Followers

Wednesday, October 6, 2010

பெண்ணியம் பெண்களையும், சார்ந்தவர்களையும் உய்விக்குமா?


06.10.10
பெண்ணியம் பெண்களையும், சார்ந்தவர்களையும் உய்விக்குமா?பொதுவாக பெண்ணியம் என்பது பெண்களுக்கான உரிமைகள் மற்றும் விடுதலையைக் குறித்த கருத்துக்களை முன் வைப்பதே.

இதில் பெண் உரிமை மறுப்பும், அடிமைத் தளையும் ஒரு பெரும் சமூகக் கேடென்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இதை எப்படிக் கையாள்கிறோம் என்பதைப் பற்றித்தான் இன்றைய பேச்சு.


பெண்களைப் பற்றியோ அல்லது அவர்களது பிரச்சினைகளைப் பற்றியோ ஒரு பெண்ணால் மட்டுமே சரியாக புரிந்துகொண்டு எழுத முடியும் அல்லது பேச முடியும் என்றொரு கருத்தும் இருக்கிறது. ஆனால் பெரும்பான்மையான எழுத்தாளர்கள் பெண்ணியம் என்பதே ஆண்களை எதிர்ப்பது அல்லது ஆண்களை ஆளுமைப் படுத்துவது என்பதைப் போன்றதொரு மாயையை உண்டாக்குகின்றனர்.  இது இரு பாலருக்கிடையே உள்ள புரிந்துணர்தலை பாதிக்கிறது. இது ஒட்டு மொத்தமாக பெண்ணிய நோக்கிற்கு மாறான ஒரு பின் விளைவை ஒருவரது குடும்பத்தில் - சமுதாயத்தில் ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.


இந்த அடக்கு முறையும், அடிமைத்தனமும், வன்முறையும் எல்லா வகையிலும் எல்லா வகுப்பினரிடையேயும் ( different section of people)  உண்டு.

மதம் சார்ந்த அடக்குமுறை - மதத்தைக் காரணம் காட்டி வெளிப்படும் அடக்குமுறை.

சாதி சார்ந்த அடக்குமுறை - சாதியைக் காரணம் காட்டி வெளிப்படும் அடக்குமுறை.

இனம் சார்ந்த அடக்குமுறை -  இனத்தைக் காரணம் காட்டி வெளிப்படும் அடக்குமுறை. இப்படி

இடம் சார்ந்த அடக்குமுறை, வயது சார்ந்த அடக்கு முறை (சிறார், முதியோர்), அனுபவம் சார்ந்த அடக்குமுறை(கல்விச் சாலைகள்  அல்லது அலுவலகங்களில் senior, junior முறை ), பொருளாதாரம் சார்ந்த அடக்குமுறை, கல்வி சார்ந்த அடக்குமுறை( தொழிற்கல்வி பயின்றோர் தொழில் சாராத கல்வி பயின்றோரை அலுவலகங்களில் அடக்கி ஆள முயற்சிப்பது) இப்படி பல.
இவைகளுள் ஒன்றுதான் பால் சார்ந்த அடக்குமுறை.


இந்த அடக்கு முறைகளெல்லாம் ஒரு உயிரை மற்றோர் உயிர் மதிக்கத் தெரியாததன் விளைவுதான். இதனுடைய இன்னொரு பரிமாணமே விலங்குகளைத் துன்புறுத்தலும். இவைகள் மனிதனின் முற்றுப் பெறாத மன வளர்ச்சியைத்தான் காட்டுகிறது.  இந்த முற்றுப் பெறாத மன வளர்ச்சியின் வெளிப்பாடே இத்தகைய வன் முறைகள். இதைத் தவிர்க்க இந்தக் குறைபாட்டின் ஆணிவேரைக் கண்டறிந்து களைவது மட்டுமே முழுமையான தீர்வாக அமையும். இதுவல்லாது நாம் ஒரு சாரருக்கு அல்லது ஒரு குழுவினருக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ எழுப்பும் குரல் இரு பாலினரையும் எதிரெதிர் நிறுத்தி இத்தகைய வன்முறைகளை நெய்வார்த்து எரியத் தூண்டிவிடுமேயல்லாது தீயைத் தணிக்காது.


இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது பால்சார்ந்த அடக்குமுறையில் இரு பாலினரும் எதிரெதிரே இருப்பது அல்லது வெவ்வேறு வகைப்பட்ட மனநிலையில் இருப்பது சமுதாயத்தின் அடிப்படையான குடும்பமுறைக்கு  நிச்சயமாய் பங்கம்  விளைத்துவிடும் என்பதே. உச்சகட்டமாக இப்போதைய பெண்ணியம் வரம்புக்குட்பட்ட இயற்கை பாலினப் புணர்வையே ஒரு வன் முறையாக, சில நேரங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறையாக, சித்தரிக்கிறது.


இது மட்டுமல்ல பால் சார்ந்த அடக்குமுறையில் பாதிக்கப்படுவது பெண்கள்தானென்றாலும் பெரும்பாலான இந்தப் பெண்களை பாதிப்பிற்குள்ளாக்குவதும் பெண்களே. உடன் பணிபுரிபவரோ அல்லது தனது கணவரின் தாயோ, மற்ற பெண் உறவினரோ அல்லது தனக்கு பரிச்சயமானதொரு  பெண்ணோ    பெண்ணுக்கு   எதிரான இந்த                      பால் சார்ந்த வன்முறையில்  நிச்சயமாக பங்கு பெறுகின்றனர். ஆண் மற்றும் பெண் குழந்தைகளின் வளர்ப்பில் பெண்களுக்கு மிக முக்கியமான பங்கு உண்டென்பதாலேயே ஒரு ஆணின் மனப்பக்குவத்திற்கு அவனது தாயான பெண்ணே முக்கியப் பொறுப்பு வகிக்கிறாள்.
இந்த அடக்குமுறைகளை குழு சேர்ந்து எதிர்த்தோமானால் மட்டுமே நீதி கிடைக்கும் என்று சிலர் நம்புகின்றனர். இந்தக் குழு சேர்ந்த எதிர்ப்பில் ஒரு தொழிலாளியும் முதலாளியும் எதிரெதிர் நின்று பேசி சமத்துவம் பெறலாம் அல்லது பெறாமல் போனாலும் பெரும் நட்டம் கிடையாது. ஆனால் இத்தகைய குழு சேர்ந்த எதிர்ப்பால் ஒரு ஆணும் பெண்ணும் எதிரெதிர் நிற்கும் போது மனம் சார்ந்த, உறவுகள் சார்ந்த பெரும் சேதங்கள் ஏற்படுகின்றன. ஒட்டுமொத்த குடும்ப அமைப்பே கேள்விக் குறியாகிறது.  குடும்ப உறவுகளில்  சிதைவு ஏற்பட்டோ அல்லது  குடும்ப அமைப்பே சமுதாயத்தில் சிதைவுண்டோ போகிறது.


அது மட்டுமல்ல இத்தகைய சூழல் கண்டு வளரும் குழந்தை களும் பாதிக்கப் படுகின்றன. ஒரு ஆணும் பெண்ணும் ஒருவருக்கு எதிராக மற்றவர் போராடவே பிறந்திருக்கிறார்கள் எனும் நிலைக்கு வருகின்றனர். 


இது திருமண வாழ்வைப் பற்றிய ஒரு அச்சத்தை இளம் தலைமுறையினரிடையே ஏற்படுத்தும். வெளிச்சொல்ல முடியாத இந்த மனச்சிக்கல்கள் மிகப் பெரும் பின் விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் ஒருவருக்கு மாற்றுப் பாலினரை வெறுத்தோ அல்லது கண்டு அச்சப்பட்டோ  தன்னொத்த பாலினரோடு ஈர்ப்பு ஏற்படலாம்.  இதனால் தன் பாலினரோடு உறவு இணைப்பும் ஏற்படலாம். இது மட்டுமல்ல. இத்தகைய பாலியல் திரிபு கொண்டோர் ஒன்றுமறியாச் சிறாரை வன் புணர்ச்சிக்கு ஈடுபடுத்தும் கொடுமையும் நடக்கலாம். இது வெறும் ஊகமல்ல. பெரும்பாலான மேற்சொன்ன குற்றங்களின் பின் புலனில் அதில் ஈடுபட்டோரின் பாலியல் குறித்த திரிபான நிலைக்கு அவர்களது சூழல் காரணிகள் பெரும் பங்கு  கொண்டிருப்பது மேலோங்கும்.எனவெ பெண்களையும், சார்ந்தவர்களையும் உய்விக்க  பெண்ணியம் பேசுவோர், ஆண்களுக்கெதிராக பெண்களையும் பெண்களுக்கெதிராக ஆண்களையும் தூண்டாது இயற்கைப் பாலின நியதிக்குட்பட்டு குடும்பக் கட்டமைப்பின் மேன்மை கெடாதவாறு பேசுவோம். இது மட்டுமல்லாது குழந்தைகளின் வளர்ப்பில் நாம் மேன்மையான கவனம் செலுத்தினால் மட்டுமே வன்முறைகளுக்கெதிரான ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதையும் புரிந்து கொள்வோம்.

இன்னமும் பேசுவோம்.

அன்பன்,

வேதாந்தி.

3 comments:

  1. நல்லதொரு பதிவு.

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி

    ReplyDelete
  3. ஓட்டு போட்டுட்டே வாரேன்... :)

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...