Followers

Sunday, January 26, 2014

மெல்லத் தமிழன் இனிச் சாவானோ…


26.1.14

மெல்லத் தமிழன் இனிச் சாவானோ…






வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது எனப் பேசி பெரு மாற்றம் நிகழ்த்திய அறிஞர் இப்போது இருந்தால் என்ன சொல்வார்?

அன்றைக்கு நமது பார்வை வட்டத்தில் நமது தேசிய அரசியல்வாதிகளின் மனப்போக்கை பிரதிபலிப்பதாக இதைச் சொல்லியிருப்பினும் இது செயல் முறையில் வேறு விதமான தாக்கத்தை ஏற்படுத்தியதை யாரும் மறுக்க முடியாது.

தமிழைத் தவிற வேறு மொழிகளைப் படிப்போர் தமிழ் துரோகிகள் எனப் பார்க்கப்பட்டனர். தமிழனைத் தவிர வேறு யாரும் நல்ல கருத்துக்களுக்காகவோ அல்லது அவர்களது நல்ல செயல்களுக்காகவோ தமிழனால் பாராட்டப்படக்கூடாது எனும் போக்கு வளர்ந்தது.அத்துனை ஏன். பேரறிஞர் அண்ணாவால் கண்டு போற்றப்பட்ட நமது மறைந்த முன்னாள் முதல்வர், முதல்வர் எனும் தகுதியில் மட்டுமல்லாது ஒரு பொது மனிதனால் பெரும் பரொபகாரி என பார்க்கப்பட்டதும் போற்றப்பட்டதும் யாவரும் அறிந்ததே. அப்பேர்பட்டவரையே ஒரு கட்டத்தில் அவர் தமிழனல்ல என்றும் நாம் தமிழனைத்தான் ஆதரிக்க வேண்டும் என்றும் சிலர் பிரச்சாரம் செய்ததும் கண்கூடு.






இன்றும் கூட இந்தியத் துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே அமெரிக்காவில் அசிங்கப்படுத்தப் பட்டபோது அவரை ஒட்டுமொத்த இந்தியாவின் பிரதிநிதியெனப் பாராமல் அவரை தலித் எனவும் சாதாரணப் பெண் எனவும் கருதும் படிக்கு மிகப் பிரபலமான அரசியல் தலைவர்களே அறிக்கை விடுவது மிகவும் வருந்தத் தக்கது. இந்த அறிக்கைகளின் பின்னனியில் தங்களது சுய லாபமும் உண்டு என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஆரம்பத்தில் தனித்தமிழ் நாடு கேட்டவர்களே பின்னர் தங்களது கொள்கையை மாற்றிக் கொண்டனர்.ஆனாலும் மொழியைப் பிரதானமாக வைத்து அரசியல் நடத்துவது குறையவில்லை. இந்த அரசியலால் இரண்டு தலைமுறைகள் முடங்கிப் போய்விட்டன.

இந்தப் போக்கு நம்மை வளர்த்திருக்கிறதா அல்லது உயர்த்தியிருக்கிறதா என்பதே எனது இன்றைய கேள்வி

பெரும் ஆபத்து என்னவென்றால் நமது கல்வித் துறையும் இந்த அரசியலுக்கு உட்படுத்தப் படுவதுதான். இன்றைக்கு தொலைக்காட்சிகளில் வெகுவாக பேசப்படும் பொருளாக மொழிக்கல்வி இருக்கிறது. பெரும்பானோர் ஆங்கில வழிக் கல்விமுறை தவறானது என்றும், இது தமிழைக் குழிதோண்டிப் புதைத்துவிடுமென்றும் புலம்புகின்றனர். ஆனால் தமிழை விரும்பி எடுத்துப் படிப்போர் முன்னேற வழி சொல்வோர் காணோம்.

26.1.2014 தேதியிட்ட The Economic Times பத்திரிக்கையில் ஒரு கணக்கெடுப்பை வெளியிட்டிருக்கின்றனர். அதன் தலைப்புIndia's got talent: Northern belt graduates more employable than southern counterparts”(By Malini Goyal, ET Bureau | 26 Jan, 2014) என்பது  இதன் சுட்டி: http://economictimes.indiatimes.com/news/news-by-industry/jobs/indias-got-talent-northern-belt-graduates-more-employable-than-southern-counterparts/articleshow/29366302.cms





இதன் சாராம்சம் என்னவென்றால் தமிழ் நாட்டைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரிகள் logical and numerical skills  மற்றும் computer skills ஆகியவைகளில் சிறந்திருந்தாலும் ஆங்கில மொழித்திறன் இல்லாத காரணத்தால் பணிக்கு உகந்தவர்களல்ல என்பதுதான்.

தமிழைப் படித்தவன் பிழைக்க வேண்டும். இதற்கு ஒரே வழி அதற்கான வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் அல்லது காலத்திற்கு தகுந்தார்ப்போல தமிழைப் படிக்கும் தமிழன் தன்னை பணிக்குத் தகுதியுள்ளவனாக்கிக் கொள்ளவேண்டும். இவை இரண்டும் இல்லையெனில் எதிர்வரும் காலங்களில் வரும் போட்டிகளில் தமிழைப் படித்தவன் தனித்து விடப்படுவான் என்பது நிச்சயம்.

அது மட்டுமல்ல நம் நாட்டை, ஏன் உலகையே, ஆண்ட ஆங்கில மொழிக்குச் சொந்தக்காரர்களான இங்கிலாந்துக் காரர்கள் மொழிப்பற்றின் மிகுதியால் மொழியைப் பரப்ப வந்தவர்களல்லவே. மாறாக பிழைக்க வியாபாரம் செய்ய நாடு கடந்து வந்தவர்கள் தானே. வியாபாரத்தில் தங்களை நிலை நிறுத்திக் கொண்டவர்கள் தங்கள் மொழியையும் வேரூன்றும்படிக்குச் செய்தனர் அல்லவா? பிழைப்பு தங்களையும் காப்பாற்றி தங்களது மொழியையும் நிலை நிறுத்தியதல்லவா?

எனவே முதலில் தமிழன் பிழைக்கும் வழியைப் பார்க்கட்டும் தமிழன் பிழைத்தால் தமிழ் பிழைக்கும் இல்லையெனில் இன்னமும் அய்ந்து தலை முறைகளில் தமிழையும் தமிழனையும் தேடிப்பிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. அதற்கப்புறம் அரசியல்வாதிகளுக்குக் கூட அரசியல் செய்ய தமிழ் இருக்காது, தமிழனும் இருக்க மாட்டான்.

இன்னமும் பேசுவோம்.

 

அன்பன்,

வேதாந்தி.

 

 

 

 

 

Wednesday, January 22, 2014

யாதுமாகி நின்றாயே அப்பா!


22.1.14

யாதுமாகி நின்றாயே அப்பா!


 
 
முள் காட்டில் விழுந்த விதையானாலும்

முயற்சியுடன் ஒளி தேடி முளைத்து

இலைகளையும் கிளைகளையும் முட் புதர் தொடாது விரித்து

விழுதுகளையும் தாங்கி நல்ல விதைக்கும் வேருக்கும்

விளக்கமாய் நின்றாயே அப்பா…



சீராட்டி பாராட்டி சிக்கனத்தையும் போற்றி

சிறந்த பல ஒழுக்கங்களையும் பரந்த எண்ணங்களையும்

பகிர்ந்து என்னை உருவாக்கினாலும் பிரதி பலன்களை பாராத

பெருமனம் கொண்டாயே அப்பா…







உனது அடையாளமாக உடலைக் கொடுத்து

அம்மையுடன் கொண்ட அன்பின் அடையாளமாய்

உயிரைக் கொடுத்து உடலும் உயிருமாய் நான் வலம் வர

உளமகிழ்ந்து பெருமிதம் கொண்டாயே அப்பா…




ஆதியாய்…

ஆசானாய்…

அருந் தாயாய்…

அம்மையப்பனாய்…

யாதுமாகி நின்றாயே அப்பா…




அனைத்தையும் கற்றுத்தந்தாய் ஆனாலும்

உனைப்பிரிந்தும் உயிர் வாழும் வித்தைக்கு

எங்கு போவேன்..அய்யோ…







 

Monday, January 20, 2014

கொள்கைக் கூட்டமும் கொள்ளைக் கூட்டமும்…


20.1.14

ஆடிய பாதம் - 5

கொள்கைக் கூட்டமும் கொள்ளைக் கூட்டமும்…

 
 
நண்பருடன் இருந்த அடுத்த அரை மணி நேரமும் அவர் சொன்னதைக் கேட்டு எனக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. சாதாரணமாக பெண்கள் எப்போதும் பெண்களுடன் கூட்டாக இருப்பார்கள். அது எதிர்ப் பாலினர் தங்களை எளிதில் ஏமாற்றாமலோ அல்லது அவர்களுக்கு ‘நாங்கள் ஒன்றாயிருக்கிறோம்’ என்னும் செய்தியினை வெளிக்காட்டிக் கொள்ளவோ அவர்கள் கொள்ளும் ஒரு முயற்சியாயிருக்கலாம் எனத் தோன்றுகிறது. அதுதான் அவர்களுக்கு பாதுகாப்பு என்ற அவர்களது உள்ளுணர்வாகக் கூட இருக்கலாம். இது ஓரளவுக்கு ஒத்துக் கொள்ளக் கூடியதாகத்தான் இருக்கிறது. ஆனால் நண்பர் சொன்ன கூட்டணி மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது.

நண்பர் தொடர்ந்தார்.   “ நான் ஏற்கனவெ சொன்ன ‘பிச்சை’ ‘முத்து’ ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர். அவர் மேலதிகாரி ஆனதும் தனக்கு பாதுகாப்புக்காக தனது சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தன் அதிகாரத்தில் சலுகைகளை காட்ட ஆரம்பித்தார். ஆனாலும் இது வெளிப்படையாகத் தெரியவில்லை. பேசும்போது மிகுந்த நியாயவாதியாக தன்னைக் காட்டிக் கொள்வார். ஏறக்குறைய அத்தனை பேரும் இவருக்கு ஏஜண்ட்டுகள் போலத்தான் செயல் பட்டு வந்தனர். அன்றைக்கு செயல் பட்டு வந்த ஒரு அசோசியேசனின் தலைவர் இவரோடு மிகுந்த ‘பற்றோடு’ இருப்பார். உற்று கவனித்தால்தான் தெரியும். அது பொது நன்மைக்காக உண்டாக்கப்பட்ட அசோசியேசன் அல்லவென்று. அதில் இருந்தவர்கள் அத்துனைபேரும் ‘சமூகப்’ பற்றில் ஒன்று சேர்ந்தவர்கள் தான். அவர்களது நடவடிக்கை அலுவலகத்தில் ஒரு மறைமுக பயமுறுத்தலுடனேயே இருந்து வந்தது.







     இப்படி  இருக்கையில் தனது சமூகத்தைச் சொல்லி தனக்கு கீழே உள்ளவர்களை தன்னை பாதுகாக்கும் அடியாட்களைப் போலவும் அங்கங்கே நடப்பவைகளை உளவு சொல்லவும் தான் இட்ட கட்டளைகளை செய்து முடிக்க ஒரு net work போலவும் தன்னைச் சுற்றி வைத்துக் கொண்டார். இவரது அதிகாரம் கொடுத்த சலுகைகளினால் யாரும் அலுவலகப் பணியினைச் செய்யாமல் மிகுந்த மிடுக்கோடு நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு உலா வந்தனர். இந்தக் கும்பலைக் குறித்தும் அவர்களது அலுவலகப் பணிகளின் மெத்தனத்தைக் குறித்தும் யாரேனும் இவரிடம் அதிகாரி என்ற முறையில் முறையிட்டால், முறையிட்ட அலுவலர்களை அலுவலக hierarchy ஐக் கூட பார்க்காது அவர்கள் குற்றம் சாட்டிய தனது சமூகத்தினர் முன்னரே மிகுந்த அவமானப் படுத்தி அனுப்பும் வழக்கம் இருந்தது. இது மட்டுமல்ல, “ இவரு உன் சாதியைச் சொல்லி உன்னைத் திட்டினதா எழுதிக் கொடப்பா… நான் பார்த்துக் கொள்கிறேன் ..” என்றும் குற்றமிழைத்தவரை முறையற்ற முறையில் ஊக்கப் படுத்தவும் செய்தார். அப்புறமென்ன. யாரும் எதைக் குறித்தும் கவலைப் படுவதை விட்டு விட்டனர். நமக்கென்ன போச்சு. அரசுத் துறைதானே. அதிகாரியே இப்படி இருந்தால்..? வேலையை விட நமது பாதுகாப்புதான் முக்கியமென விலகத் தொடங்கினர்.

இவர்கள் அடித்த லூட்டியில் சமூக நீதிக்காக போரடும் எண்ணம் கொண்டவர்களே தங்களது எண்ணம் தவறோ என சந்தேகப்படத் துவங்கிவிட்டனர். இவர்களது கொட்டத்தால் வெளியில் சமூகத்தில் வறுமையோடும் சமுதாய வேறுபாடுகளோடும் போராடிக் கொண்டு அன்றாடும் வாழ்வைக் கடத்திக் கொண்டிருக்கும் அப்பாவிகளுக்கு கிடைக்கவேண்டிய நியாயமான அனுதாபமும் ஒத்துழைப்பும் கிடைக்காமற் போகும் அபாயம் உண்டென்பது இவர்களுக்குப் புரியவில்லை.




ஆனால் அதைப்பற்றி ‘பிச்சை’ ‘முத்து’வுக்கு கவலையிலை. தங்கு தடையின்றி கப்பம் வசூலாயிற்று. கேட்பாரில்லை. நட்சத்திர விடுதிகளுக்கு வரவழைத்து தங்கக் காசுகளை வசூலித்தார். இது புதிதல்ல பழைய கதைதான். ஆனால் ஆச்சரியம் என்னவென்றால், தனக்கு பாதுகாப்பிற்காக தனது சமூகத்தினரை சமூகத்தின் பெயரைச் சொல்லி தன் வேலைகளுக்கு உபயோகப்படுத்திக் கொண்டவர், தனது மேலதிகாரியிடம் மிகுந்த பவ்வியமாக நடந்து கொண்டார். அந்த மேலதிகாரி வேறு சமூகத்தைச் சார்ந்தவர். இரண்டு சமூகங்களுக்கும் ஆகாது. எலியும் பூனையும் போல. ஆனால் இரண்டு பேருமே கொள்கைக்காக வாழ்பவர்கள் என்று காட்டிக் கொண்டபோதும் கொள்ளைதான் அவர்களை சேர்த்து வைத்தது. பங்குதாரர்கள் எப்போதும் பங்காளிகள் தானே.  இரைக்காக  நிறம் மாறும்  பச்சோந்திகள் தானே.

மக்கு ஜனங்களுக்கு புரிவதேயில்லை.”





நான் உறைந்து போனேன். ஒரு அலுவலகத்தில் வேலை செய்பவர் வெளியில் வந்தால் பொது ஜனம்தானே. தனது அலுவலக அனுபவத்தை வைத்து தனது பார்வையை குறுக்கிக் கொண்டாரானால் அது சமுதாயக்கேடு மட்டுமல்ல பெரும் அபாயமும் அல்லவா?

யார் இதைச் சொல்வது?

உண்மையிலேயே நாம் பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறோமா?

யாரிடம் இதைக் கேட்பது?

 

மீண்டும் பேசுவோம்.

அன்பன்,

வேதாந்தி.

 

 

Friday, January 17, 2014

தென்னை மரத்தில் தேள் கொட்டி...


17.1.14

ஆடியபாதம் – 4

தென்னை மரத்தில் தேள் கொட்டி பனைமரத்தில் நெறியேறிய கதை



 

ஆசுவாசப் படுத்திக் கொண்ட நண்பர் தொடர்ந்தார்.

     உருப்பெருக்கி விவகாரத்தில் மாட்டியவருக்கே மறுபடியும் சிக்கல் வந்தது. உருப்பெருக்கி திருட்டு விவகாரத்தில் ஆசாமி மாட்டிக் கொள்வார் என நினைத்தவர்கள் தங்கள் கழுத்திற்கே சுருக்கு வந்தவுடன் பதைத்து விடுபட்டனர். ஆனாலும் தங்களது சதியிலிருந்து தப்பித்துக் கொண்ட அந்த பிரிவு அதிகாரியின் மேல் வஞ்சம் குறைய வில்லை.

     மறுபடியும் ஒரு திட்டம் ஆரம்பமாகியது.

     இம்முறை அவருக்கு கீழே வேலை செய்யும் ஒருவரை வைத்து அவருக்கு சிக்கலை உண்டாக்கினர். அன்றைய பொழுதில் வாகனங்களை சோதித்து சான்றிதழ்கள் வழங்கும் பணியினை எங்கள் துறை செய்துவந்தது. அந்தப் பணிக்கு ஆட்களை சுழற்சி முறையில் அனுப்பி வந்தனர். பொது மக்களுடன் குறிப்பாக lorry driver களுடன் பேசி, பரிசோதனைக்கு பணம் பெற்று ஒப்புகைச்சீட்டு அளித்து பரிசோதனை முடிந்தவுடன் சான்றிதழ் வழங்குவதுதான் அங்கு பணி. வழக்கம் போலவே பரிசோதனை முடிவு எப்படியிருந்தாலும் ok என சான்றிதழ் வழங்குவதும் அதற்கு தகுந்தபடி கையூட்டு பெற்றுக் கொள்வதும் நடந்து வந்தது.




     மேற்சொன்ன பிரிவு, உருப்பெருக்கி சதியில் சிக்கிய நமது கதாநாயகனுக்கு திடீரென தரப்பட்டது. இந்தப் பணி ஐய்ந்து இடங்களில் நடந்துவந்தது. இவர் அந்த இடங்களை சுழற்சி முறையில் inspect செய்து வந்தார். இப்படி இருக்கையில் ஒரு நாள் இவருக்கு ஒரு குறிப்பிட்ட பணியிடத்தில் சிக்கல் என்றும் உடனே அங்கு வரும்படியும் ஒரு பணியாளரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. இவரும் வருவதாகச் சொன்னார். ஆனால் அதற்குள் இவருக்கு வேறு ஒரு வேலை வரவே அங்கு held up ஆகி விட்டார். அந்த இடத்திற்கு போகவே இல்லை.

     அந்தப் பணியிடத்திற்கு விஜிலென்ஸ் (ஊழல் தடுப்பு கண்காணிப்பு படை) திடீரென வந்து நாள் முழுக்க சோதனையில் ஈடுபட்டது அன்று மாலைதான் அவருக்கு தெரியவந்தது. அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்து அவர் வருகிறேன் என சொன்னபிறகே விஜிலென்ஸ் அங்கு வந்திருக்கிறது. அது மட்டுமல்ல இவரது மேலதிகாரியின் fax machine லிருந்து விஜிலென்ஸ்க்கு ஒரு fax போன பிறகுதான் விஜிலென்ஸ் அங்கு வந்திருக்கிறதென்று பின்னர் இவருக்கு தெரிய வந்தது. அந்த மேலதிகாரி வேறு யாருமல்ல இவர் தொடுத்திருந்த வழக்கின் பிரதிவாதிதான் அவர்.

     ஊழல் தடுப்பு அதிகாரிகள் அங்கிருந்தவரிடமிருந்த பணம் மற்றபடி unaccounted money, receipts என பல ஆதாரங்களை கைப்பற்றி அன்றைக்கு அந்த பணியிடத்தில் பணிபுரிந்தவர்மேல் ஒரு charge sheet frame செய்தனர். இந்த charge sheet ஐ வைத்து நமது கதாநாயகனுக்கும் ஒரு charge sheet தரப்பட்டது. charge என்னவென்றால் இவருக்கு கீழே இயங்கும் பிரிவில் நடக்கும் ஊழலை இவர் தடுக்க வில்லையாம் அதனால் இவர் மேல் நடவடிக்கையாம். இந்த charge ஐக் காட்டி இவருக்கு வர வேண்டிய மற்றுமொரு பதவி உயர்வை தடுத்து விட்டனர்.



     நன்றாக கவனியுங்கள். பிடிபட்டவரது குற்றம் நிரூபனமாகவில்லை. அந்த நிரூபனமாகாத குற்றத்தின் மேல் இவருக்கு கொடுக்கப்பட்ட வெறும் charge ஐக் காண்பித்தே இவரது பதவி உயர்வை தடுத்து விட்டனர். இது கொடுமையல்லவா? அதற்குப் பிறகுதான் இவருக்கு புரிந்தது. மேலதிகாரியின் fax machine லிருந்து fax அனுப்பிவிட்டு இவரை அங்கு வரச்சொல்லி மற்றொருவரிடம் தொலைபேசியில் தகவல் சொல்லி அதன்படி இவர் அங்கு சென்றபின்னர் இவரை விஜிலென்சில் சிக்க வைக்க பெரும் முயற்சி நடந்திருக்கிறதென்று. மிகப் பெரிய சதி. அதற்கு பலர் கூட்டு வேறு. ஆனால் விதி இவரை அங்கு போகாமல் தடுத்து விட்டது. ஆனாலும் வெறும் charge ஐக் காட்டியே இவரது பதவி உயர்வை தடுத்து விட்டனர். பின்னர் இவர் முதலில் போட்ட வழக்கின் தீர்ப்பு வந்த பிறகுதான் இவரது பதவிஉயர்வில் நடந்த சிக்கல் தீர்ந்தது.

     யாரோ கையூட்டு பெற இவரது பதவி உயர்வை அதைக்காட்டி தடுத்து விட்டனர். இதெப்படி.



     இதை விடக் கொடுமை என்னவென்றால் மற்றொரு சம்பவம் அதற்குப் பின்னர் நடந்தது. அதில் பொறியாளர் ஒருவர் ஏழு லட்சங்களுடன் கையும் களவுமாக ஊழல் ஒழிப்புத் துறையினரிடம் மாட்டி அது தி ஹிந்து, எக்ஸ்பிரஸ், டைம்ஃஸ் ஆஃப் இந்தியா, மற்றும் எல்லாப் பத்திரிக்கைகளிலும் வந்தது. அதுவும் அந்தப் பொறியாளரின் பெயருடன் வந்தது. ஆனால் லஞ்ச ஒழிப்புத் துறையினரின் வழிகாட்டுதல் படி நடக்க வேண்டிய துறை விசாரணை அவர் ஓய்வு பெறும் வரை நடைபெறவில்லை மற்றும் அவருக்கு அதற்குப்பின்னர் இரண்டு பதவி உயர்வுகள் கிடைத்து மிக மரியாதையுடன் வழியனுப்பி வைக்கப்பட்டார். இதெப்படி?

     இரண்டு சம்பவங்களும் ஒரே துறையில். ஆச்சரியமாயில்லை?”

நண்பர் சொன்னதைப் பார்த்தால் இன்னமும் ஆச்சரியங்கள் வெளிவரலாம் எனத் தோன்றியது. நான் மௌனத்துடன் அவரது பேச்சுக்காய் காத்திருந்தேன்.

இன்னமும் பேசுவோம்.

அன்பன்

வேதாந்தி.

 

Tuesday, January 14, 2014

திருட்டு போன உருப்பெருக்கி…


14.1.14

ஆடிய பாதம் - 3

திருட்டு போன உருப்பெருக்கி…

 



 
இதுவரை நண்பர் சொன்னதை இலகுவாக ஏற்றுக் கொண்ட நான் அதற்குப் பிறகு அவர் சொன்னதை கேட்கையில் நெஞ்சுக்குள் ‘திக்’ கென்றது. ஒரு பதவி உயர்வுக்கு இப்படியெல்லாமா செய்வார்கள்? என்னசெய்வது பணம் கொள்முதலாகிறதல்லவா. ஆசை கொண்ட மனிதனை அது எந்த நிலைக்கும் தள்ளிவிடுமே..

சற்று மௌனத்திற்குப் பின் நண்பர் தொடர்ந்தார்.

     “உச்ச நீதிமண்ற ஆணைப்படி ஒரு சிறப்புப் பிரிவு தொடங்க அரசு ஆணை வெளியிடப்பட்டது. அந்த ஆணையில் ஒரு உயர் பதவி உருவாக்கப்பட்டது. அந்த உயர் பதவிக்கு தேவையான கல்வித்தகுதியாக ஒரு குறிப்பிட்ட பிரிவில் முனைவர் பட்டம் தேவை என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் மாறாக அந்தப் பதவிக்கு வேறு ஒரு பிரிவில் முனைவர் பட்டம் பெற்றவர் பதவி உயர்வால் நியமனம் செய்யப்பட்டார். ஒரு பல்கலைக் கழகத்திலிருந்து deputation basis ல் வந்து சேர்ந்த துறை அதிகாரியான ‘மணி’ யானவர் இத்தனைக்கும் காரணம். இதனால் பாதிக்கப்பட்டவர், தான் அரசாணையில் குறிப்பிட்டுள்ள அத்தனை தகுதிகளைப் பெற்றிருந்தும்  தனக்கு பதவி உயர்வளிக்காது விதிகளுக்குப் புறம்பாக குறிப்பிட்ட பிரிவில் முனைவர் பட்டம் பெறாதவரை பதவி உயர்வளித்து அமர்த்தியது தவறென நீதி கேட்டு நீதி மண்றத்தில் வழக்கு தொடுத்துவிட்டார்.

இந்த வழக்கால் உள் குழப்பம் ஆரம்பமாகியது. தான் செய்த தவறை வெளிக்கொண்டுவந்ததால் மேலதிகாரிக்கு இவர் மேல் கடுப்பாகியது. எதற்கெடுத்தாலும் இவர் மீது எரிந்து விழ ஆரம்பித்தார். இப்படி இருக்கையில் ஒரு நாள் வழக்குத் தொடுத்தவரது பொறுப்பிலிருந்த பிரிவில் உள்ள ஒரு உருப்பெருக்கி காணாமல் போனது.




அன்று காலை வழக்கம்போல் வந்து இருக்கையில் அமர்ந்தவர் தனது பிரிவில் இருந்த உருப்பெருக்கியை காணோமென்றதும் அதிர்ந்து போனார். உடனே ஓடிப்போய் மேலதிகாரியிடம் தெரிவித்தார். அந்த மேலதிகாரியோ மிகச் சாவகாசமாக “ உன்னுடைய பிரிவிலிருந்துதானே காணோம்.. நீ தான் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும். உன்னுடைய சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்து இழப்பை சரி கட்ட வேண்டும்” என்றார்.

இதைக்கேட்ட பாதிக்கப்பட்டவர் மிரண்டு போனார். அந்த உருப்பெருக்கி மிகவும் சிறந்தது. அது ஒரு inverted microscope with continuous recording facility. அது தொண்ணூறுகளிலேயே பதினைந்து லட்சம் விலை கொண்டது. மிகவும் பயந்து போனவர் தனக்கெதிராக ஏதோ ஒரு சூழ்ச்சி நடக்கிறதென்று மட்டும் புரிந்து கொண்டார். உடனே, “அதெல்லாம் முடியாது. அரசு நிறுவனத்தின் சொத்து ஒன்று திருட்டுப் போயிருக்கிறது. நீங்கள் உடனே காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறீர்களா அல்லது நானே காவல் நிலையம் சென்று இது எனக்கெதிரான சதியென்று புகார் கொடுக்கவா..” என கூச்சலிட்டதும் வேண்டா வெறுப்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் அந்த மேலதிகாரி. புகார் கொடுத்த கையோடு அவர் மற்ற ஊழியர்களை அழைத்து, காணாமற் போன உருப்பெருக்கிக்கு அந்தப் பிரிவின் அதிகாரிதான் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டுமென்றும் இந்த திருட்டு குறித்து தங்களுக்கு அந்தப் பிரிவு அதிகாரியில் மேல்தான் சந்தேகமென்றும் எழுதிக் கொடுக்கச் சொன்னார். அதையும் எழுதிக் கொடுத்த ஊழியர்களும் உண்டு.

இறுதியில் காவல் விசாரணையில் சந்தேகப் பிடியில் சிக்கியவர்களில் துறை மேலதிகாரியும், விதிகளுக்கு மாறாக பதவி உயர்வு பெற்றவரும் அடங்கினர். விசாரணை தமக்கெதிராக கிளம்பவே மேலிடத்தைப் பிடித்து விசாரணையைக் கைவிடச் சொல்லி முறையிட்டு செய்யவேண்டியதைச் செய்து அந்தக் கோப்பை கிடப்பிலே போட்டு முடக்கினர்.

அப்பாவியாகிய பிரிவு அதிகாரியை அவர் செய்த புண்ணியம்தான் காப்பாற்றியது. ஆனால் மனிதர் காவல் விசாரணையில் அலைக்கழிக்கப் பட்டு நொந்து நூலாகி மன உளைச்சலில் குடும்பத்திலும் சிக்கல் வந்து தனது மாமனாரையும் இழந்து பெரும் அவதிக்குள்ளானார். அவரது மாமனார் தனது மறுமகனுக்கு வந்த அவப்பெயரால் மனமுடைந்து இறந்து போனார்.







பாதிக்கப் பட்டவர் நீதிமண்றத்தில் தொடுத்த வழக்கு பத்து வருடங்கள் கழித்து அவருக்குச் சாதகமாக தீர்ப்பாகி பின்தேதியிட்டு பதவி உயர்வு ஆணை பிறப்பிக்கப்பட்டதும்.. அவரை சிக்கலுக்குள்ளாக்கிய துறைத்தலைவர் அவரது தாய் துறையான பல்கழைக்கழகத்திற்கே திருப்பியனுப்பப்பட்டு பிறகு அவர் அந்தப் பல்கலைக்கழகத்திலேயே பதிவாளராக அமர்த்தப்பட்டபோது பெரும் ஊழலில் சிக்கி , “கழிவறை சுத்தம் செய்வது முதற்கொண்டு பெரும் ஊழல்” என ‘தி இந்து’ நாளிதழிலேயே நான்கு colum செய்தி வந்து நாடே நாறிய கதை தனி. தற்போது ஓய்வு பெற்ற அவர் ஓய்வுதியம் மற்றும் பிற பணிக்கால கொடைகள் கிடைக்கப் பெறாது அவதியுறுகிறாராம்.

இதுதான் அரச நீதியும் தெய்வ நீதியும்..” என்றபடி பழைய நினைவுகளில் ஊறிய நண்பர் சற்று மௌனம் காத்தார்..

இன்னமும் பேசுவோம்.

 

அன்பன்,

வேதாந்தி.

Sunday, January 12, 2014

அந்த ஏழு நாட்களும், பின்னர் வளர்ந்த ஆறு பேரும்…


12.1.14

ஆடிய பாதம்- 2

 
அந்த ஏழு நாட்களும், பின்னர் வளர்ந்த ஆறு பேரும்…




 

நண்பர் தொடர்ந்தார்.

“ போபால் சம்பவத்திற்குப் பின்னர் தொடங்கப்பட்ட ஒரு மாநில அரசின் அமைப்பு மற்றும் அதன் தொடர்பான ஆய்வகத்தில்தான் எனக்குப் பணி. தொடங்கப்பெற்று இரண்டு மூண்று ஆண்டுகள் தான் இருக்கும். அனைவரும் புதிதாக வந்தவர்கள்- தலைமை அதிகாரி முதற்கொண்டு. ஆரம்பக் கட்டமானதால் நிறைய கொள்முதல்கள் செய்ய வேண்டியிருந்தது. வேலை நடந்ததோ இல்லையோ ‘கொள்முதல்கள்’ நிறையவே நடந்தன. திடீரென ஒருநாள் மேலதிகாரி வந்து, “ ஆடிட் வரப்போகுதாம்பா. வாங்கினதெல்லாம் வரவில காட்டி வவுச்சர் போட்டு செலவுல காட்டணும்..” என்றபடி அங்கிருந்த ஆறு பேரை, “நீ..நீ..நீ..” என்று அருகில் அழைத்து அவர்களுக்கு வேலைகளை பிரித்துக் கொடுத்தார். அந்த ஐந்து பேரும் கைகளைக் கட்டிக் கொண்டு தலையை பவ்வியமாய் ஆட்டி கேட்டுக் கொண்டனர். தெரிந்தோ தெரியாமலோ அன்றைக்கு அவர்கள் தீட்சை வாங்கியது அவர்களை ஊழலில் பெரிய ஆளாக்கியது. இன்றைக்கு அவர்கள் கூட்டு சேர்ப்பதிலும், கொள்ளையடிப்பதிலும் கில்லாடிகளாய் வளர்ந்திருக்கிறார்கள்.

அந்த ஆறு பேரும் விதவிதமாய் கையொப்பமிட்டு சரக்குகள் வந்தமாதிரியும் செலவழிந்த மாதிரியும் வவுச்சர்களை நிரப்பி தேதி வாரியாய் கிழித்து ஏழுநாட்கள் இரவும் பகலுமாய் ஊழலுக்காய் “உழைத்து” முன்னேறினார்கள்.





அதிலே ஒருவர், முத்தானவர், பேனாவைப் பிடித்து “பிச்சை” என்று தனது இடதுகையால் ஒரு வவுச்சரில் கையொப்பமிட்டதை இன்றைக்கு நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. அன்றைக்கு ஆரம்பித்தவர் லட்சக்கணக்கில் பிச்சையெடுத்து நிர்வாகத்திற்கு கோடிக்கணக்கில் நட்டத்தை ஏற்படுத்தி வந்த எல்லா மேலதிகாரிகளுக்கும் வேண்டியவராகி பல பதவி உயர்வுகளையும் பெற்று இப்போதுதான் ஓய்வு பெற்றார்.

பிச்சையெடுத்த பணத்தில் சொந்த ஊரில் வளமாய் செட்டிலானதாகக் கேள்வி..”




“பிச்சை”யிலிருந்த Irony யை நினைத்து சிரித்தேன்..

இன்னமும் பேசுவோம்.

அன்பன்,
வேதாந்தி.

Wednesday, January 1, 2014

ஆடிய பாதம்...



1.1.2014

ஆடிய பாதம்...
 
 

என்ன ஒரு மந்திரமான சொல். இது அந்த பாதத்தின் பெருமையைச் சொல்கிறதா அல்லது ஆட்டத்தின் மகிமையைச் சொல்கிறதா..? வெகு நாட்களாகவே எனக்கு இந்தச் சந்தேகம் உண்டு. அதை விட இன்னொருமுறையும் அந்த ஆட்டம் நடவாதா எனும் எதிர் பார்ப்பையும் எல்லொர் மனதிலும் எழுப்பி மகிழச் செய்யும் ஆற்றல் இந்தச் சொல்லுக்கு உண்டு. இது தில்லையம்பலத்தில் ஆடிய சபாபதியாகிய நடராசனைக் குறிக்கும் என்பது நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
 
இதுவே, ‘ஆடிய ஆட்டமென்ன’ எனும்போது அது ஆட்டத்தின் மிகுதியையும் பின் அது அடங்கி விட்டதென்பதன் பொருளையும் குறிப்பதாய் உள்ளது. அதே நேரத்தில் அந்த ஆட்டத்தின் மிகுதியினால் பாதிக்கப் பட்டோரும், மற்றோரும் இனி ஆட்டம் கிடையாதென்பதனால் நிம்மதியடைவர் என்பதையும் தெளிவு செய்கிறது.

இங்கு ஆட்டம் என்பதை ஒருவரது வாழ்வின் காலத்தையும் அல்லது வாழ்வின் ஒரு பகுதியையும் குறிப்பதாகக் கொள்ளலாம். எதுவாய் இருந்தாலும் “ஆட்டத்தின்” முடிவில் ஒரு அமைதியும் விளைவுகளும் இருக்கும்.

சமீபத்தில் ஓய்வு பெற்ற எனது நெருங்கிய நண்பர் தனது அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்ட போது என் மனதில் தோன்றிய சொல் தான் இந்தப் பதிவின் தலைப்பு. எனது நண்பர் ஒரு அரசு அலுவலகத்தில் அதிகாரியாக பணி புரிந்து ஓய்வடைந்தவர். அவர் என்னுடன் பகிர்ந்து கொண்ட சில முக்கியமான அனுபவங்களை அவர் கூறுவதைப் போலவே உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

“நான் இந்த அரசு வேலையில் சேர்வதற்கு முன்னர் ஒரு கல்லூரியில் விரிவுரையாளனாக பணி புரிந்து வந்தேன். அரசு அலுவலில் ஒரு தனி நபரின் அறிவுக்கோ அல்லது திறமைக்கோ மதிப்பு இல்லை எனப் புரியாத நிலையில் இந்த வாய்ப்பு வந்த போது சேர்ந்து கொண்டேன். பிறகுதான் தெரிந்தது இங்கு அறிவுள்ளவர்கள் மற்றும் நேர்மையானவர்கள் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டு கழுத்து நெறிக்கப் படுகிறார்கள் என்று. இதை நான் மிகைப்படுத்தியோ அல்லது எனக்கு நேர்ந்த அனுபவத்தை மட்டுமே வைத்தோ ஒரு குறுகிய பார்வையில் சொல்லவில்லை. எங்கள் அலுவலகத்தில் மற்றும் சிலரும் இதுவல்லாது நான் சந்தித்த மத்திய அரசு ஊழியர்கள் பலர் என்னுடன் பகிர்ந்து கொண்ட அனுபவங்களையும் வைத்துத்தான் சொல்கிறேன்.

அனுபவம் ஒன்று:

 
 நான் பணிக்குச் சேர்ந்து இரண்டு வருடங்கள் ஆகியிருந்தது. புதிதாய் ஒரு PROJECT தயாரித்து அரசிடம் நிதி கோரும் முயற்சியில் அனைவரையும் இறக்கியிருந்தார் மேலதிகாரி. PROJECT க் குத் தேவையான DATA COLLECTION மற்றும் DATA INCORPORATION பணி எனக்குத் தரப்பட்டிருந்தது. அந்தச் சமயத்தில் CATTLE POPULATION DATA எனக்குக் கிடைக்கவில்லை. இதைச் சொன்னேன். அதற்கு அந்த மேலதிகாரி சற்றும் அசராமல் “HUMAN  POPULATION DATA இருக்கில்லை அதை வைத்து ஒரு ஆளுக்கு இரண்டு மாடு, நாலு ஆடுன்னு போட்டுக்கோ..” என்றார். நான் அதிர்ந்து போய் “அப்படியெல்லாம் DATA MANIPULATE பண்ணக் கூடாது “ என்றேன். உடனே என்னிடமிருந்த கோப்பைப் பிடுங்கி வேரொருவரிடம் கொடுத்து, “இத நீ பண்ணப்பா, இவன் நியாயம் பேசுரான். சரிப்பட்டு வரமாட்டான்” என்றார். அதுதான் பிறர் என்னை அடையாளம் கண்டு ஒதுக்கி வைக்கத் தூண்டிய முதல் சம்பவம். அதிலிருந்து தனி மனிதனானேன். இப்படி தயாரான PROJECT க்கு நிதியும் கிடைத்தது, அனைவருக்கும் பரவலான பலனும் கிடைத்தது. யாரும் உண்மையை விரும்பவில்லை. ஏனெனில் அதனால் பலனில்லை என்பது தெரிந்தது...”
இதைக் கேட்ட எனக்கு சற்று ஆச்சரியமாகத்தான் இருந்தது.
அவர் சொன்ன மற்ற சம்பவங்கள் தொடர்ந்து பகிர உள்ளேன்..

அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
 


இன்னமும் பேசுவோம்.

அன்பன்,

வேதாந்தி.

 

Related Posts Plugin for WordPress, Blogger...