12.7.11
வாழ்வின் கடுமையான காலங்கள் நமக்கு வாழக் கற்றுக் கொடுக்கின்றனவா?
வாழ்வின் கடுமையான காலங்கள் ஒருவரது மேம்படலுக்கு மிக மிகத் தேவையானதொன்றாகும். இந்தக் கடுமையான காலங்கள் நமது அனுபவங்களை வளப்படுத்துவதோடு மட்டுமல்லாது நம் வாழ்வை மேம்படுத்தவும் நமக்கு வாய்ப்பளிக்கிறது.
ஆனால் நம்மில் பெரும்பாலோர் இந்த கடுமையான காலங்கள் சொல்லும் செய்திகளை புரிந்து கொள்ள முடியாமல் இருப்பதாலேயே நம்மால் இந்த கடுமையான காலங்களை கடக்க முடிவதில்லை.
இந்த கடுமையான காலங்கள் நம்மில் இருக்கும் எதைக் குறித்தும் குறிவைக்கலாம். நமது ஆரோக்கியம், நமது செல்வம், நமது உறவுகள் இப்படி நம்மில் இருக்கும் எதைக் குறித்தும் சிக்கல்கள் எழலாம்.
சில நேரங்களில், மேற்சொன்ன வாழ்வின் அடிப்படைக்கான தேவைகளை / காரணிகளை பலமாகக் கொண்டவர்களது வாழ்வில் இது குறித்து சிக்கல்கள் வர வழியில்லையென்றாலும் அவர்களது தன் முனைப்பு (ego) காரணமாக எழும் பேராசை, பதவிப் பற்று மேலும் அவர்களது சமுதாய நிலையைப் பெருக்கிக் கொள்ளும் முயற்சி ஆகியவைகள் உருவாக்கும் சிக்கல்களும் அவர்களுக்கு கடுமையான காலங்களை உண்டு பண்ணலாம்.
ஆனால் இரண்டாவதாக குறிப்பிட்ட இந்தக் கடுமையான காலங்கள் நமக்குள் நடக்கும் முரண்களைக் குறித்து மட்டுமே இருக்கும். இது நாம் நம்மை ஏற்றுக் கொள்ள அல்லது நம்மை மாற்றிக் கொள்ள வேண்டி நமது உள்ளத்தில் எழும் சிக்கல்களை மையமாகக் கொண்டிருக்கும். இதுவும் கடுமையான காலங்கள் தான்.
மேற் சொன்னதுபோல அமையும் தன் முனைப்பு முரண்கள் - ego conflicts - விளைவாக எழும் கடுமையான காலங்கள் நாம் நம்மை மிகவும் புரிந்து கொள்ள உதவும். இந்த கடுமையான காலங்கள் தீர்க்கமான சிந்தனைகளால் மட்டுமே தீர்க்கப் படக்கூடியது. நமது சிந்தனைத் தெளிவும், உள் நோக்குப் பார்வையும், நமது முரண்களையும், நம்மையும் குறித்த சிந்தனைகளும் அவைகளை அறிந்து கொள்ள போதுமான நேரமும் உண்டானால் நமக்கு இந்த கடுமையான காலங்களை கடத்தல் எளிது. அது மட்டுமல்ல இத்தகைய கடுமையான காலங்கள் நமக்கு நல்ல பக்குவத்தையும் உயிரின் மேம்படுதலையும் அளிக்க வல்லன.
இப்போது நான் முன்னதாக சொன்ன அடிப்படைக் காரணிகள் / தேவைகள் குறித்து விளையும் கடுமையான காலங்களைப் பற்றி பேசுவோம்.
பொருளாதாரச் சிக்கல்கள், தொழில் முறையில் மாற்றங்கள், தோல்விகள், ஆரோக்கியக் குறைபாடுகள் மற்றும் உறவுச் சிக்கல்கள் போன்றன குறித்து எழும் கடுமையான காலங்கள் தானாகவே விலகிவிடக் கூடியன. ஆனாலும் இத்தகைய காலங்கள் நமக்கு சில அறிவுறுத்தல்களைச் சொல்லிவிட்டுத்தான் செல்லும்.
இத்தகைய காலங்கள் நமக்கு பொருளாதாரத்தின் முக்கியத்துவத்தையோ, உறவுகளின் முக்கியத்துவத்தையோ அல்லது உறவுகளை நாம் நிலை நிறுத்திக்கொள்ள விட்டுக் கொடுத்தலின் முக்கியத்துவத்தையோமற்றும் நமது நல்லொழுக்கத்திற்கும் சமுதாய நலனுக்கும் இருக்கும் தொடர்பையோ அல்லது இவ்வுலகின் நிலையாமை குறித்த உணர்வையோ நமக்குள் அழுத்தமாக பதித்துவிட்டுத்தான் செல்லும்.
இதனாலேயே சிறுவயதுக் காலத்தில் கடுமையான காலங்களை சந்தித்தவர்களது வாழ்க்கை பிற்காலத்தில் பலரும் சிறக்க இருக்கிறது. அப்படியல்லாது தமது வாழ்வின் பிற்காலத்தில் இத்தகைய கடுமையான காலங்களைச் சந்திக்கும் பக்குவப்படாதவர்களின் நிலை பரிதாபத்திற்குறியதாகும். மிகச் சிலரே பிறருக்கு வரும் சோதனைக் காலங்களிலிருந்து படிப்பினைகளைப் பெற்றுக் கொள்கின்றனர்.
சிலருக்கு தம்முடன் இருக்கும் தீய நட்பும் மற்றும் போதை போன்ற தீய பழக்கங்களும் தங்களது தெளிவான சிந்தனையை தடுப்பதால் இவைகளே கடுமையான காலங்களை உருவாக்கி அதிலிருந்து அவர்களை மீள வொட்டாது ஆழ்த்திவிடும். இவர்களது நிலை மிகப் பரிதாபமானதாகும்.
சில நேரங்களில் இந்தக் கடுமையான காலங்கள் தன்னைச் சுற்றியுள்ள சமுதாயத்திற்கே பொதுவானதாக அமைந்து விடுவதும் உண்டு. எடுத்துக் காட்டாக போர்ச்சூழலில் சிக்கிவிடும் நாடும் அதன் மக்களும் ( உலகப்போர் மற்றும் இலங்கைப் போர்ச் சூழல்) மற்றும் மிகுந்த வறுமையை ஒரு பொதுவான சூழலாகக் கொண்டுள்ள நாடும் அதன் மக்களும் ( மிக வறுமையில் உள்ள ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் இதர நாடுகள்). இங்கு இந்தக் கடுமையான காலங்கள் ஒரு சமுதாயத்திற்கே செய்தி சொல்லுவதைப் பார்க்கலாம். இது அந்த சமுதாயத்திற்கு ஒரு சரியான தலைவனைத் தேடியோ அல்லது ஒரு சரியான கூட்டு முயற்சியைத் தேடியோ இருக்கலாம்.
சரி. இத்தகைய கடுமையான காலங்களை கடப்பது எப்படி?
நம்பிக்கை. நம்பிக்கை ஒன்றேதான் வழி. There is always light at the end of the tunnel. வாழ்க்கைச் சக்கரம் சுழல பொறுமையுடனும் நிதானத்துடனும் அறிவுக் கூர்மையுடனும் உள்நோக்குப் பார்வையுடனும் காத்திருப்பதுதான் மிகச் சிறந்த வழி. இத்தகைய சிந்தனையை பக்தி மார்க்கம் தருவதால் சிலர் பக்தி மார்க்கத்தையும் இந்த கடுமையான காலங்களை கடக்க எளிதாய் பயன்படுத்துவர்.
தீய நண்பர்கள் மற்றும் போதை போன்ற தீய பழக்கங்களைக் கொண்டுள்ளவர்கள் இவைகளை விட்டாலன்றி தெளிவான சிந்தனையை அடைய முடியாது. இவர்களுக்கு இவைகளின் பிடியிலிருந்து மீள்வது மட்டுமே இவர்களை மனிதர்களாக்கும்.
எனவே சரியான பார்வையில் கடுமையான காலங்களைக் கண்டு நிதானத்துடனும் அறிவுக் கூர்மையுடனும் அவைகளைக் கடந்து அவைகளால் பெறும் படிப்பினைகளைக் கொண்டு வாழ்வை மேம்பட வாழ்வோம்.
இன்னமும் பேசுவோம்,
அன்பன்,
வேதாந்தி.
ஆம்,நம்பிக்கைதான் கடுமையான காலங்களை கடக்கும் வழி.நல்ல பதிவு.
ReplyDelete@ shanmugavel..
ReplyDeleteதங்கள் வரவிற்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்
good post. theeyavai enRume aapaththuthaan... nalla vali solliyatharkku nanri.. vaalththukkal
ReplyDelete@ மதுரை சரவணன்..
ReplyDeleteதங்கள் வரவிற்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்.
அருமையான பதிவு.
ReplyDeleteநல்ல கருத்துக்கள்.
அனுபவங்கள் நல்ல படிப்பினையை தரும்.
வாழ்த்துக்கள்.