Followers

Friday, October 29, 2010

வானமே எல்லை என்பது வாழ்வில் எத்துனை பொருந்தும்?

29.10.10
வானமே எல்லை என்பது வாழ்வில் எத்துனை பொருந்தும்?


வானமே எல்லை என்பது நமது முயற்சிகளை ஊக்குவிக்க சொல்லிவரும் ஒரு வழக்கு. இதனை நாம் சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறோமா என்றும்  நமது மேம்பட்ட வாழ்வுக்கு இது  எத்துனை பொருந்தும்  என்பதைப் பற்றியும் பேசுவோம்.


நமது முயற்சிகள் வழியாக நமது கனவுகள் மெய்ப்பட, மெய்ப்பட, நாம் கனவு காண்பதை நிறுத்தாமல் எதிர்பார்ப்புகளை விரிவாக்கி மேலும் மேலும் முயற்சிகள் செய்ய வேண்டும் என்பதே இதன் பொருள்.  இது  நமது நாட்டிற்கே உரித்தான மெய்ஞானத்தை ஒதுக்கிவைத்துவிட்டு மேலை நாட்டினர்க்கே உரிய உலக இன்பங்களை சார்ந்த கலாச்சாரத்தைத் தழுவியதொன்றாகும்.


உலக மயமாக்கப் பட்ட பொருளாதாரச் சூழலில் மேற்சொன்ன வானமே எல்லை என்பது மிகப் பொருத்தமானதாகத் தோன்றினாலும் இந்த நிறுத்தா ஓட்டம் நிச்சயமாக ஒரு தவறுதலான இலக்கைக்  கொண்டுள்ளது எனச் சொல்லலாம். உண்மையில் சொல்லப் போனால் இது நமது பிறப்பின் மகத்துவத்தையும், மேன்மையையும் உணராமல் பிறப்பின் நோக்கினை உதாசீனப்படுத்தி நமது வாழ்வை எள்ளி நகையாடும் வகையில் வாழ்ந்து கழிக்க நம்மைத் தூண்டுகிறது.

‘வானமே எல்லை’ என்பது ‘நீ எத்துனை சாதித்தாலும், எத்துனை வளங்களைப் பெற்றிருந்தாலும்  நிறைவை அடைந்துவிடாமல் மீண்டும் மீண்டும் அவைகளை மேலும் பெருக்கிக் கொள்ளும் முயற்சியை கைவிடாதே. உனது  நிறைவுக்கும் ,  முயற்சிகளுக்கும்  வானம் மட்டுமே எல்லை’ என்று வலியுறுத்துவதைக் காணலாம்.


இது சரியானதொன்றாகுமா? இந்த முயற்சிகளில் நாம் பெறுகின்ற உலகியல் சார்ந்த பொருட்கள் / இன்பங்கள்  எத்துனை இருந்த போதிலும் அவைகளைக் கொண்டு முழுமையான திருப்தியடைந்து விடாதே என்று இது சொல்லும் போது இந்த சொல்வழக்கு ஊக்குவிக்கும் முயற்சிகளே கேலிக்குறியனவாக ஆகாதா?


முயற்சிகள் இல்லாத மனிதன் உயிரற்ற பிணத்திற்கு ஒப்பாவான் என்பது உண்மைதான்.  ஆனால் வெற்றி எல்லைகளைத் தொட்டும்  நமக்கு எக்காலத்தும் முழு நிறைவைக் கொண்டுவராத   முயற்சிகள் நம்மை வெற்று எந்திரன்களாக்கி  விடாதா?


வாழ்வும், வாழ்வதற்குப் பொருளும் , வாழ்வையே இன்பமாக்கி ரசனை மிகுந்து வாழ்வதும்  மிகவும்  இன்றியமையாதது. ஆனால் இதற்கு வானமே எல்லையாக வெற்று  ஓட்டங்களால் நாம் நம் வாழ்வை நிரப்பிக் கொள்வது தவறல்லவா?


கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸ்,  ஒவ்வொரு நாளும் கடைத்தெருவிற்கு சென்று அங்கு விற்பனைக்கு வைக்கப் பட்டிருக்கும் பொருட்களை சற்றுநேரம் உற்றுப் பார்த்துவிட்டு எதுவும் வாங்காமல் திரும்பி விடுவாராம்.  இப்படியே தினமும் நடந்துகொண்டிருக்கையில் ஒரு நாள் ஒரு கடைக்காரன் அவரை , ‘ அய்யா, நீங்கள் எதனையும் வாங்குவதில்லை ஆனால் தினமும் கடைக்கு வந்து பொருட்களை வெறுமனே பார்த்துவிட்டு மட்டும் செல்கிறீர்களே… ஏன்?’  என்றானாம். அதற்கு சாக்ரடீஸ், ‘ எவ்வளவு பொருட்கள் இல்லாமல் நான் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது என்பதை அறியவே நான் தினமும் கடைத்தெருவிற்கு வருகிறேன்’. என்றாராம்.
நிறைவுறாது, நம்மை மீண்டும் மீண்டும் ஓட விரட்டிக் கொண்டிருக்கும் இந்த வானமே எல்லை என்கின்ற  சித்தாந்தம் தப்பாது நமது முயற்சிகளை பெருக்கும்.  ஆனால் இந்த எண்ணமானது  நாம் எத்துனை முயன்றபோதும் நம்மை நிறைவடையச் செய்யாது விரட்டிக் கொண்டேயிருக்கும் பிசாசைப் போன்றது. இந்த எண்ணம் கொண்டோர் மனம், வின் வெளியில் கதிரவனை விடப் பெரிதான வின் மீன்களையே விழுங்கியும் நிறைவு கொள்ளாது விழிப்புடனும் ஆவேசத்துடனும் இருக்கும் கருப்புக் குழிகளைப்  (Black Hole) போன்றது.  மிகவும் பரிதாபத்திற்குரியது.  நிறைவடையாத மனம் இறையைத் தேடாது. இந்த இறையைத் தேடா வாழ்வு ஒரு நோக்கம் பிறழ்ந்த வாழ்வு.  பிறப்பின் பொருளை வீணடித்துவிடும்.போதுமென்ற எண்ணம் கொண்டவரது மனமும் வாழ்க்கையும் எப்போதும் நிறைந்திருக்கிற எடுக்க எடுக்க குறையாது அன்னமிடும் அட்சய பாத்திரம் போன்றது. இந்த போதுமென்ற எண்ணம் தன்னையும் நிறைவு படுத்தி மகிழ்வித்து தன்னைச் சார்ந்தவர்களையும் மகிழ்விக்கும் மந்திரம். நிறைவடைந்த மனம் இறையைத் தேடும். பிறப்பின் பொருளுணர்ந்து பிறவிப் பெருங்கடல் நீந்தி  இறையடி சேரும்.


வானமே எல்லை என்றல்லாமல் அறத்தின் எல்லைக்குள் நமது  விருப்பங்களையும் தேவைகளையும் வைத்து அதற்கான முயற்சிகளையும்  நேர்வழியில் கொண்டு இலக்கு மாறாது, உயிரின் நோக்கும் வாழ்வின் நோக்கும் பிறழாது வாழ்வோம். பேரின்பம் பெறுவோம்.

இன்னமும் பேசுவோம்.

அன்பன்,

வேதாந்தி.

Wednesday, October 27, 2010

காதல் திருமணங்கள் பெற்றோருக்கு எதிரானவைகளா?

27.10.10
காதல் திருமணங்கள் பெற்றோருக்கு எதிரானவைகளா?திரைப்படங்களிலும் தொலைக்காட்சிகளிலும் காதலை ரசிக்கத் தெரிந்த பெற்றோருக்கு தம் மக்களின் காதல் மட்டும் எட்டியாக கசக்கும் என்பது தெரிந்த தெளிவு. இது ஏன்?


பொதுவாகவே பெற்றோர்கள் பிள்ளைகள் மீது அதிக பிரியத்துடன் இருப்பதோடல்லாமல் அவர்கள் விருப்பங்களை நிறைவேற்றுவதில் பெரும்பாலோனோர் மன மகிழ்வும் கொள்கின்றனர். இந்த போக்கு பிள்ளைகளின் காதல் திருமணத்தில் மட்டும் மாற்றம் கொள்வதைப் பற்றி பேசுவது  இரு சாரரின் சிந்தனைக்கும் உகந்த ஒன்றாகும்.


காதல், சாதி ஒன்றினாலேயே பெற்றோரால் மறுக்கப் படுகிறது என்பது பெரும்பாலான கருத்து. ஆனால் திருமண முறை கொண்ட  தன் சொந்தங்களில் எழும் காதல் கூட பெரும் எதிர்ப்பை சந்தித்துள்ளது. பணம் கொண்ட இடங்களில் ஏற்படும் காதலும் சில சமயங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் பல சமயங்களில் எதிர்ப்பை சந்திக்கிறது.


மோதலிலும் பின் பிரிவிலும் முடிந்த காதல் திருமணங்களை உதாரணம் காட்டி பிள்ளைகளின் காதலை மறுக்கும் பெற்றோரும் உளர். ஆனால் இந்த மணமுறிவு என்பது காதல் திருமணத்திற்கு மட்டுமல்ல எல்லாத் திருமணங்களுக்கும் பொருந்தும். இதுபற்றி பின்னர் பேசுவோம்.


 சில கிராமங்களில் உள்ள இந்த காதல் வெறுப்பு / எதிர்ப்பு, நான் முந்தைய பதிவில் குறிப்பிட்டது போன்ற கூட்ட மனப்போக்கை சார்ந்ததாலேயே கூட இருக்கலாம்.  ஆனால் நகரங்களில் இந்த கூட்ட மனோபாவம் காதல் வெறுப்பிற்கு காரணமாக இருப்பதில்லை. 
பெரும்பாலும் படித்த, நிலைமை புரிந்த யதார்த்தவாத  பெற்றோர்கள் மட்டுமே தங்கள் பிள்ளைகளின் காதலுக்கு அங்கீகாரம் தருவதைப் பார்க்கலாம்.  இத்தகையோரது வீட்டில் நடக்கும் திருமணங்கள் பெரும்பாலும் காதல் திருமணமாக மட்டுமல்ல இந்தக் காதல் திருமணம் நாடு கடந்த ஒன்றாகவும் இருக்கும் வாய்ப்பு இருக்கிறது. இங்கு சிலர் சாதிக்கே சண்டையிட்டுக் கொண்டிருக்கையில் பலர் நாடு கடந்தும் நல்லுறவை தங்களது குடும்பத்திற்குள் வரவேற்க தயாராக  இருக்கின்றனர் என்பது  பெரும் மகிழ்வுக்குரியது.


இப்படி பல செய்திகளை ஆராயும் போது  இந்த காதல் வெறுப்பு குறித்த சில உண்மைகள் வெளிப்படும்.

பெற்றோர்கள் பிள்ளைகளை பெற்றுக் கொள்வதும் அவர்களை வளர்த்து ஆளாக்குவதும் நமது நாட்டைப் பொருத்த வரையில் சுயநலம் சார்ந்த ஒன்றாகும். பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்கள் ஒருவித எதிர்பார்ப்பையும் தங்களுக்குள் வளர்த்துக் கொள்கிறார்கள்.  தாங்கள் பிள்ளைகளிடம் எதிர்பார்ப்பது அவர்களின் கீழ்ப்படிதலே என்று இந்த பெற்றோர்கள் சொல்லிக் கொண்டாலும் அவர்களின் எதிர்பார்ப்பு உண்மையில் அதுவல்ல. அது பிள்ளைகளின் கீழ்ப்படிதலைச் சார்ந்திருக்கும்  தங்களது பாதுகாப்புதான். பிள்ளைகள் தங்கள் சொற்படி நடந்து மணம் செய்து கொண்டார்களானால் வரும் உறவுகள், நாம் பார்த்து  வீட்டிற்கு  கொண்டுவரும் உறவுகள், நமக்கு ஆதரவாய் இருக்கும் என்ற மனப்போக்கே இதற்கு காரணம். ஆனால் பல நேரங்களில் தாம் பார்த்து கொண்டு வரும் உறவுகளும் இந்த எதிர்பார்ப்பை ஏமாற்றத்திற்குள்ளாக்குவதும் உண்டு. இந்த சமயங்களில் தங்கள் விருப்பப்படியே இந்த திருமணங்கள் நடந்ததால் இந்த ஏமாற்றத்தினை ‘விதி’ யென்று ஏற்றுக்கொள்ளத் தயாராகின்றனர் .


இத்தகைய எதிர்பார்ப்பு நமது கலாச்சாரத்தில் கூட்டுக் குடித்தன முறை பேணப்பட்டபோதிருந்து வளர்ந்து வருவது. ஆனால் தற்போதைய தனிக் குடித்தன முறைக்குத் தகுந்தார்ப்போல் இந்த எதிர் பார்ப்பு மாறத் தவறிவிட்டது.


 

சமுதாயத்தில் தற்போது இந்த தனிக் குடித்தன முறை தவிர்க்கப் படமுடியாத ஒன்றாகும். இது மட்டுமல்ல பெற்றோரை விட்டு விலகி தூர தேசத்திற்கு பொருளீட்டும் பொருட்டு செல்வோர் பெரும்பாலும் அங்கேயே தங்கிவிடுவதாலும் பெற்றோர்கள் தனித்து விடப்படுகின்றனர். இந்த நிலையில் தனித்து நிற்கும் பெற்றோரது மன நிலையை ‘Empty nest syndrome’ எனச் சொல்வர். அவர்களது வீடு காலியான கூட்டைப் போல் வெறுமை நிறைந்திருக்கும்.


பிள்ளைகளை பாதுகாக்கத் தெரிந்த பெற்றோருக்கு தங்களையும் தங்கள் எதிர்கால வாழ்வையும் பாதுகாத்துக் கொள்ளுதல் குறித்த சரியான எச்சரிக்கை உணர்வு இல்லாது போனது மிகவும் வருந்தத் தக்கதாகும்.


சில பொருந்தா மணப்பெண்கள் அமைந்துவிட்டால் பிள்ளைகள் உள்ளூரில் இருக்கும் போதே கூட தனித்து விடப்பட்ட பெற்றோரை இந்த வெறுமை ஆட்கொண்டு கொல்லும்.


முக்கியமாக முதுமையில் நமக்கு துணை தேவை என்பதாலும் மேலும் அச்ச உணர்வும் தனிப்படுத்தப் படுதலும் முதுமையில் மிகுந்த மன அழுத்தத்தை உண்டுபண்ணும் என்பதாலும் நமக்கு பிள்ளைகளின் அருகாமையும் கவனிப்பும் முதுமையில் கண்டிப்பாக தேவைப்படுகிறது. பலருக்கு இதனோடு  பொருளாதாரத் தேவையும் கூட அதிகரிக்கலாம். முதுமையில் இந்த பொருளாதார சுமையும் கூடுவதால்  நமது பாதுகாப்பு குறித்த அச்சம் எழுவது நியாயமானதே.


இது தவறல்ல. ஆனால் இதை எதிர்நோக்கி, நம் பிள்ளைகள் வளரும் போதே பொருளாதாரத்திலும்  மனப்பக்குவத்திலும் நம்மை முதுமைக்கு தயார் படுத்திக் கொள்ளாமல் நாம் நமது பிள்ளைகளைச் சார்ந்தே இருக்க நினைப்பது பெரும் தவறு. இத்தகைய மன நிலையிலிருக்கும் பெற்றோர்களே பிள்ளைகளின் காதலுக்கு எதிர்ப்பாய்  இருக்கின்றனர்.
 
பெரும்பான்மையான யதார்த்தவாத பெற்றோர்கள் தங்களது இளமையிலேயே இதற்கு தங்களை தயார் படுத்திக் கொள்வதால் தங்கள் பிள்ளைகளிடம் எதிர்பார்ப்பை வளர்த்துக் கொள்வதில்லை. மாறாக அவர்களது தனித்த வாழ்க்கையை ரசிக்கத் தொடங்குகின்றனர். தங்களது பொருளாதாரப் பாதுகாப்பையும் இளமையிலேயே ஏற்படுத்திக் கொள்வதனால் பிள்ளைகளின் தூரத்து வாழ்க்கையும் அவர்களை பாதிப்பதில்லை.  முதுமையில் பிள்ளைகளின் அருகாமையை எதிர் நோக்காமல் நட்பு வட்டத்தை பெருக்கி தங்கள் தனிமையையும் போக்க வழி வகுத்துக் கொள்கின்றனர். இத்தகையோருக்கு தங்கள் பிள்ளைகளின் காதல் திருமணங்கள் எதிரானவைகளாவதில்லை.


பிள்ளைகளின் வளர்ச்சியை நம் சுயநலம் கருதி முடக்கிப் போடாமலும், அவர்களது மகிழ்ச்சியை நமது எதிர்கால அச்சம் கருதி கருக்கிப் போடாமலும் இருக்க வயோதிகத்திலும் நாம் நம்மை நம்பி இருக்கக் கற்றுக் கொள்வோம். நமது பிள்ளைகளுக்கு ஒரு முன்னோடியாய் இருப்போம். மாறிவரும் சமுதாய மாற்றங்களை மலர்ச்சியுடன் வரவேற்க கற்றுக்கொள்வோம்.


மாறுவோம். மன மலர்ச்சியுடன் வாழ்வோம். வாழ வைப்போம்.


இன்னமும் பேசுவோம்.

அன்பன்

வேதாந்தி.


Monday, October 25, 2010

நாம் கொள்ளும் நம்பிக்கைகளில் நம்பகத்தன்மை உள்ளதா?

25.10.10
நாம் கொள்ளும் நம்பிக்கைகளில் நம்பகத்தன்மை உள்ளதா?வருடா வருடம் நடக்கும் புத்தகக் கண்காட்சிகளில் விற்கப்படும் புத்தகங்களின் வகைகள் பொது மக்களின் மனப்போக்கை ஓரளவுக்கு பிரதிபலிப்பதாய் இருக்கும். இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த விற்பனையில் அதிகமாக விற்கப்பட்ட புத்தகங்களில் முதலாவதாக இருந்தது சோதிடப் புத்தகங்கள் இரண்டாவதாக அதிகப்படியாக விற்பனையானது சமையல் புத்தகங்கள். 


சோதிடத்தினை நம்புபவர்கள் தங்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தினை விரும்புபவர்களாகவோ அல்லது ஒரு மாற்றத்தினை எதிர் நோக்குபவர்களாகவோ இருக்கலாம். இந்த சோதிட முறைகள் அல்லது விளக்கங்களில் அவர்களது நம்பிக்கைகள் சற்றே உறுதிப்படலாம் அல்லது அவர்களது பொறுமைக்கு நியாயம் கற்பிக்கப் படலாம். இதில் எதுவானாலும் அவர்களது தற்போதைய நிலையைவிட அவர்களது எதிர்காலம் மிகப் பிரகாசமாகவும் வளமாகவும் இருக்கும் என்ற நம்பிக்கையை முன்வைத்தே இந்த சோதிட விளக்கங்கள் இருக்கும்.  மனிதர்களை தங்களின் எதிர்காலத்தில் நம்பிக்கை வைக்கச்  செய்கிறது இந்த சோதிட விளக்கங்கள்.


பணம் பறிக்கும் குறிக்கோளுடன் செயல்படும் சில ஈனர்களைத் தவிர்த்து ( இத்தகைய ஈனர்கள் எல்லாத் துறையிலும் உள்ளனர்..) பார்த்தோமானால் இந்த சோதிட விளக்கம் சொல்லும் அனைவரும் ஒருவகையில் ‘ Hope Clinic ‘ நடத்துகிறார்கள் என்பது புரியும்.


நான் சோதிடம் உண்மையானது அல்லது பொய்யானது என்ற வாதத்திற்கே செல்லவில்லை. நான் பேச எடுத்துக் கொண்டது அவைகள் கொடுக்கும் நம்பிக்கைகள் பற்றியே.சில நிமிட நம்பிக்கை கிடைத்திருந்தால் எத்துனையோ தற்கொலைகள் தவிர்க்கப்பட்டிருக்கும். சிலர் சொல்வது போல் நாம் பிறக்கும் போதே இறப்பென்று ஒன்று நிச்சயிக்கப்பட்டிருக்கையில் இந்தப் பிறப்பில் நாம் ஒவ்வொரு நாளையும் மகிழ்வுடன் கழிப்பது ஒன்றே  பகுத்தறிவு மிக்க செயலாக இருக்கும் என்பது என் எண்ணம். ஒருவேளை பகுத்தறிவு கொண்டவன் இத்தகைய “Hope Clinic’ குகளை எள்ளி நகையாடி தனது தன்னம்பிக்கையையும் பகுத்தறிவினையும் உயர்வாகப் பேசலாம்.  இங்கு இந்த தன்னம்பிக்கையாளனை காப்பதும் அவனது தன்னம்பிக்கையே. தன் மீது நம்பிக்கை கொள்ளாதவன் பிறரை அல்லது பிறவற்றில் நம்பிக்கை கொண்டு வாழ்வை கடத்துகிறான்.  இங்கு மகிழ்வுடன் வாழ்வது மட்டுமே முக்கியம். அந்த வாழ்வை எந்த நம்பிக்கை - தன்னம்பிக்கை அல்லது பிறதில் நம்பிக்கை - கொடுத்தாலும் சரியே. ஏனெனில் நம்பிக்கையற்றவன்  வாழும் முயற்சிகளை கைவிடுகிறான். மேலும் தான் கைவிடப்பட்டவனாக உணர்ந்து தன் முயற்சிகளை கைவிடும் போது தன் எதிர்காலம் இருண்டுவிட்டது  என்ற அச்சத்திலேயே உயிர் விடத் துணிகிறான். இது கொடுமையல்லவா?


பீர்பால் கதைகள் ஒன்றில்  ஒருமுறை அரசன் ஒரு சலவைத் தொழிலளியை கழுத்தளவு நீரில் ஒரு இரவு முழுவதும் நிற்கவேண்டும் என்று பணித்தானாம். மறுநாள் அந்தத் தொழிலாளியை இரவு முழுதும் குளிர் நீரில் எவ்வாறு உன்னால் இருக்க முடிந்தது என விசாரித்தபோது அவன், ‘ அய்யா, தூரத்தே அரண்மனையிலிருந்து வந்த விளக்கின் வெளிச்சத்தை கவனித்தபடியே இருந்ததனால் எனக்கு குளிர் தெரியவில்லை’ என்றானாம்.  அந்த விளக்கின் ஒளி அவனுக்கு வெப்பத்தைத் தரவில்லையானாலும்  கொடிய குளிரின் இரவைக் கழிக்க  அவனுக்கு நம்பிக்கையைத் தந்தது.


இதைப் போலவே ஆழ்ந்த காதலுணர்வு கொண்ட சிலருக்கு தங்கள் காதலியின் முகம் மிகுந்த நம்பிக்கையைக் கொடுத்து வாழ்வின் கடினமான பொழுதுகளை கடக்க உதவும். இதற்கு காதல் கை கூட வேண்டுமென்பதும் இல்லை , காதலி அருகில் இருக்க வேண்டும் என்பதும் இல்லை.  அவன் மனதில் பதிந்த அவளது தீர்க்கமான பார்வையும்,  மகிழ்வான சிரித்த முகமும் மட்டுமே போதும்.  இதுதான் உண்மையும் கூட. சில கடுமையான நேரங்களில்  தங்கள் காதலியின்   மென்மையான வருடலை ஆறுதலோடு  உணரக்கூட முடியும் இவர்களால்.   இவர்களது வாழ்வின் ஆதாரமே இவர்களது காதலுணர்வு தரும் நம்பிக்கைதான் என்றால் அது மிகையாகாது.   இத்தகைய நம்பிக்கை எக்காலத்தும் இவர்களை மகிழ்வுடன் வைத்திருக்கும்.
இதைப் போலத்தான் மற்ற நம்பிக்கைகளும். நம்பிக்கைகள் நாம் வாழ்வை மகிழ்வுடன் கடக்க உதவும்போது அவைகள் வாழ்வின் அச்சாணியாகவும் பங்காற்றுகிறது. நம் மக்களின் மீது நாம் வைக்கும் நம்பிக்கை, மக்கள் பிற்காலத்தில் உதவாது போயினும் மற்றவர் மீது நாம் வைக்கும் நம்பிக்கை, மற்றவர் உதவாது போயினும் யாரும் பார்த்திராத இறையின் மீது நாம் வைக்கும் நம்பிக்கை, இதுவெல்லாம் தவறிய போதும் மறு பிறவியின் மீது நாம் வைக்கும் நம்பிக்கை….


நம்பிக்கையில் நம்பகத்தன்மை இருப்பினும் அல்லது நம்பகத்தன்மை இல்லாவிடினும் அது நம் வாழ்வை மகிழ்வுடன் கடத்த உதவும் தருணத்தில் அவைகள் கைக்கொள்ளப் படவேண்டியதே.  Because it delivers.


மேலும் பேசுவோம்.


அன்பன்,

வேதாந்தி.

Friday, October 22, 2010

தனிமனிதனின் மனப்போக்கை விட ஒரு கூட்டத்தின் மனப்போக்கு விபரீதமானதா?

22.10.10
தனிமனிதனின் மனப்போக்கை விட ஒரு கூட்டத்தின் மனப்போக்கு விபரீதமானதா?தனி மனிதனின் மனப்போக்கே கூட சில சமயங்களில் காரண காரியங்களுக்கு செவி சாய்ப்பதில்லை. இப்படி இருக்கையில் ஒரு கூட்டத்தின் மனப்போக்கானது காரண காரியங்களுக்கோ அல்லது மற்றைய விதி முறைகளுக்கோ மதிப்பளிக்கும்  என  நினைப்பது  நிச்சயமாய் உண்மைக்கு புறம்பான ஒன்றாகும்.


கூட்டத்தின் மனப்போக்கு என்பது யாரையேனும் எதற்கேனும் பலி கொடுக்க அலையும் பூசாரியைப் போன்றது. இந்த  Crowd mentality  யை நடத்துவது யார்? அல்லது எது? என்பது போன்ற கேள்விகளை   கேட்கவோ ஏன் நினைத்துக்  கூட பார்க்கவோ யாரும் முனைவதில்லை. சற்றே உற்றுக் கவனித்தால் அதன் போக்கு நீரின் போக்கைப் போல ஏதேனும் ஒரு இலக்கினை குறிவைத்துப் பாய்வது புரியும். ஆனால் அதற்கு மூளையாக இருந்து யார் வழி நடத்துகிறார்கள் என்பது சட்டென விளங்காது.கூட்டம் நல்லதற்கும் சேருகிறது மற்றதற்கும் சேருகிறது. நல்லதற்கு அல்லது ஒரு சமநிலையான எண்ணத்தோடு சேரும் கூட்டமென்றால் ஏறக்குறைய ஒரு மட்டைப் பந்தாட்டத்திற்கான ரசிகர் கூட்டத்தினை ஒத்திருக்கும். ஆனால் இந்தக் கூட்டத்திலும் எல்லோரது மனதிலும் ஒரு வெடிபொருள் ஒரு ஒற்றை நெருப்புப் பொறிக்காக காத்திருக்கும். பல விளையாட்டு மைதானங்கள் பொர்க்களமாக மாறிய சம்பவங்களுண்டு. தங்களுடைய முந்தைய நாள் கதாநாயகனையே வில்லனாக்கி அவரது உருவ பொம்மையை எரித்த சம்பவங்களும் உண்டு.


இந்த கூட்டங்களை திசை மாற்றி வெறியேற்றுவது யார்? யாருக்கும் தெரியாது. ஆனால் இந்தக் கூட்டத்தில் உள்ளவர்களே தங்களது தனிப்பட்ட மனப்போக்கு இது வல்ல என்று தனியே இருக்கும்போது  ஒத்துக் கொள்வர்.  இப்படிப்பட்ட சுயமாய் சிந்தனை கொண்ட மனப்போக்கு  கூட்டத்துடன் சேரும்போது மறைந்து போகிறது.தனி மனிதர்களை காரணம் இன்றி அல்லது கருப்பர்கள், சூனியக்காரி என்ற  பொருந்தாக் காரணங்களுக்காக பலரை தேடிப் பிடித்துக் கொண்றிருக்கிறது கூட்டம். இதைத் தான்  witch hunting  என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.  நம்மூரிலும் கூட மந்திரவாதி அல்லது சூனியக்காரி என்று பல பிச்சைக்காரர்கள் கூட்டத்தின் மனப்போக்கிற்கு   பலியாக்கப் பட்டிருக்கின்றனர்.1978ம் வருடம் நவம்பர் மாதம் 18ம் தேதி அமெரிக்காவிலுள்ள ஜோன்ஸ் டவுன் என்ற இடத்தில் கூடிய 900 பேரை   ரெவரண்ட் ஜிம் ஜோன்ஸ் என்பவர்   தற்கொலைக்குத் தூண்டியதில் அனைவரும்  கூட்டமாக சயனைடு அருந்தி சாவை ஏற்றுக் கொண்டனர். மனிதர்கள் மட்டுமல்ல விலங்கினங்களும் இந்த கூட்ட மனோபாவத்திற்கு இரையாகின்றன.  சில வருடங்களுக்கு முன்னர் கூட்டம் கூட்டமாய் கரை ஒதுங்கிய டால்பின்கள் மற்றும் திமிங்கலங்களை உதாரணமாகச் சொல்லலாம். இந்த விலங்குகளை மீட்புப் படையினர் மீட்டு நடுக்கடலில் விட்டு வந்தபோதும் இவைகள் மறுபடியும் கரைநோக்கி வந்து சாவைத் தேடிக்கொண்டனவாம்.கூட்ட நிலையில் நம்மில் இருந்து வெளிப்படும்நமது தனிப்பட்ட மனப்போக்கு ஒத்துக் கொள்ளமுடியாத செயல்களுக்கு அல்லது கூட்டத்தினரின் போக்குக்கு மறுப்புதெரிவிக்கவோ இயலாத நமது நிலைக்கு  ஒரு வகையில் பார்த்தால் கூட்டத்தில் நமக்கு கிடைக்கும் ‘யாரோ’ என்கிற அனாமதேய அடையாளம் - Anonymous Identity - கூட காரணமாக இருக்கலாம்.  ஏனெனில் இந்த அனாமதேய அடையாளம் நமது செயல்களுக்கு நம்மை பொறுப்பேற்க கட்டாயப் படுத்துவதில்லை. எனவெ நமது மனம் குற்ற உணர்வுக்கு ஆட்படுவதில்லை. இது ஒரு வகையான ஒரு  தப்பித்தல் முயற்சியே.
பொதுவாகவே நாம் கூட்டமாக இருக்கையில் கூட்டத்தினரின் பாங்கிற்கு , அது ஏற்புடையதோ அல்லவோ , ஒத்துப் போகிறோம்.  இந்த முடிவுகள் நாம் தனியே இருக்கையில் மாறலாம்.  ஒரு பரிசோதனையின் போது, மின் தூக்கியில் இருக்கும் மனிதர் தன்னுடன் இருக்கும் கூட்டத்தின் பாங்கிற்கு ஒத்துப்போவதை காண்டனர். இதை விளக்கும் காணொளி இதோ.  கூட்டம் பார்க்கும் திசையே நோக்கியே தனி மனிதர் திரும்புவதையும், கூட்டத்திலிருப்பவர்கள் தன் தொப்பியை எடுத்துப் போடும்போது அதே செயல்களை தானும் செய்வதையும் கவனியுங்கள். எனவேதான் ஒரு தேர்ந்த தலைவன் ஒரு கூட்டத்தை எளிதில் கவர்கிறான். சிலநேரங்களில் எதிராகவும் அணி சேர்கின்றனர். இங்கு கூட்டமாக இருப்பது அல்லது அணியாக இருப்பதுதான் எல்லோர்க்கும் எளிதான செயலாக இருக்கிறது.


இந்த கூட்ட மனோபாவத்தை சரியாகப் புரிந்து கொண்டவர்கள் இதை  வைத்து வியாபார உத்தியை உருவாக்கி பணம் பண்ணுகின்றனர். சமீபத்தில் வெளியான ‘எந்திரன்’ பட வெளியீட்டிற்காக அதன் தயாரிப்பாளர்கள் கையாண்டது ஏறக்குறைய இதைப் போன்றதே. முதலில் தங்களுக்குச் சாதகமான கூட்ட மனப்போக்கை அவர்களே உருவாக்கி நமது சுய மனோபாவம் அந்த கூட்ட மனோபாவத்தை மறுப்பின்றி ஏற்றுக் கொள்ளச் செய்துவிட்டனர். இந்த வியாபார உத்தி மற்ற துறைகளிலும் கையாளுகின்றனர்.


சமீபத்தில் உலவிய தங்கைக்கு பச்சைப் புடவை வழங்க வேண்டுமென்ற சம்பிரதாயம் மற்றும் இன்னமும் நடக்கும் அட்சயதிருதைக்கு தங்கம் வாங்கவேண்டுமென்ற வழக்கம்  - இப்போது அதை பிளாட்டினமாக உயர்த்தி நகை வியாபாரிகள் வியாபாரத்தை நடத்துவதையும் கூட இந்த  கூட்ட மனப்போக்கை வியாபார உத்திக்காக   பயன்படுத்துவதற்கு   உதாரணமாகச் சொல்லலாம்.


கூட்டத்துடன் இருந்தாலும், தனியே இருந்தாலும் நாம் நமது தேவைகளை உணர்ந்து சமுதாயப் பொறுப்புடன் அறிவு சார்ந்த முடிவுகளையே எடுக்க வேண்டு.ம்.

கூட்ட மனோபாவம் பொறுப்பற்றது மற்றும் ஆபத்தானது என்பதை உணர்வோம்.

இன்னமும் பேசுவோம்.

அன்பன்

வேதாந்தி.

Wednesday, October 20, 2010

வாழ்வை சிதைக்கும் ஒட்டுண்ணிகள் நட்பாகுமா?

20.10.10
வாழ்வை சிதைக்கும் ஒட்டுண்ணிகள் நட்பாகுமா?

Toxoplasma


நட்பு நிச்சயமாக நமக்கு வாழக் கற்றுக் கொடுக்கிறது. இது மட்டுமல்ல பகிர்தல் மற்றும் ஒரு சில முக்கியமான சமுதாய நெறிமுறைகளின் முக்கியத்துவத்தையும் நமக்குச் சொல்லிக் கொடுத்து நம்மை சமுதாயத்தில் நிறைவான பங்களிப்புச் செய்யும் ஒரு மனிதராகவும் நிலை நிறுத்துகிறதென்பதில் சந்தேகமில்லை.


ஆனால் நட்பென்ற பெயரில் சில சுயநலமிகள் ஒருவரை அண்டி தங்களது தேவையையும் பூர்த்தி செய்து கொண்டு சமயம் வரும் போது அண்டியவரது வாழ்வை கெடுத்துப் போடுவதில் சிறிதும் தயக்கம் காட்டுவதில்லை.  இது உயிரினங்களுக்கே புதிதான ஒன்றல்ல.


திருமதி. ஜானகி லெனின் The Hindu நாளிதழில் எழுதிவரும்  My Husband and other Animals  என்ற பகுதியில்  ‘ The great brain robbery’ ( The Hindu, Saturday, October 16, 2010. Chennai Metro Plus page 15 ) என்ற தலைப்பில் சொல்லியிருக்கும் ஒட்டுண்ணிகளைப் பற்றிய செய்தியானது கவனிக்கத்தக்கதாகும். இதில்  முக்கியமாக இவர் சொல்லியிருக்கும்  Toxoplasma என்கிற ஒட்டுண்ணியைப் பற்றியது.
Toxoplasma மலேரியா நோயை உண்டாக்கக் கூடிய Plasmodium என்கிற ஒட்டுண்ணி  இனத்தைச் சேர்ந்தது.   இது தாக்குவது எலிகளைத்தான் என்றாலும்  இனப்பெருக்கம் செய்யும் போது பூனைகளைத் தாக்கி அதனுள் இனப் பெருக்கம் செய்யும். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் இந்த ஒட்டுண்ணி இனப்பெருக்கம் செய்யத் தயாராகும் போது, தான் ஒட்டுண்ணியாக இருக்கும் எலியின் மூளையைத் தாக்கி பயத்தினை உணரும் மூளை நியுரான்களை சிதைத்து விடும்.  பூனையின் வாடையைக் கண்டாலே தெறிக்க ஓடும் எலி இதற்குப் பிறகு பூனையின் முகத்தை முகர்ந்து பார்த்து தன் வாயால் நெருடுமாம்.  இதில் இன்னுமொரு வேடிக்கை என்னவென்றால் இந்த மூளை நியுரான்களின் சிதைவிற்குப் பிறகு எலிகளுக்கு பூனையின் வாடை பாலுணர்வைத் தூண்டி கிறங்கப் பன்னுவதாலேயே இந்த எலிகள் பூனையை முகர்ந்து அதன் வாயில் நெருடி தன் இறப்பைத் தேடிக் கொள்ளுமாம். இந்த வாய் நெருடலில்  Toxoplasma  எலியிலிருந்து பூனையின் மூக்கிற்குள் நுழைந்து    அதன் உடலுக்குள்  புகுந்து இனப்பெருக்கம் செய்ய ஆரம்பிக்குமாம்.
.இந்த  Toxo  ஒட்டுண்ணி மனிதரையும் தாக்குமாம். மனிதர்களை தாக்கி அவர்களை பண்பை இழக்கச் செய்வதோடல்லாமல் அவர்களை வெறிகொள்ளச் செய்யுமென்கிறனர்.


நான் இன்று சொல்லப்போவது இந்த Toxoplasma வைப் போலவே நம்மிடையே இருக்கும் சில நட்புகள்   பயப்பட வேண்டியவைகளுக்கு பயப்படாமலும், மரியாதை செலுத்த வேண்டியவைகளுக்கு மரியாதை செலுத்தாமலும் இருக்கும்படிக்கு நம்மை  உசுப்பேற்றி நிலைமறக்கச் செய்து ஏவிவிட்டு தன் சுயநலத்தினை பூர்த்தி செய்து கொள்ளும். இதை நாம் அறிவோமா என்பதைப் பற்றித்தான்.


பெரும்பாலும் தற்போதைய நட்பு என்பது வழிதவறும் போது  நண்பனை இடித்துரைத்து நல்வழிப்படுத்தும் நட்பாக இருப்பது கிடையாது. ஏதோ நமது  உயிர், நண்பனுக்காக விடத்தான்  என்று சிலரும்; நண்பன் எதைச் செய்தாலும் அதை ஆமோதித்து அதற்குத் தேவையான உதவிகளைச் செய்வதும் தான் நட்பின் கடமை  எனச் சிலரும்  நினக்கின்றனர். சில நட்புகள் மிகுந்த சந்தர்ப்பவாதிகளாக இருந்து நம்மிடம் காரியம் சாதித்துக் கொண்டு  நம்மை படுகுழியில் தள்ளி விடுகின்றனர்.இது சமீபத்தில் நடந்தது. எங்கள் குடியிருப்புக்கு அருகில் உள்ள குடியிருப்பில் குடியிருப்போரிடையே ஒற்றுமை கிடையாது. ஒரு வீட்டுக்காரர் வேண்டுமென்றே தனது அடுக்கு மாடி வீட்டை திருமணமாகாத விடலைப் பிள்ளைகளுக்கு வாடகைக்கு விட்டிருந்தார். அந்த இளைஞர்கள்  இரவில் தினமும் குடிதான். இருந்த நான்கு பேருடன் அவர்களது நண்பர்கள் என இன்னும் இருவர். இந்த நண்பர்களுக்கு வீடு அருகில் இருந்தாலும் குடிக்காக இங்கு வந்து தங்கியும் போதை தெளியும் போது வீட்டிற்குத் திரும்புவதுமாக இருந்தனர்.  சிலர் IT யில் வேலை. சிலர் ஏதோ ஒரு பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளர் வேலையில். தற்காலிக வேலை போலிருக்கிறது. ஆராய்ச்சிப் படிப்பிற்கு முயன்றுகொண்டிருந்தனர்.


ஒரு நாள் குடி போதை அதிகமாகி ஒரே ரகளை. குடித்தனக்காரர்கள் அத்துனை பேரும் முகம் சுளித்தனர். பலர் வீட்டில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் இளம் பெண்கள் வேறு. குடித்த இளைஞர்கள் வெளியே வந்து அரை குறை ஆடையுடன் ஆட்டம் போடத்தொடங்க, அருகிலிருந்த ஒருவர் 100 க்கு தொலை பேசி, காவல் துறையில் புகார் செய்துவிட்டார். சில நிமிடங்களில் மூன்று வாகனங்களில் வந்த காவல் துறையினர், வாந்தி  எடுத்து வீட்டை சாக்கடையாக்கி புரண்டுகொண்டிருந்த அத்துனை பேரையும் பிடரியில் பிடித்துத் தள்ளிக்கொண்டு போய்விட்டனர்.


நண்பர் அழைக்கவே நானும் காவல் நிலையம் சென்றிருந்தேன்.  இளைஞர்களின் நலன் கருதி அவர்கள் மேல் FIR பதிவு செய்யவேண்டாமே என்றேன். ஆனால் அந்த குடியிருப்பில் இருப்போர் மிகவும் வெறுத்துப் போயிருந்ததால் FIR பதிவு செய்ய வேண்டுமென்றனர். இளைஞர்களை வண்டியிலேற்றி பொதுமருத்துவமனைக்கு கொண்டு சென்று  Blood level alcohol பரிசோதனைக்குப் பின்னர் FIR பதிவுசெய்ய முனைந்த  காவல் துறையினரோ எங்களது முடிவுக்காக காத்திருந்தனர்.
நான் அவர்களை சமாதானப் படுத்த பெரும் பாடு பட்டேன். வெகுநெர பேச்சிற்குப் பிறகு இளைஞர்களிடம் வீட்டைக் காலி செய்துவிட எழுதி வாங்கிக்கொண்டு அவர்களை விட்டு விடலாம் என முடிவெடுத்தோம். இதை அந்த  வீட்டை வாடகைக்கு எடுத்திருக்கும்இளைஞர்களிடம் சொன்னதும் அவர்களுடைய நண்பர்களாகிய இருவர் கடுமையாக மறுத்தனர். ‘ஆகா.. நம்முடைய உரிமைகள் என்னாவது.. நாம் எத்துனை தூரம் போனாலும் பார்த்துக் கொள்ளலாம்.. எழுதிக் கொடுக்காதீர்கள் ’ என கடுமையாக தடுத்தனர். தடுத்தவர்களுக்கு வீடு அருகிலேயே இருந்தது. அவர்கள் பெற்றோருடன் தான் வசித்து வந்தனர். ஆனாலும் வீடு போய்விட்டால் தங்களுக்கு கிடைக்கும் குடி சுகம் போய்விடுமென்ற தன்னலத்தால் இந்த ஆட்செபனை மற்றும் தவறான வழிகாட்டுதல். இதுதான் நட்பா?


எனக்கு அந்த இளைஞர்களில் இருவர் வெளி நாட்டில் ஆராய்ச்சிப் படிப்பிற்காக விண்ணப்பித்து முடிவுக்கு  காத்திருக்கிறார்கள் என்று தெரியுமாதலால் நான் அவர்களிடம் விளக்கினேன். ‘ உனது நண்பர்கள் தங்கள் சுய நலத்திற்காக உன்னை உசுப்பேற்றுகிறார்கள். உங்கள் மீது FIR பதிந்துவிட்டால் நாளை வெளிநாட்டு வாய்ப்பு வந்தாலும் உங்களுக்கு  விசா கிடைப்பது கடினம் என்றேன். சற்று யோசித்தவர்கள் நண்பர்களது உசுப்பேற்றலை புறக்கணித்துவிட்டு நாங்கள் கேட்டபடி  எழுதிக் கொடுத்து  பின்னர்  காவல் துறையால் வழக்கு பதியாமல் விடுபட்டனர். எழுதிக்  கொடுத்தவாரே சில நாட்களில் வீட்டையும் காலி செய்துவிட்டனர். இருவருக்கு ஜப்பான் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பிற்கு வாய்ப்பு கிடைத்தது. செல்லும்போது மறக்காமல் எனக்கு நன்றி சொல்லிவிட்டுச் சென்றனர்.


நட்பென்னும் ஒட்டுண்ணிகளை  அடையாளம் கண்டு தப்பித்த விடுதலை உணர்வு அவர்கள் முகத்தில் தெரிந்தது.


நம்மில் இன்னும் எத்துனை பேர் இந்த ஒட்டுண்ணி நட்பின் ஆபத்தினை அறிந்திருக்கிறோம்?


இன்னமும் பேசுவோம்.


அன்பன்,

வெதாந்தி.

Monday, October 18, 2010

கல்லடிக்கு கல்லடியும், சொல்லடிக்கு சொல்லடியும் சரியான தீர்வாகுமா?

18.10.10
கல்லடிக்கு கல்லடியும், சொல்லடிக்கு சொல்லடியும் சரியான தீர்வாகுமா?இன்று நாம் பேசப்போவது   An eny for an eye , a tooth for a tooth  என்பதைப்போல்  கல்லடிக்கு கல்லடியும் சொல்லடிக்கு சொல்லடியும் சரி என்கிற சித்தாந்தம் நம்மை சரியான வழியில் இட்டுச் செல்லுமா என்பதைப் பற்றித்தான்.  Revenge எனப்படும் பழிதீர்த்துக் கொள்ளுதல் நம்மையே திரும்பி வந்து தாக்கும் பூமராங்க் போன்றது.


An eye for an eye makes the whole world blind என்றும் சொல்வார்கள். இது மட்டுமல்ல இந்தப் பழி உணர்ச்சி நமக்குள் தீயாய் எரிந்து நம்மை, நமது நிம்மதியை கொஞ்சம் கொஞ்சமாக கொண்று போடும். இப்போது இதை இரண்டு நோக்கில் பார்க்கலாம். ஒன்று பழிதீர்த்துக் கொள்வதால் நாம் நினைத்துள்ள நமக்கு இழைக்கப் பட்ட அநீதி திரும்ப்பப் பெற்று நீதி நிலைப் படுகிறதா? Whether the wrong doing of others are undone and the earlier state is restored  by our vengence?


அடுத்து மேற்கேட்ட வினாவிற்கு எவ்வகை பதிலானாலும், இந்த வன்மம் அல்லது பழிதீர்த்தலால்  நமக்கு நன்மை விளைகிறதா?  அப்படியெனில் அந்த நன்மை நமக்கு இழைக்கப் பட்ட தீங்கினுக்குச் சமமானதா அல்லது அதனை விட மேலானதா?


பழிதீர்க்கும் உணர்வானது நமக்கு பிறரால் தீங்கு உண்டானது என நாம் நம்புவதால் நமக்குள் எழும் எதிர்மறை உணர்வு. பொறாமை எனும் காழ்ப்புணர்ச்சியைப் பொலவே இதுவும் ஒரு கொடும் சிந்தனைக் கொல்லி. நம்மை சடுதியில் தீய வழிக்கு இட்டுச் செல்வது.  இது குறித்துப் பேசும்முன் நாம் அறிய வேண்டியது, ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்பது. இது சத்தியம், வெறும் மொழியல்ல.எந்த நிகழ்வு நமக்கு கேடு விளைத்ததோ அந்த நிகழ்வில் நம்முடைய பங்கை நாம் அலசிப் பார்க்க வேண்டும். அது இதைப் பற்றிய கூடுதலானதொரு பார்வையை நமக்கு கொடுக்கும்.


ஒருவர் நம்மிடம் உள்ள பொருட்களை அபகரிப்பதனாலோ அல்லது நமது வேலையைப் பறிப்பதனாலோ அல்லது இது போன்ற வோறொன்றாலோ நமக்குத் தீங்கிழைத்தாரெனில் நாம் இத்தீங்கை விலக்கி நமது நிலையை மீளப் பெறும் வாய்ப்புள்ளது. அப்படி நமக்கு நமது நிலை மீளப் பெற்று விட்டால் நமக்கு நீதி கிடைத்ததென்று பொருள். இதற்குப் பின்னும் இந்த நிகழ்வுக்கு காரணமாக நாம் கருதுவோரது மேல் நாம் வைத்திருக்கும் வஞ்சம் சரியானதல்ல. அது மட்டுமல்ல. இதைக் காரணம் காட்டி நாம் எப்போதாகிலும் பின்னர் அவருக்கு இதைப் போன்றதொரு செயலைச் செய்வதும் நீதிக்குகந்ததல்ல.

 
அடுத்து நமக்கு விளைந்த தீமை மேற்சொன்ன வகையிலல்லாது    அவமதிப்பு அல்லது உறவின் இழுக்கு போன்றதொரு   உணர்வு சார்ந்த வகையாக இருப்பின் நம்மால் முன்னர் சொன்னது போல் அநீதிக்கு முன்னிருந்த நிலையை மீட்க முடியாது. அல்லது உயிரிழப்பு போன்றதொரு பெரும் இழப்பாக இருப்பினும் நம்மால் அந்த இழப்பை மீட்க முடியாது.  இழப்பிலிருந்து சில சமயங்களில் மீளக்கூட முடியாது.  இழப்பு இழப்புதான். Damage done is done.  இந்த நிலையில் என்ன செய்வது?இந்த நிலையிலும் கூட நாம் இதே இழப்பை நமக்கு ஏற்படுத்தியவருக்கு எதிராகச் செய்வோமானால் அது மற்றொரு அநீதியாகுமே தவிர நீதியாகாது.  இது ஏறக்குறைய சட்டத்திற்கு புறம்பான வன்முறையாளர்களிடையே (Outlaw Gangsters) உலவும் கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்ற கோட்பாட்டைத் தான் ஒத்திருக்கும். இருபுறமும் இழப்புத்தான் மிஞ்சும். இது ஒரு வகையான விபரீத சிந்தனைகளை நமக்குள் விதைத்து நம்மை ஒரு மன நோயாளியாக்குவது நிச்சயம்.


அப்போது சட்டம் விதிக்கும் தண்டனை? பஸ் எரிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு சட்டம் விதித்த தூக்கு தண்டனை? அது எவ்வகையில் சரி?


நான் முன் சொன்னது வேறு இது வேறு. சட்டம் குற்றவாளிகளுக்கு தண்டனை விதிப்பது சமூக விரோதிகளிடையே சட்டம் பற்றிய அச்ச உணர்வு ஏற்படுத்தி குற்றச் செயல்களை குறைத்து அதனால் சமூகப் பாதுகாப்பினை அதிகரிக்கச் செய்வதாகும். சட்டக் காப்பாளர்களுக்கு சமூகத்தைக் காக்கும் பொறுப்பும் உண்டு. மேலும் இத்தகைய தண்டனைகளை கொடுப்பதால் யாருக்கும் குற்ற உணர்வு எழாது.  ஆனால் ஒரு தனி மனிதன் இதே சட்டத்தைக் கையிலெடுத்துக் கொண்டு இதே தண்டனைகளைத் தருவானானால் அவனது மனம் குற்ற உணர்வால் மிக விரைவில் சிதைவுண்டு போகும்.அன்னை தெரசாவின் வாழ்வில் நடந்த  என் நெஞ்சிலிருந்து நீங்காத ஒரு நிகழ்வு. ஒருமுறை அன்னை தெரசா ஒரு தனவானை ஏழைச் சிறுவர்களின் பொருட்டு நன்கொடை வேண்டி  பார்க்கச் சென்றார்.  அந்த தனவானோ அன்னையின் முகத்தில் காரி உமிழ்ந்தானாம். தனது முகத்தில் வழிந்த எச்சிலை துடைத்துக் கொண்டே, ‘ எனக்குச் சேரவேண்டியதை கொடுத்து விட்டீர். ஏழைப் பிள்ளைகளுக்கு நான் வேண்டிய கொடையைத்  தாருங்கள்..’ என்று கையேந்தினாராம்.


நம் நெஞ்சில் சேமித்து வைக்கும் வஞ்சம் கொடும் நஞ்சைப் போன்றது. அது நமக்கு பெருந்தீங்கு விளைக்கும். தவறிழைத்தோரை  மன்னித்தலும் மறத்தலும் தவறிழைத்தோருக்கல்ல மாறாக நமக்கே நன்மை பயக்கக் கூடியது. நமது உள்ளத்தையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சரியான மருந்து அதுவே.


எனவே அய்யன் சொல்லியதைப் போல இன்னா செய்தாரை ஒருத்தல் பொருட்டு அவர் நாணும்படியான  நன்னயம் செய்து விடுவோம். நமது நலனையும் சமூகத்தின் நலனையும் காப்போம்.

இன்னமும் பேசுவோம்.

அன்பன்,

வேதாந்தி.

Friday, October 15, 2010

காதலை விஞ்சியதா காமம்?

15.10.10
காதலை விஞ்சியதா காமம்?

French sculptor Auguste Rhodin's 'The Kiss ' in Marble

காதல் என்பது வேறு காமம் என்பது வேறு.  காமம் எல்லா உயிரிகளுக்கும் பொதுவானதொன்று. அதுதான் இனப்பெருக்கத்திற்கான உடல் சார்ந்த  அடிப்படை உந்துதல். Sexual desire is the Basic instinct of all life for their procreation.  காதல்,  உயர்ந்த உயிரியான மனிதன் மட்டுமே மனம் சார்ந்து உணரக்கூடிய ஒரு உணர்வு. ஒரு சில உயிரிகள் ஒரே இணையோடு வாழ்ந்தாலும் கூட அவைகள் காதலுணர்வு கொண்டவைகள் எனச் சொல்ல முடியாது. அவைகளின் தனித்த ஈர்ப்பு காமத்தின் இன்னொரு மெல்லிய பரிமாணமாகக் கூட இருக்கலாம்.
மற்ற உயிரினங்களின் காமம் காதல் சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை.  ஆனால் நாம் கொள்ளும் காமம் காதலுணர்வின் உச்சத்தில்  முடியும் அழகான காமம். மேற்சொன்ன காமம்  காதலுணர்வின் உச்சகட்ட படையலாக தன் எதிர்ப்  பாலினர்க்கு தன்னால் அளிக்கப்படும்  அய்ம்புலனாலும் உணர்ந்து உயிரே போற்றக்கூடிய ஒரு மாபெரும் பரிசுப்  பொருளாக  அமைகிறது.  ஒருவரை ஒருவர் காயப் படுத்தாது ஒருவரில் ஒருவர் இணைந்து ஒருவர் தன்னை மற்றவருக்கு அர்ப்பணித்து அந்த அர்ப்பணிப்பில் தன்னை இழந்து சுயத்தைக் கொல்லுவதே இந்த காதலுணர்வால் விளையும் உயர்ந்த காமத்தின் சிறப்பு. அதனால் தான் இத்தகையதை ‘மலரினும் மெல்லிது காமம்..’ என்கிறார் அய்யன். மேலும் இத்தகைய அன்பு- காதலுணர்வு - இல்லாத இல்லறம் வரண்ட பாலைக்குச் சமம் என்றும் உறுதிபடச் சொல்கிறார்.நம்மில் இந்தக் காதலுணர்வின்றி கிளம்பும் காமமானது வெறும் உடல் சார்ந்த ஒரு அழுத்தத்தின் வெளிப்பாடே. இதைத்தான் அய்யன் வறண்ட பாலைக்கு ஒப்பிடுகிறார். இது எதிர் பாலினரின் ஒப்புதலையோ அல்லது எதிர் பாலினரின் காதலுணர்வையோ மதிப்பதில்லை. தனது சுய நலனையும் இன்பத்தையும் மட்டுமே குறியாகக் கொண்டு வெளியாவது. இது எதிர் பாலினரை மிகக் கொடுமைக்குள்ளாக்கும் வாய்ப்புண்டு.   இதையே மற்ற விலங்கினங்கள் வெளிப்படுத்துகின்றன. மேலும் மற்ற விலங்கினங்களின் இந்த காம வெளிப்பாட்டோடு அதன் முக்கிய நோக்கான உயிரினப் பெருக்கமும் இணைந்துள்ளது. வெறும் காமுறுதலை விலங்கினங்கள் மட்டுமே கொள்ளும் என்பதால் நாம் வெறும் காமுறுதலைத் தவிர்த்து உயர்ந்த காதலுணர்வால் விளையும் காமுறுதலையே ஏற்கவேண்டும். இல்லையெனில் நமது சந்ததிகள் அன்பால் விளைந்ததாயிராமல் வரண்ட பாலையைப் போல் கொடுமையான வெறுப்பால் விளைந்ததாயிருக்கும். இந்நிலை மிகவும் கொடுமையானது. நமது வாழ்வின் மேன்மையை சிதைக்க வல்லது.இதில் இன்னொன்றும் கவனிக்கத்தக்கது. காதலுணர்வால் விளையும் காமம் மட்டுமே - அதாவது  எதிர்  பாலினரை வருத்தாது அவரது இணக்கத்துடன்  விளையும்  காமம் மட்டுமே நான் முன்பதிவில் பேரின்பத்துடன் ஒப்பிட்ட சிற்றின்பமாகும் (காதலுணர்வு போற்றத் தகுந்ததா?.) இத்துணை அழகுடன் விளையும் சிற்றின்பத்தில் மட்டுமே  ஒருவன் ‘தன்னை ‘ இழந்து, சுயத்தை இழந்து, தன் இழப்பில் இன்பமும் காண்கிறான். இந்த எல்லாவற்றையும் இழந்த ‘நிர்வாணம்’ இறையுடன் கலந்தால் விளையும் ‘நிர்வாணத்தின்’ முன்னோடி என நிச்சயமாய்ச் சொல்லலாம். இத்தகைய ‘ நிர்வாணம்’ இல்லற வாசியான ஒருவன் இல்லறத்தில் பதப்பட்டு இறையுடன் கலக்க அவனைத் தயார் செய்யும் ஒன்றாகும்.


மனம் சார்ந்த புரிதல்கள் காதல்.   உடல் சார்ந்த அழுத்தம் காமம்.  அறிவு சார்ந்த முடிவுகளின் மேன்மை  நாம் நடத்தும் வாழ்க்கை.


நமது உணர்வுகளையும், நம்மைச் சார்ந்தோரது உணர்வுகளையும் சரியாகப் புரிந்து கொள்வோம். மேன்மை பட வாழ்வோம்.


மீண்டும் பேசுவோம்.

அன்பன்,

வேதாந்தி.

Wednesday, October 13, 2010

காதலுணர்வு போற்றத் தகுந்ததா?

13.10.10
காதலுணர்வு போற்றத் தகுந்ததா?அன்பின் மேம்பட்ட ஒரு பரிமாணமே காதலுணர்வு. அது மட்டுமல்ல இந்தக் காதலுணர்வு மனிதனுக்கு வாழக் கற்றுக் கொடுக்கிறது. எதையுமே எடுத்துப் பழக்கப் பட்ட மனிதனை மற்றவருக்காக கொடுத்துப் பழக வைக்கிறது. இந்தக் காதலுணர்வால் சேரும்  எதிர் பாலினர் தங்கள் வாழ்வின் இறுதிவரை விட்டுக்கொடுத்து ஒருவர் மற்றவருக்காகவே வாழ பழகிக் கொள்கின்றனர். காதலுணர்வு கொடுக்கத்தூண்டுமே ஒழிய எடுக்கத்தூண்டாது. இது சுயநலத்தின் மரணத்தில்தான் தொடங்குகிறது. 

இது மட்டுமல்ல. ஒவ்வொருவருக்குள்ளும் ஆண் பெண் உணர்வுகள் உண்டு. இந்த உணர்வுகளை ஒருவர் கொள்ளும் காதலுணர்வுதான் நம்மிலிருந்து மேலே கொண்டு வருகிறது. இந்த இரு உணர்வுகளையும் சரியாக உணரத்தெரியாத உயிர்  முழுமையடைவதில்லை.  இதை முழுதாக  உணர்ந்து பூரணமடையவே மறுபாலினராக  அந்த உயிர் மறு பிறப்பு எடுக்கிறது என்றும் சிலர் கூறுவர்.  காதலுணர்வு கொள்ளும் ஒரு ஆண் மண்டியிட்டு தன் காதலியிடம் தன் காதலை மென்மையாகச் சொல்லத் தெரிந்து கொள்கிறான்.  காதலுணர்வு கொண்ட ஒரு பெண் தன் காதலனை மேம்படுத்த அவனை ஆட்கொள்ளுகிறாள். இந்த  பெண்ணின் அதீத ஆளுமையும்  ஆணின் மனம் நிறைந்த அடிபணிதலும் காதலுணர்வுக்கே உரிய ஒரு சிறப்பல்லவா?

காதலுணர்வு கொண்ட  சுயநலத்தைக் கொன்ற  மனிதன்  பண்படும் பாதையில் பயணிக்கத் தொடங்கிவிட்டான் என பொருள். இது அவனது வாழ்வின் ஒரு நல்ல ஆரம்பம். இந்தக் காதல் அவனது வாழ்வை செவ்வனே கடக்க அவனுக்கு ஒரு திசைகாட்டியாய் இருந்து அவனை, அவனது வாழ்வை மேம்படுத்தும். தன்னைப்போலவே தீராக் காதலுணர்வுடனுள்ள ஒரு வாழ்க்கைத் துணை அமைந்தால் இருவரும் கைகோர்த்து வாழ்க்கைப் பயணத்தினை தொடர்வது, தன் சந்ததிகளுக்கும் இந்தக் காதலுணர்வின் மேண்மை தெரிய தியாக உணர்வுடன் குடும்பத்தை நடத்திச் சென்று வாழ்ந்து இப்பிறவியைக் கடப்பது மிகுந்த நலமானதல்லவா?இங்கு நான் குறித்த எதிர் பாலினரின் காதல் முக்கியமானது. ஏனெனில் இந்த இணைதான் குடும்ப வாழ்வில் இணைந்து அன்பெனும் தியாக வழியில் தன்சுயநலத்தைக் கொண்று பிறவிப் பயனை அடைவர்.  நாம் மற்றவரிடம் காட்டும் ‘அன்பு’ மேன்மையைக் கொடுத்தாலும் இத்தகையதொரு உயர்ந்த மேன்மையைத் தராது. காதல் வேறு காமம் வேறு. இது பற்றி இன்னொரு  சமயத்தில் பேசுவோம்.


சிலர் குடும்ப வாழ்வைத் துறந்து துறவி வாழ்வை மேற்கொள்ளுவர்.  காதலுணர்வுதான் ஒருவனை மேம்படுத்துமெனில் துறவு மேற்கொண்ட  இவர்களது வாழ்வு மேம்பட்டதில்லையா?


இது நல்ல கேள்வி தான். ஆனால் இந்தத் துறவிகள் இறைவனைக் காதலிக்கின்றனர்.ராதையையும் கிருஷ்ணனையும் காதலர்களாக சித்தரித்தாலும் இதில் உள்ள உண்மை என்னவென்றால் ஆத்மா பரமாத்மாவை காதலுணர்வுடன் சுற்றிச் சுற்றி வருவதையே பூடகமாக சொல்கிறது. வள்ளலார் இறைவனை காதலனாகவும் தன்னை இறையின் காதலியாகவும் பாவித்து காதலுணர்வால் உருகி உருகி இறையோடு சேர்ந்து பேரின்பம் அடையும் நாளை எதிர்பார்த்து தன் நாட்களை  கடத்தினார். இதைப் போல எத்துனையோ  அடியார்கள் இறையை தன் காதலனாகவும், காதலியாகவும் எண்ணி எண்ணி காதலுணர்வுடன் தன் பிறவி மேம்பட வாழ்ந்திருக்கிறார்கள்.

நமது எதிர்பாலினரது காதலை விட மேற்சொன்ன இறைக் காதல் மிகுந்த மேன்மையுடையது. முன்னர் சொன்னது நமக்கு கொடுப்பது சிற்றின்பமென்றால் பின்னர் நமக்கு கொடுப்பது பேரின்பம். முன்னர் சொன்ன காதல் நம்மை மேம்படுத்தி வாழ்வில் இப்பிறவியைக் கடக்க உதவுமென்றால் பின்னர் சொன்னது நமக்கு பிறப்பறுத்து பேரின்ப வாழ்வைக் கொடுக்க வல்லது. இன்னமும் சொல்லப்போனால் நம்மை தேவர்களாக்கி இறையுடன் சேர்க்க வல்லது.

எனவே நம்மை மேம்படுத்தும் காதலுணர்வை புரிந்து அதைக் காத்து வளர்ப்போம் வாழ்வை மேம்பட்ட உயிரிகளாய் கடப்போம்.

வாழ்வு மேம்பட இன்னமும் பேசுவோம்.

அன்பன்,

வேதாந்தி.

Monday, October 11, 2010

பலவான் யார்?


11.10.10
பலவான் யார்?


நிச்சயமாக பலம் கொண்டவன்தான் பலவான். அப்படியிருக்க இந்தக் கேள்வி பலருக்கு அர்த்தமில்லாததாகத் தோன்றுவது இயற்கை.


தற்காலத்தில் பலவான்கள் தங்கள் பலத்தினை நிரூபித்தால்தான் தான் பலவான் என பலரும் ஒத்துக்கொள்வார்கள் எனும் மன நிலையில் உள்ளனர். இங்கு சற்று கவனிக்கவும். இந்தப் பலவானே, தான் பலவான் என்று பிறர் சொல்லவேண்டும் அல்லது நம்பவேண்டும் என எதிர்பார்ப்பது அவன் தன் பலத்தின் மீது கொண்ட அவநம்பிக்கையை அல்லவா காட்டுகிறது?


இது தான் மனதின் விளையாட்டு.


தான் பலவீனன் என்று பிறர் நினைத்து விடக்கூடாதென்றே பலர் பல காரியங்களை செய்கின்றனர். இந்தக் காரியங்கள் அவர்களது பலத்தைக் காட்டுவதற்கு பதிலாக அவர்களது பலவீனத்தின் மறு பிம்பமாகவே வெளிப்படுகிறது.


நிறை குடம் தளும்பாது என ஒரு பழமொழி உண்டு.  இது ஒருவகையில் உண்மையும் கூட.  குடம் குறையாக இருந்தால் தான் சத்தமெழுப்பிக் கொண்டிருக்கும். இது எல்லாவற்றிர்க்கும் பொருந்தும்.  அறிவு நிறைந்தவன் பேச்சைக் குறைத்துக் கொள்வான். பணம் பெற்றவன் ஆடம்பரத்தைக் குறைத்துக் கொள்வான். பலம் நிறைந்தவன் பலப் பிரயோகத்தைக் குறைத்துக் கொள்வான்.எனது சிறுவயதில் நான் கண்ட சம்பவம் ஒன்று இன்னமும் என் மனதில் பசுமையாக இருக்கிறது.


எங்கள் வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரர். அவருக்கு சினிமா மோகம் உண்டு. அப்போதெல்லாம் சினிமா என்றாலே சண்டை, குதிரையேற்றம், சிலம்பம் போன்றவைகளில் பரிச்சயம் இருக்கவேண்டும் என்ற நம்பிக்கை அதிகம். சாண்டோ சின்னப்பதேவர் கொடிகட்டி பறந்த காலம். இப்போது Arnold Swazzanager  போல அப்போது சாண்டோ பிரபலம். உடல் பலம் கொண்டோரையெல்லாம் சாண்டோ என அழைத்த காலம் அது. பக்கத்து வீட்டுக்காரர் சினிமா மோகத்தில் சாண்டோவாக பயிற்சி பெற்று படக் கம்பெனிகளுக்கு தருவதெற்கென்று பல கோணங்களில் தனது உடல் அழகையும் வலிமையையும் காட்டும்படிக்கு பல நிழற்படங்களை எடுத்து அதன் பிரதிகளை தனது வீட்டிலும் மாட்டி வைத்திருப்பார்.சிறுவயதுப் பையனான எனக்கு அந்தப் படங்களைப் பார்க்கும்போதே ஒரு இனம் புரியாத பயம் எழும். புடைத்துக் கொண்டிருக்கும் தசைகள் பயமுறுத்தும். அவரிடம் நெருங்கவே அச்சமாக இருக்கும். அவர் யாரிடமும் தேவைக்கு மேல் பேசி நான் பார்த்ததில்லை. ஆனால் அவரது மனைவியோ பெரும் சண்டைக்காரி. ஜக ஜக வென்று தெருச்சண்டையை இழுத்து வருவாள்.  தன் கணவனின் உடல் பலத்தைக் கண்டு அனைவரும் பயப்படுவர் என்றே இருந்தாள். பெரும்பாலோர் அவளிடம் சரிக்கு சரி சண்டைக்கு நின்றதும் கிடையாது.  நான் கூட அந்த மாமாவின் பலம் தான் மற்றவரை தள்ளி வைத்திருக்கிறது என்றிருந்தேன்.


அவர் கடவுள் மறுப்புக் கொள்கை கொண்ட ஒரு கட்சியில் முக்கியப் பதவியிலும் இருந்தார். அவருக்கு கட்சியின் பலமும் இருந்தது.  இத்தனையும் சேர்ந்து அவரை படத்தின் உச்ச கட்ட காட்சியில் சண்டையிடும் கதாநாயகனைப் போல பலத்தை ஏற்றிக் காட்டியது. நானும் அவரைப் பார்க்கும் போதெல்லாம் அவர் தனக்கு எதிராக வரும் மற்றவர்கள் மீது பாய்ந்து பாய்ந்து கைச்சண்டை போடுவார் அல்லது கம்பு சுழற்றுவார் என நம்பினேன். அப்படி ஒரு சண்டைக் காட்சிக்காக காத்திருந்தேன். எல்லாம் சினிமாவின் தாக்கம்.


அப்படி ஒரு நாளும் வந்தது.
அந்த மாமா எங்கள் தெருவிலிருந்த ஒரு கோவிலின் தர்மகர்த்தாக்களில் ஒருவராகவும் இருந்தார்.  ஒரு நாள் அந்தக் கோவிலில் கணக்கர் கணக்கு வழக்கில் கோளாறு செய்து வைக்க இவர் அந்தக் கணக்கர் மீது நடவடிக்கை எடுத்து விட்டார். உடனே அன்று மாலை அந்த கணக்கர் எல்லை மீறிய குடியின் போதையில் மாமாவின் வாசலில் நின்றுகொண்டு கூச்சலிடத் தொடங்கினார். வீட்டினுள் இருந்த நான் வெளியே வந்து நின்றுகொண்டேன். நிச்சயம் சண்டை உண்டு என்று நம்பினேன். கண்கள் விரியக் காத்திருந்தேன்.


குடிகாரன் தொண்டை கிழியக் கத்தினான். அவரை மிகக் கேவலமாகப் பேசினான். அவரது மனைவியையும் பேசினான். அவரது ஆண்மையைக் கேவலப் படுத்தினான். இது கேட்டு அந்த சண்டைக்கார மனைவி தானும் பதிலுக்கு கூச்சல் போட ஆரம்பித்தாள். சண்டை வலுக்க ஆரம்பித்தது. வேட்டியை இழுத்துக் கட்டிக்கொண்டு ஆவேசத்துடன் குடிகாரன் பொங்கினான். கடவுள் இல்லை என்று சொல்லும் கட்சியில் இருக்கும் உனக்கு கோவில் தர்ம கர்த்தாவாக இருக்க என்ன தகுதி இருக்கிறது என்று சீறினான். எனக்கே அப்போதுதான் இந்த முரண் விளங்கியது. ஒரு கட்டத்தில் மாமாவின் மனைவியான  சண்டைக்காரி அவனை கம்பெடுத்து அடிக்கப் போகையில் அதுவரை உள்ளிருந்த அந்த மாமா சட் டென வெளியே வந்து தன் சண்டைக்கார மனைவியை உள்ளிழுத்துச் சென்றார். அந்தச் சண்டைக்காரியின் கோபம் தன் கணவனின் மீதே திரும்பியது. அவளே தனது கணவரைக் கேவலமாகப் பேசி கூச்சலிட ஆரம்பித்து விட்டாள்.


பெரும் சண்டையை சினிமா பாணியில் எதிர் பார்த்த எனக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது. எனக்கு குழப்பமாகவும் இருந்தது. இத்துனை பலவானாக இருந்தும் ஏன் இந்த மாமா சண்டை போடவில்லை? நிறைய சண்டை முறைகளைக் கற்று சாண்டோவாக இருந்தும் இந்த பலமில்லாத ஒரு சாதாரண ஆளிடம் மொளனியாய் இருந்ததேன்? என பல குழப்பங்கள். பின்னாளில் ஒருமுறை அவரிடமே இதைக் கேட்டேன். சிரித்துக் கொண்டே என் கன்னத்தைத் தட்டிவிட்டு போய்விட்டார். அந்தக் குடிகாரன் மூன்று நாட்கள் கழித்து அவரது காலில் விழுந்து ‘மன்னிச்சுக்கோ தலைவரே..’ என்று கதறியழுதது தனிக்கதை.


இதில் ஞானம் பிறக்க எனக்கு வெகு காலமாயிற்று. நிறை குடம் தளும்பாது என்பதே அது. மேலும் தன் பலத்தினை கட்டுப்படுத்தும் பலம் கொண்டவனே பலவான் என்பதும் புரிந்தது. ஒருவன் தன்னைக் கட்டுப்படுத்துவதிலேதான் அவனது பலமும் பலத்தின் ஞானமும் அதன் புரிதலும் இருக்கிறது. இது எத்துனை பெரிய உண்மை. இதை அந்த மாமா புரிந்து கொண்டதனாலேயே அவரது சண்டைக்கார மனைவியை விட அவருக்கு அத்துனை மரியாதை. எனக்கு இன்னமும் அவர் மேல் மரியாதைதான்.


நமது வரங்களை சரியாக பயன்படுத்தக் கற்றுக்கொள்வோம். நலமே வாழ்வோம்.


இன்னமும் பேசுவோம்.

அன்பன்,

வேதாந்தி.Related Posts Plugin for WordPress, Blogger...