14.7.11
ஸ்பெக்ட்ரம் மட்டுமா நம் பொதுச் சொத்து?
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை நம் நாடே அறியும். இதிலும் ஆச்சரியம் என்னவென்றால் தமிழ்நாட்டிலுள்ள கிராமங்களில் கூட இந்த விவகாரம் பற்றி மக்கள் அறிந்திருப்பதுதான். இந்த அறிவுதான் தற்போது நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தலில் முந்தைய ஆட்சியாளர்களை எதிர்க் கட்சித் தகுதிகூட கொடுக்காமல் பின்னப் படுத்தி ஒதுக்கி வைத்தது.
ஸ்பெக்ட்ரம் என்ற வார்த்தையே இப்போது ஊழலைக் குறிப்பதாகி விட்டது.
பொதுவாக ஊழல் என்பது அதிகாரத்தில் இருப்போர் தம் கடமையைச் செய்ய சம்பந்தப்பட்டோரிடம் கையூட்டு பெறுவது என்பதாகத்தான் கருதப் படுகிறது. இதனை ஆங்கிலத்தில் kick backs என்பர். நமக்குப் பரிச்சயமானதொன்றைச் சொல்ல வேண்டுமானால் பத்திரப் பதிவு அலுவலர் நமது ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்தாலும் நம்மிடம் கையூட்டு எதிர்பார்ப்பது.
இன்னுமொரு வகை உண்டு. அது விதிகளை மீறுவொரை மேம்போக்காக கண்டும் காணாமலும் விட்டு விடுவதற்கு பெறும் கையூட்டு. இதற்கு பொதுவாக போக்குவரத்து காவலர்களைச் சொல்லலாம்.
இன்னுமொன்று ஒருவரது குற்றச்செயலை கண்டும் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கவோ அல்லது அத்து மீறி அவருக்குச் சாதகமானதொரு முடிவெடுக்கவோ அதிகாரிகள் பெறும் கையூட்டு. இதைக் குறித்துச் சொல்லவேண்டுமானால் சாதாரணமாக காவல் நிலையத்தில் நடக்கும் சம்பவங்களைச் சொல்லலாம்.
மற்றொன்று தமக்கு வேண்டியவருக்கு சாதகம் செய்ய அலுவலக விதிகளுக்கு உட்பட்டே அவரது நியாயமில்லாத விலைப்பட்டியலை அங்கீகரித்து அவருக்கு ஒப்பந்தத்தை ஒதுக்குவதோடு மட்டுமல்லாது அவரது குறைபாடான பணிகளுக்கும் - சில நேரங்களில் பணியே நடைபெறாது - ஒப்புதல் அளித்து கையூட்டு பெறுவது. இத்தகைய காரியங்களுக்கு உதாரணமாக நமது உள்ளாட்சி அமைப்புகளில் சாலை போடுவது மற்றும் ஏனைய உள்கட்டமைப்பு வேலைகளைச் சொல்லலாம்.
மேற்சொன்ன அத்தனையிலும் பொதுமக்கள் பாதிக்கப் படுவதுண்டு. அதனாலேயே இவைகளைப் பற்றிய தெளிவு மக்களிடையே உண்டு.
ஆனால் ஸ்பெக்ட்ரம் விவகாரம் மேற்சொன்னவைகளில் சேராது. அப்போது அதில் எப்படி ஊழல் வந்தது?
ஆவனங்களைத் திருத்துவது, அதிகார மீறல்கள், தனக்கு வேண்டியவருக்கு சாதகமான முடிவெடுத்தல்கள் என இவற்றையெல்லாம் மீறி மற்றொன்று நடந்திருக்கிறது.
அதுதான் பொதுச்சொத்தை கூட்டுக் கொள்ளையடிப்பது.
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை நமது இந்தியர்களுக்கான ஒரு பொதுச்சொத்து. இதனை மிகக் குறைந்த மதிப்பீட்டில் பெருநிறுவனங்களுக்கும் மற்றும் போலி நிறுவனங்களுக்கும் ஒதுக்கீடு செய்து அதனால் அந்த நிறுவனங்கள் பெரு லாபம் காண அதிகாரத்தில் இருந்தவர்கள் வழி வகுத்தனர். இதற்கு ஈடாக மிகவும் புத்திசாலித்தனத்துடன் பல வழிகளில் வெளிக்குத்தெரியாமல் தங்களுக்குச் சாதகமான பணப் பரிமாற்றத்தால் அதிகாரத்தில் இருந்தோரும் அவரைச் சார்ந்தோரும் லாபமடைந்தனர்.
இதனால் பொதுச்சொத்தை பெரு நிறுவனங்களும் அதிகாரத்தில் இருந்தோரும் கூட்டாக கொள்ளையடித்து லாபம் பார்த்தனர். இதைத்தான் , இந்த அதிகார முறைகேட்டை மற்றும் அதில் அவர்கள் பார்த்த லாபத்தைத்தான் நாம் ஊழல் என்று சொல்கிறோம்.
வெறும் விற்றல் பெற்றல் என்ற போர்வையில் இருந்த இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெளி வந்ததே CAG அறிக்கையால்தான். இந்த CAG தணிக்கை அறிக்கைதான் ஸ்பெக்ட்ரம் என்ற பொதுச் சொத்து விலை மதிக்க முடியாதது என்றும் அதனை மலிவாக்கி ஒதுக்கியது நாட்டிற்கு பெரும் இழப்பு என்றும் எடுத்துச் சொல்லியது. மற்றையோர் இந்த ஒதுக்கீட்டில் நாட்டின் பாதுகாப்பும் கேள்விக் குறியாகிவிட்டது என்றும் சொல்கின்றனர்.
எனது கேள்வி: ஸ்பெக்ட்ரம் மட்டும்தான் பொதுச்சொத்தா? இந்த வானமும் பூமியும் யார் சொத்து? காற்றும் நீரும் யார் சொத்து? கடலும் கடல் சேர்த்த செல்வமும் யார் சொத்து?
எல்லோருக்கும் சொந்தமான இயற்கை வளங்களை அதிகாரத்தில் இருப்போரது துணையுடன் பெரு நிறுவனத்தார் கொள்ளை கொள்கின்றனரே இதனால் சாமான்யன் பாதிப்படையவில்லையா?
அய்யா நான் தொழில் வளர்ச்சிக்கு எதிராக பேசவில்லை. இப்போதைக்கு நமது நாட்டிலுள்ள சட்ட திட்டங்கள் ஓரளவுக்கு இயற்கை வளங்களின் இணக்கமான இழப்பில்தான் தொழில் வளர்ச்சியை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் இயற்கை வளங்களுக்கு கிடைக்கும் இந்தக் குறைந்த அளவுப் பாதுகாப்பும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் கொள்ளை குணத்தால் கெட்டுப்போகிறது. இதனால் பாதிக்கப் படுவது சாமன்யன் தான்.
அனைவருக்கும் தெரியும் அத்து மீறிய கனிம வளக் கொள்ளைகளையும் மணல் கொள்ளைகளையும் விடுத்து மற்றவைகளைப் பற்றித்தான் இங்கு பேசுகிறேன்.
சட்டத்தில் சொல்லப்பட்ட மாசு கட்டுப்பாடு விதிகள் காற்றில் விடப்படுகின்றன. கேட்பாரில்லை. இதனைப்பற்றி பொது மக்களுக்கு போதுமான விழிப்புணர்வும் கிடையாது. நொய்யல் ஒன்றே இதற்குச் சான்று. எல்லாவற்றிலும் நாம் கண் கெட்ட பிறகுதான் விடியலைத் தேடுகிறோம்.
சட்டத்தில் ஒவ்வொரு தொழிற்சாலைகளும் கடைப்பிடிக்க வேண்டிய மாசு கட்டுப்பாடு முறைகள் புறக்கணிக்கப் படுகின்றன. இந்தப் புறக்கணிப்புகள் கண்காணிப்போரால் வேண்டுமென்றே கண்டுகொள்ளாமல் விடப்படுகின்றன. நம் பொதுச்சொத்தான காற்றிலும் நீரிலும், கடலிலும் மாசைக் கலக்க அனுமதிக்கும் செயல்களால் கொள்ளை போகும் நமது இயற்கை வளங்கள் நமக்கு விளைவிக்கும் கேட்டையும் நட்டத்தையும் யாவரும் அறிவரோ? இத்தகைய செயல்களால் சுத்தமான காற்றையும், நீரையும் சாமான்யன் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை. அரசும் மக்களும் சுகாதாரக் கேட்டினால் விளையும் நோய்களைத் தீர்க்க பெரும் தொகையை ஒதுக்க வேண்டிய கட்டாயம். ஆனால் தொழிற்சாலைகளோ இந்தப் பொதுச் சொத்தை கொள்ளை கொள்கின்றன. இதற்கு அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் உடந்தை..
என்ன கொடுமையப்பா இது..?
காற்றும், நீராதாரங்களும் பொதுச் சொத்தல்லவா..? அதனைக் கெடுப்பது சாமான்யனின் விளை பொருட்களில் நஞ்சை ஏற்றாதா? விளைச்சல் குறைந்தால் விலையேற்றம் விளையாதா? நமது ஆரோக்கியம் கெடாதா..? இத்தனைக்கும் உடந்தையாய் இருப்பவர் மட்டும் என்ன செவ்வாய் கிரகத்திலா இருக்கின்றார்? அவரும் தானே இந்தச் சூழலில் அகப்படுகிறார். அப்படியிருந்தும் சுற்றுச் சூழலைக் கெடுக்கும் செயலுக்கு துணைபோவதென்ன அறியாமையாலா அல்லது அகம்பாவத்தினாலா? அல்லது இதற்கு ஒரு உயர் அளவில் தணிக்கை கிடையாது என்கிற துணிச்சலா?
இனியாவது கயவர்கள் கண் திறப்பரோ…?
இன்னமும் பேசுவோம்.
அன்பன்,
வேதாந்தி.
உண்மைகள் தெறிக்கின்றன உங்கள் பார்வையில்....தடுக்க முயல்வோம்!
ReplyDeleteமிகச் சிறந்த பதிவு..! எண்ண ஓட்டங்களை அப்படியே சித்தரிக்கிறது பதிவு.. இன்னும் இத்தகைய பதிவுகளை எதிர்பார்க்கிறோம்..! இதைப் படித்தாவது ஒரு சில கயவர்கள் திருந்தினால் அது உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் கிடைத்த வெற்றிதான்..!
ReplyDeleteவாழ்க வளமுடன்,
தங்கம்பழனி.
தங்கள் துணைத் தலைப்பில் இருப்பதைப் போல எழுத்தும் ஒரு ஆயுதம் தான்..!
ReplyDeleteமற்ற ஆயுதங்களை விட மிகச் சிறந்த ஆயுதம்...!
வாழ்த்துக்கள் நண்பரே..!
'வெட்டிப் பேச்சு' அல்ல.. இது விவரமான பேச்சு..! அனைவருக்கும் பயன்படக்கூடிய பேச்சு..!
ReplyDelete@ தங்கம்பழனி..
ReplyDeleteதங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றிகள்
arumai
ReplyDeleteWell said sir...
ReplyDelete