Followers

Monday, October 18, 2010

கல்லடிக்கு கல்லடியும், சொல்லடிக்கு சொல்லடியும் சரியான தீர்வாகுமா?

18.10.10
கல்லடிக்கு கல்லடியும், சொல்லடிக்கு சொல்லடியும் சரியான தீர்வாகுமா?இன்று நாம் பேசப்போவது   An eny for an eye , a tooth for a tooth  என்பதைப்போல்  கல்லடிக்கு கல்லடியும் சொல்லடிக்கு சொல்லடியும் சரி என்கிற சித்தாந்தம் நம்மை சரியான வழியில் இட்டுச் செல்லுமா என்பதைப் பற்றித்தான்.  Revenge எனப்படும் பழிதீர்த்துக் கொள்ளுதல் நம்மையே திரும்பி வந்து தாக்கும் பூமராங்க் போன்றது.


An eye for an eye makes the whole world blind என்றும் சொல்வார்கள். இது மட்டுமல்ல இந்தப் பழி உணர்ச்சி நமக்குள் தீயாய் எரிந்து நம்மை, நமது நிம்மதியை கொஞ்சம் கொஞ்சமாக கொண்று போடும். இப்போது இதை இரண்டு நோக்கில் பார்க்கலாம். ஒன்று பழிதீர்த்துக் கொள்வதால் நாம் நினைத்துள்ள நமக்கு இழைக்கப் பட்ட அநீதி திரும்ப்பப் பெற்று நீதி நிலைப் படுகிறதா? Whether the wrong doing of others are undone and the earlier state is restored  by our vengence?


அடுத்து மேற்கேட்ட வினாவிற்கு எவ்வகை பதிலானாலும், இந்த வன்மம் அல்லது பழிதீர்த்தலால்  நமக்கு நன்மை விளைகிறதா?  அப்படியெனில் அந்த நன்மை நமக்கு இழைக்கப் பட்ட தீங்கினுக்குச் சமமானதா அல்லது அதனை விட மேலானதா?


பழிதீர்க்கும் உணர்வானது நமக்கு பிறரால் தீங்கு உண்டானது என நாம் நம்புவதால் நமக்குள் எழும் எதிர்மறை உணர்வு. பொறாமை எனும் காழ்ப்புணர்ச்சியைப் பொலவே இதுவும் ஒரு கொடும் சிந்தனைக் கொல்லி. நம்மை சடுதியில் தீய வழிக்கு இட்டுச் செல்வது.  இது குறித்துப் பேசும்முன் நாம் அறிய வேண்டியது, ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்பது. இது சத்தியம், வெறும் மொழியல்ல.எந்த நிகழ்வு நமக்கு கேடு விளைத்ததோ அந்த நிகழ்வில் நம்முடைய பங்கை நாம் அலசிப் பார்க்க வேண்டும். அது இதைப் பற்றிய கூடுதலானதொரு பார்வையை நமக்கு கொடுக்கும்.


ஒருவர் நம்மிடம் உள்ள பொருட்களை அபகரிப்பதனாலோ அல்லது நமது வேலையைப் பறிப்பதனாலோ அல்லது இது போன்ற வோறொன்றாலோ நமக்குத் தீங்கிழைத்தாரெனில் நாம் இத்தீங்கை விலக்கி நமது நிலையை மீளப் பெறும் வாய்ப்புள்ளது. அப்படி நமக்கு நமது நிலை மீளப் பெற்று விட்டால் நமக்கு நீதி கிடைத்ததென்று பொருள். இதற்குப் பின்னும் இந்த நிகழ்வுக்கு காரணமாக நாம் கருதுவோரது மேல் நாம் வைத்திருக்கும் வஞ்சம் சரியானதல்ல. அது மட்டுமல்ல. இதைக் காரணம் காட்டி நாம் எப்போதாகிலும் பின்னர் அவருக்கு இதைப் போன்றதொரு செயலைச் செய்வதும் நீதிக்குகந்ததல்ல.

 
அடுத்து நமக்கு விளைந்த தீமை மேற்சொன்ன வகையிலல்லாது    அவமதிப்பு அல்லது உறவின் இழுக்கு போன்றதொரு   உணர்வு சார்ந்த வகையாக இருப்பின் நம்மால் முன்னர் சொன்னது போல் அநீதிக்கு முன்னிருந்த நிலையை மீட்க முடியாது. அல்லது உயிரிழப்பு போன்றதொரு பெரும் இழப்பாக இருப்பினும் நம்மால் அந்த இழப்பை மீட்க முடியாது.  இழப்பிலிருந்து சில சமயங்களில் மீளக்கூட முடியாது.  இழப்பு இழப்புதான். Damage done is done.  இந்த நிலையில் என்ன செய்வது?இந்த நிலையிலும் கூட நாம் இதே இழப்பை நமக்கு ஏற்படுத்தியவருக்கு எதிராகச் செய்வோமானால் அது மற்றொரு அநீதியாகுமே தவிர நீதியாகாது.  இது ஏறக்குறைய சட்டத்திற்கு புறம்பான வன்முறையாளர்களிடையே (Outlaw Gangsters) உலவும் கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்ற கோட்பாட்டைத் தான் ஒத்திருக்கும். இருபுறமும் இழப்புத்தான் மிஞ்சும். இது ஒரு வகையான விபரீத சிந்தனைகளை நமக்குள் விதைத்து நம்மை ஒரு மன நோயாளியாக்குவது நிச்சயம்.


அப்போது சட்டம் விதிக்கும் தண்டனை? பஸ் எரிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு சட்டம் விதித்த தூக்கு தண்டனை? அது எவ்வகையில் சரி?


நான் முன் சொன்னது வேறு இது வேறு. சட்டம் குற்றவாளிகளுக்கு தண்டனை விதிப்பது சமூக விரோதிகளிடையே சட்டம் பற்றிய அச்ச உணர்வு ஏற்படுத்தி குற்றச் செயல்களை குறைத்து அதனால் சமூகப் பாதுகாப்பினை அதிகரிக்கச் செய்வதாகும். சட்டக் காப்பாளர்களுக்கு சமூகத்தைக் காக்கும் பொறுப்பும் உண்டு. மேலும் இத்தகைய தண்டனைகளை கொடுப்பதால் யாருக்கும் குற்ற உணர்வு எழாது.  ஆனால் ஒரு தனி மனிதன் இதே சட்டத்தைக் கையிலெடுத்துக் கொண்டு இதே தண்டனைகளைத் தருவானானால் அவனது மனம் குற்ற உணர்வால் மிக விரைவில் சிதைவுண்டு போகும்.அன்னை தெரசாவின் வாழ்வில் நடந்த  என் நெஞ்சிலிருந்து நீங்காத ஒரு நிகழ்வு. ஒருமுறை அன்னை தெரசா ஒரு தனவானை ஏழைச் சிறுவர்களின் பொருட்டு நன்கொடை வேண்டி  பார்க்கச் சென்றார்.  அந்த தனவானோ அன்னையின் முகத்தில் காரி உமிழ்ந்தானாம். தனது முகத்தில் வழிந்த எச்சிலை துடைத்துக் கொண்டே, ‘ எனக்குச் சேரவேண்டியதை கொடுத்து விட்டீர். ஏழைப் பிள்ளைகளுக்கு நான் வேண்டிய கொடையைத்  தாருங்கள்..’ என்று கையேந்தினாராம்.


நம் நெஞ்சில் சேமித்து வைக்கும் வஞ்சம் கொடும் நஞ்சைப் போன்றது. அது நமக்கு பெருந்தீங்கு விளைக்கும். தவறிழைத்தோரை  மன்னித்தலும் மறத்தலும் தவறிழைத்தோருக்கல்ல மாறாக நமக்கே நன்மை பயக்கக் கூடியது. நமது உள்ளத்தையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சரியான மருந்து அதுவே.


எனவே அய்யன் சொல்லியதைப் போல இன்னா செய்தாரை ஒருத்தல் பொருட்டு அவர் நாணும்படியான  நன்னயம் செய்து விடுவோம். நமது நலனையும் சமூகத்தின் நலனையும் காப்போம்.

இன்னமும் பேசுவோம்.

அன்பன்,

வேதாந்தி.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...