Followers

Saturday, May 23, 2015

ஊ (ழ்) ழல் வினை…


23.5.15

ஊ (ழ்) ழல் வினை…

 
நான் இதை பகிர்ந்து கொள்ளலாமா வேண்டாமா எனத் தெரியவில்லை. இந்த நிகழ்வை நினைக்கும்போதெல்லாம் எனக்கு மனதை பிசைகிறது.

வெகு நாட்களுக்குப் பின் என்னைத் தேடி வந்த என் நண்பர் சொன்ன நிகழ்வுதான் இது. இதை அவர் சொன்னது ஒரு கோணத்தில் - ஊழல் செய்து சேர்த்த பணம் நிற்காது… எனபது அது. ஆனால் இதை நான் சொன்னேனென்றால் ‘சிறுக தப்பு செய்தவன் சிதை படுவான் ஆனால் பெருக தப்பு செய்பவன் பேரும் புகழுடனும் இருப்பானோ’ என நக்கலடிக்க சிலர் காத்துக் கொண்டிருப்பர்.

இதை விட்டு, இந்த நிகழ்வுக்கு காரணமாக நான் கருதும் ‘ஊழ்’ வினையைச் சொன்னேனென்றால் ‘அவரவர் வினைக்குத் தகுந்தவாறு வினையைச் செய்ய உன் கடவுள் என்ன தராசு வைத்துக் கொண்டிருக்கிறானா..?’ என்றும் நாக்கைச் சுழற்றுவார் சிலர். 

எதுவாயிருந்தாலும் நாம் எந்தக் கருத்தையும், அதைச் சொல்வோரையும் குறை சொல்ல முடியாது. கருத்துச் சுதந்திரமும் மனிதரை மனிதர் மதிக்கும் மனித நாகரிகமும் எல்லாவற்றினும் பெரிதல்லவா?

எனவே நான் தற்போது விவரிக்கப்போகும் என் நண்பர் என்னுடன் பகிர்ந்து கொண்ட நிகழ்வுக்கு அந்த நிகழ்வின் ஆரம்பமான, அந்த நிகழ்வையும் அதன் தொடரையும் ( EVENT AND ITS CHAIN ) தொடங்கி வைத்த முதல் பொறியான ( SPARK ) ஊழலைத்தான் முன் நிறுத்தப்போகிறேன்.

வழக்கம்போலவே வந்த நண்பர் நலம் விசாரித்த பின்னர், நான் தற்போது எழுதுவதை நிறுத்தி விட்டேனா என வினவினார். ‘நான் எழுதுவதை நிறுத்தவில்லை நீங்கள்தான் பேசுவதை நிறுத்திவிட்டீர்கள்’ எனச் சொல்லிச் சிரித்தேன். அவரும் சிரித்தார். பின்னர் வழக்கம் போலவே பேச ஆரம்பித்தார்.

“இன்றைய மனிதர்களுக்கு வாழ்வில் நெறியுடன் இருப்பதன் நன்மை புரிவதில்லை.

நல்வழியில் அவ்வைக் கிழவி, தர்மத்தைக் காக்கின்ற நீதி மன்றத்தில் பொய்யுரைத்தவன் குடும்பத்தோடு அழிவான் என்பது மட்டுமன்றி அவனது வீடும் பாழாகும் எனச் சொல்லியிருக்கிறார்.

("வேதாளம் சேருமே வெள் எருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை.")

வெறும் பொய்யுரைத்தவனுக்கே இந்தக் கதியென்றால் துணிந்து நெறியற்ற செயல்களைச் செய்பவர்களது நிலை…?

இன்று நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ளப் போவது அத்தகைய ஒன்றுதான்.

ஏற்கனவே எங்கள் அலுவலகத்தைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். அது தொழிலதிபர்கள் நேரடியாக வந்து காரியத்தைச் சாதித்துக் கொண்டு செல்லும் துறை. இப்போது நான் சொல்லும் நபர் மிக முக்கியமான பதவியில் இல்லையென்றாலும் அத்துனைக் காரியங்களையும் முடித்துத் தரக்கூடியவர் என்று வெளியாட்கள் மத்தியில் பெயரெடுத்திருந்தார். பணத்தைப் பெற்றுக் கொண்டு துணிந்து எல்லாக் காரியங்களையும் செய்து வந்தார். அவருக்குத் துணையாக அதே கேடரில் அவரது நண்பரும்.

பணம் கொழித்துக் கொண்டிருந்தது. அவருக்கு நல்ல மணைவி மற்றும் ஒரு பெண் பிள்ளை. பெண் ஒரு தனியார் கல்லூரியில் முது நிலை அறிவியல் பட்டப் படிப்பு படித்துக் கொண்டிருந்தார். வீட்டில் AC, மற்றும் சகல வசதிகளையும் செய்து கொடுத்து மணைவி மற்றும் பிள்ளையை எந்தக் குறையும் தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தார். எல்லாம் நன்றாய்த்தான் போய்க்கொண்டிருந்தது, அந்த நாள் வரை.

அப்போது புதிதாக தலைமைப் பொறுப்பு ஏற்றிருந்த IAS அதிகாரி மிகவும் கண்டிப்பானவர் மட்டுமல்லாது நடைமுறையில் ஏற்படும் தவறுகளையும் சட்டென புரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்கத் தவறாதவர். சென்னை மாநகராட்சியையே தன் பதவிக்காலத்தில் கலக்கிப் போட்டவர். அவரது கண்ணில் சந்தேகப் படும்படியான ஒரு ஆவணம் பட்டுவிட்டது. அந்த ஆவணம் தொடர்பான தொடர் கோப்பையும் மற்ற ஆவணங்களையும் கேட்டுப் பெற்று தனது சந்தேகம் சரிதானா என்று பார்த்தவருக்கு ஊர்ஜிதமாகிவிட்டது.

அது போலியான ஆவணம். எங்கள் அலுவலகத்திலிருந்துதான் சென்றிருக்கிறது. முறையாக தலைவரிடம் கையொப்பம் பெற்றதற்குப் பிறகு வெளியிடப்படவேண்டிய ஒரு முக்கியமான ஆவணத்தை தலைவரது பார்வைக்கு வராமலேயே யாருடைய கையொப்பத்துடனோ வெளியாகி இருந்தது அந்த ஆவணம். அது தொழிற்சாலை இயங்குவதற்கான அனுமதியை அளிக்கும் முக்கியமான ஆவணமாகும்.

விபரம் தெரிந்தவுடன் அதிர்ந்து விட்டார். பலதரப்பட்ட அதிகார மட்டங்களில் பல செய்திகளை ஆராய்ந்து ஊர்ஜிதப்படுத்தப்பட்டபின்னர் தனது பார்வைக்கு வந்து கையொப்பமான பின் வெளியாகி இருக்கவேண்டிய ஒரு முக்கியமான ஆவணம் இப்படி மலிவாக வெளியாகி இருக்கிறதே என்று கலங்கி விட்டார்.

செய்தியை கசியவிடாது அதன் மூலாதாரத்தை தேடியவர் இறுதியில் நான் சொன்ன நபரிடம் வந்து நின்றார்.

விசாரணைக்கு அவரை அழைத்தவர் நடந்ததை உறுதிப்படுத்தியபின்னர், தனது கடுமையான வார்த்தைகளால் அவரை எச்சரித்து உடனே VRS ல் போகுமாறும் இல்லையென்றால் அவர் மீது விசாரணை நடவடிக்கையைத் தொடர்ந்து அவருக்கு எந்த ஒரு retirement benefit ம் கிடைக்க முடியாதபடி செய்துவிடுதாக கடுமையாக எச்சரித்திருக்கிறார்.

விசாரணை முடிந்து என்னாகுமோ என்ற கலக்கத்திலேயே இருந்திருக்கிறார் சம்பந்தப்பட்டவர். வீடு வந்தவர் முடிவில், குற்ற உணர்வாலோ அல்லது பய உணர்வாலோ உந்தப்பட்டு தனது வீட்டின் மின்விசிறியில் தூக்கிலிட்டுக் கொண்டார்.

குடும்பமே இடி விழுந்தாற்போல் கலங்கிப்போனது.

அவரது மரணம் கூட பெரிய இழப்பல்ல அதைத் தொடர்ந்து நடந்தவைகள் தான் அனைவரது நெஞ்சையும் கலங்கடித்து விட்டது.”

நண்பர் சற்று இடைவெளி விட்டு தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டார். நான் அமைதி காத்தேன். அதற்குள் வந்த தேநீர் சற்று ஆறுதலாய் இருந்தது.

மீண்டும் பேச்சைத் தொடர்வோம்.

அன்பன்,

வேதாந்தி.
மேலும் தொடர: கருநாகம் தீண்டிய காராம் பசு...!
 

 


8 comments:

 1. விறுவிறுப்பான ஆரம்பம். தூக்கில் ....... முடிவு.

  தொடர்ந்து என்ன ஆகுமோ என்று எனக்குக் கவலை அதிகரித்து விட்டது.

  ReplyDelete
 2. //நல்வழியில் அவ்வைக் கிழவி, தர்மத்தைக் காக்கின்ற நீதி மன்றத்தில் பொய்யுரைத்தவன் குடும்பத்தோடு அழிவான் என்பது மட்டுமன்றி அவனது வீடும் பாழாகும் எனச் சொல்லியிருக்கிறார்.

  ("வேதாளம் சேருமே வெள் எருக்குப் பூக்குமே
  பாதாள மூலி படருமே - மூதேவி
  சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
  மன்றோரம் சொன்னார் மனை.")

  வெறும் பொய்யுரைத்தவனுக்கே இந்தக் கதியென்றால் துணிந்து நெறியற்ற செயல்களைச் செய்பவர்களது நிலை…?//

  அறியத்தாருங்கள் ...... எக்காலத்திற்கும் ஏற்ற பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 3. நன்றாகவே சொன்னீர்கள். இதன் தொடர்ச்சியை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
  த.ம.1

  ReplyDelete
 4. உங்கள் தளத்தின் பெயரை உருப்படியான பேச்சு என்று மாற்றிக் கொள்ளுங்கள் :)

  ReplyDelete
 5. காத்திருக்கிறேன் ஆவலுடன்...

  ReplyDelete
 6. எந்த தவறு சிறியதாக தொடங்கி, எப்படி நம்மை விழுங்கும் பூதமாக வளர்கிறது என்பதற்கு இந்த பதிவு நல்ல எடுத்துக்காட்டு சகோ, பகவான் பாஸ் சொன்னத தான் நானும் சொல்றேன் இது உருப்படியான பேச்சு:)

  ReplyDelete
 7. நல் வினையும், தீய வினையும் நம்மால் தானே?
  நல்லதோர் வாழ்க்கை வாழ்வோம். சந்ததி தழைக்க முயல்வோம்.

  ReplyDelete
 8. சிறந்த பதிவு
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...