5.11.14
முடிவும் ஒரு ஆரம்பமே!
முடிவெது ஆரம்பமெது என்பதை தெளிவாகத் தெரிந்ததுபோல் நடந்துகொள்ளும் நம் செயலை
நாமே வெட்கப் படும் படிக்கு காலம் சில நேரங்களில் புரட்டிப் போட்டுவிடும்.
இதுவும் எனது நண்பர் என்னிடம் பகிர்ந்து கொண்டதுதான். வழக்கம் போலவே இதையும்
அவரது வாய் மொழியாகவே கீழே கொடுத்துள்ளேன்.
“ 1975 என்று நினைக்கிறேன். நாங்கள் ஒரு பத்துபேர் ஒரு நண்பர் வட்டம் போல ஒரு
அமைப்பை உருவாக்கினோம். அதற்கு முத்தமிழ்க் கூடல் எனவும் பெயரிட்டோம். அதற்கு முழுக்
காரணமாக இருந்தவர் திரு. அண்ணாமலை என்பவர். அவர் பொறியியல் கல்வி முடித்துவிட்டு பணிக்காக
காத்திருந்தார். அவர் பொறியியல் படித்திருந்தார் என்றாலும் தமிழில் அலாதியான விருப்பம்.
தமிழும் மிகச் சிறப்பாகவே அவரிடம் தாண்டவமாடியது. வெண்பாக்கள் முதற்கொண்டு எல்லா மரபுவழிக்
கவிதைகளையும் சரளமாக இயற்றும் ஆற்றல் படைத்தவர். அவரது படைப்புக்கள் ஆச்சரியமூட்டும்
விதத்தில் அழகுணர்வோடு இருக்கும். அவர் சார்ந்த நண்பர்களும் தமிழில் விருப்பம் கொண்டிருக்கவே
ஒரு அமைப்பு போல் இல்லாவிட்டாலும் எப்போதும் கூடிப் பிரியும் கூட்டம் போல் நாங்கள்
இருந்தோம். எல்லாப் பொருளும் விவாதத்திற்கு வைக்கப் பட்டது. விவாதங்கள் சுவையுடன் இருக்கும்.
சேலத்துத் தெருக்களில் நடை பயின்றோம். பூங்காக்களில் பொழுதைக் கழித்தோம். இரவுக்
கூட்டங்களில் எங்களது தவறாத வருகை இருக்கும். தற்போது மிகப் பிரபலமாக இருக்கும் வழக்கறிஞர்
மதிப்பிற்குரிய வை. அருள்மொழி அவர்கள் முதன் முதலில் மேடையேறிப் பேசிய இரவுப் பொதுக்கூட்டங்களை
ரசித்திருக்கிறோம். பள்ளி முடித்த சிறுமியாய் கருப்புத் தாவணி மற்றும் கருப்பு மேல்
சட்டை அணிந்து மிகத் தீவிரமாக பெரியாரின் கொள்கைகளையும் முக்கியமாக தாலி பற்றியும்
அவர் பேசிய பேச்சுக்களும் அதன் வேகமும் அந்தக் கால கட்டத்தில் ஆச்சரியத்தைத் தூண்டின.
அந்தக் காட்சிகள் இன்னமும் மனதில் நிற்கிறது.
வெற்றி கொண்டானது கூட்டமென்றால் வெல்லம் சாப்பிடுவது போல. இப்படியாக நாங்கள்
எங்களை பொழுதுகளை பேசியும் விவாதித்தும் போக்கிக் கொண்டிருந்தோம். இது எங்களது வாலிபப்
பருவம் தடுமாறிப்போகாமலும் எங்களைக் காத்தது. இப்படி இருந்த எங்களிடையே பள்ளிப் படிப்பை
முடித்த பிராமண இளைஞர் ஒருவரும் இருந்தார். அவருக்கு ஒரு 17 அல்லது 18 வயதுதான் இருக்கும்.
வைணவ குடும்பத்தைச் சேர்ந்தவர். அந்த வயதிலேயே விவாதங்களை வெகு தெளிவாக முன்னெடுத்துச்
சொல்வார். கொள்கை ரீதியில் எங்களுக்குள் மிகுந்த வேறு பாடுகள் இருந்த போதும் திரு.
அண்ணாமலை எங்கள் அனைவரையும் ஒன்றாக வைத்திருப்பதில் பிறழமாட்டார்.
“பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால் பாம்பை விட்டு பார்ப்பானை அடி” என்று
பொதுக்கூட்டத்தில் கேட்டுவிட்டு வரும் எங்களிடையே வாதத்தில் ஈடுபடும் அந்த பிராமண அன்பர்
மிகுந்த வேகத்தைக் காட்டுவார். நாகரீகம் கடக்காத அந்த வாதங்கள் எங்களை மிக்க வளர்த்தது.
எங்களை விட அந்தச் சிறு வயதில் எங்களது வாதங்கள் அந்தப் பிராமணருக்கு மிக்கவே உதவியது.
இப்படியாக எங்களது நட்பு வளர்ந்தது. வாதங்களில் வேகம் இருக்குமே தவிர எங்களுக்குள்
வேறுபாடோ அல்லது வேறேதேனும் பகையோ கிடையாது.
இப்படி இருக்கையில் ஒரு நாள் அந்த பிராமண அன்பரைக் காண வேண்டி பின் மதியத்தில்
அண்ணாமலையுடன் நாங்கள் எல்லோரும் அவர் வீடு சென்றோம். வீட்டில் அவரது அம்மையாரைக் கேட்டபோது
அவர் அறையில் உறங்குவதாகச் சொன்னார். அறைக் கதவைத் தட்டினோம். பதிலில்லை. எத்துனை வேகமாகத்
தட்டியும் பதிலில்லை.
சந்தேகப்பட்டு அண்ணாமலை சன்னல் கதவைத் திறந்து பார்த்தார். கண்ட காட்சியில்
உறைந்து போனோம். தரையில் நுரை தள்ளியபடி மயங்கிக் கிடந்தார். உடனே கதவை உடைத்து அள்ளிப்
போட்டுக் கொண்டு ESI மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்.
மருத்துவமனையில் அவரது வாயில் உப்புக் கரைசலை ஊற்றி அவரை வாந்தியெடுக்க வைத்தார்கள்.
பெரும் ஓலத்துடன் அவர் வாந்திஎடுத்தது இன்னமும் வயிற்றைக் கலக்குகிறது. நாங்கள் எல்லோரும்
விதிர் விதிர்த்துப் போனோம். இளம் வயதானதால் எங்களுக்கு அத்துனை அனுபவமில்லை. தயங்காமல்
அண்ணாமலை எடுத்த முடிவுகளால் அன்றைக்கு அந்த இளைஞர் காப்பாற்றப் பட்டார்.
அவர் எதற்காக அப்படி ஒரு முடிவெடுத்தார் என்பதல்ல இன்றைய பேச்சு. வாழ்க்கையை
வாழப் பிடிக்காமல் முடித்துக் கொள்ள முடிவெடுத்தார். ஆனால் அதற்குப் பின்னர் நடந்ததென்ன?
அதில்தான் சுவராசியம்.
அண்ணாமலை அந்த இளைஞரது பெற்றோருக்கு சில காலம் அவரை வேற்றூரில் உறவுக் காரருடன்
வைத்திருக்கும் படி அறிவுரை கூறினார். அதன் படியே அவரை அவரது உறவினர் வீட்டிற்கு அனுப்பி
வைத்தனர். அவரது உறவினர், ஏ. எல் . ராகவன் என நினைக்கிறேன், கலைமகள் பத்திரிக்கையுடன்
தொடர்பிலிருந்தவர். கி.வ. ஜகன்னாதனை மிக நெருக்கமாக தெரிந்தவர். அவரது பயிற்சியில்
அந்த இளைஞர் எழுதிய ஒரு குறுநாவல் போட்டியில் பரிசு பெற்று கலைமகளில் வெளியானது. அவ்வளவுதான்.
அந்த இளைஞரின் தலையெழுத்தே மாறிப் போனது.
அவரது உறவினர் ஒருவர் தன் சிபாரிசில் அவருக்கு மதுரை TVS ல் ஒரு பணியைப் பெற்றுத்
தந்தார். பணி நிமித்தமாய் மதுரை பெயர்ந்தவர் அங்கிருந்த சரஸ்வதி மகால் நூலகத்தை சரியாகப்
பயன்படுத்திக் கொண்டு தன் எழுத்துக்களை மிக நுணுக்கமாக பட்டை தீட்டிக் கொண்டார். அவ்வப்போது
பத்திரிக்கைகளில் எழுதி வந்தவருக்கு ஆனந்த விகடனில் வெளியான அவரது பரிசு பெற்ற வீடு
வாசல் என்ற நாவல் அவரது எழுத்தின் தளத்தையும் தரத்தையும் மிக உயரத்திற்கு கொண்டு போனது.
இன்று அவர் ஒரு பிரபலமானவர். தொலைக்காட்சியில் தொடர்ந்து ஆண்மீகம் பற்றியும் பெரியவரைப்
பற்றியும் பேசி வருபவர்.
விடாது கருப்பாய் எழுதிவரும் அவருக்கு விளம்பரம் தேவையில்லை.
தன் வாழ்வை முடித்துக் கொள்ள நினைத்து அவர் எடுத்த முடிவு அவரது வாழ்வை புரட்டிப்
போட்டு அவரை சாதனைகளின் ஆரம்பத்தில் காலம் கொண்டு நிறுத்தியதை நினைத்தால் வியப்பாய்
இருக்கிறது.
எதைப் பெரிதாய் நினைத்து வாழ்வை முடித்துக் கொள்ளத் துணிந்தாரொ அது இப்போது
அவராலேயே அல்லது அவரது சாதனைகளாலேயே மிகத் துச்சமானதொன்றாக தள்ளப் பட்டு விட்டதை நினைக்கும்
போது நமது மன நிலைகளும் அதன் விளைவால் நாம் எடுக்கும் முயற்சிகளும் மட்டும்தான் நம்மை
முன்னெடுத்துச் செல்கின்றன என்பது நிதரிசனம் அல்லவா?
அவருடன் இருந்த அனைவரும் இப்போது அவரவரது கல்வித் தகுதிக்கேற்ப பணியில் அமர்ந்து
பணி ஓய்வும் பெற்றுவிட்டோம். எங்களால் எழுத்தை பணிச்சுமையுடன் தொடர முடியவில்லை. அண்ணாமலை
TNEB யில் EE ஆக பணி முடித்து ஓய்வு பெற்றார்.
இப்போது நினைத்தாலும் அவரை எந்த உணர்வு அன்றைக்கு அந்த இளைஞரின் வீடு நோக்கி
சரியான நேரத்தில் அனுப்பியது எனும் கேள்விக்கு வியப்பு மட்டும்தான் பதிலாய் வருகிறது.
இன்னமும் பேசுவோம்.
அன்பன்,
வேதாந்தி.
'முடிவும் ஒரு ஆரம்பமே' பதிவு, நினைவுச் சுரங்கத்தில் தோண்டிய நல் வைரம்.
ReplyDeleteஎண்ணம் போல் வாழ்வு...
ReplyDeleteதொடர்கிறேன்...
உளநல வழிகாட்டல் என்பதை விட
ReplyDeleteஉளநலச் சிகிச்சையாகப் பார்க்கிறேன்.
சிறந்த பதிவு
தொடருங்கள்