25.5.15
கருநாகம் தீண்டிய காராம்
பசு..!
ஊ (ழ்)ழல் வினை…II
அந்த
மரணம் குடும்பத்தை திக்குதிசை தெரியாது சுழட்டிப் போட்டது
அவர்
இறந்ததைத் தொடர்ந்து அந்த ஒருவாரம் அவரது கைபேசிக்கு வந்த அத்துனை அழைப்புகளுமே தொழிலதிபர்களுடையது.
அனைவருமே அவரது இறப்பைக் கேட்டு அனுதாபம் கொண்டாலும் அவர்களது பேச்சில் இருந்த ஏமாற்றத்தை
மறைக்க முடியவில்லை.
அதுவரை
அவருடனே இருந்த அவரது நண்பரும் அதற்கப்புறம் விலகி விட்டார். இருவரும் சேர்த்து வைத்த
பணத்தைப் பற்றி மூச்சு விடவில்லை. ‘எனக்கேதும் தெரியாதம்மா..’ என்று கை விரித்து விட்டார்.
இறந்தவர் தங்களிடம் இருந்த பணத்தைப் பற்றியோ அல்லது தம்மைப் பற்றியோ எதுவும் சொல்லாதது
அவருக்கு அனுகூலாமாய்ப் போயிற்று.
ஈமச்
சடங்குகளை முடிந்ததும் அவரவர்கள் உச்சுக் கொட்டிக்கொண்டு இடத்தைக் காலி செய்தனர். வந்திருந்த
அலுவலக நண்பரொருவர் இறந்தவரின் பெண்ணிடம், “compassionate ground ல் உனக்கு வேலை கிடைக்குமம்மா..
அலுவலகத்திற்கு ஒரு நாள் வந்து விண்ணப்பித்துச் செல் எனச் சொல்லிச் சென்றார்.
சுக்கானை
இழந்த கப்பலாக திசை தடுமாறியது குடும்பம். குடும்பத் தலைவியாய் அந்த அம்மையாருக்கு
பொறுப்பேற்றுக் கொள்ளத் தெரியவில்லை. அந்தப் பெண் கல்லூரிக்குச் சொல்வதை நிறுத்திவிட்டு
வேலைக்காக அலைந்தார். இன்னமும் ஒரே செமஸ்டர் இருந்த நிலையில் தனது முது நிலை அறிவியல் பட்டப் படிப்பை நிறுத்தியது தனக்கு பெரும் இழப்பு
என அந்தப் பெண்ணிற்கு தெரியவில்லை. அப்படி தங்கள் குடும்பத்திற்கு ஒரு வருவாய் தேவையான
சூழலில் தன் தாய் தனக்கிருந்த தகுதியை வைத்து வேலையில் சேர்ந்து பின்னர் தான் அதைக் கொண்டு படித்து முடித்து தனது
குடும்பத்தை கரையேற்றலாம் என்றும் தோன்றவில்லை.
தன்
கணவனை இழந்த தாயோ, தனக்கு தன் கணவனுக்குப் பிறகு இந்த வேலை ஒரு பாதுகாப்பாக இருக்கும்
எனவும் புரியவில்லை. எல்லாம் ஒரு மாயை போல் நடந்து விட்டது. அந்தப் பெண்ணிற்கு வேலை
கிடைத்து விட்டது. ஆனால் அதற்கப்புறம் அவரது போக்கே மாறிவிட்டது.
தனது
கல்லூரிச் சினேகிதன் என்று ஒருவரை அடிக்கடி அழைத்து வர ஆரம்பித்தார். ஏதோ திக்கற்ற
வீட்டிற்கு உதவுவதாய் பாவனை செய்து கொண்டு அந்த நபரும் அடிக்கடி வீட்டிற்கு வந்தார்.
தனக்கு உறவுப் பாதுகாப்பும், பொருளாதாரப் பாதுகாப்பும்
இல்லாததால் அந்தத் தாயும் ஏதோ நல்ல எண்ணத்தோடு அவன் வருவதாய் நினைத்து அதை பெரிதாய்
எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு கொடும் கருநாகத்தை வீட்டிற்குள் அனுமதித்திருக்கிறோம் என்று
அவர் கிஞ்சித்தும் சந்தேகப் படவில்லை.
தன்
மகளின் ஆண் நண்பரது நடத்தையில் சில மாறுதல்கள் தெரியவே, அந்தத் தாய் தன் மகளை கண்டித்தார்.
இது குறித்து அவ்வப்போது சில சச்சரவுகளும் தோன்றியபடி இருந்தது. இந்த நிலையில்தான்
அந்த அம்மையாருக்கு தன் மகளின் சினேகிதன் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் எனத்
தெரியவந்தது. அதற்கப்புறம் மிகக் கடுமையாக எதிர்க்க ஆரம்பித்தார்.
தொடர்ந்து
இரண்டு மாதங்கள் ஒரே போராட்டமாக இருந்தது. அந்தப் பெண்ணோ மிகப் பிடிவாதமாக இருந்தார்.
அழுது புரண்டு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் தன் பெண் இரங்காததைக் கண்டு விக்கித்துப்
போனவர் அடுத்து தன் மகள் தான் கர்ப்பமாய் இருப்பதாய் சொன்னதைக் கேட்டு மூச்சடைத்துப்
போனார்.
அவ்வளவுதான்.
எல்லாம் போயிற்று.
அந்த
மோசக்காரன் எல்லாவற்றையும் திட்டம் போட்டே நிகழ்த்தியிருக்கிறான். தன்னுடன் பழகிய பெண்ணுக்கு
compassionate ground ல் வேலை கிடைத்துவிடும் என்று தெரிந்ததால் பழக்கத்தை நெருக்கமாக்கிக்
கொண்டிருக்கிறான். ஆனால் தான் தாழ்த்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் என்பதாலும் அந்தப்
பெண் முதலியார் வகையறா என்பதாலும் இந்தத் திருமணம் நடக்க வாய்ப்பில்லை என சந்தேகித்திருக்கிறான்.
அதனாலேயே அந்தப் பெண்ணை மோச வார்த்தைகளால் வசியப்படுத்தி கர்ப்பமாக்கி விட்டிருக்கிறான்.
அதற்குப்
பின் வயிற்றில் பிள்ளையைச் சுமந்தபடி இருந்த தன் பெண்ணிற்கு வேறு வழியில்லாமல் அந்த
மோசக்காரனுடனேயே திருமணம் நடத்தி வைத்தார் அந்தத் தாய். ஆனாலும் அவரது மனம் ஒப்பவில்லை. அடிக்கடி வீடே போர்க்களமானது. அந்த மோசக்காரனும் அந்தத் தாயின் அபல நிலை முழுக்கத் தெரிந்தவனாக வெறுப்பைக் கக்கி
சீறிக் கொண்டே இருந்தான்.
அடுத்த
பதினைந்து நாளில் மற்றுமொரு இடி.
அந்த
மோசக்காரனுக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தது தெரியவந்தது. தனது மனைவியை பெற்றோருடன் சேலத்தில் வீட்டில்
விட்டுவிட்டு இங்கு சென்னையில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்திருக்கிறான். அப்போதுதான்
இந்தப் பெண்ணின் அறியாத்தனத்தை உபயோகித்துக் கொண்டு அவளுக்கு வேலையும் கிடைத்துவிடும்
என்பதால் அந்த பணத்திற்காக வேண்டி அவளைக் கெடுத்து வாழ்வைப் பாழாக்கி இருக்கிறான்.
இதைத்
தெரிந்தவுடன் மகளின் தாயாருக்கு பித்தே பிடித்துவிட்டது.
அவனுடன்
நேருக்கு நேராகவே வெகுநேரம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். அவரது போக்கு மிகவும் மோசமாகத்
திரும்பியது. ஒரு கட்டத்தில் அவர், தனது மகளை கட்டாயப் படுத்தி காவல் நிலையத்தில் புகார்
கொடுக்கவும் தயங்கமாட்டேன் என அந்த மோசக்காரனை மிரட்ட ஆரம்பித்தார். அந்த மோசக்காரனும்
அது நடந்துவிடும் என சந்தேகிக்க ஆரம்பித்தான். அப்படி நடக்கும் பட்சத்தில் தனக்குப்
பாதுகாப்பு கிடையது எனவும் உறுதியாக நம்ப ஆரம்பித்தான்.
இந்த
நிலையில்தான் ஒருநாள் அந்தத் தாயார் கட்டிலில் மரணித்திருந்தார்.
அவரது
மரணம் ஒரு தற்கொலை என சோடிக்கப்பட்டது. அவரது இறுதிச் சடங்கிற்கு வந்திருந்த உறவினர்களில்
சிலர் இறந்தவரின் உடலில் சந்தேகப்படும்படியாக தெரிந்த கீறல்களையும் இரத்தக் காயங்களையும்
பார்த்து தங்களுக்குள் பேசிக்கொண்டனரே ஒழிய வெளியே வாய் திறக்கவில்லை.
தந்தையை
இழந்த இழப்பின் காயம் ஆறுவதற்குள்ளாகவே தாயையும் இழந்த அந்தப்பெண் திக்கற்றுப் போனாள்.
வயிற்றில்
பிள்ளையுடன் இருந்த அவளுக்கு பிரசவமும் ஆனது.
இப்போது
கையில் குழந்தை. சம்பளத்தை வாங்கியவுடன் ஈட்டிக் காரனைப்போல் பிடுங்கிக் கொள்ளும் கணவன்.
போதாக் குறைக்கு தினமும் குடும்ப வன் முறை வேறு. ஒவ்வொரு இரவும் அடிபட்டு முகம் வீங்கியபடி
அலுவலகம் வருபவரை ஆறுதலுக்கு கேட்கக் கூட ஆட்கள் இல்லை.
பெற்றோரை
இழந்து, தனது உயர் கல்வியையும் இழந்து, சூழ்ச்சிக்கு ஆளாகி சிறுவயதில் பிள்ளை ஏந்தி
தினம் தினம் குடும்ப வன்முறைக்கு ஆளாகி ஆதரவற்று வாழ்வை இழந்து நிற்கும் அந்தப் பெண்ணின்
நிலைக்கு எது காரணம்?
ஒரு
மூண்றாவது நபராக இதைக் கேட்கும்போதே இதயம் பிசைகிறதே..தன் பிள்ளை சிரமப்படக்கூடாது
என்று எல்லா வசதிகளையும் நெறியற்ற முறையில் பெற்ற பணத்தில் செய்துவைத்த அந்தத் தந்தை இதைப் பார்த்தால் கதறிச் சாக மாட்டானா..?
வசதிகளுக்காக
வாழ்வை இழக்கும் அறிவற்றவர்களாக இருக்கிறோமே.. இப்படி நமது நெறியற்ற செயல்கள் நம்மையும்,
நாம் அன்பு கொண்டுள்ளோரையும் பாதித்து அவர்களது வாழ்வையும் சிதைத்துப்போடும் வல்லமை
கொண்டது எனும் தெளிவிருந்தால் தவறு செய்யத் துணிவோமா..?”
கேள்வியுடன்
நண்பர் பேச்சை நிறுத்தி துயரச் சிந்தனையில் ஆழ்ந்தார். நான் மௌனம் காத்தேன்.
மீண்டும் பேசுவோம்.
அன்பன்,
வேதாந்தி.
அடுத்தடுத்த அனைத்துச் செய்திகளும் மனதுக்கு மிகவும் வேதனை அளிப்பதாக உள்ளன.
ReplyDelete//வசதிகளுக்காக வாழ்வை இழக்கும் அறிவற்றவர்களாக இருக்கிறோமே.. இப்படி நமது நெறியற்ற செயல்கள் நம்மையும், நாம் அன்பு கொண்டுள்ளோரையும் பாதித்து அவர்களது வாழ்வையும் சிதைத்துப்போடும் வல்லமை கொண்டது எனும் தெளிவிருந்தால் தவறு செய்யத் துணிவோமா..?//
பெண் பக்கம் அறியாமையும், ஆண் பக்கம் காம இச்சையும், வன்முறைகளும், சதித்திட்டங்களும், இருவர் வாழ்க்கையிலும் நிம்மதி கொடுக்காமல், அனைத்தையுமே அழிக்கவல்லது என்பது புரிகிறது.
அந்தப் பெண் எந்த இடத்திலும் போராடவில்லை... அதுவே கொடுமைக்கு காரணம்...
ReplyDeleteவெட்டி ஜம்பத்திற்காக வாழ்பவர்களும் பல பேர்கள்...
ஒழுக்கம் உயிரினும் மேலானது.
ReplyDeleteஅத் தாயின் நிலை இனி எவர்க்கும் வரக்கூடாது.
குழந்தையாவது இனி கண் கலங்காமல் வாழட்டும்.
வேண்டுவோம்
கலங்க வைக்கும் நிகழ்வுகள்தான்
ReplyDeleteஉள்ளம் சுடும் நிகழ்வு.
ReplyDeleteதங்களைத் தொடர்கிறேன்.
நன்றி.
மன ஆதங்கங்களை ஒரு கதை வாயிலாகக்கொட்டி இருக்கிறீர்கள் ஒவ்வொரு நிகழ்வுக்கும் அதே சக்தியுடைய எதிர் மறை நிகழ்வுகளும் இருக்கும் அல்லவா.
ReplyDeleteஇது கதையல்ல. உண்மையில் நடந்தது. அந்தப் பெண் இன்னமும் கதறிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு சம்பவமும் அப்படியே சொல்லப்பட்டிருக்கிறது.
Deleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி