Followers

Wednesday, July 20, 2011

ஒதுக்கீடுகளும் அரசாணைகளும் மட்டுமே சமுதாயத்தில் சம நிலையைத் தருமா?

20.7.11

ஒதுக்கீடுகளும் அரசாணைகளும் மட்டுமே சமுதாயத்தில் சம நிலையைத் தருமா?

இது மிகவும் சிந்திக்க வேண்டிய ஒன்று.

சொல்லப்போனால் இந்த ஒதுக்கீடுகளும் அரசாணைகளும் சமுதாயம்  சம நிலையைப் பெறும் நோக்கினைக் குறித்தே ஏற்படுத்தப் படுகின்றன. ஆனால் சமுதாயத்தில் சம நிலையைக் கொண்டுவர இவைகள்  மட்டுமே போதுமா என்பதுதான் இன்றைய பேச்சு.

சமுதாயத்தில் வேறுபாடுகளை உருவாக்கும் அல்லது வளர்க்கும் காரணிகளாக மிக முக்கியமாக பொருளாதாரம், கல்வி, செய்யும் பணிகள் மற்றும் காலம் காலமாக இருந்து வரும் சாதி அமைப்பு ஆகியவைகளைச் சொல்லலாம்.மேற்சொன்னவைகளில் அறிவுக்கும் உணர்வுக்கும் ஒவ்வாத சாதி அமைப்பு மிகவும் கொடுமையானதாக கருதப் படுகிறது. இந்த அமைப்பு முன்னர் எப்படியோ ஆனால் இப்போது ஆள்வோர் மற்றும் ஆளப்படுவோர் கட்டமைப்பாகத்தான் பார்க்கப்படுகிறது.  இது ஒட்டுமொத்த சமுதாயத்தின் முன்னேற்றத்தையும் சீர்குலைக்கும் ஒரு தீய சக்தியாகும். ஏனெனில் தற்போதைய சூழலில் ஒரு சமுதாயத்தின் ஒற்றுமையையும் ஒருங்கே சார்ந்த அதன் முன்னேற்றத்திற்கான கூட்டு முயற்சியையும் இது குலைத்துப் போடுவதோடு மட்டுமல்லாது சமுதாயத்தை ஒருங்கே இணைக்காது குழுக்களாகப் பிரித்து அவைகளூடே வெறுப்பை இடையறாது கணறச் செய்யும் ஒரு தீவினையாகும்.

சமுதாய ஏற்ற தாழ்வுகளைப் போக்கவே மேற்சொன்ன ஒதுக்கீடுகளும் அரசாணைகளும்  உண்டாக்கப் பட்டன.  இந்த ஒதுக்கீடுகளும் அரசாணைகளும் சாதிகளிடையே பொருளாதாரம், கல்வி மற்றும் பணி குறித்த சமன் வந்து விட்டால் ஏற்ற தாழ்வுகள் களையப் பட்டு விடலாம் என்கிற எண்ணத்தில் கொண்டு வரப்பட்டவைகள் தான். ஆனால் உண்மை நிலை என்னவென்றால் இவைகள் ஒடுக்கப்பட்ட மக்களிடையே முன்னேற்றங்களை உண்டாக்கினாலும் மனிதர்களிடையே இருக்கும் வேறுபாடுகளை களைய கிஞ்சித்தும் உதவவில்லை.

இதைச் சொல்வதால் நான் ஒதுக்கீடுகளுக்கும் அரசாணைகளுக்கும் எதிரானவன் என்பதல்ல. நான் சொல்ல வந்தது என்னவென்றால் நமது உள்ளார்ந்த மனமாற்றம் அன்றி வேறுபாடுகள் களையப்பட வழியில்லை என்பதுதான். இது அனைத்து சாரருக்கும் பொருந்தும்.

கிராமங்களில் இன்னமும் இரட்டைக் குவளை முறை இருக்கிறதென்பது வெட்கக் கேடானது.

நகர்ப்புறங்களில் இது வெளிப்படையாகத் தெரியாவிடினும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது இவை வெளிவருகின்றன. காதல் திருமணங்கள் கெளரவக்  கொலைகளால் அச்சுறுத்தப் படுகின்றன.


பொருளாதாரத்திலும், பணியிலும் உயர்ந்தோரிடையே கூட இந்த வேறுபாடுகள் காணப்படுகின்றன.

இன்னமும் சொல்லப்போனால் ஒரு சில தனியார் அலுவலகங்களில்  சில குறிப்பிட்ட வகுப்பினரே முன்னுரிமை பெறுகின்றனர். மற்றையோர் பணியில் அமர்த்தப்பட்டாலும் அடையாளம் காணப்பட்டு தனிப்படுத்தப் படுகின்றனர்.

இத்தனை ஏன்? அரசு அலுவலங்களில் ஒவ்வொருவரும் இப்படித்தான் அடையாளம் காணப்படுகின்றனரே ஒழிய அவர் செய்யும் பணியின் செம்மை குறித்து ஒருபோதும் அடையாளம் காணப் படுவதில்லை. ஒருவர் பணிக்குச் சேர்ந்த உடனே அவரது பணியேடு எல்லோராலும் ரகசியமாய்க் காணப்பட்டு அவரது வகுப்பினருடன் உடனே குழுவில் சேர்க்கப் படுகின்றனர். இது எழுதப்படாத மற்றும் பிறரால் காணப்படாத சட்டமாகவே இருக்கிறது. ஆனால் இம்முறை மேல் வகுப்பு மக்களிடையேயும் மற்றும் கீழவகுப்பு மக்களிடையேயும் தான் உள்ளன.  இடைப்பட்டோர் பாவம் . அவர்களுக்கு இந்த ‘சலுகை’ கிடையாது. 
அருகருகே அமர்ந்து ஒரே பணியினைச் செய்தபோதும் இருவரிடையேயும் சமத்துவம் பிறந்த பாடில்லை. எல்லோரும் ஒரு வித மனக்காயங்களுடனும் இரத்தக் கசிவுடனுமே வலம் வருகின்றனர்.   ஆளும் வகுப்பினர் ஆளுமையோடும் மற்ற வகுப்பினர் வஞ்சம் தீர்க்கும் பகைமையோடும்தான் வலம் வருகின்றனர்.  வன் கொடுமைச் சட்டம் மிரட்டலுக்கும் பிறரை அச்சுறுத்தவும் வெகுவாகப்  பயன்படுகிறது.  இதை நான் மிகைப்படுத்திச் சொல்லவில்லை.

இது உண்மையில் நடந்த சம்பவம்.

அது ஒரு முக்கியமானதோர் அரசு அலுவலகம். வழக்கம் போலவே எல்லா அரசு அலுவலகங்களில் இருப்பது போல அனைத்து வகுப்பினரும் ஒருங்கே பணிபுரியும் இடம். ஆனால் நான் முன்னர் சொன்னதுபோல் பகைமை கணன்று கொண்டிருந்தது.

இந்தச் சூழலில் ஒருநாள் ஏதோ ஒரு அலுவலகப் பணி பிரச்சினை முற்றி விவாதமாகி விட்டது. விவாதத்தில் ஈடுபட்டோர் ஏதோ அது தங்களது சொந்தப் பிரச்சினை போல சூடேறி விவாதித்தனர். விவாதித்துக் கொண்டிருக்கும்போதே சம்பந்தப் பட்ட ஒருவர் மற்றொருவரை கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டார்.  ஆனால் மிகச் சாதுர்யமாக அதே சமயத்தில் தனது இடக்கையைக் கொண்டு தன் வலது தொடையில் பலமாக அறைந்து கொண்டார்.  எல்லோருக்கும் ‘பளார்’ என்கின்ற சத்தம் மட்டுமே கேட்டது. எதிராளி  தன் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு விக்கித்துப்போய் நின்றிருப்பதைப் பார்த்தபின்னரே அவர் அறை வாங்கியிருக்கிறார் என மற்றவர்களுக்குத் தெரிந்தது.
சட சட வென நிலைமை உக்கிரமானது. அறை வாங்கியவர் , தன்னை எதிராளி அடித்துவிட்டதாக புகார் கொடுத்தார். ஆனால் அடித்தவரோ , ‘நான் எனது தொடையில் தான்  அறைந்து கொண்டேனே தவிர யாரையும் அடிக்கவில்லை..’ என்று சாதித்தார்.

அப்புறமென்ன. மள மள வென குழு சேர ஆரம்பித்தது. அனைவரும் ‘பளார்’ என்ற சத்தத்தினை கேட்டிருந்ததால் ஒரு குழு ‘அடித்துவிட்டான். அதனால் வந்த சத்தம் தன் அது.’  எனவும் மற்றொரு குழு ‘இல்லை.. இல்லை.. தன்னைத் தானேதான் அடித்துக் கொண்டான். அதனால் வந்த சத்தம்தான் அது.’ எனவும் இரு பக்கமும் சேர்ந்து கொண்டது. யாருமே தன்னையும் அடித்துக் கொண்டு எதிராளியையும் அடித்தான் எனச் சொல்லவில்லை. ஒருவேளை உண்மையைப் பார்த்தவர்கள் இருந்திருப்பினும் அவர்கள் அதனை வெளிப்படுத்தவில்லை.

மேலதிகாரி மிகவும் குழம்பிப் போய்விட்டார். இதில் கவனிக்கப்பட வேண்டியது என்ன வென்றால் குழு நியாயம் கருதி கூடவில்லை மாறாக சாதி சார்ந்து கூடிவிட்டது. யாரும் இதை சொல்ல வில்லையே தவிர கண்கூடாகக் காண முடிந்தது. மேலதிகாரிக்கு மிகுந்த குழப்பம் உண்டாகி இறுதியில் அடி வாங்கியவரை தனியே அழைத்துப்போய் சமாதானம் செய்தார்.

அடித்தவர் வெற்றிக் களிப்பில் மிதந்தார். அவர், ‘என்மேல் நடவடிக்கை எடுத்து விடுவார்களா..? வன்கொடுமை குற்றச்சாட்டில் அவர்களை உள்ளே அடைத்து விடுவேனாக்கும்…’ என்று கொக்கரித்துக் கொண்டிருந்ததை  கேண்டீனில்  பார்த்தவர்கள் சொல்லப்போய்த்தான் மற்றவர்களுக்கு உண்மை புரிந்தது.

இது என்ன கொடுமை. சொந்தப் பகையும் கிடையாது. யாருடைய சொத்தையும் யாரும் பிடுங்கவில்லை.  பிரச்சினை பேச்சில் இருக்கும் போதே நாகரிகத்தை மீறி நடந்துகொள்ள அவரை ஊக்குவித்தது எது?

இங்குதான் நாம் காணாத இன்னுமொரு காரணி நுழைகிறது. அடித்தவர், சமுதாயம் கொடுத்த முன்னுரிமையை தனக்குக் கிடைத்த ஆயுதமாக பயன்படுத்தியிருக்கிறார். காரணமின்றி அதைப் பயன்படுத்தியிருக்கிறார் என்றால் அவரது நெஞ்சில், எண்ணத்தில் நுழைந்து விட்ட  நஞ்சு - சாதி பாகு பாடு. தன்னையும் தன் இனத்தாரையும் தவிர மற்ற எல்லோரையுமே எதிரியாக பார்க்கத்தூண்டும் வெறி. தனக்கு சம நிலை கிடைத்த பின்னும் யாரையேனும் கடிக்க வேண்டும் என்கிற மனப்பாங்கு அடுத்த வகுப்பினர் தவறு செய்யாதிருக்கும் போதும் அவர்மேல் பாய்ந்து பிடுங்கத் தயாராயிருப்பது. இதற்குக் காரணம் தன் நெஞ்சில் கணன்றுகொண்டிருக்கும் நெருப்பும் அதை அணையாது ஊதிப் பெருக்கி குழுசேர்த்து கும்பல்  கூட்டி சுய லாபம் காணும் தலைவர்களும் அவர்களது அரசியலும் தான்.
இப்போதுள்ள நலிந்தோர் ஒரு மாயக் கட்டுக்குள் உள்ளனர். இவர்கள்  தன்னால் முன்னேற முடியும் என நினப்பதில்லை. மாறாக தனது முன்னேற்றத்திற்கு ஒரு பின் புலம் தேவை என கருதும் படிக்கு சுய நலமிகளால் ஊக்குவிக்கப் படுகின்றனர். ஆனால் அந்தப் பின்புலம் இவர்களை முன்னேற்றாது தனது சுய லாபக் கணக்கிற்காக இவர்களது நெஞ்சில் நஞ்சை வார்த்து சமுதாயத்தில் தீ கணன்று கொண்டிருக்கும்படிக்கு பார்த்துக் கொள்கிறது. இவர்கள் எந்த ஒரு பின்புலமும் இல்லாது தன்னையும் வளர்த்து தன் நாட்டையும் வளர்த்த  டாக்டர். அம்பேத்கரை மறந்து விட்டனர்.
நாமாக முன் வந்து, நம்மில் நம்பிக்கை வைத்து, சமுதாய ஒற்றுமை நமது முன்னேற்றத்திற்கும் நமது நாட்டின் முன்னேற்றத்திற்கும் மிக முக்கியமானது என கருத்தில் கொண்டு நமது அண்டை அயலாரை சகோதரராய் பாவிக்கும் எண்ணத்தை வளர்த்துக் கொள்ளும் வரை நமக்குள் எந்த ஒதுக்கீடுகளும் அல்லது அரசாணைகளும் சமத்துவத்தைக் கொண்டு வராது என்பதுதான் அப்பட்டமான உண்மை.பஞ்சாடையானாலும் பட்டாடையானாலும் இரண்டுமே அணிவோரின் மானத்தையும் கெளரவத்தையும் காப்பது போல, நாம் எவ்வகுப்பினராய் இருந்தாலும்   நமது நாட்டின் ஒற்றுமையையும் முன்னேற்றத்தையும்  காக்க மெய்யான உறுதி கொண்டால் மட்டுமே பிரிவினைகள் நீங்கி  சமுதாயம் சமநிலை பெறும். 

இன்னமும் பேசுவோம்.

அன்பன்,


வேதாந்தி.
5 comments:

 1. நல்லதொரு பதிவு.
  அதிலும் உதாரணமாகச் சொல்லப்பட்ட சம்பவம் உண்மையிலேயே வேதனைக்குரியது தான்.

  இங்கு மனிதர்களுக்கிடையே நிலவ வேண்டிய அடிப்படை மரியாதை காணாமல் போய்க்கொண்டிருப்பதுவே உண்மை.

  ReplyDelete
 2. அருமையான பதிவு .. இந்த சமயத்தில் தேவையான ஒன்று

  ReplyDelete
 3. இன்று தமிழ் நாட்டில் பரவலாக நிலவும் நிலைமைதான் இது
  எவ்வித பாரபட்சமும் இன்றி நடு நிலையோடு இதை
  மிகத் தெளிவாக பதிவிட்டிருக்கிறீர்கள்.
  சலுகைகளை உயர்வதற்கான காரணியாகப்
  பயன்படுத்துதலை விடுத்து அதை உரிமையாகக் கொண்டு
  பிறரை மிரட்டும் ஆயுதமாக பயன்படுத்தும் நிலைமை
  பரவலாக உள்ளது.இதற்கு முழு முதல் காரணம் அரசியல்தான்
  பிற்படுத்தப்பட்டவர்களில் இன்னமும் அவர்களுக்குள்ள
  சலுகைகளை அறியாதவர்கள் பலர் இருக்கிறார்கள்
  இதை அவர்கள் அறியாமல் தடுப்பவர்கள் கூட
  முற்படுத்தப்பட்டவர்கள் இல்லை
  பிற்படுத்தப் பட்டவர்களுக்கான சலுகைகளை
  பயன்படுத்தி முன்னேறியுள்ள பணம் படைத்த
  செல்வாக்கான பிற்படுத்தப்பட்டவர்கள்தான்
  சிந்தனையை தூண்டிச் செல்லும் தரமான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. ////சமுதாய ஏற்ற தாழ்வுகளைப் போக்கவே மேற்சொன்ன ஒதுக்கீடுகளும் அரசாணைகளும் உண்டாக்கப் பட்டன. இந்த ஒதுக்கீடுகளும் அரசாணைகளும் சாதிகளிடையே பொருளாதாரம், கல்வி மற்றும் பணி குறித்த சமன் வந்து விட்டால் ஏற்ற தாழ்வுகள் களையப் பட்டு விடலாம் என்கிற எண்ணத்தில் கொண்டு வரப்பட்டவைகள் தான்.////

  காரணம் என்னவோ சரியானதாக இருந்தாலும் அவைகளை எந்த பரிசீளிப்பும், மறு சீரமைப்பும், உண்மையிலே பொருளாதார உதவி வேண்டுமா? என்ற ஆய்வும் இல்லாமல்... செயல் படுத்தும் முறை தொடரும் பொது மேற்கூறிய சமூக சீர்திருத்த வாதிகளின் எண்ணம் ஒருக்காலு நிறைவேறாது...

  சாதியின் பெயரைக் கூறிக்கொண்டு அரசியல் செய்யும் அறிவாளிகள் கூட அதுபற்றி யோசித்து.... தம்பி உனக்கு எதற்கு உதவி நீ தான் வசதியாக இருக்கிறாயே.... நம் இனத்தில் உண்மையில் உதவி தேவைப் பாடுபவரை அழைத்து வா! அது தான் நமது சமூகத்திற்கு செய்யும் பேருதவி என்று கூற வேண்டும் என்று நினைப்பது கூட இல்லை...

  அதாவது தொடர்ந்து அரசின் உதவி பெற்று ஒரேக் குடும்பத்தில் மூன்று தலைமுறையாக அரசில் பெரிய உத்தியோகத்தில் இருப்பவனே மீண்டும் மீண்டு அனுபவிக்கிறான்... வேறு ஒரு சிலரோ அப்படியே இருக்கிறார்கள்.... இப்போது தான் பணக்காரன் என்று புதுப் பிரிவு அவர்களுக்குள்ளேயே வந்துவிட்டதே..... காரணம் முன்னேறிய அந்த இனத்தவனே தனது சக இனத்து ஏழையை கண்டு கொள்வதில்லை... இன்னும் சிலரோ தனது இனத்தையேக் காண்பித்துக் கொள்வதில்லை...

  அரசும்.. அல்லது உண்மையிலே பொருளாதாரத்தில் கீழ்மட்டத்தில் தனது சாதி மக்கள் முன்னேற வேண்டும் என்று ஆசை உள்ளவர்களால் தான் இதைப் பற்றி யோசிக்க முடியும்.... மேலேக் கூறிய எண்ணத்தையும் நிறைவேற்ற வழியாது காண முடியும். (வழி மட்டும் தான் பிறகு யாவும் தாங்கள் கூறியது போல் தான்... இன்னும் சொன்னால் சாதியைப் பற்றிப் பேசுபவன் படிக்காத தற்குறி கேவலமானவன் என்ற எண்ணம் படித்தவன் இடத்தில் வரவேண்டும்...

  நிச்சயம் ஒரு நாள் இந்நிலை வரும்... (அமெரிக்காவில் இந்நிலை இருப்பதாக அறிகிறோம்)

  நல்ல, நியாயமான ஆதங்கம்.... அருமையானப் பதிவு.... நெருப்புச் சாலையில் நடக்கிறீர்கள்... இடுப்பு வேட்டியில் கவனம் இருக்கட்டும்.... காரணம் இப்போது நீங்கள் எந்தப் பிரிவு... அங்கே உங்களுக்கு ஒரு கூட்டம் இருக்கிறதா?! என்பது தான் எனது எண்ணமுமாக இருக்கிறது...

  எல்லாவற்றிற்கும் நதி மூலமும், ரிஷிமூலமும் பார்ப்பவன் இந்தியன்.... அதை வைத்து தான் உங்களின் கருத்துக்கு ஆதரவு... இல்லையா!!! ஹி..ஹி.. ஹீ..

  நன்றி...வாழ்த்துக்கள் நண்பரே!

  http://tamizhvirumbi.blogspot.com/

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...