Followers

Monday, November 8, 2010

நாம் வேறுபாடுகளில் வாழலாமா?

08.11.10
நாம் வேறுபாடுகளில் வாழலாமா?


நாம் இந்தப் பூவுலகில் வாழ்வது தனித்தல்ல;  மற்றையவைகளுடன் / மற்றையவர்களுடனும்தான். கவனிக்கவும்.. ஒருமனிதன் தனித்து நிற்கும்போது தனது வாழ்வின் அடையாளத்தையே இழக்கிறான். ஆம். நமது வாழ்வே நாம் இயற்கையோடு மட்டுமல்ல இயற்கையின் படைப்புகளோடும் இணைந்து வாழும் போதுதான் அர்த்தமுள்ளதாகிறது. இப்படியிருக்கையில் நம்முடன் இணைந்து வாழப்படைக்கப் பட்ட உயிரிகளை ஒதுக்குவது அல்லது அடிமைப்படுத்துவது என்பது மிகவும் வருந்தத் தக்க ஒன்றாகும்.


நான் மேற்சொன்னது Biological Web  பற்றித் தெரிந்தவர்களுக்கு நிதர்சனமாய் விளங்கும். ஒரு உயிரி மற்றொரு உயிரினை ஏதேனும் ஒரு வகையில் சார்ந்திருப்பதாலேயே இந்த  Biological Web concept உறுதி பெறுகிறது. இந்த உயிரிகளின் வலைப்பின்னலில் ஏதேனும் ஒரு கன்னி விடுபட்டாலும் விளைவு மிகுதியாய் பெருக்கப் பட்டு மனித இனத்தை பாதிக்கும்.  இதனால் தான் நமது வளமான வாழ்வுக்கு நாம் பல்லுயிர் பெருக்கத்தினை ( Biological diversity) போற்றவேண்டும் என்கின்றனர்.  இந்த பல்லுயிர் பெருக்கத்தினை போற்றுதற்குறித்தே இந்து மதத்தில் ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு வகையான கொடிமரம், மற்றும் எல்லா விலங்கினங்களும் ஒருவகையில் புனிதமாக்கப் பட்டுள்ளன. எலி பிள்ளையாரின் வாகனம், மயில் முருகனின் வாகனம், எருது சிவனின் வாகனம், பசு காமதேனுவாக புனிதமடைகிறது, கருடன் விஷ்ணுவின் வாகனம்.. மற்றும் குரங்கு ஆஞ்சனேயப் பெருமான், தசாவதாரத்தில் கடவுளின்  விலங்கின அவதாரம்.. இப்படி பலவகையில் விலங்குகளை பாதுகாத்தல் குறித்து இந்து மதம் அவைகளை புனிதப் படுத்துகிறது.




நம்மிடையே இருக்க படைக்கப் பட்ட விலங்கினங்களையே புனிதப் படுத்தும் இந்து மதம் நம்முடன் வாழ படைக்கப்பட்ட சக மனிதர்களை பலவகைகளிலும் வருந்தத் தக்கவாறு கீழ்ப்படுத்தியும் ஒடுக்கியும் வைத்திருப்பது என்னை பெரும் குழப்பத்தில் ஆழ்த்துகின்ற ஒரு செய்தியாகத்தான் இருக்கிறது. இதை ஒரு சூழ்ச்சியாகத்தான் கருத வேண்டி யிருக்கிறது.


மேலும் காட்டில் உள்ள விலங்குகள் மனிதன் காட்டை அழிக்கும் போது நாட்டிற்குள் புகுந்து நாசம் விளைவிப்பதையும் நாம் அறிவோம். வாழ்வாதாரங்களும் வாழ்வுரிமைகளும் அனைத்திற்கும் என்பது நாம் அறியவேண்டிய முக்கியமான ஒன்றாகும். ஒன்றின் வாழ்வாதாரத்தில் நமது அத்து மீறல்கள் இருந்தால் அதன் விளைவுகள் நம்மையே தாக்கும் என்பது இதனின்று கண்கூடு.  இப்படியாக இருக்கையில் நாட்டோரை, நம்மிடையே வாழ்வோரை நாம் வதைத்தல் தகுமோ?. 



புலிக்குட்டிகளுக்கு நாய் பாலூட்டி வளர்க்கிறது, பகை இனங்களான நாயும் பூனையும் கூட ஒன்றாய் இருந்து வாழ்வின் மகிழ்வை அனுபவிக்கையில் நாம் மனிதர்களிடையே வேறுபாடுகளை காணலாகுமா?


“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.” என்று 


பல்லுயிர் ஓம்ப அய்யன் பகுத்துண்ண பரிந்துரைக்கிறார். இந்த பல்லுயிர் ஓம்பலே - பாதுகாத்தலே - தலையான அறம் என்றும் உறுதி படச் சொல்கிறார். பல்லுயிர்களை ஏற்றுக்கொள்வது மட்டுமன்று அதனைக் காத்தலும் நமது கடமையே என்று உணர்த்துகிறார்.



பல்லுயிர் ஓம்பலை சான்றோர் பரிந்துரைக்கையில் நாம் மனித இனமே வெட்கும்படிக்கு நம்முடன் பிறந்தாரை பழிப்பதும் முறையோ.. இவ்வகையில்  மதம், இனம்  குறித்தோ அல்லது பொருளாதாரம் குறித்தோ அல்லது பிறப்பு குறித்தோ அல்லது பால் குறித்தோ  உடனிருப்போரை வேறுபடுத்தும் இந்தச் செயலை நாம் எக்காலமும் செய்தலாகாது.  அது நமக்கு நிலையான பலனைத் தராது மட்டுமல்லது நம் அறிவை நசிப்பித்து ஆணவம் பெருக்கி அழிவில் கொண்டு விடும்.


இத்தகைய வேறுபாடு காத்தல் சில சுயநலமிகளை வளர்த்து மிகப் பெரும் சமுதாயச் சீர்கேட்டை உருவாக்கிவிடும். சிந்தனை செய்வோம் வாழ்வை சீர்பட வாழ்வோம்.


இன்னமும் பேசுவோம்.


அன்பன்,

வேதாந்தி.




3 comments:

  1. அருமையான படங்கள் - சிந்திக்க வைக்கும் கருத்துக்கள். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்.

    ReplyDelete
  3. நீங்கள் வேண்டியபடி இந்த பதிவினைப் படித்தேன். ஒத்த கருத்துள்ள பதிவர் இருக்கக் கண்டு மகிழ்ச்சி. இருந்தாலும் உங்கள் பதிவு மிகவும் மேலோட்டமாக இருப்பதாக உணருகிறேன். எவர் மனமும் புண்படாதபடி எழுத வேண்டியதுதான். அதற்காக சில விஷயங்கள் குறிப்பிட்டு சொல்லாமல் போனால் எழுத வந்ததன் வீச்சு உணரப்படாமல் போகும். என் பதிவுகளில் என் ஆதங்கங்கள்தான் இருக்கும். நான் இன்னும் காட்டமாகவே எழுதியிருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது சாவகாசமாகப் படித்துப் பாருங்கள். நிறையவே எழுதியிருக்கிறேன்இன்னும் எழுதுவேன் என்று நம்புகிறேன். நன்றி.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...