Followers

Monday, October 11, 2010

பலவான் யார்?


11.10.10
பலவான் யார்?


நிச்சயமாக பலம் கொண்டவன்தான் பலவான். அப்படியிருக்க இந்தக் கேள்வி பலருக்கு அர்த்தமில்லாததாகத் தோன்றுவது இயற்கை.


தற்காலத்தில் பலவான்கள் தங்கள் பலத்தினை நிரூபித்தால்தான் தான் பலவான் என பலரும் ஒத்துக்கொள்வார்கள் எனும் மன நிலையில் உள்ளனர். இங்கு சற்று கவனிக்கவும். இந்தப் பலவானே, தான் பலவான் என்று பிறர் சொல்லவேண்டும் அல்லது நம்பவேண்டும் என எதிர்பார்ப்பது அவன் தன் பலத்தின் மீது கொண்ட அவநம்பிக்கையை அல்லவா காட்டுகிறது?


இது தான் மனதின் விளையாட்டு.


தான் பலவீனன் என்று பிறர் நினைத்து விடக்கூடாதென்றே பலர் பல காரியங்களை செய்கின்றனர். இந்தக் காரியங்கள் அவர்களது பலத்தைக் காட்டுவதற்கு பதிலாக அவர்களது பலவீனத்தின் மறு பிம்பமாகவே வெளிப்படுகிறது.


நிறை குடம் தளும்பாது என ஒரு பழமொழி உண்டு.  இது ஒருவகையில் உண்மையும் கூட.  குடம் குறையாக இருந்தால் தான் சத்தமெழுப்பிக் கொண்டிருக்கும். இது எல்லாவற்றிர்க்கும் பொருந்தும்.  அறிவு நிறைந்தவன் பேச்சைக் குறைத்துக் கொள்வான். பணம் பெற்றவன் ஆடம்பரத்தைக் குறைத்துக் கொள்வான். பலம் நிறைந்தவன் பலப் பிரயோகத்தைக் குறைத்துக் கொள்வான்.



எனது சிறுவயதில் நான் கண்ட சம்பவம் ஒன்று இன்னமும் என் மனதில் பசுமையாக இருக்கிறது.


எங்கள் வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரர். அவருக்கு சினிமா மோகம் உண்டு. அப்போதெல்லாம் சினிமா என்றாலே சண்டை, குதிரையேற்றம், சிலம்பம் போன்றவைகளில் பரிச்சயம் இருக்கவேண்டும் என்ற நம்பிக்கை அதிகம். சாண்டோ சின்னப்பதேவர் கொடிகட்டி பறந்த காலம். இப்போது Arnold Swazzanager  போல அப்போது சாண்டோ பிரபலம். உடல் பலம் கொண்டோரையெல்லாம் சாண்டோ என அழைத்த காலம் அது. பக்கத்து வீட்டுக்காரர் சினிமா மோகத்தில் சாண்டோவாக பயிற்சி பெற்று படக் கம்பெனிகளுக்கு தருவதெற்கென்று பல கோணங்களில் தனது உடல் அழகையும் வலிமையையும் காட்டும்படிக்கு பல நிழற்படங்களை எடுத்து அதன் பிரதிகளை தனது வீட்டிலும் மாட்டி வைத்திருப்பார்.



சிறுவயதுப் பையனான எனக்கு அந்தப் படங்களைப் பார்க்கும்போதே ஒரு இனம் புரியாத பயம் எழும். புடைத்துக் கொண்டிருக்கும் தசைகள் பயமுறுத்தும். அவரிடம் நெருங்கவே அச்சமாக இருக்கும். அவர் யாரிடமும் தேவைக்கு மேல் பேசி நான் பார்த்ததில்லை. ஆனால் அவரது மனைவியோ பெரும் சண்டைக்காரி. ஜக ஜக வென்று தெருச்சண்டையை இழுத்து வருவாள்.  தன் கணவனின் உடல் பலத்தைக் கண்டு அனைவரும் பயப்படுவர் என்றே இருந்தாள். பெரும்பாலோர் அவளிடம் சரிக்கு சரி சண்டைக்கு நின்றதும் கிடையாது.  நான் கூட அந்த மாமாவின் பலம் தான் மற்றவரை தள்ளி வைத்திருக்கிறது என்றிருந்தேன்.


அவர் கடவுள் மறுப்புக் கொள்கை கொண்ட ஒரு கட்சியில் முக்கியப் பதவியிலும் இருந்தார். அவருக்கு கட்சியின் பலமும் இருந்தது.  இத்தனையும் சேர்ந்து அவரை படத்தின் உச்ச கட்ட காட்சியில் சண்டையிடும் கதாநாயகனைப் போல பலத்தை ஏற்றிக் காட்டியது. நானும் அவரைப் பார்க்கும் போதெல்லாம் அவர் தனக்கு எதிராக வரும் மற்றவர்கள் மீது பாய்ந்து பாய்ந்து கைச்சண்டை போடுவார் அல்லது கம்பு சுழற்றுவார் என நம்பினேன். அப்படி ஒரு சண்டைக் காட்சிக்காக காத்திருந்தேன். எல்லாம் சினிமாவின் தாக்கம்.


அப்படி ஒரு நாளும் வந்தது.




அந்த மாமா எங்கள் தெருவிலிருந்த ஒரு கோவிலின் தர்மகர்த்தாக்களில் ஒருவராகவும் இருந்தார்.  ஒரு நாள் அந்தக் கோவிலில் கணக்கர் கணக்கு வழக்கில் கோளாறு செய்து வைக்க இவர் அந்தக் கணக்கர் மீது நடவடிக்கை எடுத்து விட்டார். உடனே அன்று மாலை அந்த கணக்கர் எல்லை மீறிய குடியின் போதையில் மாமாவின் வாசலில் நின்றுகொண்டு கூச்சலிடத் தொடங்கினார். வீட்டினுள் இருந்த நான் வெளியே வந்து நின்றுகொண்டேன். நிச்சயம் சண்டை உண்டு என்று நம்பினேன். கண்கள் விரியக் காத்திருந்தேன்.


குடிகாரன் தொண்டை கிழியக் கத்தினான். அவரை மிகக் கேவலமாகப் பேசினான். அவரது மனைவியையும் பேசினான். அவரது ஆண்மையைக் கேவலப் படுத்தினான். இது கேட்டு அந்த சண்டைக்கார மனைவி தானும் பதிலுக்கு கூச்சல் போட ஆரம்பித்தாள். சண்டை வலுக்க ஆரம்பித்தது. வேட்டியை இழுத்துக் கட்டிக்கொண்டு ஆவேசத்துடன் குடிகாரன் பொங்கினான். கடவுள் இல்லை என்று சொல்லும் கட்சியில் இருக்கும் உனக்கு கோவில் தர்ம கர்த்தாவாக இருக்க என்ன தகுதி இருக்கிறது என்று சீறினான். எனக்கே அப்போதுதான் இந்த முரண் விளங்கியது. ஒரு கட்டத்தில் மாமாவின் மனைவியான  சண்டைக்காரி அவனை கம்பெடுத்து அடிக்கப் போகையில் அதுவரை உள்ளிருந்த அந்த மாமா சட் டென வெளியே வந்து தன் சண்டைக்கார மனைவியை உள்ளிழுத்துச் சென்றார். அந்தச் சண்டைக்காரியின் கோபம் தன் கணவனின் மீதே திரும்பியது. அவளே தனது கணவரைக் கேவலமாகப் பேசி கூச்சலிட ஆரம்பித்து விட்டாள்.


பெரும் சண்டையை சினிமா பாணியில் எதிர் பார்த்த எனக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது. எனக்கு குழப்பமாகவும் இருந்தது. இத்துனை பலவானாக இருந்தும் ஏன் இந்த மாமா சண்டை போடவில்லை? நிறைய சண்டை முறைகளைக் கற்று சாண்டோவாக இருந்தும் இந்த பலமில்லாத ஒரு சாதாரண ஆளிடம் மொளனியாய் இருந்ததேன்? என பல குழப்பங்கள். பின்னாளில் ஒருமுறை அவரிடமே இதைக் கேட்டேன். சிரித்துக் கொண்டே என் கன்னத்தைத் தட்டிவிட்டு போய்விட்டார். அந்தக் குடிகாரன் மூன்று நாட்கள் கழித்து அவரது காலில் விழுந்து ‘மன்னிச்சுக்கோ தலைவரே..’ என்று கதறியழுதது தனிக்கதை.


இதில் ஞானம் பிறக்க எனக்கு வெகு காலமாயிற்று. நிறை குடம் தளும்பாது என்பதே அது. மேலும் தன் பலத்தினை கட்டுப்படுத்தும் பலம் கொண்டவனே பலவான் என்பதும் புரிந்தது. ஒருவன் தன்னைக் கட்டுப்படுத்துவதிலேதான் அவனது பலமும் பலத்தின் ஞானமும் அதன் புரிதலும் இருக்கிறது. இது எத்துனை பெரிய உண்மை. இதை அந்த மாமா புரிந்து கொண்டதனாலேயே அவரது சண்டைக்கார மனைவியை விட அவருக்கு அத்துனை மரியாதை. எனக்கு இன்னமும் அவர் மேல் மரியாதைதான்.


நமது வரங்களை சரியாக பயன்படுத்தக் கற்றுக்கொள்வோம். நலமே வாழ்வோம்.


இன்னமும் பேசுவோம்.

அன்பன்,

வேதாந்தி.



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...