04.10.10
விதிகளை மீறுவோர் துணிச்சலானவர்களா?
நமக்குள்ளே நிரூபிக்கப்படாத ஒரு எண்ணம் இருக்கிறது. அதுதான் விதிகளை மீறுவோர் துணிச்சலானவர்கள் அல்லது விதிகளை மீறுவது ஒரு துணிச்சலான செயல் என்பது.
இது எந்த அளவுக்கு உண்மை? இது உண்மையென்றால் விதிகளை மதித்து அதன் படி நடப்பவர்கள் மிகுந்த பயந்த சுபாவிகள் என்பதாகும். இது உண்மையா?
விதிமீறலுக்கு நமது மனம் சொல்லும் காரணம் இந்த விதி மீறல்கள் வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதுதான். ஆனால் உண்மை அதுவல்ல. தனி மனிதனின் ஒழுக்கக் கேடு சமுதாயத்தைக் குலைத்து விடுமாதலால் சமுதாயஒழுக்கத்தைக் காக்கவும் தனி மனித வாழ்க்கையை ஒழுக்கமாக நாம் நடத்திச் செல்லவும் இந்த விதிகள் உதவுகின்றன. இதில் தனி மனித பாதுகாப்பும் சமுதாயத்தின் பாதுகாப்பும் அடங்கும்.
சரியாகச் சொல்லப் போனால் விதிகளின்படி நடக்கத்தான் மிகுந்த துணிச்சல் தேவைப்படுகிறது. ஏனெனில் நமது உள்மனம் நிச்சயமாக நம்மைத் தூண்டி விதிகளை மீறச்சொல்லும். இந்தத் தூண்டுதலுக்கு பல் வேறுபட்ட காரணிகள் உண்டு. அதில் முக்கியமான ஒன்று விதிகளை மீறுவதனால் நமது நோக்கம் எளிதில் நிறைவேறும் என்பது. இதுமட்டுமல்லாது கட்டுப்பாடற்ற நமது மனம் எப்போதும் ஏதேனும் ஒரு ‘மீறலுக்கு’ நம்மை தூண்டிக்கொண்டே இருக்கும் என்பதுதான் உண்மை.
எனவே விதிகளின் படி நடக்கத்தெரிந்தவன் ஒழுக்கக் கேட்டைத் தூண்டும் தன் மனதின் ஓலத்திற்கு செவிகொடுக்காமல் அதனை தன் கட்டுக்குள் கொண்டுவரும் சக்தி பெற்றவனாயிருக்கிறான். தன் மனதை அடக்கி கட்டுக்குள் கொண்டுவர ஒருவனுக்கு பெரும் துணிச்சல் தேவைப்படுகிறது. இந்த கட்டுப்பாட்டைத் தொடர அவனுக்கு தெளிவான மனஉறுதியும் தேவைப் படுகிறது.
உண்மையில் விதிகளை மீறுவோர் துணிச்சல் மிக்கவர்களல்ல. மாறாக அடுத்தவரது பலவீனத்தை பயன்படுத்திக் கொள்ளும் ஈனர்கள்.
இப்போதைய தலை முறையினர் சாதாரண சாலைப் பாதுகாப்பு விதிகளே போக்குவரத்து காவலர்கள் கையூட்டு பெறுவதற்காகவே ஏற்படுத்தப் பட்டதென நம்புகின்றனர். தனது பாதுகாப்பும் சாலையை பயன்படுத்தும் மற்றவரது பாதுகாப்பும் இந்த விதிகளில் தான் அடங்கியுள்ளது என்பது அவர்கள் புரிந்துகொள்ள கடினமான செய்தியாக இருக்கின்றது. தன் பையில் உள்ள ஒரு 500 உரூபாய்த் தாள், தான் எந்த விதிகளையும் மீறுவதற்கான அனுமதிப் பட்டயம் என்றே பெரும்பாலோனோர் கருதுகின்றனர்.சிலர் இந்த விதி மீறல்களை ஒரு ‘adrenalin rush’ க்காக செய்கின்றனர்.
நான் அய்ந்தாம் வகுப்பு படிக்கும்போது ஒரு உபாத்தியாயர். அருணாச்சலம் என்பது அவர் பெயர். மிகுந்த எளிமையானவர். அக்காலத்தில் போக்குவரத்துக் காவலர்கள் மிகுதியாக இல்லை. எனவே விதி மீறுவோர்க்கு காவலில்லை. அப்படியிருந்தும் அந்த ஆசிரியர் வீடு திரும்ப மாலை 6 மணிக்கு மேல் ஆனால் தன் மிதிவண்டியை தள்ளிக்கொண்டே செல்வார். விளக்கு இல்லாததே காரணம். அப்போதெல்லாம் ஒரு மண்ணெண்ணை விளக்கு மிதிவண்டியின் முன் மாட்டியிருக்கும். எண்ணெய் இல்லையென்றாலோ அல்லது விளக்கு கண்ணாடி சரியாக இல்லையென்றாலோ அந்த விளக்கு எரியாது. அப்போதெல்லாம் ‘டைனமோ’ விளக்கு ஒரு ஆடம்பரம். அதாவது அதிக செலவு செய்வோரே வாங்க முடிந்த ஒன்று. இது மட்டுமல்லாது ஒருவழிப்பாதை வழியே சென்றாலும் - ஆட்கள் இருந்தாலும் இல்லையென்றாலும் - மிதிவண்டியை விட்டு இறங்கி தள்ளிக்கொண்டே செல்வார். விளக்கு இல்லாமல் மாலை 6 மணிக்குமேல் மிதிவண்டியில் செல்வதும் ஒருவழிப்பாதையில் மிதிவண்டியில் செல்வதும் சாலை விதிகளுக்கு புறம்பானது என்பதாலேயே அவர் இப்படிச் செய்வார்.
பள்ளிப் பிள்ளைகளெல்லாம் அவரை கை கொட்டி ‘பயந்தாங்குளி, பயந்தாங்குளி’ என நையாண்டி செய்வதுண்டு. ஆனால் அவர் அது பற்றி கவலை கொண்டதே இல்லை.
இது என் மனதை மிகவும் பாதித்த ஒன்று. என்னை மிகவும் யோசிக்க வைத்தது. ஆனால் நான் கண்டதோ வேறொன்று. தன்னைக் கவனிக்க ஆள் இருப்பினும் இல்லாவிடினும் ஒழுக்கம் மீறாமலிருப்பது மிகுந்ததொரு மன உறுதி கொண்ட பலசாலியால் மட்டுமேஅல்லவா முடியும்?
இந்த அருணாச்சலம் வாத்தியாரே இன்றைக்கும் எனக்கு ஒரு உதாரணமாக இருக்கிறார். எத்துனை பேர் என்னைப் பழித்து நையாண்டி செய்து பிழைக்கத் தெரியாதவன் என்று பட்டம் சூட்டினாலும் கவலை கொள்ளாமல் எனது கொள்கைகளை நான் பின்பற்ற இவரே இன்னமும் எனக்கு முன் உதாரணம். நீங்களோ, அல்லது உம்முடன் உம்மைச் சார்ந்தவரோ இதுபோல் விதிமீறாது கட்டுப்பாடான கொள்கையுடன் இருப்பீர்களானால் உமக்கே தெரியாமல் பலருக்கும் முன்னோடியாய் இருக்கும் வாய்ப்பிருக்கிறது.
மேலும், இயற்கை ஒருபோதும் விதிகளை மீறுவதில்லை. மனிதர்கள் மட்டுமே விதிகளை மீறுகிறார்கள். இயற்கை விதிகளை மீறும் தருணங்களில் பெரும் பிரளயங்கள் உருவாகின்றன.
விதிமீறல்கள் அழிவுக்கே வழிவகுக்கும்.எனவே கட்டுப்பாடான கொள்கைகளுடன் விதிகளை மீறாமல் வாழ்வோம், நமதுநலனுக்கும் மற்றும் சமுதாய நலனுக்கும் வழி சேர்ப்போம்.
இன்னமும் பேசுவோம்.
அன்பன்,
வேதாந்தி.
மிக்க அருமை நண்பரே.. என்னையும் உங்க அருணாச்சலம் வாத்தியார் சிந்திக்க வைத்துவிட்டார். இது போன்ற விழிப்புணர்வான பதிவிற்க்கு எப்பொழுதும் என் ஆதரவுகளும் வாழ்த்துக்களும் இருக்கும்..
ReplyDeleteநன்றி நண்பரே.
ReplyDeleteFantastic Post! Must need to take care on Society.
ReplyDeleteசரியாகச் சொல்லப் போனால் விதிகளின்படி நடக்கத்தான் மிகுந்த துணிச்சல் தேவைப்படுகிறது.
ReplyDeleteஉண்மைதான் ....
சிறந்த பகிர்வு .நன்றி