Followers

Friday, July 24, 2015

தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி III


24.7.15

தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி III

 
முந்தைய பகுதிகளுக்கு:

1.  தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி I

2. தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி II

 
அந்த நேரத்தில் நண்பருக்கு என் மனைவி காபி எடுத்துக் கொண்டு வந்தாள். நண்பரது குடும்ப நலனை விசாரித்தாள். பிறகு நண்பரது முகத்தைப் பார்த்து ஏதோ சங்கடமான செய்திகளை பேசிக்கொண்டிருக்கிறோம் என்று யூகித்தவள் மறுபடி எங்களை தனியே விட்டு வீட்டினுள் சென்றுவிட்டாள்.

நண்பர் தொடர்ந்தார்.

“விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு சென்ற நான் ஏற்கனவே விற்பனையாளர் மீதும் கட்சிக்காரன் மீதும் கொடுத்திருந்த புகார்களை கையோடு எடுத்துச் சென்றேன்.

காவல் நிலையத்தின் ஆய்வாளர் எங்களை மிகக் கடுமையாக நடத்தத் தொடங்கினார். ‘இங்கேயே காத்திருங்கள்’ என்று சொல்லி அங்கிருந்த ஒரு நீளமான மர இருக்கையில் இருக்கச் செய்தார். அவரது நடவடிக்கை கட்சிக்காரரின் பக்கமாகவே இருந்தது. சற்று யோசித்த நான் உடனே என்னுடன் வந்திருந்த ஒருவரை மட்டும் அழைத்துக் கொண்டு வெளியே வந்தேன்.

‘என்ன சார், என்ன?’ என்று பதட்டத்துடன் வினவிய அவரை சமாதானப்படுத்தி அவரது இரு சக்கர வாகனத்தை எடுக்கச் சொன்னேன். ‘எங்க சார்?’ என்றார். ‘ஒன்றுமில்லை நேரே அசிஸ்டண்ட் கமிஷனர் ஆபீசுக்கு விடுங்க’ என்றேன். சற்றே குழம்பிப் போனவர் வேறேதும் பேசாமல் வண்டியை அருகிலிருந்த உதவி ஆணையர் அலுவலகத்திற்கு விட்டார். அலுவலகத்தை  அடைந்ததும் நான் அவரை வெளியிலேயே இருக்கச் சொல்லிவிட்டு உதவி ஆணையரை பார்க்கச் சென்றேன்.

உதவி ஆணையரின் உதவியாளரிடம் சொல்லியனுப்பியதும் சற்று நேரத்தில் என்னை உள்ளே வரச்சொன்னார். உள்ளே சென்றவன் உதவி ஆணையருக்கு வணக்கம் சொன்னவுடன் திரும்ப வணக்கம் சொல்லியவர் என்னை அவருக்கு முன்னே இருந்த இருக்கையில் அமரச் சொன்னார்.

அமர்ந்தவன் அவரிடம் என்னைப்பற்றி அறிமுகம் செய்து கொண்டேன். தற்போது எங்கள் குடியிருப்பில் நடந்துகொண்டிருக்கும் பிரச்சினையைச் சொன்னேன். அதில் விற்பனையாளருக்கும் கட்சிக்காரருக்கும் இருக்கும் நோக்கத்தையும் சொன்னேன். இவருக்கு பயந்து கொண்டு ஓய்வு பெற்ற TVS group MD வீட்டை விற்றுவிட்டு சென்ற கதையையும் சொன்னேன். இவற்றுக்கெல்லாம் கையிலிருந்த ஆதாரங்களையும் காட்டினேன். அவைகளை தன் கையில் வாங்கிப் பார்த்தவர் முகம் சுளித்தார்.

‘சரி இப்போது என்ன?’ என்றார்.

‘இதன் விளைவாக எங்கள் மீது பாலியல் புகார் கொடுத்திருக்கிறார்கள் சார். அதன் விசாரணைக்குத்தான் இப்போது காவல் நிலையம் வந்திருந்தோம். ஆனால் எங்களது வயதையும் கூட பொருட்படுத்தாது எங்களை அவமானப் படுத்துகிறார்கள். உங்களைப் பார்த்து இதைப் பற்றி சொல்லிவிட்டுப் போகலாம் என்றுதான் வந்தேன். மற்றபடி ஆய்வாளர் மீது நாங்கள் சொல்லும் புகாராக இதை எடுத்துக் கொள்ளவேண்டாம்’, என்றேன்.

சட்டென்று உதவி ஆணையரது முகம் இறுகியது. ‘சற்று நேரம் வெளியே காத்திருங்கள்’ என்று சொல்லிக்கொண்டே யாரையோ தொலைபேசியில் அழைத்தார். நான் வெளியே வந்தேன்.

சிறிது நேரம் கழித்து நாங்கள் விசாரணைக்கு சென்றிருந்த காவல் நிலையத்தின் தலைமைக் காவலர் வந்தார். அவர் உதவி ஆணையரது அறைக்குள் சென்ற சிறிது நேரத்திற்குள் எனக்கு அழைப்பு வந்தது. நான் உடனே எழுந்து அறைக்குள் சென்றேன்.

‘என்னய்யா..? என்ன இதெல்லாம்?’, என என்னைக் கைகாட்டி அதட்டலாய்க் கேட்டதும் தலமைக்காவலர் நடுக்கத்தில் அதிர்ந்து போனார். ‘சார்.. அதெல்லாம் ஒன்னுமில்லை சார். சாரைப் பற்றி எங்களுக்கு நல்லாத் தெரியும். சும்மா பதில் எழுதி வாங்கத்தான் வரச்சொன்னோம்..’ என்றவரைப்பார்த்து, ‘சும்மா அவன் சொன்னான் இவன் சொன்னான்னு ஏதேனும் பண்ணுணீங்க.. அப்புறம் பார்த்துக்க..’ என்று தனது ஒற்றை விரலை உயர்த்தி எச்சரிக்கைத் தொனியில் பேசினவரது கண்களில் இறுக்கம் தெரிந்தது.

அதற்குப்பிறகு சட்டென என்பக்கம் திரும்பி, ‘ நீங்க போங்க சார். வேறேதும் பிரச்சினைன்னா வாங்க.’ என்று என்னை போகச் சொன்னார்.

உதவி ஆணையரது அறையிலிருந்து தலைமைக்காவலர் வெளியேவர சற்று நேரம் பிடித்தது.

வெளியே வந்தவர், ‘நீங்க ஏன் சார் இங்கெல்லாம் வர்றீங்க.. எனக்குத் தெரியாதா? என்னிடம் சொன்னால் நான் பார்த்துக்க மாட்டேனா?’ என்றார். அவரது பேச்சில் நடையில் மாற்றம் நிறையவே தெரிந்தது. ‘சும்மா ஸ்டேசனுக்கு வந்து எழுதி கொடுத்துட்டு போங்க சார். நான் பார்த்துக்கறேன்.’ என்று சொல்லியபடியே தனது இரு சக்கர வாகனத்தில் ஏறி புறப்பட்டார்.

என்னுடன் வந்தவருக்கு ஒரே வியப்பு. ‘என்ன சார் நடந்தது?’ என்று ஆச்சரியத்துடன் கேட்டார். ‘ஒண்ணுமில்லை. நீங்க வண்டியெடுங்க போலாம்.’ என்றேன். உதவி ஆணையர் எங்கே என்னை அவர் முன் அவமானப்படுத்தி விடுவாரோ என்ற பயத்தில் அவரை நான் வெளியிலேயே இருக்கச் சொன்னது அவருக்குத் தெரியாது. உதவி ஆணையரின் அறைக்குள் நுழையும் முன்னர் என்னுள் இருந்த அந்த desperate feelings, helpless nature and all gone attitude எல்லாம் உதவி ஆணையரைப் பார்த்து பேசியவுடன் மறைந்து போனது.

என் முகத்தில் தெரிந்த மாற்றத்தைப் பார்த்து, ‘என்ன சார் சட்டுனு மாறிட்டீங்க..!’ என்றார். அவரது இரு சக்கர வாகனத்தின் பின்புறம் அமர்ந்தபடியே, ‘இனிமே எல்லாமே மாறப்போகுது பாருங்க.’ என்றேன்.

காவல் நிலையம் வந்தடைந்தோம். காவல் ஆய்வாளர், தலைமைக் காவலரைப் பார்த்து, ‘என்னவாம்யா?’ என்று வெறுப்பாய் கேட்டார். தலைமைக் காவலர் அவரது அறைக்குள் சென்று  ஏதோ சொல்ல சற்று நேரத்தில் வெளியே வந்தவர் எங்களைப்  பார்த்து , ‘சார் வந்து எழுதிக் கொடுத்துட்டுப் போங்க சார்..நான் பார்த்துக்கறேன்..’ என்றார்.

உள்ளே நுழைந்து அவர் சொன்னபடி எங்களுக்கும் இந்தப் புகாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது நோக்குடன் கொடுக்கப்பட்ட ஒரு பொய்ப்புகார் என்று எழுதிக் கொடுத்துவிட்டு வந்தோம்.

என்னுடன் வந்தவர்கள் இத்தனை பெரிய பிரச்சினை மிகச் சாதாரணமாக முடிந்தது கண்டு ஆச்சரியப்பட்டனர்.

காவல் நிலையத்திலிருந்து திரும்பும் வழியில் ஒரு உணவகத்தில் அமர்ந்து இறுக்கம் தளர பேச ஆரம்பித்தோம். அது ஏறக்குறைய ஒரு Action Plan meeting போலவே இருந்தது. முதல் வெற்றி தந்த உற்சாகத்தில் பேசினேன்.




‘ நம்ம அபார்ட்மெண்ட் அப்ரூவ்டு ப்ளான் காபி வேண்டும். இந்த கட்சிக்காரனைப்பற்றி எல்லாத் தகவலும் வேண்டும். மேலும் உண்மையாலுமே இந்த விற்பனையாளர் கட்சிக்காரனுக்கு தனது மூன்று வீடுகளையும் விற்றிருக்கிறானா என உறுதி செய்ய அந்த மூன்று வீடுகளின் காபி ஆப் த டாகுமெண்ட் கேட்டு சார் பதிவாளர் அலுவலகத்தில் உடனே விண்ணப்பம் செய்யவேண்டும்….’ என்று நான் மட மட வென பேசியபோது ஒருவர் இடை மறித்து, ‘சார் நான் விசாரித்தேன். இந்தப் பிரச்சினை தீரவேண்டுமானால் இப்போதுள்ள மின்சாரத் துறை அமைச்சரை பார்த்தால் போதுமென்று எனக்குத் தெரிந்தவர் சொன்னார்..’ என்றார்.

‘இல்லை. அப்படியெல்லாம் நாம் போகக் கூடாது. அங்கே போனால் பிறகு திரும்ப வர முடியாது. கட்டைப் பஞ்சாயத்து நடத்தி காரியமும் முடியாமல் பணத்தையும் சொத்தையும் இழக்க வேண்டி வரும். அதனால் வேண்டாம்..’ என்றேன்.

தீவிரமாய் யோசித்தபடியே, ‘நமக்கும் நமது சொத்துக்களுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு. அரசு என்பது அரசியல்வாதிகளுடையதல்ல அரசு அதிகாரிகளுடையது. அந்த அரசும் நம்மைக் காக்க வில்லையென்றால் அதற்கும் மேலே நீதி கிடைக்க நீதி மன்றங்கள் இருக்கிறது.’ என்று சொல்லி முடித்தேன்.

எனது குரலில் தெரிந்த தீர்க்கம் என்னுடன் இருந்தவர்களை உற்சாகப்படுத்தியது. அன்று வீடுதிரும்பிய ஒவ்வொருவருக்கும் தங்கள் மனைவிமார்களிடம் சொல்ல ஒரு உற்சாகமான கதை இருந்தது.”

தன்னையறியாமலேயே உற்சாகமான மன நிலைக்குச் சென்றிருந்தார் எனது நண்பர்.

அவரது திட்டங்களையும் அதை அவர் செயல் படுத்திய முறைகளையும் தொடர்ந்து கேட்க ஆவலாய் இருந்தேன்.

YES,  FAITH NEVER LETS YOU DOWN.

அவர் தொடர்ந்தது அடுத்த பதிவில்.

இதைத் தொடர:  தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி IV
அன்பன்

வேதாந்தி.

 

 

5 comments:

  1. உற்சாகமான வெளிச்சம் மனதில்....

    அடுத்த செயல்களை வாசிக்க காத்திருக்கிறேன்...

    ReplyDelete
  2. ஆவலுடன் காத்திருக்கிறேன்!

    ReplyDelete
  3. என்னதான் முடிவு? அறிய ஆவலாய் இருக்கிறேன்.

    த.ம.2

    ReplyDelete
  4. தி. மு. கா....தில்லு முல்லு காரன் தான :-)

    தொடர்கிறேன்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...