Followers

Thursday, November 25, 2010

நமது கலாச்சாரம் சீர்படுகிறதா அல்லது சீர்கெடுகிறதா?

25.11.10
நமது கலாச்சாரம் சீர்படுகிறதா அல்லது  சீர்கெடுகிறதா?


கலாச்சாரம் என்பது மற்றெல்லாவற்றையும் போலவே ஒரு மாறுதலுக்ககுட்பட்ட  சங்கதிதான் . இதை மாணுடவியல் - anthropology - தெரிந்தவர்கள் புரிந்து கொள்வர்.  நாமே சற்று கவனித்துப் பார்த்தோமானால் இது புரியும்.


நான் ஏற்கனவே பேசியது போல எந்த ஒரு மாற்றங்களும் ஏற்றுக்கொள்ளப் பட வேண்டியவைகளே. மாற்றங்களை முன்னேற்றத்திற்கான அறிகுறிகளாக கொண்டு நாம் நமது பார்வையிலும் நோக்கிலும் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டோமானால் நமக்கு வெற்றி நிச்சயம் என்பது தான் நான் இதுவரை பேசி வந்தது.


சரி. இந்தப் பேச்சுக்கள் எல்லாம் தனி மனித மனப்பாங்கு குறித்தும், தனி மனித வெற்றி குறித்தும் சரியாகக் கொள்ளப் படும். ஆனால் இந்த காலச்சார மாறுதல்கள் சமுதாயத்தைக் குறித்தல்லவா? அப்படி யிருக்கையில் இதை நாம் எப்படிக் கையாள்வது?


பொதுவாகவே நாம் பழக்கப்பட்டவைகளிலிருந்து, நமக்கு சௌகரியமானவைகளிலிருந்து நம்மை விலக்கிக் கொள்வது கடினமான காரியம் தான்.  அதுவும் இந்த சமுதாயம் சார்ந்த சங்கதிகளில் கூட்ட மனப்பாங்கும் உள் வருவதால் இது சிக்கலாகிறது. பெரும்பாலும் நாம் நம்மைச்சார்ந்தவர்களின் அங்கீகாரம் பெறாத காரியங்களை ஒதுக்கிவிடுதல் கண்கூடு. ஆனால் சில சங்கதிகளில் இந்த அங்கீகாரங்கள் இரண்டாம் தரமாகி விடுமளவுக்கு மாறுதல்கள் நாம் விரும்பியும் விரும்பாவிடினும் நடந்தேறிவிடும். இதைத் தவிர்க்கவோ அல்லது தடுக்கவோ முடியாது. அத்தகைய ஒரு மாற்றத்தின் ஆரம்பம் தான் தற்போது உச்சநீதிமன்றம் வரை பேசப்பட்டு வரும்  திருமண பந்தமின்றி இணைந்து வாழும் - live in relationship - உறவு.


இந்த உறவு கலாச்சாரத்தை சீர்படுத்துமா அல்லது சீர்கெடுக்குமா என்பதுதான் இன்றைய பேச்சு.


நாம் இப்போது ஒரு முக்கியமான மாறுதலுக்கான கால கட்டத்தில் இருக்கிறோம். இது தற்போதுள்ளவைகளை கவனித்தால் நன்கு புரியும். நாம் நிச்சயமாக கூட்டுக் குடும்ப கலாச்சாரத்தை தாண்டி வந்துவிட்டோம். உறவுகளைத்தாண்டி உறவுகளைத்தேட  ஆரம்பித்துவிட்டோம். இதற்கு இணைய உலகமே சாட்சி.  இணையத்தேடலில் நட்புகளையும் இணைகளையும் கண்டு வாழ ஆரம்பித்து விட்டோம்.  இது மட்டுமல்ல கண்டம் விட்டு கண்டம் தாண்டி பிழைக்கவும் ஆரம்பித்து விட்டோம். பிற நாட்டு உணவு வகைகளை விரும்பி சமைத்து உண்ணவும் ஆரம்பித்து விட்டோம்.  Chat டிலும்  mobile phone னிலும்  சொல்லும் தலாக்கை ஏற்றுக் கோண்டு விவாகரத்துவரை செல்லவும் துணிந்து விட்டோம்.


தற்காலத்தில்தான் பெண்கள் தங்கள் சுதந்திரத்தை முழுதாய் உணர ஆரம்பித்திருக்கின்றனர். இதற்கு நடந்து வரும்  Information Technology revolution மிக முக்கியமான காரணம். பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை அங்கீகரிப்பது மட்டுமல்லாது அதனை ஆதரிக்கும் நிலையில்தான் பெரும்பாலானோர் உள்ளனர். இதற்கு உலகமயமாக்கல் கொள்கை முக்கிய பங்காற்றியிருக்கிறது. பொருளாதார  சுதந்திரத்தைப் பெற்ற எந்த ஒரு பெண்ணும் கருத்துச் சுதந்திரத்தையும் பெற்றவளாகிறாள். அது அங்கீகாரத்திற்கு உரியதா அல்லவா என்பது வேறு. அங்கீகாரத்திற்குடையதாகும் போது முழுச்சுதந்திரத்தையும்  பெற்றவளாகிறாள். தற்காலத்தில் பெரும்பாண்மையான குடும்பங்களில் முடிவெடுத்தலில்ஆண்கள் பெண்ணைச் சார்ந்திருத்தலை கவனிக்க முடிகிறது. பெரும்பாண்மையான முதிர் கன்னிகள் தனியே வாழ்வை வாழத் துணிதலும் தங்களது வாழ்வில்  முடிவெடுத்தலில்அவர்களுக்கு இருக்கும் உரிமையையும் உறுதியையும் காட்டுகிறது. இது பெண்கள் கவனத்திற்குரியவர்களாகிவிட்டனர் என்பதையே காட்டுகிறது.


இது மட்டுமல்ல. பெண்கள் தங்களது எல்லா விருப்பத்தையும் நிறைவேற்றிக் கொள்ள தங்களுக்கு உரிமை உண்டு என்பதையும் உணர ஆரம்பித்துவிட்டனர். மண வாழ்வில் தனக்கு இருக்கும் உரிமையையும் , ஏன் தன் கணவனது ஆண்மையையும், அவனது இயலாமையையும்  அதுகுறித்த தனது மகிழ்வு மற்றும் தனது வெறுப்புகளையும் நான்கு சுவற்றைத் தாண்டி பேசவும், முறையிடவும் ஆரம்பித்து விட்டனர். பெண்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளத்தொடங்கிவிட்டனர் என்பதற்கான அடையாளம் தான் இந்த  திருமண பந்தமின்றி இணைந்து வாழும் - live in relationship - உறவு.


நீதி மன்றங்களும் இதனை அங்கீகரிக்கத் தொடங்கிவிட்டன. நீதி மன்றங்கள் சமுதாயத்தின் ஒரு அங்கம் தானே? அப்படியெனில் சமுதாய அங்கீகாரம் இவர்களது உணர்வுகளுக்கு கிடைத்து விட்டது என்றுதானே பொருள்? இதனை ஆண்கள் உணர ஆரம்பித்த உடனே கூச்சல் எழ ஆரம்பித்து விட்டது.  ஏனெனில் இது ஆண்களின் vulnerable  point.   தங்கள் ஆதிக்கம் ஆட்டம் கண்டுவிட்டதென்ற பயம். 


இங்கு ஒன்றை ஒட்டு மொத்த ஆண்களும் அல்லது இதை மறுப்போரும் புரிந்து கொள்ள மறுக்கின்றனர்.


நாம் யாரையும் எதையும் அவர்களது அல்லது அதன் விருப்பத்திற்கு மாறாக கட்டி வைக்க முடியாது. ஏனெனில் அதுதான் நாகரிகத்தின் மிகப் பெரிய அடையாளம். ஒரு மனிதனின் அல்லது வாழப் பிறந்த ஒரு உயிரின் சுதந்திரத்தை அங்கீகரிப்பதுதான்  மிகப் பெரிய நாகரிகம். இதைத் தெரியாதோர் மறுப்புகளைத் தெரிவிக்ககூட அநாகரிகமான வார்த்தைகளை உபயோகித்து தங்களை தாழ்த்திக் கொள்கின்றனர்.  நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால்,  உயிரியின் பரிணாம வளர்ச்சியையோ அல்லது அதைச்சார்ந்த கலாச்சார பரிணாம வளர்ச்சியையோ காலமும் அதைச்சார்ந்த விசைகளும்தான் நிர்ணயிக்குமே தவிர நீங்களோ நானோ அல்ல.


சரி. இந்த மண பந்தமின்றி வாழும் உறவு பெண்களுக்கு பாதுகாப்பானதா இல்லையா?

ஒரு பெண் தன் பாதுகாப்புக்கு மட்டுமல்ல தன்னைச் சார்ந்தோரின் பாதுகாப்பிற்கும் பிறரை நம்பாமல் இருக்கும் போதுதான் தன் முழுச்சுதந்திரத்தையும் தன்னம்பிக்கையோடு அனுபவிக்கிறாள்.


சரி. இந்த கலாச்சாரம் என்னாவது?

பெரியாரின் தாலி கட்டாது ஒன்றாக வாழும் முறை நமது நாட்டை, கலாச்சரத்தை கெடுத்துப் போட்டதா? இதுவன்றி இந்த முறை பிரிவதை சுலபமாக்கி இருக்கிறது. அவ்வளவே. எனக்குத் தெரிந்து எத்துனையோ பேர் மணமுறிவுக்கு ஒப்புதல் கொடுக்காமல் இணைகளை சித்திரவதைக்குள்ளாக்குகின்றனர்.இதைக் காணும் பிள்ளைகள் திருமண வாழ்வை வெறுக்கின்றனர்.


சரி. இதனால் குடும்ப முறை கெட்டுவிடாதா? 

ஆம். இது சரியான கேள்வி. நாம் குடும்ப முறைகளை கெட விடக்கூடாது. ஆக நாம் தாலி கட்டிக்கொண்டு வாழ்கிறோமோ அல்லது தாலிகட்டாமல் வாழ்கிறொமோ அது பெரிதல்ல. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு ஒருவரது சுதந்திரத்தை ஒருவர் மதித்து உடன் சேர்ந்து பிள்ளைகளுக்காக கடைசிவரை இணைந்து வாழ்ந்தோமானால் போதுமானது. இதற்குசரியான இணைகளின் தேர்வும், இணைந்த பின் ஒருவரை ஒருவர் மதித்து வாழ்தலுமே முக்கியமாகும்.

மிக முக்கியமாக கவனிக்கப் படவேண்டிய ஒன்று இருக்கிறது.  அதுதான் தற்போதைய சமுதாயச்  சூழல். பெண்களுக்காக ஆண்கள் பேசி சுதந்திரம் வாங்கித்தர வேண்டிய நிலை தற்போது இல்லை. இதுவே ஒரு பெரிய மாற்றம். எப்போது ஒரு பெண் தனக்கு பிறர் சுதந்திரம் தர வேண்டும் என நினைக்கிறாளோ அல்லது எப்போது ஒரு ஆண் தான்தான் பெண்களுக்கு சுதந்திரம் தர வேண்டும் என நினைக்கிறானோ அப்போது இவர்கள் இருவருமே நிலை புரியாது தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கின்றனர்.

பாலியல் உணர்வுகள் மட்டுமல்ல சுதந்திரம். அதற்கும் மேலே... ஆனால் நீங்கள் சொன்னதைப்போல பாலியல் உணர்வுகளையும் உள்ளடக்கியதுதான். நீங்களோ நானோ அதை நிர்ணயிக்க முற்பட்டால் நாம் நமக்கு கிடைத்திருக்கும் சுதந்திரத்தை அதன் பொறுப்பான அளவுக்கு மீறி அடுத்தவரை நசுக்க பயன்படுத்துகிறோம் என்று பொருள்.
இது மட்டுமல்ல. சுதந்திரம் என்பது ஒரு பெரும் பொறுப்பு. ஒரு பெண் இந்தப் பொறுப்பை உணர்ந்தால் மட்டுமே தனது சுதந்திரத்தை தன் வாழ்வில் முடிவெடுக்கும் பொறுப்புகளுக்கு உள்ளாக்க முடியும்.அதன்படி தான் எடுக்கும் அறிவு சார்ந்த முடிவுகளும் நல்ல பலனைக் கொடுக்கும்.  தற்கால பெண்களின் கல்வி அறிவு அதற்கு துணை நிற்கும் என நம்புவோம். மேலும் மற்றவர் சுதந்திரத்தை மதிக்கும் அறிவை நாம் அனைவருக்கும் கற்றுத்தரச் செய்வோம்.


இன்னமும் பேசுவோம்.

அன்பன்,

வேதாந்தி.


20 comments:

  1. நாம் யாரையும் எதையும் அவர்களது அல்லது அதன் விருப்பத்திற்கு மாறாக கட்டி வைக்க முடியாது. ஏனெனில் அதுதான் நாகரிகத்தின் மிகப் பெரிய அடையாளம். ஒரு மனிதனின் அல்லது வாழப் பிறந்த ஒரு உயிரின் சுதந்திரத்தை அங்கீகரிப்பதுதான் மிகப் பெரிய நாகரிகம்//

    அருமையான புரிதல், அன்பரே!

    காதலில் விழுவதும் அதனின்று மீண்டும் போவதும் அவ்வளவு எளிதன்று இங்கு பல பேரும் எண்ணுவதாக உள்ளது. அப்படியெனில் ‘காதலில்’ இருப்பது என்றால் என்னவென்றே அனுபவித்து இருக்கவில்லை என்று புரிந்து கொள்கிறேன்.

    நாம் ஒருவரை உண்மையிலேயே நேசிக்கிறோம்மென்றால் அவருக்கு தேவையானதை வழங்கி நாம் மகிழ்ச்சி கொள்வதில்தானே உண்மையான அன்பு இருக்க முடியும்.

    இங்கே உடல்சார்ந்த பசியைக் கொண்டு மட்டும் பேசிக் கொண்டிருப்பவர்களிடம் என்னாத்தை சொல்வது?

    இதுவே எனது நிலை... //இன்னொன்று, முன்பே சொன்னபடி இதை மாற்றாகவோ, ஆதரிக்கவோ சொல்லவில்லை. இதை எதிர்க்கவோ, தடுக்கவோ நாம் யார் என்பது என் புரிதல்//

    எனது பதிவில் மிகத் தெளிவாக, எடுத்து வைத்திருந்தேன்.

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்.

    உயர்ந்த கருத்துக்கள், எண்ணங்கள் மற்றையோருக்கும் நமக்கும் ஒன்றாய் இருக்கும் போது மகிழ்ச்சியாய் இருக்கிறது.

    மிக்க நன்றிகள்.

    ReplyDelete
  3. இங்கு ஒன்றை ஒட்டு மொத்த ஆண்களும் அல்லது இதை மறுப்போரும் புரிந்து கொள்ள மறுக்கின்றனர். ////

    இது தான் சார் பிரச்சனையே ........... இனி வேறு வழியில்லை ..... எல்லாம் அதுவாகவே மாறிவிடும் ......அருமையா , தெளிவா சொல்லி இருக்கீங்க

    ReplyDelete
  4. கால ஓட்டத்தில் கருத்துகளும் கலாசாரங்களும் மாறுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இந்த சேர்ந்து வாழும் கலாசாரத்தில் பெண்களுக்கு கொஞ்சம் அதிக ரிஸ்க் இருக்கிறது. அதற்கு அவர்கள் தயாராக இருக்குவேண்டும்.

    ReplyDelete
  5. புரிதல் + பக்குவம்... தெளிவா இருக்கு..:)

    ReplyDelete
  6. @ மாங்குனி அமைச்சர்,
    @ சி.பி.செந்தில் குமார்,
    @ கலகலப்ரியா,
    தங்கள் வரவிற்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்.

    @ Dr.PKandaswamy PhD..
    அய்யா,பெண்களை தங்கள் சுதந்திரத்தை அனுபவிக்க விட்டு வாழக் கற்றுக் கொள்ள அனுமதிப்போம். நீங்கள் சொல்லும் ரிஸ்க் மண வாழ்வில் ஆண்களுக்கும் தான் இருக்கிறது. புரிதலும் அறிவுத் தெளிவும் இல்லாத எல்லா வாழ்க்கை முறைகளுமே ஆபத்தானதுதான். இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானதொன்றாகவே நான் கருதுகிறேன்.

    தங்கள் வரவிற்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  7. //ஒரு மனிதனின் அல்லது வாழப் பிறந்த ஒரு உயிரின் சுதந்திரத்தை அங்கீகரிப்பதுதான் மிகப் பெரிய நாகரிகம்.


    ஒரு பெண் தன் பாதுகாப்புக்கு மட்டுமல்ல தன்னைச் சார்ந்தோரின் பாதுகாப்பிற்கும் பிறரை நம்பாமல் இருக்கும் போதுதான் தன் முழுச்சுதந்திரத்தையும் தன்னம்பிக்கையோடு அனுபவிக்கிறாள்.//

    நல்ல புரிதலோடான விளக்கம்.. அருமை

    ReplyDelete
  8. @ பயணமும் எண்ணங்களும்..

    தங்கள் வரவிற்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்.

    ReplyDelete
  9. மிகத் தெளிவான பதிவு

    ReplyDelete
  10. தங்கள் வரவிற்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்.

    ReplyDelete
  11. //பெண்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளத்தொடங்கிவிட்டனர் என்பதற்கான அடையாளம் தான் இந்த திருமண பந்தமின்றி இணைந்து வாழும் - live in relationship - உறவு. //பொதுவா பெண்ணடிமை கூடாது, பெண்களுக்குச் சுதந்திரம் என்று குரல் கொடுக்கும் புரட்சிக்காரர்கள் பெண்களுக்கு நம்மை செய்வது போலத் தோன்றும். உண்மை என்ன? ஆடு நனைகிறதே என்று அழும் ஓநாய்களும் இவர்களும் ஒரே இனம்தான். பெண் படிக்கவேண்டும், வேலைக்குப் போக வேண்டும், முக்கிய பொறுப்புகளை வகிக்க வேண்டும் என்பது வரை சரி. ஆனால், இந்த கல்யாணம் செய்யாமலேயே கூடி வாழ்வதென்பது இருக்கிறதே, இதனால் நட்டம் யாருக்கு? ஆணுக்கா? பெண்ணுக்குத்தான்.

    ReplyDelete
  12. @ Jayadeva..

    நண்பருக்கு நான் சொல்லியிருப்பதை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை போலும். நான் சொன்னதை எல்லாம் பாலுணர்வு சார்ந்த பார்வை மட்டுமே பார்த்து சற்று கடுமையாக விமரிசித்திருக்கிறார். இவரது இன்னுமொரு விமரிசனம் அளவுக்கு மீறீப்போனதால் நான் அதை நாகரிகம் கருதி இங்கு வெளியிடவில்லை.

    இதுதான் உண்மை:

    உயிரியின் பரிணாம வளர்ச்சியையோ அல்லது அதைச்சார்ந்த கலாச்சார பரிணாம வளர்ச்சியையோ காலமும் அதைச்சார்ந்த விசைகளும்தான் நிர்ணயிக்குமே தவிர நீங்களோ நானோ அல்ல.

    //பெண் படிக்கவேண்டும், வேலைக்குப் போக வேண்டும், முக்கிய பொறுப்புகளை வகிக்க வேண்டும் என்பது வரை சரி. ஆனால், இந்த கல்யாணம் செய்யாமலேயே கூடி வாழ்வதென்பது இருக்கிறதே, இதனால் நட்டம் யாருக்கு? ஆணுக்கா? பெண்ணுக்குத்தான்.
    //

    மேலே இவர் சொன்ன இந்த சுதந்திரங்கள் கூட சமீப காலம் வரையில் பெண்களுக்கு மறுக்கப் பட்ட ஒன்றுதான். இப்போது ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது. இதைப் போலத்தான் மற்றதுவும். நான் பாலியல் குறித்து பேசவில்லை . மற்றெல்லாவற்றையும் குறித்துத் தான்.

    பெண்களுக்காக ஆண்கள் பேசி சுதந்திரம் வாங்கித்தர வேண்டிய நிலை இல்லை. இதுவே ஒரு பெரிய மாற்றம். எப்போது ஒரு பெண் தனக்கு பிறர் சுதந்திரம் தர வேண்டும் என நினைக்கிறாளோ அல்லது எப்போது ஒரு ஆண் தான்தான் பெண்களுக்கு சுதந்திரம் தர வேண்டும் என நினைக்கிறானோ அப்போது இவர்கள் இருவருமே நிலை புரியாது தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கின்றனர்.

    பாலியல் உணர்வுகள் மட்டுமல்ல சுதந்திரம். அதற்கும் மேலே... ஆனால் நீங்கள் சொன்னதைப்போல பாலியல் உணர்வுகளையும் உள்ளடக்கியதுதான். நீங்களோ நானோ அதை நிர்ணயிக்க முற்பட்டால் நாம் நம்க்கு கிடைத்திருக்கும் சுதந்திரத்தை அதன் பொறுப்பான அளவுக்கு மீறி அடுத்தவரை நசுக்க பயன்படுத்துகிறோம் என்று பொருள்.

    இருப்பினும்..

    தங்கள் வரவிற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்.

    ReplyDelete
  13. ||பெண்களுக்காக ஆண்கள் பேசி சுதந்திரம் வாங்கித்தர வேண்டிய நிலை இல்லை. இதுவே ஒரு பெரிய மாற்றம். எப்போது ஒரு பெண் தனக்கு பிறர் சுதந்திரம் தர வேண்டும் என நினைக்கிறாளோ அல்லது எப்போது ஒரு ஆண் தான்தான் பெண்களுக்கு சுதந்திரம் தர வேண்டும் என நினைக்கிறானோ அப்போது இவர்கள் இருவருமே நிலை புரியாது தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கின்றனர்.

    பாலியல் உணர்வுகள் மட்டுமல்ல சுதந்திரம். அதற்கும் மேலே... ஆனால் நீங்கள் சொன்னதைப்போல பாலியல் உணர்வுகளையும் உள்ளடக்கியதுதான். நீங்களோ நானோ அதை நிர்ணயிக்க முற்பட்டால் நாம் நம்க்கு கிடைத்திருக்கும் சுதந்திரத்தை அதன் பொறுப்பான அளவுக்கு மீறி அடுத்தவரை நசுக்க பயன்படுத்துகிறோம் என்று பொருள்.||

    :)...

    ReplyDelete
  14. word verification எடுத்து விடுங்களேன்..

    ReplyDelete
  15. @ கலகலப்ரியா..

    சில உணர்வு பூர்வமான செய்திகளைச் சொல்லும் போது அநாகரிகமான பின்னூட்டங்கள் வந்து விழுகின்றன. இதைத் தவிர்க்கவே இந்த word verification..

    இவர்கள் உண்மையை விரும்புவதில்லை. மாறாக வாதிக்கும் தளத்தை அசிங்கப் படுத்துகின்றனர். இது பெண் வாசகர்களை மிகவும் பாதிக்கலாம். நான் நிறைய வலைப் பதிவுகளில் இதைக் கண்டு முகம் சுளித்திருக்கிறேன். மற்றபடி வேறொன்றுமல்ல.

    தங்கள் வரவிற்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்

    ReplyDelete
  16. /ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு ஒருவரது சுதந்திரத்தை ஒருவர் மதித்து உடன் சேர்ந்து பிள்ளைகளுக்காக கடைசிவரை இணைந்து வாழ்ந்தோமானால் போதுமானது. இதற்குசரியான இணைகளின் தேர்வும், இணைந்த பின் ஒருவரை ஒருவர் மதித்து வாழ்தலுமே முக்கியமாகும்./

    சுதந்திரம் என்பதையே தவறாக புரிந்து கொள்ளும்
    அபாயம் நிறைய உள்ளது. நமது கலாச்சாரம்
    விட்டுக்கொடுத்தல்/தனி நபர் ஒழுக்கம்/பிறர்
    மனம் நோகாமை/சொல்லில் கவனம்/சிறு
    குற்றங்கைளை பெரிது படுத்தாமை/சகிப்புத்தன்மை
    என இன்னும் பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கியதாகும்.
    தாலி கட்டாமல் சேர்ந்து வாழ்தல் நமக்கு உகந்ததல்ல

    ReplyDelete
  17. @velloreastro.. //சுதந்திரம் என்பதையே தவறாக புரிந்து கொள்ளும் அபாயம் நிறைய உள்ளது. நமது கலாச்சாரம் விட்டுக்கொடுத்தல்/தனி நபர் ஒழுக்கம்/பிறர் மனம் நோகாமை/சொல்லில் கவனம்/சிறு குற்றங்கைளை பெரிது படுத்தாமை/சகிப்புத்தன்மை என இன்னும் பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கியதாகும். தாலி கட்டாமல் சேர்ந்து வாழ்தல் நமக்கு உகந்ததல்ல // நீங்கள் சொன்ன அனைத்தும் பெண்களுக்கு மட்டுமே என்ற பட்சத்தில்தான் தவிர்க்க முடியாத இந்த சமுதாய மாற்றத்திற்கான நிகழ்வு நடந்தேறிவிடத் துடிக்கிறது..

    ReplyDelete
  18. அய்யா இது போன்ற உறவுகள் பணத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு உருவாகின்றன, மாற்றங்கள் வரவேற்கபட்டாலும், தனி மனித வாழ்வில் ஏற்படும் விளைவுகள் எதிர்மறையாகவே இருக்கும் !

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...