Followers

Wednesday, October 27, 2010

காதல் திருமணங்கள் பெற்றோருக்கு எதிரானவைகளா?

27.10.10
காதல் திருமணங்கள் பெற்றோருக்கு எதிரானவைகளா?



திரைப்படங்களிலும் தொலைக்காட்சிகளிலும் காதலை ரசிக்கத் தெரிந்த பெற்றோருக்கு தம் மக்களின் காதல் மட்டும் எட்டியாக கசக்கும் என்பது தெரிந்த தெளிவு. இது ஏன்?


பொதுவாகவே பெற்றோர்கள் பிள்ளைகள் மீது அதிக பிரியத்துடன் இருப்பதோடல்லாமல் அவர்கள் விருப்பங்களை நிறைவேற்றுவதில் பெரும்பாலோனோர் மன மகிழ்வும் கொள்கின்றனர். இந்த போக்கு பிள்ளைகளின் காதல் திருமணத்தில் மட்டும் மாற்றம் கொள்வதைப் பற்றி பேசுவது  இரு சாரரின் சிந்தனைக்கும் உகந்த ஒன்றாகும்.


காதல், சாதி ஒன்றினாலேயே பெற்றோரால் மறுக்கப் படுகிறது என்பது பெரும்பாலான கருத்து. ஆனால் திருமண முறை கொண்ட  தன் சொந்தங்களில் எழும் காதல் கூட பெரும் எதிர்ப்பை சந்தித்துள்ளது. பணம் கொண்ட இடங்களில் ஏற்படும் காதலும் சில சமயங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் பல சமயங்களில் எதிர்ப்பை சந்திக்கிறது.


மோதலிலும் பின் பிரிவிலும் முடிந்த காதல் திருமணங்களை உதாரணம் காட்டி பிள்ளைகளின் காதலை மறுக்கும் பெற்றோரும் உளர். ஆனால் இந்த மணமுறிவு என்பது காதல் திருமணத்திற்கு மட்டுமல்ல எல்லாத் திருமணங்களுக்கும் பொருந்தும். இதுபற்றி பின்னர் பேசுவோம்.


 சில கிராமங்களில் உள்ள இந்த காதல் வெறுப்பு / எதிர்ப்பு, நான் முந்தைய பதிவில் குறிப்பிட்டது போன்ற கூட்ட மனப்போக்கை சார்ந்ததாலேயே கூட இருக்கலாம்.  ஆனால் நகரங்களில் இந்த கூட்ட மனோபாவம் காதல் வெறுப்பிற்கு காரணமாக இருப்பதில்லை. 




பெரும்பாலும் படித்த, நிலைமை புரிந்த யதார்த்தவாத  பெற்றோர்கள் மட்டுமே தங்கள் பிள்ளைகளின் காதலுக்கு அங்கீகாரம் தருவதைப் பார்க்கலாம்.  இத்தகையோரது வீட்டில் நடக்கும் திருமணங்கள் பெரும்பாலும் காதல் திருமணமாக மட்டுமல்ல இந்தக் காதல் திருமணம் நாடு கடந்த ஒன்றாகவும் இருக்கும் வாய்ப்பு இருக்கிறது. இங்கு சிலர் சாதிக்கே சண்டையிட்டுக் கொண்டிருக்கையில் பலர் நாடு கடந்தும் நல்லுறவை தங்களது குடும்பத்திற்குள் வரவேற்க தயாராக  இருக்கின்றனர் என்பது  பெரும் மகிழ்வுக்குரியது.


இப்படி பல செய்திகளை ஆராயும் போது  இந்த காதல் வெறுப்பு குறித்த சில உண்மைகள் வெளிப்படும்.

பெற்றோர்கள் பிள்ளைகளை பெற்றுக் கொள்வதும் அவர்களை வளர்த்து ஆளாக்குவதும் நமது நாட்டைப் பொருத்த வரையில் சுயநலம் சார்ந்த ஒன்றாகும். பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்கள் ஒருவித எதிர்பார்ப்பையும் தங்களுக்குள் வளர்த்துக் கொள்கிறார்கள்.  தாங்கள் பிள்ளைகளிடம் எதிர்பார்ப்பது அவர்களின் கீழ்ப்படிதலே என்று இந்த பெற்றோர்கள் சொல்லிக் கொண்டாலும் அவர்களின் எதிர்பார்ப்பு உண்மையில் அதுவல்ல. அது பிள்ளைகளின் கீழ்ப்படிதலைச் சார்ந்திருக்கும்  தங்களது பாதுகாப்புதான். பிள்ளைகள் தங்கள் சொற்படி நடந்து மணம் செய்து கொண்டார்களானால் வரும் உறவுகள், நாம் பார்த்து  வீட்டிற்கு  கொண்டுவரும் உறவுகள், நமக்கு ஆதரவாய் இருக்கும் என்ற மனப்போக்கே இதற்கு காரணம். ஆனால் பல நேரங்களில் தாம் பார்த்து கொண்டு வரும் உறவுகளும் இந்த எதிர்பார்ப்பை ஏமாற்றத்திற்குள்ளாக்குவதும் உண்டு. இந்த சமயங்களில் தங்கள் விருப்பப்படியே இந்த திருமணங்கள் நடந்ததால் இந்த ஏமாற்றத்தினை ‘விதி’ யென்று ஏற்றுக்கொள்ளத் தயாராகின்றனர் .


இத்தகைய எதிர்பார்ப்பு நமது கலாச்சாரத்தில் கூட்டுக் குடித்தன முறை பேணப்பட்டபோதிருந்து வளர்ந்து வருவது. ஆனால் தற்போதைய தனிக் குடித்தன முறைக்குத் தகுந்தார்ப்போல் இந்த எதிர் பார்ப்பு மாறத் தவறிவிட்டது.


 

சமுதாயத்தில் தற்போது இந்த தனிக் குடித்தன முறை தவிர்க்கப் படமுடியாத ஒன்றாகும். இது மட்டுமல்ல பெற்றோரை விட்டு விலகி தூர தேசத்திற்கு பொருளீட்டும் பொருட்டு செல்வோர் பெரும்பாலும் அங்கேயே தங்கிவிடுவதாலும் பெற்றோர்கள் தனித்து விடப்படுகின்றனர். இந்த நிலையில் தனித்து நிற்கும் பெற்றோரது மன நிலையை ‘Empty nest syndrome’ எனச் சொல்வர். அவர்களது வீடு காலியான கூட்டைப் போல் வெறுமை நிறைந்திருக்கும்.


பிள்ளைகளை பாதுகாக்கத் தெரிந்த பெற்றோருக்கு தங்களையும் தங்கள் எதிர்கால வாழ்வையும் பாதுகாத்துக் கொள்ளுதல் குறித்த சரியான எச்சரிக்கை உணர்வு இல்லாது போனது மிகவும் வருந்தத் தக்கதாகும்.


சில பொருந்தா மணப்பெண்கள் அமைந்துவிட்டால் பிள்ளைகள் உள்ளூரில் இருக்கும் போதே கூட தனித்து விடப்பட்ட பெற்றோரை இந்த வெறுமை ஆட்கொண்டு கொல்லும்.


முக்கியமாக முதுமையில் நமக்கு துணை தேவை என்பதாலும் மேலும் அச்ச உணர்வும் தனிப்படுத்தப் படுதலும் முதுமையில் மிகுந்த மன அழுத்தத்தை உண்டுபண்ணும் என்பதாலும் நமக்கு பிள்ளைகளின் அருகாமையும் கவனிப்பும் முதுமையில் கண்டிப்பாக தேவைப்படுகிறது. பலருக்கு இதனோடு  பொருளாதாரத் தேவையும் கூட அதிகரிக்கலாம். முதுமையில் இந்த பொருளாதார சுமையும் கூடுவதால்  நமது பாதுகாப்பு குறித்த அச்சம் எழுவது நியாயமானதே.


இது தவறல்ல. ஆனால் இதை எதிர்நோக்கி, நம் பிள்ளைகள் வளரும் போதே பொருளாதாரத்திலும்  மனப்பக்குவத்திலும் நம்மை முதுமைக்கு தயார் படுத்திக் கொள்ளாமல் நாம் நமது பிள்ளைகளைச் சார்ந்தே இருக்க நினைப்பது பெரும் தவறு. இத்தகைய மன நிலையிலிருக்கும் பெற்றோர்களே பிள்ளைகளின் காதலுக்கு எதிர்ப்பாய்  இருக்கின்றனர்.




 
பெரும்பான்மையான யதார்த்தவாத பெற்றோர்கள் தங்களது இளமையிலேயே இதற்கு தங்களை தயார் படுத்திக் கொள்வதால் தங்கள் பிள்ளைகளிடம் எதிர்பார்ப்பை வளர்த்துக் கொள்வதில்லை. மாறாக அவர்களது தனித்த வாழ்க்கையை ரசிக்கத் தொடங்குகின்றனர். தங்களது பொருளாதாரப் பாதுகாப்பையும் இளமையிலேயே ஏற்படுத்திக் கொள்வதனால் பிள்ளைகளின் தூரத்து வாழ்க்கையும் அவர்களை பாதிப்பதில்லை.  முதுமையில் பிள்ளைகளின் அருகாமையை எதிர் நோக்காமல் நட்பு வட்டத்தை பெருக்கி தங்கள் தனிமையையும் போக்க வழி வகுத்துக் கொள்கின்றனர். இத்தகையோருக்கு தங்கள் பிள்ளைகளின் காதல் திருமணங்கள் எதிரானவைகளாவதில்லை.


பிள்ளைகளின் வளர்ச்சியை நம் சுயநலம் கருதி முடக்கிப் போடாமலும், அவர்களது மகிழ்ச்சியை நமது எதிர்கால அச்சம் கருதி கருக்கிப் போடாமலும் இருக்க வயோதிகத்திலும் நாம் நம்மை நம்பி இருக்கக் கற்றுக் கொள்வோம். நமது பிள்ளைகளுக்கு ஒரு முன்னோடியாய் இருப்போம். மாறிவரும் சமுதாய மாற்றங்களை மலர்ச்சியுடன் வரவேற்க கற்றுக்கொள்வோம்.


மாறுவோம். மன மலர்ச்சியுடன் வாழ்வோம். வாழ வைப்போம்.


இன்னமும் பேசுவோம்.

அன்பன்

வேதாந்தி.


2 comments:

  1. பிள்ளைகளை பாதுகாக்கத் தெரிந்த பெற்றோருக்கு தங்களையும் தங்கள் எதிர்கால வாழ்வையும் பாதுகாத்துக் கொள்ளுதல் குறித்த சரியான எச்சரிக்கை உணர்வு இல்லாது போனது மிகவும் வருந்தத் தக்கதாகும்.


    .....very interesting thought. mmmm.....

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...