Followers

Sunday, July 12, 2015

காசியில்தான் கரையுமோ பாபம்…?


12.7.15

காசியில்தான் கரையுமோ பாபம்…?

 
 
காசிக்குப் போவதற்கும் ஒரு காலம் இருக்கிறது எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

பொதுவாகவே காசிக்குச் செல்பவர்கள் அங்கு சென்று ‘எதை’யேனும் விட வேண்டும் என்பதற்காகவே தங்களுக்குப் பிடித்ததை ‘விட்டு விட்டு’ வருவார்கள் என கேள்விப் பட்டிருக்கிறேன்.

“காசிக்குப் போய் வந்ததிலிருந்து நான் சுண்டைக்காய் சாப்பிடுவதை விட்டுவிட்டேன்”, என்பார்கள். அவர் அதற்கு முன்பு வரை சுண்டைக்காயை மிகப் பிரியமுடன் சாப்பிட்டுக் கொண்டு இருந்திருப்பார்.

ஆனால் யாருக்கும் அதுவரை தன் மனதிலிருக்கும் விருப்பு வெறுப்புகளை, ஆசைகளை மொத்தத்தையும் காசியில் விட்டுவிட்டு வருவதுதான் நலம் என்பது தெரியவில்லை. குறைந்த பட்சம் வாழ்வின் இறுதியிலாவது சலனமின்றி வாழ்வைக் கழிப்போம் என்று நினைப்பதில்லை. நமது இந்து மதத்தில் கங்கையில் குளித்தாலே பாபம் போகும் என்பதனால் யாரும் தான் செய்த பாபத்திற்கு தனது இறப்பிற்கு முன்னராவது கடவுளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தோன்றுவதில்லை.

இந்த external clensing - வெளிக் குளியல் ஆன்மாவை சுத்தப்படுத்துமா என்பது தெரியாது. ஆனால் நமது மனம் எதையேனும் நம்பி ஆறுதலடைந்தாலே அது ஒரு நிம்மதிதான்.

எனக்குத் தெரிந்த ஒரு பெரியவர். ராணுவத்தில் பணிபுரிந்தவர். மிகவும் அதிரடியாக இருப்பவர். அவரிடம் ராணுவத்தின் அத்தனை குணங்களும் உண்டு. முரட்டுத்தனம், பிடிவாதம், தலைமைப் பொறுப்பு, மற்றும் தான் சொன்னதுதான் சட்டம் எனும் பாவம் இவை எல்லாம் உண்டு.

தனது மனைவியிடமும் அவரது ஆறு பிள்ளைகளிடமும் மிகுந்த கண்டிப்பைக் காட்டி வளர்த்து இப்போது அவர்கள் ஆறுபேரும் நல்ல நிலையில் இருக்கின்றனர். தான் செய்தது மற்றவர்களுக்கு பிடிக்காமல் போனாலும் அவர்களது உணர்வுகளுக்கு அவர் மரியாதை கொடுக்க மாட்டார். அவரிடமிருந்த இது ஒன்றுதான் மற்றவர்களை வருத்தப் பட வைத்தது. ஆனால் யாரும் வாயைத் திறந்து அவருக்கு எதிராக பேசமாட்டார்கள்.

 
 
இப்போது அவருக்கு 90 வயது. சமீபத்தில் அவருக்கு லேசான stroke வந்து மருத்துவனையில் சேர்த்தபின் குணமடைந்து வீடு திரும்பினார். அவரைச் சுற்றி அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் அவரது தேவையை கவனித்துக் கொள்கின்றனர்.

ஆனால் அவரிடம் மிகப் பெரிய மாற்றம் ஒன்றை இப்போது காண முடிந்தது. யார் அவரைச் சென்று பார்த்தாலும் இரு கைகளையும் கூப்பி கும்பிடுகிறார். மிகுந்த வணக்கத்துடன் பேசுகிறார். அய்யா நன்றி என்று சொல்கிறார்.

இதை விட, அடிக்கடி அவரது இளமைக்கால சம்பவங்களை நினைத்து நினைத்து அழுகிறார். தனது மனைவியைப் பார்த்து, “ நான் உனக்கு எனது முரட்டுத் தனத்தால் மிகுந்த கொடுமைகளை விளைவித்து விட்டேன் என்னை மன்னித்து விடம்மா..” என்று கதறுகிறார். தன் மகளைப் பார்த்து, ‘அம்மா நீ பத்து வயதுப் பிள்ளையாயிருக்கும் போது ஒருமுறை பிடிவாதம் பிடித்ததால் உன்னை அடித்து விட்டேன் என்னை மன்னித்து விடு ..” என்று கலங்குகிறார்.

ஒவ்வொன்றாய் தன் நினைவுக்குக் கொண்டுவந்து சம்பந்தப் பட்டவர்களிடம் மிகத் தாழ்மையாகக் கூறி தம்மை மன்னித்து விடும்படிச் சொல்லி அழுது கொண்டே இருக்கிறார். ஏறக்குறைய ஒரு 90 வயதுக் குழந்தையாகவே மாறிவிட்டார்.

எல்லோரும் இவரது திடீர் மாற்றத்தால் நிலை குலைந்து போயிருக்கிறார்கள். சிலர் இவர் எடுத்துக் கொண்ட மாத்திரைகளின் விளைவாய் இருக்குமோ என சந்தேகத்தையும் விதைத்திருக்கின்றனர். ஆனால் எனக்கோ அப்படித் தோன்றவில்லை. மனிதர் தன் மனதில் பூட்டிவைத்திருந்த அத்துனை இறுக்கங்களும் இப்போது கிடைத்த சந்தர்ப்பத்தில் வெளி வருகின்றார்ப் போல்தான் என்னால் உணரமுடிந்தது. அவரது கண்ணீரிலும், கூப்பிய கைகளிலும் உண்மையைக் காண முடிந்தது. மற்றவர்களின் மன்னிப்பும் தன் தவறுகளை உணர்தலும் மனதை இலகுவாக்கும் என்பது அவரது தழுதழுத்த குரலில் தெரிந்தது.

 
 
காசிக்குப் போனால் மட்டுமா  பாபம் கரையும்? உணர்ந்து விடும் கண்ணீரிலும் பாபம் கரையுமல்லவா?

நாம் நமது மனதிலுள்ள இறுக்கங்களை நேர் செய்து கொள்ள மன்னிப்பதும் மன்னிப்பு கோருவதும்தான் நிலையான வழி என்பது நிதரிசனம்.

இன்னமும் பேசுவோம்.

அன்பன்,

வேதாந்தி.

 

 

5 comments:

 1. நீங்கள் சொல்வது சரி தான்... தவறு என்று மனதிற்கு பட்டவுடன் "மன்னிப்பு" கேட்பதில் தவறே இல்லை... மனம் சுத்தமாகும்...

  ReplyDelete
 2. அருமையான பதிவு சார்..பாவ புண்ணியங்கள், அதற்கான தண்டனை என்பதெல்லாம் மனிதனால் உருவாக்கப்பட்டது...காசி பற்றி நீங்கள் சொல்லி இருப்பது உண்மைதான் சார் எங்கள் கருத்தும் அதே. இந்த பாவ புண்ணியம் பற்றி நாங்களும் ஒரு பதிவு எழுதி பாதியில் இருக்கின்றது....

  காசிக்குப் போனால் மட்டுமா பாபம் கரையும்? உணர்ந்து விடும் கண்ணீரிலும் பாபம் கரையுமல்லவா?

  நாம் நமது மனதிலுள்ள இறுக்கங்களை நேர் செய்து கொள்ள மன்னிப்பதும் மன்னிப்பு கோருவதும்தான் நிலையான வழி என்பது நிதரிசனம்.// மிக மிகச் சரியே சார்....

  ReplyDelete
 3. #உணர்ந்து விடும் கண்ணீரிலும் பாபம் கரையுமல்லவா?#
  இதில் ஒன்றில்தான் பாபம் கரையும் என்பதே என் நம்பிக்கை :)

  ReplyDelete
 4. உண்மை.உணர்ந்து உதிர்க்கும் கண்னீர் கங்கையை விட வலியது பாபம் அகற்ற

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...