Followers

Tuesday, June 21, 2011

உணர்தலின் மேன்மை உயிரின் மேம்படுதலா?

21.6.11

உணர்தலின் மேன்மை உயிரின் மேம்படுதலா?

உடல் சார்ந்த ஆன்மா தன் இயக்கத்தில் இருக்கையில் அதனை உயிர் எனலாம். ஆனால் உயிரின் விடுதலை ஆன்மாவின் விடுதலையாகாது. விடுபட்ட உயிர் பேரொளியைச் சேர்ந்தாலன்றி அது ஆன்மாவின் விடுதலையாகாது.  இவ்வுலகின் அனுபவங்களைக் கொண்டு தன்னை மேம்படுத்திக் கொண்ட உயிர் மட்டுமே இறப்பில் இந்த பூத உடலை விட்டு  பேரொளியை அடைந்து ஆன்மாவின் விடுதலையில் முடிகிறது. மற்றவையெல்லாம் மறுசுழற்சிக்குள்ளாகிறது -  மேன்மையடைதல் பொருட்டு மறு பிறப்பிற்குள்ளாகிறது.

மேற்சொன்னவைகளை எல்லாம் விரிவாக முந்தய இரு பேச்சில் கண்டோம்.
காண்க:

இவ்வுலகின் உடல் சார்ந்த அனுபவங்களை, உணர்வுகளாய் நாம் அடுத்த நிலைக்கு கொண்டுசெல்லும் போது மட்டுமே அவைகள்  உயிரின் மேம்படுதலுக்கு உதவுகிறது. எனவே உணர்தல் - experiencing - முக்கியம்.  இந்த உணர்தல் நமது சூழல் மற்றும் நம்முடன் உள்ள மற்றைய உயிர்கள் , உறவுகளுடனான ஒத்துணர்ந்து புரிதலை -  empathetic understanding -  அதிகரிக்கும்.

இந்த ஒத்துணர்ந்து புரிந்துகொள்ளுதலையே நான் இங்கு உணர்தல் எனக் குறிப்பிடுகிறேன்.கற்றல் வேறு உணர்தல் வேறு. ஒருவன் பசி என்பதை கற்றுத் தெரிதலுக்கும் உணர்ந்து தெரிதலுக்கும் வேறுபாடு உள்ளது.  உணர்ந்து தெரிந்தவன் பிறர் பசித்திருக்கும் போது உதவ முற்படுவான். வெறும் கற்றலோடு நின்றுவிட்டவனிடம் இந்த உந்துதல் இருக்காது. கற்றலால் பெற்ற அறிவையும் அனுபவத்தால் பெற்ற அறிவையும் அதன் அடுத்த நிலையான உணர்ந்து தெளிதலுக்கு கொண்டுபோகும்போது மட்டுமே உயிரின் மேம்படல் நடக்கிறது.

இன்னமும் விளங்கிக் கொள்ளும்படிக்கு சொல்கிறேன்.

காதலைப் பற்றி நாம் அறிவோம். அதன் மேன்மையைப் பற்றியும் நாம் அறிவோம். ஆனால் இத்தனைக்கும் மேலே இந்தக் காதலை அனுபவிப்பவர்கள் சிலரே. அதிலும் பலர் தனக்குள் கிளர்ந்தெழும் உணர்ச்சிகளை காதல் என்று பெயரிட்டுக் கொள்கின்றனர். நான் மிகச் சிக்கலானதொன்றைக் கூற முற்படவில்லை; எளிமையான எதிர் பால் காதலுணர்வுகளைத்தான் சொல்கிறேன்.

இந்தக் காதலை அனுபவித்து, உணர்பவர்கள் மிகச் சிலரே.

தற்போது பத்திரிக்கைகளில் வந்த சென்னையில் நடந்த ஒரு நிகழ்வை நினைவு கூருங்கள். ஒரு தந்தை மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும் தன் மகளை, அவள் காதலித்து மணம் புரிந்த குற்றத்திற்காக அவளது கணவனை - தன் மருமகனை - கொன்று  விதவையாக்கி விட்டான். தனது குற்றத்திற்கு இவர் சொல்லும் காரணம் தான் தன் மகளை மிகவும் நேசிப்பதாகவும் அவளை அவளுக்கேற்ற ஒரு மருத்துவம் படித்த மணமகனை பார்த்து வைத்ததாகவும் ஆனால் தன் மகள் தன் விருப்பப் படி காதலித்து மணம் புரிந்தை தன்னால் ஒப்புக் கொள்ள முடியாமல் தான் இப்படிச் செய்து விட்டதாகவும் கூறினார்.

இந்தத் தந்தை குறைந்தது ஒரு இருபது வருடங்களாவது தன் மணைவியுடன் வாழ்க்கை நடத்தியிருப்பார். அப்படியிருந்தும் காதலை உணர்ந்தாரில்லை. இவர் காதலை கற்றறிந்திருக்கலாம்.  ஆனால் இந்தக் கற்றல் அதே நிலையில் நின்று அடுத்த நிலையான உணர்தல் நிலைக்குச் செல்லாததினால்தான் இவரால் தனது மகளின் காதலை ஒத்துணர்ந்து புரிந்து கொள்ள முடியவில்லை. இதுவே இவரை கொலை பாதகச் செயலுக்குத் தூண்டி பாவமிழைக்க வைத்துவிட்டது.

இன்னமும் ஒன்றைச் சொல்கிறேன். இது நாமெல்லோரும் அறிந்த கண்ணகி மாதவி கதைதான். என்னைப் பொறுத்தமட்டில் கோவலன் காதலை மாதவியால் மட்டுமே உணர்ந்தான். ஆனால் இந்த உணர்தலால்தான்  பின்னாளில் கண்ணகி தன் மேல் கொண்டிருந்த காதலையும் அவனால் புரிந்து கொள்ள முடிந்தது, அது மாதவியிடமிருந்து அவனை திரும்பவும் கொ ணர்ந்தது. இது அவனை கண்ணகியை ஒத்துணர்ந்து புரிந்து கொள்ளச் செய்தது.பட்டினத்தார், கடைவழிக்கு காதற்ற ஊசிகூட வராது என்பதை உணர்ந்ததாலேயே துறவறம் பூண்டார். இந்த உணர்தலின் மேன்மையாலேயே அவருக்கு பேய்க்கரும்பு இனித்தது.

ஆனால் அவரது தமக்கையார் இதனை அறிந்திருந்தாலும் அதை அடுத்த நிலையான உணர்தலுக்கு கொண்டு செல்லாததினால், இவ்வுலகவாழ்வில் பற்று கொண்டோர் பெரும் வணிபக் குடும்பத்தில் பிறந்த தம் சகோதரரை பரதேசி என பழிப்பரே என்பதையே பெருங்கவலையாய்க் கொண்டு தன் சகோதரரை நஞ்சிட்டு கொல்லவும் துணிந்தாரல்லவா?

பெற்றோர் மற்றும் பிள்ளைகளுக்கு இடையே இந்த வகை மேம்பட்ட உணர்தல் அவர்களை மேம்படுத்தி உறவுகளை சிறக்கச் செய்யும். பெற்றோரின் கவலைகளை பிள்ளைகள் புரிந்துணர்தல் அவசியம். அதைப்போலவே பிள்ளைகளின் வளர்ச்சியையும் அவர்களது வாழ்வின் சந்தர்ப்பங்களின் விரிவடைந்த எல்லைகளையும் உணர்ந்து பெற்றோர்கள் பிள்ளைகளை ஊக்குவிக்கவேண்டும். இந்த ஒத்துணர்ந்து புரிதல் - emphathetic understanding -  நமது உறவுகளை வலுப்படுத்துவதோடல்லாமல் வளப்படுத்தவும் செய்யும் மேலும் நமது வாழ் சூழலில், குடும்பத்தில் , அமைதியையும் காக்கும்.

ஆனால் நமது இந்த  உணர்தலைத் தடுக்கும் காரணிகள் நமது மனச்சேற்றில் எழும் கீழான எண்ணங்கள் மற்றும் நமது மன நிலையைக் குலைத்துப் போடும் போதைப் பழக்கங்கள் ஆகியவை. இவைகள் உணர்தலைத் தடுப்பதோடு மட்டுமல்லாது நம்மை விலங்கினும் கீழாக மாற்றிவிடும். இது குடும்பத்தைச் சீர்குலைப்பதோடல்லாது சமுதாயச் சீர்கேட்டிற்கும் வழிகோலும்.

பாவ புண்ணியங்களை அறிய வேத நூல்களைத் தேட வேண்டியதில்லை. நமது அனுபவங்களின் உணர்தலின் தெளிவை மேம்படுத்தினாலே போதும்.  எந்தெந்த வினைகளை நாம், பிறர் நமக்கிழைப்பது கூடாது எனக் கருதுகிறோமோ அந்த வினைகளை நாம் பிறர்க்கிழைப்பது பாவம்.  பிறரிடமிருந்து நம்மை மகிழச்செய்யும்  செயல்களாய் நாம் எதிர்பார்க்கும் செயல்களை நாம் பிறருக்குச் செய்து மற்ற உயிர்களை மகிழ்விப்பதே புண்ணியம் சேர்க்கும் வினைகளாகும்.
நமது அனுபவங்கள் நமக்கு நிறைய கற்றுத் தருகின்றன.  இந்த கற்றல் அறிவுத் தெளிவோடு மட்டுமே நின்றால் உயிர்க்குப் பயனாகாது. அதற்கும் மேலே உயிர்க்குப் பயனுள்ள உணர்தலை - ஒத்துணர்ந்து புரிதலை - உருவாக்கி இந்த உணர்வுகள் நமது செயல்களை நிர்ணயிக்கும் கருவிகளாகும்போது நாம் உயிரை மேம்படுத்திஆன்மாவின் விடுதலைக்கு வித்திடுகிறோம் எனலாம்.
இந்த அனுபவங்களால் கிடைக்கும் உணர்தல் மட்டுமே நம்மை  மேம்படுத்தும். இந்த உணர்தலை இழந்தோமானால் நாம் கீழான செயல்களைச் செய்து பிறப்பு இறப்புச் சுழலில் சிக்கி மாள வேண்டியதுதான்.

இதுவரை நான் உணர்தலை விளக்கியது காதல் மற்றும் பசி, பிணி ஆகியவைகளுக்கு என்றாலும் இந்த நோக்கில் நீங்கள் சிந்திக்க ஆரம்பித்தீர்களானால் இந்த உணர்தல் நாம் கற்றவைகளுக்கும், பெற்ற  அனுபவங்கள் அனைத்திற்கும் பொருந்திவரக் காண்பீர்கள்.

இதைப்போலவே நம்மைச் சுற்றியுள்ள சூழல் மற்றும் மனித உறவுகள் நமக்குக் கொடுக்கும் அனுபவங்களை நாம் உணர்தல் நிலைக்கு கொண்டு செல்வோமானால் நாம் சிறக்க வாழலாம்.அது மட்டுமல்ல. நான் முன்பே சொன்னதுபோல் இப்பிறவியில் நமது செயல்களை சரியான வழியில் செய்து உயிரினை - ஆன்மாவை - மேம்படுத்தி பிறப்பறுக்க இந்த ஒத்துணர்ந்து புரிந்துகொண்டு வாழ்தல் நமக்கு ஒரு திசை காட்டியாய் வழிகாட்டும்.


இன்னமும் பேசுவோம்,

அன்பன்,

வேதாந்தி.3 comments:

  1. நல்ல பகிர்வு..
    குறிப்பாக அதற்கேற்ற புகைப்படங்களும் அருமை.

    ReplyDelete
  2. @ விக்கியுலகம்..

    தங்கள் வரவிற்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...