Followers

Wednesday, October 20, 2010

வாழ்வை சிதைக்கும் ஒட்டுண்ணிகள் நட்பாகுமா?

20.10.10
வாழ்வை சிதைக்கும் ஒட்டுண்ணிகள் நட்பாகுமா?

Toxoplasma


நட்பு நிச்சயமாக நமக்கு வாழக் கற்றுக் கொடுக்கிறது. இது மட்டுமல்ல பகிர்தல் மற்றும் ஒரு சில முக்கியமான சமுதாய நெறிமுறைகளின் முக்கியத்துவத்தையும் நமக்குச் சொல்லிக் கொடுத்து நம்மை சமுதாயத்தில் நிறைவான பங்களிப்புச் செய்யும் ஒரு மனிதராகவும் நிலை நிறுத்துகிறதென்பதில் சந்தேகமில்லை.


ஆனால் நட்பென்ற பெயரில் சில சுயநலமிகள் ஒருவரை அண்டி தங்களது தேவையையும் பூர்த்தி செய்து கொண்டு சமயம் வரும் போது அண்டியவரது வாழ்வை கெடுத்துப் போடுவதில் சிறிதும் தயக்கம் காட்டுவதில்லை.  இது உயிரினங்களுக்கே புதிதான ஒன்றல்ல.


திருமதி. ஜானகி லெனின் The Hindu நாளிதழில் எழுதிவரும்  My Husband and other Animals  என்ற பகுதியில்  ‘ The great brain robbery’ ( The Hindu, Saturday, October 16, 2010. Chennai Metro Plus page 15 ) என்ற தலைப்பில் சொல்லியிருக்கும் ஒட்டுண்ணிகளைப் பற்றிய செய்தியானது கவனிக்கத்தக்கதாகும். இதில்  முக்கியமாக இவர் சொல்லியிருக்கும்  Toxoplasma என்கிற ஒட்டுண்ணியைப் பற்றியது.




Toxoplasma மலேரியா நோயை உண்டாக்கக் கூடிய Plasmodium என்கிற ஒட்டுண்ணி  இனத்தைச் சேர்ந்தது.   இது தாக்குவது எலிகளைத்தான் என்றாலும்  இனப்பெருக்கம் செய்யும் போது பூனைகளைத் தாக்கி அதனுள் இனப் பெருக்கம் செய்யும். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் இந்த ஒட்டுண்ணி இனப்பெருக்கம் செய்யத் தயாராகும் போது, தான் ஒட்டுண்ணியாக இருக்கும் எலியின் மூளையைத் தாக்கி பயத்தினை உணரும் மூளை நியுரான்களை சிதைத்து விடும்.  பூனையின் வாடையைக் கண்டாலே தெறிக்க ஓடும் எலி இதற்குப் பிறகு பூனையின் முகத்தை முகர்ந்து பார்த்து தன் வாயால் நெருடுமாம்.  இதில் இன்னுமொரு வேடிக்கை என்னவென்றால் இந்த மூளை நியுரான்களின் சிதைவிற்குப் பிறகு எலிகளுக்கு பூனையின் வாடை பாலுணர்வைத் தூண்டி கிறங்கப் பன்னுவதாலேயே இந்த எலிகள் பூனையை முகர்ந்து அதன் வாயில் நெருடி தன் இறப்பைத் தேடிக் கொள்ளுமாம். இந்த வாய் நெருடலில்  Toxoplasma  எலியிலிருந்து பூனையின் மூக்கிற்குள் நுழைந்து    அதன் உடலுக்குள்  புகுந்து இனப்பெருக்கம் செய்ய ஆரம்பிக்குமாம்.
.



இந்த  Toxo  ஒட்டுண்ணி மனிதரையும் தாக்குமாம். மனிதர்களை தாக்கி அவர்களை பண்பை இழக்கச் செய்வதோடல்லாமல் அவர்களை வெறிகொள்ளச் செய்யுமென்கிறனர்.


நான் இன்று சொல்லப்போவது இந்த Toxoplasma வைப் போலவே நம்மிடையே இருக்கும் சில நட்புகள்   பயப்பட வேண்டியவைகளுக்கு பயப்படாமலும், மரியாதை செலுத்த வேண்டியவைகளுக்கு மரியாதை செலுத்தாமலும் இருக்கும்படிக்கு நம்மை  உசுப்பேற்றி நிலைமறக்கச் செய்து ஏவிவிட்டு தன் சுயநலத்தினை பூர்த்தி செய்து கொள்ளும். இதை நாம் அறிவோமா என்பதைப் பற்றித்தான்.


பெரும்பாலும் தற்போதைய நட்பு என்பது வழிதவறும் போது  நண்பனை இடித்துரைத்து நல்வழிப்படுத்தும் நட்பாக இருப்பது கிடையாது. ஏதோ நமது  உயிர், நண்பனுக்காக விடத்தான்  என்று சிலரும்; நண்பன் எதைச் செய்தாலும் அதை ஆமோதித்து அதற்குத் தேவையான உதவிகளைச் செய்வதும் தான் நட்பின் கடமை  எனச் சிலரும்  நினக்கின்றனர். சில நட்புகள் மிகுந்த சந்தர்ப்பவாதிகளாக இருந்து நம்மிடம் காரியம் சாதித்துக் கொண்டு  நம்மை படுகுழியில் தள்ளி விடுகின்றனர்.



இது சமீபத்தில் நடந்தது. எங்கள் குடியிருப்புக்கு அருகில் உள்ள குடியிருப்பில் குடியிருப்போரிடையே ஒற்றுமை கிடையாது. ஒரு வீட்டுக்காரர் வேண்டுமென்றே தனது அடுக்கு மாடி வீட்டை திருமணமாகாத விடலைப் பிள்ளைகளுக்கு வாடகைக்கு விட்டிருந்தார். அந்த இளைஞர்கள்  இரவில் தினமும் குடிதான். இருந்த நான்கு பேருடன் அவர்களது நண்பர்கள் என இன்னும் இருவர். இந்த நண்பர்களுக்கு வீடு அருகில் இருந்தாலும் குடிக்காக இங்கு வந்து தங்கியும் போதை தெளியும் போது வீட்டிற்குத் திரும்புவதுமாக இருந்தனர்.  சிலர் IT யில் வேலை. சிலர் ஏதோ ஒரு பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளர் வேலையில். தற்காலிக வேலை போலிருக்கிறது. ஆராய்ச்சிப் படிப்பிற்கு முயன்றுகொண்டிருந்தனர்.


ஒரு நாள் குடி போதை அதிகமாகி ஒரே ரகளை. குடித்தனக்காரர்கள் அத்துனை பேரும் முகம் சுளித்தனர். பலர் வீட்டில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் இளம் பெண்கள் வேறு. குடித்த இளைஞர்கள் வெளியே வந்து அரை குறை ஆடையுடன் ஆட்டம் போடத்தொடங்க, அருகிலிருந்த ஒருவர் 100 க்கு தொலை பேசி, காவல் துறையில் புகார் செய்துவிட்டார். சில நிமிடங்களில் மூன்று வாகனங்களில் வந்த காவல் துறையினர், வாந்தி  எடுத்து வீட்டை சாக்கடையாக்கி புரண்டுகொண்டிருந்த அத்துனை பேரையும் பிடரியில் பிடித்துத் தள்ளிக்கொண்டு போய்விட்டனர்.


நண்பர் அழைக்கவே நானும் காவல் நிலையம் சென்றிருந்தேன்.  இளைஞர்களின் நலன் கருதி அவர்கள் மேல் FIR பதிவு செய்யவேண்டாமே என்றேன். ஆனால் அந்த குடியிருப்பில் இருப்போர் மிகவும் வெறுத்துப் போயிருந்ததால் FIR பதிவு செய்ய வேண்டுமென்றனர். இளைஞர்களை வண்டியிலேற்றி பொதுமருத்துவமனைக்கு கொண்டு சென்று  Blood level alcohol பரிசோதனைக்குப் பின்னர் FIR பதிவுசெய்ய முனைந்த  காவல் துறையினரோ எங்களது முடிவுக்காக காத்திருந்தனர்.




நான் அவர்களை சமாதானப் படுத்த பெரும் பாடு பட்டேன். வெகுநெர பேச்சிற்குப் பிறகு இளைஞர்களிடம் வீட்டைக் காலி செய்துவிட எழுதி வாங்கிக்கொண்டு அவர்களை விட்டு விடலாம் என முடிவெடுத்தோம். இதை அந்த  வீட்டை வாடகைக்கு எடுத்திருக்கும்இளைஞர்களிடம் சொன்னதும் அவர்களுடைய நண்பர்களாகிய இருவர் கடுமையாக மறுத்தனர். ‘ஆகா.. நம்முடைய உரிமைகள் என்னாவது.. நாம் எத்துனை தூரம் போனாலும் பார்த்துக் கொள்ளலாம்.. எழுதிக் கொடுக்காதீர்கள் ’ என கடுமையாக தடுத்தனர். தடுத்தவர்களுக்கு வீடு அருகிலேயே இருந்தது. அவர்கள் பெற்றோருடன் தான் வசித்து வந்தனர். ஆனாலும் வீடு போய்விட்டால் தங்களுக்கு கிடைக்கும் குடி சுகம் போய்விடுமென்ற தன்னலத்தால் இந்த ஆட்செபனை மற்றும் தவறான வழிகாட்டுதல். இதுதான் நட்பா?


எனக்கு அந்த இளைஞர்களில் இருவர் வெளி நாட்டில் ஆராய்ச்சிப் படிப்பிற்காக விண்ணப்பித்து முடிவுக்கு  காத்திருக்கிறார்கள் என்று தெரியுமாதலால் நான் அவர்களிடம் விளக்கினேன். ‘ உனது நண்பர்கள் தங்கள் சுய நலத்திற்காக உன்னை உசுப்பேற்றுகிறார்கள். உங்கள் மீது FIR பதிந்துவிட்டால் நாளை வெளிநாட்டு வாய்ப்பு வந்தாலும் உங்களுக்கு  விசா கிடைப்பது கடினம் என்றேன். சற்று யோசித்தவர்கள் நண்பர்களது உசுப்பேற்றலை புறக்கணித்துவிட்டு நாங்கள் கேட்டபடி  எழுதிக் கொடுத்து  பின்னர்  காவல் துறையால் வழக்கு பதியாமல் விடுபட்டனர். எழுதிக்  கொடுத்தவாரே சில நாட்களில் வீட்டையும் காலி செய்துவிட்டனர். இருவருக்கு ஜப்பான் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பிற்கு வாய்ப்பு கிடைத்தது. செல்லும்போது மறக்காமல் எனக்கு நன்றி சொல்லிவிட்டுச் சென்றனர்.


நட்பென்னும் ஒட்டுண்ணிகளை  அடையாளம் கண்டு தப்பித்த விடுதலை உணர்வு அவர்கள் முகத்தில் தெரிந்தது.


நம்மில் இன்னும் எத்துனை பேர் இந்த ஒட்டுண்ணி நட்பின் ஆபத்தினை அறிந்திருக்கிறோம்?


இன்னமும் பேசுவோம்.


அன்பன்,

வெதாந்தி.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...