22.10.10
தனிமனிதனின் மனப்போக்கை விட ஒரு கூட்டத்தின் மனப்போக்கு விபரீதமானதா?
தனி மனிதனின் மனப்போக்கே கூட சில சமயங்களில் காரண காரியங்களுக்கு செவி சாய்ப்பதில்லை. இப்படி இருக்கையில் ஒரு கூட்டத்தின் மனப்போக்கானது காரண காரியங்களுக்கோ அல்லது மற்றைய விதி முறைகளுக்கோ மதிப்பளிக்கும் என நினைப்பது நிச்சயமாய் உண்மைக்கு புறம்பான ஒன்றாகும்.
கூட்டத்தின் மனப்போக்கு என்பது யாரையேனும் எதற்கேனும் பலி கொடுக்க அலையும் பூசாரியைப் போன்றது. இந்த Crowd mentality யை நடத்துவது யார்? அல்லது எது? என்பது போன்ற கேள்விகளை கேட்கவோ ஏன் நினைத்துக் கூட பார்க்கவோ யாரும் முனைவதில்லை. சற்றே உற்றுக் கவனித்தால் அதன் போக்கு நீரின் போக்கைப் போல ஏதேனும் ஒரு இலக்கினை குறிவைத்துப் பாய்வது புரியும். ஆனால் அதற்கு மூளையாக இருந்து யார் வழி நடத்துகிறார்கள் என்பது சட்டென விளங்காது.
கூட்டம் நல்லதற்கும் சேருகிறது மற்றதற்கும் சேருகிறது. நல்லதற்கு அல்லது ஒரு சமநிலையான எண்ணத்தோடு சேரும் கூட்டமென்றால் ஏறக்குறைய ஒரு மட்டைப் பந்தாட்டத்திற்கான ரசிகர் கூட்டத்தினை ஒத்திருக்கும். ஆனால் இந்தக் கூட்டத்திலும் எல்லோரது மனதிலும் ஒரு வெடிபொருள் ஒரு ஒற்றை நெருப்புப் பொறிக்காக காத்திருக்கும். பல விளையாட்டு மைதானங்கள் பொர்க்களமாக மாறிய சம்பவங்களுண்டு. தங்களுடைய முந்தைய நாள் கதாநாயகனையே வில்லனாக்கி அவரது உருவ பொம்மையை எரித்த சம்பவங்களும் உண்டு.
இந்த கூட்டங்களை திசை மாற்றி வெறியேற்றுவது யார்? யாருக்கும் தெரியாது. ஆனால் இந்தக் கூட்டத்தில் உள்ளவர்களே தங்களது தனிப்பட்ட மனப்போக்கு இது வல்ல என்று தனியே இருக்கும்போது ஒத்துக் கொள்வர். இப்படிப்பட்ட சுயமாய் சிந்தனை கொண்ட மனப்போக்கு கூட்டத்துடன் சேரும்போது மறைந்து போகிறது.
தனி மனிதர்களை காரணம் இன்றி அல்லது கருப்பர்கள், சூனியக்காரி என்ற பொருந்தாக் காரணங்களுக்காக பலரை தேடிப் பிடித்துக் கொண்றிருக்கிறது கூட்டம். இதைத் தான் witch hunting என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். நம்மூரிலும் கூட மந்திரவாதி அல்லது சூனியக்காரி என்று பல பிச்சைக்காரர்கள் கூட்டத்தின் மனப்போக்கிற்கு பலியாக்கப் பட்டிருக்கின்றனர்.
1978ம் வருடம் நவம்பர் மாதம் 18ம் தேதி அமெரிக்காவிலுள்ள ஜோன்ஸ் டவுன் என்ற இடத்தில் கூடிய 900 பேரை ரெவரண்ட் ஜிம் ஜோன்ஸ் என்பவர் தற்கொலைக்குத் தூண்டியதில் அனைவரும் கூட்டமாக சயனைடு அருந்தி சாவை ஏற்றுக் கொண்டனர். மனிதர்கள் மட்டுமல்ல விலங்கினங்களும் இந்த கூட்ட மனோபாவத்திற்கு இரையாகின்றன. சில வருடங்களுக்கு முன்னர் கூட்டம் கூட்டமாய் கரை ஒதுங்கிய டால்பின்கள் மற்றும் திமிங்கலங்களை உதாரணமாகச் சொல்லலாம். இந்த விலங்குகளை மீட்புப் படையினர் மீட்டு நடுக்கடலில் விட்டு வந்தபோதும் இவைகள் மறுபடியும் கரைநோக்கி வந்து சாவைத் தேடிக்கொண்டனவாம்.
கூட்ட நிலையில் நம்மில் இருந்து வெளிப்படும்நமது தனிப்பட்ட மனப்போக்கு ஒத்துக் கொள்ளமுடியாத செயல்களுக்கு அல்லது கூட்டத்தினரின் போக்குக்கு மறுப்புதெரிவிக்கவோ இயலாத நமது நிலைக்கு ஒரு வகையில் பார்த்தால் கூட்டத்தில் நமக்கு கிடைக்கும் ‘யாரோ’ என்கிற அனாமதேய அடையாளம் - Anonymous Identity - கூட காரணமாக இருக்கலாம். ஏனெனில் இந்த அனாமதேய அடையாளம் நமது செயல்களுக்கு நம்மை பொறுப்பேற்க கட்டாயப் படுத்துவதில்லை. எனவெ நமது மனம் குற்ற உணர்வுக்கு ஆட்படுவதில்லை. இது ஒரு வகையான ஒரு தப்பித்தல் முயற்சியே.
பொதுவாகவே நாம் கூட்டமாக இருக்கையில் கூட்டத்தினரின் பாங்கிற்கு , அது ஏற்புடையதோ அல்லவோ , ஒத்துப் போகிறோம். இந்த முடிவுகள் நாம் தனியே இருக்கையில் மாறலாம். ஒரு பரிசோதனையின் போது, மின் தூக்கியில் இருக்கும் மனிதர் தன்னுடன் இருக்கும் கூட்டத்தின் பாங்கிற்கு ஒத்துப்போவதை காண்டனர். இதை விளக்கும் காணொளி இதோ. கூட்டம் பார்க்கும் திசையே நோக்கியே தனி மனிதர் திரும்புவதையும், கூட்டத்திலிருப்பவர்கள் தன் தொப்பியை எடுத்துப் போடும்போது அதே செயல்களை தானும் செய்வதையும் கவனியுங்கள். எனவேதான் ஒரு தேர்ந்த தலைவன் ஒரு கூட்டத்தை எளிதில் கவர்கிறான். சிலநேரங்களில் எதிராகவும் அணி சேர்கின்றனர். இங்கு கூட்டமாக இருப்பது அல்லது அணியாக இருப்பதுதான் எல்லோர்க்கும் எளிதான செயலாக இருக்கிறது.
இந்த கூட்ட மனோபாவத்தை சரியாகப் புரிந்து கொண்டவர்கள் இதை வைத்து வியாபார உத்தியை உருவாக்கி பணம் பண்ணுகின்றனர். சமீபத்தில் வெளியான ‘எந்திரன்’ பட வெளியீட்டிற்காக அதன் தயாரிப்பாளர்கள் கையாண்டது ஏறக்குறைய இதைப் போன்றதே. முதலில் தங்களுக்குச் சாதகமான கூட்ட மனப்போக்கை அவர்களே உருவாக்கி நமது சுய மனோபாவம் அந்த கூட்ட மனோபாவத்தை மறுப்பின்றி ஏற்றுக் கொள்ளச் செய்துவிட்டனர். இந்த வியாபார உத்தி மற்ற துறைகளிலும் கையாளுகின்றனர்.
சமீபத்தில் உலவிய தங்கைக்கு பச்சைப் புடவை வழங்க வேண்டுமென்ற சம்பிரதாயம் மற்றும் இன்னமும் நடக்கும் அட்சயதிருதைக்கு தங்கம் வாங்கவேண்டுமென்ற வழக்கம் - இப்போது அதை பிளாட்டினமாக உயர்த்தி நகை வியாபாரிகள் வியாபாரத்தை நடத்துவதையும் கூட இந்த கூட்ட மனப்போக்கை வியாபார உத்திக்காக பயன்படுத்துவதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
கூட்டத்துடன் இருந்தாலும், தனியே இருந்தாலும் நாம் நமது தேவைகளை உணர்ந்து சமுதாயப் பொறுப்புடன் அறிவு சார்ந்த முடிவுகளையே எடுக்க வேண்டு.ம்.
கூட்ட மனோபாவம் பொறுப்பற்றது மற்றும் ஆபத்தானது என்பதை உணர்வோம்.
இன்னமும் பேசுவோம்.
அன்பன்
வேதாந்தி.
No comments:
Post a Comment