09.11.10
மனம் ஒரு மாயக் கண்ணாடியா?
மனம் ஒரு குரங்கு எனச் சொல்வார்கள். இது மனதின் நிலையற்ற தன்மையை குறிக்க வந்த ஒரு சொலவடை. ஆனால் இந்த மனம் ஒரு மாயக் கண்ணாடியாய் மனிதனை திசை திருப்பி தன் வழி சென்று பாதாளத்தில் வீழும் அருவியாய் அவனை அவனைச் சார்ந்தவர்களுடன் வாழ்வைக் கெடுக்கும் வகையில் வீழ்த்துவதை எத்துனை பேர் அறிவர்?
நன்கு சிந்தித்துப் பார்த்தோமானால் இந்த ‘மனம்’ ஒரு கை தேர்ந்த நியாயக்காரனைப் போல் தான் உந்துவிக்கும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு நியாயத்தை கற்பிக்கும். உண்மையில் மனிதனுக்கு தேவைகளை ஏற்படுத்துவது அவனது உடல் மற்றும் அவனது வாழ்க்கை முறைகள் தான். இதில் மனதிற்கென தனித் தேவைகள் இல்லாது போயினும் அத்துமீறிய செயலாய் மனமானது மற்றதன் தேவை களில் ஆளுமை செய்யத் தொடங்கிவிடும். இது அபாயகரமானதாகும். இத்தகைய செயல்களுக்கு தூண்டும் மனம் தான் ‘evil mind’ எனப்படும் பிசாசுகளின் மனமாகும்.
வயிற்றுப் பசிக்கு தேவையான உணவு கிடைத்தவுடன் நமது வயிறு மேற்கொண்டு எடுத்துக் கொள்ள மறுக்கிறது. ஆனால் நமது மனமோ அடுத்தவேளைக்கு என ஒரு சாக்குச் சொல்லி நம்மை சேர்த்துவைக்கச் சொல்கிறது. சேமிப்பு நல்ல பழக்கம் தான் . ஆனால் எவ்வழியிலேனும் பணம் சேர்க்கத் தூண்டுவதுதான் நம்மை இழிவுக்கு இட்டுச்செல்லும் செயல். இரண்டாயிரம் கோடிக்கு மேல் ஊழல் பணம் சேர்த்த ‘கேதன் தேசாய்’ எத்துனை நாள் பட்டினி கிடந்தார்? இருந்தும் அவரை பணம் சேர்க்கத் தூண்டியது எது? அது இந்த மனம் தான். எத்துனை வந்தாலும் போதாது எனும் மாயையை உருவாக்கித்தான் இந்த மனம் அவரை எவ்வழியிலேனும் பணம் சேர்க்கத் தூண்டி யிருக்கிறது. நாளை என்பதே நிலையில்லை எனும் உலகம் கண்ட உண்மையை மறைத்து நம்மை இப்படிப்பட்ட இழி செயலுக்குத் தூண்டுவது நம்முடைய பாழும் மனம் தான்.
மாயக்கண்ணாடியாய் இந்த பாழும் மனம் தான் நமது தேவைகளை விபரீதமாய் பெருக்கிக் காட்டி, நமது வழிப் பிறழ்வுகளை அழகாய் நியாயப்படுத்தி நம்மை நிலையான துன்ப வழிக்கு இட்டுச் செல்கின்றது. இத்தகைய நடவடிக்கைகள் மற்றோரையும் மறைமுக துன்பத்திற்கு ஆளாக்குகிறது.
முக்கியமாக இந்த இழி மனம் - பிசாசு மனம் - தான் காட்டும் மாய பிம்பத்தில் மயங்கியவனை சமுதாயத்தினின்று பிரிப்பதோடுமட்டுமல்லாது அவனை சமுதாயத்திற்கு எதிராகவும் திசை திருப்பிவிடும்.
ஒரு சாதாரண மனிதனின் பார்வையில் தப்பு எனத் தோன்றும் ஒரு செயலை இந்த மாயக்கண்ணாடி நியாயப் படுத்தி தனக்குச் சாதகமாக மதக் கோட்பாடுகளிலிருந்து ‘மாக்சிம் கோர்க்கி’ வரையில் தெளிவாக ஒப்பிட்டுக் காட்டும். இப்படிப்பட்ட மாயக்கண்ணாடியை பார்க்கத் தொடங்கியவர்கள் அதனின்று மீண்டதில்லை. தான் கொண்டவைகளை கொள்கைகளாகவும், தனது செயல்களை துணிச்சல் மிக்கதென்றும் மாய வலையில் ஆழ்ந்து வாழ்க்கையைத் தொலைத்து மாய்ந்து போகின்றனர்.
தெளிவான சிந்தனை கொண்டவர் மட்டுமே இத்தகைய மாய பிம்பங்களுக்கு மயங்காது தனது மனதை கட்டுக்குள் வைத்து அதனை உள்ளதை உள்ளபடி காட்டும் உண்மைக் கண்ணாடியாக பயன்படுத்தி பயன் அடைகின்றனர்.
இன்னமும் பேசுவோம்.
அன்பன்,
வேதாந்தி.
தெளிவான சிந்தனை கொண்டவர் மட்டுமே இத்தகைய மாய பிம்பங்களுக்கு மயங்காது தனது மனதை கட்டுக்குள் வைத்து அதனை உள்ளதை உள்ளபடி காட்டும் உண்மைக் கண்ணாடியாக பயன்படுத்தி பயன் அடைகின்றனர்.
ReplyDelete......தெளிவான சிந்தனையுடன் வந்துள்ள பதிவு. வாழ்த்துக்கள்!
தங்கள் வரவிற்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்
ReplyDeleteநல்ல பதிவு, தெளிவான சிந்தனை....வாழ்த்துக்கள்.
ReplyDeleteமன நலம் குறித்த எனது சிறு குறிப்பு இதோ http://scribd.com/doc/13886299 உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.
- அன்புசிவம்
தங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்
ReplyDelete