Followers

Wednesday, June 29, 2011

லோக்பால் மசோதா வரைவு - ஒரு ரியாலிடி ஷோ வா ?

30.6.11

லோக்பால் மசோதா வரைவு -  ஒரு ரியாலிடி ஷோ வா ?

மத்திய அமைச்சர் ஒருவர் ஒரு தொலைக்காட்சியின் கேள்விக்கு இப்படித்தான் பதிலளித்தார்.

தொலைக்காட்சி கேட்ட கேள்வி: “ லோக்பால் மசோதா வரைவுக் குழுவினரின் வாத விவாதங்கள் ஒளிப்படமாக பதிவு செய்யப்படுமா”? என்பதுதான்.

இதைக் கேட்டதும் அமைச்சர் மிகுந்த எரிச்சலடைந்தார். “உங்கள் தொலைக்காட்சியின் TRP rating அதிகரிக்க நீங்கள் ஒளிபரப்ப இதென்ன வரைவு மசோதா கலந்துரையாடலா இல்லை ரியாலிடி ஷோ வா  ? “ என்றார்.

நானும் யோசித்துப் பார்த்தேன். இதுவும் நல்லதுதானே எனப் பட்டது. இல்லையென்றால் மக்கள் யாரையும் நம்ப மறுக்கின்ற ஒரு காலம் வந்தாலும் வந்துவிடும் . ஏனெனில் இந்த வரைவு மசோதாவைப் பொறுத்தமட்டில் எல்லா அரசியல் கட்சிகளும் ஒன்று கூடிவிட்டன. மக்கள் தனிப்படுத்தப் பட்டு விட்டனர்.  இனிமேல் மக்களின் கதி..?

வேறென்ன.. ரியாலிடி ஷோ பார்க்க வேண்டியதுதான்..இன்னமும் பேசுவோம்.

அன்பன்,

வேதாந்தி.


பாவம் சிந்துபாது…சிக்கலிலிருந்து விடுபடுவது எப்போது?

29.6.11

பாவம் சிந்துபாது…சிக்கலிலிருந்து விடுபடுவது எப்போது?
அராபியக் கதைகளின் நாயகனான சிந்துபாதை நினைவிருக்கிறதா?

வலிமை மிக்கவன். புத்திசாலி. இளைஞன். தீரமும் வீரமும் நிறைந்தவன். ஏறக்குறைய நமது இந்தியாவைப் போல என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

சிந்துபாது ஒருமுறை தன் கப்பலை இழந்து ஒரு தீவில் ஒதுங்கியபோது ஒரு வயதான கிழவனை அந்தத் தீவில் கண்டான். பரிதாபப் பட்டு அவனை தனது தோளில் சுமந்து உதவிய போதுதான் அந்தக் கிழவனின் கொடூரம் தெரிந்தது. அவனைச் சுமந்த அன்றிலிருந்து சிந்துபாதுக்கு தூக்கமோ ஓய்வோ கிடையாது. போதாக் குறைக்கு கிழவனின் துன்புறுத்தலுக்கும் ஓர்  அளவில்லாமல் போனது.  தோளில் அமர்ந்து கொண்ட கிழவனைப்பார்த்து சிந்துபாது “ இது நியாயமில்லை.. நீ என் சுதந்திரத்தை பறித்துக் கொண்டாய். என்னை அநியாயத்திற்கு அடிமைப்படுத்தி உன் விருப்பம் போல் ஆட்டிவைக்கிறாய். நீ நியாயமற்றவன் எனத்தெரிந்தும் உன்னை நான் சுமப்பது சரியல்ல. நீயாகவே இறங்கு அல்லது என்னை துன்புறுத்தி என் உழைப்பை சுரண்டுவதையாவது நிறுத்து” என்றானாம். அதற்கு அந்தக் கிழவன் , “ யார் சொன்னது நான் உன்னைத் துன்புறுத்தி உன் உழைப்பைச் சுரண்டுகிறேன் என்று. இது அத்தனையும் உன் விருப்பம் தான். நீயாகத்தானே என்னைச் சுமந்தாய்? அப்படியிருக்க இப்போது என்னை கீழே இறங்கச்சொன்னது சரியல்ல. போ..போ.. உனக்கு வழிகாட்டுவதற்குள்எனக்கு மீண்டும் பசிக்கிறது” என்று விரட்டினானாம்.கடைசியில் என்னவாயிற்று தெரியுமா? சிந்துபாது சாப்பிட்ட எல்லாவற்றையும் பிடுங்கி வயிற்றில் போட்டுக் கொண்ட கிழவன், சிந்துபாது தயாரித்து வைத்திருந்த மதுவையும் குடிக்க விடாமல் பிடுங்கி வயிறு முட்டக் குடித்து வைத்தானாம்.  மதுவைக் குடித்ததும் குரங்காய் ஆடத் தொடங்கினான். சுவையால் இழுபட்டு மீண்டும் மீண்டும் மதுவை சிந்துபாதிடமிருந்து பிடுங்கி குடித்துவைத்தான்.

கிழவனின் இந்த போதை போதுமா சிந்துபாதை விடுவிக்க?

தெரியவில்லையே.. தீவில் நடந்த கதை தீபகற்பத்திற்கு ஒத்துவருமா எனப் புரியவில்லையே..

பாவம் சிந்துபாது. சிக்கலிலிருந்து விடுபடுவது எப்போது?

இன்னமும் பேசுவோம்.

வேதாந்தி.Tuesday, June 21, 2011

உணர்தலின் மேன்மை உயிரின் மேம்படுதலா?

21.6.11

உணர்தலின் மேன்மை உயிரின் மேம்படுதலா?

உடல் சார்ந்த ஆன்மா தன் இயக்கத்தில் இருக்கையில் அதனை உயிர் எனலாம். ஆனால் உயிரின் விடுதலை ஆன்மாவின் விடுதலையாகாது. விடுபட்ட உயிர் பேரொளியைச் சேர்ந்தாலன்றி அது ஆன்மாவின் விடுதலையாகாது.  இவ்வுலகின் அனுபவங்களைக் கொண்டு தன்னை மேம்படுத்திக் கொண்ட உயிர் மட்டுமே இறப்பில் இந்த பூத உடலை விட்டு  பேரொளியை அடைந்து ஆன்மாவின் விடுதலையில் முடிகிறது. மற்றவையெல்லாம் மறுசுழற்சிக்குள்ளாகிறது -  மேன்மையடைதல் பொருட்டு மறு பிறப்பிற்குள்ளாகிறது.

மேற்சொன்னவைகளை எல்லாம் விரிவாக முந்தய இரு பேச்சில் கண்டோம்.
காண்க:

இவ்வுலகின் உடல் சார்ந்த அனுபவங்களை, உணர்வுகளாய் நாம் அடுத்த நிலைக்கு கொண்டுசெல்லும் போது மட்டுமே அவைகள்  உயிரின் மேம்படுதலுக்கு உதவுகிறது. எனவே உணர்தல் - experiencing - முக்கியம்.  இந்த உணர்தல் நமது சூழல் மற்றும் நம்முடன் உள்ள மற்றைய உயிர்கள் , உறவுகளுடனான ஒத்துணர்ந்து புரிதலை -  empathetic understanding -  அதிகரிக்கும்.

இந்த ஒத்துணர்ந்து புரிந்துகொள்ளுதலையே நான் இங்கு உணர்தல் எனக் குறிப்பிடுகிறேன்.கற்றல் வேறு உணர்தல் வேறு. ஒருவன் பசி என்பதை கற்றுத் தெரிதலுக்கும் உணர்ந்து தெரிதலுக்கும் வேறுபாடு உள்ளது.  உணர்ந்து தெரிந்தவன் பிறர் பசித்திருக்கும் போது உதவ முற்படுவான். வெறும் கற்றலோடு நின்றுவிட்டவனிடம் இந்த உந்துதல் இருக்காது. கற்றலால் பெற்ற அறிவையும் அனுபவத்தால் பெற்ற அறிவையும் அதன் அடுத்த நிலையான உணர்ந்து தெளிதலுக்கு கொண்டுபோகும்போது மட்டுமே உயிரின் மேம்படல் நடக்கிறது.

இன்னமும் விளங்கிக் கொள்ளும்படிக்கு சொல்கிறேன்.

காதலைப் பற்றி நாம் அறிவோம். அதன் மேன்மையைப் பற்றியும் நாம் அறிவோம். ஆனால் இத்தனைக்கும் மேலே இந்தக் காதலை அனுபவிப்பவர்கள் சிலரே. அதிலும் பலர் தனக்குள் கிளர்ந்தெழும் உணர்ச்சிகளை காதல் என்று பெயரிட்டுக் கொள்கின்றனர். நான் மிகச் சிக்கலானதொன்றைக் கூற முற்படவில்லை; எளிமையான எதிர் பால் காதலுணர்வுகளைத்தான் சொல்கிறேன்.

இந்தக் காதலை அனுபவித்து, உணர்பவர்கள் மிகச் சிலரே.

தற்போது பத்திரிக்கைகளில் வந்த சென்னையில் நடந்த ஒரு நிகழ்வை நினைவு கூருங்கள். ஒரு தந்தை மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும் தன் மகளை, அவள் காதலித்து மணம் புரிந்த குற்றத்திற்காக அவளது கணவனை - தன் மருமகனை - கொன்று  விதவையாக்கி விட்டான். தனது குற்றத்திற்கு இவர் சொல்லும் காரணம் தான் தன் மகளை மிகவும் நேசிப்பதாகவும் அவளை அவளுக்கேற்ற ஒரு மருத்துவம் படித்த மணமகனை பார்த்து வைத்ததாகவும் ஆனால் தன் மகள் தன் விருப்பப் படி காதலித்து மணம் புரிந்தை தன்னால் ஒப்புக் கொள்ள முடியாமல் தான் இப்படிச் செய்து விட்டதாகவும் கூறினார்.

இந்தத் தந்தை குறைந்தது ஒரு இருபது வருடங்களாவது தன் மணைவியுடன் வாழ்க்கை நடத்தியிருப்பார். அப்படியிருந்தும் காதலை உணர்ந்தாரில்லை. இவர் காதலை கற்றறிந்திருக்கலாம்.  ஆனால் இந்தக் கற்றல் அதே நிலையில் நின்று அடுத்த நிலையான உணர்தல் நிலைக்குச் செல்லாததினால்தான் இவரால் தனது மகளின் காதலை ஒத்துணர்ந்து புரிந்து கொள்ள முடியவில்லை. இதுவே இவரை கொலை பாதகச் செயலுக்குத் தூண்டி பாவமிழைக்க வைத்துவிட்டது.

இன்னமும் ஒன்றைச் சொல்கிறேன். இது நாமெல்லோரும் அறிந்த கண்ணகி மாதவி கதைதான். என்னைப் பொறுத்தமட்டில் கோவலன் காதலை மாதவியால் மட்டுமே உணர்ந்தான். ஆனால் இந்த உணர்தலால்தான்  பின்னாளில் கண்ணகி தன் மேல் கொண்டிருந்த காதலையும் அவனால் புரிந்து கொள்ள முடிந்தது, அது மாதவியிடமிருந்து அவனை திரும்பவும் கொ ணர்ந்தது. இது அவனை கண்ணகியை ஒத்துணர்ந்து புரிந்து கொள்ளச் செய்தது.பட்டினத்தார், கடைவழிக்கு காதற்ற ஊசிகூட வராது என்பதை உணர்ந்ததாலேயே துறவறம் பூண்டார். இந்த உணர்தலின் மேன்மையாலேயே அவருக்கு பேய்க்கரும்பு இனித்தது.

ஆனால் அவரது தமக்கையார் இதனை அறிந்திருந்தாலும் அதை அடுத்த நிலையான உணர்தலுக்கு கொண்டு செல்லாததினால், இவ்வுலகவாழ்வில் பற்று கொண்டோர் பெரும் வணிபக் குடும்பத்தில் பிறந்த தம் சகோதரரை பரதேசி என பழிப்பரே என்பதையே பெருங்கவலையாய்க் கொண்டு தன் சகோதரரை நஞ்சிட்டு கொல்லவும் துணிந்தாரல்லவா?

பெற்றோர் மற்றும் பிள்ளைகளுக்கு இடையே இந்த வகை மேம்பட்ட உணர்தல் அவர்களை மேம்படுத்தி உறவுகளை சிறக்கச் செய்யும். பெற்றோரின் கவலைகளை பிள்ளைகள் புரிந்துணர்தல் அவசியம். அதைப்போலவே பிள்ளைகளின் வளர்ச்சியையும் அவர்களது வாழ்வின் சந்தர்ப்பங்களின் விரிவடைந்த எல்லைகளையும் உணர்ந்து பெற்றோர்கள் பிள்ளைகளை ஊக்குவிக்கவேண்டும். இந்த ஒத்துணர்ந்து புரிதல் - emphathetic understanding -  நமது உறவுகளை வலுப்படுத்துவதோடல்லாமல் வளப்படுத்தவும் செய்யும் மேலும் நமது வாழ் சூழலில், குடும்பத்தில் , அமைதியையும் காக்கும்.

ஆனால் நமது இந்த  உணர்தலைத் தடுக்கும் காரணிகள் நமது மனச்சேற்றில் எழும் கீழான எண்ணங்கள் மற்றும் நமது மன நிலையைக் குலைத்துப் போடும் போதைப் பழக்கங்கள் ஆகியவை. இவைகள் உணர்தலைத் தடுப்பதோடு மட்டுமல்லாது நம்மை விலங்கினும் கீழாக மாற்றிவிடும். இது குடும்பத்தைச் சீர்குலைப்பதோடல்லாது சமுதாயச் சீர்கேட்டிற்கும் வழிகோலும்.

பாவ புண்ணியங்களை அறிய வேத நூல்களைத் தேட வேண்டியதில்லை. நமது அனுபவங்களின் உணர்தலின் தெளிவை மேம்படுத்தினாலே போதும்.  எந்தெந்த வினைகளை நாம், பிறர் நமக்கிழைப்பது கூடாது எனக் கருதுகிறோமோ அந்த வினைகளை நாம் பிறர்க்கிழைப்பது பாவம்.  பிறரிடமிருந்து நம்மை மகிழச்செய்யும்  செயல்களாய் நாம் எதிர்பார்க்கும் செயல்களை நாம் பிறருக்குச் செய்து மற்ற உயிர்களை மகிழ்விப்பதே புண்ணியம் சேர்க்கும் வினைகளாகும்.
நமது அனுபவங்கள் நமக்கு நிறைய கற்றுத் தருகின்றன.  இந்த கற்றல் அறிவுத் தெளிவோடு மட்டுமே நின்றால் உயிர்க்குப் பயனாகாது. அதற்கும் மேலே உயிர்க்குப் பயனுள்ள உணர்தலை - ஒத்துணர்ந்து புரிதலை - உருவாக்கி இந்த உணர்வுகள் நமது செயல்களை நிர்ணயிக்கும் கருவிகளாகும்போது நாம் உயிரை மேம்படுத்திஆன்மாவின் விடுதலைக்கு வித்திடுகிறோம் எனலாம்.
இந்த அனுபவங்களால் கிடைக்கும் உணர்தல் மட்டுமே நம்மை  மேம்படுத்தும். இந்த உணர்தலை இழந்தோமானால் நாம் கீழான செயல்களைச் செய்து பிறப்பு இறப்புச் சுழலில் சிக்கி மாள வேண்டியதுதான்.

இதுவரை நான் உணர்தலை விளக்கியது காதல் மற்றும் பசி, பிணி ஆகியவைகளுக்கு என்றாலும் இந்த நோக்கில் நீங்கள் சிந்திக்க ஆரம்பித்தீர்களானால் இந்த உணர்தல் நாம் கற்றவைகளுக்கும், பெற்ற  அனுபவங்கள் அனைத்திற்கும் பொருந்திவரக் காண்பீர்கள்.

இதைப்போலவே நம்மைச் சுற்றியுள்ள சூழல் மற்றும் மனித உறவுகள் நமக்குக் கொடுக்கும் அனுபவங்களை நாம் உணர்தல் நிலைக்கு கொண்டு செல்வோமானால் நாம் சிறக்க வாழலாம்.அது மட்டுமல்ல. நான் முன்பே சொன்னதுபோல் இப்பிறவியில் நமது செயல்களை சரியான வழியில் செய்து உயிரினை - ஆன்மாவை - மேம்படுத்தி பிறப்பறுக்க இந்த ஒத்துணர்ந்து புரிந்துகொண்டு வாழ்தல் நமக்கு ஒரு திசை காட்டியாய் வழிகாட்டும்.


இன்னமும் பேசுவோம்,

அன்பன்,

வேதாந்தி.Wednesday, June 15, 2011

மக்களாட்சியில் நாம் மன்னரைத் தேர்ந்தெடுக்கிறோமா?

15.6.11

மக்களாட்சியில் நாம் மன்னரைத் தேர்ந்தெடுக்கிறோமா?மன்னர் கொடுங்கோலாட்சி செய்யும்போது அவரைக் கேள்வி கேட்க முடியாது என்பதாலும், சில சமயங்களில் அது மன்னரைத் தவிர மற்றவரது வாழ்வின் நலனில்  மனம் கொள்வதில்லை என்பதாலும் மன்னராட்சியை வெறுத்த மக்களுக்கு தற்போதுள்ள சனநாயகம் ஒரு வரப்பிரசாதமாகத் தெரிந்தது. இந்த சனநாயகம் மக்களை மக்களே ஆளும்படிக்கு இருக்கிறதென்பதால் இதனை மக்களாட்சி என்றும் சொல்லி வந்தனர்.  ஆனால் தற்போதைய நிலைமை இதனை கேள்விக்குறியாக்கி நம்மை கவலைக்குள்ளாக்குகிறது.

மக்களாகிய நாம் நம்மை ஆள நம்மைத் தொலைவு படுத்தாத மக்களைத் தேர்ந்தெடுக்கிறோமா அல்லது யாருமே கேள்வி கேட்க முடியாத சுயநலம் மிகுந்த மன்னரைத் தேர்ந்தெடுக்கிறோமா?

நான் அரசியலில் நாட்டமில்லாதவன். ஆனால் தற்போதைய அரசியலின் போக்கு கவலையையும் அச்சத்தையும் பெருக்குகிறது. ஒரு சாமானியனின் உரிமைகளையும் பாதுகாப்பையும் பறிகொடுக்கும் நிலை உண்டாகுமோ என்ற பதைப்பு ஏற்படுகிறது.  இது நமது மாநில அளவிலும் மற்றும் தேசீய அளவிலும் பொருந்தும்.இங்கே அய்யாவின் தவறைச் சுட்டிக் காட்டினால் ‘அம்மா ஒழுக்கமா?’ என்கிறார். அம்மாவின் பிழை குறித்துக் கேட்டால் ‘அய்யா பிழையற்றவரா?’ என்கிறார். மாற்றே இல்லை என்பதால் பொதுசனமும் போக்கற்றுக் கிடக்கிறது. இரு சாரரும், தன்னைச் சார்ந்தவர்களும் தன் கட்சியைச் சார்ந்தவர்களும் வளம் பெறவே இந்த சன நாயகம் என்றும் இதனை மாறி மாறி அனுபவிக்கவே தாம் இருப்பதாகவும், பொது சனம் தேர்ந்தெடுக்கவே அன்றி கேள்வி கேட்க இல்லையெனவும் உறுதிபட நம்புகின்றனர்.

அது சரிதான். மக்கள் தங்கள் பலமறியாத  வெறும் பட்டத்து யானைதானே. மாலை போட்டு மன்னரைத் தேர்ந்தெடுத்த பின்னர் அவரைச் சுமக்க வேண்டியது மட்டுமே அதன் பொறுப்பு. அதைத் தவிற வேறெதையும் நினைப்பது ராஜ  துரோகம் அல்லவா?இத்தனைக்கும் மேலே எக்காரணம் கொண்டும் மக்கள் சிந்தித்து விடக்கூடாதெனஅவர்களை   இன வெறி, மத வெறி மற்றும் மொழி வெறியில் ஆழ்த்தி மக்களை மீளொன்னா போதைக்குள்ளாக்கி வைத்திருப்பதொன்றே தம்மையும் தமது அரசியல் வாழ்வையும் காக்கும் மந்திரம் என்பதையும் தெளிவுபட அறிந்துள்ளனர் இந்த அரசியல் வித்தகர்கள்.

இனம், மதம், மொழி இதெல்லாவற்றையும் விட ஒழுக்கம் மேம்பட்டதல்லவா? ஒழுக்கம் ஒன்றே மக்களை மாக்களிடமிருந்து பிரித்துக் காட்ட வல்லது என்பதை சொல்லியா தெரிய வேண்டும். தன்னை நம்பிக்கையுடன் அரியணை  ஏற்றிய மக்களுக்கு துரோகம் செய்வது ஒழுக்கக் கேடல்லவா. பொதுச்சொத்தை பேராசையுடன் கொள்ளையடிப்பது இழுக்கல்லவா? மனிதனாக இருக்கும் தகுதியை முற்றிலும் இழந்த பின் ஒருவன் மொழி பற்றியோ, இனம் பற்றியோ அல்லது மதம் பற்றியோ பேசி என்ன பயன்?இங்கு இப்படியென்றால் தேசீய அளவில் மிகப்பெரிய மாயாஜாலம் நடக்கிறது. வெளிப்படையாகவே சொல்கின்றனர் தேர்ந்தெடுத்தவர்களை எதுவும் கட்டுப்படுத்தாது என்று.  தேர்ந்தெடுத்தவர்களை தேர்ந்தெடுப்பவர்களே கட்டுப்படுத்தவேண்டுமென்றாலும் அய்ந்து வருடங்கள் காத்திருக்கவேண்டியது கட்டாயமென்றும் அதுவரை அவர்கள் செயல் குறித்து வாய் திறக்க யாருக்கும் அருகதை கிடையாதென்றும் சொல்கின்றனர்.  இதைச் சொல்லும் கால கட்டத்தைப் பாருங்கள். தேர்ந்தெடுக்கப்பட்டு ஆண்டுகொண்டிருப்பவர்கள் மத்தியில் மிகப்பெரும் கொள்ளையர்கள் இருப்பது வெளியான பிறகும், அந்தக் கொள்ளையர்களின் கொள்ளை பற்றி உச்ச நீதிமன்றத்தில் பெரும் அலசல் நடந்து கொண்டிருக்கும் போதும் மற்றும் சிலர் இந்தக் கொள்ளையின் காரணமாக தில்லி திகார் சிறையிலிருக்கும் போதும் சொல்கின்றனர், அவர்களை - தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்களை - தேர்ந்தெடுத்த மக்களே கேள்வி கேட்கக் கூடாதென்கின்றனர். 

இதை விடக் கொடுமை ஊழல்  குறித்த குற்றங்களுக்கு அதிக பட்ச தண்டனையே ஏழு வருடங்கள் தானாம். ஊழல் செய்து சேர்த்த பணத்தை பறிமுதல் செய்ய வழியும் இல்லையாம். ஒரு சாமான்யன் கடின உழைப்பிலும் கூட ஏழு வருடங்களில் லட்சங்களின் மதிப்பில் அதிகம் சம்பாதிக்க முடியாது. ஆனால் ஊழல் புரிவதிலோ கோடிகளில் அதுவும் 300 லிருந்து 600 கோடிகள் குறைந்த பட்ச கொள்ளை.  இந்த வழியை சிறந்ததென தற்போதைய வழிப்பறிக் கொள்ளையர்கள் தேர்ந்தெடுக்க ஆரம்பித்தால் - ஆரம்பித்தால் என்ன.. ஆரம்பித்தே விட்டார்கள் - சாமன்யனின் கதி என்ன? சாமான்யன் இந்த organised crime ஆல் தன் உரிமைகளையும் உடமைகளையும் பறி போவதைக் கண்டு கை கட்டி வாய் மூடி மௌனியாய் இருப்பதைத் தவிர வேறேதும் வழியில்லையா?இந்தியாவின் அத்துனை கோடி மக்களின் உணர்வுகளை பிரதிபலித்து அவர்களது உரிமைகளை மீட்டுத்தர சாத்வீக முறையில் போராடிய  மகாத்மாவைப் பார்த்து நம்மை ஆண்ட வெள்ளையர் கூட இத்துனை புத்திசாலித்தனமாக கேட்கவில்லை - நீர் என்ன மக்களின் பிரதிநிதியா, என்று. ஆனால் இந்த சனநாயக நாட்டில் நம்பிக்கையோடு நம்மை ஆள நாம் தேர்ந்தெடுத்தவர்கள் நம்மைப்பார்த்து, நமது உணர்வுகளை புரிந்து கொண்டு நமது உரிமைகளும் உடமைகளும் பறிபோவதைக் கண்டு பதைத்து குரல் கொடுப்போரைப் பார்த்து, கேட்கின்றனர் , ‘தேர்ந்தெடுக்கப்பட்ட எம்மைக் கேள்விகேட்க நீவிர் யார்?’ என்று.அதை விடக் கொடுமை சுயம்புவாய் தம்மை எதிர்த்துக் கிளம்பும் இந்த சக்தியினை வேரறுக்க சதிகள் வேறு மனம் கூசாமல் செய்கின்றனர்.  தம்மைக் கேள்வி கேட்போர் மத வாதிகள் என்கின்றனர். மக்களது அங்கீகாரம் பெற்றவர்கள் அல்ல என்கின்றனர். மற்றும் பொய்ப் புரளிகளைக் கிளப்பி அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையை விமரிசிக்கின்றனர். இன்னமும்  ஏதேதோ சொல்கின்றனரே அன்றி தம்மிடம் உள்ள குறைகளைத் தீர்க்க ஏதும் செய்வாரில்லை. இப்படிப் பிரித்தாளும் சூழ்ச்சியை நம்மை ஆண்ட வெள்ளையர்கள் கூட இத்துனை சாதுர்யமாய்ச் செய்ததில்லை.

இந்த மண்ணிற்கே உரித்தான சாத்வீக அனுகுமுறையில் நம்பிக்கை கொண்டுள்ள இந்த மக்களை மழுங்கடிக்கப் பட்டவர்கள் என தவறாக எடை போடலாமா?அய்யா, எனக்கு அரசியல் வேண்டாம். நான் ஒரு சாமான்யன்.  உழைத்துச் சம்பாதித்து சேமிக்க நினைக்கும் ஒரு நடுத்தரக் குடும்பவாசி. நான் உழைத்துச் சேர்க்கும் பணத்திற்கு நேர்மையாய் வரி கட்டுபவன். வரி கட்ட தாமதமானால் அதற்கு வட்டியும் கட்டுபவன்.  அரசிடம் இப்படிச் சேரும் நிதியை திறம்பட ஆளவும், நான் வாழும் சமுதாய மேம்பாட்டிற்கென செலவுசெய்யவும் -  நிதி நிர்வாகம் மற்றும் பணி நிர்வாகம்  திறனே செய்ய - சிலரைத் தேர்ந்தெடுத்தேன். இப்படித் தேர்ந்தெடுத்தபின் கண்ணெதிரே என் திரவியம் கொள்ளை போவதைப் பார்த்த பின்னும் செயலற்றுக் கிடப்பதுதான் எனக்கு விதிக்கப் பட்டதா?இந்த மக்களாட்சியில் நானும் என்னைப் போன்ற மக்களும் தங்களை ஆள தேர்ந்தெடுப்பது மக்களோடு மக்களாக இருக்கும் ஒரு மனிதனையா அல்லது மக்களை அடிமைகளாய் அடக்கி மக்களது உழைப்பில் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் வளப்படுத்திக் கொள்ளும் ஒரு சுயநலம் மிக்க மன்னனையா? தயை செய்து யாரேனும் தெளிவு படுத்துங்களேன்…

மீண்டும் பேசுவோம்.

அன்பன்,

வேதாந்தி.Monday, June 6, 2011

பிறப்பின் பயனை அடைய நாம் செய்ய வேண்டுவன எவை ?

6.6.11

பிறப்பின் பயனை அடைய  நாம் செய்ய வேண்டுவன எவை ?


(இது ஒரு அலசல். மற்றும் இதில் சொல்லியிருப்பவைகள் தற்போதுள்ள கருத்துக்கள் அல்லது தத்துவங்கள் ஆகிய எவைகளையும் சார்ந்தோ எதிர்த்தோ சொல்லப் பட்டவைகளல்ல.)எல்லா கடவுள் கொள்கைகளும் இந்த உலகின் அனுபவங்கள் நம்மை மேம்படுத்தி நம் ஆன்மாவை பேரொளியாகிய இறவனிடம் சேர்ப்பிக்கின்றது என்றே கருத்தினையே மையமாகக் கொண்டுள்ளன.

இந்து மதத்தில், ஒரு கருத்து இந்த ஆத்மாவானது பரமாத்மாவிலிருந்து பிரிந்து வந்ததென்றும் இது மறுபடியும் அந்த பரமாத்மாவோடு இணைதல் வேண்டி இப்பூவுலகில் உள்ளது என்பது. மற்றொன்று இந்த ஆன்மாவே பரமாத்மாதான் என்பது.  இங்கு பரமாத்மாவை விட்டு வந்துள்ள ஆத்மா அதனுடன் சேர வேண்டுமானால் தன்னிடமுள்ள பாவங்களை - impurities - ஒழித்த பின்பே, பரமாத்மாவைப் போல தூய்மையடைந்த பிறகே, அதனுடன் சேரமுடியும் என்பது மையக் கருத்து. இது குறித்தே மனிதனின்  பிறப்பும் மறு பிறப்பும் எனக் கொள்ளலாம்.ஜைன மதத்தில், இந்த ஆன்மாவானது ஒவ்வொரு பிறப்பிலும் தனது செயல்களால் பாவ புண்ணியங்களை சேர்த்து வருகிறதென்றும் தக்க சமயத்தில் எல்லாப்பாவங்களையும் தான் சேர்த்த புண்ணியத்தால் கழித்து இறையடி சேர்கிறதென்பது கருத்தாகச் சொல்லப்படுகிறது. இங்கு மனிதனின் பிறப்பு மற்றும் மீண்டும் பிறத்தல் என்பது மனிதனின் பாவத்தினை கழிக்கவே என விளங்கிக் கொள்ளலாம்.
கிருத்துவ மதத்தில், கடவுளால்  உருவாக்கப்பட்ட இந்த உலகம் மற்றும் அதில் உள்ள உயிர்களை ஆளும் பொருட்டு அவரைப்போலவே (கடவுளைப்போலவே), அவரால் உண்டாக்கப்பட்ட இந்த மனிதன்,  சாத்தானின் சூழ்ச்சியினால்  கீழ்ப்படியாமை என்ற பாவத்தைச் செய்தபடியினால் இந்தப் பாவமானது மனிதனின் தெய்வத்தன்மையைக் கெடுத்து அவனை பாவச் சொரூபமாக்கியது. இப்படி பாவச் சொரூபமான மனிதன் பரிசுத்தமான கடவுளைச் சேர முடியவில்லை - எண்ணையும் நீரும் போல பாவச் சொரூபமும் பரிசுத்தமும் சேர்வதில்லை.  இப்படியாக கடவுளிடமிருந்து மனிதனை பாவம் பிரித்த படியினால், கடவுளே மனமிரங்கி மனிதனை மீட்கும் பொருட்டு தனது குமாரனாகிய ஏசு கிருஸ்துவை மாமிச பலியாக்கி அவரது இரத்தத்தினால் நமது பாவங்களை சுத்திகரிக்கச் செய்து பரிசுத்தமாக்கி  நம்மை அவருக்குள் மீண்டும் இருக்கச் செய்கிறார் என்பதும்,  இது மட்டுமல்லாது மனித குலத்தை மீட்டு கடவுளிடம்சேர்க்கும் பொருட்டு மனித குலத்தின் பாவத்தினை தான் ஏற்று பாவமாகி சிலுவையில் இரத்தம் சிந்தி உயிரை விட்ட தனது குமாரனாகிய ஏசுவினை ஏற்றுக் கொள்ளும் அனைவருக்கும் இந்த மீட்பு உண்டு என்பதும் மையக் கருத்தாக உள்ளது.இங்கு, தன்னிடமிருந்து பாவத்தினால் பிரிந்த மனிதனை, கடவுளே பிரயாசைப்பட்டு தனது குமாரனை மாமிச உருவில் மனித குலத்தின் பிரதிநிதியாக்கி ஒரு தேவ ஆட்டுக்குட்டியைப்போல பலிகொடுத்து மனித குலத்தின் பாவமனைத்தையும் போக்கியதாலும் இதனை விசுவாசிக்கும் அனைவருக்கும் இந்த பாவ மீட்பு கிடைப்பதாலும் மனிதன் தனது பாவங்களை போக்க மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்க வேண்டிய அவசியமின்றிப் போகிறது.

ஆக இந்த ஆத்மாவானது தான் கொண்டுள்ள பாவங்களை போக்கினால் மட்டுமே கடவுளைச் சேர முடியும் என்பதால் தனது பாவங்களை வினை செய்து தீர்க்கும் பொருட்டு பிறப்பெடுக்கிறது எனக் கொள்ளலாம்.

கிருத்துவத்தைப்  பொருத்த மட்டில் கிருத்துவை ஏற்றுக் கொண்டு விசுவாசத்துடன் அவர் வழி நடப்பது நம்மை பரம பிதாவிடம் சேர்க்கும்.   இங்கு பிறப்பெடுத்தலால் விளையும் செயல் - பாவ சுத்திகரிப்படைந்து பரிசுத்தமடைதல் -  ஏசுவை ஏற்றுக் கொண்டு நாம் அவர் வழி நடத்தலால் விளைகிறது எனலாம்.சுருங்கச் சொன்னால் நாமது ஆத்மா மாறுதலுக்குட்பட்டாலன்றி கடவுளைச் சேர முடியாதென்பதே பொதுவான கருத்து. இந்த மாறுதல் நாம் பிறப்பெடுத்து வினை செய்வதால் விளைகிறது. அது மட்டுமல்லாது இந்த மாறுதல்கள் முழுமையடையும் போது மட்டுமே  பிறப்பறுக்கப் படுகிறது எனவும் கொள்ளலாம்.

பிறப்பறுத்த ஆன்மா கடவுளைச்  சேர்ந்து விடுகிறது  அல்லது  கடவுளின் நிலையை-உருவை-அடைந்துவிடுகிறது.  இந்த நிலை  விருப்பு வெறுப்பற்ற நிலை.   இன்ப துன்பங்களை   ஒன்றாய்க் கருதும் நிலை.  பட்டினத்தாருக்கு பேய்க்கரும்பு இனித்ததே... அதைப் போன்ற நிலை.  எனவே பிறவியின் நோக்கம் ஆன்மா இந்த மாறுதலடையும் பொருட்டு வினை செய்து பிறப்பறுத்தலேயாகும்.

இதுவே சாராம்சம்.

சரி. இந்த ஆன்மா மாறுதலடைவதை நாம் காணவோ அல்லது புரிந்து கொள்ளவோ முடியுமா?

நிச்சயமாக இந்த மாறுதலை நாம் நம்முள் உணரவும் மற்றும் மற்றையோரிடம் காணவும் முடியும்.

இந்த உலகில் பிறந்த பிறகு நாம் கொள்ளும் அனுபவங்கள் எப்படி நமது biological age , மற்றும் mental age க்கு contribute செய்கிறதோ அதே போல இந்த அனுபவங்கள் நமது spiritual age க்கும் contribute செய்கிறது.

இந்த biological age நமது உடல் மற்றும் உடல் உறுப்புக்களின் உழைப்பு மற்றும் உருமாறும் நிலையைக் கொண்டு அறியப் படுகிறது.

நமது mental age  நமது வாழ்வின் அனுபவங்களைக் கொண்டு நாம் பெற்றுள்ள அறிவு, அனுகுமுறை முதிர்ச்சி மற்றும் நமது problem solving capacity  ஆகியவைகளைக் கொண்டு அறியப் படுகிறது.

ஆனால் இந்த spiritual age என்பது ஒருவரது உள்ளறிதலையும், இவ்வுலகின் நிலையாமையையும் அடித்தளமாகக் கொண்டு அவருள் மற்ற உயிர்கள் குறித்தும் அவைகளின் நலன் குறித்தும் எழும்  மிகுந்த தன்னலமற்ற அன்பு பாராட்டலைக் கொண்டறியப்படும். இந்த தன்னலமற்ற அன்பு பாராட்டலே ஆன்மாவை மாற்றுகிறது. அதனை கடவுளின் தன்மைக்கு உயர்த்துகிறது.இதுவே, அன்பே கடவுள் என்கின்ற சித்தாந்தத்தை உறுதிப்படுத்துகிறது.

இந்த தெய்வ நிலையை அடைந்த ஆன்மாவின் அன்பு பாராட்டல் என்பது தன்னைப்போல் ஆறறிவுகொண்ட மனித இனத்தை மட்டுமன்றி விலங்குகள் ஏன் தாவரங்களையும் கூட அரவணைத்து அன்பு சொரியக்கூடியது..  வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலார்  நினைவுக்கு வருகிறாரல்லவா..?  ஆமாம். அவர் இந்த வாழ்விலேயே தெய்வநிலையை அடைந்த ஆன்மாவைக் கொண்டிருந்த  சித்தர்..

சரி. நாம் இந்த நிலையை அடைய  என்ன செய்ய வேண்டும்?

கர்மாவைக் கொண்டு கர்மாவைத் தொலைக்க வேண்டும்.

நற் கர்மாக்களைச் செய்து நாம் கொண்டுள்ள துர் கர்ம வினைகளை தொலைக்க வேண்டும். இந்த பிறப்பு இதற்கு  வாய்ப்புத் தருகிறது.

சிலர் இந்த வாழ்வினைப் பற்றிய தவறான எண்ணம் கொண்டுள்ளனர். எல்லோரும் சாகப் போகிறவர்கள்தானே எனவே வாழ்வை அனுபவிக்க வேண்டியதே முக்கியம் எனும் கருத்துடன் இருக்கின்றனர். சிலர் இந்த வாழ்வின் துன்பங்களை ஒரு வழிகாட்டுதலாகக் கொள்ளாமல், மனமொடிந்து தன்னை மடித்துக் கொள்கிறார்கள். வாழ்வைப் பற்றிய நமது புரிதலின்மையே  இத்துனைக்கும் காரணம்.இந்த வாழ்வானது நமது ஆன்மாவை மேம்படுத்தும் ஒரு பள்ளியாகும். பள்ளியின் ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு தெளிவான பாடத்திட்டம் இருப்பது போல நமது வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு தெளிவான பாடத்திட்டம் உள்ளது. அந்தந்த வகுப்பில் தேறி அதற்கான அறிவை தொடர்ந்து பெற்றால் மட்டுமே பள்ளியை விட்டு வர முடியும். ஒரு பள்ளியிறுதி முடித்த ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு வரையறுக்கப்பட்ட குறைந்த பட்ச அறிவு நிலை இருந்தால் மட்டுமே அவர் தேர்ந்தவராக கருதப் படுவார். உதாரணத்திற்கு மொழிப்பாடத்தில் இத்துனை வார்த்தைகள் - vocabulary - பரிச்சயம் தேவை என்பது . இந்தத் தேர்வில் வெற்றி பெறாதவர் மறுபடியும் அதே வகுப்பில் படிப்பது போல இந்த வாழ்வில் பாடங்களால் நம் ஆன்மா மேன்மையடையாத போது நாம் மீண்டும்பிறக்க நேரிடுகிறது.

மறு பிறப்பை ஏற்றுக் கொள்ளாத கிருத்துவத்தில்,  கிருத்துவை ஏற்றுக் கொள்பவர்கள் அயராது அவர் வழியில் அவரோடு, அவரில்,  பரிசுத்த ஆவியில் துணையோடு - through Him, in Him, with Him in the unity of the Holy spirit - தம் வாழ்வை நடத்தும் போது இதே பிறப்பில் ஆன்மாவின் மேன்மையைப் பெறுகின்றனர். அவரது வழிகாட்டுதல் அத்துனை மேன்மையானது மற்றும் உறுதியானது எனப்படுகிறது. மேலும் இதுவே ஏசுவானவர் தமது இறப்பால் நமக்கு மீட்டுத்தந்த பரிசுத்தத்தை பெறும் வழி எனவும் சொல்கிறது.
இந்தப் பிறப்புகள் நம் ஆன்மா தெளிவான மேன்மையை அடையுமட்டிலும் தொடரும்.  இது ஒரு குயவன் திரும்பத் திரும்ப மண்பாண்டத்தை அதன் பூரணத்துவம் பெரும் வரை பிசைந்து எடுத்து மீண்டும் மீண்டும் சக்கரத்தில் இட்டு சுழற்றி வடிவேற்றுவதைப் போன்றதாகும்.

எனவே ஒரு நல்ல மாணவன், தனது இலக்கில் கவனமாய் இருக்கும் ஒரு நல்ல மாணவன், பள்ளிப் பாடங்களில் கவனம் செலுத்தி பள்ளியின் நோக்கினை பூர்த்தி செய்து விரைவில் பள்ளிப்படிப்பை முடித்து வெளிவந்து தனது இலக்கினை அடைவதைப்போல நாமும் நமது வாழ்வில் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பரம்பொருள் நம்மைச் சோதிக்க வைக்கும் தேர்வாய்க் கருதி அதனை நோக்கு தவறாது அன்பின் அடிப்படையில் சுயநலமின்றி நேர்மையாய் கடமையைச் செய்து பிறருக்கு தீங்கிழைக்கா வண்ணம் முடித்தோமானால் நிச்சயமாய் நாம் பிறப்பு எனும் தண்டனையிலிருந்து மீண்டு பிறப்பறுத்து போரொளியை அடைந்து தாயுடன் சேர்ந்த கன்றுபோல மகிழலாம்.எனவே நாம் அன்பிலிருந்து பிறழாமல் வினையாற்றி பிறப்பறுத்து பேரொளியை அடைவோம்.

இன்னமும் பேசுவோம்.

அன்பன்,

வேதாந்தி.
Friday, June 3, 2011

நம் பிறப்பிலே பயனுண்டா?

3.6.11
நம் பிறப்பிலே பயனுண்டா?

(இது ஒரு அலசல். மற்றும் இதில் சொல்லியிருப்பவைகள் தற்போதுள்ள கருத்துக்கள் அல்லது தத்துவங்கள் ஆகிய எவைகளையும் சார்ந்தோ எதிர்த்தோ சொல்லப் பட்டவைகளல்ல.)

இந்தக் கேள்வி பலரும் சொல்வது போல நாம் பிறருக்கு பயன்பட வாழ வேண்டும் என்ற சமூகவியலுக்கு பொருந்திவரும் கோட்பாட்டினை ஒத்து கேட்கப்பட்ட கேள்வியல்ல . மாறாக நம் பிறப்பு ‘ நமக்கு’ பயனளிக்கிறதா அல்லது இந்தப் பிறப்பாலே ‘நாம்’ பயனுறுகிறோமா என்று உள்நோக்கிக் கேட்கப்பட்ட ஒரு ஆன்மீக வினாவாகும்.

இந்த ‘நாம்’ என்பதும் நம்மைக் குறித்த புற அடையாளங்களையோ அல்லது இந்தப் பூவுலகில் நமது நிலைவடிவைக் குறித்தோ சொல்லப்பட்ட ஒன்றல்ல. மாறாக அதற்கும் மேலே, நமக்கு உள்ளே இருக்கும் ஒன்றைப் பற்றிச் சொன்னதாகும்.

இந்த நான் என்பது ஒரு திரித்துவம் போல உடல், மனம் மற்றும் ஆன்மாவைக் கொண்டதென்பது எல்லோருக்கும் தெரிந்ததே.  உடலைப் பற்றி எல்லோரும் அலசி ஆராய்ந்து அதனை மேம்படுத்தி நல் வாழ்வுக்கு வழிகோலும் படிக்கு பலரும் பல வகையில் எழுதியிருக்கின்றனர். மனம் குறித்தும் பல மனவியல் வல்லுனர்கள் பல வகையிலும் எழுதி நமது நல்வாழ்வுக்கு மனதின் மேம்பாட்டின் முக்கியத்துவத்தையும் உணர்த்தி யிருக்கின்றனர். இந்த ஆன்மாவைக் குறித்த வெளிப்பாடுதான் மிகுந்த வகைப்பட்டுக் கிடக்கின்றது.

ஆன்மாவைக் குறித்துப் பேசுவது பெரும்பாலும் ஆன்மீக வாதிகளே. இந்த ஆன்மீக வாதிகள் தாங்கள் மேற்கொண்டுள்ள மதத்தின் போதனைகளின் அடிப்படையில்தான் இந்த ஆன்மாவைக் காண்கின்றனர்.

பொதுவாகவே என்னைப் பொருத்த மட்டில் மனிதர்களுக்கிடையே பிளவுகளையும்,  பிரிவுகளையும் உண்டாக்கும்படியான அனைத்துக்  கொள்கைகளும், சக்திகளும் வன்முறையை வளர்க்கும் ஒரு தீய நோக்கை மட்டுமே உட்கொண்டுள்ளவைகளாக கருதப்பட வேண்டிய ஒன்றாகும்.  இந்த ஆன்மா என்பது மேற்சொன்ன ஆன்மீக வாதிகளால் விளக்கப் படுவதாலேயே இது விலக்கப் பட வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுகிறது.

ஆனால் இந்த ஆன்மா என்பது ஒரு மனிதனை மேம்படுத்தக் கூடியதொன்றாகும். ஆன்மீக வாதிகளால் கையாளப் படுவதாலேயே  மேம்பட்ட இந்த ஆன்மாவைப் பற்றிய அறிவு புறக்கணிப்பிற்குள்ளாவது மனிதனுக்கு ஒரு பெரு நட்டம்.  இதுவோடல்லாது இந்த ஆன்மீக வாதிகள் இந்த ஆன்மாவைப்பற்றிய பொருளின்மேல் வைக்கும் பற்றைவிட தான் மேற்கொள்ளும் மதம் மற்றும் கடவுளரது மேல் பற்றுக் கொள்வதால் இவர்களது விளக்கம் அவர்களது பார்வைக்கேற்றவாறு திரிக்கப் படுகிறது என்றே எண்ணுகிறேன்.எனவே இந்த மதச்சார்பற்ற மற்றும் கடவுளரின் வகை சார்பற்ற கோணத்தின் இந்த ஆன்மாவை அலசுவதால் நமக்கு நன்மை கிடைக்கும் என்ற எண்ணத்தை மேற்கொண்டே இந்தப் பேச்சு.

மேற்சொன்னவைகளை வைத்துக் கொண்டு நான் கடவுள் மறுப்புக் கொள்கையான நாத்திகத்தை வைத்து இந்த ஆன்மாவை விளக்க முற்படுகிறேன் என்று எண்ணக் கூடாது. மாறாக நான் எடுத்துக் கொள்ளப்போவது ஒன்றே கடவுள், ஒருவனே தேவன் என்கிற ஏக பிதா தத்துவத்தை. என்னைப் பொருத்த மட்டில் இந்த ஏக பிதா தத்துவமே குருடர்கள்  யானையைப் பார்த்த கதையாய் பல கடவுள்களாகவும், பல மதங்களாகவும் பிரிந்து கிடக்கிறதென எண்ணுகிறேன்.

யானை இருப்பது உண்மை. ஆனால் நமக்குள் இருக்கும் இந்த பார்வை வேறுபாடுகள் அல்லது பார்வை முரண்கள் இந்த யானையையே மறுக்கச் செய்யுமளவுக்கு நாத்திகத்தை ஊக்கப் படுத்துகிறது என்பதுதான் எனது கருத்து. இதைப் பற்றி மேலும் பேசுவது இன்றைய நமது பேச்சை திசை திருப்பிவிடும் என்பதால் இதைப் பற்றி மற்றுமொருமுறை பேசுவோம்.

நாம் இப்போது பேசிக்கொண்டிருப்பது நமது பிறப்பால் பயனுண்டா? என்பது குறித்து. நான் முன் சொன்னவைகளுக்கே வருகிறேன். உடல் , மனம் மற்றும் ஆன்மா.  Body, Mind and Soul.  இந்த மூன்றிலும் அழியக் கூடியது உடல் மற்றும் அதைச் சார்ந்த மனம் ஆகிய இரண்டுதான். ஆனாலும் அழியாத ஆன்மாவுக்கு அழியக்கூடிய இந்த உடல் மற்றும் அதைச்சார்ந்த மனம் ஆகிய  இரண்டும் இப் பூவுலகில் ஆதாரமாக  இருக்கின்றன.

இது குறித்து விளங்காத சிலவும் இருக்கின்றன.
உடல் அழியும் போது அதனுடன் அருவமான மனமும் தொலைகிறது. ஆனால் இந்த பூத உடல் ஒரு மறுசுழற்சியாகி மறுபடியும் மற்றொரு பூத உடலுக்கு ஆதாரமாகிறது. இது, நமது உடல் கார்பன் மற்றும் நைட்ரஜன் ஆகியவைகளை உள்ளடக்கிய ஒன்று எனும் காரணத்தாலும் மறுபடியும் மக்கிய இந்த கார்பன் நைட்ரஜன் ஆகியவைகளை உயிரிகள் தனக்குள் எடுத்துக் கொண்டு வளர்ந்து, வாழ்ந்து இனப்பெருக்கம் செய்வதாலும் இந்த மறுசுழற்சிக் கருத்து அர்த்தமுள்ளதாகிறது.

மனமானது இந்த உடலை ஆதாரமாகக் கொண்டு எழுவதால் ஒரு virtual thing போல இருந்தும், மறைந்தும் போகிறது.

சரி. அப்படியானால் இந்த ஆன்மா? அதுவும் ஒரு virtual thing ஆ? இங்குதான் நாம் யோசிக்க வேண்டியுள்ளது. மனதைப் போல ஆன்மாவும் ஒரு virtual thing  - மாயப் பொருள் - என்றால் இது ஒரு ஆன்மா மறுப்புக் கருத்தாகிறது. ஆன்மா மறுப்புக் கருத்தை ஏற்றுக் கொள்பவர் கடவுள் மறுப்புக் கொள்கையைச் சார்ந்த நிலையை எடுத்துக் கொள்கிறார்.  இது சற்று யோசிக்க வேண்டியுள்ளதாகிறது.

கடவுள் மறுப்புக் கொள்கை சமுதாயத்தில் பரவிக் கிடக்கும் மூட நம்பிக்கைக்கு எதிராக எழுந்த ஒன்று எனும் கோணத்தில் பார்த்தால் ஆரோக்கியமானதொன்றுதான். ஆனால் இது கடவுளையே மறுக்கும் பட்சத்தில் இந்தக் கொள்கை நமக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் ஆதாரமாக உள்ள பொளதீக நிலைகளைக் குறித்த விளக்கத்தை ஒரு அளவிற்கு மேல் தரத் தவறி விடுகிறது.  இதனால் இந்தக் கடவுள் மறுப்புக் கொள்கை நமது தேடலை பூர்த்தி செய்கிறதில்லை. எனவெ இதை ஏற்றுக் கொள்வது  இந்த பிரபஞ்சத்தைப் பற்றிய நமது பார்வையை விரிவு படுத்தாது.

ஆக இந்த ஆன்மா ஒரு மாயப் பொருளல்ல என்பதையும் கடவுள் கொள்கையை ஏற்றுக் கொள்வதாலேயே சில கருத்துக்கள் புரிபடலாம் என்பதாலும் இவை இரண்டையும் ஏற்றுக் கொண்டு பிறப்பின் பயனைப் பற்றி மேலே பேசுவோம்.

எல்லா கடவுள் கொள்கைகளும் இந்த உலகின் அனுபவங்கள் நம்மை மேம்படுத்தி நம் ஆன்மாவை பேரொளியாகிய இறவனிடம் சேர்ப்பிக்கின்றது என்றே கருத்தினையே மையமாகக் கொண்டுள்ளன.

இது குறித்தே இன்னமும் பேசுவோம்.

அன்பன்,

வேதாந்தி.


Related Posts Plugin for WordPress, Blogger...