29.6.11
பாவம் சிந்துபாது…சிக்கலிலிருந்து விடுபடுவது எப்போது?
அராபியக் கதைகளின் நாயகனான சிந்துபாதை நினைவிருக்கிறதா?
வலிமை மிக்கவன். புத்திசாலி. இளைஞன். தீரமும் வீரமும் நிறைந்தவன். ஏறக்குறைய நமது இந்தியாவைப் போல என்று வைத்துக் கொள்ளுங்களேன்.
சிந்துபாது ஒருமுறை தன் கப்பலை இழந்து ஒரு தீவில் ஒதுங்கியபோது ஒரு வயதான கிழவனை அந்தத் தீவில் கண்டான். பரிதாபப் பட்டு அவனை தனது தோளில் சுமந்து உதவிய போதுதான் அந்தக் கிழவனின் கொடூரம் தெரிந்தது. அவனைச் சுமந்த அன்றிலிருந்து சிந்துபாதுக்கு தூக்கமோ ஓய்வோ கிடையாது. போதாக் குறைக்கு கிழவனின் துன்புறுத்தலுக்கும் ஓர் அளவில்லாமல் போனது. தோளில் அமர்ந்து கொண்ட கிழவனைப்பார்த்து சிந்துபாது “ இது நியாயமில்லை.. நீ என் சுதந்திரத்தை பறித்துக் கொண்டாய். என்னை அநியாயத்திற்கு அடிமைப்படுத்தி உன் விருப்பம் போல் ஆட்டிவைக்கிறாய். நீ நியாயமற்றவன் எனத்தெரிந்தும் உன்னை நான் சுமப்பது சரியல்ல. நீயாகவே இறங்கு அல்லது என்னை துன்புறுத்தி என் உழைப்பை சுரண்டுவதையாவது நிறுத்து” என்றானாம். அதற்கு அந்தக் கிழவன் , “ யார் சொன்னது நான் உன்னைத் துன்புறுத்தி உன் உழைப்பைச் சுரண்டுகிறேன் என்று. இது அத்தனையும் உன் விருப்பம் தான். நீயாகத்தானே என்னைச் சுமந்தாய்? அப்படியிருக்க இப்போது என்னை கீழே இறங்கச்சொன்னது சரியல்ல. போ..போ.. உனக்கு வழிகாட்டுவதற்குள்எனக்கு மீண்டும் பசிக்கிறது” என்று விரட்டினானாம்.
கடைசியில் என்னவாயிற்று தெரியுமா? சிந்துபாது சாப்பிட்ட எல்லாவற்றையும் பிடுங்கி வயிற்றில் போட்டுக் கொண்ட கிழவன், சிந்துபாது தயாரித்து வைத்திருந்த மதுவையும் குடிக்க விடாமல் பிடுங்கி வயிறு முட்டக் குடித்து வைத்தானாம். மதுவைக் குடித்ததும் குரங்காய் ஆடத் தொடங்கினான். சுவையால் இழுபட்டு மீண்டும் மீண்டும் மதுவை சிந்துபாதிடமிருந்து பிடுங்கி குடித்துவைத்தான்.
கிழவனின் இந்த போதை போதுமா சிந்துபாதை விடுவிக்க?
தெரியவில்லையே.. தீவில் நடந்த கதை தீபகற்பத்திற்கு ஒத்துவருமா எனப் புரியவில்லையே..
பாவம் சிந்துபாது. சிக்கலிலிருந்து விடுபடுவது எப்போது?
இன்னமும் பேசுவோம்.
வேதாந்தி.
No comments:
Post a Comment