Followers

Friday, October 15, 2010

காதலை விஞ்சியதா காமம்?

15.10.10
காதலை விஞ்சியதா காமம்?

French sculptor Auguste Rhodin's 'The Kiss ' in Marble

காதல் என்பது வேறு காமம் என்பது வேறு.  காமம் எல்லா உயிரிகளுக்கும் பொதுவானதொன்று. அதுதான் இனப்பெருக்கத்திற்கான உடல் சார்ந்த  அடிப்படை உந்துதல். Sexual desire is the Basic instinct of all life for their procreation.  காதல்,  உயர்ந்த உயிரியான மனிதன் மட்டுமே மனம் சார்ந்து உணரக்கூடிய ஒரு உணர்வு. ஒரு சில உயிரிகள் ஒரே இணையோடு வாழ்ந்தாலும் கூட அவைகள் காதலுணர்வு கொண்டவைகள் எனச் சொல்ல முடியாது. அவைகளின் தனித்த ஈர்ப்பு காமத்தின் இன்னொரு மெல்லிய பரிமாணமாகக் கூட இருக்கலாம்.




மற்ற உயிரினங்களின் காமம் காதல் சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை.  ஆனால் நாம் கொள்ளும் காமம் காதலுணர்வின் உச்சத்தில்  முடியும் அழகான காமம். மேற்சொன்ன காமம்  காதலுணர்வின் உச்சகட்ட படையலாக தன் எதிர்ப்  பாலினர்க்கு தன்னால் அளிக்கப்படும்  அய்ம்புலனாலும் உணர்ந்து உயிரே போற்றக்கூடிய ஒரு மாபெரும் பரிசுப்  பொருளாக  அமைகிறது.  ஒருவரை ஒருவர் காயப் படுத்தாது ஒருவரில் ஒருவர் இணைந்து ஒருவர் தன்னை மற்றவருக்கு அர்ப்பணித்து அந்த அர்ப்பணிப்பில் தன்னை இழந்து சுயத்தைக் கொல்லுவதே இந்த காதலுணர்வால் விளையும் உயர்ந்த காமத்தின் சிறப்பு. அதனால் தான் இத்தகையதை ‘மலரினும் மெல்லிது காமம்..’ என்கிறார் அய்யன். மேலும் இத்தகைய அன்பு- காதலுணர்வு - இல்லாத இல்லறம் வரண்ட பாலைக்குச் சமம் என்றும் உறுதிபடச் சொல்கிறார்.



நம்மில் இந்தக் காதலுணர்வின்றி கிளம்பும் காமமானது வெறும் உடல் சார்ந்த ஒரு அழுத்தத்தின் வெளிப்பாடே. இதைத்தான் அய்யன் வறண்ட பாலைக்கு ஒப்பிடுகிறார். இது எதிர் பாலினரின் ஒப்புதலையோ அல்லது எதிர் பாலினரின் காதலுணர்வையோ மதிப்பதில்லை. தனது சுய நலனையும் இன்பத்தையும் மட்டுமே குறியாகக் கொண்டு வெளியாவது. இது எதிர் பாலினரை மிகக் கொடுமைக்குள்ளாக்கும் வாய்ப்புண்டு.   இதையே மற்ற விலங்கினங்கள் வெளிப்படுத்துகின்றன. மேலும் மற்ற விலங்கினங்களின் இந்த காம வெளிப்பாட்டோடு அதன் முக்கிய நோக்கான உயிரினப் பெருக்கமும் இணைந்துள்ளது. வெறும் காமுறுதலை விலங்கினங்கள் மட்டுமே கொள்ளும் என்பதால் நாம் வெறும் காமுறுதலைத் தவிர்த்து உயர்ந்த காதலுணர்வால் விளையும் காமுறுதலையே ஏற்கவேண்டும். இல்லையெனில் நமது சந்ததிகள் அன்பால் விளைந்ததாயிராமல் வரண்ட பாலையைப் போல் கொடுமையான வெறுப்பால் விளைந்ததாயிருக்கும். இந்நிலை மிகவும் கொடுமையானது. நமது வாழ்வின் மேன்மையை சிதைக்க வல்லது.



இதில் இன்னொன்றும் கவனிக்கத்தக்கது. காதலுணர்வால் விளையும் காமம் மட்டுமே - அதாவது  எதிர்  பாலினரை வருத்தாது அவரது இணக்கத்துடன்  விளையும்  காமம் மட்டுமே நான் முன்பதிவில் பேரின்பத்துடன் ஒப்பிட்ட சிற்றின்பமாகும் (காதலுணர்வு போற்றத் தகுந்ததா?.) இத்துணை அழகுடன் விளையும் சிற்றின்பத்தில் மட்டுமே  ஒருவன் ‘தன்னை ‘ இழந்து, சுயத்தை இழந்து, தன் இழப்பில் இன்பமும் காண்கிறான். இந்த எல்லாவற்றையும் இழந்த ‘நிர்வாணம்’ இறையுடன் கலந்தால் விளையும் ‘நிர்வாணத்தின்’ முன்னோடி என நிச்சயமாய்ச் சொல்லலாம். இத்தகைய ‘ நிர்வாணம்’ இல்லற வாசியான ஒருவன் இல்லறத்தில் பதப்பட்டு இறையுடன் கலக்க அவனைத் தயார் செய்யும் ஒன்றாகும்.


மனம் சார்ந்த புரிதல்கள் காதல்.   உடல் சார்ந்த அழுத்தம் காமம்.  அறிவு சார்ந்த முடிவுகளின் மேன்மை  நாம் நடத்தும் வாழ்க்கை.


நமது உணர்வுகளையும், நம்மைச் சார்ந்தோரது உணர்வுகளையும் சரியாகப் புரிந்து கொள்வோம். மேன்மை பட வாழ்வோம்.


மீண்டும் பேசுவோம்.

அன்பன்,

வேதாந்தி.

4 comments:

  1. //மனம் சார்ந்த புரிதல்கள் காதல். உடல் சார்ந்த அழுத்தம் காமம். அறிவு சார்ந்த முடிவுகளின் மேன்மை நாம் நடத்தும் வாழ்க்கை.//

    நிறைய பேருக்கு இதிலுள்ள வித்தியாசங்கள் தெரிவதில்லை. தற்போதுள்ள நடைமுறையில் காதல் என்பதே காணாமல் போகிற சூழல் நிலவுகிறது.

    ReplyDelete
  2. உணர்வுகளையும் நிகழ்வுகளையும் பகுத்தறிந்து ஆராயத் தெரியாததன் விளைவே புரிதலில்லாத குழப்பமான வாழ்வு. இந்தப் பதிவுகளின் நோக்கே நமது வாழ்வின் சிறப்பையும் வாழ்வதன் மேன்மையையும் உணர்த்துவதே..


    தங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்.

    ReplyDelete
  3. உண்மை, உண்மை உங்களின் கருத்தை வரவேற்கிறேன் .
    அன்பு ,பரிவு ,நம்பிக்கை ,புரிந்துகொள்ளுதல் ,இவையே காதல் ஆகும் .இதனை ஒருவருக்கொருவர் உணர்வை வெளிப்படுத்தி அதன்மூலம் பேரின்பத்தை அடைவதே காமம் .
    எனவே , காதலுடன் கொள்ளும் காமமே சிறந்தது ,மேன்மையானது,மதிக்கத்தக்கது .நன்றி .

    ReplyDelete
  4. அருமையான பதிவு

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...