8.7.15
ஒரு கோடி உரூபாய் சேர்க்க
ஒரு வழி - II
முந்தைய பதிவு: ஒரு கோடி உரூபாய் சேர்க்க ஒரு வழி - I
இந்தப் பதிவு பணத்தாசை
பிடித்தவர்களுக்கல்ல. மாறாக இந்தப் பணம் நம்மை ஆளுவதைத் தடுக்கவும் அதனை நாம் நமது
வாழ்வில் எப்போதும் நமது கட்டுக்குள் வைத்துக் கொள்வதையும் பற்றியது.
பணத்தை சரியாகக் கையாளத்
தெரியாதவர்கள் வாழ்க்கையை இழந்து விடுகிறார்கள். சமீபத்தில் கடன் பட்டதால்
தற்கொலைக்கு உள்ளான குடும்பம், மற்றும் வேலையை இழந்ததால் தற்கொலைக்கு உள்ளான
குடும்பம் ஆகியவைகளை செய்திகளில் கண்டபோது மனம் வேதனைக்குள்ளானது. இத்தனையும்
பணத்தை சரியாக கையாளத் தெரியாததனால்தான் என்பதை இன்னமும் பலர் உணராமலிருப்பது அதை
விடக் கொடுமை.
எனது தந்தை ஒரு சிறு
விவசாயி. ஒன்றரை ஏக்கர் நிலத்தை வைத்துக் கொண்டு குடும்பத்தை கடனின்றி நடத்திக்
கொண்டு வந்தார். அவரது தம்பி அவரை விட அதிகமாக பாகப் பிரிவினையின்போது சொத்தினைப்
பெற்றும் சரியாக பணத்தைக் கையாளத் தெரியாததால் அவரது காலத்திலேயே அனைத்து
சொத்துக்களையும் விற்றுத் தீர்த்துவிட்டு இப்போது அவரது சந்ததியினர் கூலித் தொழில்
செய்து வயிற்றைக் கழுவிக் கொண்டிருக்கின்றனர். ஒருவரது அறியாமையினால் ஒரு சந்ததியே
பாதிப்புக்குள்ளாகும் அபாயம் இதிலுண்டு.
எனது தந்தை எங்களது வயலில்
நெல்லை விதைத்து அறுவடை செய்தாலும் அத்தனையையும் விற்று விட்டு அதைக் கொண்டு விலை
குறைவான ராகி, கம்பு, சோளம் ஆகியவைகளை எங்களது சாப்பாட்டிற்கு வாங்கியது போக
மீதமுள்ள பணத்தை அடுத்த வெள்ளாமைக்கு வயல் வழிச் செலவுக்கு வைத்துக் கொள்வார்.
கடன் வாங்குவதென்றால்
தற்கொலைக்கு சமமாக நினைப்பார். இத்தகைய ஆளுமை பணத்தின் மேல் இல்லாதிருந்தால்
நாங்களும் பெயர் தெரியாமல் போயிருப்போம்.
இந்தத் தெளிவில் உறுதியாக இருந்தோமானால் நம்மைத் தூண்டும் எத்தகைய காரணிகளுக்கும்
நாம் இடம் கொடுக்க மாட்டோம்.
எனது தந்தையின் இந்தப்
பிடிவாதம் எனக்கும் சற்று உதவியது. அது 1985ம் வருடம். எனக்கு நல்ல வேலை
கிடைத்திருந்தது. B Grade Officer Post. பணிக்குச் சேர்ந்த புதிதில் நான்
பேருந்தில்தான் அலுவலகம் சென்றேன். சற்றுச் சிரமமாக இருக்கவே எனது தந்தை ஊரில் நான்
உபயோகித்து வந்த மிதிவண்டியை எனக்கு அனுப்பிவைத்தார். மிதி வண்டி வந்ததும்
அலுவலகம் செல்வது சற்று எளிதாக இருந்தது. நான் தங்கியிருந்த இடத்திலிருந்து 12
கிலோ மீட்டர் தொலைவில் அலுவலகம் இருந்தது.
என்னுடன் பணிக்குச் சேர்ந்த
அனைவரும் இளைஞர்களாதலாலும் திருமணம் ஆகாதவர்களாதலாலும் ஒரு பந்தா அவர்களிடம்
இருந்தது. அதுமட்டுமல்லாது அனைவரும் புதிதாக இரு சக்கர வாகனம் வைத்திருந்தனர்.
நான் மிதி வண்டியில்
அலுவலகம் வருவதைப் பார்த்து ஒருவர் ஒருமுறை ,”என்ன சார் சைக்கிள்ல வர்றீங்க..
உங்களால எங்களுக்கு ஏன் நம்ப கேடருக்கே கேவலமா இருக்குங்க..” என்றார்.
உடனே அவரைப்பார்த்து நான்
சொன்னேன், “அடேடே என்ன சார் நீங்க.. நம்ம கேடர்ல இத்தனை பேர் பைக்கில வர்றபோது
அந்த மரியாதை எனக்கு வரனுமில்ல. அதெப்படி
இத்தனை பேருடைய மரியாதையும் எனக்கு வரும்போது உங்களுக்கு மரியாதை கெடும்.
அல்லது உங்களுடைய மரியாதை எனக்கு வராதென்றால் என் சைக்கிளின் கேவலம் உங்களுக்கு
வருகிறதென்பது எப்படி ஒத்துக் கொள்ள முடியும்”, என்றேன். நண்பர் வாயடைத்துப்
போய்விட்டார்.
இதைப் போல நம்மைத் தூண்டி
விடுபவர்கள் பலர் இருப்பார்கள். ஆனால் அவசரத் தேவைக்கு நாம் பணம் கேட்டால் முகம்
திருப்பிக்கொண்டு போய் விடுவார்கள். இது எனது அனுபவத்தில் கண்டது.
ஐரோப்பிய நாகரிகத்தின்
தொட்டில் எனப் பாராட்டப் பெற்ற கிரீஸ் தற்போது கடன் சுமையில் தள்ளாடி உலக நாடுகளையே
ஆட்டம் காணவைப்பது நாம் அறிந்ததே. அதுமட்டுமல்ல, இங்கேதான் மிகப் பெரிய
சிந்தனையாளர்கள் தோன்றியுள்ளனர். ஆனாலும் அந்த நாட்டிற்கு இந்த நிலைமை.
ஒரு குடும்பத் தலைவராக
நமக்கு பணத்தை சரியாக கையாளும் பொறுப்பு உண்டு. அதுமட்டுமல்ல, இது குறித்த சரியான
புரிதலை நமது குழந்தைகளுக்கு கொண்டு சேர்க்கும் பொறுப்பும் நமக்கு உண்டு. அது
மட்டுமே நம்மையும் நமது குடும்பத்தையும் ஏன் நமது சந்ததியினையும் காக்கும்.
இன்று நான் பேசியவையெல்லாம் இந்தப் பதிவுகளின் (பணத்தின் ஆளுமையின்)
முக்கியத்துவத்தை நீங்கள் அறிந்து கொள்வதற்காகவேண்டியே .
நாளை பதிவின் பொருளைப்பற்றி
பேசுவோம்.
அன்பன்,
வேதாந்தி.
பணம் வரும்போது உருப்படியான செலவு செய்ய வேண்டுமென்பது உண்மைதான் .பாகப்பிரிவினையால் எனக்கு கிடைத்த பணத்தில் கார் வாங்க நினைத்தேன் ,என் இல்லாள் அதனை ஒரு பிளாட்டில் முதலீடு செய்ய வற்புறுத்தியதால் செய்தேன் ,இன்று அதன் மதிப்பு,மூன்று காரின் மதிப்பு .கார் வாங்காததும் நல்லதுதான் :)
ReplyDeleteமுதல் செலவே சேமிப்பாக இருக்க வேண்டும்...
ReplyDelete