25.10.10
நாம் கொள்ளும் நம்பிக்கைகளில் நம்பகத்தன்மை உள்ளதா?
வருடா வருடம் நடக்கும் புத்தகக் கண்காட்சிகளில் விற்கப்படும் புத்தகங்களின் வகைகள் பொது மக்களின் மனப்போக்கை ஓரளவுக்கு பிரதிபலிப்பதாய் இருக்கும். இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த விற்பனையில் அதிகமாக விற்கப்பட்ட புத்தகங்களில் முதலாவதாக இருந்தது சோதிடப் புத்தகங்கள் இரண்டாவதாக அதிகப்படியாக விற்பனையானது சமையல் புத்தகங்கள்.
சோதிடத்தினை நம்புபவர்கள் தங்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தினை விரும்புபவர்களாகவோ அல்லது ஒரு மாற்றத்தினை எதிர் நோக்குபவர்களாகவோ இருக்கலாம். இந்த சோதிட முறைகள் அல்லது விளக்கங்களில் அவர்களது நம்பிக்கைகள் சற்றே உறுதிப்படலாம் அல்லது அவர்களது பொறுமைக்கு நியாயம் கற்பிக்கப் படலாம். இதில் எதுவானாலும் அவர்களது தற்போதைய நிலையைவிட அவர்களது எதிர்காலம் மிகப் பிரகாசமாகவும் வளமாகவும் இருக்கும் என்ற நம்பிக்கையை முன்வைத்தே இந்த சோதிட விளக்கங்கள் இருக்கும். மனிதர்களை தங்களின் எதிர்காலத்தில் நம்பிக்கை வைக்கச் செய்கிறது இந்த சோதிட விளக்கங்கள்.
பணம் பறிக்கும் குறிக்கோளுடன் செயல்படும் சில ஈனர்களைத் தவிர்த்து ( இத்தகைய ஈனர்கள் எல்லாத் துறையிலும் உள்ளனர்..) பார்த்தோமானால் இந்த சோதிட விளக்கம் சொல்லும் அனைவரும் ஒருவகையில் ‘ Hope Clinic ‘ நடத்துகிறார்கள் என்பது புரியும்.
நான் சோதிடம் உண்மையானது அல்லது பொய்யானது என்ற வாதத்திற்கே செல்லவில்லை. நான் பேச எடுத்துக் கொண்டது அவைகள் கொடுக்கும் நம்பிக்கைகள் பற்றியே.
சில நிமிட நம்பிக்கை கிடைத்திருந்தால் எத்துனையோ தற்கொலைகள் தவிர்க்கப்பட்டிருக்கும். சிலர் சொல்வது போல் நாம் பிறக்கும் போதே இறப்பென்று ஒன்று நிச்சயிக்கப்பட்டிருக்கையில் இந்தப் பிறப்பில் நாம் ஒவ்வொரு நாளையும் மகிழ்வுடன் கழிப்பது ஒன்றே பகுத்தறிவு மிக்க செயலாக இருக்கும் என்பது என் எண்ணம். ஒருவேளை பகுத்தறிவு கொண்டவன் இத்தகைய “Hope Clinic’ குகளை எள்ளி நகையாடி தனது தன்னம்பிக்கையையும் பகுத்தறிவினையும் உயர்வாகப் பேசலாம். இங்கு இந்த தன்னம்பிக்கையாளனை காப்பதும் அவனது தன்னம்பிக்கையே. தன் மீது நம்பிக்கை கொள்ளாதவன் பிறரை அல்லது பிறவற்றில் நம்பிக்கை கொண்டு வாழ்வை கடத்துகிறான். இங்கு மகிழ்வுடன் வாழ்வது மட்டுமே முக்கியம். அந்த வாழ்வை எந்த நம்பிக்கை - தன்னம்பிக்கை அல்லது பிறதில் நம்பிக்கை - கொடுத்தாலும் சரியே. ஏனெனில் நம்பிக்கையற்றவன் வாழும் முயற்சிகளை கைவிடுகிறான். மேலும் தான் கைவிடப்பட்டவனாக உணர்ந்து தன் முயற்சிகளை கைவிடும் போது தன் எதிர்காலம் இருண்டுவிட்டது என்ற அச்சத்திலேயே உயிர் விடத் துணிகிறான். இது கொடுமையல்லவா?
பீர்பால் கதைகள் ஒன்றில் ஒருமுறை அரசன் ஒரு சலவைத் தொழிலளியை கழுத்தளவு நீரில் ஒரு இரவு முழுவதும் நிற்கவேண்டும் என்று பணித்தானாம். மறுநாள் அந்தத் தொழிலாளியை இரவு முழுதும் குளிர் நீரில் எவ்வாறு உன்னால் இருக்க முடிந்தது என விசாரித்தபோது அவன், ‘ அய்யா, தூரத்தே அரண்மனையிலிருந்து வந்த விளக்கின் வெளிச்சத்தை கவனித்தபடியே இருந்ததனால் எனக்கு குளிர் தெரியவில்லை’ என்றானாம். அந்த விளக்கின் ஒளி அவனுக்கு வெப்பத்தைத் தரவில்லையானாலும் கொடிய குளிரின் இரவைக் கழிக்க அவனுக்கு நம்பிக்கையைத் தந்தது.
இதைப் போலவே ஆழ்ந்த காதலுணர்வு கொண்ட சிலருக்கு தங்கள் காதலியின் முகம் மிகுந்த நம்பிக்கையைக் கொடுத்து வாழ்வின் கடினமான பொழுதுகளை கடக்க உதவும். இதற்கு காதல் கை கூட வேண்டுமென்பதும் இல்லை , காதலி அருகில் இருக்க வேண்டும் என்பதும் இல்லை. அவன் மனதில் பதிந்த அவளது தீர்க்கமான பார்வையும், மகிழ்வான சிரித்த முகமும் மட்டுமே போதும். இதுதான் உண்மையும் கூட. சில கடுமையான நேரங்களில் தங்கள் காதலியின் மென்மையான வருடலை ஆறுதலோடு உணரக்கூட முடியும் இவர்களால். இவர்களது வாழ்வின் ஆதாரமே இவர்களது காதலுணர்வு தரும் நம்பிக்கைதான் என்றால் அது மிகையாகாது. இத்தகைய நம்பிக்கை எக்காலத்தும் இவர்களை மகிழ்வுடன் வைத்திருக்கும்.
இதைப் போலத்தான் மற்ற நம்பிக்கைகளும். நம்பிக்கைகள் நாம் வாழ்வை மகிழ்வுடன் கடக்க உதவும்போது அவைகள் வாழ்வின் அச்சாணியாகவும் பங்காற்றுகிறது. நம் மக்களின் மீது நாம் வைக்கும் நம்பிக்கை, மக்கள் பிற்காலத்தில் உதவாது போயினும் மற்றவர் மீது நாம் வைக்கும் நம்பிக்கை, மற்றவர் உதவாது போயினும் யாரும் பார்த்திராத இறையின் மீது நாம் வைக்கும் நம்பிக்கை, இதுவெல்லாம் தவறிய போதும் மறு பிறவியின் மீது நாம் வைக்கும் நம்பிக்கை….
நம்பிக்கையில் நம்பகத்தன்மை இருப்பினும் அல்லது நம்பகத்தன்மை இல்லாவிடினும் அது நம் வாழ்வை மகிழ்வுடன் கடத்த உதவும் தருணத்தில் அவைகள் கைக்கொள்ளப் படவேண்டியதே. Because it delivers.
மேலும் பேசுவோம்.
அன்பன்,
வேதாந்தி.
No comments:
Post a Comment