Followers

Tuesday, July 14, 2015

கொலைகளிலும் தற்கொலைகளிலும் கௌரவம்… - I


14.7.15

கொலைகளிலும் தற்கொலைகளிலும் கௌரவம்… - I

 
 
போனவாரம் ஒருநாள். இரவு 2 மணி இருக்கும். என் வீட்டுக் கதவை யாரொ பட பட வென தட்டினர். அழைப்பு மணியும் அடித்தது. சற்று பதட்டத்துடன் விழித்த நான் கதவைத்திறந்தவுடன் பார்த்தது என் அண்டை வீட்டுக்கார நண்பரை. அவர் குடியிருப்புகளை கட்டி விற்கும் கம்பெனி நடத்தி வருபவர். கைகளை பிசைந்து கொண்டு பதறியபடி நின்றிருந்தார்.

“ சார், எங்கள் கம்பெனியில் வேலை செய்யும் ஒருவர் தற்கொலைக்கு முயன்றதாக எனக்கு போன் வந்தது. இப்போது அவர் வீட்டிற்குதான் கிளம்பிக் கொண்டிருக்கிறேன். கூட நீங்களும் வந்தால் சற்று உதவியாக இருக்கும்” என்றார்.

இதைக் கேட்டவுடன் சட்டென தூக்கம் கலைந்து விட்டது. உடனே சட்டையை மாட்டிக் கொண்டு அவருடன் கிளம்பினேன். பைக்கில் அவருடன் செல்லும்போது பேச்சுக் கொடுத்தேன்.

“என்ன ஆச்சு?’

“எங்க கம்பெனியில வேலை செய்யரவர் சார். ரொம்ப நல்லவர். அவருக்கு இரண்டு பெண்கள். கொஞ்ச நாளாவே மனசு சரியில்லாம இருந்தார். இப்போ தூக்கு மாட்டிட்டாராம். அவரது மனைவிதான் போன் பண்ணியிருந்தாங்க. அவங்களும் எங்க கம்பெனி ஒர்க்கர் தான்…”

“ தூக்கு மாட்டிட்டாரா,,,? ஏன்..?” பதறிப்போய்க் கேட்டேன்.

“அவரோட பொண்ணால பிரச்சினை. எதுவானாலும் பாத்துக்கலாம் கவலைப்படாதேன்னு சொல்லியிருந்தேன். இப்படி செஞ்சுட்டான்..”

அதற்கப்புறம் மௌனமானேன்.

வீடு போய் சேர்ந்தோம். வீட்டில் அக்கம் பக்கத்தார் கூடியிருந்தனர். அவர்களை விலக்கிக் கொண்டு உள்ளே சென்றோம். ஹாலில் மூச்சு பேச்சற்று கிடந்தார். தூக்கில் தொங்கியவரை அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து கயிறை அறுத்து ஆளை மீட்டு கீழே கிடத்தியிருந்தனர்.

“ஆம்புலன்சை அழைத்தீர்களா?” என்றேன்.

யாரோ, “108க்கு போன் செய்திருக்கிறோம் சார்..” என்றனர்.

நண்பரை தேடினேன். அவர் ஒரு அம்மாவிடம் பணத்தை எண்ணிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அழுது கொண்டே அந்தப் பணத்தை வாங்கியவர், “ பாவி மனுசா, என்னை விட்டுட்டு போத் துணிஞ்சியே..” என்று கதறினார்.

வாசலில் ஆம்புலன்ஸ் வந்து நின்றது. ஹாலில் கிடந்தவரை ஆம்புலன்சில் ஏற்றினர். கூடவே அவரது மனைவியும் மற்றொருவரும் ஏறினர். வண்டி மருத்துவமனை நோக்கி விரைந்தது.

வண்டியின் பின்னாலே மருத்துவமனை வரை சென்று ஆக வேண்டியவைகளை பார்த்தோம். ஆள் பிழைத்துக் கொண்டார். டாக்டர் வந்து பார்த்து கவலைப்பட ஒன்றுமில்லை என்று சொன்னபிறகே திரும்பினோம்.

அதற்குள் விடிந்து விட்டதால் ஒரு டீக்கடையில் நின்று டீ குடித்தோம்.

“என்ன சார் ஆச்சு?” என்று பேச்சுக் கொடுத்தேன்.

“ஒன்னுமில்லை சார். பொண்ணோட லவ் மேட்டர்.”

“லவ் மேட்டரா?”

“ஆமாம் சார். கொஞ்ச நாளா அதே தெருவில் இருக்கும் ஒரு பையனோட நட்பா இருந்திருக்கு இவரோட பெரிய பொண்ணு. இப்போ பதினைஞ்சு நாளைக்கு முன்னால அவனோட ஓடிப்போச்சு. நானும் எவ்வளவோ எடுத்துச் சொன்னேன். கேக்கலை. குழப்பமாவே இருந்தான். இப்ப என்ன ஆச்சுன்னு தெரியலே.  திடீர்னு தூக்கு மாட்டிட்டான். நல்ல வேளை. ஆளிருந்ததால ஆச்சு. இல்லைனா குடும்பமே அனாதையாய் தெருவில் நிற்கும்..”, என்றார்.

“லவ் பண்ணா கட்டி வெச்சிற வேண்டியதுதானே..ஏன் பையன் வேற சாதியா?”

( பதிவின் நீளம் கருதி மீதிச் செய்தி நாளைக்கு…)

இதன் தொடர்ச்சி: கொலைகளிலும் தற்கொலைகளிலும் கௌரவம்… - II

அன்பன்,

வேதாந்தி.

 

1 comment:

  1. அந்தளவிற்கு செல்வதென்றால்...

    தொடர்கிறேன்...

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...