Followers

Thursday, May 28, 2015

வாழ்க்கையின் நோக்கம் வாழ்வைத் துறத்தலா..?


28.5.15

வாழ்க்கையின் நோக்கம் வாழ்வைத் துறத்தலா..?

வாழ்வின் தேவைகளை துறந்தவன் துறவி. அவனது வாழ்வு துறவற வாழ்வு. ஆனால் வாழ்வைத் துறத்தல் என்பது இல்லறத்தானுக்கு சாத்தியமா?

இல்லற வாழ்வோ அல்லது துறவற வாழ்வோ எல்லாமே மனிதரை “துறத்தல்” என்னும் ஒற்றை நோக்கான இறுதி நோக்கிற்குதான் தள்ளிச் செல்கிறது. எனவே இல்லறத்தானும் துறவறத்தானும் ஒரே நோக்கிற்கு வெவ்வேறு திசையில் பயணிக்கின்றனர் என்பது சற்றுச் சிந்தித்தால் விளங்கும்.

இல்லறத்தார் வாழ்வை ஏற்கத்தான் தம்மை தயார் படுத்திக் கொள்கின்றனர். ஒரு சராசரி மனிதரின் வாழும் வயது எழுபது எனக் கொண்டால் தனது முப்பத்தைந்து வயது வரையில் வாழ்வை ஏற்று வாழ தன்னைத் தயார் படுத்திக் கொள்கிறான். தனது உடல், மனம், அறிவு மற்றும் சூழலை வாழ்வை ஏற்று வாழத்தகுந்தபடிக்கு வளர்த்து தன்னை தயார் படுத்திக் கொள்கிறான். அதனை ‘வாழ்வை வளப்படுத்திக் கொள்ளுதல்’ எனச் சொல்வர்.
‘உன்னால் முடியும்’,

‘வானமே எல்லை’

‘வாழ்வை வாழக் கற்றுக் கொள்வோம்’

‘அனைத்திற்கும் ஆசைப்படு’

இதெல்லாம் தற்போதைய ‘துறவி’களால் அளிக்கப்படும் உபன்யாச தலைப்புகள்.

இப்போது எல்லாம் துறந்த துறவிகளே கார்ப்போரேட்டுகள் அளிக்கும் டிரெய்னிங் புரோகிராம்கள் போல தன்னைத் தேடி வருபவர்களுக்கு மேலும் மேலும் வாழ்வில் போதை ஏற்றி முன்னே ஓடும்படிக்கும் ஓடி ஜெயிக்கும்படிக்கும்படியாக உபதேசங்களைச் செய்வதனால் எல்லோரும் வெற்றியைத் தவிர வேறேதும் சிந்தனையின்றி வெறிகொண்டு பந்தய மைதானத்தை சுற்றிப் பறக்கின்றனர்.

இதனால் தற்போதைய கார்ப்போரேட்டுகளுக்கும், ‘கார்ப்போரேட்’ துறவிகளுக்கும்தான் லாபம். இவைகள் மனிதனை வாழ்நாட்களை ஒருவித மயக்கத்துடன் கடத்தத்தான் பயன்படுமே ஒழிய அவனுக்கு வாழ்வின் நோக்கத்தையோ அல்லது ஒரு தெளிவையோ தரப் பயன்படாது.

ஓட்டத்தின் இறுதியில் மூச்சு வாங்கி நிற்கும் மனிதன் எதையும் பெற்றவனாகத் தெரியவில்லை. மனத் தெளிவும் பெறுவதில்லை. இதை அவன் உணரும்போது காலம் கடந்ததாகி விடுகிறது. மேலும் இத்தகைய ‘வாழ்வை ஏற்றல்’ முறைக்கு தன்னை தயார் செய்து கொண்டவன் நாற்பத்தைந்து வயதிற்குமேல் தான் பெறவேண்டிய ‘வாழ்வைத் துறத்தல்’ என்ற முறைக்கு பயிற்சி இல்லாமல் கலங்கி, குழம்பிப் போகிறான்.

இருபத்தைந்து வயது வரை வாழ்வை ஏற்றுக்கொள்வதற்குத் தேவையான உடல் ஆரொக்கியம் பேணி உடல் மற்றும் அறிவை வளர்த்து ஆளாகிறான். முப்பத்தைந்து வயது வரை குடும்பத்தை வளர்த்து குடும்பப் பொறுப்பேற்று வாழ்வை நடத்துகிறான். நாற்பத்தைந்து வரை தான் சார்ந்து நிற்கும் தொழில் நிறுவனத்திற்கோ அல்லது தனது தொழில் வளர்ச்சிக்கோ தேவையானவைகளை பெருக்கி தனது உருவாக்கலை மேம்படுத்துகிறான்…

இப்படி வளரும் அவனது வாழ்வில் அவனுக்கு ‘தன்’னைப்பற்றியோ ‘தனது’ உண்மையான தேவைகளைப் பற்றியோ சிந்திக்க நேரம் கிடைக்காமல் அவனது வாழ்வு நகர்கிறது.

இப்படி நகரும்போதுதான் ஐம்பதைத் தொடும்போது அவனது சிந்தனைகளை திசை மாற்றும் வகையில் கட்டாய மாற்றங்கள் ஏற்படுகின்றன. உடல் ஆரோக்கியத்தில், மன ஆரோக்கியத்தில் மற்றும் உறவுகளின் ஆரோக்கியத்தில் நடக்கும் இந்த மாற்றங்கள் அவனை வெகுவாக பாதிக்கின்றன.

இவைகள் யாவும் தான் இதுவரை ஏற்று நடத்திய வாழ்வையும் அதனால் தானடைந்த பலன்களையும் கேள்வி கேட்கத் தூண்டுகிறது. அதன் விளைவாக இந்த வாழ்வில் ‘தனக்கு’ப் பலனில்லை என அறிகிறான். எதிர்பார்ப்பு பொய்த்ததால் ஏமாறுகிறான். மனம் தளர்கிறான் சிலர் ஆன்மீகம் பக்கமாய்த் திரும்புகின்றனர். அதுவரை பெர்னார்ட்ஷா, பெரியாரைப் பேசியவன் ராமகிருஷ்ணரையும், ரமணரையும் பேசுகிறான். ஆனாலும் இந்த ஆன்மீகத் தேடலை தனது ஏமாற்றங்களுக்கு ஒரு மருந்தாய்த்தான் எடுத்துக் கொள்கிறானே ஒழிய தனது வாழ்வின் பொருளை புரிந்து கொள்ளவேண்டி முயற்சி செய்ய அல்ல. 



ஆன்மீக உரைகள் மனதிற்கு சற்று நிம்மதியைத் தருவதை உணர்ந்து முடிப்பதற்குள் இறந்து விடுகிறான். அவனது வாழ்வு நிறைவுற்று முடிந்ததா இல்லையா எனும் கேள்விக்கு விடை கிடைக்காது. ஆனால் இறக்கும் போது பலவித ஏக்கங்களுடனும், ஏமாற்றங்களுடனும் இறந்திருப்பான் என உறுதியாகச் சொல்லலாம்.
இப்படி நாம் இறக்கலாமா?

இறப்பை எப்படி ஏற்றுக்கொள்வது?

வாழும் வரை வாழ்ந்து இறப்பு வரும்போது அப்படியே இறப்பது நல்லதா..?

அல்லது வாழ்வை ஏற்க நாம் தயாரானதைப்போல வாழ்வைத் துறக்கத் தயாராகி, வாழ்வைத் துறந்து இறப்பை இன்பமுடன் ஏற்று இறப்பது நல்லதா..?

ஒருமுறை எனது நண்பர், பிரம்ம குமாரிகள் சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டவர், “பணி ஓய்வுக்குப் பின்னர் வீட்டில் சும்மா இருப்பதற்கு ஏதேனும் வேலைக்குச் சென்றால் பற்றாக் குறைக்கு உதவுமல்லவா?” என்ற என் கேள்விக்கு சொன்னபதில் என்னை திகைக்க வைத்தது.

“அப்படி இல்லை. இன்னமும் போராடிக்கொண்டே இருக்கக் கூடாது. இந்த வயதில் விருப்பு, வெறுப்பு, எதிர்பார்ப்பு, ஏமாற்றம், தேவை, போராட்டம் ஆகிய வாழ்வுக்குத் தேவையானவைகள் இருக்கக் கூடாது. அப்போதுதான் நம் உடலிருந்து உயிர் அழகாகப் பிரியும்… அமைதியான இறப்பு கிடைக்கும்..” என்றார்.

ஆகா… என்னவொரு விளக்கம். நாம் வாழ்வைத் துறக்கவேண்டும் என்ற எண்ணத்தை கட்டாயமாகவேனும் நம்முள் திணிக்கத்தான் இறைவன் நமக்கு மூப்பையும் தளர்ச்சியையும் கொடுத்திருக்கிறானோ..?

நோய், மூப்பு, தளர்ச்சி, ஏமாற்றம் ஆகியவைகள்தான் ஆசான்களைப் போல நம்மை வழி நடத்தி வாழ்வைத் துறத்தலுக்கு நம்மை தயார் படுத்துகின்றனவோ?.

வாழ்வைத் துறத்தலுக்கு, நமது அறிவிற்கு அப்பாலுள்ள ஞானத்தை வேண்டி நாம் கற்ற, நமக்குத் தெரிந்த அறிவைத் துறத்தல் வேண்டும், நமது ஆசைகளை வளர்த்து பெருக்கிக் கொண்ட நமது உறவுகளைத் துறக்க வேண்டும், பொருளைத் துறக்க வேண்டும், ஆசையைத் துறக்க வேண்டும், வெறுப்பைத் துறக்க வேண்டும், அப்படியே நாம் வாழ்வைத் துறக்க வேண்டும்.

சிலர் வாழ்வை ஏற்காமலேயே இந்தத் துறத்தலை ஏற்றுக் கொள்வதால் துறவி ஆகின்றனர் - இரட்டை உயர்வு கிடைத்த மாணவனைப்போல. விவேகானந்தர், ராமகிருஷ்ணர், ரமணர், வள்ளலார் ஆகியோரை இதுபோன்ற ஒரு வழியை அடைந்தவர்களாக உதாரணம் காட்டலாம்.

எனவே, இல்லறம் அல்லது துறவறம் ஆகிய எந்த ஒரு அறவழியைத் தேர்ந்தெடுத்தாலும் எதையும் துறக்கத் தயாராகாமல் இறந்தால் அந்த வாழ்வு சிறந்ததாக ஆகாது என்பது மட்டுமல்ல அது நமது பிறப்பைப் பற்றி எந்த ஒரு சிந்தனையும் அற்றுப்போய் இறந்து நம் வாழ்வை வீணடித்ததாகிவிடும் அல்லவா?

ஆகவே வாழ்வின் முற்பகுதியில் வாழ்வை ஏற்றுக் கொள்ளத் தயாராகி நாம் வாழ்வதைப் போல வாழ்வின் பிற்பகுதியில் நாம் வாழ்வைத் துறக்கத் தயாராகவும் கற்றுக் கொண்டு நம் வாழ்வின் ஒரு பகுதியான இறப்பையும் குறையின்றி ஏற்றுக்கொள்ள முயலுவோம். வாழ்க்கையின் நோக்கத்தை முழுமையக்குவோம்.
இன்னமும் பேசுவோம்.

அன்பன்,
வேதாந்தி.



 

5 comments:

  1. கனவு காணும் வாழ்க்கை யாவும்...
    கலைந்து போகும் கோலங்கள்....

    பிறக்கின்ற போதே... பிறக்கின்ற போதே...
    இறக்கின்ற தேதி - இருக்கின்றதென்பது...
    மெய் தானே...?

    ஆசைகள் என்ன...? ஆசைகள் என்ன...? ஆணவம் என்ன...?
    உறவுகள் என்பதும் - பொய் தானே...?

    உடம்பு என்பது... உடம்பு என்பது...
    உண்மையில் என்ன...?
    கனவுகள் வாங்கும் பை தானே...!

    காலங்கள் மாறும்... காலங்கள் மாறும்...
    கோலங்கள் மாறும்...
    வாலிபம் என்பது பொய் வேஷம்...

    தூக்கத்தில் பாதி... ஏக்கத்தில் பாதி...
    தூக்கத்தில் பாதி... ஏக்கத்தில் பாதி...
    போனது போக... எது மீதம்...?

    பேதை மனிதனே...
    பேதை மனிதனே...
    கடமையை இன்றே செய்வதில் தானே ஆனந்தம்...!

    கனவு காணும் வாழ்க்கை யாவும்...
    கலைந்து போகும் கோலங்கள்....
    துடுப்பு கூட பாரம் என்று...
    கரையை தேடும் ஓடங்கள்...

    ReplyDelete
  2. //வாழ்வின் பிற்பகுதியில் நாம் வாழ்வைத் துறக்கத் தயாராகவும் கற்றுக் கொண்டு நம் வாழ்வின் ஒரு பகுதியான இறப்பையும் குறையின்றி ஏற்றுக்கொள்ள முயலுவோம்//
    அறிந்து சந்திக்க முயலுவதில் தவறில்லை.

    ReplyDelete
  3. மிகவும் அருமையான + உண்மையான கட்டுரை. படித்து இன்புற்றேன்.

    //நோய், மூப்பு, தளர்ச்சி, ஏமாற்றம் ஆகியவைகள்தான் ஆசான்களைப் போல நம்மை வழி நடத்தி வாழ்வைத் துறத்தலுக்கு நம்மை தயார் படுத்துகின்றனவோ?.//

    ஆம். அதே அதே .....

    ஏமாற்றம் + ஏக்கம் + நிறைவேறாத ஆசைகள் + சபலங்கள் இல்லாமல் யாருடைய உயிரும் லேஸில் பிரிவது இல்லை என்பதே உண்மை.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. பிறப்பு என்பது நம் கையில் இல்லை. நாம் அனைவரும் விபத்துகளின் விளைவுகளே. பிறப்பு என்று இருக்கும் போது இறப்பு என்பதும் நிச்சயம் இந்த உணர்வு இருந்தால் பற்று அழியும் என்பதைவிட குறையும் என்று நம்பலாம் வாழ்வை ஏற்கக் கற்றாக வேண்டும் வாழ்வைத் துறக்கவும் கற்கவேண்டும் ஆனால் அந்தோ கற்கிறோமோ இல்லையோ இறப்பதில் வாழ்வைத் துறப்பது உறுதி. இது தெரியாமல் இருக்கும் போது ஆடும் ஆட்டங்கள் இறப்பை அறியாமல் வாழ்வைத் துறக்க வைக்காது. அடுத்தவனை நேசிப்பவனுக்கு இந்த ஏற்பதும் துறபதும் பெரிய காரியமல்ல. பதிவு வாழ்க்கையின் பல பரிமாணங்களைத் தொட்டுச் செல்கிறது/

    ReplyDelete
  5. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...