Followers

Wednesday, July 29, 2015

தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி IV


29.7.15

தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி IV



 முந்தைய பகுதிகளுக்கு:

1.  தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி I

2. தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி II


3. தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி III

நண்பர் தொடர்ந்தார்.

“உதவி ஆணையரிடமிருந்து கிடைத்த ஒரு நேர்மறை உந்துதலினால் வந்த ஏதோ ஒரு வேகத்தில் உணவகத்தில் பேசிவிட்டேனே ஒழிய மனதிற்குள் ஒரு பதட்டம் இருந்தது. ஆனாலும் நான் ஒரு முடிவு எடுத்தாகவேண்டும். இந்தச் சொத்தை பிள்ளைக்கு விட்டுவிட்டுப் போவது பெரிதல்ல அதோடு பிரச்சினையையும் விட்டு விட்டு போகக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். இதில் என்ன ஒரு சிக்கல் என்றால் எந்த ஒரு ஆவணமும் எங்களிடம் கிடையாது. இது மிகவும் எதிர் மறையான செய்திதான் என்றாலும் இதில் உள்ள ஒரு பெரிய அனுகூலம் என்னவென்றால் ஆவணங்களை இனி நாங்கள்தான் உருவாக்கியாக வேண்டும் அல்லது பெற்றாக வேண்டும் என்பதே. ஆகையால் நான் அதைப் பற்றி யோசித்தேன். அன்று இரவு தூக்கமே இல்லை.

கட்சிக்காரனின் முதல் ஆயுதம் முடக்கப்பட்டதும் சற்று அடங்கினார்ப்போல் தெரிந்ததே ஒழிய அவன் முடங்கிப் போகவில்லை. காவல் நிலைய ஆய்வாளர் அவனுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்.

இதற்கிடையே எங்கள் மேல் விற்பனையாளர் போட்டிருந்த வழக்கு Assisstant City Civil Court ஆல் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பானது. உடனே விற்பனையாளர் அந்த தீர்ப்பை எதிர்த்து Additional City Civil Court ல் அப்பீல் செய்தார். ஆனாலும் இந்த சாதகமான தீர்ப்பு எங்களுக்கு கிடைத்த முதல் ஆவணமாகும்.

அடுத்த ஒரு மாதத்திலேயே விற்பனையாளர் அந்த அப்பீலை திரும்பப் பெற்றுக் கொண்டார். எங்களுக்கு குழப்பமாக இருந்தது ஆனால் அடுத்த பதினைந்து நாட்களுக்குள் விற்பனையாளரிடமிருந்து வீடுகளை வாங்கிய கட்சிக்காரனால் அதே வழக்கு திரும்பவும் எங்கள் மீது தொடுக்கப்பட்டது.

இதற்குள் எங்களது குடியிருப்பின் அனுமதி பெறப்பட்ட வரைபடம், மற்றும் விற்பனையாளரது வீடுகளின் பதிவு ஆவணம் கையில் கிடைத்தது. அதைப் பார்க்கையில்தான் தெரிந்தது உண்மையில் விற்பனையாளர் முதல் தளம் (கட்சிக்காரனது தந்தையார் பெயரில் பதிவாகி இருக்கிறது) மற்றும் மூண்றாம் தளத்திலுள்ள வீடு (கட்சிக்காரனின் மனைவியின் பெயரில் பதிவாகி இருக்கிறது) களை மட்டுமே கிரயம் செய்து கொடுத்திருக்கிறார். எங்கள் மீது வழக்குத் தொடுத்த கட்சிக்காரனின் பெயரில் எந்த வீடும் பதிவாக வில்லை. நாங்கள் நினைத்திருந்ததைப்போல கீழே தரை தளத்தில் உள்ள வீடு கட்சிக்காரனது பெயருக்கு விற்கப் படவில்லை.

அந்த ஆவணங்களைப் பார்த்த பிறகுதான் விற்பனையாளருக்கும் கட்சிக்காரனுக்கும் உள்ள ஒப்பந்தம் புரிந்தது. தரை தளத்தில் உள்ள வீட்டை ஒட்டியுள்ள பொது உபயோகத்தில் உள்ள நிலத்தையும் சேர்த்து அதிக விலைக்கு விற்று இருவரும் பங்கிட்டுக்கொள்ள முடிவு செய்துள்ளனர் என்பது புரிந்தது.

இதையே நாங்கள் நீதி மன்றத்தில் பதிலாக தாக்கல் செய்தோம். மேலும் எங்கள் குடியிருப்பில் எந்த வீடும் வழக்கு தொடுத்திருந்த கட்சிக்காரனுக்கு கிரயம் செய்து கொடுக்கப்படாததால் அவர் இந்த வழக்கு தொடுக்க அருகதையற்றவர் என்றும் தாக்கல் செய்தோம்.

இந்த பதிலைக் காட்டி கட்சிக்காரன் விற்பனையாளரிடம் உடனே கீழுள்ள வீட்டை தன் பெயரில் கிரயம் செய்து வைக்கச் சொல்லி வற்புறுத்த கிரயமும் அவன் பேரில் நடந்தது.

அங்குதான் விதி விளையாடியது.

கட்சிக்காரன் விற்பனையாளருக்கு இந்த விற்பனையில் முழுவதும் பணமாக செட்டில் செய்யாமல் தன் வசமிருந்த ஏதோ ஒரு நிலத்தைக் காட்டி அது சம மதிப்புள்ளது என்று சொல்லி விற்பனையாளர் தலையில் கட்டிவிட்டான். அந்த நிலம் புறம்போக்கு நிலமென்று பத்திரப்பதிவு முடிந்து வெகு நாட்களுக்குப் பின்னர்தான் விற்பனையாளருக்குத் தெரிந்தது. இதனால் விற்பனையாளர் மொத்தமாக ஏமாற்றப் பட்டார்.

இது குறித்து விற்பனையாளர் கட்சிக்காரன் புறம்போக்கு நிலத்தை தனக்கு பதிவு செய்து ஏமாற்றி விட்டதால் அதற்கு பதிலாக பணம் தரச்சொல்லி கேட்டதாகவும், ‘பணம் கேட்டு வந்தாயானால் உனது ஓரே பையன் இனி உயிரோடு இருக்கமாட்டான்’ என கட்சிக்காரன் மிரட்டியதாகவும் அதனால் ஏமாந்த விற்பனையாளர் கட்சிக்காரன் மீது மோசடி வழக்கு பதிந்து அது நடந்து கொண்டிருப்பதாகவும் பின்னாளில் கேள்விப்பட்டேன்.

இது எங்களை மேலும் அச்சுறுத்தும் செய்தியாக இருந்தது. ஆனாலும் மனம் தளராமல் கட்சிக்காரனிடமிருந்து எங்கள் குடியிருப்பை காப்பாற்றும் முயற்சியில் நம்பிக்கையுடன் செயல்பட்டோம்.

 
 
ஒரு SWOT ANALYSIS மாதிரி ஒரு Ground state analysis செய்தேன்.

எங்களுக்கு கட்சிக்காரனால் சொத்துக்கும் உயிருக்கும் ஆபத்து வரலாம். ஆக நாங்கள் பாதுகாக்க வேண்டியவைகளுக்காக நாங்கள் செய்ய வேண்டியதை யோசித்தேன். தீவிர யோசனைக்குப் பிறகு பட்டியலிட்டேன்.

முதலில், எங்கள் உயிருக்கு அபாயம் இருப்பதாக காவல் துறையினருக்கு மனுச்செய்து குறைந்த பட்சம் ‘நாங்கள் முன்னெச்சரிக்கையோடு இருக்கிறோம் என்பதைக் காட்டினாலே அது கட்சிக்காரனுக்கு ஒரு deterrent ஆக இருக்கும் என நினைத்தேன். அப்படி எங்களுக்கு ஏதேனும் நடந்தால் முதலில் சந்தேக வலைக்குள் அவன்தான் வருவான் என்பது அவனுக்கும் தெரியுமாதலால் இதில் ஓரளவுக்கு பாதுகாப்பு எங்களுக்கு இருக்கும் என தோன்றியது.

இரண்டாவதாக எங்களது குடியிருப்பை (apartment) அவன் அப்படியே வாங்கிவிட வேண்டும் என்கின்ற நோக்கம் எவ்வகையிலும் நிறைவேறாது என அவன் புரிந்து கொள்ளும்படி செய்யவேண்டும். இவைகளை எப்படி செய்யமுடியும் என்பதை தீர்மானிக்க நான் என் கையிலிருந்த ஆவணங்களை கூர்மையாக பரிசீலிக்க ஆரம்பித்தபோது பல தகவல்கள் தெரியவந்தது.

அவைகள்:

1.   குடியிருப்பில் உள்ள மூண்றாவது மாடியில் கட்டப்பட்டு விற்பனையாளரின் வசம் இருந்த 2000 சதுர அடிகள் கொண்ட வீடு CMDA வின் அனுமதி பெறாமல் கட்டப்பட்டிருந்தது.

2.   குடியிருப்பில் உள்ள 10 வீடுகளும் 30 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டிருந்தாலும் 7 வீடுகளுக்கு மட்டுமே ஆவணங்கள் தயார் செய்யப் பட்டு விற்கப்பட்டிருக்கின்றன. மீதி 3 வீடுகளும் விற்பனையாளரின் அனுபவத்தில் இருந்திருக்கிறது.

3.   விற்பனையாளர் தன் வசமிருந்த 3 வீடுகளை கட்சிக்காரனிடம் தற்போதுதான் விற்றிருக்கிறான். அவைகளுக்கான ஆவணங்களும் விற்பனையாளரால் தற்போதுதான் உருவாக்கப் பட்டிருக்கின்றன. 3 வீடுகளில் மூண்றாவது மாடியிலிருக்கும் அனுமதி பெறாத கட்டிடம் கட்சிக்காரனின் மனைவியின் பெயரிலும், முதல் மாடியில் இருக்கும் ஒரு வீடு கட்சிக்காரனின் தகப்பனார் பெயரிலும், தரை தளத்திலுள்ள வீட்டை கட்சிக்காரன் தனது பெயரிலுமாக விற்பனை ஆவனங்கள் தயாரித்து சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

4.   விற்பனையாளர் தற்போது விற்றுள்ள இந்த மூண்று வீடுகளுக்கான ஆவணங்களில் புதிதாக கார் நிறுத்துமிடமும் (Car parking) மற்றும் பொதுவிடத்தின் அளவுகளாக தற்போது உள்ள உண்மையான அளவில் 4 அடிகள் குறைவாகவும் Schedule B யில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது மறைமுகமாக தரை தளத்தில் இருந்த அவனது வீட்டை ஒட்டி உள்ள இந்த 4 அடிகளை உபயோகிக்கும் உரிமை கீழ் வீட்டிலுள்ள கட்சிக்காரனுக்கு மட்டுமே உள்ளது.

இதைத் தவிர கட்சிக்காரனைப்பற்றி விசாரித்ததில் அவனது மனைவியின் தாயாரோ, தாயார் வழி பெண் உறவினரோ ஒருவர் மதுராந்தகத்தில் அப்போதைய ஆளுங்கட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பவராகவும் அவரது இடையூரால்தான் காவல் நிலையத்தில் இருக்கும் ஆய்வாளர் இந்தக் கட்சிக்காரருக்கு ஆதரவாய் இருக்கிறார் எனவும் தெரிந்தது.

இது மட்டுமல்லாது வேளாச்சேரியிலும் இதே போன்று  ஒரு பெரும் சொத்தை வளைத்துவிட இந்தக் கட்சிக்காரனே பிரயத்தனப்பட்டுக் கொண்டிக்கிறான் என்பதை உறுதி செய்யும் வகையில் ஒரு ஆவணமும் எங்கள் கையில் கிடைத்தது.

உடனே கையில் இருந்த ஆவணங்களையும் மற்றும் இதுவரை காவல் நிலையத்தில் கட்சிக்காரன் மற்றும் விற்பனையாளர் ஆகியோர் மீது நாங்கள் கொடுத்த புகார்கள் அவைகளின் CSR நகல்கள் ஆகியவைகளையும் வைத்து எங்கள் குடியிருப்பில் நிலவும் அசாதாரணமான நிலைமை குறித்து விரிவாக ஒரு புகாரை தயார் செய்து காவல் துறை ஆணையரை நேரில் சந்தித்து புகார் மனுவை கொடுத்தோம்.

இந்த Defensive action எடுத்து முடிந்தவுடன் Offensive action ஆக எங்களது குடியிருப்பில் இருக்கும் அனுமதி பெறாத மூண்றாவது தளத்தினை இடிப்பதற்கான நீதிமண்ற ஆணையையும் அது குறித்து CMDA வுக்கு ஒரு அறிவுறுத்தலையும் கேட்டு ஒரு வழக்கு Assistant City Civil Court ல் தொடர்ந்தோம். அந்த மனுவிலேயே எதிராளியான கட்சிக்காரர் குடியிருப்பின் பொது இடத்தை ஆக்கிரமிக்க செய்யும் முகாந்திரங்களையும் விளக்கி அதைத் தடுக்கவும் கோரி வழக்கு தொடுத்தோம். அதே வழக்கிலேயே குடியிருப்பின் பொது இடத்தில் ஏதும் கட்டுமானப்பணி நடக்காமல் தற்போதைய நிலையே நீடீக்கும்படி ஒரு Status Quo உத்தரவும் பெற்றோம்.

ஆனால் எங்களது இந்த முயற்சிகளால் கட்சிக்காரன் சற்றும் சளைத்ததாய்த் தெரியவில்லை.

நாங்கள் தயாராகும் முன்னரே வேறு ஒரு சம்பவமும் நடந்தது.

 
ஒரு நாள் காலை லாரியில் வந்திறங்கிய கூலி ஆட்கள் எங்களது குடியிருப்பின் பொது இடத்தில் சுவர் கட்டும் நோக்கில் தோண்டத் தொடங்கினர். குடியிருப்பின் வாயிலில் மணலும், சிமெண்டும் செங்கல்லும் வந்து இறங்கியது.

கட்சிக்காரனும் அவனது மனைவியும் குடியிருப்பின் வாயிலில் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நின்றனர். கூடவே ஒரு பத்து அடியாட்களும் இருந்தனர்.

எதுவும் செய்ய இயலாமல் எங்கள் குடியிருப்பில் இருந்தோர் கைகளைப் பிசைந்து கொண்டு கலக்கத்துடன் இருந்தோம்.”

பேசியபடியே இருந்த நண்பர் மறுபடியும் பதட்டத்திற்குள்ளானார். நான் சற்று நீர் அருந்துங்கள் என அவரது கவனத்தை திருப்பி அவரை ஆசுவாசப் படுத்தினேன்.

 

என் கையிலிருந்த தம்ளரை வாங்கி நீர் அருந்தியவர் வெகுநேரம் கழித்தே மறுபடி தொடர்ந்தார்.

நண்பர் தொடர்ந்தது அடுத்த பதிவில்.
 

அன்பன்,

வேதாந்தி.

 

 

4 comments:

  1. உங்களின் ஆய்வு ஆச்சரியம்...

    கட்சிக்காரன் விடாக்கண்டனாக இருப்பான் போல...

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு இது do or die situation. அதனால் அவர் இத்துனை முயற்சி எடுத்ததில் ஆச்சரியமில்லை.

      Delete
  2. ரொம்பவும் பிரயத்தனப்பட்டு இருப்பது புரிகின்றது!

    ReplyDelete
  3. முடிவில் தர்மமே வென்று இருக்கும் என்று நம்புகிறேன் !

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...