Followers

Thursday, July 23, 2015

தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி II


23.7.15

தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி II
 

இது வரை எனது நண்பர் சொன்னதைக் கேட்டு எனக்கு ‘திக்’ கென்றது. சென்னையில் ஒரு சொத்து வாங்குவதென்பது என்ன அத்துனை சாதாரண காரியமா? அதுவும் நேர்மையான தனது வாழ்நாள் உழைப்பின் சேமிப்பைக் கொட்டி வீடு வாங்கி அதில் இத்தனை கொடிய சிக்கலா?

எனது நண்பர் தொடர்ந்தார்.

“நான் இந்த வேலையில் இறங்குவதற்கு முன்னரே இப்படி ஏதேனும் நடக்கலாம் என்று தெரிந்தே நம்பிக்கைக்குரிய இருவரிடம், ‘இதோ பாருங்க நான் வயதானவன். என்னால் அலைய முடியாது. நீங்கள் கடைசிவரை ஒத்துழைப்பீர்களென்றால் இதில் இறங்குகிறேன் இல்லையென்றால் நான் தனியே என் பிரச்சினையை சமாளிக்கும் வழி தேடிக்கொள்கிறேன்’ என்றேன். அதற்கு அவர்கள், ‘சார் எங்களை நம்புங்கள். நாங்கள் கடைசிவரை உங்களுடன் இருக்கிறோம். நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் உங்களுக்கு ஒத்துழைக்கிறோம். அலைவதைப்பற்றி கவலை வேண்டாம். என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டும் சொல்லுங்கள் செய்கிறோம்’, எனச் சொல்லியிருந்தனர்.

இப்படி நாங்கள் ஒன்று சேர்ந்துவிட்டோம் எனத் தெரிந்ததும் விற்பனையாளர், நாங்கள் குழுவாய்ச் சேர்ந்து கொண்டு அவரை தொல்லைப்படுத்துவதாகவும் காரை வீட்டின் முன் நிறுத்தி அடாவடி செய்வதாகவும் ஏற்கனவே எங்கள் மீது தனித்தனியாக வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கின் அறிவிக்கை நீதிமன்றத்திலிருந்து வந்ததுமே எங்கள் ஒற்றுமை புகைய ஆரம்பித்தது. சொல்லிவிட்டோமே என்று பல்லைக் கடித்துக் கொண்டிருந்தனர். இப்போது இந்த குண்டர்களை பார்த்ததும் எல்லோரும் தாங்கள் எடுத்த முடிவு சரியானதுதானா என மனச் சஞ்சலம் கொண்டனர்.

இந்த நிலைக்கு மற்றொரு காரணமும் இருந்தது. அனுபவமின்மையால் நேருக்கு நேர் சண்டை போட்டு எதிரியை  பணியவைத்தாலொழிய ஒரு பிரச்சினைக்கு தீர்வு காண இயலாது என்று அவர்கள் நம்பியதும் ஒரு காரணம்.

ஆனால் பிரச்சினை இத்தனை தீவிரமடையும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

அடியாட்களைப் பார்த்ததும் உள்ளுக்குள் எல்லோரும் கலங்கிப்போனோம். அதுவரை இந்தப் பிரச்சினையை முடித்துவிடலாம் என நினைத்து ஒன்று சேர்ந்தவர்கள் இப்போது இதை விட்டு எப்படி விலகலாம் என்று தனித்தனியே யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

 
கட்சிக்காரன் அன்றே தான் புதிதாய் வாங்கிய கீழ்வீட்டில் ஒரு பதினைந்து பேருக்கு குடியோடு பார்ட்டி வைத்தான். இரவு முழுக்க ஒரே சத்தம் சிரிப்பு. ‘எவனாயிருந்தாலும் போட்டுத் தள்ளிட வேண்டியதுதான்’ என்று பெருங்கூச்சலிட்டு கொக்கரித்துக் கொண்டிருந்தனர். இதனையெல்லாம் விற்பனையாளர் மிகுந்த மகிழ்வோடு பார்த்துக் கொண்டிருந்தார்.

அடுத்த நாளே இது குறித்து காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தோம். அந்தப் புகாரில் விற்பனையாளரையும் சேர்த்திருந்தோம். அன்றுதான் என் வாழ்நாளில் முதன் முறையாக காவல் நிலையத்தின் படியை மிதித்தேன். அன்று இரவு முழுதும் தூக்கம் வரவில்லை. இது மிகவும் சிக்கலானதைப்போல் தோன்றியது. வீட்டை விற்றுவிடத் துணிந்தாலும் மற்ற யாரையும் வாங்குவதற்கு அந்த ரவுடி விடமாட்டன் என்பது தெளிவாகத் தெரிந்தது. எங்கள் தெருவிலேயே பத்து குடியிருப்புகள் தள்ளி ரிலையன்ஸ் பிரஷ் வந்திருந்ததனாலும் எங்கள் குடியிருப்பை ஒட்டிய சாலை 70 அடி சாலை என்பதாலும் எங்கள் குடியிருப்பின் 10 வீடுகளையும் வாங்கிவிட்டால் நல்ல லாபத்திற்கு விற்று விடலாம் என கணக்குப் போட்டு கட்சிக்காரன் உள் நுழைந்து விட்டான் போலிருக்கிறது. உருட்டி மிரட்டியே எங்களை வெளியேற்றிவிடலாம் என சரியாக திட்டம் போட்டிருக்கிறான்.

அதுவும் ஒரு வகையில் நிறைவேறியது. எங்கள் கீழ்த்தள குடியிருப்பில் இருக்கும் ஒருவர், சுந்தரம் குழுமத்திலிருந்து (TVS Group) M.D ஆக ஓய்வு பெற்றவர், தனது வீட்டை விற்கும் முயற்சியில் இறங்கினார். இதைக் கேள்விப்பட்டதும் அதிர்ச்சியடைந்தோம். அவரைச் சந்தித்து பேசுகையில், “நான் பெங்களூரிலிருக்கும் என் பிள்ளையுடன் போய் செட்டிலாகப் போகிறேன். அதனால் தான் இந்த வீட்டை விற்கிறேன்..” என்று மழுப்பினார். சென்னையில் இருப்பவர்க்கு வீட்டை விற்றால் வில்லங்கம் இருப்பது தெரிந்துவிடும் என்று மதுரை TVS ல் சொல்லி வைத்து அன்றைய விலைக்கு அந்த மதுரைக்காரரிடம் விற்றுவிட்டார். கடைசியில் அவர் பெங்களூருக்கெல்லாம் போகவில்லை. எங்களுக்கு நாலாவது தெருவில் இருந்த ஒரு வீட்டை வாங்கி அண்ணாநகரிலேயே இருக்கிறார்.

என்ன செய்வதெனப் புரியாது நாட்கள் சங்கடத்துடன் கழிந்தன.

கட்சிக்காரன் மொட்டை மாடியையும் பூட்டி தண்ணீர்த் தொட்டியையும் தன் வசம் வைத்துக் கொண்டான். ஒரு தீபாவளியன்று தண்ணீர்க்குழாயை மூடிவிட்டு, மொட்டை மாடியையும் பூட்டிவிட்டு இரண்டுநாட்கள் வெளியே சென்றுவிட்டான். குளிக்கத் தண்ணீரில்லாமல் அவதிப்பட்டோம்.

அந்த அடவடி கட்சிக்காரன் கீழ் வீட்டில் குடியிருந்ததால் போவோர் வருவோரையெல்லாம் வம்புக்கு இழுத்தான். அதிலும் அவன் வெளி வருவதில்லை. அவன் வாசலிலேயே நின்று சிரித்துக் கொண்டு பார்க்க, படத்தில் வரும் காஞ்சனா போல் அவனது மனைவி தனது புடவையை முழங்காலுக்கு மேல் அள்ளித் தூக்கிவைத்துக் கொண்டு ஜங்கு ஜங்கு என குதித்து , ‘வாடா, வாடா..” என்று எல்லோரையும் வம்புக்கு இழுத்தாள். அந்த மாதிரியான சமயங்களில் நான் அனைவரையும் அமைதி காக்கச் சொன்னேன். இதனாலேயே அவர்களுக்கு என் மேல் நம்பிக்கை போய்விட்டது.
 

“பொறுமையாய் இருங்கள். இதில் ஏதோ சூது இருக்கிறது”, என்று சொல்லிவந்தேன். அதே போலவே அந்த கட்சிக்காரனின் மனைவி எங்கள் குடியிருப்பில் இருக்கும் நான்குபேர் (என் உள்பட) தன்னை இரவு 11 மணிக்கு வீடு புகுந்து மான பங்கப் படுத்திவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாள். இதில் என்ன வேதனை என்றால் அவள் குறிப்பிட்டிருந்த அத்தனைபேரும் 65 – 75 வயதிற்குட்பட்டவர்கள்.

 
 
புகாரை பெற்றுக் கொண்ட காவல் நிலையத்தார் எங்களை எங்களது குடியிருப்புக்கு வந்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். எங்களுக்கு அவமானம் பிடுங்கித் தின்றது. எங்களது மனைவியர், ‘வீடு எதற்கு? நிம்மதியாய் வாழத்தானே.. நிம்மதி போனதற்கப்புறம் வீடு இருந்தென்ன போயென்ன’ என பேச ஆரம்பித்து விட்டனர். அவர்கள் வாய்விட்டுச் சொல்லாவிட்டாலும் ‘எந்த நேரத்தில் இந்த ஓநாய்கள் அத்துமீறி நம் வீட்டுக்குள் நுழைந்து விடுவார்களோ’ என்ற பயம் அவர்களது கண்களில் தெரிந்தது. குடும்பத்தின் பாதுகாப்பைப் பற்றிய பயம் அவர்களது குரலில் தெளிவாய்ப் புலப்பட்டது.

நிலைமை கட்டுக்கடங்காமல் போவது நிதரிசனமாய்த் தெரிந்தது.”

இது வரை பேசிய நண்பர் சற்று நிறுத்தி தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டார்.

அவர் மிகப் பெரிய சிக்கலில் வீழ்ந்து மீண்டிருக்கிறார் என்பது அவர் முகத்தைப் பார்க்கும்போதே என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

அமைதியாய் நண்பர் தொடர காத்திருந்தேன்.

நண்பர் தொடர்ந்தது அடுத்த பதிவில்.

தொடர:   தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி III

அன்பன்,

வேதாந்தி.

 

8 comments:

 1. அராஜகத்தின் உச்சம்!
  அடுத்த பகுதியை எதிர்நோக்கி....

  ReplyDelete
 2. அவர் எப்படி மீண்டார் ,அறிய ஆவலோடிருக்கிறேன் :)

  ReplyDelete
 3. என்னங்க இப்படி...?

  ஆவலுடன் உள்ளேன்...

  ReplyDelete
 4. மிகப்பெரிய அராஜகம் அல்லவா நடந்திருக்கிறது! மீண்ட கதை அரிய ஆவலுடன் காத்திருக்கிறேன்! நன்றி!

  ReplyDelete
 5. ஏற்கனவே Padrt. I ஐப் படித்து விட்டேன். Part. II ஐ இப்பொழுதுதான் படித்தேன். இதன் தொடர்ச்சியான அடுத்த பதிவை ஆவலோடு எதிர் பார்க்கிறேன்.

  த.ம.4

  ReplyDelete
 6. இது நாடா இல்லை காடா
  படிக்கப் படிக்க அதிர்ச்சியாக உள்ளது

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...