1.1.2014
ஆடிய பாதம்...
என்ன ஒரு மந்திரமான சொல். இது
அந்த பாதத்தின் பெருமையைச் சொல்கிறதா அல்லது ஆட்டத்தின் மகிமையைச் சொல்கிறதா..? வெகு
நாட்களாகவே எனக்கு இந்தச் சந்தேகம் உண்டு. அதை விட இன்னொருமுறையும் அந்த ஆட்டம் நடவாதா
எனும் எதிர் பார்ப்பையும் எல்லொர் மனதிலும் எழுப்பி மகிழச் செய்யும் ஆற்றல் இந்தச்
சொல்லுக்கு உண்டு. இது தில்லையம்பலத்தில் ஆடிய சபாபதியாகிய நடராசனைக் குறிக்கும் என்பது
நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இதுவே, ‘ஆடிய ஆட்டமென்ன’ எனும்போது
அது ஆட்டத்தின் மிகுதியையும் பின் அது அடங்கி விட்டதென்பதன் பொருளையும் குறிப்பதாய்
உள்ளது. அதே நேரத்தில் அந்த ஆட்டத்தின் மிகுதியினால் பாதிக்கப் பட்டோரும், மற்றோரும்
இனி ஆட்டம் கிடையாதென்பதனால் நிம்மதியடைவர் என்பதையும் தெளிவு செய்கிறது.
இங்கு ஆட்டம் என்பதை ஒருவரது
வாழ்வின் காலத்தையும் அல்லது வாழ்வின் ஒரு பகுதியையும் குறிப்பதாகக் கொள்ளலாம். எதுவாய்
இருந்தாலும் “ஆட்டத்தின்” முடிவில் ஒரு அமைதியும் விளைவுகளும் இருக்கும்.
சமீபத்தில் ஓய்வு பெற்ற எனது
நெருங்கிய நண்பர் தனது அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்ட போது என் மனதில் தோன்றிய
சொல் தான் இந்தப் பதிவின் தலைப்பு. எனது நண்பர் ஒரு அரசு அலுவலகத்தில் அதிகாரியாக பணி
புரிந்து ஓய்வடைந்தவர். அவர் என்னுடன் பகிர்ந்து கொண்ட சில முக்கியமான அனுபவங்களை அவர்
கூறுவதைப் போலவே உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
“நான்
இந்த அரசு வேலையில் சேர்வதற்கு முன்னர் ஒரு கல்லூரியில் விரிவுரையாளனாக பணி புரிந்து
வந்தேன். அரசு அலுவலில் ஒரு தனி நபரின் அறிவுக்கோ அல்லது திறமைக்கோ மதிப்பு இல்லை எனப்
புரியாத நிலையில் இந்த வாய்ப்பு வந்த போது சேர்ந்து கொண்டேன். பிறகுதான் தெரிந்தது
இங்கு அறிவுள்ளவர்கள் மற்றும் நேர்மையானவர்கள் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டு கழுத்து
நெறிக்கப் படுகிறார்கள் என்று. இதை நான் மிகைப்படுத்தியோ அல்லது எனக்கு நேர்ந்த அனுபவத்தை
மட்டுமே வைத்தோ ஒரு குறுகிய பார்வையில் சொல்லவில்லை. எங்கள் அலுவலகத்தில் மற்றும் சிலரும்
இதுவல்லாது நான் சந்தித்த மத்திய அரசு ஊழியர்கள் பலர் என்னுடன் பகிர்ந்து கொண்ட அனுபவங்களையும்
வைத்துத்தான் சொல்கிறேன்.
அனுபவம்
ஒன்று:
நான்
பணிக்குச் சேர்ந்து இரண்டு வருடங்கள் ஆகியிருந்தது. புதிதாய் ஒரு PROJECT தயாரித்து
அரசிடம் நிதி கோரும் முயற்சியில் அனைவரையும் இறக்கியிருந்தார் மேலதிகாரி. PROJECT க்
குத் தேவையான DATA COLLECTION மற்றும் DATA INCORPORATION பணி எனக்குத் தரப்பட்டிருந்தது.
அந்தச் சமயத்தில் CATTLE POPULATION DATA எனக்குக் கிடைக்கவில்லை. இதைச் சொன்னேன்.
அதற்கு அந்த மேலதிகாரி சற்றும் அசராமல் “HUMAN
POPULATION DATA இருக்கில்லை அதை வைத்து ஒரு ஆளுக்கு இரண்டு மாடு, நாலு ஆடுன்னு
போட்டுக்கோ..” என்றார். நான் அதிர்ந்து போய் “அப்படியெல்லாம் DATA MANIPULATE பண்ணக்
கூடாது “ என்றேன். உடனே என்னிடமிருந்த கோப்பைப் பிடுங்கி வேரொருவரிடம் கொடுத்து, “இத
நீ பண்ணப்பா, இவன் நியாயம் பேசுரான். சரிப்பட்டு வரமாட்டான்” என்றார். அதுதான் பிறர்
என்னை அடையாளம் கண்டு ஒதுக்கி வைக்கத் தூண்டிய முதல் சம்பவம். அதிலிருந்து தனி மனிதனானேன்.
இப்படி தயாரான PROJECT க்கு நிதியும் கிடைத்தது, அனைவருக்கும் பரவலான பலனும் கிடைத்தது.
யாரும் உண்மையை விரும்பவில்லை. ஏனெனில் அதனால் பலனில்லை என்பது தெரிந்தது...”
இதைக் கேட்ட எனக்கு சற்று ஆச்சரியமாகத்தான்
இருந்தது.அவர் சொன்ன மற்ற சம்பவங்கள் தொடர்ந்து பகிர உள்ளேன்..
அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
இன்னமும் பேசுவோம்.
அன்பன்,
வேதாந்தி.
No comments:
Post a Comment