரூபாய்களும் சில இலவசங்களும் அவருக்கு போதும்.
நான் சொல்ல முனைவது தெளிவான சிந்தனையை இழப்பவன் தனது அத்தனை உரிமைகளையும் இழக்கிறான் என்பதே.
இன்னமும் பேசுவோம்.
அன்பன்,
வேதாந்தி.
தெளிவான சிந்தனையை இழப்பவன் தனது அத்தனை உரிமைகளையும் இழக்கிறான் //
ReplyDeleteஉண்மை..நல்ல பதிவு..தொடருங்கள்..
//அய்யோ பாவம் பொது சனம். தேர்தல் சமயத்தில் எல்லாம் மறந்து போக ஒரு அய்நூறு உரூபாய்களும் சில இலவசங்களும் அவருக்கு போதும்.//
ReplyDeleteஅறிவில்லையென்றால் அப்படிதான். நம் மக்கள் யோசிப்பதே இல்லை.
நல்லதொரு அலசல் நண்பரே
@ ஹரிஸ்,
ReplyDelete@ வரதராஜலு,
தங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்
உருப்படியான பேச்சு.
ReplyDelete@ ramalingam...
ReplyDeleteதங்கள் வரவிற்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்
நல்ல விஷயம். எந்த ஒரு பெரிய விசயங்களிலும் தவறுகளை கீழ்மட்டங்களில் இருப்பவர்களின் மேல் போடுவார்கள். அதுவே வெற்றி பெற்றால் தன்னுடைய அறிவுரையினால் வந்தது என்று கூறுவர்.
ReplyDelete@satheshpandian ..
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்
\\ஊழல் தலைமை தனக்குச் சாதகமாக இருக்கும் அதிகாரிகளுக்கு தனது சிரித்த முகத்தையும் தனக்கு எதிராக இருக்கும் நேர்மையான அதிகாரிகளுக்கு தனது சிங்கப்பல்லையும் காட்டி வருகிறது.\\ இதற்குப் போட்டுள்ள படம் சாலப் பொருத்தம். ஜப்பான், அமரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் மக்களாட்சிதான் என்றாலும் இவ்வளவு ஊழல் இல்லையே? காரணம் மக்கள் அங்கே விஷயமறிந்தவர்கள், ஒற்றுமையுடன் இருக்கிறார்கள், தப்பு பண்ணியவன் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் நோண்டி நொங்கெடுத்து விடுவார்கள். நாம் நாட்டு மக்களாட்சியால் என்ன பயன்? மத்தியிலும் மாநிலத்திலும் குடும்ப ஆட்சிதான் நடக்கிறது. ஒவ்வொரு தேர்தலிலும் கள்ள வோட்டு போட்டே ஒரே குடும்பமே ஜெயிக்கிறது. பண்ணும் அட்டூழியங்களைக் கேட்டால் ஆள் வைத்து அடிக்கிறார்கள், கதையையே கூட முடிக்கிறார்கள். இது என்ன ஜனநாயகம்? கொடுங்கோலாட்சியே மேல்.
ReplyDeleteதிருவாளர் வேதாந்தி அவர்களின் பேச்சு வெட்டிப்பேச்சே அல்ல.
ReplyDeleteஇன்றைய யதார்த்தமான உண்மைகளை விவேகத்துடன் புட்டுப்புட்டு தந்திருக்கும் மிக அருமையான அலசல் கட்டுரை இது.
//தெளிவான சிந்தனையை இழப்பவன் தனது அத்தனை உரிமைகளையும் இழக்கிறான்//
மிகவும் சரியே.
பகிர்வுக்கும் தகவலுக்கும் மிகவும் நன்றிகள். தொடரட்டும் தங்களின் இதுபோன்ற எழுத்துப்பணிகள்.
அடுத்தமாதம் நான் வலைச்சர ஆசிரியர் ஆகும்போதும் இந்தப்பதிவினை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பிக்க உள்ளேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.