Followers

Saturday, May 30, 2015

பிராமணாள் மட்டும்.. SC/ST PLEASE EXCUSE..


30.5.15

பிராமணாள் மட்டும்.. SC/ST PLEASE EXCUSE..

இந்தப் பதிவைப் பார்ப்பவர்கள் நான் ஏதோ மிகவும் பிற்போக்கான எண்ணம் கொண்டவன் என நினைக்க வாய்ப்புண்டு.

சிலர் நான் பார்ப்பானராகவோ அல்லது பண்டாரமாகவோ இருக்கக் கூடும் என எனது வகையறா பற்றி நாகரிகமில்லாமல் தங்களை கீழிறக்கிக் கொண்டு வசைபாடி தங்களது தரா தரத்தை வெளிப்படுத்தலாம்.

எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனாலும் நான் பேசப்போகும் இந்த செய்தி உண்மையாலுமே எனது மனதைக் குடைந்து கொண்டிருக்கும் செய்திதான்.

ஏற்கனவே எனது நண்பரது அனுபவத்தை வைத்து (இதோ சுட்டி) ‘ஒதுக்கீடுகளும் அரசாணைகளும்  மட்டுமே சமுதாயத்தில் சம நிலையைத் தருமா?’ என கேட்டிருக்கிறேன்.

இந்தப் பதிவு தற்போது நான் படித்த செய்திகளின் வெளிப்பாடு.

30.5.2015 தேதியிட்ட The Hindu பத்திரிக்கையில் திரு. சூரியகாந்த் வாமோர் (Thiru. Suryakant Waghmore, Associate Professor and Chairperson, Centre for Social Justice and Governance, Tata Institute of Social Sciences, Mumbai and DAAD Visiting Professor, Centre for Modern Indian Studies, University of Gottingen) என்பவர்  சமீபத்தில் நாளிதழில் வந்த செய்தி குறித்தும் அது சுட்டுகின்ற அறிகுறிகளைக் குறித்தும் விளக்கியிருக்கிறார் (Prejudice disguised as politeness).

செய்தி இதுதான்:  மும்பையிலிருக்கும் திருமதி பத்மா ஐயர் ஓரினச் சேர்க்கையாளரான தனது மகனுக்கு ஒரு இணை தேடி கொடுத்த விளம்பரத்தில் caste no bar (though Iyer preferred) என கொடுத்திருப்பது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

இது தவறா?

அவர் தனது கட்டுரையில் “Does choosing to marry someone from one’s own cast makes one casteist?” எனவும் வினா எழுப்பியிருக்கிறார். இது மட்டுமல்லாது தற்போது இணை தேடி வரும் விளம்பரங்களில் “Caste no bar” எனச் சொல்லிவிட்டு அடைப்புக் குறிக்குள் “SC/ST, Please excuse” எனச் சொல்வது மிகுதியாகி இருக்கிறது என்கிறார்.

இது இருக்கட்டும்.

சமீபத்தில் ஒரு பதிவிற்கு இன்னொரு பதிவாளார் தனது மறுமொழியில் ‘வீடு வாடகைக்கு விடும் பிராமணர்கள் பிராமணர்களுக்கு மட்டும் வீடு என அர்த்தம் தொனிக்க “Vegetarians only” என அறிவிப்பு பலகை எழுதிவைப்பது நாகரிகமா என சாடியிருக்கிறார்.

இங்கு எனக்கு இரண்டு சந்தேகங்கள்:

1.(அ). தனது இணையைத் தேடிக்கொள்ளும் உரிமை ஒரு மனிதனுக்கு இருக்கிறதா இல்லையா? அப்படி இருக்கையில் அவனது/அவளது விருப்பப்படி இணையைத் தேர்வு செய்வதில் - including caste - தவறென்ன? இதில் மற்றையோர்கள் தலையிடுவதோ அல்லது தங்களது கருத்துக்களைச் சொல்வதோ அவர்களது அடிப்படை உரிமையில் தலையிடுவதாய் ஆகாதா?

 (ஆ). ஒருவன் தனது சம்பாத்தியத்தில் கட்டிய தனக்குச் சொந்தமான ஒரு வீட்டை வாடகைக்கோ அல்லது மற்ற பயனுக்கோ அவனது விருப்பப்படியாக தேர்வு செய்தவர்க்கு – incuding caste -  விடுவது தவறா? அவனது உழைப்பில் பங்கேற்காதவன் பொதுவுடைமையை பேசி அதைப் பற்றி கருத்துச் சொல்வது நாகரிகமா? இந்த அளவுக்கு ஒருவருடைய வாழ்வில் மற்றவர் உள் நுழைய அனுமதித்தால் நாளை அந்த அனுமதியை தங்களது உரிமையாக எடுத்துக் கொள்ளக் கூடிய அபாயம் இல்லையா?

இரண்டாவது:

திரு. சூரியகாந்த் வாமோர் தனது கட்டுரையில் “The ‘SC/ST, Please excuse’ disclaimer in some matrimonial ads is the new ‘purity line’ that marks SCs and STs as undesired partners” என தெளிவாக குறிப்பிடுகிறார். இதை caste discrimination என்று சொல்வதை விட caste preference எனச் சொல்லலாம்.

இந்த நிலைக்குக் காரணம் என்னவாக இருக்கும்?

ஒரு தாயர் ஓரினச் சேர்க்கையாளனாகிய தன் மகனுக்கு இன்னுமொரு ஓரினச் சேர்க்கையாளரை திருமணம் செய்து வைக்கத் துணியும் போது  இந்த caste preference ஐ விட தயங்குவதேன்?

எனக்கென்னவோ SC/ST களின் பாதுகாப்புக்காக ஏற்படுத்தப்பட்ட சட்டங்களை சிலர் தவறான முறையில் பயன்படுத்துவதே அவர்களுக்கு எதிராக திரும்பியிருக்குமோவெனத் தோன்றுகிறது. மற்றவர்களிடையே ஒரு பொதுவான அச்சம் அவர்களுக்கெதிராய் திரும்பியிருக்கலாம் எனத் தோன்றுகிறது

இதே போலத்தான் பெண்களைக் காக்க போடப்பட்ட சட்டங்களையும் சிலர் தவறான முறையில் பயன்படுத்துவதால் தற்போதைய இளைஞர்கள் திருமணம் செய்துகொள்ள தயங்குகின்றனர். அதனாலேயே அவர்கள் non committal living together ஐ prefer செய்கின்றனர் எனவும் படுகிறது.

மேற்சொன்னவைகள் ஒருவகையான cultural evolutionary process ஆகத்தான் எனக்குத் தோன்றுகிறது.

மேலும் குறிப்புகளுக்கு:

LEGAL TERRORISM:
MISUSE OF SC/ST ACT :MISUSE OF DOWRY ACT

இன்னமும் பேசுவோம்.

அன்பன்,
வேதாந்தி.

 

 

Friday, May 29, 2015

காதல் என்ன சார் செய்யும்..?


29.5.15

காதல் என்ன சார் செய்யும்..?

 
 
உருக வைக்கும் உறைய வைக்கும்
உலகறிந்தது போல் உளர வைக்கும்.
 

ஏங்க வைக்கும் தூங்க வைக்கும்
எடுத்தெறிந்து பேச வைக்கும்.


மதர்க்க வைக்கும் மிதக்க வைக்கும்
மெல்லிசையை உணரவைக்கும்.
 

பெருக வைக்கும் அமுதம் பருகவைக்கும் -வெட்டிக்
கவிதைக்கு புதுப் புது பொருளை புரியவைக்கும்.
 

கவியெழுதி கதையெழுதி
கிறுக்கனாகி


காத்திருந்து வேர்த்திருந்து
காலந்தெரியா பித்தனாகி
 

உள்ளம் தொலைத்து உருமாறி
உறவின் அழுத்தத்தால் தடுமாறி
 

உங்களை கனியவைத்து
கைதியாய்ப் பணியவைக்கும் அந்தக் காதலியை...

காதலிச்சுப் பாருங்க சார்…
சும்மா அதிருமில்ல...ஒரு மாறுதலுக்கு,

அன்புடன்,
வேதாந்தி.

 

 

Thursday, May 28, 2015

வாழ்க்கையின் நோக்கம் வாழ்வைத் துறத்தலா..?


28.5.15

வாழ்க்கையின் நோக்கம் வாழ்வைத் துறத்தலா..?

வாழ்வின் தேவைகளை துறந்தவன் துறவி. அவனது வாழ்வு துறவற வாழ்வு. ஆனால் வாழ்வைத் துறத்தல் என்பது இல்லறத்தானுக்கு சாத்தியமா?

இல்லற வாழ்வோ அல்லது துறவற வாழ்வோ எல்லாமே மனிதரை “துறத்தல்” என்னும் ஒற்றை நோக்கான இறுதி நோக்கிற்குதான் தள்ளிச் செல்கிறது. எனவே இல்லறத்தானும் துறவறத்தானும் ஒரே நோக்கிற்கு வெவ்வேறு திசையில் பயணிக்கின்றனர் என்பது சற்றுச் சிந்தித்தால் விளங்கும்.

இல்லறத்தார் வாழ்வை ஏற்கத்தான் தம்மை தயார் படுத்திக் கொள்கின்றனர். ஒரு சராசரி மனிதரின் வாழும் வயது எழுபது எனக் கொண்டால் தனது முப்பத்தைந்து வயது வரையில் வாழ்வை ஏற்று வாழ தன்னைத் தயார் படுத்திக் கொள்கிறான். தனது உடல், மனம், அறிவு மற்றும் சூழலை வாழ்வை ஏற்று வாழத்தகுந்தபடிக்கு வளர்த்து தன்னை தயார் படுத்திக் கொள்கிறான். அதனை ‘வாழ்வை வளப்படுத்திக் கொள்ளுதல்’ எனச் சொல்வர்.
‘உன்னால் முடியும்’,

‘வானமே எல்லை’

‘வாழ்வை வாழக் கற்றுக் கொள்வோம்’

‘அனைத்திற்கும் ஆசைப்படு’

இதெல்லாம் தற்போதைய ‘துறவி’களால் அளிக்கப்படும் உபன்யாச தலைப்புகள்.

இப்போது எல்லாம் துறந்த துறவிகளே கார்ப்போரேட்டுகள் அளிக்கும் டிரெய்னிங் புரோகிராம்கள் போல தன்னைத் தேடி வருபவர்களுக்கு மேலும் மேலும் வாழ்வில் போதை ஏற்றி முன்னே ஓடும்படிக்கும் ஓடி ஜெயிக்கும்படிக்கும்படியாக உபதேசங்களைச் செய்வதனால் எல்லோரும் வெற்றியைத் தவிர வேறேதும் சிந்தனையின்றி வெறிகொண்டு பந்தய மைதானத்தை சுற்றிப் பறக்கின்றனர்.

இதனால் தற்போதைய கார்ப்போரேட்டுகளுக்கும், ‘கார்ப்போரேட்’ துறவிகளுக்கும்தான் லாபம். இவைகள் மனிதனை வாழ்நாட்களை ஒருவித மயக்கத்துடன் கடத்தத்தான் பயன்படுமே ஒழிய அவனுக்கு வாழ்வின் நோக்கத்தையோ அல்லது ஒரு தெளிவையோ தரப் பயன்படாது.

ஓட்டத்தின் இறுதியில் மூச்சு வாங்கி நிற்கும் மனிதன் எதையும் பெற்றவனாகத் தெரியவில்லை. மனத் தெளிவும் பெறுவதில்லை. இதை அவன் உணரும்போது காலம் கடந்ததாகி விடுகிறது. மேலும் இத்தகைய ‘வாழ்வை ஏற்றல்’ முறைக்கு தன்னை தயார் செய்து கொண்டவன் நாற்பத்தைந்து வயதிற்குமேல் தான் பெறவேண்டிய ‘வாழ்வைத் துறத்தல்’ என்ற முறைக்கு பயிற்சி இல்லாமல் கலங்கி, குழம்பிப் போகிறான்.

இருபத்தைந்து வயது வரை வாழ்வை ஏற்றுக்கொள்வதற்குத் தேவையான உடல் ஆரொக்கியம் பேணி உடல் மற்றும் அறிவை வளர்த்து ஆளாகிறான். முப்பத்தைந்து வயது வரை குடும்பத்தை வளர்த்து குடும்பப் பொறுப்பேற்று வாழ்வை நடத்துகிறான். நாற்பத்தைந்து வரை தான் சார்ந்து நிற்கும் தொழில் நிறுவனத்திற்கோ அல்லது தனது தொழில் வளர்ச்சிக்கோ தேவையானவைகளை பெருக்கி தனது உருவாக்கலை மேம்படுத்துகிறான்…

இப்படி வளரும் அவனது வாழ்வில் அவனுக்கு ‘தன்’னைப்பற்றியோ ‘தனது’ உண்மையான தேவைகளைப் பற்றியோ சிந்திக்க நேரம் கிடைக்காமல் அவனது வாழ்வு நகர்கிறது.

இப்படி நகரும்போதுதான் ஐம்பதைத் தொடும்போது அவனது சிந்தனைகளை திசை மாற்றும் வகையில் கட்டாய மாற்றங்கள் ஏற்படுகின்றன. உடல் ஆரோக்கியத்தில், மன ஆரோக்கியத்தில் மற்றும் உறவுகளின் ஆரோக்கியத்தில் நடக்கும் இந்த மாற்றங்கள் அவனை வெகுவாக பாதிக்கின்றன.

இவைகள் யாவும் தான் இதுவரை ஏற்று நடத்திய வாழ்வையும் அதனால் தானடைந்த பலன்களையும் கேள்வி கேட்கத் தூண்டுகிறது. அதன் விளைவாக இந்த வாழ்வில் ‘தனக்கு’ப் பலனில்லை என அறிகிறான். எதிர்பார்ப்பு பொய்த்ததால் ஏமாறுகிறான். மனம் தளர்கிறான் சிலர் ஆன்மீகம் பக்கமாய்த் திரும்புகின்றனர். அதுவரை பெர்னார்ட்ஷா, பெரியாரைப் பேசியவன் ராமகிருஷ்ணரையும், ரமணரையும் பேசுகிறான். ஆனாலும் இந்த ஆன்மீகத் தேடலை தனது ஏமாற்றங்களுக்கு ஒரு மருந்தாய்த்தான் எடுத்துக் கொள்கிறானே ஒழிய தனது வாழ்வின் பொருளை புரிந்து கொள்ளவேண்டி முயற்சி செய்ய அல்ல. ஆன்மீக உரைகள் மனதிற்கு சற்று நிம்மதியைத் தருவதை உணர்ந்து முடிப்பதற்குள் இறந்து விடுகிறான். அவனது வாழ்வு நிறைவுற்று முடிந்ததா இல்லையா எனும் கேள்விக்கு விடை கிடைக்காது. ஆனால் இறக்கும் போது பலவித ஏக்கங்களுடனும், ஏமாற்றங்களுடனும் இறந்திருப்பான் என உறுதியாகச் சொல்லலாம்.
இப்படி நாம் இறக்கலாமா?

இறப்பை எப்படி ஏற்றுக்கொள்வது?

வாழும் வரை வாழ்ந்து இறப்பு வரும்போது அப்படியே இறப்பது நல்லதா..?

அல்லது வாழ்வை ஏற்க நாம் தயாரானதைப்போல வாழ்வைத் துறக்கத் தயாராகி, வாழ்வைத் துறந்து இறப்பை இன்பமுடன் ஏற்று இறப்பது நல்லதா..?

ஒருமுறை எனது நண்பர், பிரம்ம குமாரிகள் சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டவர், “பணி ஓய்வுக்குப் பின்னர் வீட்டில் சும்மா இருப்பதற்கு ஏதேனும் வேலைக்குச் சென்றால் பற்றாக் குறைக்கு உதவுமல்லவா?” என்ற என் கேள்விக்கு சொன்னபதில் என்னை திகைக்க வைத்தது.

“அப்படி இல்லை. இன்னமும் போராடிக்கொண்டே இருக்கக் கூடாது. இந்த வயதில் விருப்பு, வெறுப்பு, எதிர்பார்ப்பு, ஏமாற்றம், தேவை, போராட்டம் ஆகிய வாழ்வுக்குத் தேவையானவைகள் இருக்கக் கூடாது. அப்போதுதான் நம் உடலிருந்து உயிர் அழகாகப் பிரியும்… அமைதியான இறப்பு கிடைக்கும்..” என்றார்.

ஆகா… என்னவொரு விளக்கம். நாம் வாழ்வைத் துறக்கவேண்டும் என்ற எண்ணத்தை கட்டாயமாகவேனும் நம்முள் திணிக்கத்தான் இறைவன் நமக்கு மூப்பையும் தளர்ச்சியையும் கொடுத்திருக்கிறானோ..?

நோய், மூப்பு, தளர்ச்சி, ஏமாற்றம் ஆகியவைகள்தான் ஆசான்களைப் போல நம்மை வழி நடத்தி வாழ்வைத் துறத்தலுக்கு நம்மை தயார் படுத்துகின்றனவோ?.

வாழ்வைத் துறத்தலுக்கு, நமது அறிவிற்கு அப்பாலுள்ள ஞானத்தை வேண்டி நாம் கற்ற, நமக்குத் தெரிந்த அறிவைத் துறத்தல் வேண்டும், நமது ஆசைகளை வளர்த்து பெருக்கிக் கொண்ட நமது உறவுகளைத் துறக்க வேண்டும், பொருளைத் துறக்க வேண்டும், ஆசையைத் துறக்க வேண்டும், வெறுப்பைத் துறக்க வேண்டும், அப்படியே நாம் வாழ்வைத் துறக்க வேண்டும்.

சிலர் வாழ்வை ஏற்காமலேயே இந்தத் துறத்தலை ஏற்றுக் கொள்வதால் துறவி ஆகின்றனர் - இரட்டை உயர்வு கிடைத்த மாணவனைப்போல. விவேகானந்தர், ராமகிருஷ்ணர், ரமணர், வள்ளலார் ஆகியோரை இதுபோன்ற ஒரு வழியை அடைந்தவர்களாக உதாரணம் காட்டலாம்.

எனவே, இல்லறம் அல்லது துறவறம் ஆகிய எந்த ஒரு அறவழியைத் தேர்ந்தெடுத்தாலும் எதையும் துறக்கத் தயாராகாமல் இறந்தால் அந்த வாழ்வு சிறந்ததாக ஆகாது என்பது மட்டுமல்ல அது நமது பிறப்பைப் பற்றி எந்த ஒரு சிந்தனையும் அற்றுப்போய் இறந்து நம் வாழ்வை வீணடித்ததாகிவிடும் அல்லவா?

ஆகவே வாழ்வின் முற்பகுதியில் வாழ்வை ஏற்றுக் கொள்ளத் தயாராகி நாம் வாழ்வதைப் போல வாழ்வின் பிற்பகுதியில் நாம் வாழ்வைத் துறக்கத் தயாராகவும் கற்றுக் கொண்டு நம் வாழ்வின் ஒரு பகுதியான இறப்பையும் குறையின்றி ஏற்றுக்கொள்ள முயலுவோம். வாழ்க்கையின் நோக்கத்தை முழுமையக்குவோம்.
இன்னமும் பேசுவோம்.

அன்பன்,
வேதாந்தி. 

Monday, May 25, 2015

கருநாகம் தீண்டிய காராம் பசு..!25.5.15
கருநாகம் தீண்டிய காராம் பசு..!

ஊ (ழ்)ழல் வினை…II

 

அந்த மரணம் குடும்பத்தை திக்குதிசை தெரியாது சுழட்டிப் போட்டது

அவர் இறந்ததைத் தொடர்ந்து அந்த ஒருவாரம் அவரது கைபேசிக்கு வந்த அத்துனை அழைப்புகளுமே தொழிலதிபர்களுடையது. அனைவருமே அவரது இறப்பைக் கேட்டு அனுதாபம் கொண்டாலும் அவர்களது பேச்சில் இருந்த ஏமாற்றத்தை மறைக்க முடியவில்லை.

அதுவரை அவருடனே இருந்த அவரது நண்பரும் அதற்கப்புறம் விலகி விட்டார். இருவரும் சேர்த்து வைத்த பணத்தைப் பற்றி மூச்சு விடவில்லை. ‘எனக்கேதும் தெரியாதம்மா..’ என்று கை விரித்து விட்டார். இறந்தவர் தங்களிடம் இருந்த பணத்தைப் பற்றியோ அல்லது தம்மைப் பற்றியோ எதுவும் சொல்லாதது அவருக்கு அனுகூலாமாய்ப் போயிற்று.

ஈமச் சடங்குகளை முடிந்ததும் அவரவர்கள் உச்சுக் கொட்டிக்கொண்டு இடத்தைக் காலி செய்தனர். வந்திருந்த அலுவலக நண்பரொருவர் இறந்தவரின் பெண்ணிடம், “compassionate ground ல் உனக்கு வேலை கிடைக்குமம்மா.. அலுவலகத்திற்கு ஒரு நாள் வந்து விண்ணப்பித்துச் செல் எனச் சொல்லிச் சென்றார்.

சுக்கானை இழந்த கப்பலாக திசை தடுமாறியது குடும்பம். குடும்பத் தலைவியாய் அந்த அம்மையாருக்கு பொறுப்பேற்றுக் கொள்ளத் தெரியவில்லை. அந்தப் பெண் கல்லூரிக்குச் சொல்வதை நிறுத்திவிட்டு வேலைக்காக அலைந்தார். இன்னமும் ஒரே செமஸ்டர் இருந்த நிலையில் தனது முது நிலை அறிவியல்  பட்டப் படிப்பை நிறுத்தியது தனக்கு பெரும் இழப்பு என அந்தப் பெண்ணிற்கு தெரியவில்லை. அப்படி தங்கள் குடும்பத்திற்கு ஒரு வருவாய் தேவையான சூழலில் தன் தாய் தனக்கிருந்த தகுதியை வைத்து வேலையில் சேர்ந்து  பின்னர் தான் அதைக் கொண்டு படித்து முடித்து தனது குடும்பத்தை கரையேற்றலாம் என்றும் தோன்றவில்லை.

தன் கணவனை இழந்த தாயோ, தனக்கு தன் கணவனுக்குப் பிறகு இந்த வேலை ஒரு பாதுகாப்பாக இருக்கும் எனவும் புரியவில்லை. எல்லாம் ஒரு மாயை போல் நடந்து விட்டது. அந்தப் பெண்ணிற்கு வேலை கிடைத்து விட்டது. ஆனால் அதற்கப்புறம் அவரது போக்கே மாறிவிட்டது.

தனது கல்லூரிச் சினேகிதன் என்று ஒருவரை அடிக்கடி அழைத்து வர ஆரம்பித்தார். ஏதோ திக்கற்ற வீட்டிற்கு உதவுவதாய் பாவனை செய்து கொண்டு அந்த நபரும் அடிக்கடி வீட்டிற்கு வந்தார். தனக்கு உறவுப் பாதுகாப்பும்,  பொருளாதாரப் பாதுகாப்பும் இல்லாததால் அந்தத் தாயும் ஏதோ நல்ல எண்ணத்தோடு அவன் வருவதாய் நினைத்து அதை பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு கொடும் கருநாகத்தை வீட்டிற்குள் அனுமதித்திருக்கிறோம் என்று அவர் கிஞ்சித்தும் சந்தேகப் படவில்லை.

தன் மகளின் ஆண் நண்பரது நடத்தையில் சில மாறுதல்கள் தெரியவே, அந்தத் தாய் தன் மகளை கண்டித்தார். இது குறித்து அவ்வப்போது சில சச்சரவுகளும் தோன்றியபடி இருந்தது. இந்த நிலையில்தான் அந்த அம்மையாருக்கு தன் மகளின் சினேகிதன் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் எனத் தெரியவந்தது. அதற்கப்புறம் மிகக் கடுமையாக எதிர்க்க ஆரம்பித்தார்.

தொடர்ந்து இரண்டு மாதங்கள் ஒரே போராட்டமாக இருந்தது. அந்தப் பெண்ணோ மிகப் பிடிவாதமாக இருந்தார். அழுது புரண்டு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் தன் பெண் இரங்காததைக் கண்டு விக்கித்துப் போனவர் அடுத்து தன் மகள் தான் கர்ப்பமாய் இருப்பதாய் சொன்னதைக் கேட்டு மூச்சடைத்துப் போனார்.

அவ்வளவுதான். எல்லாம் போயிற்று.

அந்த மோசக்காரன் எல்லாவற்றையும் திட்டம் போட்டே நிகழ்த்தியிருக்கிறான். தன்னுடன் பழகிய பெண்ணுக்கு compassionate ground ல் வேலை கிடைத்துவிடும் என்று தெரிந்ததால் பழக்கத்தை நெருக்கமாக்கிக் கொண்டிருக்கிறான். ஆனால் தான் தாழ்த்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் என்பதாலும் அந்தப் பெண் முதலியார் வகையறா என்பதாலும் இந்தத் திருமணம் நடக்க வாய்ப்பில்லை என சந்தேகித்திருக்கிறான். அதனாலேயே அந்தப் பெண்ணை மோச வார்த்தைகளால் வசியப்படுத்தி கர்ப்பமாக்கி விட்டிருக்கிறான்.அதற்குப் பின் வயிற்றில் பிள்ளையைச் சுமந்தபடி இருந்த தன் பெண்ணிற்கு வேறு வழியில்லாமல் அந்த மோசக்காரனுடனேயே திருமணம் நடத்தி வைத்தார் அந்தத் தாய். ஆனாலும் அவரது மனம் ஒப்பவில்லை. அடிக்கடி வீடே போர்க்களமானது. அந்த மோசக்காரனும் அந்தத் தாயின் அபல நிலை முழுக்கத் தெரிந்தவனாக வெறுப்பைக் கக்கி சீறிக் கொண்டே இருந்தான்.

அடுத்த பதினைந்து நாளில் மற்றுமொரு இடி.

அந்த மோசக்காரனுக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தது தெரியவந்தது. தனது மனைவியை பெற்றோருடன் சேலத்தில் வீட்டில் விட்டுவிட்டு இங்கு சென்னையில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்திருக்கிறான். அப்போதுதான் இந்தப் பெண்ணின் அறியாத்தனத்தை உபயோகித்துக் கொண்டு அவளுக்கு வேலையும் கிடைத்துவிடும் என்பதால் அந்த பணத்திற்காக வேண்டி அவளைக் கெடுத்து வாழ்வைப் பாழாக்கி இருக்கிறான்.

இதைத் தெரிந்தவுடன் மகளின் தாயாருக்கு பித்தே பிடித்துவிட்டது.

அவனுடன் நேருக்கு நேராகவே வெகுநேரம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். அவரது போக்கு மிகவும் மோசமாகத் திரும்பியது. ஒரு கட்டத்தில் அவர், தனது மகளை கட்டாயப் படுத்தி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவும் தயங்கமாட்டேன் என அந்த மோசக்காரனை மிரட்ட ஆரம்பித்தார். அந்த மோசக்காரனும் அது நடந்துவிடும் என சந்தேகிக்க ஆரம்பித்தான். அப்படி நடக்கும் பட்சத்தில் தனக்குப் பாதுகாப்பு கிடையது எனவும் உறுதியாக நம்ப ஆரம்பித்தான்.
இந்த நிலையில்தான் ஒருநாள் அந்தத் தாயார் கட்டிலில் மரணித்திருந்தார்.

அவரது மரணம் ஒரு தற்கொலை என சோடிக்கப்பட்டது. அவரது இறுதிச் சடங்கிற்கு வந்திருந்த உறவினர்களில் சிலர் இறந்தவரின் உடலில் சந்தேகப்படும்படியாக தெரிந்த கீறல்களையும் இரத்தக் காயங்களையும் பார்த்து தங்களுக்குள் பேசிக்கொண்டனரே ஒழிய வெளியே வாய் திறக்கவில்லை.

தந்தையை இழந்த இழப்பின் காயம் ஆறுவதற்குள்ளாகவே தாயையும் இழந்த அந்தப்பெண் திக்கற்றுப் போனாள்.

வயிற்றில் பிள்ளையுடன் இருந்த அவளுக்கு பிரசவமும் ஆனது.

இப்போது கையில் குழந்தை. சம்பளத்தை வாங்கியவுடன் ஈட்டிக் காரனைப்போல் பிடுங்கிக் கொள்ளும் கணவன். போதாக் குறைக்கு தினமும் குடும்ப வன் முறை வேறு. ஒவ்வொரு இரவும் அடிபட்டு முகம் வீங்கியபடி அலுவலகம் வருபவரை ஆறுதலுக்கு கேட்கக் கூட ஆட்கள் இல்லை.

பெற்றோரை இழந்து, தனது உயர் கல்வியையும் இழந்து, சூழ்ச்சிக்கு ஆளாகி சிறுவயதில் பிள்ளை ஏந்தி தினம் தினம் குடும்ப வன்முறைக்கு ஆளாகி ஆதரவற்று வாழ்வை இழந்து நிற்கும் அந்தப் பெண்ணின் நிலைக்கு எது காரணம்?

ஒரு மூண்றாவது நபராக இதைக் கேட்கும்போதே இதயம் பிசைகிறதே..தன் பிள்ளை சிரமப்படக்கூடாது என்று எல்லா வசதிகளையும் நெறியற்ற முறையில் பெற்ற பணத்தில் செய்துவைத்த அந்தத் தந்தை இதைப் பார்த்தால் கதறிச் சாக மாட்டானா..?

வசதிகளுக்காக வாழ்வை இழக்கும் அறிவற்றவர்களாக இருக்கிறோமே.. இப்படி நமது நெறியற்ற செயல்கள் நம்மையும், நாம் அன்பு கொண்டுள்ளோரையும் பாதித்து அவர்களது வாழ்வையும் சிதைத்துப்போடும் வல்லமை கொண்டது எனும் தெளிவிருந்தால் தவறு செய்யத் துணிவோமா..?”

கேள்வியுடன் நண்பர் பேச்சை நிறுத்தி துயரச் சிந்தனையில் ஆழ்ந்தார். நான் மௌனம் காத்தேன்.

  மீண்டும் பேசுவோம்.

 

அன்பன்,

வேதாந்தி.

 

 

Saturday, May 23, 2015

ஊ (ழ்) ழல் வினை…


23.5.15

ஊ (ழ்) ழல் வினை…

 
நான் இதை பகிர்ந்து கொள்ளலாமா வேண்டாமா எனத் தெரியவில்லை. இந்த நிகழ்வை நினைக்கும்போதெல்லாம் எனக்கு மனதை பிசைகிறது.

வெகு நாட்களுக்குப் பின் என்னைத் தேடி வந்த என் நண்பர் சொன்ன நிகழ்வுதான் இது. இதை அவர் சொன்னது ஒரு கோணத்தில் - ஊழல் செய்து சேர்த்த பணம் நிற்காது… எனபது அது. ஆனால் இதை நான் சொன்னேனென்றால் ‘சிறுக தப்பு செய்தவன் சிதை படுவான் ஆனால் பெருக தப்பு செய்பவன் பேரும் புகழுடனும் இருப்பானோ’ என நக்கலடிக்க சிலர் காத்துக் கொண்டிருப்பர்.

இதை விட்டு, இந்த நிகழ்வுக்கு காரணமாக நான் கருதும் ‘ஊழ்’ வினையைச் சொன்னேனென்றால் ‘அவரவர் வினைக்குத் தகுந்தவாறு வினையைச் செய்ய உன் கடவுள் என்ன தராசு வைத்துக் கொண்டிருக்கிறானா..?’ என்றும் நாக்கைச் சுழற்றுவார் சிலர். 

எதுவாயிருந்தாலும் நாம் எந்தக் கருத்தையும், அதைச் சொல்வோரையும் குறை சொல்ல முடியாது. கருத்துச் சுதந்திரமும் மனிதரை மனிதர் மதிக்கும் மனித நாகரிகமும் எல்லாவற்றினும் பெரிதல்லவா?

எனவே நான் தற்போது விவரிக்கப்போகும் என் நண்பர் என்னுடன் பகிர்ந்து கொண்ட நிகழ்வுக்கு அந்த நிகழ்வின் ஆரம்பமான, அந்த நிகழ்வையும் அதன் தொடரையும் ( EVENT AND ITS CHAIN ) தொடங்கி வைத்த முதல் பொறியான ( SPARK ) ஊழலைத்தான் முன் நிறுத்தப்போகிறேன்.

வழக்கம்போலவே வந்த நண்பர் நலம் விசாரித்த பின்னர், நான் தற்போது எழுதுவதை நிறுத்தி விட்டேனா என வினவினார். ‘நான் எழுதுவதை நிறுத்தவில்லை நீங்கள்தான் பேசுவதை நிறுத்திவிட்டீர்கள்’ எனச் சொல்லிச் சிரித்தேன். அவரும் சிரித்தார். பின்னர் வழக்கம் போலவே பேச ஆரம்பித்தார்.

“இன்றைய மனிதர்களுக்கு வாழ்வில் நெறியுடன் இருப்பதன் நன்மை புரிவதில்லை.

நல்வழியில் அவ்வைக் கிழவி, தர்மத்தைக் காக்கின்ற நீதி மன்றத்தில் பொய்யுரைத்தவன் குடும்பத்தோடு அழிவான் என்பது மட்டுமன்றி அவனது வீடும் பாழாகும் எனச் சொல்லியிருக்கிறார்.

("வேதாளம் சேருமே வெள் எருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை.")

வெறும் பொய்யுரைத்தவனுக்கே இந்தக் கதியென்றால் துணிந்து நெறியற்ற செயல்களைச் செய்பவர்களது நிலை…?

இன்று நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ளப் போவது அத்தகைய ஒன்றுதான்.

ஏற்கனவே எங்கள் அலுவலகத்தைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். அது தொழிலதிபர்கள் நேரடியாக வந்து காரியத்தைச் சாதித்துக் கொண்டு செல்லும் துறை. இப்போது நான் சொல்லும் நபர் மிக முக்கியமான பதவியில் இல்லையென்றாலும் அத்துனைக் காரியங்களையும் முடித்துத் தரக்கூடியவர் என்று வெளியாட்கள் மத்தியில் பெயரெடுத்திருந்தார். பணத்தைப் பெற்றுக் கொண்டு துணிந்து எல்லாக் காரியங்களையும் செய்து வந்தார். அவருக்குத் துணையாக அதே கேடரில் அவரது நண்பரும்.

பணம் கொழித்துக் கொண்டிருந்தது. அவருக்கு நல்ல மணைவி மற்றும் ஒரு பெண் பிள்ளை. பெண் ஒரு தனியார் கல்லூரியில் முது நிலை அறிவியல் பட்டப் படிப்பு படித்துக் கொண்டிருந்தார். வீட்டில் AC, மற்றும் சகல வசதிகளையும் செய்து கொடுத்து மணைவி மற்றும் பிள்ளையை எந்தக் குறையும் தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தார். எல்லாம் நன்றாய்த்தான் போய்க்கொண்டிருந்தது, அந்த நாள் வரை.

அப்போது புதிதாக தலைமைப் பொறுப்பு ஏற்றிருந்த IAS அதிகாரி மிகவும் கண்டிப்பானவர் மட்டுமல்லாது நடைமுறையில் ஏற்படும் தவறுகளையும் சட்டென புரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்கத் தவறாதவர். சென்னை மாநகராட்சியையே தன் பதவிக்காலத்தில் கலக்கிப் போட்டவர். அவரது கண்ணில் சந்தேகப் படும்படியான ஒரு ஆவணம் பட்டுவிட்டது. அந்த ஆவணம் தொடர்பான தொடர் கோப்பையும் மற்ற ஆவணங்களையும் கேட்டுப் பெற்று தனது சந்தேகம் சரிதானா என்று பார்த்தவருக்கு ஊர்ஜிதமாகிவிட்டது.

அது போலியான ஆவணம். எங்கள் அலுவலகத்திலிருந்துதான் சென்றிருக்கிறது. முறையாக தலைவரிடம் கையொப்பம் பெற்றதற்குப் பிறகு வெளியிடப்படவேண்டிய ஒரு முக்கியமான ஆவணத்தை தலைவரது பார்வைக்கு வராமலேயே யாருடைய கையொப்பத்துடனோ வெளியாகி இருந்தது அந்த ஆவணம். அது தொழிற்சாலை இயங்குவதற்கான அனுமதியை அளிக்கும் முக்கியமான ஆவணமாகும்.

விபரம் தெரிந்தவுடன் அதிர்ந்து விட்டார். பலதரப்பட்ட அதிகார மட்டங்களில் பல செய்திகளை ஆராய்ந்து ஊர்ஜிதப்படுத்தப்பட்டபின்னர் தனது பார்வைக்கு வந்து கையொப்பமான பின் வெளியாகி இருக்கவேண்டிய ஒரு முக்கியமான ஆவணம் இப்படி மலிவாக வெளியாகி இருக்கிறதே என்று கலங்கி விட்டார்.

செய்தியை கசியவிடாது அதன் மூலாதாரத்தை தேடியவர் இறுதியில் நான் சொன்ன நபரிடம் வந்து நின்றார்.

விசாரணைக்கு அவரை அழைத்தவர் நடந்ததை உறுதிப்படுத்தியபின்னர், தனது கடுமையான வார்த்தைகளால் அவரை எச்சரித்து உடனே VRS ல் போகுமாறும் இல்லையென்றால் அவர் மீது விசாரணை நடவடிக்கையைத் தொடர்ந்து அவருக்கு எந்த ஒரு retirement benefit ம் கிடைக்க முடியாதபடி செய்துவிடுதாக கடுமையாக எச்சரித்திருக்கிறார்.

விசாரணை முடிந்து என்னாகுமோ என்ற கலக்கத்திலேயே இருந்திருக்கிறார் சம்பந்தப்பட்டவர். வீடு வந்தவர் முடிவில், குற்ற உணர்வாலோ அல்லது பய உணர்வாலோ உந்தப்பட்டு தனது வீட்டின் மின்விசிறியில் தூக்கிலிட்டுக் கொண்டார்.

குடும்பமே இடி விழுந்தாற்போல் கலங்கிப்போனது.

அவரது மரணம் கூட பெரிய இழப்பல்ல அதைத் தொடர்ந்து நடந்தவைகள் தான் அனைவரது நெஞ்சையும் கலங்கடித்து விட்டது.”

நண்பர் சற்று இடைவெளி விட்டு தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டார். நான் அமைதி காத்தேன். அதற்குள் வந்த தேநீர் சற்று ஆறுதலாய் இருந்தது.

மீண்டும் பேச்சைத் தொடர்வோம்.

அன்பன்,

வேதாந்தி.
மேலும் தொடர: கருநாகம் தீண்டிய காராம் பசு...!
 

 


Monday, May 18, 2015

முட்டாள் பெற்றோர்களும் முரட்டுப் பிள்ளைகளும்…


18.5.15
முட்டாள் பெற்றோர்களும் முரட்டுப் பிள்ளைகளும்…
சில காலத்திற்கு முன் நான் பத்திரிக்கைகளில் படித்த செய்தி மிகவும் மனதைக் கலக்கியது.
தமிழ் நாட்டில் Animal Husbandary பிரிவில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஒரு அம்மையார், அமெரிக்காவிலிருக்கும் தன் ஒரே பிள்ளை தனது மருத்துவச்செலவுக்குக் கூட பணம் அனுப்ப மறுக்கிறான் என்று காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார்.
இதில் என்ன கொடுமையென்றால் அந்த அம்மையாருக்கு திருமணம் முடிந்து வயிற்றில் பிள்ளை இருக்கும் போதே தனது கணவரை இழந்திருக்கிறார். அதற்குப்  பின்னர் மறு மணம் புரியாமல் தனது வாழ்க்கை முழுவதுமே தன் பிள்ளைக்காகவே வாழ்ந்திருக்கிறார். இது யாருடைய உதவியும் இன்றி தனது உழைப்பாலேயே தன் பிள்ளையை அவன் அமெரிக்காவில் சென்று செட்டிலாகும் வரை உயர்த்தியிருக்கிறார். தற்போது தனது முதுமையில் தனக்கு மருத்துவச் செலவுக்கு பணம் அனுப்பச் சொல்லி கேட்டபோது பிள்ளை அந்த அம்மையார் இருக்கும் வீட்டை தன் பெயருக்கு எழுதிக் கொடுத்தால் மட்டுமே பணம் அனுப்புவதாகச் சொல்லியிருக்கிறான்.

 
இதுதான் தன் வாழ்க்கையையே தனக்கென அர்ப்பணித்து மூதடைந்த தனது தாய்க்கு அவன் செய்யும் பிரதி பலன். தனது மகனின் இந்தச் செயல் அவரை மிகவும் வெறுப்படையச் செய்யவே காவல் ஆணையரிடம் புகார் அளிக்கும் வரை சென்றிருக்கிறார் அந்தத் தாய்.
இன்னுமொரு செய்தி. வெகுநாட்களுக்கு முன் படித்தது. நடைபாதையில் சுய நினைவற்றுக் கிடந்த ஒரு மூதாட்டியை உதவும் கரங்கள் மீட்டது. அந்த அம்மையாரது உடல் தேறியவுடன் அவரைப்பற்றி அவரிடம் விசாரித்திருக்கின்றனர். ஆனால் அவர் வாயைத் திறக்கவில்லை.
பின்னர் பெரு முயற்சியெடுத்து அவரைப்பற்றிய தகவலைச் சேகரித்திருக்கின்றனர். அதற்குப்பின்னர் அவரைப்பற்றிக் கிடைத்த செய்தி அதிர்ச்சியூட்டுவதாய் இருந்தது.
அவர் மும்பையைச் சேர்ந்தவர். அவரது கணவருடன் சொந்த அடுக்ககத்தில் குடியிருந்திருக்கிறார். அவரது கணவர் தனது மனைவியின் பொருளாதார பாதுகாப்பிற்காக அந்த அடுக்கு மாடி குடியிருப்பை தனது மனைவி பெயரிலேயே வாங்கியிருக்கிறார். ஆனால் இது எதுவும் அவரை பாதுகாத்ததாகத் தெரியவில்லை. தனது கணவரது இறப்பிற்குப் பின்னர் அவரது திருமணமான ஒரே பிள்ளை தன் தாயை அடித்துத் துரத்தியிருக்கிறான். தாயாரும் வாய் பேசாது வெளியே கிளம்பிவிட்டார். திக்குத் தெரியாது பயணித்தவர் இங்கு சென்னையில் உதவும் கரங்கள் கண்களில் பட்டு மீட்கப் பட்டிருக்கிறார்.
இதில் என்ன ஆச்சரியமென்றால் அந்தத் தாயார் தனது பிள்ளையை தன் வாயால் காட்டிக் கொடுக்கவில்லை. தன்னை இத்துனை இழிவு படுத்தியும் அவனை தரம் தாழ்த்த அந்த அன்னை விருப்பப் படவில்லை.
இதைத்தான் பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்பார்களோ..?
மேற்கண்டவைகளைப் போல இன்னும் பல சொல்லலாம்.
இப்படி ஏன் நடக்கின்றது?
இந்தத் தலைமுறைப் பிள்ளைகள் பெரும்பாலும் தனித்து ஒற்றைப் பிள்ளைகளாகவே இருப்பதால் மிகவும் சுயநலம் சார்ந்து அவர்களது வளர்ப்பு அமைந்து விடுகிறது. எனவே அவர்கள் மற்றவர்களைப் பற்றிய எண்ணமின்றியே வளர்ந்து விடுகின்றனர். ஒற்றைப் பிள்ளையாய் பெற்றால் சிறப்பாக வளர்க்கலாம் என்கின்ற பெற்றோர்களது நல்ல எண்ணம் அவர்களுக்கே எதிராய்த் திரும்பி விடுகிறது.
இது கொடுமையல்லவா?
அது மட்டுமல்ல.  முழுக்க முழுக்க பெற்றோரைச்சார்ந்தே வளரும் பிள்ளைகள் கடைசி வரை அதை உணர்வதேயில்லை. ஏதோ தான்தோண்றியாய் தானே வளர்ந்து நிமிர்ந்து நின்றுவிட்டதாய் ஒரு அகம்பாவம். இதனை முதுமையடையும் வரை எந்தப் பிள்ளையும் உணர்வதில்லை.
மிகக் குறைந்த பெற்றொர்களே தங்களது பிள்ளையின் அரவணைப்பில் தங்களது இறுதிக்காலத்தை கடத்தும் பேறு பெற்றுள்ளனர்.

 
இத்துனை பாடுபடும் பெற்றோர் குறைந்த அளவு பொருளாதார அளவிலாவது தங்களது பாதுகாப்பை பலப்படுத்திக் கொண்டு பிள்ளைகளைச் சார்ந்திருக்கும் நிலையிலிருந்து தப்பிக்கலாம் அல்லவா?
வாழ்நாள் முழுதும் தங்களது பிள்ளைகளின் பாதுகாப்புக்காகவே எண்ணம் மற்றும் உழைப்பைச் செலவிடும் பெற்றோர் தங்களது பாதுகாப்பைப் பற்றி சிறிதும் கவனம் செலுத்துவதில்லையே அது ஏன்?
ஒரு வகையில் பார்த்தால் பெற்றோர்களின் இந்த FINANCIAL AND EMOTIONAL INDEPENDENCE பிள்ளைகளுக்கும் பேருதவியாய் இருக்குமல்லவா? அதற்காகவேனும் பெற்றோர்கள் இது குறித்து சற்று தங்களின் சிந்தனையைச் செலுத்தலாமல்லவா?
பிள்ளைகளின் மேம்பாட்டில் புத்திசாலிகளாக நடந்து கொள்ளும் பெற்றோர்கள் தங்களது பாதுகாப்பில் முட்டாள்களாக நடந்து கொள்வது சரியா?
தன்னைத் தூக்கி வளர்த்து சீராட்டி பாராட்டிய பெற்றொர்களை, தங்கள் மேல் கொண்டுள்ள பாசத்தாலேயே அவர்களை தங்களுக்கு எதிராகத் திரும்ப இயலாதவர்களாக்கி முதுமையில் அவர்களது நெஞ்சில் உரத்து உதைப்பது நியாயமாகுமா? இந்த முரட்டுத்தனத்தினால் தங்களது பண்பை இழப்பதைத் தவிர பிள்ளைகளுக்கு வேறேதேனும் இலாபமுண்டா?
இத்தகைய முட்டாள் பெற்றோர்களும் முரட்டுப் பிள்ளைகளும் சமுதாயத்தில் ஒரு சிக்கல் எனத் தோன்றுகிறது.

 
ஆனாலும் இதுவெல்லாம் மாறுமென நம்பிக்கை வைப்போம்.
இன்னமும் பேசுவோம்.
அன்பன்,
வேதாந்தி.
 
 

 

Saturday, May 16, 2015

அனுமனுக்கு மறுக்கப்பட்ட அலவன்சு..!


16.5.15

அனுமனுக்கு மறுக்கப்பட்ட  அலவன்சு...!          பேசி நாளாயிற்று. அதுவும் ஊரே வம்பு பேசும் வேளையில் அமைதியாய் இருப்பது கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது. எனவே இன்று ஒரு வேடிக்கையான செய்தியைப் பற்றி பேசுவோம்.

நான் நண்பரது வீட்டு விழாவிற்கு சென்றிருந்தபோது ஒரு ஆடிட்டரும் வந்திருந்தார். அவரது வேடிக்கையான பேச்சில் மயங்கி அவரைச் சுற்றி ஒரு கூட்டமே இருந்தது. நானும் அருகில் சென்று கவனித்தேன். அவர் சொன்ன செய்திகளையே இங்கு தருகிறேன்.

“…. எங்க புரஃபெஷன் ஒரு பவர்புல்லானது. எங்களால் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும். வேடிக்கைக்காக எங்கள் வட்டத்தில் உலவும் ஒரு கதையைச் சொல்கிறேன் கேளுங்கள்.

ராமாயணத்தில் இந்திரஜித்தின் பாணத்தால் அடிபட்டுக் கிடக்கும் லட்சுமணன். அவனைக் காப்பாற்ற சஞ்சீவி மூலிகையைக் கொண்டுவரும்படிக்கு அனுமன் பணிக்கப்படுகிறான். அனுமன் சஞ்சீவி மூலிகையைத் தேடித் தேடி சலித்துப்போய் சஞ்சீவி மலையையே பெயர்த்து எடுத்துக் கொண்டு வருகிறான். லட்சுமணன் பிழைத்துக் கொள்கிறான். யுத்தம் முடிகிறது. அனைவரும் அயோத்திக்கு திரும்புகின்றனர்.

 

அயோத்தி திரும்பிய அனுமன் சஞ்சீவி மூலிகையை கொண்டுவந்ததற்கான பயணப் படிக்கு விண்ணப்பிக்கிறார். ஆனால் அவரது பயணப்படி மறுக்கப்படுகிறது. காரணமாக ஆடிட்டர்/அக்கவுண்டண்ட் சுட்டிக் காட்டிய விபரம்:

1.   அனுமன் சஞ்சீவி மூலிகையைக் கொண்டுவரும் பயணத்திற்கு முறைப்படி அயோத்தி அரசரது அனுமதியைப் பெறவில்லை.

2.   அனுமன் ஒரு 4th Grade Officer. எனவே அவருக்கு வான் வழிப்பயணம் அனுமதி இல்லை.

3.   அனுமன் சஞ்சீவ பர்வதத்துடன் அனுமன் வந்தது excess luggage. Excess luggage is not allowed.

மேற்கண்ட காரணங்களுக்காக அனுமனின் பயணப்படி மறுக்கப் படுகிறது என்று எழுதிய ஆடிட்டர்/அக்கவுண்டண்டின் குறிப்பைப் படித்த அயோத்தி மன்னன் உடனே அனுமனை வரச்சொல்கிறார். அனுமனிடன் இது குறித்துச் சொல்ல அனுமனும் கவலை கொள்கிறார். “எஜமானே, நீங்கள் இட்ட பணியை செய்யத்தானே பயணித்தேன். அதற்குக்கூட பயணப்படி கிடையாதா,’ எனப் புலம்பிய அனுமனை தேற்றிய ராமன், கோப்பில் ‘please re examine ‘ என எழுதி அரண்மனை ஆடிட்டர்/அக்கவுண்டண்டுக்கு திருப்பி அனுப்புகிறார். கூடவே அனுமனுக்கு ஆடிட்டர்/அக்கவுண்டண்டை நேரில் ஒருமுறை சந்திக்கும்படியும் அறிவுறுத்துகிறார்.

     கவலையுடன் சென்ற அனுமன் ஆடிட்டர்/அக்கவுண்டண்ட்டிடம் சென்று பேசிப்பார்க்கிறார். ஆனால் பயணப்படி கிட்டுவதாக இல்லை. இறுதியில் அனுமன்,” இதோ பார் இந்த பயணப்படியை நீ எனக்கு கிடைக்கும்படி செய்தாயானால் உனக்கு நான் அதில் 20 சதவீதம் பங்களிக்கிறேன்” எனச் சொன்னவுடன் சற்று யோசித்தபிறகு, “சரி நீ போ..உனது பயணப்படி உனக்கு கிடைக்கும்..” என்று பதில் வந்தது.

     அதன் பிறகு இரண்டே நாளில் அனுமனின்  பயணப்படி sanction ஆகி அவருக்கு கிடைத்தது. ஆச்சரியத்துடன் அனுமன் அந்தக் கோப்பை பார்த்தபோது அதே ஆடிட்டர் அவர் எழுப்பிய query களுக்கு அவரே clarification எழுதி பயணப்படியை sanction செய்திருந்தார்.

அந்த clarifications :

1.   அனுமன் அயோத்தி மன்னனாகிய பரதனின் அனுமதியைப் பெறாவிட்டாலும் தற்போதைய மன்னனாகிய ராமனின் அனுமதியைப் பெற்றே பயணித்ததால் அவரது பயணம் அனுமதிக்கப்பட்ட பயணமாகிறது.

2.   அனுமன் 4TH GRADE OFFICER என்றாலும் அவசர நிமித்தம் காரணமாக பயணித்ததால் அவருக்கு வான்வழிப் பயணத்திற்கான அனுமதி அளிக்கப் படுகிறது.

3.   அனுமன் சஞ்சீவி வேரைக் கொண்டுவரப் பயணித்தாலும் தவறான வேரைக் கொண்டு வந்திருந்தால் மீண்டும் பயணிக்க வேண்டியிருக்கும் எனவே சஞ்சீவ மலையைக் கொண்டுவந்ததினால் இந்த அதிகப்படியான பயணமும் செலவும் மிச்சமாவதால் இந்த EXCESS LUGGAGE அனுமதிக்கப் படுகிறது…”

என்று கதையை நண்பர் சொல்லிக் கொண்டு செல்ல கூடியிருந்தோரெல்லாம் சிரித்து மாய்ந்தனர்.

அம்மையாரின் வழக்கைப்பற்றிய பேச்சின் தொடர்தான் இது என எனக்குத் தெரியவந்தது. நான் LAWS, RULES AND ETHICS பற்றி யோசித்துக் கொண்டே சிந்தனையில் ஆழ்ந்தேன்.

வழக்கத்தில் இருக்கும் இது எத்துனை மோசமான ஒன்று என நினைக்கும் போதே மனதை புரட்டியது.

இன்னமும் பேசுவோம்.                         

 அன்பன்,

வேதாந்தி.


 
Related Posts Plugin for WordPress, Blogger...