Followers

Thursday, July 9, 2015

ஒரு கோடி உரூபாய் சேர்க்க ஒரு வழி - III


9.7.15

ஒரு கோடி உரூபாய் சேர்க்க ஒரு வழி - IIIஇது வரை பார்த்தது:

1.   எப்போது சேமிப்பை துவக்க வேண்டும்.

2.   எவ்வளவு சேமிக்க வேண்டும்.

3.   செலவினங்களை எப்படி வகை பிரித்துப் பார்ப்பது.

4.   சேமிப்பையும் வாழ்க்கை முறையையும் எப்படி நிர்ணயிப்பது.

5.   இப்படி வரையறுத்த சேமிப்பையும் வாழ்க்கை முறையையும் ஒரு முறைப்படுத்தப்பட்ட வாழ்க்கையின் ஒழுக்கமாகக் கொள்வது எத்துனை முக்கியம் என்பதும் அதன் பயனும்.

இனி நாம் பார்ப்பது:

1.   முக்கியமான செலவுகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது.

இது மிக முக்கியமானதொன்றாகும். நாம் முறையே நமது குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவ காப்பீடு எடுப்பது மிக அவசியம். இது சமயங்களில் மிகுதியாக கை கொடுக்கும்.

அது மட்டுமல்ல நமது ஆயுள் காப்பீட்டிலும் நாம் அலட்சியம் காட்டக் கூடாது. ஆயுள் காப்பீடு நமது குடும்ப உறுப்பினர்களது பாதுகாப்பான வாழ்க்கைக்கு மிக முக்கியம். இப்படி ஆயுள் காப்பீடு செய்யும் பொழுது ஒருவது வருடாந்திர வருவாயின் 25 மடங்குக்கான தொகைக்கு காப்பீடு செய்து கொள்வது நலம்.

உதாரணமாக உங்களது வருவாய் மாதம் 1 லட்சம் என்றால் வருட வருவாய் 12 லட்சம். காப்பீடு 12000000 x 25 = 3,00,00,000 மூண்று கோடி ரூபாய்க்கு எடுத்துக் கொள்வது நலம்.

இது இப்போது உள்ள Term insurance ல் குறைந்த பிரீமியத் தொகையில் சாத்தியமாகும். இது குடும்ப உறுப்பினர்களுக்கு மிகுந்த பாதுகாப்பானது.

இப்படி சேமித்த கணக்கை ஒவ்வொரு வருட முடிவிலும் நாம் சரி பார்க்க வேண்டும். வருட இறுதியில் அதை முதலீடாக மாற்ற வேண்டும். இது மிக முக்கியமானதொரு நடவடிக்கையாகும்.

 
 
2.   சேமிப்பை முதலீடுகளாக்குவது.

ஒரு இரண்டு வருடங்கள் இப்படி சேமித்தபின் அதை பரிசீலிக்கத் தொடங்கினால் நமது வலிமை நமக்குத் தெரியவரும். அதற்குப் பின் முதலீடு செய்ய தயங்கமாட்டோம்.

முதலீடு செய்வதற்கு முன்னர் உங்களது மூண்று மாத வருவாயை சேமிப்புக் கணக்கிலோ அல்லது சட்டென அவசரத்திற்கு எடுக்கும்படியாகவோ வைத்துக் கொள்ளவும். இது emergency fund. இதை எக்காரணம் கொண்டும் முதலீடாக மாற்றக் கூடாது.

முதலீடு செய்யும் போது கவனிக்க வேண்டியது அவைகளை நாம் பிரித்து பரவலாக வகைப்படுத்தி முதலீடு செய்யவேண்டும். நான் சிறுவயதில் ஒரு துணுக்குச் செய்தி படித்தது இன்னமும் நினைவில் இருக்கிறது. செட்டி நாட்டவர் தங்களது முதலீடுகளை தங்கம், வெள்ளி, நிலம் மற்றும் வைப்புத் தொகை என பிரித்து குறிப்பிட்ட சதவிகிதத்தில் இருக்கும் படி முதலீடு செய்வார்களாம். இது மிகச் சரியான முறை. இப்படி பரவலான முறையில் முதலீடு செய்தால் பொருளாதார சூழலுக்குத் தகுந்தார்ப்பொல முதலீடுகளில் நிகழும் ஏற்றத் தாழ்வுகளை சமாளித்துக் கொள்ள முடியும்.

இவ்வாறு முதலீடு செய்யும் போது கண்ணை மூடிக்கொண்டு செய்யக் கூடாது. தற்போதைய நிலவரங்களை ஆராய்ந்து  பின்னரே அதில் முதலீடு செய்யவேண்டும்.

உதாரணமாக தற்போதைய சூழலில் தங்கத்தில் முதலீடு செய்வது அத்துனை லாபம் தராது. அது மட்டுமல்ல தற்போது நிலம் மற்றும் வீடுகளின் மதிப்பு மிகுந்த உச்சத்தில் உள்ளது. இது போன்ற பல செய்திகளையும் தெரிந்து கொண்ட பின்பே அவைகளில் முதலீடு செய்யவேண்டும்.

3.   பொருளாதார திட்டமிடுதலில் நிபுணரின் உதவியை பெறுதல்.

முதலீட்டுக்கென பணம் கையிருப்பு வந்தவுடன் நாம் ஒரு நம்பிக்கையான பொருளாதாரத் திட்ட நிபுணரை (Certified Financial Planner) அனுகவேண்டும். ஆனால் அதற்கு முன்னர் நான் சொன்னபடி முதலீட்டு வகைகளில் போதுமான அறிவை பெற்றிருத்தல் அவசியம். அப்போதுதான் பொருளாதாரத் திட்ட நிபுணரது கருத்துக்களை எடைபோட முடியும்.

கவனியுங்கள் இது உங்கள் பணம். இதை முதலீடு செய்வதில் உங்களது அறிவும் தெளிவும் மிக முக்கியம்.

 
 
இப்படி பொருளாதார திட்ட நிபுணரை அனுகுவதற்கு முன்னர் நாம் நமது தேவைகளையும் தேவைகளை பூர்த்தி செய்ய தேவைப்படும் பணத்தின் அளவையும் தெரிந்து வைத்திருத்தல் திட்டமிடுதலை சுலபமாக்கும்.

உதாரணமாக:

1.   தேவை:சொந்த வீடு  தேவைக்கான காலம் 5 வருடம் தேவையை பூர்த்தி செய்ய தற்போதய மதிப்பில் பணம்: 20 லட்சம்.

2.   தேவை: பிள்ளையின் கல்லூரிப் படிப்பு. தேவைக்கான காலம்: 19 வருடம். தேவையை பூர்த்தி செய்ய தற்போதைய மதிப்பில் பணம்: 25 லட்சம்.

3.   தேவை: பிள்ளையின் திருமணம்.

இப்படியாக பட்டியலிட்டுக் கொண்டு சென்றோமானால் எளிதாக இருக்கும்.

இதே போல ஓய்வு பெற்றபிறகும் நமது நல்வாழ்வுக்காக நம் திட்டமிடுதல் அவசியமாகிறது.

திட்டமிடுதலிலும் முதலீடுகளிலும் நிபுணரது ஆலோசனை சரியாகக் கிடைத்து நாம் முதலீடு செய்தோமானால் நமது முதலீடு ஐந்து வருடங்களில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று மடங்காக பெருகிவிடும். இவைகளை மறுபடியும் முதலீடு செய்தல்தான் நலமான வழி.

திட்டமிடுதலின் படி அந்தந்தத் தேவைகளுக்கான முதலீடுகளை அந்தந்த தேவைகளுக்கு மட்டுமே பயன் படுத்தல் போற்றர்க்குரியது.

மனிதன் தன் குடும்பத்தையும் சுற்றத்தையும் ஏன் தனது நாட்டையும் விட்டு வெகு தொலைவில் சென்று அன்பைத் தொலைத்து அல்லல் பட்டு பெறும் பொருளை சிக்கனமாக திட்டமிட்டு சேமித்து முதலீடு செய்து பெருக்கினால் நிச்சயம் நாம் நமது கனவை நனவாக்கலாம்.

இது வரை நான் உங்களிடம் பகிர்ந்து கொண்டது நான் படித்து கேட்டு தெரிந்து கொண்ட செய்திகள். இவைகளில் தெளிவு பெறவே எனக்கு நாட்கள் கடந்தாகி விட்டது.

அதனால் என்ன?

 
 
Coacher ஒரு Player ஆக இருக்க வேண்டியது அவசியமா என்ன? தெரிந்து கொண்ட செய்திகள் வீணாகதிருக்க உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.

முதல் பதிவில் பகவான் ஜீ கேட்ட கேள்விக்கு இப்போது பதில் கிடைத்திருக்கும்.

இன்னமும் பேசுவோம்.

அன்பன்,

வேதாந்தி.

 முன் பதிவுகள்: ஒரு கோடி உரூபாய் சேர்க்க ஒரு வழி - I
                           
                         ஒரு கோடி உரூபாய் சேர்க்க ஒரு வழி - II

                        

2 comments:

 1. பட்டியலை விட திட்டமிடுதல் மிகவும் முக்கியம்... அதற்கேற்ப பயன் படுத்தல் என்று சொன்னதும் அதிமுக்கியம்...

  ReplyDelete
 2. வணக்கம்,
  நல்ல பதிவு,
  ஆனால் கடைப்பிடிக்க தான் முடியல, அருமை, வாழ்த்துக்கள்.
  நன்றி.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...