Followers

Monday, November 24, 2014

துன்பமும், தொடர்ந்ததும்…!


24.11.14

துன்பமும், தொடர்ந்ததும்…!சற்று நேரம் அமைதியாய் இருந்த நண்பர் தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டுவந்து பேச்சைத் தொடர்ந்தார்.

“UPASI யில் வேலை கிடைத்துவிடும் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்ததால் அந்த ஏமாற்றத்தைத் தாள முடியவில்லை. மனமொடிந்து போனேன். பேராசிரியர் என்னைத் தேற்ற மிகவும் சிரமப்பட்டார். அவரும் சற்று கலங்கித்தான் போனார். அந்த UPASI இயக்குனர் இறந்த பிறகு அடுத்த இயக்குனரை நியமிக்க ஆறுமாதங்களுக்கு மேலாகி விட்டதால் அந்த தேர்வுப் பட்டியலையே நிராகரித்து விட்டனர்.

நான் இதைப் பற்றி பேசும் போது நடந்ததை அப்படியே சொல்கிறேனேயன்றி சுவாரசியத்துக்காகக்கூட கிஞ்சித்தும் உண்மையல்லாதவற்றை சொல்லவில்லை. இவை அத்தனையும் என் வாழ்வில் அப்படியே நடந்தவைகள். நடந்தவைகளை இப்போது நினைத்தாலும் என்னாலேயே நம்ப முடியவில்லைதான்.

நான் எதிர்பார்த்த வேலை எனக்குக் கிடைக்கவில்லை என்பதை அறிந்த எனது பெற்றோர், இனி இவனுக்கு வேலை கிடைக்காது என முடிவுக்கு வந்தனர். திருமணமாவது நடக்கட்டுமென்று அதற்கான முயற்சி எடுத்துக் கொண்டனர். எங்களது உறவினரில் ஒருவர், தன் பெண்ணை நான் மணந்து கொண்டால் எனக்கு சொந்தமாக ஒரு சாயத் தொழிற்சாலை வைத்துத் தருவதாகச் சொன்னார். பெண் அழகாய்த் தான் இருந்தார். ஆனால் எனக்கு மனமொப்பவில்லை. கையில் காசில்லாமல் இன்னொருத்தியை எதை நம்பி கைப்பிடிப்பது

மிகவும் குழம்பிப் போனேன்.

அந்தக் காலம் மிகக் கொடுமையான காலம்.

அது நான் எனது நம்பிக்கையை மட்டுமல்ல சுயத்தையும் இழந்த காலம். பராரியைப் போல் தெருக்களில் சுற்றினேன். என்னுடன் இருந்த நண்பர்கள் அனைவரும் அவரவர் கல்வித் தகுதிக்கேற்ப வேலை கிடைத்து வெளியூர் சென்றுவிட்டனர். நான் தனிமைப் படுத்தப் பட்டேன்.

மனமுடைந்து விடுவேனோ என்று எனது நிலை கண்டு தாங்கொனாது எனது நண்பர் கோபால் என்பவர், TWAD Board ல் அப்போதுதான் அவருக்கு பொறியாளராய் வேலை கிடைத்து இருந்தது, எனக்கு மாதாமாதம் நூறு உரூபாய்கள் அனுப்பி வைத்தார். அவர் மனம் கோணலாகாதென நானும் இரண்டு மூண்று மாதங்கள் பணம் பெற்றுக் கொண்டு பிறகு நாசூக்காய் அவருக்குத் தெரியப்படுத்தி அவர் பணம் அனுப்பிவைப்பதை தவிர்த்தேன்.

இந்த நிலையில் இன்னுமொரு கொடுமை எனக்கு நடந்தது. வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு கிடைக்கும் அரசின் நிவாரணத் தொகையாக மாதம் நூறு உரூபாய் ஸ்டேட் பேங்கில் அதற்கென என்னால் ஆரம்பித்து வைக்கப்பட்ட எனது கணக்கில் இட்டு வைக்கப் பட்டது. அதை ஒரு நாள் எனது நேர்முகத் தேர்வுக்கான செலவுக்காக எடுக்கச் சென்றபோது எனது கணக்கிலிருந்த அத்தனை பணத்தையும் ( அதுவரை ஒரு மூவாயிரம் உரூபாய்கள் சேர்ந்திருக்கும்) அந்த வங்கியில் பணி புரிந்த எனது நண்பரின் அண்ணார் பொய்க் கையெழுத்து போட்டு எடுத்திருந்தார்.

நான் பணம் எடுக்கச் சென்றபோது எனது கணக்கில் பணம் இல்லையென்றதும் திகைத்துப் போனேன். என் நண்பரின் அண்ணன் “ நான் தான் பணத்தை எடுத்து விட்டேன். கொஞ்சம் கொஞ்சமாக திருப்பிக் கொடுத்து விடுகிறேன். இது குறித்து மேலாளரிடம் புகார் செய்யவேண்டாம்” எனக் கெஞ்சினார்.

பெருமாளும் அனுமாரும் என் நினைவுக்கு வர, எனக்குச் சிரிப்புத்தான் வந்தது.

எல்லாம் கைவிட்டுப் போன நிலையில் நான் இருந்தபோது என் மனம் சூன்யமாகிப் போனது. அப்போது எனக்குத் தெரிந்த வழி இரண்டுதான். ஒன்று, தற்கொலை செய்து கொள்வது. இரண்டாவது, எதையும் எதிர் நோக்காமல் உயிர் வாழ்வது.

தற்கொலை செய்து கொண்டால் நான் படித்த படிப்பு பயனற்றுப் போய்விடும் எனத் தோன்றியதால் அதைக் கைவிட்டேன்.

அதனாலேயே நான் படித்த படிப்பு மற்ற யாருக்கேனும் பயன்படட்டும் என நினைத்தேன்.

சற்று நிதானத்துடன் யோசித்தபோது எனக்கு ராமகிருஷ்ணா மடத்தினர் நடத்தும் பள்ளி நினைவுக்கு வந்தது. அவர்களது பள்ளி ஒன்று அருணாச்சல பிரதேசத்தில் இருக்கும் தகவல் எனக்குத் தெரிந்தது. அதுமட்டுமல்ல அங்குள்ள பள்ளியில் ஆசிரியர் பற்றாக் குறையும் உள்ளது எனவும், அங்கு போய் பணி புரிய பணியாளர் யாரும் அத்தனை எளிதில் ஒப்புதல் கொடுப்பதில்லை எனவும் கேள்விப் பட்டேன். உடனே சென்னை கிளம்பினேன். மயிலாப்பூரிலுள்ள விவேகானந்தா கல்லூரிக்கு அருகிலுள்ள ராமகிருஷ்ணா மடத்திற்கு வந்தேன். அங்கிருந்தவர்களிடம் எனது நிலையைச் சொன்னேன். அவர்கள் அருகில் விரித்திருந்த பாயில் அமரச் சொன்னார்கள்

ஆசிரமத்தின் முக்கியமான நபருக்காக காத்திருந்தேன்.

சற்று நேரம் கழித்து ஒரு சாமியார் வந்தார். அவரைக் கண்டதும் எழுந்து நின்று கை கூப்பி வணக்கம் சொன்னேன்.

சாமியார்,“சொல்லுங்கள் என்ன வேண்டும்?” எனக் கேட்டார்

“நான் அறிவியலில் முதுநிலைப் பட்டப் படிப்பு படித்திருக்கிறேன். அருணாச்சல பிரதேசத்தில் உள்ள உங்களது பள்ளியில் பணி புரிய விரும்புகிறேன். இதை சேவையாகவே செய்ய விரும்புகிறேன். தாங்கள் எனக்கு அதற்கான உத்தரவைத் தரவேண்டும்…” என்றேன்.

என்னைச் சற்று நேரம் உற்றுப் பார்த்தவர் மௌனமாக இருந்தார். சில நிமிடங்களுக்குப் பிறகு கண்களை மூடிக் கொண்டார். பதிலேதும் சொல்லவில்லை.

அவர் தயக்கம் காட்டியதால் நானே சற்று நேரம் கழித்து பேசினேன். “அய்யா, கல்விச் சேவை மட்டுமல்ல வேறெந்தச் சேவையாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள நான் சம்மதிக்கிறேன்,” என்றேன்.

பட்டென கண்ணைத் திறந்தவர், “உமது பெற்றோர் உள்ளனரா?” என்றார்.

“ஆமாம் அய்யா…”, என்றேன். அதைக் கேட்டதும் மறுபடி கண்களை மூடிக் கொண்டார்.

மறுபடி அமைதி. அதற்குப் பிறகு கண்களை விழித்தவர் என்னை ஆசீர்வதிப்பதைப் போல் கையை வைத்துக் கொண்டு,

“You have not received your call..” எனச் சொல்லி என்னை ‘எழுந்து போகலாம்’ என்பதைப் போல் சைகை காட்டினார்…

சம்மணம் போட்டு பாயில் அமர்ந்திருந்தவன், சாமியார் சொன்னதைக் கேட்டதும் உறைந்து போனேன்.

அவ்வளவுதானா? எல்லாம் முடிந்து விட்டதா?

உடம்பெல்லாம் சில்லிட்டுப் போனது. மெல்ல முக்கலுடன் எழுந்தவன் மிகுந்த துக்கத்துடன் மடத்தை விட்டு வெளியே வந்தேன்.

ஓ…வென அழவேண்டும் போலிருந்தது. கடற்கரைக்குச் செல்ல பேருந்தில் அமர்ந்தேன். கடற்கரையை அடைந்து கால் மணலில் புதைந்தபோதும் எனக்கு உணர்வில்லை. மரத்துப் போனது போலிருந்தது.

எதிரில் விரிந்து பரந்திருந்த கடலையும் அதைத் தழுவியபடி எழுந்து என்னை நோக்கி நுரைத்து வந்த அலைகளையும் பார்த்தபடி நின்றிருந்தேன். நான் ஒரு முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்திலிருப்பது எனக்குப் புரிந்தது.”

நண்பரது வாய்மொழி வார்த்தைகள் உள்ளார்ந்த உணர்வுகளுடன் வெளிவந்ததால் அதைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கும் மனதைப் பிசைந்தது.

நண்பர் தொடரக் காத்திருந்தேன்.

மீண்டும் பேசுவோம்.

அன்பன்,

வேதாந்தி.


 

Monday, November 17, 2014

அஞ்ஞாதவாசமும், அதற்குப்பின் நடந்ததும்…!


17.11.14

அஞ்ஞாதவாசமும், அதற்குப்பின் நடந்ததும்…!


முன் நிகழ்வுக்கு: ஏழரைச் சனியும் எடுக்கும் முடிவுகளும்...!
எண்ணத் தெளிவில்லாமல், உணர்வுகள் மட்டுமே முன்னிலையில் நின்று உந்தி ஒரு முடிவெடுத்ததனால் எனது நண்பர் மிகுந்த கடுமையான காலங்களை ஆதரவின்றி கடக்க வேண்டியிருந்தது.
 
முடிவெடுப்பதைப் பற்றி ஏற்கனவே ஒரு பேச்சில் பேசியிருக்கிறேன். அதில் முக்கியமான முடிவுகள் எப்போதும் அறிவு சார்ந்தே எடுக்க வேண்டுமன்றி உந்துதலாலோ அல்லது உணர்வுகளின் மிகுதியாலோ ஒரு முடிவெடுப்பது சிக்கலை உருவாக்கும் என்பதையும் பார்த்திருக்கிறோம்.

நண்பரது நிலையும் அப்படியே ஆனது. அவரது முடிவில் உணர்வுகளே முதல் நிலை பெற்றது. அது மட்டுமல்லாமல் முடிவெடுக்கத் தேவையாண காரணிகளை மறுமுறையும் உறுதிப் படுத்திக் கொள்ள அவர் முயலவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக முக்கியமான முடிவுகளுக்குத் தேவையான சிந்தனைக்கு ஒரு incubation time அவர் எடுத்துக் கொள்ளவில்லை. அவர் அந்தச் சூழலை ஒரு பொறுமையுடன் அணுகியிருந்தாரென்றால் அவர் எடுத்த முடிவு வேறாயிருக்கலாம்.

எப்படியோ நடந்து விட்டது. அதற்குப் பின்னர் நண்பர் சந்தித்தவைகளை அவர் மொழியாகவே தருகிறேன்.

“நான் எடுத்த முடிவு தவறானது என்பது எனக்கு சற்று காலம் தாழ்த்தியே புலப்பட்டது. வறுமை தன் பிடியினை இறுக்க ஆரம்பிக்க எனது பெற்றோர் எனக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழக்க ஆரம்பித்தனர்.

நேர் முகத் தேர்வுகள் வரும். ஆனால் அங்கு சென்றால் எனது சாதியைக் கேட்டனர். நான் தாழ்த்தப்பட்டவனென்றால் அரசாங்கம் எனை தத்தெடுத்துக் கொண்டிருக்கும். அல்லது சமுதாயத்தில் ஒரு வலிமையான சாதியைச் சேர்ந்தவனென்றால் அந்த சாதிக் கட்டமைப்பு எனைத் தத்தெடுத்துக் கொண்டிருக்கும். இது இரண்டும் இல்லாததால் நான் அவதிப் பட்டேன்.

ஒருமுறை கடலூர் அருகே உள்ள ஒரு பள்ளிக்கு மேல் நிலைப் பள்ளி ஆசிரியர் வேலைக்கு நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்தது. நேர்முகத் தேர்வில் வெட்கமின்றிச் சொன்னார்கள். “ இது பருவதராஜ குலத்தினர் நடத்தும் பள்ளி. எனவே எங்களுக்கு அந்தச் சமூகத்திலிருந்துதான் ஆட்கள் வேண்டும்..” என்றனர். “அப்படியென்றால் என்னை ஏன் நேர்முகத் தேர்வுக்கு அழைத்தீர்கள்?” என்றேன். “ அதுதான் procedure. அதனால் தான் அழைத்தோம்”, என்ற அவர்களைப் பார்த்து அழுவதா சிரிப்பதா எனத் தெரியவில்லை. அந்த நேர்முகத் தேர்வுக்கான பயணச் செலவுக்கு நான் எத்துனை சிரமப் பட்டிருப்பேன் என்பதை கொஞ்சமும் நினைத்துப் பாராத அநாகரிகம் மற்றும் தங்கள் சமூகத்தினர் படிக்கும் பள்ளிக்கு ஒரு நல்ல ஆசிரியரைப் போட்டால் வளரும் மாணவர்களில் அதிகமான பேர் பலனடைவார்கள் மாறாக தமது சமூகத்தைச் சார்ந்தவர் என்பதனாலேயே தேர்வு செய்தால் பணி கிட்டிய நபர் மட்டுமே பயனடைவார் என்ற அடிப்படை சித்தாந்தத்தில் ஒரு தெளிவின்மை ஆகிய எல்லாமே எனக்கு பொட்டிலடித்தாற்போல இருந்தது.

இந்தக் கேள்விகளுக்கு முன்னால் நான் வேண்டாமென்று சொன்ன பள்ளியின் முதல்வர் என்னிடம் கேட்டுக் கொண்டவை மிகுந்த நாகரிகமானவைகளாகத் தெரிந்தது. அது ஒரு கிருத்துவப் பள்ளியாக இருந்தும் நான் கிருத்துவனல்ல என்பது தெரிந்தும் வந்திருந்தவர்களில் திறமையானவன் என்பதை மட்டுமே வைத்து என்னைத் தேர்வு செய்த அந்த வெளிநாட்டுப் பாதிரிமார்கள் எத்துனை போற்றத் தகுந்தவர்கள்..!


அதற்கப்புறமென்ன, நான் படித்தவன் என்கின்ற சிந்தனையையே நாட்கள் செல்லச் செல்ல இழக்க ஆரம்பித்தேன். எனது இளநிலைக் கல்லூரி ஆசிரியர், பழனியப்பன் என்பவர், எனக்கு மிகுந்த ஆதரவாக இருந்தார். எனது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் என்னை வழிநடத்தவும் அவரது அன்பு எனக்கு மிகுந்த உதவியாக இருந்தது. அந்தக் காலத்தில் அவரது அன்பும் ஆதரவும் இல்லாமலிருந்திருந்தால் நான் எப்போதோ depression க்கு பலியாகியிருப்பேன்.

காலையில் எழுந்து குளித்துவிட்டு அங்கிருக்கும் மாவட்ட நூலகத்திற்குச் சென்று கிடைக்கும் புத்தகங்கள் மற்றும் மாத, வார இதழ்களையும் நாளிதழ்களையும் படித்து முடித்துவிட்டு மாலை ஏழு மணிக்கு பேராசிரியரின் வீட்டிற்குச் செல்வேன். என்னை வரவேற்று பேசிக் கொண்டிருப்பார். இரவு ஒன்பது மணி வாக்கில்தான் வீடு திரும்புவேன். இரவுச் சாப்பாட்டுடன் என் வீட்டினர் மனமொடிந்து இருப்பர். அந்த ஒரு நேரச் சாப்பாடு கூட பெரும்பாலான நாட்களில் பேராசிரியரின் வீட்டில்தான். மறுநாளும் இதே சுற்று.

எத்தனையோ பள்ளிகள், கல்லூரிகளில் நேர்காணல் நடந்தது. ஆனால் அந்த நாடார்களுக்கும் வன்னியர் பெருமக்களுக்கும் தங்களது பள்ளி, கல்லூரிகளுக்கு பணியாற்ற தங்கள் சமூகத்தினர் தான் தேவைப்பட்டனரே ஒழிய அவர்களுக்கு திறமை தேவைப்படவில்லை. எனக்கு சமுதாயத்தின் மீதே வெறுப்பு வந்தது.

இப்படி இருக்கையில்தான் இந்தச் சமுதாயத்துடன் காலமும் சேர்ந்து கொண்டு என்னைச் சூதில் வீழ்த்துகிறது என நான் கண்டுகொள்ளும்படிக்கு அந்தச் சம்பவம் நடந்தது.

எனது பரிதாப நிலை கண்ட பேராசிரியர் எனது கல்வித் தகுதிக்கேற்ப ஒரு வேலை ஊட்டியில் பெற்றுத் தரும்படிக்கு தனக்குத் தெரிந்தவரிடம் சிபாரிசு செய்து அதன் படியே அங்கிருந்து எனக்கு நேர்முகத் தேர்வு வந்தது.

நேர்முகத் தேர்வும் நன்றாகவே நடந்தது. அது ஒரு semi government organization என்று நினைக்கிறேன். UPASI (United Planters Association of Southern India) என்பது அது. அதில் மிக முக்கியமான பொறுப்பைக் கொண்ட entomologist வேலை. பூச்சியியல் படித்திருந்ததனால் அந்த வேலை எனது படிப்பிற்குத் தொடர்புள்ளதாய் இருந்தது. அந்த நிறுவனத்தின் இயக்குனருக்கு என்னைப் பிடித்துப் போயிற்று. வெகுவாகப் பாராட்டினார். உடனே அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் அனுப்புவதாகச் சொன்னார்.

மிகுந்த மகிழ்வுடன் வீடு திரும்பியவன் பேராசிரியருக்கு நன்றியைச் சொன்னேன். வேலை கிடைத்துவிடும் என வீட்டிலுள்ளோரிடமும் சொன்னேன். பேராசிரியர் அந்த மலைப் பிரதேசத்தில் போய் வரச் சௌகரியமாக இருக்க புல்லட் ஓட்டக் கற்றுக் கொள் என்றார். கை நிறையச் சம்பளம், தங்குவதற்கும் சாப்பாட்டிற்கும் கம்பெனி கெஸ்ட் ஹவுஸ்..

கனவில் மிதந்தேன்.

நாட்கள் கடந்தன. வாரங்கள் கடந்தன. மாதமும் இரண்டாயிற்று. வேலைக்கான உத்தரவு வரவில்லை.

பேராசிரியர் அவரது நண்பரை விசாரித்த போதுதான் தெரிய வந்தது. UPASI யின் இயக்குனர் என்னைத் தேர்வு செய்து வேலைக்கான உத்தரவை தயார் செய்து அது கையொப்பத்திற்கு காத்திருந்த நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவ மனையில் சேர்ந்தவர் அங்கேயே சிகிச்சை பலனளிக்காது இறந்து விட்டார்.

 
இதைக் கேட்டதும் இடி இறங்கினார்ப்போல் ஆகிவிட்டது."


அது வரை பேசிய நண்பர் அமைதியானார். அவரது முகம், நெஞ்சில் தேங்கியிருந்த சோகத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.  நான் அமைதியாக அவரது உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர் மீண்டும் வாய் திறக்கக் காத்திருந்தேன்.


இன்னமும் பேசுவோம்.

 
அன்பன்,
வேதாந்தி.

 
 

 
 
 

Wednesday, November 12, 2014

ஏழரைச் சனியும், எடுக்கும் முடிவுகளும்…
12.11.14


ஏழரைச் சனியும், எடுக்கும் முடிவுகளும்…

 
இது வரை உளவியல் பேசியவன் இப்போது உளருகிறானே எனப் பார்க்கிறீர்களா?

இது ஒரு வகையில் உண்மைதான். இறைவன் தனக்குள் இருக்கிறான் என ஒருவன் நம்பினால் அதற்கு எதிரான சக்தியும் தனக்குள் இருப்பதையும் ஒருவன் நம்பித்தான் ஆகவேண்டும். இதுதான் கடவுள் பாதி மிருகம் பாதி என்பது.


அதாவது ஒருவன் மனத்தெளிவுடன் இருப்பானேயானால் அவனது சிந்தனைகளும் செயல்களும் நிதானத்துடனும் தெளிவுடனும் இருக்கும். இந்த மனத் தெளிவு என்பது cause and effect பற்றி அறிந்திருப்பது மட்டுமல்ல. நம்மையும் நம்மை மீறிய சில காரியங்களையும் பற்றி அறிந்திருப்பதும்தான் நான் குறிப்பிடும் மனத் தெளிவு. இது குறித்து இன்னுமொரு சமயத்தில் விளக்கமாக பேசுகிறேன். இப்போது நான் சொல்ல வந்தது வேறு. எனது நண்பரது வாழ்வில் நடந்த ஒரு உண்மை நிகழ்வு.

அவர் அறிவியலில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்துவிட்டு வந்த புதிது. 1978 ம் வருடம் என்று நினைக்கிறேன். 1979,80 களில் Pre University Certificate (PUC) system மாறி Higher Secondary System வந்திருந்த காலம். பள்ளிகளுக்கு முதுகலை ஆசிரியர்கள் நிறையத் தேவைப்பட்டனர்.அந்த நேரத்தில் வேலையில்லாக் கொடுமையும் அதிகம். கமலஹாசனின் வறுமையின் நிறம் சிவப்பு வெளிவந்து அது அன்றைய கால கட்டத்தை பிரதிபலித்ததால் சக்கை போடு போட்ட காலம். நண்பரது வீட்டிலும் வறுமை தன் கோர முகத்தை சன்னல் வழியே எட்டிக் காட்டிக் கொண்டிருந்தது. எப்போது வேண்டுமானாலும் அது எட்டி உள்ளே வந்து ஒவ்வொருவரிடமும் உரையாடலில் ஈடுபட்டுவிடும் என்கின்ற நிலைமை.


(Hard times by Lois Bryan)

ஒரு குடும்பத்தில், வறுமை வாசல் வழியாக வந்தால் அன்பும் சந்தோசமும் சன்னல் வழியாக பறந்துவிடும் என்று ஒரு பழமொழி உண்டு. நண்பரது வீட்டிலும் அது எப்போது வேண்டுமானாலும் நடைபெறலாம் என்ற நிலை. ஆனால் விதி வேலை செய்த விதத்தைப் பாருங்கள். வீட்டிலுள்ள அனைவருக்கும் தெரிந்த இந்த நிலைமை நண்பருக்கு தெரியவில்லை. அவரது தாயார், செல்லமாக வளர்ந்த பிள்ளை திடீரென வறுமையைக் கண்டு மனமொடிந்து விடுவான் என்று குடும்பத்தின் கடன் சுமையிலிருந்து எல்லாவற்றையும் மறைத்து வைத்திருந்தார். நண்பரும் தான் முது நிலை அறிவியல் படிப்பு படித்து முடித்து விட்டதனால் நல்லதொரு வேலை கிடைத்துவிடும் என்று நம்பிக்கையுடன் இருந்தார்.

இந்த நிலையில்தான் அவருக்கு ஒரு ஆங்கிலோ இந்தியன் பள்ளியிலிருந்து நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்தது. நண்பரும் சென்றார். வந்திருந்த 30 பேர்களில் அங்கிருந்த வெளிநாட்டு பாதிரிமார்கள் இவரைத் தேர்வு செய்தனர். உடனே அந்தப் பள்ளியின் முதல்வர் நண்பரை காத்திருக்கச் சொல்லி பணிக்கான ஆணையைக் கொடுத்தார். ஆனால் அவர் ஆணையை அறையில் அழைத்துக் கொடுக்கும் போது ஒரு நாகரிகமற்ற செயலைச் செய்தார். ஒரு மனிதனாகவும், ஒரு கல்வியாளராகவும், ஒரு கிருத்துவப் பள்ளியின் முதல்வராகவும் அவர் செய்த செயல் இன்றைக்கும் மனதை வருடுகிறது.


என் நண்பர் இரண்டு சோடி உடைகள் மட்டும் தான் வைத்திருந்தார். அவைகளையே மாற்றி மாற்றி அணிந்ததால் அவர் அணிந்திருந்த Pant முன்னம் பகுதியில் வெளுத்திருந்தது. சட்டையும் அப்படியே. மேலும் காலில் ஹவாய் செப்பலை அணிந்திருந்தார். 1970 களில் அது சாதாரணம். ஒருவன் ஹவாய் செப்பல் இல்லாமல் செருப்பு அணிகிறான் என்றால் கொஞ்சம் செல்வாக்கு உள்ளவன் என அடையாளம் கண்டு கொள்ளலாம்.

அந்தப் பள்ளியின் முதல்வர் என் நண்பரிடம்,” நாளையிலிருந்து நீங்கள்  பணிக்கு வந்து விடுங்கள். ஆனால் இப்படி பாத் ரூம் செப்பல் அணிந்து வரவேண்டாம். இது மிகவும் பணக்காரக் குழந்தைகள் படிக்கும் பள்ளி..” என்று சொல்ல நண்பர் மிகவும் சங்கடமான சூழ்நிலைக்குச் சென்று குழப்பத்தில் ஆழ்ந்துவிட்டார்.

பள்ளி முதல்வரின் அறையை விட்டு வந்ததும் இவரது துறை சார்ந்த ஒரு ஆசிரியர் இவரை அழைத்துக் கொண்டுபோய் அடுத்த நாள் பாடமெடுக்கத் தேவையான புத்தகங்களை இவருக்கு எடுத்துக் கொடுத்தார். மேலும் கால அட்டவணைப் பிரதியையும் கொடுத்தார். அதற்குப் பின் அந்த ஆசிரியர், “சார், இன்றைக்கு ஆடிட்டோரியத்தில் மூவி புரோக்கிராம் இருக்கிறது. பார்த்துவிட்டுச் செல்லலாமே..”என்றவுடன் நண்பரும் அந்த ஆசிரியருடன் ஆடிட்டோரியம் சென்று ஆசிரியர்களின் வரிசையில் அமர்ந்தார்.

மனம் திரையில் லயிக்கவில்லை. பள்ளி முதல்வர் சொன்ன வார்த்தைகள் நண்பரின் மனதில் சுற்றிச் சுழன்று புழுதியைக் கிளப்பிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் ஒரு மாணவன் நண்பரது அருகில் அமர்ந்திருந்த ஆசிரியரிடம் ஒற்றை விரலை நீட்டி, “சார், பாத்ரூம் போகனும்” என்றான்.

“பாத்ரூம்” என்ற வார்த்தையைக் கேட்டதுமே நண்பருக்கு யாரோ தன் மண்டையை பிளக்கிறார்ப்போல் இருந்தது.

“பாத்ரூம்” என்கின்ற வார்த்தைக்கு ‘குளியல் அறை’ எனும் பொருளோடு ‘கழிப்பிடம்’ என்கின்ற பொருளும் உண்டு என்று உறைத்தவுடன் நண்பருக்கு அங்கிருக்கப் பிடிக்கவில்லை.

சட சடவெனக் கிளம்பி ஆடிட்டோரியத்தை விட்டு வெளியேறினார்.

வீடு வந்து சேர்ந்த போதும் மனம் அடங்கவில்லை. ‘கழிப்பிடம் செல்ல போட்டுக் கொள்ளும் செப்பலை போட்டிருக்கிறான்’ என்று கீழ்த்தரமாக சொல்லிவிட்டார்களே என வெம்பினார், வெதும்பினார். தன் மீதே அவருக்கு ஒரு வெறுப்பு வந்தது.

உடனே தான் பள்ளியிலிருந்து கொண்டுவந்திருந்த புத்தகங்களை கையில் எடுத்துக் கொண்டு அருகில்  இருக்கும் தன் நண்பரையும் அழைத்துக் கொண்டு தலைமை அஞ்சலகம் நோக்கி நடை போட ஆரம்பித்தார்.

வழியெல்லாம் நண்பரிடம் ஒரே புலம்பல். நண்பர் சமாதானம் சொல்லியபடியே வர எதையும் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் அவர் இல்லை. “இரப்பா.. நாளை உன்னை அந்தப் பள்ளியைப் பற்றி நன்கு அறிந்த எனக்குத் தெரிந்த ஒருவரிடம் அழைத்துச் செல்கிறேன். அப்புறமாக ஒரு முடிவுக்கு வரலாம். அவசரப்படாதே…”என்றார். ஆனால் நண்பரது காதில் அது விழுந்ததாகத் தெரியவில்லை.

“அது ஒரு கிருத்தவ மெட்ரிகுலேசன் பள்ளியாதலால் டிரஸ் கோட் பற்றி மிகவும் அக்கறை கொண்டிருக்கலாம். எனவே அந்தப் பள்ளி முதல்வர் உன்னிடம் அக்கரை எடுத்துக் கொண்டு உன் ஆடையைப் பற்றி சொல்லியிருக்கலாம். கொஞ்சம் நிதானமாக இரு….”

“நீ சொல்கிறபடி என் மீது அக்கறை கொண்டிருந்தால், அல்லது உண்மையாலுமே கிருத்தவ கொள்கைகளில் அக்கறை கொண்டிருந்தால் என் ஏழ்மையை விமரிசித்திருக்கக் கூடாதல்லவா? டிரஸ் கோட் பற்றி நினைத்திருந்தால் பள்ளி முதல்வர் எனக்கு முன்பணமாக ஒரு தொகையைக் கொடுத்து நாளைக்கு காலணிகளை மாற்றி அணிந்து வரச் சொல்லியிருக்கலாம். புத்தாடை வாங்க உதவியிருக்கலாம். ஆனால் இதெல்லாம் செய்யாமல் என்னை கீழ்த்தரப்படுத்திவிட்டாரே.. அப்படியே அது பெரும் பணக்காரர்களது பிள்ளைகள் படிக்கும் பள்ளியென்றாலும் அவர்கள் காரில் வரும்போது, ஆசிரியன் என்பதால் நான் அதை விட விலை உயர்ந்த காரில்தான் வரவேண்டும் என்றால் அது நடக்குமா..? என்னை வகுப்பெடுக்கச் சொல்லி என் திறமையை மெச்சித்தானே அத்தனை பேரில் எனக்கு இந்த வேலையைக் கொடுத்தனர். அப்புறம் ஏன் இப்படி?”, எனப் பலவாராக தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியபடி வந்தவர், தலைமை அஞ்சலகத்தை அடைந்தவுடன் தன் கையிலிருந்த புத்தகங்களை ஒரு பார்சலாக கட்டினார்.

மட மட வென ஒரு வெள்ளைத் தாளை எடுத்து எழுத ஆரம்பித்தார்.

“அய்யா, நான் உங்கள் பள்ளியில் பணிபுரிய தகுதியற்றவன். என்னிடம் நல்ல செருப்போ அல்லது ஆடையோ கிடையாது. எனவே அந்த வேலையை ஒரு செருப்புக் கடைக்காரனுக்கோ அல்லது துணிக்கடைக்காரனுக்கோ கொடுங்கள். அதுவே உங்களால் மெச்சப்படும்.” என எழுதி அதை அந்தப் புத்தகப் பார்சலில் வைத்து பள்ளித் தலைமை ஆசிரியருக்கு பதிவுத் தபாலில் அனுப்பிவைத்தார்.

அவருடன் சென்ற நண்பர் மனம் ஒப்பாது அவரை அடுத்த நாள் அந்தப் பள்ளியைப் பற்றி நன்கு அறிந்த தனது இன்னொரு நண்பரிடம் அழைத்துச் சென்று நடந்ததைச் சொன்னபோது அந்த நண்பர் மிக்க வருத்தப் பட்டுச் சொன்னார், “அடாடா… அவசரப் பட்டு விட்டீர்களே. நீங்கள் பார்த்த நபர் பள்ளி முதல்வரல்ல. பள்ளி முதல்வர் வெளிநாடு சென்றிருக்கிறார். வர இரண்டு மாதங்களாகும். அவர் மிக்க நல்லவர். இனிமையானவர். திறமைக்கு மதிப்பளிக்கக் கூடியவர். நிச்சயமாய் அவர் உங்களுக்கு முன்பணம் அளித்தோ அல்லது வேறெந்த வகையிலோ உதவியிருப்பார். நீங்கள் சந்தித்த நபர் பள்ளி முதல்வர் பொறுப்பிலிருப்பவர். அவர் எப்போதுமே அப்படித்தான். மனிதரை மதிக்கத் தெரியாதவர். அவரது பேச்சை பெரிதாக எண்ணி நல்ல வேலையை இழந்து விட்டீர்களே… இது கிடைத்திருந்தால் நல்ல சம்பளம். உள்ளூரிலேயே தாய் தந்தையருடன் இருக்கலாம். அதுமட்டுமல்ல வருடம் ஒருமுறை வெளிநாடு செல்லும் சந்தர்ப்பமும் கிடைக்கும்….”

அடுக்கடுக்காய் அவர் சொல்லிக் கொண்டே செல்ல நண்பருக்கு அழுவதா இல்லை சிரிப்பதா எனத் தெரியவில்லை.

தன் எதிரில் இருந்த சூழலையும் தனது நிலையையும் சரியாக எடை போட்டு முடிவெடுக்காதபடிக்கு தன் மன நிலையை மாற்றியது எது? ‘பசி வந்திடப் பத்தும் பறந்து போம்’ எனும் பழமொழியைத் தான் அறிந்தும்  தன்மானம் பெரிது என தன்னைத் தூண்டிச் சீண்டி மிகைப்படுத்தி முடிவெடுக்கச் சொன்னது எது?

தான் எடுத்த தவறான முடிவினால் எட்டு வருடங்கள் வேலையின்றி வறுமையின் பிடியில் குடும்பம் பரிதவிக்க கையறு நிலையில் தவித்தார்.

தெளிவான சிந்தனையும் பொறுமையும் இழந்து முடிவெடுத்த நண்பருக்கு உண்மையிலேயே ஏழரைதான்.ஆனால் இதே நண்பருக்கு ஒரு வியப்பான அனுபவமும் அந்த எட்டு வருடங்கள் கழிந்தவுடன் நடந்தது. அந்த நேரத்தில் அனுபவம் அவரை பழுக்க வைத்திருந்தது. அதை அவரது வாய் மொழியாகவே அடுத்த பேச்சில் காண்போம்.

இதைத் தொடர: அஞ்ஞாதவாசமும் அதற்குப்பின் நடந்ததும்...!
 அன்பன்,

வேதாந்தி.

 

 

 

Wednesday, November 5, 2014

முடிவும் ஒரு ஆரம்பமே!


5.11.14

முடிவும் ஒரு ஆரம்பமே!முடிவெது ஆரம்பமெது என்பதை தெளிவாகத் தெரிந்ததுபோல் நடந்துகொள்ளும் நம் செயலை நாமே வெட்கப் படும் படிக்கு காலம் சில நேரங்களில் புரட்டிப் போட்டுவிடும்.

இதுவும் எனது நண்பர் என்னிடம் பகிர்ந்து கொண்டதுதான். வழக்கம் போலவே இதையும் அவரது வாய் மொழியாகவே கீழே கொடுத்துள்ளேன்.

“ 1975 என்று நினைக்கிறேன். நாங்கள் ஒரு பத்துபேர் ஒரு நண்பர் வட்டம் போல ஒரு அமைப்பை உருவாக்கினோம். அதற்கு முத்தமிழ்க் கூடல் எனவும் பெயரிட்டோம். அதற்கு முழுக் காரணமாக இருந்தவர் திரு. அண்ணாமலை என்பவர். அவர் பொறியியல் கல்வி முடித்துவிட்டு பணிக்காக காத்திருந்தார். அவர் பொறியியல் படித்திருந்தார் என்றாலும் தமிழில் அலாதியான விருப்பம். தமிழும் மிகச் சிறப்பாகவே அவரிடம் தாண்டவமாடியது. வெண்பாக்கள் முதற்கொண்டு எல்லா மரபுவழிக் கவிதைகளையும் சரளமாக இயற்றும் ஆற்றல் படைத்தவர். அவரது படைப்புக்கள் ஆச்சரியமூட்டும் விதத்தில் அழகுணர்வோடு இருக்கும். அவர் சார்ந்த நண்பர்களும் தமிழில் விருப்பம் கொண்டிருக்கவே ஒரு அமைப்பு போல் இல்லாவிட்டாலும் எப்போதும் கூடிப் பிரியும் கூட்டம் போல் நாங்கள் இருந்தோம். எல்லாப் பொருளும் விவாதத்திற்கு வைக்கப் பட்டது. விவாதங்கள் சுவையுடன் இருக்கும்.

சேலத்துத் தெருக்களில் நடை பயின்றோம். பூங்காக்களில் பொழுதைக் கழித்தோம். இரவுக் கூட்டங்களில் எங்களது தவறாத வருகை இருக்கும். தற்போது மிகப் பிரபலமாக இருக்கும் வழக்கறிஞர் மதிப்பிற்குரிய வை. அருள்மொழி அவர்கள் முதன் முதலில் மேடையேறிப் பேசிய இரவுப் பொதுக்கூட்டங்களை ரசித்திருக்கிறோம். பள்ளி முடித்த சிறுமியாய் கருப்புத் தாவணி மற்றும் கருப்பு மேல் சட்டை அணிந்து மிகத் தீவிரமாக பெரியாரின் கொள்கைகளையும் முக்கியமாக தாலி பற்றியும் அவர் பேசிய பேச்சுக்களும் அதன் வேகமும் அந்தக் கால கட்டத்தில் ஆச்சரியத்தைத் தூண்டின. அந்தக் காட்சிகள் இன்னமும் மனதில் நிற்கிறது.

வெற்றி கொண்டானது கூட்டமென்றால் வெல்லம் சாப்பிடுவது போல. இப்படியாக நாங்கள் எங்களை பொழுதுகளை பேசியும் விவாதித்தும் போக்கிக் கொண்டிருந்தோம். இது எங்களது வாலிபப் பருவம் தடுமாறிப்போகாமலும் எங்களைக் காத்தது. இப்படி இருந்த எங்களிடையே பள்ளிப் படிப்பை முடித்த பிராமண இளைஞர் ஒருவரும் இருந்தார். அவருக்கு ஒரு 17 அல்லது 18 வயதுதான் இருக்கும். வைணவ குடும்பத்தைச் சேர்ந்தவர். அந்த வயதிலேயே விவாதங்களை வெகு தெளிவாக முன்னெடுத்துச் சொல்வார். கொள்கை ரீதியில் எங்களுக்குள் மிகுந்த வேறு பாடுகள் இருந்த போதும் திரு. அண்ணாமலை எங்கள் அனைவரையும் ஒன்றாக வைத்திருப்பதில் பிறழமாட்டார்.

“பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால் பாம்பை விட்டு பார்ப்பானை அடி” என்று பொதுக்கூட்டத்தில் கேட்டுவிட்டு வரும் எங்களிடையே வாதத்தில் ஈடுபடும் அந்த பிராமண அன்பர் மிகுந்த வேகத்தைக் காட்டுவார். நாகரீகம் கடக்காத அந்த வாதங்கள் எங்களை மிக்க வளர்த்தது. எங்களை விட அந்தச் சிறு வயதில் எங்களது வாதங்கள் அந்தப் பிராமணருக்கு மிக்கவே உதவியது. இப்படியாக எங்களது நட்பு வளர்ந்தது. வாதங்களில் வேகம் இருக்குமே தவிர எங்களுக்குள் வேறுபாடோ அல்லது வேறேதேனும் பகையோ கிடையாது.

இப்படி இருக்கையில் ஒரு நாள் அந்த பிராமண அன்பரைக் காண வேண்டி பின் மதியத்தில் அண்ணாமலையுடன் நாங்கள் எல்லோரும் அவர் வீடு சென்றோம். வீட்டில் அவரது அம்மையாரைக் கேட்டபோது அவர் அறையில் உறங்குவதாகச் சொன்னார். அறைக் கதவைத் தட்டினோம். பதிலில்லை. எத்துனை வேகமாகத் தட்டியும் பதிலில்லை.

 
சந்தேகப்பட்டு அண்ணாமலை சன்னல் கதவைத் திறந்து பார்த்தார். கண்ட காட்சியில் உறைந்து போனோம். தரையில் நுரை தள்ளியபடி மயங்கிக் கிடந்தார். உடனே கதவை உடைத்து அள்ளிப் போட்டுக் கொண்டு ESI மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்.

மருத்துவமனையில் அவரது வாயில் உப்புக் கரைசலை ஊற்றி அவரை வாந்தியெடுக்க வைத்தார்கள். பெரும் ஓலத்துடன் அவர் வாந்திஎடுத்தது இன்னமும் வயிற்றைக் கலக்குகிறது. நாங்கள் எல்லோரும் விதிர் விதிர்த்துப் போனோம். இளம் வயதானதால் எங்களுக்கு அத்துனை அனுபவமில்லை. தயங்காமல் அண்ணாமலை எடுத்த முடிவுகளால் அன்றைக்கு அந்த இளைஞர் காப்பாற்றப் பட்டார்.

அவர் எதற்காக அப்படி ஒரு முடிவெடுத்தார் என்பதல்ல இன்றைய பேச்சு. வாழ்க்கையை வாழப் பிடிக்காமல் முடித்துக் கொள்ள முடிவெடுத்தார். ஆனால் அதற்குப் பின்னர் நடந்ததென்ன?

அதில்தான் சுவராசியம்.

அண்ணாமலை அந்த இளைஞரது பெற்றோருக்கு சில காலம் அவரை வேற்றூரில் உறவுக் காரருடன் வைத்திருக்கும் படி அறிவுரை கூறினார். அதன் படியே அவரை அவரது உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அவரது உறவினர், ஏ. எல் . ராகவன் என நினைக்கிறேன், கலைமகள் பத்திரிக்கையுடன் தொடர்பிலிருந்தவர். கி.வ. ஜகன்னாதனை மிக நெருக்கமாக தெரிந்தவர். அவரது பயிற்சியில் அந்த இளைஞர் எழுதிய ஒரு குறுநாவல் போட்டியில் பரிசு பெற்று கலைமகளில் வெளியானது. அவ்வளவுதான். அந்த இளைஞரின் தலையெழுத்தே மாறிப் போனது.அவரது உறவினர் ஒருவர் தன் சிபாரிசில் அவருக்கு மதுரை TVS ல் ஒரு பணியைப் பெற்றுத் தந்தார். பணி நிமித்தமாய் மதுரை பெயர்ந்தவர் அங்கிருந்த சரஸ்வதி மகால் நூலகத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு தன் எழுத்துக்களை மிக நுணுக்கமாக பட்டை தீட்டிக் கொண்டார். அவ்வப்போது பத்திரிக்கைகளில் எழுதி வந்தவருக்கு ஆனந்த விகடனில் வெளியான அவரது பரிசு பெற்ற வீடு வாசல் என்ற நாவல் அவரது எழுத்தின் தளத்தையும் தரத்தையும் மிக உயரத்திற்கு கொண்டு போனது. இன்று அவர் ஒரு பிரபலமானவர். தொலைக்காட்சியில் தொடர்ந்து ஆண்மீகம் பற்றியும் பெரியவரைப் பற்றியும் பேசி வருபவர்.

விடாது கருப்பாய் எழுதிவரும் அவருக்கு விளம்பரம் தேவையில்லை.

தன் வாழ்வை முடித்துக் கொள்ள நினைத்து அவர் எடுத்த முடிவு அவரது வாழ்வை புரட்டிப் போட்டு அவரை சாதனைகளின் ஆரம்பத்தில் காலம் கொண்டு நிறுத்தியதை நினைத்தால் வியப்பாய் இருக்கிறது.

எதைப் பெரிதாய் நினைத்து வாழ்வை முடித்துக் கொள்ளத் துணிந்தாரொ அது இப்போது அவராலேயே அல்லது அவரது சாதனைகளாலேயே மிகத் துச்சமானதொன்றாக தள்ளப் பட்டு விட்டதை நினைக்கும் போது நமது மன நிலைகளும் அதன் விளைவால் நாம் எடுக்கும் முயற்சிகளும் மட்டும்தான் நம்மை முன்னெடுத்துச் செல்கின்றன என்பது நிதரிசனம் அல்லவா?

அவருடன் இருந்த அனைவரும் இப்போது அவரவரது கல்வித் தகுதிக்கேற்ப பணியில் அமர்ந்து பணி ஓய்வும் பெற்றுவிட்டோம். எங்களால் எழுத்தை பணிச்சுமையுடன் தொடர முடியவில்லை. அண்ணாமலை TNEB யில் EE ஆக பணி முடித்து ஓய்வு பெற்றார்.

இப்போது நினைத்தாலும் அவரை எந்த உணர்வு அன்றைக்கு அந்த இளைஞரின் வீடு நோக்கி சரியான நேரத்தில் அனுப்பியது எனும் கேள்விக்கு வியப்பு மட்டும்தான் பதிலாய் வருகிறது.

 

இன்னமும் பேசுவோம்.

 

அன்பன்,

வேதாந்தி.

 

 

 
Related Posts Plugin for WordPress, Blogger...