Followers

Wednesday, September 14, 2011

நாம் கொள்ளும் நல்ல எண்ணங்கள் நம்மை வாழ வைத்து உயர்த்துமா?

14.9.11

நாம் கொள்ளும் நல்ல எண்ணங்கள் நம்மை வாழ வைத்து உயர்த்துமா?



இது நல்லவன் வாழ்வான் என்ற கோட்பாடுதான். இளைஞர்கள் இதனை வெறும் கோட்பாடாக மட்டுமே பார்க்கின்றனர். அனுபவத்தில் இதை உணரும்போது காலம் கடந்ததாகி விடுகிறது.  இதையே பெரியோர் பலர் பலவாறு சொல்லியிருக்கின்றனர். “தீதும் நன்றும் பிறர் தர வாரா”, “பிறர்க்கு இன்னா முற்பகல் செயின் பிற்பகல் தாமே விளையும் தமக்கு” என்பதும் மற்றும் அய்யனின், “வெள்ளத்தனையது மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனையதுஉயர்வு” என்பதும் அனைவரும் அறிந்ததே.


நமது வாழ்வில் மேற்சொன்னவைகளை வலியுறுத்தும் சம்பவங்கள் நடந்திருக்கலாம். ஆனால் நாம் அவைகளின் மகத்துவத்தை அறியாது மேம்போக்காக நம் நினைவுகளைக் கடந்துசெல்ல அனுமதித்திருக்கலாம். அத்தகைய ஒரு சம்பவத்தினை இன்றைய பேச்சில் பகிர்ந்து கொள்கிறேன். இது எனது நண்பரது அலுவலகத்தில் நடந்த ஒன்று.


எனது நண்பரது அலுவலகம் ஒரு மத்திய அரசின் வழிகாட்டுதலோடு நடத்தப்படும் ஒரு மாநில அரசு அலுவலகம். இதில் எனது நண்பர் ஒரு B Grade அதிகாரியாக பணிபுரிகிறார். இந்த அலுவகத்தின் உச்ச அதிகாரி அரசால் நிர்ணயிக்கப்படும் ஒரு IAS அதிகாரியாவார். அவரது நேரடிப்பார்வையின் கீழ் ஒரு MD rank ல் ஒரு அதிகாரி. அவரது நேரடிக் கட்டுப்பாட்டில்தான் அனைத்து அலுவலகப் பணிகளும் (technical and administrative works)  வருகிறது. 


மத்திய அரசால் வழிநடத்தப் பட்டு மற்றும் உலக வங்கியின் உதவியால் தொடங்கப்பட்ட ஒரு பிரிவு முதலில் மத்திய அரசு வழி காட்டுமென்றும் பிறகு அதனை எந்த உதவியும் இன்றி (பொருளாதார மற்றும் தொழில் நுணுக்கம்) மாநில அரசு சார்ந்த அவரது அலுவலகம் தொடரவேண்டும் என்ற ஒப்புதலோடு தொடங்கப் பட்டு பணி நடந்து வந்தது. அந்தப் பணிக்கு ஆள் கிடைக்காதபோது ஒருவர் வந்து சேர்ந்தார். சிறப்பான பணித் தகுதிகள் பெற்றிருந்தார். இன்னமும் சில காலம் பொறுத்திருப்பாரேயானால் அவருக்கு அரசு அலுவலகத்திலேயே பெரும் பதவி கிடைக்க வாய்ப்பிருந்தது. ஆனால் அவரது வறுமையும் சூழலும் அவரை இந்தப் பணியை ஏற்றுக் கொள்ளச் செய்தது. இது அந்த அலுவலகத்திற்குத் தேவையான எல்லாத் தகவல்களையும் கணினிமயமாக்கும் பணி.  ஆரம்பத்தில் அந்தப் பதவி ஒரு ஒப்பந்த அடிப்படையிலும் அந்த ஒப்பந்தம் ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்கப் படுமென்றும் தெரிந்து கொண்டு அவர் அந்தப் பணியில் தொடர்ந்தார். ஒவ்வொரு வருடமும் பணி முன்னேற்றத்தை மத்திய அரசு அலுவலகம் கவனித்து வழி காட்டி வந்தது. அந்தப் பணியாளருக்கும்  பணி ஒப்பந்தம் புதுப்பித்தல்ஒவ்வொரு வருடமும் நடந்து வந்தது.


இதில் என்ன வேடிக்கை என்றால் மத்திய அரசு வழிகாட்டியபடிக்கு அவருக்கு ஊதியம் நிர்ணயிக்கப்படவில்லை மாறாக அதற்கும் 50 சதவிகிதம் குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டது. இத்தனைக்கும் காரணம் உள் அரசியல்தான். 20,000/- ரூபாய்கள் பெறவேண்டியவர் வெறும் 8,000/-ம் மட்டுமே பெற்றுக் கொண்டு பணியினைச் செய்தார். இந்த அலுவலகத்தில் பணி அனுபவம் பெறுதல் தனது பிற்கால பணி முன்னேற்றத்திற்கு உதவியாய் இருக்கும் என்பதாலேயே இத்தனையையும் பொறுத்துக் கொண்டு பணி செய்தார்.



ஒன்பது ஆண்டுகளாக இப்படி புதுப்பிக்கப்பட்ட பணி ஒரு ‘அதி புத்திசாலியின்’ குறுக்கீட்டால் பத்தாம் வருடம் நிறுத்தி வைக்கப்பட்டது.    இதற்குள் மூன்று IAS அதிகாரிகள் தலைமைப் பொறுப்பிலிருந்து மாறிவிட்டனர். புதிதாய் வந்த IAS அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்லாமலேயே MD யால்  பணியாளரது பணி நீட்டம் நிறுத்திவைக்கப் பட்டது.

இது ஏதோ தற்செயலாக நிகழும் கால தாமதம் என நினைத்து அந்தப் பணியாளார் தனது பணிக்கு தொடர்ந்து வந்து கொண்டிருந்தார். நடப்பதறியாத அவரது நேரடி அதிகாரியான எனது நண்பரும் அவருக்கு நிலைமையை புரிய வைக்க வில்லை.  இப்படி இருக்கையில் ஒருமாதத்திற்குப் பின்னர்  நேரடி அதிகாரியான எனது நண்பரை  கூப்பிட்ட MD , தாறு மாறான வசைவுகளை பொழிந்து உடனடியாக அந்த ஒப்பந்தப் பணியாளரை நிறுத்தச் சொன்னார். MD யின் வெறுப்பிற்குக் காரணம்  நேரடி அதிகாரியான எனது நண்பர் தான் அந்தப் பொறுப்பிற்கு வந்த உடனே , தன் கீழ் பணிசெய்த ஒப்பந்த பணியாளரின் ஒப்பந்த ஊதிய உயர்வு  குறித்து  IAS அதிகாரியிடம் கோப்பு அனுப்பி அனுமதிபெற்று உயர்த்தியதோடல்லாமல் பின் தேதியிட்டு அந்த உயர்வை பணியாளருக்கு கிடைக்கும் படிக்கும் செய்திருக்கிறார். இதனால் அந்தப் பணியாளருக்கு ஏறக்குறைய ஒரு இரண்டு லட்சத்துச் சொச்சம் உரூபாய்கள் நிலுவைத் தொகையாகவும்  கிடைத்தது. இதுதான் அந்த MD யின் எரிச்சலுக்குக் காரணம்.

மனம் நொந்துபோன எனது நண்பர் அந்த ஒப்பந்தப் பணியாளரை அழைத்து, ‘தம்பி உன்னை நாளையிலிருந்து பணிக்கு வரவேண்டாமென MD பணித்திருக்கிறார்..’ என தயங்கித் தயங்கி சொல்லியிருக்கிறார். ஆனாலும் சளைக்காத அந்தப் பணியாளர், ‘பராவாயில்லை சார்..’ எனச் சொல்லிவிட்டு கிளம்பி விட்டார். பலபேர் பலவாறு அறிவுறுத்தியும் அவர் வழக்குத் தொடரும் எண்ணத்தைக் கைக் கொள்ளவில்லை.  ஒருவேளை அது எனது நண்பரை சங்கடத்திற்குள்ளாக்கும் எனக் கருதினாரோ என்னவோ.  ஆனால் நண்பருக்கோ இது மிகுந்த மனக் கவலையை உண்டுபண்ணியது. பசிகொண்டவன் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் அவனது சாப்பாட்டு இலையை  இழுத்தெறிந்தது போல் கூனிக் குறுகிப்போனார்.


இது நடந்து ஒரு வருடம் இருக்கலாம் .



இதே போல ஒரு நாள். மாலை ஏழு மணி இருக்கும். MD யை அவரது மேலதிகாரியான IAS அதிகாரி தனது அறைக்கு அழைத்து, ‘நாளையிலிருந்து நீங்கள் அலுவலகம் வரவேண்டியதில்லை’ எனச் சொல்லி அவரை கட்டாய விடுப்பில் செல்லப் பணித்திருக்கிறார். இதைக் கேட்ட MD நிலைகுலைந்துபோய் சாய்ந்து விட்டாராம்.

கையோடு கொண்டுவந்திருந்த CTC (charge transfer certificate) யில் MD யின் கையொப்பமும் பெற்றுக் கொண்டபின் அவரது அறையை பூட்டச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறார் அந்த IAS அதிகாரி.  தற்போது அவர் மீது charge frame பண்ணவும் ஏற்பாடுகள் நடக்கிறதாம். அந்த MD இப்போது பெரும் மனக் குழப்பத்தில் பைத்தியம் பிடிக்காத குறையாக சிபாரிசுக்காக அலைந்து கொண்டிருக்கிறாராம்.

இதைக் கேட்ட என் நண்பர் மிகுந்த ஆச்சரியப்பட்டுப் போனார். இதை என்னவென்று சொல்வது..? தெய்வம் நின்று கொன்றது எனச் சொல்லலாமா அல்லது பிறர்க்கு இன்னா செய்தது தனக்கு விளைந்தது எனக் கொள்ளலாமா எனக் கேட்டார்.

இதை விட அற்புதம் என்னவென்றால் பணியிலிருந்து அனுப்பப் பட்ட அந்தப் ஒப்பந்தப் பணியாளரின் நிலை.

சரியாக ஒப்பந்தப் பணியாளார் பணி நீக்கம் செய்யப்பட்டு ஓராண்டிற்குப் பின்னர் அவரிடமிருந்து என் நண்பருக்கு தகவல் வந்தது.

தென் மாவட்டத்தைச் சார்ந்த அந்த பணியாளர்,  தான் கணினி சார்ந்த மேம்பட்ட பயிற்சி பெற்றிருந்தும், தளராது அய்ந்து எருமை மாடுகளை வாங்கி பண்ணை வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.  தனக்கு கிடைத்த நிலுவைத்தொகையில் வாங்கிப்போட்டிருந்த தங்க நகைகளை அடகு வைத்து புரட்டிய பணமும் சிறிது வங்கிக் கடனும் இதற்கு உதவியிருக்கிறது. பண்ணை வைத்து ஓராண்டு முடியும் தருவாயில்   48,000/- உரூபாய்கள் மாத ஊதியத்தில் அவருக்கு அரசுப் பணி கிடைத்திருக்கிறது.  பண்ணையும் ஓரளவுக்கு வருமானம் தர ஆரம்பித்து விட்டது. மிகுந்த நன்றி உணர்ச்சியோடு இந்த தகவலை அந்த பணியாளர் நண்பரிடத்தில் சொன்னபோது நண்பருக்கு கடவுளின் விளையாட்டு புரிந்தது. மனம் நெகிழ்ந்து போனார்.

நம்பினாரும் கெடுவதில்லை.. நல்லவனும் கெடுவதில்லை.



இதை விட இன்னுமொரு அற்புதம் என்னவென்றால், இவர்கள் கெட்ட எண்ணத்தில் நிறுத்திவைத்த ஊதியம் அவருக்கு காலம் தாழ்த்தி நிலுவைத் தொகையாக கிடைத்தபோது அந்தப் பணியாளர் தனது நிலுவைத்தொகை அத்தனைக்கும் தங்க நகைகளை வாங்கி யிருந்தார். அந்தத் தங்க நகைகளின் மதிப்பு தற்போது அவர் வாங்கிய விலையிலிருந்து 300 சதம் கூடிப்போய் இருந்தது..

இது வேடிக்கை யல்லவா…

தெய்வம் தர, தடுப்பார் யார் என்பதை நினைவூட்டவில்லையா?

இதுதான் வாழ்க்கை. நம்மையறியாமலேயே நமது எண்ணங்கள் நம் வாழ்வின் திசையையும், முடிவையும் நிர்ணயிக்கின்றன.

எல்லோருக்கும் நல்லதையே நினைப்போம்,  நன்மைகளையே  நாமும் பெறுவோம், நன்கு சிறக்க மகிழ்வுடன் வாழ்வோம்.

இன்னமும் பேசுவோம்.

அன்பன்,

வேதாந்தி.




Related Posts Plugin for WordPress, Blogger...